கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 13, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3


இதற்கு முன்னால் விவரித்த நிகழ்வுகள் ஆகஸ்ட் மத்தியில் முடிந்தன. செப்டம்பரில் கிளம்பலாமா? என்று நினைத்தேன். ஆனால் கனடாவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் செப்டம்பரில் தான் செல்வார்கள் என்பதால் டிக்கெட்டுகள் விலை வானத்தை தொட்டன. "அக்டோபரில் பார்" என்றாள் மகள். அவள் பார்க்கச் சொன்னது பயணம் செய்ய ஏற்ற நல்ல நாள். 

அஷ்டமி,நவமி, பரணி, கார்த்திகை, ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம், சூலம் இவை அத்தனையும் இல்லாத நாள் கிடைத்தால் அன்று யோகம் சரியாக இல்லை. நான் பஞ்சாங்கத்தை திருப்பி திருப்பி பார்க்க, என் மகன், “அம்மா ஃபிளைட்ஸ்  கம்மி, என்னிக்கு டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்கு கிளம்ப வேண்டியதுதான், நீ நாளெல்லாம் பார்க்க முடியாது” என்றான். உண்மைதான்.

இதற்கிடையில் என் மகள் டெலிபோனில் இன்னொரு கண்ணாடி வாங்கி கொள், பல் டாக்டரை பார்க்கவேண்டுமென்றால் பார்த்து விடு என்று கூற, ஒரு டென்டிஸ்ட்டை சென்று பார்த்தேன். அவர் கடைசி பல்லை பிடுங்க வேண்டும் என்றார். அவ்வளவுதானே? பிடுங்கி விடலாம் என்று சரி என்று சொல்லி விட்டேன். அந்தப் பல்லானால் என்னை பிரிய முரண்டு பிடித்ததில் சிறிய அறுவை சிகிச்சை, ஊருக்குச் செல்வதற்கு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது, ஒரு பக்க கன்னம் வீக்கம் வடியவேயில்லை. டாக்டரானால், "கவலைப்படாதீர்கள்,தையல் பிரித்தால் சரியாகி விடும் வாயைத் திறங்கள்" என்று என் திறந்த வாயினுள் எட்டிப் பார்த்து விட்டு, "ஓ! டிசால்விங் ஸ்டிச்சஸா?" என்று என்னையே கேட்கிறார். எப்படியோ நல்லபடியாக வீக்கம் வடிந்தது. ஒரு தனி கதை. 

விமானங்கள் குறைவு. சில விமானங்களில் பயணித்தால் இரண்டு மூன்று நாடுகள் வழியாக செல்ல வேண்டும். அதில் ஒரு நாட்டில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கனடாவை கண்ணால் காண நான்கு நாட்கள் ஆகி விடும். அபுதாபி வழியாக செல்லும் எதிஹாட்டில்(Etihad)  பயணித்தால் அபுதாபியில் ஆறு மணி நேரங்கள் ட்ரான்சிட்டில் காத்திருக்க வேண்டும். அங்கு கொரோனா  டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்,  ரிசல்ட் இரண்டு மணி நேரத்தில் வந்து விடும். அங்கிருந்து டொரோண்டோவை அன்று மாலையே அடைந்து விடலாம். ஆனால் அந்த விமானம் பெங்களூரிலிருந்து வாரத்திற்கு இரண்டுதான். எப்படி நாள் பார்ப்பது? 29ம் தேதி அதிகாலை 2:30க்கு பெங்களூரிலிருந்து விமானம். நான் 28 இரவு எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால்  போதும் என்று நினைத்தேன். இதிஹாட் அலுவலகத்திலிருந்து காலையில் அழைத்து இரவு ஒன்பதரை மணிக்கு கவுண்டர் திறந்து விடுவோம், அப்போதே வந்து விடுங்கள் என்றதால் வீட்டிலிருந்து ஏழு மணிக்கு முன்பாகவே கிளம்பி விட்டேன்.

விமான நிலையத்தில் அபுதாபி செல்லும் பயணிகள் செக் இன்  செய்த பிறகு டொரண்டோ  பயணிகள் செக் இன் செய்யலாம் அமருங்கள் என்றார்கள். சற்று பொறுத்து டொரோண்டோ பணிகள் செக் இன் செய்யலாம் என்ற அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக செக் இந்த கவுண்டரை நோக்கி,  “ஆஹா! நாம்தான் முதல் ஆளா. என்று சந்தோஷமாக சென்றேன்.  நான் அப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு விட முடியுமா? அங்கும் ஒரு சிறிய பிரச்சனை. 

அங்கிருந்த பணியாளர், “ரிடர்ன் டிக்கெட் இல்லையா?” என்றார். 

“இல்லை நான் சூப்பர்  மாம்  விசாவில்  செல்வதால் ரிடர்ன் டிக்கெட் தேவையில்லை” என்றதை ஒப்புக் கொள்ளாமல், “கனடாவில் யார் இருக்கிறார்கள்? மகளா? அவரோடு பேச முடியுமா?” என்று கேட்க, மகளை தொடர்பு கொண்டு ஃபோனை அவரிடம்  கொடுத்தேன், மகளோடு நீண்ட நேரம் விவாதம் செய்த பிறகு என்னை செக் இன் செய்ய அனுமதித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடன் பயணித்த இரு இளம் பெண்களும் கூட முதல் முறையாக கனடாவிற்கு பயணித்தார்கள். 2019 இல் திருமணமான இருவருக்கும் இப்போதுதான் விசா கிடைத்து பயணிக்கிறார்கள், அவர்களிடமும் ரிடர்ன் டிக்கெட் கிடையாது, ஆனால் அவர்களிடம் எந்த பிரச்னையும் பண்ணாமல் செக் இன் செய்ய அனுமதித்து விட்டார்கள்!!!

அபுதாபி விமான நிலையத்தில் ஒட்டகத்தை கட்டிக்கொண்டு

அபுதாபியில் விமான நிலையத்தில் உணவகங்கள் ஏதும் திறந்திருக்காது என்று கூறப்பட்டதற்கு மாறாக திறந்திருந்தன. படிப்பதற்காக  கனடா வரும் என் பெரிய அக்காவின் பேத்தி அங்கு என்னோடு இணைந்து கொண்டாள்.  குழந்தையாக இருந்த பொழுது ‘ர’ சொல்ல வராமல் ‘லமணி  பெலிப்பா", ‘கிலி’ மாமா" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தை படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டாளா? என்று வியப்பாக இருந்தது.


பயணத்தில் ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம், ஆங்கில பிரண்ட்ஸ் சீரியலின் சில பகுதிகள் பார்த்தேன். கொஞ்சம் தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே விமானம் தரை இறங்கியது. இமிக்ரேஷனை முடித்து வெளியே வர மூன்று மணி நேரங்களாகி விட்டது. கஸ்டம்ஸ் என்ற கஷ்டம் இல்லை.  இரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம். வரும் வழி எனக்கு மஸ்கட்டை நினைவூட்டியது. மஸ்கட் ஏர்போர்ட்டிலிருந்து சிட்டிக்குள் நுழையும் வழியில் ஹாலிடே இன் ஹோட்டல் இருக்கும், இங்கும் அது போலவே இருக்கிறது.


அடுத்த நாள் ஹாலோவீன் தினம், என் மகள் வசிக்கும் அப்பார்ட்மென்டில் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக கருப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் ஒரு பிளாஸ்டிக்  பை அல்லது பக்கெட் எடுத்துக் கொண்டு விபரீத வேடம் புனைந்து வீடு வீடாக சென்று கொண்டிருந்த சிறுவர்கள்..எங்கள் சிறு வயதில் நவராத்திரியில் கொலுவிற்கு அழைக்கும் சாக்கில் சுண்டல் கலக்ஷனுக்குச் சென்றதை  நினைவூட்டினார்கள்.  ஆக நானும் கனடா வந்து விட்டேன். 

†******†***********************************

11 comments:

  1. நாளெல்லாம் நல்ல நாளே என்று எஸ் பி பி போல பாடிக்கொண்டு கனடா சென்று சேர்ந்து நலமாகச் சேர்ந்து விட்டீர்கள்.  ஏன் உங்களை மட்டும் அப்படி எல்லாம் கேள்வி கேட்டார் அந்த ஆப்பீசர்?!

    ReplyDelete
    Replies
    1. அதுதானே எனக்கும் புரியல. ஒரு வேளை அப்போதுதான் ஸ்வாரஸ்யமான பதிலாக எழுத முடியும் என்பதால் இருக்குமோ?

      Delete
  2. சில சமயங்கள் நமக்கு மட்டும்னு விபரீதமான சம்பவங்கள் நடக்கும். அதில் உங்கள் அபுதாபிப் பிராயணத்திற்கான முன்னேற்பாடுகளும் ஒன்று. பயணம் எத்தனை மணி நேரம்? உணவு என்ன? ஏஷியன் வெஜிடேரியனா?ஜெயினா? வீகனா?

    ReplyDelete
    Replies
    1. பெங்களூர்-அபுதாபி 4 மணி நேரம். அபுதாபி-டொரண்டோ 17 மணி நேரம்.
      உணவு ஏஷியன் வெஜிடேரியன். விமானத்தில் வழங்கப்படும் உணவு என்ற அளவேகோலில் சராசரிக்கு மேம்பட்டதாகவே இருந்தது.
      மஸ்கட்டில் இருந்தவரை என் தோழிகள் எல்லாம் விமானத்தில் வீட் ஹல்வா கொடுத்தார்கள், ஜிலேபி கொடுத்தார்கள் என்றெல்லாம் கூறுவார்கள் எனக்கு வாய்த்ததென்னவோ அரை இனிப்பில் கொழகொழவென்று கஸ்டர்ட்தான். இதிஹாட்டில் கொடுத்த ப்ரவுணி, ப்ரெட் எல்லாமே நன்றாக இருந்தன.

      Delete
    2. ஹாஹாஹா, எங்களுக்கும் அல்வா, ஜிலேபி எல்லாம் கொடுத்ததில்லை. இனிப்புக் கொடுப்பதில் அநேகமாய்க் கேக் வரும். இல்லை எனில் ஏதேனும் சேமியா சேர்த்த டெசர்ட்! நாங்க பொதுவாக ஜெயின் உணவே கேட்பதால் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் கூட வராது. ஏதேனும் பழங்களால் ஆன டெசர்ட்டைக் கொடுத்திருப்பாங்க. அந்தக் கல் மாதிரியான ப்ரெட் ஏவிஎம் எல்லில் தான் கொடுப்பாங்க. நல்லவேளையாக ஜெயின் உணவில் எங்களுக்குச் சப்பாத்தி, பரோட்டா கிடைக்கும்.

      Delete
  3. இந்த ஒட்டகத்தின் சிலை அபுதாபி விமான நிலையத்தில் வெளிப்புறம்தானே இருக்கிறது.

    நீங்கள் வெளியே வந்தீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. வெளியேயும் ஒன்று இருக்கிறதா? இது ட்ரான்ஸிட் கவுன்ஸில் இருப்பது. நான் வெளியே செல்லவில்லை.

      Delete
  4. பயண அனுபவங்களை நன்றாக சொல்லி வருகிறீர்கள்.

    ரிடர்ன் டிக்கெட் எடுத்துதான் நாங்கள் போய் இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //ரிடர்ன் டிக்கெட் எடுத்துதான் நாங்கள் போய் இருக்கிறோம்.// சாதாரண விசிட் விசா என்றால் ரிட்டர்ன் டிக்கெட் அவசியம், என்னுடையது சூப்பர் மாம் விசா என்பதால் ரிட்டர்ன் டிக்கெட் அவசியமில்லை என்பது அந்த அலுவலருக்கு தெரியவில்லை.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    தங்களின் பயண அனுபவங்களை நன்றாக கூறியுள்ளீர்கள். ஆங்காங்கே வந்த பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொண்டு, அதுவும் தனியாக கனடாவுக்கு நலமுடன் சென்று சேர்ந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். படங்கள் நன்றாக உள்ளன. உங்கள் தைரியமான எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களிடமிருந்து தைரியத்தை நானும் கற்று கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் வருமா என்பது சந்தேகந்தான்.. :) வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. தைரியம் தன்னால் வந்து விடும் என்று தோன்றுகிறது. என் அம்மாவின் தைரியத்தோடு ஒப்பிடும் பொழுது என்னுடைய தைரியம் கொஞ்சம் குறைவுதான்.
    தமிழைத் தவிர வேறு மொழிகள் பேசவோ, எழுத,படிக்கவோ தெரியாத எங்கள் அம்மா மெட்ராஸ்-பாம்பே-மஸ்கட்-பாம்பே-மெட்ராஸ் என்று பயணித்திருக்கிறாரே.

    ReplyDelete