கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 2, 2025

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி.யில் நாளொரு திரைப்படம் அல்லது சீரிஸ், பொழுதொரு யூ ட்யூப் சேனல் என்று பொழுது கழிகிறது. காலை வேளையில் ஸ்லோகங்கள், பஜன், சுதா சேஷய்யன், துஷ்யந்த் ஸ்ரீதர், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உபன்யாசன்கள் என்று கேட்கும் நான் மாலையில் அப்படியே நேர் எதிராக Dr.காந்தராஜ், கிருஷ்ணவேல், ஸ்ரீவித்யா, Dr.ஷாலினி போன்றவர்களின் யூ டியூப் கேட்கத் தொடங்கி விடுவேன். இதில் Dr. ஷாலினி சற்று தெளிவு. 

திருப்பாவையில் குறிப்பிடப்படும் நப்பின்னை யார்? என்று ஒரு குழப்பம் இருந்தது. ரேவதி சங்கரன் அதை தெளிவித்தார். நல்+பின்னை=நப்பின்னை. அதாவது பாற்கடல் கடையப்பட்ட பொழுது பின்னால் வந்த தேவி. முதலில் வந்தவள் ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி. நாம் அவளை மூதேவி என்கிறோம். பின்னால் வந்த இளையவள் நப்பின்னை என்னும் மகாலட்சுமி என்று அற்புதமாக விளக்கினார். மதுரை கோவிலை எப்படி தரிசிக்க வேண்டும் என்ற அவருடைய வீடியோவும் சிறப்பாக இருந்தது. 

சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த நிகழ்ச்சி அஸ்வின் ரவிச்சந்திரன் கோபிநாத்திற்கு அளித்த பேட்டி. மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பேசினார். 

"உங்கள் திருமணம் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜா?" என்று கோபிநாத் கேட்டதற்கு, " என்ன லவ் கம் அரேஞ்ச்ட்? லவ் மேரேஜ்தான்" என்றார். 

பள்ளி நாட்களில் இவர் பெரும்பாலும் பேட்டை தூக்கிக் கொண்டு விளையாட போய்க் கொண்டிருந்ததால் இவருடன் படித்த சில மாணவர்களின் பெற்றோர்கள் "அஸ்வினோடு சேராதே, சேர்ந்தால் அவன் உன்னையும் மைதானத்திற்கு அழைத்துச் சென்று விடுவான்" என்று கூறியிருக்கிறார்களாம்!! தோடா! 

அவர் தந்தை அவருக்காக பட்ட சிரமங்களை சொல்லும் பொழுது,"இப்பொழுது நாம் மிகவும் சுயநலமாக வாழ்கிறோம், என் பெற்றோர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு செய்ததை என்னால் என் குழந்தைகளுக்கு செய்ய முடியாது" என்று கூறிய அதே நேரத்தில் தந்தையோடு நிறைய சண்டை போடுவதாகவும் கூறினார். :)) அம்மாவின் அறிவுரையை கேட்டுதான் ஸ்பின் பெளலிங் போட ஆரம்பித்தாராம்.

டெஸ்ட் மாட்சிற்கான தயாரிப்புகளை அவர் விவரித்ததை கேட்டபொழுது இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று தோன்றியது. 

"நான் சின்ன வயதில் என் அப்பாவின் காலடியில் உட்கார்ந்து கொண்டுதான் டி.வி.யில் கிரிக்கெட் மாட்ச் பார்த்தேன். அப்போது நானும் மேட்ச் விளையாடுவேன் என்று நினைத்தேனா? கிரிக்கெட் பார்க்க பிடித்தது பார்த்தேன், கிரிக்கெட் விளையாடினால் இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாம் என்றோ, ஐ.பி.எல். ஏலத்தில் என்னை இத்தனை ரூபாய்க்கு எடுப்பார்கள் என்றோ நினைத்தது கிடையாது. கிரிக்கெட் விளையாட பிடிக்கும் விளையாடினேன்" என்றார் கீதையின் சாரம்!


8 comments:

  1. அஸ்வினின் பேட்டியை நானும் பார்த்தேன், பானுக்கா. அவரது இந்த வரிகள் நீங்க சொல்லியிருக்கும் கடைசி அது எனக்கு மிகவும் பிடித்தது.

    இப்படித் தனக்குப் பிடித்ததை பிடிப்பதை ஈடுபாட்டுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்தான். திரைப்படத் துறையிலும் கூட

    கீதா

    ReplyDelete
  2. டாக்டர் ஷாலினி தெளிவுதான் என்றாலும், அவரது சில கருத்துகளை ஏற்க முடிவதில்லை.

    மற்ற யுட்யூபர்ஸ் அதாவது மாலையில் பார்ப்பவற்றைச் சொல்கிறேன், நீங்கள் குறிப்பிட்டிருப்பவற்றை முன்பு பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது தவிர்க்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  3. நப்பின்னை விளக்கம் - ஒவ்வொரு விளக்கம் இருக்கிறது. ஒரு விளக்கம் நப்பின்னை, யசோதையின் சகோதரரின் மகள் என்றும் அவளும் கிருஷ்ணரும், பலராமரும் சிறு வயதில் விளையாடியவர்கள் என்றும்....மற்றொரு விளக்கம் நப்பின்னை என்பவள் நீளாதேவியின் அவதாரம் என்றும். நப்பின்னை குறித்து வேறு எங்கும் அதாவது தென்னிந்திய தமிழ்ப்பாசுரங்களில் தவிர குறிப்பிடப்படவில்லை என்றும் சொல்வதுண்டு. நிறைய ஆய்வுகள் இருக்கின்றன.

    கீதா

    ReplyDelete
  4. நல்ல பதிவு. அஸ்வின் பேட்டி சுருக்கம் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  5. ​அஸ்வின் பேட்டி பற்றிய செய்தி புதிது.

    Jayakumar

    ReplyDelete
  6. OTT வேளுக்குடியா?  ஸ்லோகங்களா?  எதில்?

    அஷ்வின் பேட்டி நான் பார்க்கவில்லை.

    ReplyDelete