என்ன பொருத்தம்!!
சுகுணாவிற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. இன்று அவள் மகள் காவ்யாவிற்கு பிளேஸ்மென்ட் துவங்குகிறது. நல்ல கம்பெனியில் பிளேஸ் ஆக வேண்டுமே என்று நகவலைபட்டுக் கொண்டே இருந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்த மகள் பிளேஸ்மென்ட் லெட்டரை நீட்டியவுடன் சந்தோஷமாக இருந்தது. அப்பாடா! நிம்மதி. நல்ல கம்பெனி.
போஸ்டிங் எங்க?
இங்கதான்.
அப்பாடா! ரொம்ப நிம்மதி. நான் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். எங்கேயாவது, பெங்களூர், பூனா என்று போட்டு விடக்கூடாதே?
"அம்மா, எந்த காலத்துல இருக்க? என்று மகள் கேட்க, கணவர் நமுட்டு சிரிப்போடு ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
"அப்படி இல்லடி, இதே ஊர்னா கவலை இல்ல,வேற இடம்னா உன்னை தனியா எங்க, எப்படி தங்க வைக்கறதுனு யோசிக்கணும், இல்லனா நல்லதா பி.ஜி பார்க்கணும், இப்போ கவலை இல்ல, வரன் தேட ஆரம்பிச்சுடலாம்."
"அம்மா ப்ளீஸ், உடனே ஆரம்பிச்சுடாதே, என்னை கொஞ்சம் ஃப்ரியா விடு"
"அதுதானே, இப்போதான் படிச்சு முடிச்சிருக்கா, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம் விடேன்" அப்பாவும் துணைக்கு வந்து விட, சுகுணா வாயை மூடிக்கொண்டாள் .
மகள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடியதும் மீண்டும் திருமண பேச்சை எடுத்தாள்.
"ரிஜிஸ்டர் பண்ணியவுடனே வரன் அமைந்துவிடுமா? இப்போதிலிருந்து பார்த்தால்தான் சரியாக இருக்கும்" என்று சுகுணாவின் வாதத்தை ஒப்புக்கொள்ள, மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் ரிஜிஸ்டர் செய்தார்கள்.
காவ்யாவின் ஃப்ரொபைல் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்து டெலிபோன் அழைப்புகள் வரத்தொடங்கின. இதைத்தவிர இவர்களுக்கு பிடித்த ப்ரொபைல்கள். சுகுணா எல்லாவற்றையும் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டாள்.
அவளுக்கும், அவள் கணவருக்கும் பிடித்த பையன்களின் ஜாதகத்தை தெரிந்த ஜோசியரிடம் காண்பித்து, தன் மகள் ஜாதகத்துடன் பொருந்தும் வரங்களை தேர்வு செய்து, மகளிடம் காண்பித்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்தாள்.
"அம்மா, வயதை பார்த்தியா? என்னைவிட ஆறு வயது பெரியவன்..."
"அதனால என்னடி?"
"என்னடியா?, ஜெனெரேஷனே மாறி விடும். மூன்று வயதிற்கு மேல் போகக்கூடாது."
"என்னமா இவன் தலையில் முடியே இல்லை."
"என்னைவிட ஒரு இஞ்சுதான் கூட, குறைந்தது 5'11ஆவது இருக்க வேண்டும்."
"சம்பளம் போதாது", "சரியான பழமா இருக்கான்", "மாமா மாதிரி இருக்கான்" ... இப்படி என்னென்னவோ காரணங்கள் சொல்லி, தட்டி கழித்தாள்.
பொறுக்க முடியாமல் சுகுணா மகளிடம்," நீ யாரையாவது லவ் பண்றயா? சொல்லித் தொலை" என்க,
"என்ன சின்ன காஞ்சீபுரம், ரொம்ப முன்னேறிட்டாயா?" என்றாள் அம்மாவை சீண்ட அம்மாவின் சொந்த ஊரை சொல்லி அழைப்பது மகளின் பழக்கம்.
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. மகளுக்கு திருமணம் தகையாத வருத்தத்தில் சுகுணாவிற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தது. கோவில், ஜோசியர் என்று அலைந்தாள்.
காவ்யா மேலே படிக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று விட்டாள். உடனே சுகுணா பார்க்கும் வரன்களில் அமெரிக்காவில் இருக்கும் வரன்களுக்கு முன்னுரிமை அளித்தாள்.
அதிலும் எதற்கும் மசியாத மகள் ஒரு நாள் தான் ஒருவனை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொன்னாள்.
அந்த ஆதித்தியாவிற்கு தற்சமயம் வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கிறான்(அது தான் நான் சம்பாதிக்கிறேனே, படித்து முடித்ததும் அவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடும்.)
காவ்யாவைவிட ஏழு வயது மூத்தவன்(அதனால என்னம்மா? அவன் என்னை நன்னா புரிஞ்சுக்கறான். ரொம்ப பொறுமையா எல்லாத்தையும் புரிய வைப்பான்.). தலையில் ஒரு முடி கூட கிடையாது.(திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இப்போ பாதிப்பேர் பால்டுதான்).
சுகுணாவிற்கு சில கேள்விகள் மனதில் உதித்தன. ஆனால் என்ன கேட்டு என்ன? எல்லவற்றிற்கும் பதிலாக ஒரு மூன்றெழுத்து வார்த்தை இருக்கிறதே.
எல்லாவற்றிற்கும் பதிலாக ஒரு மூன்றெழுத்து வார்த்தை!
ReplyDeleteகாதலுக்குக் கண்ணில்லை! :)
அதேதான்.
Deleteதட்டிக்கழித்த அத்தனையும் ஒன்றாய் இருக்கிறதே இவரிடம்.
ReplyDeleteமூன்றெழுத்து படுத்தும் பாடு.
//தட்டிக்கழித்த அத்தனையும் ஒன்றாய் இருக்கிறதே இவரிடம்.//அதுதான் புரியாத புதிர்.
Deleteகாதல் படுதத்தும்பாடு.
ReplyDeleteகாதலுக்கு முடியில்லை என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.
நிச்சயமானதும் பத்திரிக்கை அனுப்புங்க வந்து வாழ்த்துறோம்...
காவியக்காதலையும்...
ஹாஹாஹா! கல்யாணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
Deleteஅருமையான நடை. பெண்கள் மட்டுமல்ல இன்றைய ஆண்களும் திருமணத்தைத் தட்டிக் கழிக்கச் சொல்லுகிற அற்பக் காரணங்களையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல கதை.
ReplyDeleteஇளைய தலைமுறையை புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. நன்றி
Deleteநடக்குமோ நடக்குதோ என்கிற பயத்தில்...?
ReplyDeleteஇப்படியும் இருக்கலாமோ?
Deleteஹா ஹா ஹா ஹா ரொம்ப நல்லாருக்கு அக்கா....சூப்பர். உங்க எழுத்தை சொல்லணுமா?!
ReplyDeleteஅவள் ஒவ்வொன்றாக நிராகரிக்கும் போதே புரிந்தது சரி இந்தப் பொண்ணு இப்ப நிராகரிக்கறதை அப்புறம் ஒத்துக்கும் நு எல்லாம் அந்த மூன்றெழுத்து மந்திரம் தான்!!! ஹா ஹா ஹா...யதார்த்தம்.
கீதா
நன்றி கீதா.
ReplyDeleteஇப்படி நிறையப் பார்த்தாச்சு! :) ஆனாலும் மனசு என்னவோ சமாதானம் ஆகிறதில்லை! :)))))
ReplyDeleteமனது சமாதானம் ஆகாததால்தான் கதை ஆகியிருக்கிறது.
ReplyDelete