கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 23, 2021

உலகம் சுற்றிய யுவதியோடு ஓர் நேர்காணல்

உலகம் சுற்றிய யுவதியோடு ஓர் நேர்காணல் 


 
நடுவில் நிற்பவர்தான் திரு.ஜெயராமன்(ஜெயா அவர்களின் கணவர்) 

93 வயதாகும் திருமதி ஜெயா ஜெயராமன் அவர்களின் கணவர் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றியதால் பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட்டிருக்கிறார். எனவே திருமதி ஜெயா அவர்களுக்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவருடைய அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

வணக்கம்! உங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுங்களேன்

ஜெ.ஜெ.: இளமைப் பருவத்தைப் பற்றி சிறப்பித்து கூற பெரிதாக ஒன்றும் இல்லை.

எ.பி.: நீங்கள் பிறந்தது எந்த ஊர்? என்ன படித்திருக்கிறீர்கள்?

ஜெ.ஜெ.: பிறந்தது திருவையாறு அருகில் இருக்கும் ஈச்சங்குடி. *பள்ளிக்குச் சென்று படித்ததில்லை(சிரிப்பு)

நான்: அப்படியா? ஏன்? 

ஜெ.ஜெ.: என்னுடைய தாத்தா கோயம்புத்தூரில் டீச்சர் டிரைனிங் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார். அவர் ரிட்டையர்ட் ஆகி வந்தவுடன் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

எ.பி.: உங்களுக்கு எத்தனை வயதில் திருமணம் ஆனது?

ஜெ.ஜெ.: 18 வயதில் நான் என் அம்மாவின் தம்பியை, அதாவது என்  மாமாவையே திருமணம் செய்து கொண்டேன். 

நான்: திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தார்களா? 

ஜெ.ஜெ.  எங்கள் தாத்தா பார்த்தார். 

எ.பி.:  அப்போது உங்கள் கணவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஜெ.ஜெ.: மினிஸ்டரி ஆஃப் எக்ஸ்டெர்னல் அஃபர்ஸில் டில்லியில் பணியாற்றினார். 

எ.பி.: நீங்கள் முதலில் டில்லிக்குத்தான் சென்றீர்களா? 

ஜெ.ஜெ.: இல்லை, டில்லிக்கு போகவேயில்லை. மாமாவுக்கு சைகோனுக்கு மாற்றல் ஆகி விட்டது. என்னை என் பெற்றோர்கள் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர். மாமா, டில்லியிலிருந்து கல்கத்தா வந்தார். அங்கிருந்து கப்பலில் சைகோனுக்கு கிளம்பினோம். கல்கத்தாவிலிருந்து முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு ஒரு வாரம் தங்கி, பின்னர் அங்கிருந்து சீன கப்பலில் சைகோன் சென்றோம். 

எ.பி.: கப்பல் பயணம்  இருந்தது? சீ சிக்னெஸ் வந்ததா?

ஜெ.ஜெ.: கப்பல் பயணம்  மிகவும் ரசிக்கும்படி இருந்தது. சீ சிக்னெஸ் எதுவும் எனக்கு வரவில்லை. சிங்கப்பூரிலிருந்து சைகோன் சென்ற கப்பல்தான் மிகவும் மோசம். சாப்பிட எதுவும்  கிடைக்கவில்லை. கிடைத்த அவலில் ஊறுகாயை பிசைந்து சாப்பிட்டு காலத்தை ஓட்டினோம். நல்ல வேளை, இரண்டு நாட்கள்தான். 

எ.பி.: மொத்தம் எத்தனை நாட்கள் பயணம்?

ஜெ.ஜெ.: கல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் பத்து நாட்கள்.  அங்கிருந்து சைகோன் மூன்றரை நாட்கள். சைகோன் போய் இறங்கிய அடுத்த நாளே எனக்கு  ஆபரேஷன். 

எ.பி.: ஐயையோ! என்னாச்சு?

ஜெ.ஜெ.: வயிற்று வலி வந்தது. டாக்டர் வந்து பார்த்து விட்டு ஹெர்னியா ஆபரேஷன் பண்ண  வேண்டும் என்று ஆபரேஷன் செய்தார். அவர்தான் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

எ.பி.: அப்படியா? பிரசவத்திற்கு ஊருக்கு வந்தீர்களா? 

ஜெ.ஜெ.: இல்லை, அங்குதான் பிரசவம் ஆச்சு. 

எ.பி.:  மருந்து,பத்திய சாப்பாட்டிற்கு என்ன செய்தீர்கள்?

ஜெ.ஜெ.: பத்தியம் எல்லாம் கிடையாது. அந்த ஊர் குருக்கள் மனைவி பருப்பு துவையல், ரசம் செய்து கொடுத்தனுப்புவார். எனக்கு உதவி செய்வதற்காக ஒரு வியட்நாம் பெண் இருந்தது, அதற்கும் பதினெட்டு  வயதுதான். விளையாட்டுத்தனமாக இருக்கும். 

எ.பி.: சைகோனில் நம்முடைய காய்கறிகள், மளிகை சாமான்கள் கிடைக்குமா? 

ஜெ.ஜெ.: காய்கறிகள் கிடைக்கும். மளிகை சாமான்களில் உளுத்தம் பருப்பு, வெண்ணை  போன்றவை கிடைக்காது. 

எ.பி.: புளி?

ஜெ.ஜெ.: புளி கிடைக்கும், மீன் உலர்த்தும் பாயில் போட்டு வைத்திருப்பான்.

எ.பி.: சைகோனில் இந்தியர்கள் இருந்தார்களா? 

ஜெ.ஜெ.: வட இந்தியர்களில் சிந்திக்காரர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள். தென் இந்தியர்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இருந்தார்கள். பிராமணர்கள் கிடையாது. கோவிலில் அர்ச்சகர் ஒருவர் இருந்தார். 

எ.பி.: ஓ! அங்கு கோவில்கள் உண்டா? 

ஜெ.ஜெ.: உண்டே! இந்தியர்களுக்கு பொதுவாக ஒரு கோவிலும், தமிழர்களுக்கு நகரத்தார் கட்டிய முத்து மாரியம்மன் கோவிலும் இருந்தது. அங்கு நவராத்திரியில் ஒன்பது நாட்களும் தினசரி கோவில் வளாகத்திலேயே அம்மன் புறப்பாடு நடக்கும். அந்த கோவிலுக்கு சைனாக்காரர்கள் நிறைய பேர் வருவார்கள். 

எ.பி.: சைகோனிலிருந்து எங்கு சென்றீர்கள்? 

ஜெ.ஜெ.: சைகோனிலிருந்து பாண்டிச்சேரி

எ.பி.: பாண்டிசேரியில் எத்தனை வருடம் இருந்தீர்கள்? 

ஜெ.ஜெ.: ஒன்றரை வருடம் இருந்தோம். அங்கிருந்து பாரீஸுக்கு மாற்றல் ஆனது. பாண்டிச்சேரியிலிருந்து பம்பாய் சென்று அங்கிருந்து கப்பலில் பாரீஸுக்கு புறப்பட்டோம். 

எ.பி. கப்பலிலா? ஏன் அப்போதெல்லாம் விமானம் கிடையாதா?

 ஜெ.ஜெ.: விமானம் உண்டு. ஆனால் மாமாவுக்கு கப்பல் பயணம்தான் பிடிக்கும். அந்தக் கப்பலும் அத்தனை நன்றாக இருக்கும். அதில் இல்லாத வசதிகள் கிடையாது.  நாங்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றோம். நாங்கள் சென்ற கப்பல் சூயஸ் கால்வாயை கடந்த பிறகு அந்தக் கால்வாயை மூடி விட்டார்கள். மூன்று வருடங்கள் கழித்துதான் திறந்தார்கள். என் தம்பி கேப் டவுனை சுற்றிக் கொண்டு சென்றான். 

எ.பி.: பாரீஸ் உங்களுக்கு பிடித்ததா?

ஜெ.ஜெ.: ஓ! இப்போது கொண்டு விட்டாலும் நான் அங்கு இருப்பேன். மிகவும் அழகான ஊர். 

எ.பி.: பிரெஞ்சுக்காரர்கள் கர்வம் பிடித்தவர்கள் என்பார்களே?

ஜெ.ஜெ.: அப்படியெல்லாம் இல்லை. மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும் பழகுவார்கள்.  

எ.பி.: அங்கு நம்ம ஊர் கறிகாய்கள் கிடைக்குமா? 

ஜெ.ஜெ.: கிடைக்காது. லண்டனிலிருந்து வரவழைக்க வேண்டும். வெண்டைக்காயெல்லாம் காய்ந்து மாலையாக கட்டி வரும். அதை வெந்நீரில் ஊற வைத்து சமைப்போம். 

பிரான்சிலிருந்து துருக்கிக்கு மாற்றல் ஆகியது. அங்கு சென்றதும் மாமாவுக்கு ப்ளூரசி வந்து விட்டதால் திரும்பி வந்து விட்டார். பின்னர் 1969ல் ஜப்பானுக்குச் சென்றோம். எக்ஸ்போ 70 நடந்த பொழுது ஜப்பானில்தான் இருந்தோம். 


எக்ஸ்போ 70க்கு தயாராகிக் கொண்டிருக்கும் பெவிலியன்கள் 

எ.பி.: எக்ஸ்போ 70 சமயத்தில் ஜப்பானில் இருந்தீர்களா? அந்த சமயத்தில்தான்  உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கப் பட்டது.

ஜெ.ஜெ.: தெரியும். உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங்  சமயத்தில் எம்.ஜி.ஆர்., "வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும் போலிருக்கிறது, தயிர் சாதம் எங்கேயாவது கிடைக்குமா?" என்று மணியனிடம் கேட்டிருக்கிறார். மணியன் உடனே என் கணவரிடம் சொல்லி, எம்.ஜி.ஆரை எங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வந்தார்.

எ.பி.: இந்த நிகழ்ச்சியை மணியன் இதயம் பேசுகிறது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். புகைப்படம் கூட போட்டிருந்தார். அந்த புகைப்படம் இருக்கிறதா?

ஜெ.ஜெ.: இல்லை, அந்த புகைப்படங்களை மணியன் எடுத்துச் சென்றார், திருப்பித் தரவே இல்லை. பல புகைப்படங்கள்,பலர் எடுத்துச் சென்று விட்டார்கள் எதுவும் திரும்பி வரவில்லை. 

அதற்குப் பிறகு டாக்கா சென்றோம். 

எ.பி.: பங்களாதேஷ்..?

ஜெ.ஜெ.: அப்போது அது ஈஸ்ட் பாகிஸ்தான். நாங்கள் அங்கு இருந்த பொழுதுதான் வார் தொடங்கியது. அதெல்லாம் மிகவும் கடினமான காலங்கள். ஹவுஸ் அரெஸ்ட் போல கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் இருக்க வேண்டும். தேவையான சாமான்களை செக்யூரிட்டி வாசலில் வைத்து விடுவார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அங்கிருந்து கொழும்பு, அதுதான் கடைசி போஸ்டிங், கொழும்பிலிருந்து இந்தியா திரும்பி விட்டோம். என் கணவர் இருபத்தெட்டு வயதில்தான் இந்த வேலையில் சேர்ந்தார். அதனால் நாங்கள் அதிகம் நாடுகளுக்குச் செல்லவில்லை. என் தம்பி பதினெட்டு வயதிலேயே இந்த வேலையில் சேர்ந்ததால் இன்னும் அதிகமான நாடுகளில் பணி புரிந்தான். 

எ.பி.: எம்.ஜி.ஆர். தவிர வேறு வி.ஐ.பி.க்கள் யாரையாவது மீட் பண்ணியிருக்கிறீர்களா? 

ஜெ.ஜெ.: நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன். வெளி நாடுகளுக்கு வரும் செலிபிரிட்டிஸ் பலர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். கொழும்புவில் இருந்த பொழுது நடிகை சாவித்திரி எங்கள் வீட்டிற்கு வந்து காபி குடித்திருக்கிறார். 



எ.பி.: இத்தனை நாடுகள் பார்த்திருக்கிறீர்கள், எந்த நாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது?

நான் முதலில் சென்றது சைகோன், அதனால் அது மிகவும் பிடித்தது. பிறகு பிரான்ஸ். அங்கிருந்தபொழுது ஐரோப்பா முழுவதும் சுற்றி பார்த்தோம். குழந்தைகளும் ஆரம்ப கல்வியை அங்குதான் படித்தார்கள். அவர்களுக்கும் அந்த ஊர் மிகவும் பிடித்தது. 

எ.பி.: வெளி நாட்டில் வசித்து விட்டு இந்தியா வந்த பொழுது எப்படி உணர்ந்தீர்கள்? 

ஜெ.ஜெ.: இரண்டையும் ஒப்பிட முடியாது. வேறு வேறு நிலை. இப்படி கூறினாலும் அவருக்கு நம் நாட்டின் சுகாதாரமற்ற சூழலை ஏற்றுக் கொள்வது  கடினமாகத்தான் இருந்தது. 

எ.பி.: உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு  மிக்க நன்றிமா.

* பள்ளிக்கூடமே சென்றதில்லை என்று கூறும் திருமதி ஜெயா அவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இந்த மூன்று பாஷைகளும் பேச,எழுத,படிக்க தெரிந்தவர். அதை தவிர இருந்த நாடுகளின் பாஷைகளை வீட்டில் வேலை செய்தவர்கள் மூலம் கற்றுக் கொண்டாராம். இப்போதும் தினமும் செய்தித்தாள் மற்றும்  வாராந்தரிகளை படிக்கிறார்.  அவருக்கு இன்று (ஆகஸ்ட் 23) பிறந்த நாள். எங்கள் பிளாகின் சார்பாக அவருக்கு பிறந்து நாள் வாழ்த்துக்களை கூறி வணங்கி விடை பெற்றேன். 


28 comments:

  1. எங்கள் ப்ளாக்? எங்கள் ப்ளாக் சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியா? நன்றாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லி இருந்தாலும் வியக்கத்தக்க அனுபவங்கள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எ.பி.யின் மதுரை சிறப்பிதழுக்காக எடுத்தது. ம.சி எப்போது வரும் என்று தெரியாததால் இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் இன்றே வெளியிட்டு விட்டேன். நன்றி

      Delete
  2. வெகு சுவாரஸ்யமான பேட்டி அவருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகளும்கூடி...

    ReplyDelete
  3. இது எ.பி.யில் வந்திருக்கணுமோ? திருமதி ஜெயாவுக்கு நமஸ்காரங்களும் பிறந்த நாள் வாழ்த்துகளும். ஆரோக்கியமான வாழ்வு வாழவும் பிரார்த்தனைகள். பேட்டி எடுத்த பானுமதிக்கும் வாழ்த்துகள். எங்கே கண்டு பிடிச்சீங்க இவங்களை?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அபுரி!  ஒருவேளை எபிக்கு அனுப்ப எண்ணி பப்லிஷ் கொடுத்து விட்டாரா?  அலலது அங்கு அனுப்பினால்  வெளியாக எவ்வளவு நாட்களாகுமோ , இன்று அவருக்கு பிறந்த நாளாச்சே, இன்றே வெளியானால் நல்லது என்று இங்கேயே வெளியிட்டு விட்டாரா....   பானு அக்கா வந்து விம் போட்டு விளக்குவார்!

      Delete
    2. //எங்கே கண்டு பிடிச்சீங்க இவங்களை?// உறவுக்குள் தான்.

      Delete
    3. விளக்கி விட்டேன்!

      Delete
  4. என்ன ஒரு அனுபவம்... எத்தனை நாடுகள்.. வரம்தான். அவரை வணங்கி பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த லிங்கை அவருக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களையும் பார்ப்பார். நன்றி.

      Delete
  5. எங்கள் மினிஸ்ட்ரிக்காரர் ஒருவரின் மனைவியை நேர்கண்டிருக்கிறீர்கள்! வெளிநாட்டுக்குக் கப்பல் பயணம்- கப்பலில்தான் பயணம் அப்போது. எங்கள் ஃபாரின் சர்வீஸ் அப்போது அப்படித்தான் இருந்திருக்கிறது. இவரின் கணவர் வியட்நாமுக்கு மாற்றலானதால், சட்டுபுட்டுன்னு சைகோனுக்குப் போய்ச்சேர்ந்துட்டார்.

    நானெல்லாம் டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தபோது, எங்கள் சீனியர்கள் சொல்வார்கள் -அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா போஸ்ட்டிங் என்றால் 2-3 மாசமாகும் கடல்வழி போய்ச் சேர என்று. அந்தக்கால த்ரில் அனுபவங்களைக் கதைகதையாக எங்களுக்குச் சொல்வார்கள். புதியவர்களான எங்கள் போஸ்ட்டிங்குகள் விமானப் பயணமாகவே ஆரம்பித்ததில் அவர்களுக்குப் பொறாமை வேறு!

    ReplyDelete
  6. திருமதி ஜெயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பதில்கள் அவருடைய அனுபவ முதிர்ச்சியை நளினமாக எடுத்துக்கூறும்படி உள்ளன. அம்மையாருக்கு என் வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பான நேர்காணல்.

    தகவல்களும் நன்று. தில்லியில் இப்படி வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த நண்பர்களும் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  9. அவரது அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. இன்னும் விரிவாக பதிவு செய்திருக்கலாம்.

    ReplyDelete
  10. திருமதி ஜெயாம்மா அவர்களுக்கு அன்பின் வணக்கங்கள்...

    பிரமிக்க வைக்கின்றன செய்திகள்..
    கண்கள் கலங்குகின்றன...

    ReplyDelete
    Replies
    1. பிரமிக்க வைக்கும் மனுஷிதான்.

      Delete
  11. பள்ளிக்கூடம் சென்றறியாத அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி - எழுதவும் பேசவும் தெரியும் என்றால்,

    கற்றலின் மேன்மையை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. படிக்காத மேதைகளுள் ஒருவர். அவர் சிறுமியாக இருந்த காலத்தில் பெண்களை படிக்க வைக்க வேண்டியது அவசியம் இல்லை என்று கருதப்பட்டது. கணவரின் தொழில் நிமித்தமாக பல் நாடுகளுக்கும் பயணப்பட்டு, பல மொழி பேசும் மனிதர்களோடு  பழக வேண்டிய நிர்பந்தம் வந்து பொழுது ஆர்வம், புத்திசாலித்தனம் இரண்டாலும் விரைவாக பிற மொழிகளை கற்றுக் கொண்டு விட்டார். உங்கள் கருத்துக்கு நன்றி. 

      Delete
  12. அருமை
    பள்ளிக் கூடம் செல்லாமல் தமிழ். ஹிந்தி, ஆங்கிலம்
    ஆகா
    போற்றுதலுக்கு உரியர்

    ReplyDelete
  13. நன்றி கரந்தையாரே.

    ReplyDelete
  14. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்!! நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete