கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 5, 2017

உக்காரை அல்லது ஒக்காரை

உக்காரை  அல்லது ஒக்காரை 

நவராத்திரியின் பொழுது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமை செய்யும் இனிப்பு. சில வீடுகளில் தீபாவளி அன்று காலை இதை செய்வார்கள்.

தேவையான பொருள்கள் 
கடலை பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
வெல்லம்(துருவியது)  -  2 அல்லது 2 1/2 கப் 
தேங்காய் துருவல் 1 மூடி 
ஏலக்காய் - 5
முந்திரி - 10
நெய்  -  4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

முதலில் கடலை பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து நீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகளை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இட்லி தட்டில் வேக வைக்கவும். *பருப்பு கலவை வெந்ததும் அதை கொஞ்சம் ஆற விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.  










அது வெந்து கொண்டிருக்கும் பொழுது அடி கனமான ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் மூழ்கும் வரை நீர் விட்டு பாகு தயாரிக்கத் தொடங்குங்கள். நல்ல முற்றிய பாகாக இருக்க வேண்டும். முற்றிய பாகு என்பதை அறிய ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் விட்டு, அதில் இந்த பாகை விட்டு கையால் உருட்டினால் உருட்ட வரும். பாகு தயாராகும் வேளையில் துருவிய தேங்காயை வறுத்துக் கொள்ளவும். 

பாகு ரெடியானதும் உதிர்த்த பருப்பு கலவை, வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் பாகோடு சேர்த்து கிளறவும்.  அடுப்பை நிறுத்தி விட்டு, பொடி பண்ணிய ஏலக்காய், வறுத்த முந்திரி இவைகளையும் சேர்த்து கிளறினால், உக்காரை ரெடி.

சிலர் உக்காரையில் கொஞ்சம் நல்லெண்ணெய் விடுவார்கள். நான் நெய் மட்டுமே சேர்ப்பேன்.

பருப்புகளோடு புழுங்கல் அரிசியும் சேர்த்து செய்வதுண்டு.

* வெந்த பருப்பு கலவையை கைகளாலும் உதிர்க்கலாம், அல்லது மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றினால் பூவாக உதிர்ந்து விடும். 

20 comments:

  1. பிடித்த பண்டம். அதிகம் சாப்பிட்டதில்லை! படங்களை அழகாக அடுக்கி இருக்கிறீர்கள். எங்கள் தளத்தில் நான் ஒரு கவிதையை இப்படி அமைக்க முயற்சித்து சரியாக வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் படங்களை அடுக்கினேன்.

      Delete
  2. உக்காரை சாப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது
    நன்றிசகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. நீங்கள் சகோதரியாரே என்று விளிக்கும் பொழுதெல்லாம் ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எஸ்.வரலக்ஷ்மியை அக்கையாரே என்று அழைப்பது நினைவுக்கு வருகிறது.

      Delete
  3. கடைசி படத்தை பார்க்கும் பொழுது அதை தரையில் உக்காந்து சாப்பிடணும் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதற்கென்ன,வீட்டுக்கு வாருங்கள். இலை போட்டு பரிமாறி விடுமாட்டாளா இந்த சகோதரி?

      Delete
  4. என் பிறந்த வீட்டில் தீபாவளி என்றால் உக்காரை இல்லாமல் விடியாது. மிகவும் பிடிக்கும். நான் மற்ற தினங்களிலும் செய்வதுண்டு. எங்கள் வீட்டில் துவரம்பருப்பு அதிகமாகவும் கடலைப்பருப்பு கொஞ்சமாகவும்..அதே சமயம் என் பிறந்த வீட்டில் மற்றொரு குடும்பத்தில் கடலைப்பருப்பு தூக்கலாகவும் து பருப்பு சற்றுக் குறைச்சலாகவும்...இன்னொரு வீட்டில் இரண்டும் சமபாகமாக....பாசிப்பருப்பு சேர்த்துச் செய்ததில்லை...

    மற்றதெல்லாம் ஸேம் தான்...பானுக்கா...இதையும் குறித்துக் கொண்டேன்....சூப்பர் ரெசிப்பி ரொம்பப் பிடிக்கும்

    கீதா

    ReplyDelete
  5. எங்கள் வீட்டில் ஒக்கோரை என்று சொல்லுவார்கள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உக்காரையா? ஒக்காரையா? ஓக்கோரையா? என்ற சந்தேகம் இருந்தது. அது சரி, இது என்ன பெயர்?

      Delete
  6. பருப்புசிலிக்குச் செய்வது போல ஆனால் பருப்புகளை வறுத்து இதே போலதான் செய்வார்கள் எங்கள் வீட்டில் சிலர் நல்லெண்ணை கொஞ்சம் சேர்த்தும் செய்வார்கள். நானும் நெய் மட்டும் தான் சேர்த்துச் செய்து வந்தேன். அப்புறம் எல்லாரும் நெய் அதிகம் கூடாது என்று சொல்லியதால் உதிர்ப்பதற்கு நல்லெண்ணையில் உதிர்த்துவிட்டு அப்புறம் வெல்லம் எல்லாம் சேர்த்துச் செய்யும் போது நெய் விட்டு என்று... இரண்டும் கலந்து செய்தாலும் டேஸ்ட் நன்றாகத்தான் இருக்கிறது..

    கீதா

    ReplyDelete
  7. என் அம்மா உக்காரை தயாரிப்பில் சிறப்பு வாய்ந்தவர். எங்க பிறந்த வீட்டில் இதுவும் வெள்ளையப்பமும் இல்லாத தீபாவளி இல்லை! உக்காரை மிருதுவாகப் பூப்போல் இருக்கும். பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போனதில்லை. அம்மா அநேகமாக இட்லித் தட்டில் வேக வைத்தது இல்லை. எங்க வீடுகளில் அதைப் பத்து என்போம். ஆகவே அரைத்ததை நன்கு நெய் விட்டுக் கிளறி உதிர்ப்பார்! :)

    ReplyDelete
    Replies
    1. எங்கள் அம்மா ஒக்காரை அதிகம் செய்ததில்லை. புட்டு மிக நன்றாக செய்வார். அதையும் வேக வைப்பதால் பத்து என்று தனியாகத்தான் வைப்பார்கள். வருகைக்கு நன்றி.

      Delete
    2. புட்டும் பத்தில்லாமல் செய்யலாம். :) அரிசியை ஊற வைச்சுச் சிவக்க வறுத்துக் கொண்டு செய்வோம். என்னோட நவராத்திரிப் பதிவுகளில் பகிர்ந்திருக்கேன். நீங்க தான் வரதே இல்லையே! :)

      Delete
    3. பெண் வெளி நாடு செல்லும் மும்முரத்தில் இருந்ததால் என்னால் வலைப்பக்கம் வர முடியவில்லை. உங்களுடைய நவராத்திரி பதிவு ஒன்றே ஒன்று படித்தேன். மிக நன்றாக இருந்தது. இப்போது 'என் எண்ணங்கள்' பதிவிற்கும் மிக சிறப்பாக பதில் எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
  8. இன்று செய்துபார்த்தது. ரொம்ப சாஃப்டா இருந்தது. துவரம்பருப்பு சேர்த்திருந்தால் (பாசிப்பருப்புக்குப் பதில்) கரகரன்னு டிரெடிஷனல் ஒக்கோரை கிடைத்திருக்கும்.

    ஆனாலும் படங்கள் நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஹஸ்பென்டின் சுறுசுறுப்பை மெச்சுகிறேன். கடைசி வாசகத்தில் தாமிரபரணி குறும்பு கொப்பளிக்கிறதே..😁

      Delete
  9. செய்யச் சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. செய்யச் சொல்லி சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று எழுதுங்கள்.

      Delete
  10. நான் உக்காரை செய்ததே இல்லை. அழகாக, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நான் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete