கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 13, 2023

மழையும் கொலுவும்:

 மழையும் நானும் கொலுவும்:

பள்ளி நாட்களில் மழை வந்தால் ஜாலியாகத்தான் இருக்கும். மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வந்தால் அப்பா குமுட்டியில் கணகணவென்று தணலை ரேழியின் கதவிற்கு பின்னால் வைத்திருப்பார். 

தலையை துவட்டிக் கொண்டு, அந்த குமுட்டியில் காய வைத்துக் கொள்வோம். கூடத்தின் ஓட்டின் வழியாக மழை நீர் சொட்டினால், குச்சியால் ஓடுகளை தள்ளி ஒழுகலை நிறுத்துவார். பெரிதாக ஒழுகியதில்லை, ஆனால் கூடத்தின் நடுவில் இருந்த முற்றத்தின் மூலம் சாரல் அடிக்கும். அதில் சாக்கை போட்டுக் கொள்வோம். 

எங்கள் வீட்டில் எப்போதும் நவராத்திரி கொலு பெரிதாக அம்மா வைப்பாள். பதினோரு படி+ பக்கத்தில் ஒரு மேஜையில் ராதா கிருஷ்ணன் ஊஞ்சல்+பார்க்க என்று பிரும்மாண்டமாக இருக்கும்.  

ஒரு வருடம் கூடத்தில் கொலு வைத்து விட்டு, எங்கள் மாமா முற்றத்து சாக்கடையை அடைத்து ஃபவுண்டன் 

அமைத்துக் கொடுத்தார். ஃபவுண்டனுக்கு கீழே பீங்கானில் குழலூதும் கிருஷ்ணன். அதைத்தவிர இன்னும் பல பீங்கான் பொம்மைகளை வைத்திருந்தோம்.மிகவும் அழகாக இருந்த அந்த அமைப்பை பலரும் பாராட்டினார்கள். திருஷ்டி பட்டதை போல ஒரு விஷயம் நடந்தது.

அந்த வருடம் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த பத்மாமணி தியேட்டரில் 'திருமால்பெருமை' படம் வந்திருக்கிறது. இரவு காட்சிக்கு பெரியவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது நல்ல மழை கொட்டியிருக்கிறது. முற்றத்தின் நீர் செல்லும் வழியை அடைத்து விட்டதால், தண்ணீர் வெளியேற முடியாமல் முற்றம் நிரம்பி கூடத்திற்குள் வந்த மழை நீர் கிட்டத்தட்ட மூன்று படிகள் வரை மூழ்கடித்து விட்டது. 

சினிமா முடிந்து வீடு திரும்பிய பெரியவர்கள் சாக்கடை அடைப்பை நீக்கி தண்ணீரை வெளியேற்றி விட்டார்கள். நவராத்திரி முடிந்ததும் பொம்மைகளை மச்சில் அதற்குரிய மரப்பெட்டியில் வைத்தாகி விட்டது. 

அடுத்த வருடம் நவராத்திரிக்கு பொம்மைகளை எடுக்கலாம் என்று பெட்டியைத் திறந்த நாங்கள் அதிர்ந்து போனோம். முதல் வருடம் ஈரத்தோடு பொம்மைகளை மரப்பெட்டியில் அடுக்கியதால் கரையான் நிறைய பொம்மைகளை தின்றிருந்தது. மேல் படியில் இருந்த பொம்மைகள் தப்பித்திருந்தன. ஆனால் சிலவற்றில் வர்ணம் போகியிருந்தது. எங்கள் வீட்டு பொம்மைகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது. கரையான் தின்ற பொம்மைகளை களைந்த பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பிரும்மாண்ட கொலு வைக்கவே இல்லை. 😔

15 comments:

  1. மறக்க முடியாத நினைவுகள் தான்.
    கொலுவில் பவுண் டனுக்கும் முற்றத்து சாக்கடைக்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை.
    எங்கள் வீட்டில் பலவருடங்களாக இருந்து வந்த ராமர் செட்டில் இராமரின் கை பழுதாகி விட்டது. அதனால் அந்த செட் முழுவதையும் கொலுவில் வைக்க முடியவில்லை. மிகவும் அழகான செட் அது. வட இந்தியாவில் செய்யப்பட்ட உயரமான ராமன், சீதை, லக்ஷ்மணன், திருவடி எல்லோருமே கம்பீரமாக இருப்பார்கள். வெளியிலபோட மனது வராமல் துணியில் சுற்றி வைத்திருக்கிறேன்.
    புட்டேனஹள்ளியில் ஒரு இடத்தில் சரி செய்து கொடுக்கிறார்கள் என்று என் பெண் சொல்லுகிறாள். ஶ்ரீ ராமனே மனது வைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 'ப' வடிவ கூடம், நடுவில் ஓரடி அல்லது இரண்டடி ஆழத்தில் முற்றம். அதில்தான் பாத்திரங்கள் தேய்ப்போம். அந்த சாக்கடையை அடைத்து, அதையே குளம் போல செய்து அதில் ஃபவுண்டன் வைத்திருந்தோம். மழை பெய்தபொழுது நீர் வெளியேற வழி இல்லாமல் நிரம்பி வெளியே வந்து விட்டது. வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. அட! முற்றத்தில் நீரூற்று! நல்ல ஐடியா. எப்படிச் செய்தார் பானுக்கா? ஏதாவது ஐடியா?

    நிஜமாகவே மறக்க முடியாத நினைவுகள். கொலுவை ஓரளவு ஊகிக்க முடிகிறது. சென்னை மழை எழுப்பிய நினைவுகள்!

    நானும் கொலு வைக்கத் தொடங்கி அதன் பின் ஊர் சுற்றலில் இறக்கங்களில் விட்டுவிட வேண்டியதானது.

    கொலு என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நல்ல ஐடியா. எப்படிச் செய்தார் பானுக்கா? ஏதாவது ஐடியா?// நோ ஐடியா. அப்போது நான் மிகவும் சிறியவள். இதெல்லாம் நான் எழுதியிருப்பதை படித்தால், என் வீட்டில் எல்லோரும் "இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்கிறார்கள். :)))
      வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. Replies
    1. ஆமாம். கருத்திற்கு நன்றி.

      Delete
  4. மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஆனால் மனசாய், முழுதாய் நனைந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும், ஆனால் சிறு வயதில் வீசிங் இருந்ததால் அம்மா நனைய விட மாட்டாள்.

      Delete
  5. கொலு பொம்மைகள் வீணாய்ப் போனது மிகவும் வருத்தமாய் இருந்திருக்கும்,

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப வருத்தமாக இருந்தது.

      Delete
  6. கண்ணேறு மிகப்பெரிய தடையாகும்.

    ReplyDelete
    Replies
    1. கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்களே. நன்றி ஜி.

      Delete

  7. இளமை காலத்தில் மழையில் நனைவது மிகவும் பிடித்தமானது.
    அப்பாவின் கரிசனம் நெகிழ்வு.
    கொலு பொம்மைகள் பழுதானால் இப்போது புதிது போல செய்து தருகிறார்கள்.. பழைய பொம்மைகள் போல இப்போது கிடைக்காது.
    மழையில் நனைந்து பொம்மைகள் வீணாகி விட்டதை நினைத்து மிகவும் வருத்தம்.

    ReplyDelete
  8. //கொலு பொம்மைகள் பழுதானால் இப்போது புதிது போல செய்து தருகிறார்கள்..// பொம்மை விற்பவர்கள் புதிது செய்யப்பட்ட பழைய பொம்மைகளை தனியாக வைத்திருப்பார்கள். எங்கள் வீட்டில் பல பொம்மைகளை எதுவும் செய்ய முடியாமல் கரையான் தின்று விட்டது. லேசாக பாதிப்படைந்த பொம்மைகளை வர்ணம் தீட்டிக் கொண்டோம்.
    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  9. பதிவை படித்து, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. பயணத்தில் இருந்ததால், உடனே பதிலளிக்க இயலவில்லை. செல்ஃபோன் மூலம் கருத்திட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete