கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 13, 2023

திருமண கலாசார மாற்றங்கள்

 திருமண கலாசார மாற்றங்கள்

சென்னைய்யிலிருந்து கும்பகோணம் செல்ல ரயிலில் ஏறி உட்கார்ந்த நாம், “கும்பகோணம் வந்து விட்டதா? கும்பகோணம் வந்து விட்டதா?” என்று அருகில் இருப்பவரை தொனப்புவோம். கும்பகோணமா வரும்? நாமல்லாவா அங்கு செல்கிறோம். அதைப் போலத்தான், “சென்ற வருடம் தீபாவளிக்கு தைத்த சட்டை டைட்டாகி விட்டது” என்போம், சட்டை தைத்த அதே அளவில்தான் இருக்கும், நாம் வெயிட் போட்டிருப்போம், ஆனால் சொல்வதென்னவோ சட்டை டைட் ஆகி விட்டது என்று.

அதே கதைதான் திருமண மாற்றங்களிலும் நடக்கிறது. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மாற்றுவது என்னவோ நாம்தான். ஆனால் ஏதோ ஒரு தேவதையோ, அல்லது சாத்தானோ இந்த மாற்றங்களை கொண்டு வந்தது போல காலம் மாறி விட்டது காலம் மாறி விட்டது என்று புலம்பல்.

கல்யாணங்களில் இதுவரை இல்லாத புது பழக்கங்களை மற்றவர் வீட்டு திருமணங்களில் நடத்தும் பொழுது “இது என்ன புது பழக்கம்? நம் வீட்டில் கிடையாதே?” என்போம். அதே பழக்கத்தை நம் வீட்டுத் திருமணங்களில் கொஞ்சம் பெருமையாகவே நடைமுறை படுத்துவோம். அப்படி வந்ததுதானே நம் திருமணங்களில் கலயாணத்திற்கு முதல் நாள் ரிஷப்ஷனும், மெகந்தியும், சங்கீத்தும்? யாரோ ஒருவர் செய்யப் போக, பியர் பிரஷரில் மற்றவர்களும் தொடர்கிறார்கள்.

பெரியவர்கள் இப்படி சிலவற்றிர்க்கு வளைந்து கொடுக்க, சிறியவர்களின் கேண்டிட் ஃபோட்டோகிராஃபி போன்ற சில ஆசைகளுக்கும் பிடித்திரிக்கிறதோ இல்லையோ கட்டுப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறிய வயதில் அதிகமாக சம்பாதிக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரே ஒரு பெண்ணை வைத்திருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பணம் ஒரு பொருட்டு அல்ல. அதனால் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.

சமீபத்தில் எனக்கு வாட்ஸாப்பில் ஒரு செய்தி வந்தது. உங்களில் பலருக்கும்கூட வந்திருக்கும். மணப்பெண்ணின் பின்னலில் வைத்துக் கட்டும் ஜடை பாதாம், முந்திரி, வால்நட், கிஸ்மிஸ் போன்ற உலர் பழங்களால் தயாரிக்கப் பட்டிருந்தது. என்னுடைய ஒரு தோழி என்னிடம் ஒரு முறை, “உங்கள் பிராமணத் திருமணங்களில் ரிசப்ஷனில் பனிக்கட்டியால் சிற்பங்களும், வெஜிடபிள் கார்விங் என்று காய்கறி அலங்காரங்களும் செய்வீர்கள், நேஷனல் வேஸ்ட்!” என்றார். இந்த உலர்பழ ஜடையை என்ன சொல்வாரோ?

திருமணங்களில் சமீபத்திய மாற்றம் ஃபியூஷன் திருமணங்கள். கலப்புத் திருமணங்கள் அதிகமாகி விட்டதால் இரண்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடக்கும் இந்த திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சிலும் கூட திருமணங்கள் நடக்கின்றன. ஆணவக்கொலை செய்யாமல் ஏற்றுக் கொள்கிறார்களே!

மிக சமீபத்தில் எங்கள் குடும்ப குழுவில் ஒரு திருமண அழைப்பிதழ் பகிரப் பட்டிருந்தது. ஹிந்து முறைப்படி அச்சிடப்பட்டிருந்த அந்த மஞ்சள் நிற பத்திரிகை ஒரு இரு வீட்டார் அழைப்பு. மணமகன் பெயரைக் கொண்டு அவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரிந்தது. மணமகள் ஹிந்துப் பெண். யாரும் மதம் மாறாமல் அவரவர் மாதத்திலேயே இருக்க, பெரியவர்களும் அதை அங்கீகரிக்கிறது நல்ல அந்த அழைப்பு என்னைக் கவர்ந்தது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கும் பொழுது வாழ்த்தத்தானே வேண்டும்? 

17 comments:

  1. திருமண முறைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதற்கே நாம் சந்தோஷப்படணும் இல்லையோ? என்னவோ! ஆடம்பரம் அதிகம் ஆகிவிட்டது. அதோடு இல்லாமல் இப்போதெல்லாம் மண மகளை அழைத்து வருகையில் அவள் ஆடிப்பாடிக் கொண்டே வருவதும் அண்ணன்/தம்பி முறைப் பிள்ளைகள் பல்லகிலோ அல்லது நடந்து வரும்போதோ மேலே மலர்ப்பந்தலைப் பிடித்த வண்ணம் வருவதும் கூட பெருகிக் கொண்டே இருக்கு. என் தம்பியின் 2ஆவது பிள்ளை கல்யாணத்தில் மணப்பெண் ஆடிய வண்ணம் வர மேலே மலர்ப்பந்தலை அவள் தம்பியும் இன்னும் சில இளைஞர்களும் பிடித்த வண்ணம் வந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நம் ஊரில் பழக்கம் இல்லாத செண்டை மேளம் வேறு. எல்லாவற்றையும் ரசிக்கலாம்.

      Delete
  2. என்ன செய்யச் சொல்கின்றீர்கள்?..

    ReplyDelete
    Replies
    1. ஏசுநாதர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். தம் வீட்டு திருமணத்தில் மாற்றமே செய்யாதவர்கள்தான் முதல் கல்லை எறிய வேண்டும்.

      Delete
  3. போகப்போகத் தெரியும்!?...

    ReplyDelete
  4. இல்வாழ்க்கை சிறக்கட்டும்...

    ReplyDelete
  5. 1991 லேயே என் சகோதரி திருமணத்தில் திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு வைத்தோம்.  மாப்பிள்ளை பத்திரிக்கைத் துறையில் வேலை பார்பபவர்.  அவர் வீட்டு விருப்பம் அது.

    ReplyDelete
    Replies
    1. 90களில்தான் இந்த பழக்கம் தொடங்கியது.

      Delete
  6. திருமணங்களில் சங்கீத் மற்றும் பாட்டுக் கச்சேரி அலறல் கொடுமைகள் தாங்க முடியாதவை.  யாரோடும் பேச முடியாது.  காது ஜவ்வு கிழியும்.

    ReplyDelete
  7. எங்கள் வீட்டில் என் திருமணம்தான் தரையில் அமர்ந்து விருந்து சாப்பிட்ட கடைசித் திருமணம். அப்புறம் டைனிங் ஹால், டேபிள் சேர் தான்!

    ReplyDelete
    Replies
    1. வருடம்..? 27 வருடங்களுக்கு முன்பா? பரவாயில்லையே? மதுரையில் அவ்வளவு நாட்கள் தரையில் சாப்பாடு போட்டார்களா? திருச்சியில் 80களிலேயே டேபிள் சாப்பாடு தொடங்கி விட்டது.

      Delete
  8. மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது! Peer Pressure - சரியாகச் சொன்னீர்கள்! பல வீடுகளில் இப்போது இது தான் நடக்கிறது. அதிக செலவில்லாமல் திருமணம் செய்தால் என்னமோ ஏதோ என கதை கட்டத் தொடங்கி விடுகிறார்கள். எத்தனை எத்தனை ஆடம்பரம், எத்தனை பண விரயம் என்றெல்லாம் பேசினால், யோசித்தால் நம்மை தான் குற்றம் சொல்வார்கள். அதனால் நடப்பது நடக்கட்டும் என நாமும் சென்று கலந்து கொண்டு திரும்புவதே நல்லது.

    ReplyDelete
  9. இதற்கு முக்கிய காரணம் சிறிய வயதில் அதிகமாக சம்பாதிக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரே ஒரு பெண்ணை வைத்திருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பணம் ஒரு பொருட்டு அல்ல. அதனால் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.//

    ட்ட்டோ பானுக்கா...அது போல நம் உறவினர்கள், நட்புகள் செய்துவிட்டால் அதை நாமும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற Peer Pressure மிக்வும் சரியே.

    நாங்கள் திருமணத்தை வெகு எளிதாகச் செய்ய வேண்டும் என்றால் எங்களைப் புரிந்து கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் கண்டிப்பாகக் குற்றம் சொல்வார்கள். நாம போனோமா ஆசிர்வதித்தோமா, சாப்பிட்டோமான்னு வந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் பாடு, அவர்கள் செலவு. அவர்களுக்கு முடிகிறது செய்கிறார்கள். நமக்கு என்ன முடியுமோ நாம் அதைச் செய்வோம் அவ்வளவே.

    அழகாஎ ழுதியிருக்கீங்க பானுக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம்மால் அவ்வளவுதான் முடியும்.

      Delete