கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 29, 2022

நியாயம்

 நியாயம்


கீர்த்திக்கு அலுப்பாக இருந்தது. சிங்க் முழுவதும் பாத்திரங்கள். வந்திருந்த விருந்தினர்கள் சென்றாகி விட்டது. இப்போது பாத்திரங்கள் அத்தனையையும் தேய்த்து, துடைத்து வைத்து விட்டு படுக்கைக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆகி விடும். 

"இதை அப்படியே போட்டுவிட்டு படுத்துக் கொள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றான்" ராஜீவ். 

"அப்படியே போட்டுவிட்டு வந்தால் கரப்பு வந்து விடும்".

"சரி அப்போ நான் தேய்க்கிறேன், நீ அலம்பி துடைத்து விடு" என்று ராஜீவ் பாத்திரங்களை துலக்கத் தொடங்கினான். வேலை சீக்கிரம் முடிந்ததில் இருவரும் சீக்கிரம் படுக்கைக்குச் செல்ல முடிந்தது. 

ராஜீவ் அப்படித்தான். "நாளைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை டின்னருக்கு கூப்பிடலாமா? உனக்கு ஓ.கே.தானே? என்று அவளின் சௌகரியத்தை அனுசரிக்கும் அக்மார்க் அமெரிக்க ஆண்மகன். அதோடு அவளுக்கு கறிகாய்கள் நறுக்கி கொடுப்பது போன்ற  உதவிகளும் செய்வான்.

எல்லா பெண்களையும் போல கீர்த்தியும் திருமணமாகி அமெரிக்கா செல்லப் போகிறோம் என்பதில் த்ரில்லிங்காக உணர்ந்தாள். அங்கு சென்றதும் தான் அந்த ஊரின் சில அசௌகரியங்கள் புரிந்தன. இந்தியா போல வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆட்கள் வைத்துக் கொள்வது காஸ்ட்லி சமாச்சாரம். அவர்களே தான் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். 

அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் டிஷ் வாஷர் இல்லை. வாஷிங் மெஷினும் கீழே லாண்ட்ரி ரூம் என்பதில் மொத்தம் எட்டு மெஷின்களும், எட்டு ட்ரையர்களும்  இருந்தன. இவர்கள் வாரம் ஒரு முறை துணிகளை அங்கு சென்று துவைத்து, காய வைத்து எடுத்து வருவார்கள். அதற்கும் சில சமயங்களில் ராஜீவ் செல்வான். அதைப்போல வீட்டை அவள் பெருக்கினால், ராஜீவ் மாப் போட்டு விடுவான். 

திருமணத்திற்கு முன்பு வரை கீர்த்தி சமையல் ஓரளவிற்கு செய்வாளே தவிர வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லை. அவளை விட இரண்டே வயது மூத்தவளான அவளுடைய அண்ணிக்கு கூட திருமணமாகி வந்த பொழுது வீட்டு வேலைகள் தெரியாமல்தான் இருந்தது. கீர்த்தியின் அம்மா மருமகளை ஒரே வருடத்தில்  நன்றாக பயிற்றுவித்து விட்டாள். மகன் வீட்டு வேலைகள் செய்வது கீர்த்தி யின் அம்மா, அப்பா இரண்டு பேருக்குமே பிடிக்காது. ராஜீவ் தனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதை அம்மாவிடம் சொன்ன பொழுது பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

ஒரு நாள் ராஜீவ் மாப் போடுவதையும், பாத்திரம் துலக்குவதையும் செல்ஃபோனில் படமெடுத்து, தங்களுடைய குடும்ப வாட்ஸாப் க்ரூப் பில் கீர்த்தி பகிர்ந்து கொண்ட பொழுது யாரும் எந்த கருத்தும் அனுப்பவில்லை. அன்று இரவு அவளுடைய அப்பா அவளுக்கு தனியாக கீழ்க்கண்ட மெஸேஜ் அனுப்பியிருந்தார்.

" உனக்கு மூளை இருக்கிறதா இல்லையா? உன் அண்ணியை நீயே தூண்டி விடுகிறாயா?

17 comments:

  1. ஹா..  ஹா..  ஹா..   எப்பவுமே ஊருக்கொரு நியாயம் உறவுக்கொரு நியாயம் என்பது போல மகள், மருமகள் வித்தியாசம் இருக்கும்தானே!  சுருக் நறுக் கதை.

    ReplyDelete
  2. எல்லா இடங்களிலும் இருப்பது தான். தன் பிள்ளை என்றால் வீட்டு வேலைகள் செய்யக் கூடாது. அதே மருமகன் என்றால் செய்யலாம். இது ஒண்ணும் புதுசு இல்லையே! :(

    ReplyDelete
    Replies
    1. புதுசாக கற்பனை பண்ணி எழுத வேண்டும் என்றால் சயின்ஸ் ஃபிக்ஷன்தான் எழுதணும். அதிலும் காதல், பாசம், தியாகம், துரோகம், நட்பு, வஞ்சகம் இதை வைத்துதான் கதை பண்ண முடியும். எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.

      Delete
  3. இந்த உலகில் மக்கள் அனைவருக்குமே நியாயம் என்பது தெரிகிறது.

    ஆனால் செயல்பாட்டில் இரண்டு வகைகள்.

    01) ஊருக்கு பேசுவது நியாயமான, உண்மையான பொதுநலமான நியாயம்.

    02) தனக்கு மட்டும் பேசுவது பொய்யான, நியாயமற்ற, சுயநலமான நியாயம்.

    நான் இதில் எப்பொழுதுமே முதல் வகை ஆகவேதான் இன்று நான் தனிமரமாக்கப்பட்டேன் இந்த கொள்கையில் இறுதி மூச்சுவரை மாறவே மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல் சிலராவது இருக்க வேண்டும்.‌நன்றி.

      Delete
  4. இங்கே இது ஒய்வு பெற்றவர்கள் செய்யும் வேலை தானே. நான் காய் நறுக்குவது, பருப்பு, மற்றும் காய்களை வேக வைத்து கொடுப்பது, சாதம் வடிப்பது, துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு  காயவைத்து எடுப்பது போன்ற வேலைகளை செய்கிறேன். இல்லத்தரசி காலை டிபன் வேலை, வீடு கூட்டுவது, துடைப்பது, குழம்பு கூட்டுவது, கூட்டு, பொரியல் முதலியவை செய்வது, இரவு சப்பாத்தி செய்வது போன்ற வேலைகளை செய்வார். இடையில் 12 மெகா சீரியல்கள் பார்ப்பது,  கொஞ்சம் பக்தி பூஜை செய்வது, 1 மணி நேரம் போன் பேசுவது போன்ற காரியங்களையும் கவனித்துக் கொள்வார்.  நான் சமையல் பக்கம் ஒதுங்காவிட்டால் சாப்பாடு ரொம்ப லேட் ஆகிவிடும். 

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் இப்படி எல்லாம் செய்வதில்லை என்றே நினைக்கிறேன். ஒண்ணு முழுப் பொறுப்பு எடுத்துப்பாங்க. இல்லைனால் சும்மா காய் நறுக்கித் தரதோடு நிறுத்துவாங்க. எங்க வீட்டில் அநேகமாக எல்லா வேலைகளும் நானே தான் செய்கிறேன். உதவி செய்யும் பெண் வரலைனால் கூட நானே செய்துப்பேன். அவர் காய் நறுக்கி வேணா வைப்பார். வேகவிடுவது, சாதம் வடிப்பது எல்லாம் வராது. ஏதானும் வதக்கணும்னா அவசரத்துக்கு வதக்குவார். அதுவே கொஞ்சமானும் பிடித்துவிடும்.

      Delete
    2. உங்களை பாராட்டுகிறேன் சார்.

      Delete
  5. பானுக்கா கதை பிரமாதம்!! அதுவும் கடைசியில் அந்த வரி தான் ட்விஸ்ட் அண்ட் வித்தியாசம். முடிவில் இப்படி ஒரு வரி வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

    தங்கள் மாப்பிள்ளை தங்கள் மகளுக்கு இத்தனை ஒத்தாசையாக இருக்கிறாரே என்று சந்தோஷப்படாமல், தங்கள் மகனுக்கு இப்படி சப்போர்ட்டா... ஹூம் என்னவோ மனிதர்கள்.

    வழக்கம் போல் சுருக்கமாக அழகாகச் சொல்லிவிட்டீர்கள் பானுக்கா. உங்களிடம் இருந்து நான் கற்க வேண்டிய விஷயம். எனக்குச் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேங்குது!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  6. கதை நன்றாக இருக்கிறது.இரண்டு பேரும் புரிந்து கொண்டு அடுத்தவர் நிர்பந்திக்காமல் அன்பால் செய்தால் நல்லது. இப்படி ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.


    //" உனக்கு மூளை இருக்கிறதா இல்லையா? உன் அண்ணியை நீயே தூண்டி விடுகிறாயா?//

    சில வீடுகளில் அம்மா பேசுவார், இதில் அப்பா பேசுகிறார்.



    இப்போது தொலைக்காட்சி விளம்பரங்களில் வருகிறது "திருமணத்திற்கு பின் உனக்கு சமையலில் ஒத்தாசை செய்வேன்" என்பதும் பெண் பாத்திரம் தேய்க்க கற்று கொடுப்பதும்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக மாமனார் நல்லவர், மாமியார்தான் பிடுங்கித் என்று ஒரு பிம்பம் உள்ளது. சில இடங்களில் இது மாறுபடும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. கதை மிக நன்றாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு உதவுவது என்பது மிக நல்ல விஷயம். கதை யதார்த்தம் பேசுகிறது. பொதுவாகப் பெண்கள் குறைகள் சொல்வதாகக் கதைகளில் வரும். இதில் பெண்ணின் அப்பாவே சொல்லுவதாக முடித்திருப்பது வித்தியாசம்.

    துளசிதரன்

    ReplyDelete
  8. நல்ல கதை. பல வீடுகளில் நடக்கும் சம்பவம் என்றாலும் சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete