கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 20, 2022

மறக்க முடியாத வசனங்கள்.

மறக்க முடியாத வசனங்கள். 

முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா,பாட்டி, சின்ன தாத்தா, சின்ன பாட்டி, அத்தை பாட்டி, அத்தை என்று நிறைய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள்  பேசும் பொழுது நிறைய பழமொழிகளை கூறுவார்கள். அவற்றை வசனங்கள் என்பார்கள். அதாவது இப்போதய பஞ்ச் டயலாக் போல. பேச்சு வழக்கில் போகிற போக்கில் இந்த வசனங்கள் தெறித்து வரும். பல வசனங்கள் அர்த்தத்தோடும், நகைச்சுவையோடும், சில அடல்ட் ஜோக் வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கும்.  

எங்கள் இரண்டாவது அத்தை இப்படிப்பட்ட வசனங்கள் கூறுவதில் வல்லவர். எங்கள் அம்மா செயல் திறன் மிக்க மல்டி டாஸ்கர். ஒரே சமயத்தில் பல வேலைகளை அனாயசமாக செய்வார். எங்கள் அம்மாவின் செயல் திறன் எப்படி பட்டது என்று அத்தை ஒரு வசனம் கூறுவார்.

'சீதை திரண்டு புழக்கடையில் நிற்கிறாள் 
செல்லப் பெண்ணுக்கு சீமந்தம் 
மாரிமுத்துக்கு மசக்கை 
எட்டு பெண் எருமை ஈதெடுத்து(ஈற்றெடுத்து) நிக்கறது 
ஆத்துக்காரர் வந்து அடியே அடியே என்கிறார் இதற்கு நடுவில் 
உடன் பிறந்தவன் வந்து,"திருவேங்கடத்துக்கு திரு விளக்கு ஏற்றப் போகணும் வாடி அக்கா" என்று கூப்பிட, அவள் அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு உடன் பிறந்தவனோடு திருவேங்கடத்திற்கும் போய் விட்டு வந்து விட்டாளாம்'... அவ்வளவு திறமை! என்பார். 

அதைப் போல யாரையாவது நாம் நன்றாக சமைப்பார்கள் என்றால் உடனே, "சமையல் என்ன பிரமாதம்? புளிக்கு ஏற்ற உப்பு, உப்புக்கேற்ற மிளகு பொடி, அஞ்சும் மூணும் உட்கூட்டிருந்தால் அறியாப் பெண்ணும் சரியா சமைக்கும்" என்பார்.

அவர் கூறும் இன்னொரு வசனம், "மயிருள்ள சீமாட்டி இடக்கொண்டை போட்டாலென்ன? வலக்கொண்டை போட்டாலென்ன?" என்பது.

எங்கள் அம்மாவும் சில பழமொழிகள் சொல்வார்கள். காமா சோமாவென்று ஒரு வேலையை செய்தால், " யாரோ ஒருத்தன் சொன்னானாம் 'எப்படியோ ஊராரின் தயவில் என் மனைவி கர்ப்பவதி ஆனாள்' என்று அந்த மாதிரி இருக்கு. என்பார்.

நிர்பந்தம் காரணமாக ஒரு வேலையை செய்ய நேர்ந்து, அது நல்ல விதமாகவும் முடிந்தால், "ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண்ணு பூளை கரைஞ்சாலும் கரைஞ்சது" என்பார்.

என் அம்மாவின் இன்னொரு சிறப்பான குணம் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம் கவலைப்பட மாட்டார். அம்மாவை மோசமாக நடத்தியவர்களும் ஒரு இக்கட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் ஓடிப்போய் உதவுவார். இதற்கு நாங்கள் ஏதாவது சொன்னால், " 'குப்பையை தள்ளி விட்டு கோலத்தை போட வேண்டும்' மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை பெரிது படுத்தக் கூடாது" என்று கூறுவார். அம்மாவின் இந்த குணத்தை இன்றளவும் உறவுகளும்,நட்பும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதையே நாங்களும் கடைப்பிடிப்பதால் சொந்தங்களோடு பேச்சு வார்த்தை இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 

உலக நாயகனுக்கு, தெரியாது, இல்லை என்னும் இரண்டு வார்த்தைகளும் பிடிக்காதாம். என் பாட்டிக்கும் அப்படிதான். "இருக்கறது வெச்சுண்டு சமைக்கணும், இது இல்ல, அது இல்ல என்று சொல்லுவாளா?" என்பார். நாம் சரியாக செய்யாத ஒரு செயலுக்கு ஏதாவது சாக்கு சொன்னால், "ஆடத் தெரியாத நாட்டியக்காரி மித்தம்(முற்றம்) கோணல்னு சொன்னாளாம். என்பாள்.   

சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்த என் பாட்டி, " ஒண்ணு ஒண்ணா சேர்த்தா(ல்) காசா? ஒருமிக்க சேர்த்தா(ல்) காசா?" என்று கேட்பார். அனாவசியமாக செலவழிப்பது அவருக்குப்  பிடிக்காது. 

நம்மோடு வம்பு வளர்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது என்பதற்கு, " கிடக்கு விடு, எச்சக்கலைக்கு எதிர்க்கலை போடுவாளா?" என்று கேட்பார். 

இவைகளைப் போல 'காம்பும் அருகல், தோண்டியும் பொத்தல், கிணறும் பாழும் கிணறு' 

'சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம்'
போன்றவை சகஜமாக புழங்கப்பட்ட வசனங்கள். 

சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக கூறப்பட்டதாக இருக்கலாம். (சமையல்)ஆக்கிட்டு துடைத்தால் ஐஸ்வர்யம் பொங்கும், தின்னுட்டு துடைத்தால் தரித்திரம் புடுங்கும்' என்பார்கள்.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட வசனங்களை யாரும் கூறுவதில்லை. மறக்கப்படும், மறைந்து வரும் பல விஷயங்களில் இப்படிப்பட்ட பழமொழிகளும் சேர்ந்து விடும் போலிருக்கிறது. இப்போது சினிமாக்களில் வந்த,"ஆணியே புடுங்க வேணாம்"  "உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு னா தக்காளியா?" போன்றவைகளைத்தான் கூறுகிறார்கள்

17 comments:

  1. உண்மைதான். இப்போதெல்லாம் பழமொழி உபயோகித்தாலே ஏதோ பழையகாலத்து ஆள் என்று பார்க்கிறாங்க.

    அது சரி.. கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் காட்டுவேன் என்றானாம் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. பட்டிருக்கிறேன். பழமொழி என்றாலும் வைகுண்டம்தானா? 

      Delete
  2. பானுக்கா நீங்க சொல்லியிருப்பதில் ரெண்டே ரெண்டுதான் நான் கேட்டிருக்கிறேன். இருக்கறதை வைச்சு சமைக்கணும் அது இது இல்லைன்னு சொல்லக் கூடாதுனு....- இதை நான் இப்போது வரை கடைப்பிடிக்கிறேன்.

    ஆடத் தெரியாத நாட்டியக்காரி - இதுவும் கேட்டிருக்கிறேன். மத்தது எதுவும் கேட்டதில்லை.

    கீதா

    ReplyDelete
  3. மல்டி டாஸ்கர் - அந்த வசனம் ரொம்ப ரசித்தேன்!

    நானும் ஒரு காலத்தில் மல்டி டாஸ்கர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இருந்த நான் இப்போது இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவு...ம்ம் என்ன சொல்ல!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதுமே ஒன் ஜாப் அட் எ டைம்தான் 

      Delete
  4. சுண்டைக்காய்....அது கேட்டிருக்கிறேன்.

    நம் வீட்டிலும், தெரியாது, இல்லை என்ற வார்த்தைகள் பயன்படுத்துவது பிடிக்காது. அதையே வேறு விதமாகச் சொல்லச் சொல்லுவாங்க. தெரியாது என்பதை விட, நான் தெரிந்து கொள்கிறேன்னு சொல்வது,

    உங்கள் அம்மாவின் குணம் - குறை சொன்னவர்களுக்கும் உதவுவது - அருமையான குணம்.

    கடைசில சொன்னீங்க பாருங்க ...அப்படியானவற்றைக் கேட்கவே பிடிப்பதில்லை...இப்போதைய வசனங்கள்..

    கீதா

    ReplyDelete
  5. ஆமாம். ன் அம்மாவும் நிறைய சொல்வார். முன்னர் இருந்த வீட்டுக்கு அயர்ன் செய்ய துணி எடுக்க வரும் பாட்டி ஒருவர் இது போல சில வசனங்களை சொல்ல நான் அவற்றை சொலவடை என்று பதிவிட்டிருந்தேன்!

    ReplyDelete
  6. மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன்குடம்.

    புருஷன் அடிச்சாலும் அடிச்சான் மூக்கு ஜலதோஷம் போயிற்று என்றெல்லாம் விதம் விதமாக சொல்வார்கள்.

    சட்டென நிறைய நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் தெரிந்த எல்லாவற்றையும் எழுதி விட்டேன் என்று சொல்லமுடியாது. 

      Delete
  7. பல வருடங்களாக வடிவேலு வசனம் தான்...

    ReplyDelete
  8. இப்பொழுதெல்லாம் பழமொழி பேசுபவர்கள் கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. பழமொழி கூறினால் பாட்டி மாதிரி பேசாதே என்று கூறியே, அவை இல்லாமல் செய்து விட்டார்கள். நான் எப்போதுமே

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஆம்.. நானும் இது போல நிறைய வசனங்கள், பழமொழிகள் (அறிவுரைகள் எனவும் சொல்லலாம்) எங்கள் அம்மா, பாட்டியிடம் கேட்டு வளர்ந்திருக்கிறேன். இப்போதுள்ள இளைய தலைமுறைகளிடம் அவ்வப்போது நினைவில் வருவதை சொன்னால், அவை புதுமையாக இருப்பதைக் கண்டு சிரிக்கிறார்கள். பழைய நினைவுகளை மீட்டுத் தந்தமைக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. நமக்கு தெரிகிறது, நம் குழந்தைகளுக்கு?

    ReplyDelete