கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 18, 2022

மனம் கவர்ந்த மாண்ட்ரியால்


மனம் கவர்ந்த மாண்ட்ரியால்



ஆட்டவாவிலிருந்து மாண்ட்ரியால் செல்வதற்கு இரண்டு வழிகளை கூகுளார் பரிந்துரைத்தார். ஒன்று ஹைவே, மற்றது சீனிக் பியூட்டி பாதை. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்தோம். வழி முழுவதும் காடு, ஆறு என்று இயற்கையை ரசித்தபடி பயணித்தோம். முதல் நாள் சூறைக்காற்று சேர்ந்த மழையால் ஆங்காங்கு முறிந்து கிடக்கும் மரங்களையும் பார்க்க முடிந்தது. அகண்டு, விரிந்து ஓடும் செயின்ட் லாரன்ஸ் நதி எங்கள் திருச்சியின் அகண்ட காவேரியை நினைவூட்டியது. 

க்யூபெக் எல்லையைத் தொட்டவுடனேயே ஃபிரஞ்சு ஆதிக்கம். தெருப் பெயர்கள், சிக்னல்களில் இருந்த பெயர்ப் பலகைகள் எல்லாவற்றிலும் ஃபிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் காணப்பட்டன. 






மாண்ட்ரியால் அழகும், கம்பீரமும் சேர்ந்த நகரம்.  அதுவும் ஓல்ட் மாண்ட்ரியாலில் Notredame பெசலிகா அமைந்திருக்கும் டவுன்டவுனில் எல்லா வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. எல்லாமே ஃபிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்து நம்மை நிமிர்ந்து பார்க்கத் தூண்டி சொல்லிழக்க வைக்கின்றன. 










நாற்றிடேம் (Notredame) பெசலிகா சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இதன் விதானங்களின் வேலைப்பாடுகள் கலை நயத்தோடு இருக்கின்றன. இங்கு வண்ண வண்ணமாக ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் மெழுகு வர்த்திகள் இங்கே பிரார்த்தனை செய்யவும் வருகிறார்கள் என்று எண்ண வைத்தாலும், பெரும்பாலும் இதை ஒரு சுற்றுலா தலமாக கருதி புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். 

அங்கிருந்து மதிய உணவு சாப்பிட இந்திய உணவகத்தை  நடந்து, நடந்து தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு, ஒரு ஐஸ் கிரீமையும் விழுங்கி விட்டு ஓல்ட் போர்ட் சென்றோம்.



செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓல்ட் போர்ட்டில் இந்த வசந்தம் மற்றும் கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக எக்கச்சக்க பொழுது போக்கு அம்சங்கள். ஜிப் லைன் போன்ற அட்வென்சர் விளையாட்டுகள், பெடல் போட்ஸ், சைக்கிள் இவைகளை எடுத்து ஓட்டலாம். ஒரு இடத்தில் டில்லியில் இருக்கும் சைக்கிள் ரிக் ஷாக்கள் போல வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  டிக்கெட் வாங்கி கொண்டு ஏறி அதில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை க்வாட்ரா சைக்கிள் (qradra cycle) என்கிறார்கள். அதில் ஏறி சுற்றி வரலாம், ஆனால் நாம்தான் ஓட்ட வேண்டும். நோ ரிக் ஷாகாரர். 





நிறைய உணவு விடுதிகள், அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டாட்டூ போட்டு விடுபவர்கள் என்று அந்த இடம் நம் ஊரின் பொருட்காட்சி நடைபெறும் இடம் மாதிரி இருக்கிறது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

மறுநாள் தாவரவியல் பூங்காவிற் குச் சென்றோம். முதலில் எனக்கு பெரிதாக எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. "என்ன பெரிய பொட்டானிக்கல் கார்டன்?லால்பாகை விடவா? என்று நினைத்தேன். 

ஆனால் மிகப்பெரிய, ஏறத்தாழ 22,000க்கும் மேற்பட்ட செடி வகைகள். மூலிகைச் செடிகள், நீர்த்தாவரங்கள் என்று விதம் விதமான தாவரங்கள் வளரும் மிகப் பெரிய பூங்கா. இதை சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது. 



இதில் சைனீஸ் தோட்டம் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கிறது. அங்கு போன்சாய் மரங்களுக்கு தனி இடம். எனக்கு போன்சாயை ரசிக்க முடியாது. உயர்ந்து, பரந்து வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் துரோகம் என்று தோன்றும்.‌ 

இந்த தாவரவியல் பூங்காவிற்கு எதிரே மாண்ட்ரியால் டவரும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் இருக்கின்றன. அவை பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. மாண்ட்ரியால் டவரின் சிறப்பு அது 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருப்பதுதான். 

மாண்ட்ரியால் டவர்

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை கையில் வாங்கிக் கொண்டோம். வழியில் தென்னிந்திய பாணியில் கோபுரம், பளபளக்கும்  விமானத்தோடு, ஒரு கோவில் தென்பட்டது. எந்த கோவில் என்று தெரியவில்லை. அடுத்த முறை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் ஆட்டவாவிற்கு தனியாக இரண்டு நாட்கள், மாண்ட்ரியாலுக்கு இரண்டு நாட்கள் பிளான் பண்ண வேண்டும் என்று தோன்றியது. 

திரும்பும் வழியெங்கும் ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் வயல்கள். அவற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், சில இடங்களில் குதிரைகள். நான் என் மகளிடம்," என் சின்ன வயதில் நான் வசித்த திருச்சி இப்படித்தான் நகரத்திற்கு நடுவிலேயே வயல்களோடு இருக்கும்" என்று கூறி பெருமூச்சு விட்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

பல தடங்கல்களோடு தொடங்கினாலும், இனிமையாக முடிந்த பயணம். 

21 comments:

  1. ஆட்டவா என்று படிக்கும்போது என் மனதில் உசுவாவில் எம் ஜி ஆர் சொல்லும் கோட்வேர்ட் நினைவுக்கு வருகிறது!!

    ReplyDelete
    Replies
    1. அது என்ன கடவுச்சொல்? எனக்கு நினைவு இல்லையே?

      Delete
  2. படங்கள் சிறப்பு.  உயரமான அழகான மாளிகைகள் அல்லது கட்டிடங்கள் கவருகின்றன.  உயரக்கட்டிடங்களுக்கு நடுவே குறுகிச்செல்லும் அந்தப் பாதை..  வெட்கத்தில் குறுகி இருக்கிறதா, சந்தோஷத்தில் ஓடுகிறதா?

    ReplyDelete
  3. இந்திய உணவகத்தில் என்ன உணவு வாங்கினீர்கள் என்று கேட்கக்கூடாதோ!

    ReplyDelete
    Replies
    1. பரோட்டா, குருமா, சாம்பார் சாதம் .. மிக நன்றாக இருந்தது.

      Delete
  4. மாண்ட்ரீயால் படங்கள் அருமை. ஆனால் மாண்ட்ரீயால் டவர் மட்டும் சாய்ந்து காண்கிறதே! காமிரா வை நேராக வைத்துக் கொள்ளவில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை, அந்த கட்டிடமே 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டது. அதை நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். இப்போது சேர்த்து விட்டேன். நன்றி.

      Delete
  5. கட்டிடங்கள் பிரமிக்க வைக்கிறது கடைசி படம் சாய்ந்த கோபுரம் மாதிரி இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. சாய்ந்த கோபுரம்தான். 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருக்கிறது. 

      Delete
  6. படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும்.

    ReplyDelete
  7. இனிமையான பயணம்தான். படங்களையும் காணொளியையும்  இணைக்கும்பொழுது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். 

    ReplyDelete
  8. பானுக்கா சூப்பர் படங்கள்! அட்டகாசம் போங்க!! பாருங்க நீங்க எல்லா ஜெர்னர்லியும் கலக்கறீங்க.

    பயணம் என்றாலே ரொம்பப் பிடிக்குமே எனக்கு. விவரங்களையும் தெரிந்துகொண்டேன்.

    மகனின் காதில் போட்டு வைத்திருக்கிறேன் நிறைய. ஹாஹாஹா...
    இங்குமே இப்போதெல்லாம் செல்ல முடியவில்லை. எப்போது வாய்ப்பு கிடைக்குமோ..

    உங்களின் முந்தைய பயணப் பதிவுகளையும் வாசிக்கிறேன்

    கீதா

    ReplyDelete
  9. போட் வடிவில் உள்ள வாசல் தவரவியல் பூங்காவோ? கலைநயமிக்க அந்த வடிவம்...கவர்கிறது

    அக்கா நீங்க இப்ப அப்படியே வெளிநாட்டுப் பெண்மணி போலவே இருக்கீங்க!!! படம் சூப்பர்

    கீதா

    ReplyDelete
  10. மான்ட்ரியால் டவர் வடிவம் செம. பைசா நகரத்து சாய் கோபுரம் போல!!! என்ன ஒரு கட்டிடக் கலை.

    காணொளி ரொம்ப ரசித்தேன். எனக்கும் அவை எல்லாம் ஓட்டிப் பார்க்க வேண்டும் போல ஆசை!! (ஆசை ஓவரோ!!!?)

    கீதா

    ReplyDelete
  11. Replies
    1. The same comment got published twice by mistake. Sorry

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. நன்றாக சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்.‌உடன் பயணம் செய்தது போல் இருந்தது.
    இரண்டு நகரங்கள் பார்க்க மூன்று நாட்கள் போதவே போதாதுதான். மற்றபடி கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கால்வலிக்கு மத்தியில் இவ்வளவு பார்த்ததே பெரிய விஷயம்.
    டொரண்டோவிலேயே குரூயிஸ் ட்ரிப் இருக்கிறது. இந்தியா
    கிளம்புவதற்கு முன் போய்விட்டு வந்து விடுங்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete