கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 29, 2022

பிரமிக்க வைத்த நயாகரா

பிரமிக்க வைத்த நயாகரா

நயாகரா பெண்ணைப்போல, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு! என்றார் என் மாப்பிள்ளையின் தோழர். உண்மைதான். குளிர் காலத்தில் இரண்டு முறை அங்கு சென்றேன். கிருஸ்துமஸ் சமயத்தில் அங்கு செய்யப்பட்டிருக்கும் விளக்கொளி அலங்காரங்களையும், வாண வேடிக்கைகளையும் பார்ப்பதற்காக இரவில் ஒரு முறை சென்றோம். பகலில்தான் அருவியின் அழகு தெரியும் என்றாள் என் மகள். அதை ரசிப்பதற்காக பகலில் ஒரு முறை சென்றோம். 

வாண வேடிக்கைகள் பிரமாதம் என்று கூற முடியாது. தீபாவளியின் பொழுது நாம் வெடிக்கும் ஃபேன்ஸி வெடிகள் மாதிரிதான். அதே போல் அருவியும் பெரிதாக என்னை வசீகரிக்கவில்லை. அருவி தொடங்கும் இடத்திலிருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

நீர்வீழ்ச்சி என்றால் மலையிலிருந்து தொபேலென்று கீழே விழ வேண்டும், ஹோவென்ற ஓசை எழுப்ப வேண்டும். நீர்த்திவலைகள் சாரலாக நம்மை நனைக்க வேண்டும். இந்த அனுபவங்களைத் தராத அருவியில் என்னதான் வினாடிக்கு 2800க்யூபிக் மீட்டர் நீர் கொட்டினாலும் அது மலையிலிருந்து நீர் வழிவதாகத்தான் தோன்றுகிறதே ஒழிய குற்றாலமோ, பாபநாசமோ தந்த சந்தோஷத்தை தரவில்லை என்று நான் கூறி விட்டதில் என் மகளுக்கு சற்று வருத்தம்தான். 

மேலே நான் சொன்ன அனுபவங்கள் கிடைக்காததற்கு குளிர் காலத்தில் நயாகராவுக்கு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். "குளிருக்கு அடக்கமாக லேயர்கள் அணிந்து கொண்டு அதன் மீது ஓவர் கோட், தலைக்கு குல்லாய், கால்களில் கம்பூட்ஸ், காதுகளையும் மூடிக்கொண்டு, இத்தனையும் 

போதாதென்று கொரோனாவிற்காக மாஸ்க்...இத்தனையையும் மீறி சாரல் அடிக்கவில்லை, சத்தம் 

கேட்கவில்லை என்றெல்லாம் சொல்வது நியாயம் கிடையாது. சம்மர் வரட்டும் அப்போது நயாகராவுக்குச் செல்லலாம்" என்றாள் மகள். 

சனி, ஞாயிறு என்றால் மிகவும் கும்பலாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று கிளம்பினோம். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நயாகராவிற்கு இரண்டு மணி நேர பயணம்.‌ காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விட்டோம். அதற்கு முன்னாலேயே பார்க்கிங் உட்பட போட்டிங், ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ், வொயிட் வாட்டர் வாக், ஃப்ளவர் ஷோ, பட்டர் ஃப்ளை சாங்சுரி என்ற எல்லாவற்றிர்க்கும் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியாகி விட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் வரிசைதான் நீளமாக இருந்தது. நேரிடையாக வந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் காத்திருக்க தேவையிருக்கவில்லை.


Rainbow bridge

நயாகரா நீர்வீழ்ச்சியை கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகளிலிருந்தும் கண்டு ரசிக்கலாம். உண்மையில் நயாகரா அருவி என்பது நோ மேன்ஸ் ஏரியா எனப்படுகிறது.‌ இந்த இரு நாடுகளையும் ரெயின்போ ப்ரிட்ஜ் என்னும் பாலம் இணைக்கிறது. அமெரிக்காவில் இருப்பது பிரைடல் ஃபால்ஸ் என்னும் அளவில் கொஞ்சம் சிறிய அருவி. கனடாவில்தான் ஹார்ஸ் ஷு என்னும் குதிரை லாடத்தைப்போல

வளைந்திருக்கும் பெரிய பகுதி. இதற்கு அருகாமை வரை சிறிய கப்பலில் செல்ல முடியும். 

அந்த கப்பலில் பயணிக்கும் பொழுது அருவியிலிருந்து அடிக்கும் சாரலில் நாம் நனைந்து விடாதிருக்க சிவப்பு நிறத்தில் மெல்லிய ரெயின் கோட் தருகிறார்கள். கனடாவிற்கு நேர் எதிர் பகுதியில் அமெரிக்காவிலிருந்தும் சிறிய கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் நீல நிற ரெயின்கோட் அணிந்திருக்கிறார்கள். படகு பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கவே இப்படி வித்தியாசமான நிறங்களில் ரெயின் கோட் வழங்கும் ஏற்பாடாம்.

கப்பல் நகரத் தொடங்கி சிறிது நேரத்தில் ஹோவென்ற பேரிரைச்சலோடு தண்ணீர் நம்மீது தெளிக்கிறது, இல்லையில்லை பலத்த மழை போல நம்மை தொப்பலாக நனைக்கிறது. படகில் இருக்கும் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக ஆரவாரம் செய்கிறார்கள். நடுவில் வானவில் வேறு தெரிய அதை படமெடுக்க போட்டி. 

ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ் என்பதும் ஒரு அற்புதமான அனுபவம். நுழைவிடத்திலிருந்து நம்மை மின்தூக்கியில் 125 அடி கீழே அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து ஒரு நீண்ட குகையில் நடந்து சென்றால் நயாகரா பூமியில் விழுவதை அருவிக்கு பின்புறமிருந்து பார்க்கலாம். 

அந்த குகையில் கொஞ்சம் நடந்தால் வலதுபுறம் ஒரு பிரிவு செல்கிறது. அங்கு நயாகரா பற்றிய விவரங்கள், நயாகராவில் சாகஸ முயற்சிகள் செய்தவர்களின் விவரங்கள், அங்கு விஜயம் செய்த பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் புகைப்படங்களோடு காணக்கிடைக்கின்றன. அங்கு இரண்டு சாளரங்கள் வழியே அருவியை அருகில் பார்க்க முடியும். கையை நீட்டி மழை போல கொட்டும் அருவியின் சாரலை அனுபவிக்க முடியும். அங்கிருந்து மீண்டும் டன்னலில் நடந்து அருவி பூமியைத் தொடும் இடத்திற்கு வந்தால் பார்வையாளர்களுக்கு தனியாக இடம் இருக்கிறது. இங்கேயும் சாரலிலிருந்து நம்மை காக்க ரெயின் கோட் தருகிறார்கள்.அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அருவியின் பிரும்மாண்டம் தெரிகிறது. 

அருவி தந்த அந்த பரவச அனுபவத்திலிருந்து மீண்டு வொயிட் வாட்டர் வாக்ஸ் சென்றோம். ஈரி ஏரியிலிருந்து ஒண்டோரியோ ஏரிக்கு செல்லும் நீர்த்தடத்தை ஒட்டிய மரப்பாலத்தில் .07 மைல் தொலைவு நடப்பதைத்தான் வொயிட் வாட்டர் வாக்ஸ் என்கிறார்கள். இதிலும் நாம் லிஃப்டில் கீழே அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த மரப்பாலத்தில் இரண்டு இடங்களில் சற்று கீழே இறங்கி நதியோட்டத்தை மிக அருகில் பார்க்க முடியும். அந்த நதியோட்டத்தில் எழும் அலைகள் நதியின் வேகத்தால் எழுபவை. ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் கங்கை நதியில் இப்படிப்பட்ட அலைகளை பார்க்க முடியும். 

வேர்ல்பூல் ஏரோ கார் என்பதில் 250 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணித்து ஒரு குறுகலான இடத்தில் சடாரென திரும்பும் பொழுது நதியில் உண்டாகும் சுழல் களை ரசிப்பது. இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கனடாவிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமலேயே அமெரிக்காவின் எல்லைக்குள் சென்று திரும்பலாம்.

மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.

"இப்போது என்ன சொல்கிறாய்?" என்றாள் மகள். என்ன சொல்வது அருவியின் பிரும்மாண்டம், அழகு, என் வாயை அடைத்து விட்டதே..!!

12 comments:

  1. ஒரு வழியாய் நயாகராவை பிரமிக்க வைத்து விட்டார் உங்கள் பெண்.  அதேபப்டி சாதாரணமாய் நினைக்கலாச்சு என்று சரியான நேரத்தில் அழைத்துச் சென்று காட்டி உங்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து விட்டார்.

    ReplyDelete
  2. ஒரு நீர்வீழ்ச்சியை இப்படி எல்லாம் ரசிக்கலாமா என்னும் அளவுக்கு ஆரம்பிக்கும் இடம், விழும் இடம், அதன் உட்புறம் செல்ல பாதை என்று அசத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல ஏற்பாடுகள்.

      Delete
  3. நயாகரா பார்த்த அனுபவ விவரணம் சிறப்பாக உள்ளது.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 30, 2022 at 7:20 PM

      நன்றி

      Delete
  4. Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 30, 2022 at 7:21 PM

      நன்றி

      Delete
  5. எனக்கு நயாகராவை (நேரில் பார்த்ததில்லை, யுட்யூபில்தான் பார்த்திருக்கிறேன்) அதுவே என்னை பரவசப்படுத்தியது. இப்போது உங்கள் விவரணம் கூடுதலாக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக டனல் விஷயம்.

    எப்படி எல்லாம் வசதிகள் செய்திருக்கிறார்கள்!

    நம்மூர் கேரளத்தில் அதிரம்பள்ளி கிட்டத்தட்ட நயாகரா எனலாம். அதனிய அடியிலும் ரசிக்கலாம் மேலிருந்து விழுவதையும் ரசிக்கலாம்....அந்த ஆறு ஓடி வந்து கீழே விழுவதையும் கொஞ்சம் உள்ளே சென்றால் அது ஒரு இடத்தில் மடிந்து மடிந்து கேஸ்கேட் போல விழுவதையும் பார்க்கலாம். இது நேரில் அனுபவித்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 30, 2022 at 7:25 PM

      மத்திய பிரதேசத்தில் நர்மதா நதி நிர்வாகத்தில் இப்படி பிரும்மாண்டமான ஒரு அருவி இருக்கிறது என்பது சமீபத்தில்தான் வெளியுலகில் திறந்து தெரிந்திருக்கிறது. ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் வரும்.

      Delete
  6. அருமையான விவரணம், நயாகரா படங்களும், காணொளிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி. சாரலில் நனைந்தது போன்ற உணர்வு.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி __/\__

      Delete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு மிக அருமையாக உள்ளது . நயாகரா நீர்வீழ்ச்சி படங்கள் அத்தனையும் அழகாக உள்ளது. அதன் சிறப்புகளைபற்றி நீங்கள் விபரமாக கூறியுள்ளதை படித்து ரசித்தேன். இங்கெல்லாம் செல்லும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போனாலும், உங்கள் பதிவின் மூலமாக அனைத்தையும் கண்டு ரசிக்க வாய்ப்பு தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும், இந்தப்பதிவு எழுத உதவியாக இருந்த தங்கள் மகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete