போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…
வெளிநாட்டில்
வசிக்கும் என் மகள் வயிற்று பேத்திக்கு ஜூலையில் கோடை விடுமுறை தொடங்கியது. நான்கு
வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருக்கும் பேத்தியை திருச்சிக்கு அழைத்துச்
சென்று கோவில்களை காண்பிக்க நினைத்தேன். ஏன் திருச்சி என்கிறீர்களா? திருச்சிதானே எங்கள்
ஊர், எங்கள் ஊர் பெருமையை பேத்திக்கு சொல்ல வேண்டாமா?
23.7.23
அன்று தேஜசில் திருச்சிக்கு புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் அமையாமல்,
முன்னும், பின்னுமாக அமைந்தது. ஆனாலும், நான் தனியாக உட்கார மாட்டேன் என்றெல்லாம் படுத்தாமல்,
தனியாக அமர்ந்து கொண்டாள். ஸ்ரீரங்கத்தில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று, உணவருந்தி,
ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலை அவளை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு
அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவளுக்கு அந்தக் கோவிலின் *தல புராணத்தை சொன்னேன்.
கதையை
கேட்டு விட்டு, “ஐ ஸ்டில் டோண்ட் அண்டெர்ஸ்டான்ட் வொய் டிட் த ஸ்பைடர் கில் த எலிஃபெண்ட்?”
என்று கொக்கி போட்டாள்.
“நம்ப,
சாமி மேல வெயில் படக்கூடாதுனு வெப் கட்டினா, அதை அந்த எலிஃபெண்ட் கலைத்து விடுகிறதேனு
யானை மேல ஸ்பைடருக்கு கோபம், அதான்”
“வொய்
இட் டுக் ரீ பர்த் ஆஸ் எ கிங்க்?”
“நாம
சாமிக்கு கொஞ்சமா ஏதாவது கொடுத்தால் கூட, அவர் அதை நமக்கு மல்டிபில்ஸா திருப்பி கொடுப்பார்.
ஸ்பைடரா இருந்தப்போ சாமி மேல வெயில் படக்கூடாதுனு அது வெப் கட்டித்து இல்லையா? தனக்கு
நிழல் கொடுத்த அந்த சிலந்தியை அடுத்த ஜென்மத்தில் ராஜாவா பொறக்க வெச்சார். அதுவும்
அந்த ஜென்மாந்திர ஞாபகத்தாலா ராஜாவா பொறந்ததும் நிறைய கோவில்களை கட்டினார்”.
என்னுடைய
இந்த பதில் அவளுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு கேள்வி
எதுவும் வரவில்லை. அது மாலை நேரம் என்றதால் அகிலாண்டேஸ்வரி வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதி
ரூபத்தில் காட்சி. பேத்தியிடம்,”பார் இப்பொழுது அம்பாள் சரஸ்வதி ரூபத்தில் இருக்கிறாள்,
நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்” என்றதும், “மொத்தம் எத்தனை ரூபம்?” என்றாள்.
“மூன்று,
காலையில் துர்கா, மதியம்(உச்சி காலத்தில்) லட்சுமி, மாலையில் சரஸ்வதி” என்றேன். தீபாராதனை
காட்டும் வரை நிற்க அனுமதித்தார்கள். தரிசித்துக் கொண்டு, பிரகாரத்தை வாம் வரும் பொழுது
அங்கிருக்கும் சுப்பிரமணியரின் போர்க்கோல சிற்பத்தின் அழகை அவளுக்கு இந்த வயதில் ரசிக்கத்
தெரியாமல் போகலாம், இருந்தாலும் காட்டினேன்.
ஸ்வாமி
சன்னதிக்குச் செல்லும்பொழுது அந்தக் கோவில் பஞ்சபூத தலங்களில் தண்ணீருக்கானது என்றதும்,
“அதனால்தான் என்ட்ரென்சில் தண்ணீராக இருந்ததா?” என்றாள். பிரதான நுழைவு வாயிலுக்கு
அருகில் தரையோடு பதிக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
அதைத்தான் குறிப்பிட்டாள். பிறகு, “ஃபயருக்கான டெம்பிள் எது?” என்று கேட்டாள். திருவண்ணாமலை
என்றதும், “வென் ஆர் யூ கோயிங் டு டேக் மீ தேர்?” என்றாள். “பார்க்கலாம்” என்றேன்.
ஜம்புகேஸ்வரரை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்து, நவகிரகங்களை வணங்கி, அழகான கால பைரவரை
வணங்கி, தட்சிணாமூர்த்தியை வணங்கி, வெளியில் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் வெகு
அழகான சோமாஸ்கந்தர், சிவன் பார்வதி சிற்பங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டு
வீடு திரும்பினோம்.
கோவில்
வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் யாசகத்தை நான் கண்டு கொள்ளாமல்
வந்ததும், “பாட்டி, வொய் யூ ஆர் நாட் மைண்டிங் த பெக்கர்ஸ்?” என்று கேட்டாள். “ஒருவருக்கு
கொடுத்தால், நிறைய பேர்கள் வருவார்கள்” என்றேன். “பட் தே ஆர் புவர் பெக்கர்ஸ்” என்றாள்.
குழந்தைகளோடு கோவிலுக்கு வரும்பொழுது சில்லறையாக மாற்றிக் கொண்டுவர வேண்டும் என்று
நினைத்துக் கொண்டேன்.
மறுநாள்
முத்தரசநல்லூர் குருவாயூர் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் சென்ற அனுபவங்களை பார்க்கலாம்
*ஜம்புகேஸ்வரர்(ஆகிலாண்டேஸ்வரி)
கோவிலின் தல புராணம் சுருக்கமாக:
இந்த
இடம் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த பொழுது, சிவலிங்கம் ஒன்று நாவல் மரத்தினடியில்
இருந்தது. சிலந்தி ஒன்று அந்த சிவலிங்கத்தின் மேல் வெய்யில் படாமல் வலை கட்டும். அதே
சிவலிங்கத்திற்கு தன் தும்பிக்கையில் நீர் நிரப்பிக் கொண்டு வந்து, அதனால் அபிஷேகம்
செய்து, பூவை சாற்றி வழிபடும். அந்த யானை சிலந்தி வலையை அசிங்கம் என்று கருதி கலைத்து
விடும். மறு நாள் சிலந்தி மீண்டும் வலை பின்னும், யானை கலைக்கும். இது தொடர்ந்தது.
தான் பின்னிய வலையை யார் அழிக்கிறார்கள்? என்று கவனித்த சிலந்தி, அந்த வேலையை செய்வது
ஒரு யானை என்பதை தெரிந்து, ஒரு நாள் அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்து விடுகிறது.
அந்த போராட்டத்தில் இரண்டுமே இறந்து விடுகின்றன. அந்த சிலந்திதான் கோசெங்கட்ச்சோழனாக
மறு பிறவி எடுத்து, சிவபெருமானுக்கு 100 கற்றளிகளை எடுப்பித்தார். யானை முனிவராக பிறந்தது.
கேள்விகள் மேலும் வந்திருக்க வேண்டுமே...
ReplyDeleteவரலாம். நன்றி.
Deleteசுவாரஸ்யமான பேத்தி. கேள்விகளும், அபிப்ராயங்களை குழந்தை மனதை படம்பிடித்துக் காட்டும்.
ReplyDeleteகுழந்தைகள் பேச்சு எப்போதுமே ஸ்வாரஸ்யம்தான், நாம் பேச விட வேண்டும்.
Deleteநானும் திருவானைக்கா சென்று தரிசித்து வந்தேன். ஆகஸ்ட் ஆறாம் தேதி!
ReplyDeleteநல்ல விஷயம்! திருவானைக்கோவிலில் ஆடி மாதம் விசேஷம்.
Deleteஇந்த மாதிரி கதைகள் சொல்வதற்க்கும், வரலாறு சொல்லிக் கொடுப்பதற்கும் பேத்திகளுக்கு பாட்டிகள் மிகவும் அவசியம். பொறுமையுடன் கேள்விகளுக்கு பதில் அளித்து சந்தேகங்களை தீர்த்துள்ளீர்கள். அது பதிவாக இருப்பது நன்றாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteபெயர்த்தியோடு மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள்.
ReplyDeleteபிறவிப்பயனில் இதுவொரு முக்கிய அங்கம்.
உண்மைதான். நன்றி
Deleteதங்கள் பேத்தியுடன் திருவானைக்கா சென்று வந்த அனுபவம் சிறப்பு. கோயில் உலா தொடரட்டும்.
ReplyDeleteநன்றி வெங்கட்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ஊரிலிருந்து வந்திருக்கும் தங்கள் பேத்தியோடு பயனுள்ளதாக தாங்கள் பொழுதை கழித்ததும், அவளுடன் சென்று திருவானைக்கா கோவிலின் பெருமைகளை அவருக்கு விளக்கிச் சொன்னதும் மிக்க மகிழ்வை தருகிறது.
அவரின் கேள்விகளை ரசித்தேன். இந்தக் கால குழந்தைகளுக்கு நம்மிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன. நம் குழந்தைகள் இதே கேள்விகளை அன்று நம்மிடம் கேட்க சிறிது தயக்கம் காட்டினார்கள். நாம் அதற்கும் ஒருபடி மேலாக நம் வீட்டு பெரியவர்களிடம் தயக்கத்துடன் சற்றை பய உணர்வையும் காட்டினோம். இப்போதுள்ள காலத்தில் தைரியமாக கேள்விகளை கேட்கும் குழந்தைகளுக்கு (நம் பேத்தி, பேரன்களுக்கு) நம்மால் சரியான பதிலை சொல்லக் கூட இயலாமல் சில நேரம் அமைந்து விடுகிறது. பதிவை ரசித்தேன். ஸ்தல புராண சுருக்கம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான், நமக்கு கேள்வி கேட்க பயம். இப்போது கேட்கிறார்கள். மகிழ்ச்சிதான். நன்றி
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நான் ஒரு கருத்து போட்டிருந்தேனே.. ஒரு வேளை அது வரவில்லையோ. .? அதில் என்ன பதில் தந்தேன் என சரியாக நினைவும் வரவில்லை. வேறொன்றுமில்லை. இந்த மறைமுகமான கருத்துப் பெட்டி வைத்த பின் இந்த சந்தேகம் இயல்பாகவே தோன்றுகிறது. நன்றி சகோதரி. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் இப்பொழுது கமெண்ட் மாடரேஷன் வைத்திருக்கிறேன். வந்திருக்கும் கருத்துகளை பார்த்து அப்ரூவ் பண்ண வேண்டியிருக்கிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
Deleteபேத்தி கேட்ட கேள்விகளும், அதற்கு நீங்கள் சொன்ன பதில்களும் அருமை.
ReplyDeleteஅழகான புகைப்படங்கள்.
நன்றி. புகைப்படங்கள் என்றால் அதில் நீங்கள், வெங்கட்,கீதா போன்றவர்கள் இருக்கிறீர்களே, உங்களையெல்லாம் மிஞ்ச முடியாது.
ReplyDelete