கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 1, 2024

பார்க்கிங் (திரை விமர்சனம்)

 பார்க்கிங் (திரை விமர்சனம்)

 


மலையாளப் படங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை எத்தனை அழகாகவும்,இயல்பாகவும் படமாக எடுக்கிறார்கள்! நம் ஊரில் ஏன் அப்படி எடுக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஏக்கமாக இருக்கும். சமீபத்தில் ‘டிரைவிங் லைசன்ஸ்’ என்னும் மலையாளப் படத்தை பார்த்தேன். அதில் இரண்டு மனிதர்களுக்கு இடையே எழும்  ஈகோ மோதல்தான் கதை, மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே தமிழில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வந்திருக்கும் பார்க்கிங் படமும் இருவருக்கிடையே எழும் ஈகோ மோதலை விவரிக்கும் படம்தான். ஆனால் களம் வேறு.

 

காதல் திருமணம் செய்து கொண்ட ஈஷ்வரும்(ஹரிஷ் கல்யாண்),ஆதிகாவும்(இந்துஜா ரவிசந்திரன்) ஒரு வீட்டின் மாடி போர்ஷனுக்கு குடி வருகிறார்கள். கீழ் போர்ஷனில் அரசு அதிகாரியாக பணி புரியும், காசை எண்ணி எண்ணி செலவழிக்கும் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்), அவர் மனைவி(ரமா) மற்றும் மகள்(பிரதனா நாதன்) பத்து வருடங்களாக வசிக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் மனைவி ஆசைப்படும் எல்லாவற்றையும் நிறைவேற்றுபவர் என்றால், எம்.எஸ்.பாஸ்கர் மிக்ஸியின் ப்ளேட் உடைந்தால் மீண்டும் மீண்டும் சரி செய்து கொடுக்கிறாரே தவிர புதிதாக மிக்ஸி வாங்கித் தர யோசிப்பவர்.

 

கர்பிணியாண மனைவியை செக் அப்பிற்கு அழைத்துச் செல்ல புக் பண்ணிய டாக்ஸிகாரர் கான்ஸல் செய்துவிட, மனைவிக்காக ஒரு புது காரை வாங்குகிறார் ஈஷ்வர். இளம்பரிதியிடம் ஒரு டூவீலர் மட்டும் இருக்கிறது. கார், டூ வீலர் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க் பண்ணுவதில் இருவருக்கும் சின்னச் சின்ன தகராறுகள் வருகின்றன. இதை பஞ்சாயத்து பண்ண வரும் வீட்டு உரிமையாளர், கார் பார்க்கிங், காருக்குத்தான், டூ வீலர் வைத்திருப்பவர் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட, அது இளம்பரிதியின் ஈகோவை உசுப்பி விடுகிறது, அவசியமான செலவு செய்யவே யோசிக்கும் அவர் மொத்தமாக பணம் செலுத்தி, ஒரு புது காரை வாங்கி விடுகிறார். அதன் பிறகு அந்த இருவரில் யார் காரை வீட்டு வாசலில் இருக்கும் கார் பார்க்கிங்கில் நிறுத்துவது என்று இருவருக்கும் நடக்கும் ஈகோ கிளாஷ்தான் மீதிப் படம்.

 

எம்.எஸ்.பாஸ்கருக்கென்ன நடிப்பதற்கு? தூள் கிளப்பி விட்டார். அவர் மனைவியாக வரும் ரமாவும், மகளாக வரும் பிரதனா நாதனும் சிறப்பாக தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக சாஃப்ட் ஹீரோவாக வந்து கொண்டிருந்த ஹரீஷ் கல்யாண் angry young man அவதாரம் எடுத்து, எம்.எஸ்.பாஸ்கருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். குட் மூவ்! அவருடைய கேரியரில் இது ஒரு முக்கியமான படம். அவர் மனைவியாக வரும் இந்துஜா ஜஸ்ட் பாஸ்! பாடல்கள் மனதைத் தொடவில்லை, ஆனால் பின்னணி இசை சிறப்பு! எடிட்டிங்க் மற்றும் திரைக்கதை சூப்பர்ப்!  

 

யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ்தான். மைக்ரோவேவ் அவனில் வைக்கப்பட்ட செல்ஃபோன் அத்தனை நேரம் வெடிக்காமல் இருக்குமா?  இறுதிக் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து விட்டு வரும் ஹரீஷ் கல்யாண் அந்த smugging smileஐ தவிர்த்து, குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கலாம் போன்ற சிறு குறைகளை மன்னித்து விடலாம்.

 

தனியாக வில்லன் கிடையாது, சம்பவங்கள்தான் வில்லன். தனி காமெடி ட்ராக், தேவையில்லாத சண்டை காட்சிகள் போன்றவற்றை தைரியமாக தவிர்த்திருக்கும் புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டலாம்! குட் ஜாப்!




7 comments:

  1. எம் எஸ் பாஸ்கரை த் தவிர வேறு யாரையும் தெரியவில்லை. ஆனால் பாஸ்கரின் நடிப்பைச் சொல்லணுமா...அதைப் பார்க்கவே படம் பார்க்கணும் போல இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
  2. நானும் பார்த்தேன். வித்தியாசமான முயற்சி ஆனால் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகி விட்டது என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவிற்குச் செல்வார்களா? என்று எனக்கும் தோன்றியது. ஆனால் ஒரு விஷயத்தின் தீவிரத்தை காட்ட சற்று மிகைப்படுத்துவது இயற்கைதானே? நன்றி.

      Delete
  3. நான் ஓ.டி.டி.யில்தான் பார்த்தேன்.//அந்த லைசென்ஸ் கதை ப்ரித்விராஜ் பண்ணிய படம் இல்லையா?// லைசன்ஸ் இல்லை, டிரைவிங் லைசன்ஸ். ஆமாம் ப்ரித்விராஜின் படம்தான்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    இந்தப்படம் வீட்டில் குழந்தைகள் போன வாரம் பார்த்து விட்டனர். நான் பதிவில் நீங்கள் தந்த திரை விமர்சனம் கண்டு, இன்று பார்த்தேன். இதில் நடித்தவர்களின் நடிப்பு நன்றாக உள்ளது. குறை சொல்ல முடியவில்லை. ஆனால், மனித உள்ளத்தின் வேறுபாடு இறுதியில் வக்கிரமான வன்முறையில்தான் கொண்டு விடுகிறது என்பது கொடுமைதான் . நல்லவேளை யாரும் இறப்பது போல் காண்பிக்கவில்லை. திரைவிமர்சனத்திற்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. எனக்கும் பாஸ்கரைத் தவிர பிறர் தெரியாது. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete