கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 22, 2018

மதுரா விஜயம் (ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்)

மதுரா விஜயம்  (ஸ்ரீ  கிருஷ்ண ஜென்மஸ்தான்)

பகுதி - 1: கோகுலம்: 



கோகுலம்  கோவில் 



இந்த முறை  டில்லி விஜயத்தின் பொழுது, சென்ற தடவைகளில் பார்க்க முடியாத மதுரா, பிருந்தாவன், குரு க்ஷேத்ரம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு  செய்து, அங்கு  பார்க்க வேண்டிய இடங்களை பற்றி கீதா அக்காவிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன். 

எங்கள் சம்பந்தி, "மதுரா, ஆக்ரா சாலை  விபத்துகள் நிகழும் சாலை என்பதால் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம்" என்று வண்டி ஓட்டுனரிடம் வலியுறுத்தி கூறியதாலோ என்னவோ அவர் கொஞ்சம் நிதானமாகவே ஓட்டினார். முதலில் பிருந்தாவனை அடைந்தோம்.  பிருந்தாவனில் இருக்கும் கோவிலுக்கு செல்லும் சாலை அடைக்கப் பட்டிருந்தது. காரணம் கேட்டதற்கு சுதந்திர தினம் நெருங்கிக்  கொண்டிருந்ததால் அந்த சாலையில் பள்ளி மாணவர்கள் பரேட் பயிற்சி செய்வார்கள், இரவு எட்டு மணிக்குத்தான் திறக்கப் படும் என்று கூறி  விட்டதால் நாங்கள் நேராக மதுரா சென்று விட்டோம். 

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தானாகிய மதுராவில் கோவில் வரை கார்களை அனுமதிக்க மாட்டார்கள், சற்று தொலைவில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்றார்கள். எங்களுடைய ஓட்டுனருக்கு வண்டியை எங்கே விட வேண்டும் என்று தெரியாமல் ஒரே இடத்தையே இரண்டு முறை சுற்றினார். அப்போது ஒருவர், "கோவில் வாசலிலேயே வண்டியை நிறுத்தலாம், இதோ இவர் உங்களுக்கு வழி காட்டுவார்", என்று ஒருவரை எங்கள் காரில் ஏற்றி விட்டார். அவர் ஒரு கைட் என்பது பிறகுதான் தெரிந்தது. கோவிலுக்குத்தானே செல்கிறோம் என்று கேட்டதற்கு அவர் "ஆமாம்,முதலில் கோகுலம் சென்று விடுவோம், அங்கு கோவில் மூடி விடுவார்கள்" என்றார். போகும் வரை ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று கை பேசியை ஆன் பண்ணினால்,"ஏமாற சொன்னது நானோ..?" என்று நீலப்பல்லில் இளித்தது. 

மதுராவிலிருந்து கோகுலத்திற்கு யமுனை நதியை கடந்துதான்  செல்ல வேண்டும். யமுனையின் குறுக்கே ஒரு பாலம் கட்டப் பட்டிருக்கிறது. அதில் செல்லும் பொழுது, *வசுதேவர், குழந்தை கண்ணனை ஒரு திருடனைப் போல நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மதுராவிலிருந்து கோகுலத்திற்கு இந்த பாதை வழியாகத்தான் கொண்டு சென்றாராம். எனவே அங்கு வண்டியை சற்று நேரம் நிறுத்தி ஒரு ரூபாய் நாணயத்தை யமுனை நதியில் போட்டு எங்களை ப்ரார்திக்கச் சொன்னார்.  

கோகுலம் கோவிலுக்குச் செல்லும் வழி 

கோகுலம் சென்று ஒரு கோவிலை அடைந்தோம். வசுதேவரின் வீடாக இருந்ததாக சொல்லப்படும் இடம் தற்பொழுது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள். குழந்தை  கண்ணனைக் காண இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்த பொழுது, சிவ  பெருமானை மட்டும்,  "நீங்கள் கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறீர்கள், புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கிறீர்கள், விரித்த சடையோடு இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் என் குழந்தை பயந்து விடுவான்" என்று கூறி கண்ணனை பார்க்க அனுமதிக்க மறுத்து விட்டாளாம் யசோதை.  உடனே சிவபெருமான் அங்கேயே அமர்ந்து  தனக்கு தரிசனம் தர வேண்டி மூன்று நாட்கள் மஹாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தாராம். அதன் பிறகே அவருக்கு கண்ணன் தரிசனம் கிட்டியதாம். 




கோவிலின் திண்ணை போன்ற பகுதியில் எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு டூரிஸ்ட் கோஷ்டியை மட்டும் கோவிலின் உள்ளே அனுமதித்து கதவை அடைத்து விட்டனர். அப்போது எங்கள் கைட் மேற்படி கதையை எங்களுக்கு கூறி, "சிவபெருமான் மூன்று நாட்கள் தவம் செய்திருக்கிறார், நீங்கள் ஒரு பதினைந்து நிமிடம், கண்ணனை நினைத்து, 'ஓம் நமோ பகவதேவாசுதேவாய' என்று ஜபம் செய்யுங்கள்" என்றார்.   

அந்த டூரிஸ்ட் கோஷ்டி நகர்ந்ததும், நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். உள்ளே சந்நிதிக்கு முன் எங்களை அமரச்  சொன்னார்கள். சன்னிதானம் திரையிடப்பட்டிருந்தது. நாங்கள் வாங்கிக் கொண்டு சென்றிருந்த பூவை என்னையும், என் கணவரையும் சேர்ந்து கைகளில் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பிறகு, அந்த பூஜாரி, "இது மிகவும் புண்ணியகரமான பூமி, இங்கு உங்கள் தாய், தந்தையர் பெயரில் அன்னதானம், பசுவிற்கு உணவு கொடுப்பது போன்றவை செய்வது  மிகுந்த பலனை கொடுக்கும். அதற்காக நீங்கள் எவ்வளவு நன்கொடை தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார். நாம் அதற்கு ஒப்புக் கொண்டால்தான் திரையை திறக்கிறார்கள். இந்த இமோஷனல் மிரட்டலில் நமக்கு பக்தி குறைந்து விடுகிறது.

மூலஸ்தானத்தில் நந்தகோபர், யசோதை இருபுறம் இருக்க, நடுவில் பலராமன். அவர்களுக்கு கீழே, ஒரு தொட்டிலில் குழந்தை கிருஷ்ணன். நம்மை அந்த தொட்டிலை ஆட்ட சொல்கிறார்கள்.  பலராமன் முகவாயில் பதிக்கப்பட்டிருக்கும் வைரக்கல் அவுரங்கசீப்பால் வழங்கப்பட்டதாம். 

பல இந்துக் கோவில்களை இடித்த அவுரங்கசீப் இந்தக் கோவிலை இடிக்க முற்பட்டபோது அவருடைய பார்வை பறிபோனதாம். அதனால் இடிப்பதை கை விட்டதும் மீண்டும் பார்வை கிட்டியதால் இந்த வைரக்கல்லை கோவிலுக்கு தந்தாராம். இதற்கு சரித்திர பூர்வமாக ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

அந்த ஹாலின் தூண்களில் பால கிருஷ்ண லீலைகள் சிற்பமாக இருக்கின்றன. ஆனால் அத்தனை திருத்தமாக இல்லை. வெளியே இரண்டு மூன்று படிகளுக்கு கீழே ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம் நம் விருப்பங்களை நிறைவேற்றும் மரம் என்கிறார்கள். அதில் நிறைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றன. மரமாக இருந்தாலும் அதை கிரிராஜ் என்றுதான் சொல்கிறார்கள். அங்கும் இரு முதியவர்கள் அமர்ந்து கொண்டு ஒரு கோலினால் நம் தலையில் தட்டி, அவர்கள் வைத்திருக்கும் தட்டில் தட்ஷினை போடச் சொல்கிறார்கள். 

மரத்தை வலம் வந்து இடது புறம் இருக்கும் இருக்கும் மேடையில் இருக்கும் சந்நிதிக்குச் செல்கிறோம். அங்கு நந்தகோபர், யசோதா, மற்றும் லோக மாயா காட்சி தருகிறார்கள்.  லோக மாயை எனப்படும் துர்கா தேவியே யசோதைக்கும், நந்தகோபருக்கும் மகளாக பிறக்கிறாள். கண்ணனை இங்கே விட்ட விட்டு, நந்தினியாகிய மாயா தேவியைத்தான் வசுதேவர் எடுத்துச் செல்கிறாள். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முற்படும்பொழுது அவன் கையிலிருந்து விடுபட்டு செல்லும் மாயா தேவி(இது புராண மாயாதேவி) "உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான்" என்று அறிவித்து விட்டு விண்ணில் மறைகிறாள் என்னும் புராண கதை எல்லோரும் அறிந்ததுதானே. 

இந்த சந்நிதியில் வளையல், சிந்தூர் முதலியவை ஒரு தட்டில் வைத்து விற்கிறார்கள். நாம் கேட்காமலேயே நம் கையில் திணித்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். 
மாடுகளுக்கு வெள்ளரிக்காய் தரும் என் கணவர்.
கீழே ஒரு இடத்தில் லஸ்ஸி விற்கிறார்கள். நன்றாக இருந்தது. அங்கேயே பசு மாட்டிற்கு தருவதற்காக வெள்ளரிக்காய் விற்கிறார்கள்.  அதை ஒட்டி மூடப்பட்ட ஒரு கேட்டிற்கு பின்னால் நிறைய பசு மாடுகள் எல்லோரும் தரப்போகும் உணவுக்காக ஆவலாக தலையை நீட்டுவதை பார்க்கும் பொழுதும், ஓரளவு நன்றாக உடை அணிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் கூட நம்மிடம் காசு கேட்டு கை நீட்டும் பொழுதும் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்கி விட்டோமே..!

- தொடரலாம் 

* அந்த இடத்திற்கு சோரி என்று துவங்கும் ஒரு பெயரை குறிப்பிட்டார்,அதை குறித்து வைத்துக் கொள்ளாததால் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். 

19 comments:

  1. விருந்தாவன், மதுரா, கோகுலம், பர்சானா என பல இடங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நிறைய விஷயங்கள் பார்க்க உண்டு. அங்கே உங்களுக்குக் கிடைத்த கைடு அனுபவம் பலருக்கும் உண்டு - இதற்கெனவே பலர் அங்கே இருக்கிறார்கள் - பெரும்பாலும் ஏமாற்றுக் காரர்கள்!

    திரை மூடுவதும், பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதும் ரொம்பவே அதிகம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மொட்டை அடித்து விடுவார்கள்.

    உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மதுராவில் மட்டுமல்ல வெங்கட், பல சுற்றுலா சிறப்பு மிக்க தலங்களில் இந்த ஏமாற்று வேலை நடக்கிறது.

      Delete
  2. ஆலயங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்கள் ஆகிவிட்டனவோ! தலையில் தட்டி தட்சணை! என்ன கொழுப்பு! (அது ஒருவகை ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்) சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் கிடைத்திருக்கின்றன போல. எல்லாம் முன்னரே தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாகப் போவதில் என்ன சுவாரஸ்யம்.. தெரியாமல் போய் இப்படி ஏமாறுவதில்தான் (கேட்பவர்களுக்கு) சுகம்!!!!!!

    ReplyDelete
    Replies
    1. //தலையில் தட்டி தட்சணை! என்ன கொழுப்பு! (அது ஒருவகை ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்)//
      கடவுளே! தலையில் தட்டி என்றால் தலையில் அடித்து என்று புரிந்து கொண்டு விட்டீர்களா? அல்லது நான் சரியாக சொல்லவில்லையா? அது ஒரு வகை ஆசிர்வாதம்தான். வடபழனி கோவிலில் கூட ஒருவர் அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பால் நம் தலையில் லேசாக தட்டி ஆசீர்வதிப்பார்.

      Delete
  3. என்னத்தைச் சொல்வது.. படங்கள் அழகு... மாஅடுகளை இப்படி அடைத்துக் கோயிலில் வளர்க்கிறார்களோ?

    //சிந்தூர்// அப்படி எனில்??

    ReplyDelete
    Replies
    1. சிந்தூர்னா குங்குமம் அதிரடி! :)

      Delete
    2. என்னாதூஊஊஊஉ? இது தமிழ்ச் சொல்லோ? நான் பிறந்து வளர்ந்ததற்கு இப்படி ஒரு சொல் கேள்விப்படவே இல்லையே கீசாக்கா...

      Delete
    3. அதிரா...

      "செந்தூரப் பொட்டு வச்சு... சிவந்தநல் பட்டுடுத்தி... மந்தார மாலை சூடியே வந்தாளே கருமாரி...." பாடல் கேட்டதில்லையா?!!

      Delete
    4. கோவிலில்தான் வளர்க்கிறார்கள். சாப்பாடு போடுகிறார்களா என்று தெரியவில்லை.

      Delete
    5. 'சிந்தூரா.. ஆ ...ஆ ...' என்று ஜெயம் ரவியின் படத்தில் வரும் ஒரு பாடல் இப்போது மிகவும் பிரபலமாக இருக்கிறதே, கேட்டதில்லையா? ஸ்ரீராம், வெள்ளி வீடியோவில் போட்டு விடுங்கள்.

      Delete
  4. இங்கே எல்லாக் கோயில்களிலும் இப்படித் தான் அடித்துப் பிடித்து வாங்குகிறார்கள்! கோயில்கள் அரசைச் சார்ந்தது அல்லனு நினைக்கிறேன். இன்னமும் கோகுலம், பிருந்தாவன் எல்லாம் தனியார் பாதுகாப்பில் தான் இருக்கோனு நினைக்கிறேன். அரசு என்றாலும் வசூல் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வசூல் என்றால் உங்க வீட்டு வசூல், எங்க வீட்டு வசூல் இல்லை, இன்றைய பதிவில் ஸ்ரீராம் எழுதியிருக்கிராறே.

      Delete
  5. ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி தரிசனம்...
    ஹரே கிருஷ்ண.. ஹரே கிருஷ்ண....

    ReplyDelete
  6. மதுராவில் என்னைக்கவர்ந்த இடம் கிருஷ்ணனின் ஜன்மஸ்தலம் என்றுகூறப்படுமிடம்தான் அருகேயே ஒருமசூதி அன்னியோன்யமாய் இல்லாவிட்டால் ஒருபோரே வெடிக்க ஏதுவான இடம் கிருஷ்னனின் சீடீக்கள் அமோக விற்பனைமதுராவாசிகள் தங்களை ப்ரிஜ் வாசிகளென்று கூறிக்கொள்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. மதுரா மட்டுமல்ல, காசி, அயோத்தி(இங்குதான் பிரச்சனை ஆனதே) இங்கெல்லாமும் ஹிந்து கோவிலை ஒட்டி மசூதி கட்டப்பட்டிருக்கிறது.

      Delete
  7. நாங்கள் சென்று வந்ததுபற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இருக்கிறேன் இரண்டு முறை சென்றுள்ளோம்

    ReplyDelete
    Replies
    1. லிங்க் இதோ http://gmbat1649.blogspot.com/2014/12/2.html நான்கைந்து பதிவுகள் எங்கள் பயண அனுபவங்களா முன்னும் பின்னும்

      Delete