கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 21, 2016

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு 


விடுமுறையில் வந்திருக்கும் மகன், மருமகளோடு குருவாயூர் மற்றும் என் கணவரின் சொந்த ஊரான  கோவிந்தராஜபுரம் (பாலக்காடு) மற்றும் எமூர் ஹேமாம்பிகா கோவிலுக்கும் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஆலப்புழா விரைவு வண்டியில் திருச்சூரை அடைந்த நாங்கள் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே ஒரு விடுதியில் குளியலை முடித்துக் கொண்டு, காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம். 

"அதென்னவோ நமக்கும் வருண தேவனுக்கும் ஒரு ராசி இருக்கிறது.. நாம் எங்காவது கிளம்பினால் அவர் நமக்கு முன் அங்கு வந்து விடுவார்.  இப்பொழுதும் அப்படித்தான்!"
 நான் இப்படி சொன்னதும், எப்பொழுதும் என்னை விட்டு பிரியாத என் தோழி அனு, நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.  
"என்ன சிரிப்பு? என்றேன், 
"மழை சீசனில் கேரளாவிற்கு போக முடிவெடுத்து விட்டு இப்படி ஒரு பேச்சு!"  என்றாள், 
என்ன பதில் சொல்ல முடியும்? மணி ஆகிறது, கிளம்பு என்றா? அவள்தான் எனக்கு முன்னாள் கிளம்பி நிற்கிறாளே!

எப்படியோ நாங்கள் கோவில்களுக்கு செல்லும் விதமாக மழை அவ்வப்பொழுது ஒதுங்கி வழி விட்டது. கேரள கோவில்களில் சூடிதார் அணிந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், எனவே புடவை கட்டிக்கொள் என்று என் மருமகளிடம் கூறினேன். ஆனால், சூடிதாரை அனுமதிக்கிறார்கள். 



பிரமாண்டமான திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் திருமேனி மீது நெய் சாற்றுகிறார்கள். அதற்காக கோவில் வளாகத்துக்குளேயே சிறிய அகல் விளக்கில் நெய் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி கருவறைக்கு அருகில் வைத்து விட்டால், அவர்கள் ஸ்வாமி மீது அதையே அபிஷேகம் செய்வது போல ஊற்றி விடுவார்கள். ஆனால் கர்பகிரஹத்தில் சிவ லிங்கம் எதுவும் காண கிடைக்காது.

இதன் தாத்பரியம் என்ன? தாத்பர்யம் என்ன? என்று அனு நச்சரித்தாள். இவள் ஒரு சள்ளை, ஏதோ கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா? பிரசாதம் சாப்பிட்டோமா என்று இருக்காமல், எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிய வேண்டுமாம்..

அங்கு தமிழ் புரிந்து கொள்ளும் ஒருவர் இருந்தார், அவரிடம் கேட்டதற்கு, அவர்," யாருமே லிங்கத்தை கண்டதில்லை, உறைந்திருக்கும் நெய்க்குள் லிங்கம் இருப்பதாக ஐதீகம்" என்றார். அங்கு ஊற்றப்பட்டிருக்கும் நெய் கடும் கோடையில் கூட உருகாது என்றும், அந்த நெய்யில் எறும்பு மொய்க்காது என்றும் கூறுகிறார்கள். நெய் உறைந்த திரு மேனியை முழுமையாக அலங்கரித்திருந்தார்கள். மிக நன்றக இருந்தது. 



வடக்குநாதர் சந்நிதியிலிருந்து அப்பிரதக்ஷிணமாக சென்று ஸ்வாமி சன்னதிக்கு பின்னால் இருக்கும் பகவதியை தரிசனம் செய்து கொள்ள வேண்டும். ஸ்வாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகியை கங்கை என்கிறார்கள். அங்கு கங்கைக்கு ஒரு சிலையும் இருக்கிறது. கங்கையை கடந்து செல்ல அனுமதி இல்லை என்று போர்டோடு தாண்டிச் செல்ல முடியாமல் கயிறும் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு மட்டுமில்லை வேறு சில சிவன் கோவில்களிலும் இதைப் போன்ற அமைப்பை காண முடிகிறது. 

வடக்குநாதர் சந்நிதிக்கு அருகில் தனி சந்நிதியில் ராமர். வெளி பிரகாரத்தில் அய்யப்பன், கிராதன்(வேடனாக வந்த சிவன்), கோ சாலை கிருஷ்ணன், ஆதி சங்கரர் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி. இதை தவிர ஆதி சங்கரர் சமாதியும் இருக்கிறது. 

ஆதி சங்கரரின் பெற்றோர்களான ஆர்யாம்பாளும், சிவ குருவும் இங்கு வந்து பஜனம் இருந்துதான் அதி சங்கரரைப் பெற்றெடுத்தார்கள். எனவே அதி சங்கரரின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்த என் சிநேகிதி அனு, "இந்த சித்திரங்களில் ஆர்யாம்பாளை கேரள பெண்மணி போல சித்தரித்துள்ளார்கள், என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்றாள். 
உன் ஒப்புதல் யாருக்கு வேண்டும்? வாயை மூடிக்கொண்டு வா என்று விரட்டினேன்.
அவளோ விடாமல், ஆதி சங்கரரின் பெற்றோர்கள் வைதீக பிராமணர்கள், அவர்களை அப்படித்தானே வரைய வேண்டும்? என்று தொணப்பினாள். 
நாம் கும்பகோணத்திற்கு அருகில்  சென்ற போது, ஒரு கோவிலில் கோவிந்த தீக்ஷதருக்கும் அவர் மனைவிக்கும் சிலை இருந்ததை பார்த்தோமே அதில் அவர்கள் வைதீக பிராமணர்கள் போலவா உடை அணிந்திருந்தார்கள்?" என்று கேட்டு அவள் வாயை அடைத்தேன்.   

திருச்சூரிலிருந்து அதே காரில் குருவாயூர் சென்று விட்டோம். குருவாயூரில் உள்ள வெங்கிடாசலபதி கோவிலுக்கு முதலில் சென்றோம். கேரள பாணியில் அமைந்த சிறிய கோவில். நெடியோனாகவே தரிசித்த மாலவனை வாமன மூர்த்தி போல சிறிய உருவில் தரிசிப்பது வித்தியாசமாக இருக்கிறது. உள் பிரகாரத்திலேயே தனி சந்நிதியில் வெங்கிடாதம்மாளாக அருளை அள்ளி வழங்கும் தாயார். கொடி மரத்திற்கருகில் நமஸ்கரித்து வெளியே வருகிறோம்.  ராமானுஜர் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறாராம் ஆகவே அவருக்கும் தனி சந்நிதி. 

கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் தயாராக உள்ளது சாப்பிட்டு  விட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். குறிப்பாக நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொண்டு அந்தக் காலங்களில் கல்யாணங்களில் மாப்பிளை வீட்டாரை உபசரிப்பது போல பேர் பேராக உபசரித்தார்கள். இப்படி ஒரு உபசாரம் எங்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் திருச்சூரில் டிபன் சாப்பிட்டிருக்க மாட்டோம். அவர்கள் உபசரிப்பை நன்றியோடு மறுத்துவிட்டு, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.



இதுவும் சிறிய கோவில்தான். நுழையும் முன், வேறு கோவில் பிரசாதம் உட்பட சாப்பிடும் பொருள்கள் ஏதாவது இருந்தால் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, வெளியே வைத்து விடுங்கள் என்றார்கள். பார்த்தசாரதி என்பதாலோ என்னவோ தேர் போன்ற கருவறை அமைப்பு. உள்ளே நின்ற திருக்கோலத்தில் சிறிய மூர்த்தி. 

"மீசை வைத்து கொண்டு ஆஜானபாகுவாக பார்த்தசாரதி பெருமாளை சேவித்த நமக்கு, இப்படி சிறியவராக பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது இல்லையா?" என்றாள் அனு.

இதுதான் உன்னிடம் பிரச்சனை, ஏன் எப்போதும் ஒரு விஷயத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு கொண்டே இருக்கிறாய்?  

உனக்கு ஏன் கோபம் வருகிறது? நம் ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி என்றுதான் சொல்ல வந்தேன்.

அது கலாச்சார வித்தியாசம்.

ஒவ்வொரு இடத்திலும், ஓவ்வொரு பழக்கம், நடிகர் ஜெயராம் சொன்னது போல..

ஜெயராம் என்ன சொன்னார்?

தமிழ் படத்திற்கும் மலையாள படத்திற்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் கேட்டபொழுது, "மலையாள படத்தில் அம்மா என்று அழைக்க வேண்டுமென்றால் வெறுமனே அம்மே என்று அழைத்தால் போதும், ஆனால் தமிழ் படத்தில் அ...ம்ம்ம்ம்.மா... என்று அடி வயிற்றிலிருந்து அழைக்க வேண்டும் என்றார். 

ஓகே.. அதனால.. என்ன சொல்ல வர?

நமக்கு எல்லாமே கொஞ்சம் பிருமாண்டமாக, ஆரவாரமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எல்லாம் சட்டிலாக இருந்தால் போதும் போலிருக்கிறது. கோவில் உட்பட. சிறிய கோவில், சிறிய மூர்த்தங்கள்..

அடடா! என்ன கண்டு பிடிப்பு?

நான் சொல்வதை எதையாவது நீ ஒப்புக் கொண்டிருக்கிறாயா? நீ கோவிலை பார்த்து விட்டு மெல்ல வா, நான் முன்னாள் மம்மியூருக்கு  செல்கிறேன்.. அவள் எனக்கு முன்னாள் மம்மியூருக்குச் சென்று விட்டாள்.  
   
நாம் தொடரலாம்...

11 comments:

  1. ஜெயராம் சொன்னது புன்னகைக்க வைக்கிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. //காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம்.//

    திருச்சூரில் தரிசனம் முடிச்சு அப்புறமாச் சாப்பிட்டீங்களா? ஹிஹிஹி, மண்டையை உடைக்குது சந்தேகம்! யார் இந்த அனு? புதுசா இருக்காங்க. நிஜமா? கற்பனையா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நீங்கள் என் வலைப்பூவை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன், பனிஷ்மென்ட்.. இன்னும் இரண்டு முறை படித்து நாங்கள் ஆகாரம் சாப்பிட்டோமோ இல்லையா என்று கூறுங்கள். இந்த தொடர் முடிவதற்குள் அனு யார் என்று தெரிந்து விடும்.

      Delete
    3. ம்ஹூம், கண்ணில் வி.எ. ஊத்திண்டு தேடினேன். எங்கே சாப்பிட்டீங்க, என்ன சாப்பிட்டீங்க எப்போச் சாப்பிட்டீங்க தகவலே இல்லை. ஒரு வேளை பிரசாதம் சாப்பிட்டீங்களோ! அதையும் குறிப்பிடவில்லை! :)

      Delete
  3. நானும் சில முறை குருவாயூர் போய் இருக்கிறேன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். நீங்கள் எப்போது குருவாயூர் சென்றீர்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் நிறைய மாற்றங்கள்.

    ReplyDelete
  5. குருவாயூரில் முதலில் குட்டிக்கண்ணனை தரிசனம் செய்து விட்டுத்தான் மற்ற கோவில்களுக்குப் போக வேண்டும் என்று சொல்வார்கள் பலமுறை குருவாயூருக்குப் போய் இருக்கிறோம் முன்பு போல் இப்போதுஇல்லை என்பதை ரெகுலராகப் போகிறவர்கள் உணருவார்கள் நானும் குருவாயூர் பற்றி எழுதி இருக்கிறேன் குருவாயூரில் பிரசாத ஊட்டு சாப்பிட்டீர்களா.

    ReplyDelete
    Replies
    1. இல்லை பிரசாத ஊட்டு சாப்பிடவில்லை. சாப்பிட்டதும் இல்லை. நன்றாக இருக்குமா?

      Delete
  6. திருச்சூர் கோவில்களுக்கு அடிக்கடி போனதில்லை

    ReplyDelete
  7. தங்களில் எழுத்து நடை யதார்த்தமாக இருக்கிறது, வாழ்த்துகள்!

    நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் நன்றாக இருக்கும்,வருண தேவனைப் பார்க்கலாம் என்ற ஆவலில்!

    ReplyDelete