நவராத்திரி நினைவுகள்
நல்லபடியாக நவராத்திரி-2025 நிறைவு பெற்றது. இந்த வருடம் இந்தியாவில் பத்து நாட்களும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒன்பது நாட்களும் கொண்டாடப்பட்டது. சாதாரண நாள்கள் இந்தியாவில் முன்பே உதித்து விடும், அங்கு இரவாகும் பொழுதுதான் இங்கு பொழுது விடியும். ஆனால் பண்டிகைகள் இந்தியாவில் கொண்டாடப்படும் நாளுக்கு முதல் நாளே இங்கு கொண்டாடி விடுகிறார்கள். இது எப்படி என்பதை ஜோதிடர்கள்தான் விளக்க வேண்டும்.
என்னுடைய நவராத்திரி அனுபவங்களை நாங்காக பிரிக்கலாம். திருமணத்திற்கு முன்பு திருச்சியில் அம்மா வீட்டில், பின்னர் மஸ்கட்டில், அதற்குப் பிறகு சென்னையில், பின்னர் பெங்களூரில்.
திருச்சியில் அம்மா வீட்டு கொலு பெரியது. கொலு படி என்று கிடையாது, நாங்களாக் கட்டுவதுதான். மேஜை,பென்ச், பலகைகள், டின்கள் என்று பலவற்றை வைத்து கட்டப்படும். அவைகளின் உயரத்தை சரி செய்ய எங்களுடைய நோட்டு,புத்தகங்கள் கூட அடியில் வைக்கப்படும். அப்போதெல்லாம் ஹாலிடே ஹோம் ஒர்க் அவ்வளவாக கிடையாது, என்பதால் நோட்டு புத்தகங்களும் படியாவது குறித்து கவலை இல்லை. ஆனால் அவற்றை சலவை வேட்டியால் கவர் செய்து விட்டால் ரெடிமேட் படி போலத்தான் தோற்றமளிக்கும்.
பெரும்பாலும் பெரிய பொம்மைகள்தான். எங்கள் வீட்டில் இருந்த நாய் பொம்மைகள் இரண்டும், பூனை மொம்மைகள் இரண்டும் அசல் நாய், பூனை போலவே தோற்றமளிக்கும். ஊஞ்சலாடும் ராதா கிருஷ்ணன் பொம்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தவிர வெள்ளைக்கார பொம்மைகள் என்றழைக்கப்பட்ட் பீங்கான் பொம்மைகள் நிறைய உண்டு. பார்க்கில் வைக்க எக்கச்சக்க பிலாஸ்டிக் பொம்மைகள்.
அம்மா எங்களுக்கு மடிசார் கட்டி விடுவது, ஒரு நாள் ஐயர் கட்டு, ஒரு நாள் ஐயங்கார் கட்டு. ஒரு நாள் கிருஷ்ணர் வேஷம் என்று அலங்காரம் செய்து விடுவாள். நாங்கள் இருந்தது திண்ணை, ரேழி, கூடம், என்ற பழங்காலத்து வீடு. கூடத்தில் தொட்டி முற்றம் என்று ஒரு திறந்தவெளி இருக்கும். அதில் பாத்திரங்கள் தேய்ப்பார்கள். ஒரு முறை முற்றத்தின் சாக்கடையை அடைத்து விட்டு, அங்கு ஃபவுண்டன் அமைத்திருந்தோம். ஒரு மாலையில் எல்லோரும் வெளியே போய் விட, அன்றைக்குப் பார்த்து நல்ல மழை. தொட்டி முற்றம் நிரம்பி தண்ணீர் வெளியே வந்து, கீழ் மூன்று படிகளை நனைத்து விட்டது. பொம்மைகளை துடைத்து உள்ளே வைத்து விட்டோம். அடுத்த வருடம் கொலுப் பெட்டியைத் திறந்தால்... ஒரே கரையான். நிரைய பொம்மைகள் பாழாகி விட தூக்கிப்போட நேர்ந்தது.
மஸ்கட்டில் வெகு சிலரே கொலு வைப்பார்கள், ஆனால் நிறைய பேர் அழைப்பார்கள். எல்லா வீடுகளிலும் பார்த்தவர்களையே மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடும். பெரும்பான்மையான வீடுகளில் பாதாம் கேக் இருக்கும். அதனுடன் சுண்டல் மற்றும் ஜூஸ் சாப்பிட கொடுத்து விட்டு கிஃப்ட் மட்டும் கையில் தருவார்கள்.
சென்னைக்கு வந்ததும் முதலிரண்டு வருடங்கள் கொலு வைக்கவில்லை. அதன் பிறகுதான் கொலு வைக்க ஆரம்பித்தேன். முதல் வருடம் கே.கே.நகர், ஐயப்பன் கோவில் வாசலில்தான் பொம்மைகள் வாங்கினேன். மூன்று படிகள் மட்டுமே கட்டி சிறிய கொலு. அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் பொம்மைகள் வாங்கி ஐந்து படிக்கு உயர்த்தினேன். ஸ்டீல் படியும் வாங்கி விட்டோம். என் கணவர் குறளகம் அழைத்துச் சென்று நிறைய பொம்மைகள் வாங்கித்தந்தார். அங்கு எங்கள் குடியிருப்பில் நவராத்திரிக்கு நான் தரும் பரிசுப் பொருள்களை ஒரு பெண்மணி மிகவும் வியந்து பாராட்டுவார். என் மகன், மகள், மருமகள் எல்லோருக்குமே கொலு வைப்பது, அலங்கரிப்பது, கிஃப்ட் வாங்குவது எல்லாமே ரொம்ப பிடிக்கும்.
![]() |
எங்கள் வளாக சென்ற வருட பூஜை |
பெங்களூருக்குச் சென்றதும் கொலு வைப்பது தொடர்ந்தது. நாங்கள் இப்போது இருக்கும் குடியிருப்பில் லலிதா சஹஸ்ரநாம பாராயண க்ரூப் என்று ஒன்று வைத்திருக்கிறோம். அதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் என்று எல்லோரும் இருக்கிறோம். தினசரி ஒருவர் வீட்டில் காலை 10 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் இருக்கும், பிரசாதம் அவர்கள் வீட்டிலேயே இருக்கும். தினசரி சர்க்கரைப் பொங்கல், சுகியன், பால் பாயசம், வடை என்றெல்லாம் சாப்பிட்டு கணிசமாக எடை கூடிவிடும். மாலையில் எங்கள் வளாகத்திர்கு எதிரே இருக்கும் விநாயகர் கோவிலில் பாராயணம் இருக்கும். அதைத்தவிர ஞாயிற்றுக் கிழமை கிளப் ஹவுஸில் அம்மனை பிரதிஷ்டை செய்து லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை, ஸ்ரீ சுக்தம் போன்றவை வாசித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்குவோம். இரண்டு வருடங்களாக கன்யா பூஜையும் செய்கிறோம். மாலையில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி போன்றவைகளும் நடத்தப்படும். இதைத் தவிர பெங்காலிகளின் பண்டல், குஜராத்திகளின் தாண்டியா போன்றவைகளும் இருக்கும். இந்த வருடம் நான் கனடாவில் இருப்பதால் இவை எல்லாவற்றையும் நழுவ விட்டேன்.
இங்கு(கனடாவில்) என் மகள் வீட்டில் கொலு வைத்தோம். அவள் சென்ற வருடம் இந்தியா வந்திருந்தபொழுது பொம்மைகள் வாங்கி வந்தாள். இங்கு கிடைக்கும் stair raiser மற்றும் மரச்சட்டங்கள் வாங்கி படி கட்டினோம். தினமும் ஒருவருக்காவது வெற்றிலை பாக்கு தர வேண்டும் என்று என் மகள் விரும்பினாள். அதன்படி அழைத்தாள். சனிக்கிழமை நாங்கள் வெளியே சென்றோம். ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் வீட்டிற்கு நிறைய பேர்கள் வந்தார்கள். சாப்பிட்டு விட்டு, வெற்றிலை பாக்கு வாங்கிச் சென்றார்கள். ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு கொலு காண்பித்து, கிஃப்டும் கொடுத்தனுப்பினாள்.
அதில் ஒரு குழந்தையின் தாயும் வந்து, கொலுவைப் பார்த்து ரசித்தார். அவருக்கு கொலுவின் தாத்பர்யத்தைச் சொல்லிவிட்டு, "ஸெலிபிரேட்டிங்க் உமன் ஹூட் ஃபார் நைன் டேஸ், எக்ஸ்க்லுசிவ்லி ஃபார் அஸ்" என்றேன். "வீடிசர்வ்" என்றார் அவர். உண்மைதானே?
இங்கு நான் பார்த்த சில கொலுக்கள்:
எங்களுக்கு கிடைத்த நவராத்திரி பரிசுகள்:
என் சிறுவயதில் இப்படி கிஃப்ட் கொடுக்கும் பழக்கம் கிடையாது. வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல் மட்டும்தான். சரஸ்வதி பூஜையன்று மட்டும் தேங்காயும், ரவிக்கைத்துணியும் கொடுப்பார்கள். சிலர் நல்ல ரவிக்கைத் துணி தராமல் அவை சுற்றி வந்த காரணத்தால் அதற்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், பெரும்பாலும் கிண்ணங்கள் தர ஆரம்பித்தார்கள். இரும்பு தரக்கூடாது என்று சொன்னதால் இப்படி கிஃப்ட் தருவது என்று ஒரு பழக்கம் வந்தது. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் தட்டுகள், சுவாமி விக்கிரகங்கள், கன்றோடு கூடிய பசுமாடு, அன்னபூரணி போன்றவைதான். அவை எவ்வளவு வைத்துக்கொள்ள முடியும்? வெற்றிலைப், பழம், சுண்டல் போதாதா? சென்ற வருடம் ஒரு மாமி, "இந்த வருடம் நான் எதுவும் வாங்கப்போவதில்லை, வந்த கிஃப்ட் நிறைய இருக்கு, அதையே கொடுத்துவிடப் போகிறேன்" என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வந்துவிடக்கூடாதே என்று கவலையாக இருந்தது.
![]() |
Gifts created by my daughter |
அதைப்போல நான் அவ்வளவாக விரும்பாத, சமீப கால ட்ரெண்ட் நவராத்திரியில் கலர்கோட். இதை யார்,எந்த அடிப்படையில் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. நவராத்திரி என்பது வண்ணங்களைக் கொண்டாடும் விழா. பலரும்,பல வண்ணங்களில் உடையணிந்து வந்தால்தானே பார்க்க அழகாக இருக்கும்?
கூடத்தில் தொட்டி முற்றம் என்று ஒரு திறந்தவெளி இருக்கும். அதில் பாத்திரங்கள் தேய்ப்பார்கள். ஒரு முறை முற்றத்தின் சாக்கடையை அடைத்து விட்டு, அங்கு ஃபவுண்டன் அமைத்திருந்தோம். ஒரு மாலையில் எல்லோரும் வெளியே போய் விட, அன்றைக்குப் பார்த்து நல்ல மழை. தொட்டி முற்றம் நிரம்பி தண்ணீர் வெளியே வந்து, கீழ் மூன்று படிகளை நனைத்து விட்டது. பொம்மைகளை துடைத்து உள்ளே வைத்து விட்டோம். அடுத்த வருடம் கொலுப் பெட்டியைத் திறந்தால்... ஒரே கரையான். நிரைய பொம்மைகள் பாழாகி விட தூக்கிப்போட நேர்ந்தது. //
ReplyDeleteநினைவு இருக்குக்கா.....முற்றத்தில் தண்ணீர் நிரப்பி.....முன்னர் வேறு கொலு பதிவிலும் சொல்லியிருக்கீங்க.
நம் கிராமத்து விட்டிலும் முற்றம் உண்டு அதில் பாத்திரம் தேய்ப்பது....முற்றத்தில் ஒரு தொட்டியும் உண்டு அதில் மழை நீர் தேக்குவது, இல்லைனா கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அதில் கொட்டி வைத்துக் கொள்வது. கை கால் அலம்ப என்றும்.
ஆனால் முற்றத்தையும் தொட்டியையும் ப்ளீச்சின் பௌடர் போட்டு தேய் தேய் என்று தேய்க்க வேண்டும் கதம்பை கொண்டு. அது என் வேலையாகத்தான் இருக்கும் பெரும்பாலும். அதுவும் பாராங்கல் தரை.
கீதா
என் நவராத்திரி நினைவுகள்,உங்கள் தொட்டி முற்ற நினைவுகளை கிளறி விட்டிருக்கின்றன.. :))
Deleteசமீப கால ட்ரெண்ட் நவராத்திரியில் கலர்கோட்.ன்//
ReplyDeleteஓ! இப்படி எல்லாம் வந்தாச்சா. இதெல்லாம் டூ மச். எங்குமே இந்த மாதிரி ட்ரெஸ் கோட், கலர் கோட் சொல்வது எல்லாம் எனக்கு ஒத்துவருவதில்லை. ஹையோ இதைச் சொன்னால் நம்மை ஜென் ன்னு சொல்லித் தள்ளிடுவாங்க....அவங்களுக்குத் தெரியலை நாம எல்லாம் மனதில் இன்னமும் இந்த வருஷத்துக் கிட்ஸ் என்று!!!!!!!
கீதா
ஆமாம் எதன் அடிப்படையில் இந்த கிழமையில் இந்த கலர் என்று முடிவெடுக்கிறார்களோ?
Deleteஆமாம் அக்கா அப்ப எல்லாம் இப்படி கிஃப்ட் கொடுக்கும் வழக்கம் கிடையாது. வெற்றிலை பாக்கு, சுண்டல், இல்லை வேறு ஏதாச்சும் பிரசாதம் அங்கேயேவோ இல்லை பொட்டலமாகவோதான்.
ReplyDeleteஅதுதான் நல்லாருக்கு. என்னைப் பொருத்தவரை செலவில்லாத நவராத்திரி.
எனக்கு இந்த கிஃப்ட் கலாச்சாரமும் பிடிப்பதில்லை. அதற்காகவே நான் செல்வதையும் தவிர்த்துவந்தேன் இல்லைனா அங்கு சென்றதும் சொல்லிவிடுவேன் கிஃப்ட் எதுவும் தராதீங்க ஒன்லி வெற்றிலை பாக்கு என்று.
ஏகப்பட்ட ப்ளாஸ்டிக், தேவையில்லாத கிஃப்ட்.....எனக்குப் பிடிப்பதில்லை
கீதா
இருப்பவர்கள் செய்யறாங்க, இல்லாதவங்க? இதிலுன்.
ReplyDeleteம் கிஃப்டை ஒப்பீடு செய்தல், கொடுக்கலைனா அதென்னவோ ஒரு ஸ்டேட்டஸ் கம்மி போல பார்த்தால் எல்லாம் நடந்தது ஒரு காலத்தில். இப்ப எப்படி என்று தெரியலை. நான் இதிலிருந்து விலகி இருப்பதையே விரும்புகிறேன்.
இங்கு எங்கள் நெடுனாளைய குடும்ப நட்பு, இங்கு பெங்களூரில்தான் இருக்கிறாள் அவர்கள் பெண். அழைத்திருந்தாள். சென்றோம். ஏகப்பட்ட கிஃப்ட்ஸ். எனக்குப் புடவை, கணவருக்கு வேஷ்டி, அழகான மர பொம்மை, பிஸ்தா, இயற்கை காஷ்மீரி பெர்ரிஸ் பாக்கெட்டுகள் என்று....
நான் சொன்னேன். அடுத்த முறை இது எதுவும் தரவில்லை என்றால் மட்டுமே நான் வருவேன் என்று. I felt embarrassed.
கீதா
சமீபத்தில் ஒருவர் இப்படி ஆதங்கப்பட்டார்,"அவங்க வீட்டுக்கு போக 250 ரூபாய், வர 250 ரூபாய் ஆச்சு. கிஃப்ட் என்ன தெரியுமா? வெறும் ஹேர்பின்!"
Deleteகிப்ட் கலாச்சாரம் என்பது ஆரம்ப காலங்களில் ஆகா நமக்கு புதுசா ஒன்னு கிடைக்குது அப்படின்னு ஜாலியா இருந்துச்சு இப்ப எல்லாம் வந்து நிறைய சாம்பார் சேந்துருது அப்படிங்கிற பீலிங் வருது பட் இது நல்ல ஒரு ஐடியாதான்
ReplyDeleteஒரு சம்பிராதயத்திற்காக கிஃப்ட் என்று எதையோ கொடுப்பதை விட உபயோகமாக எதையாவது கொடுப்பது நலம். இன் தோழி ஒருத்தி ஒரு முறை உயர் ரக ஊதுபத்தி கொடுத்தாள்.
Deleteசாமான் என்ற படிக்கவும்
ReplyDeleteநீங்கள் பார்த்த கொலு பிரமாதமாக இருக்கு. ரொம்ப அழகா வைச்சிருக்காங்க.
ReplyDeleteகிஃப்டு அழகா செஞ்சுருக்காங்க, உங்க பெண்.
அங்குள்ளவர்களுக்கு இதெல்லாம் ஆச்சரியம் புதுசுதான்.
உண்மைதான் womanhood நிகழ்வுதான்.
கீதா
நன்றி கீதா
Deleteநவராத்திரி நினைவுகள் அருமை. நாங்களும் படி வாங்கும் முன் வீட்டு மேஜை ஸ்டுல் இதை வைத்து படி அமைத்து இருக்கிறோம். அப்புறம் தான் படிகள் வாங்கி வைத்தோம். சிறு வயதில் அம்மாவும் , அத்தையும் கொலுக்கு அழைக்க போகும் போது விதவிதமாக அலங்காரம் செய்து விடுவார்கள் அப்படி போய் அழைத்து வருவோம்.
ReplyDeleteகொலு படங்கள், மற்றும் பரிசு பொருள் அருமை.
வாங்க கோமதி அக்கா. அப்போதெல்லாம் அப்படித்தானே?
Deleteபாராட்டுக்கு நன்றி
கிஃப்ட் கூடத் தராதரம் பார்த்தே தருகின்றனர். என்னோட நெருங்கிய உறவுப் பெண்மணி ஒருவர் வரவங்களுக்கெல்லாம் கொடுக்க கிஃப்ட் வாங்கி வைச்சிருப்பாங்க. ஆனால் நான் போனால் எனக்கு வெறும் வெற்றிலை, பாக்கு, போனால் போகுதுனு ஒரு பழைய ரவிக்கைத் துணி கொடுப்பார். என்ன செய்ய முடியும்? :(நான் வேலை செய்யறவங்களில் இருந்து வளாகத்தின் தாழ்வாரங்கள், மாடி எல்லாம் பெருக்கறவங்க வரைக்கும் கூப்பிட்டு ஒரே மாதிரிக் கொடுப்பேன்.
ReplyDelete//கிஃப்ட் கூடத் தராதரம் பார்த்தே தருகின்றனர்.// Very bad attitude. நானும் இப்படி சிலரை சந்தித்திருக்கிறேன்.
Deleteகிருஷ்ணன் கொண்டை, பூத்தைத்துக் கொள்ளுவது எனப் பல அலங்காரங்கள் எங்க வீட்டில் வேலை செய்த பெண்மணி எனக்கு அலங்கரிப்பார். கிருஷ்ணன் கொண்டையோடயே பள்ளிக்கெல்லாம் போயிருக்கேன்.
ReplyDeleteஎனக்கு நெளி நெளியான கூந்தல் என்பதால் என் அம்மா அடிக்கடி கிருஷ்ணர் கொண்டை போட்டு விடுவார். அதோடு பள்ளிக்குச் சென்றிருக்கிறேன்.
Deleteஎங்க வீட்ல தொட்டி மிதத்தில தண்ணீர் நேறப்பி நாங்க எண்ணெய் தேய்த்து குளிப்போம். ஆனால் அது பாத்ரூம், நீங்கள் சொல்வது போல் நவராத்ரி வந்தால் கொண்டாட்டமாஹ இருக்கும் எல்லார் வீடுகளுக்கும் தினம் சென்று பாட்டு பாடி தாம்புலம் சுண்டல் வாங்கி வருவோம். கோவில்களில் அலங்காரம் பார்த்து வருவோம்.
ReplyDeleteநன்றி
Deleteநினைவுகள் சுவாரஸ்யம். திருமணமான பின்தான் கொலுவின் முக்கியத்துவங்கள் புரிந்து, நானும் பாஸும் சென்று வருவோம். இரண்டு வருடங்களாக நாங்களே கொலு வைப்பது வழக்கமாக இருக்கிறது!
ReplyDeleteமருமகளோடு வந்த விஷயமோ?
Deleteவெற்றிலை, பாக்கு, பழம், பூ மற்றும் சுண்டல் மட்டும் தரப்படும் கொலுக்கள் நிறைவைத் தருவதில்லை. கிஃப்ட்கள் கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டு, பழகி விடுகின்றன. வரலஷ்மி விரதத்திலும் அப்படியே. நாங்கள் ஏழெட்டு வருடங்களாய் கொலுவுக்கு வரும் பெண்களுடன் கூட வரும் ஆண்களுக்கும் கிஃப்ட் தருகிறோம்.
ReplyDeleteஉங்கள் வீட்டில் நான் இரண்டு முறை கிஃப்ட் பெற்றிருக்கிறேன். இரண்டுமே இன்னும் பயன்பாட்டில் உள்ளன. ஆண்களுக்குமே கிஃப்டா? ரொம்ப தாராள மனது உங்களுக்கு.
Deleteநவராத்ரி கொலு நினைவுகள் ரசிக்கும்படி இருந்தது.
ReplyDeleteஆனால் பெரும்பாலும் தாத்பர்யத்தை மறந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறோமோ? அதிலும் தவறில்லை. வருடத்துக்கு ஒன்பது நாட்கள் எல்லோரும் விசேஷத்தை முன்னிட்டுக் கூடுவது நல்லதுதானே
நவராத்திரியை பொருத்த மட்டில் ஒரு பக்கம் பூஜை,புனஸ்காரம் மற்றொரு பக்கம் விருந்தினர்களை அழைப்பது, நாம் மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்வது, என்று எல்லாம் இருந்தாலும் நாம் ஹை லைட் பண்ணுவது இரண்டாவதைத்தான் என்பதால் தாத்பர்யத்தை மறந்து விடுகிறோம் என்பது போல் ஒரு தோற்றம்.
Deleteபரிசுப் பொருட்கள்தாம் கொஞ்சம் அதீதம் எனத் தோன்றுகிறது. அவர்களைவிட நல்லதாக்க் கொடுக்கணும், இவர்கள் வீட்டில் கொடுத்தது நல்லாவே இல்லை என்றெல்லாம் பண்டிகையின் நோக்கத்தைச் சிதைக்கும்.
ReplyDelete//அவர்களைவிட நல்லதாக்க் கொடுக்கணும், இவர்கள் வீட்டில் கொடுத்தது நல்லாவே இல்லை என்றெல்லாம் பண்டிகையின் நோக்கத்தைச் சிதைக்கும்.// 100%
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தங்களது கொலு நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது. தொட்டி முற்றத்தில் நீர் நிரப்பி, பவுண்டேஷன் அமைத்ததையும், அதனாலும், அப்போது பெய்த மழையாலும், கூடத்தில் வைத்த கொலுவில், பல பொம்மைகள் வீணாகி போனதையும் முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது மண் பொம்மைகள் விற்கும் விலையில், பழைய பொம்மைகளுக்கு நிகரேது. எங்கள் அம்மா வீட்டிலும், நிறைய பொம்மைகள். அப்போது நவராத்திரி பத்து நாட்களும் சுவாரஸ்யமாக கழியும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று அழைப்பது, தெரிந்த பாடல்களை தெரியாத ராகத்தில் பாடுவது, சுண்டல் ரவிக்கைத்துணி பரிமாற்றம் என ஒவ்வொரு நாட்களும் மகிழ்ச்சிதான்.
இப்போது கிப்ட் கலாச்சாரங்கள் வந்து விட்டன. ஒவ்வொரு கடைகளிலும், விதவிதமான கிப்ட்கள். கைகளுக்கு வளையல், காது தோடு, கிளிப்புகள் மேக்கப் சாமான்கள் பர்சுகள் ஃபோன் வைத்துக் கொள்ளும் சிறு கைப்பைகள் என ஒவ்வொரு வருடங்களும் பயங்கர முன்னேற்றம்.,இதுவும் சுழற்சியாக சுற்றிச்சுற்றி போய்க் கொண்டுதான் உள்ளன.
தங்களின் அனுபவங்களை படித்து ரசித்தேன். இப்போது தங்கள் மகள் வீட்டில் கொலு வைத்திருப்பதும் சிறப்பு. அங்கு நீங்கள் ரசித்து வந்த கொலு க்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி என் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.