கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 26, 2019

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

மூல ஸ்தான வடிவம் 
நாங்கள் தரிசித்த அலங்காரம் 

புனேயிலிருந்து கோலாப்பூருக்கு காலை 6:30 மணிக்கு பஸ். வால்வோ பஸ் என்றாலும், நம் ஊர் வால்வோ பஸ் போல் இடைஞ்சலாக இல்லாமல்  தாராள லெக் பேசோடு சௌகரியமாக இருந்தது. 11:30க்கு கோலாப்பூருக்கு சென்று விட்டோம். இங்கிருந்தே ஆன் லைனில் புக் செய்திருந்த பாலாஜி ரெசிடென்சி  கோலாப்பூரின் பிரதான மார்க்கெட்டான மஹாரான பிரதாப் ரோட்டுக்கு  அருகில் ஒரு சந்தில் இருந்தது. அமைந்திருந்த இடம் சுமாராக இருந்தாலும், ஹோட்டல் மிக வசதியாகவும், நவீனமாகவும் இருந்தது. அங்கிருந்து மஹாலக்ஷ்மி கோவில் ஆட்டோவில் சென்றால் இருபது ரூபாய் தொலைவுதான், ஆனால், முப்பது கேட்கிறார்கள். நடந்தும் செல்லலாம். 

மஹாலக்ஷ்மி கோவில் ரொம்பவும் பெரிது என்று கூற முடியாது. நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. புராதனமான கோவில் என்பது அதன் கட்டுமானத்தைப் பார்த்தால் தெரிகிறது.  


சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்று. கரவீரபுரமாக இருந்த இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாஸுரனை, தேவி மஹாலக்ஷ்மியாக வந்து அழித்த இடம். அவன் இறக்கும் தருவாயில் இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம்.   லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூரத்தக்கது. 

17ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பின் பொழுது இந்தக் கோவிலின் பூஜாரி ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட மூல விக்கிரகம் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். சிவாஜியின் மருமகள் ராணி தாராபாய் கோலாப்பூர் சமஸ்தானத்தை ஸ்தாபித்த பிறகு இந்த கோவிலை விரிவு படுத்தியிருக்கிறாராம்.

கோவில் பெரியது என்று கூற முடியாது. கோபுரத்தில் நிறைய அழகான சிலைகள். சில உடைக்கப்பட்டிருக்கின்றன. பிரதான மண்டபத்திற்குள் நுழையும் முன் இடது புற சுவற்றில் இருக்கும் விநாயகர் புடைப்புச் சிற்பத்தை சாட்சி கணபதி என்கிறார்கள்.  நுழைவு வாயில் கொஞ்சம் குறுகலாக, உயரம் குறைவாக இருக்கிறது. உள்ளே நுழைந்து சிறிது தூரத்தில் மஹா காளி சந்நிதி.

அங்கிருந்து மஹாலக்ஷ்மி குடியிருக்கும் பிரதான வாயிலுக்கு செல்லும் வழியில் சூரியநாராயண மூர்த்தியின் சிலையை காண முடிகிறது. கர்பக்ரஹத்தின் வாயிலில் பிருமாண்டமான ஜெய,விஜய துவாரபாலகர்கள். 

சூரிய நாராயண மூர்த்தி 

துவார  பாலகர்களில் விஜயன் 

சாட்சி கணபதி 


தீப ஸ்தம்பங்கள் 

உள்ளூர் மக்கள் தாயாரை அம்பா, அல்லது அம்பாபாய் என்று குறிப்பிடுகிறார்கள். நின்ற திருக்கோலம். நான்கு கரங்கள். ஒன்றில் மாதுளம் பழம், இன்னொன்றில் பூமியில் ஊன்றப்பட்ட கதை, மற்ற இரு கரங்களில் சக்கரம், மற்றும் அமிர்த கலசம் ஏந்தி, ஆதி சேஷன் குடை பிடிக்க காட்சி அளிக்கிறாள் என்று குறிப்பிடப் பட்டாலும், நாங்கள் சென்ற பொழுது செய்யப்பட்டிருந்த அலங்காரத்தால் கதை, மாதுளம் பழத்தை ஏந்தியிருக்கும் கரம் இவைகளை காண முடியவில்லை. இங்கிருக்கும் அம்மனின் விசேஷம் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பந்தங்களிலிருந்து விடுவித்து மோட்சத்தையும் அளிப்பவள் என்பதாகும்.கண்குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வரும் வழியில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் மஹாசரஸ்வதியை தரிசித்துக் கொண்டு வெளியே வருகிறோம். 

வெளியே வந்ததும் புகைப்படங்கள் 





வெளிசுற்றில் சித்தி விநாயகருக்கென்று ஒரு தனி சந்நிதியும், தத்தாத்ரேயருக்கு தனி சந்நிதியும் இருக்கின்றன.  நுழைவு வாயிலுக்கு எதிராக மகாவிஷ்ணுவுக்கு தனி சந்நிதி இருக்கிறது. 

அம்மன் சந்நிதிக்கு மேற்கே உள்ள ஜன்னல் வழியே ரத சப்தமியை ஒட்டி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 2 ஆகிய  வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கிரணங்கள் அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் விழுவது இங்கு கிரனோத்ஸவ் என்று சிறப்பாக கொண்டாடப்படுமாம். அதைத்தவிர நவராத்திரியும் சிறப்பு. 

சென்ற வெள்ளியன்று கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை தரிசிக்கும் பாக்கியம் வாய்த்தது. கோவிலில் கும்பல் இருந்தாலும் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டாவது ஆடி வெள்ளியான இன்று, லக்ஷ்மி தேவியின் அருளால், எல்லோர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் நிறைய அம்பா பாயை வேண்டுகிறேன். 

கோலாப்பூரின் மற்ற பகுதிகளை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

29 comments:

  1. குட்மார்னிங்.

    கயாசுரன் போலவே இவனும் தனது பெயரில் அந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டானா? கோலாஸுரன் - கயாசுரன்... யாரைப் பார்த்து யார் காபி அடித்தார்கள் என்று தெரியவில்லையே!!!! ஒருவேளை சகோதரர்களோ!

    ReplyDelete
    Replies
    1. குட் மார்னிங்!நல்ல சந்தேகம். கீதா அக்காவை கேளுங்கள்.

      Delete
    2. என்னவெல்லாம் சந்தேகம் இந்த ஸ்ரீராமுக்கு. எல்லாம் கயா யாத்திரை செய்யும் மகிமை

      Delete
  2. //லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூறத்தக்கது. //

    எனக்கும் அந்த வரி நினைவுக்கு வந்தது. *கூரத்தக்கது

    ReplyDelete
    Replies
    1. கூரத்திற்கு நன்றி.

      Delete
    2. நினைவு கூர்ந்தேன் சரி. கூறத் தக்கது என்பது வேறே பொருளில் வரும்! இங்கே சொல்லி இருப்பது என்ன பொருளில் என்று புரியலை! நினைவுக்கு வந்தது சொல்லத் தக்கது என்னும் பொருளில் என்றால் கூறத் தக்கது!

      Delete
    3. நினைவுகூர தகுதியானது என்னும் பொருளில்தான் கூறினேன்.

      Delete
  3. படங்களையும் ரசித்தேன்.

    //தத்தாத்ரேயருக்கு//

    ராகுல் காந்தி நினைவுக்கு வருகிறார்!

    ReplyDelete
  4. ஹாஹாஹா! பப்புவை மறக்க முடியுமா?
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மிக மிக நன்றி பானு. அழகான படங்கள். மஹாலக்ஷ்மியின் அருள் நிறையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் வல்லி அக்கா. மிக்க நன்றி.

      Delete
  6. //அம்மனின் விசேஷம் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பந்தங்களிலிருந்து விடுவித்து மோட்சத்தையும் அளிப்பவள் //

    அதுதான் வேண்டும்.

    அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.

    சூரிய நாராயண மூர்த்தி ஓளியுடன் காணப்படுகிறார்.


    //ஆடி வெள்ளியான இன்று, லக்ஷ்மி தேவியின் அருளால், எல்லோர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் நிறைய அம்பா பாயை வேண்டுகிறேன்.//

    நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மேலே இருந்த ஒரு பலகணி வழியே சூர்ய வெளிச்சம் சூர்யநாராயண மூர்த்தியின் முகத்தில் விழுந்ததால் ஓவர் எக்ஸ்போஸ்ட் போல் தெரிகிறது. நீங்களும், கமலா ஹரிஹரனும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து சொல்லுவீர்கள். எனக்கு மிகவும் பிடித்த அந்த விஷயம் தொடரட்டும். நன்றி.

      Delete
  7. சாட்சி கணபதி - பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
  8. சாட்சி கணபதி, வித்தியாசமான பெயர்தான். ஆனால் எதற்கு சாட்சியாக நிற்கிறார் என்பதுதான் தெரியவில்லை. நன்றி டி.டி.

    ReplyDelete


  9. மிக அருமை மா..

    போன வாரம் எங்களுக்கு காமாட்சியம்மன் தரிசனம் கிடைத்தது ...இந்த வாரம் எங்கள் தளத்தில் பதிவாக அம்மன் அருள் கிடைத்தது ..


    அதுபோல உங்களுக்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்...

    தீப ஸ்தம்பங்கள் வித்தியாசமாய் அழகாய் உள்ளன ..

    .......ஒன்றில் மாதுளம் பழம், இன்னொன்றில் பூமியில் ஊன்றப்பட்ட கதை, மற்ற இரு கரங்களில் சக்கரம், மற்றும் அமிர்த கலசம் ஏந்தி, ஆதி சேஷன் குடை பிடிக்க காட்சி அளிக்கிறாள் .....

    படிக்கும் போதே தரிசித்த நிறைவு ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. நீண்ட நாட்களாகி விட்டது. படங்களை என் செல்போனில் எடுத்தேன், அதன் பிக்ஸெல் குறைவு. பெரிது படுத்தினால் கிளாரிட்டி குறைந்து விடுமோ என்று தோன்றுகிறது. அடுத்த முறை முயற்சிக்கிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      Delete
  10. படங்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக போடலாமே ... பார்வைக்கு அழகாக இருக்கும் ...

    ReplyDelete
    Replies
    1. பெரிது படுத்தினால் கிளாரிட்டி குறைந்து விடுமோ என்று தோன்றுகிறது. அடுத்த முறை முயற்சிக்கிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      Delete
    2. மாற்றியிருக்கிறேன், பார்த்து விட்டு சொல்லுங்கள்.

      Delete
    3. நன்றாக இருக்கிறது மா...

      இப்பொழுது வரும் phone லும் pixcel அதிகமே ...phone ல் எடுக்கும் படங்களை யும் resize செய்து குறைந்த அளவிலேயே நான் தளத்தில் போடுவது ..அப்படி செய்யும் போது படத்தின் தரத்தில் ஏதும் மாற்றம் வருவது இல்லை

      Delete
  11. வணக்கம் சகோதரி

    அழகான படங்களுடன் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம் கண்டு கொண்டேன்.அம்மன் மிக மிக அழகாக உள்ளார். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது

    விவரமாக தாங்கள் பகிர்ந்த கோவில் ஸ்தல வரலாறு படிக்க நன்றாக திருப்தியாக நிறைவாக இருந்தது. ஆடி வெள்ளியன்று அம்மன் தரிசனம் தங்கள் மூலமாக கிடைக்கப் பெற்றேன். பதிவுலக நட்புகள், மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் மஹாலக்ஷ்மி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க நானும் உங்களுடன் அம்மனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நெளிவு நெளிவாக இருக்கும் சிற்பங்கள் கோபுரத்தில் எடுக்கப்பட்டதா? இல்லை பிரகாரத்தில் எடுத்தீர்களா? மிகவும் அழகாக உள்ளது. சூரிய நாராயணர், சாட்சி கணபதி,துவார பாலகர் அத்தனை படங்களும் அழகாக உள்ளது. கோபுர தரிசனங்களும், தீப ஸ்தம்பங்களும் அழகாக இருந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  12. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் அவை. தீப ஸ்தம்பங்கள் நேரில் பார்க்கவும் மிகவும் அழகாக உள்ளன. நல்ல காமிராவில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். நான் என்னுடைய செல்போனில்தான் எடுத்தேன். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. சூரியநாராயணர் அப்போது தான் உதிக்கிறார் போல! சுற்றி ஒளிவெள்ளம்! முகம் கொஞ்சம் மறைக்கிறது. மற்றபடி படங்கள் எல்லாம் எடுக்க அனுமதி கிட்டியது ரொம்பவே பொறாமையாக இருக்கிறது. நம்ம முகத்தைப் பார்த்தாலே படம் எடுக்காதே என விரட்டுகிறார்கள். பண்டரிபுரத்தில் ஆன மட்டும் முயன்றேன். முடியலை! :(கோலாப்பூரில் வெளியே எடுக்க முடிந்தது. உள்ளே நீங்கள் நிறையப் படங்கள் எடுத்திருக்கீங்க. நாங்க போனப்போக் கூட்டம் காரணமோ என்னமோ எடுக்க முடியலை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அக்கா. நாங்கள் சென்ற பொழுதும்,"போட்டோ எடுக்காதீர்கள், போட்டோ எடுக்காதீர்கள்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். செல்போனில் சிலர் புகைப்படம் எடுத்ததால் நானும் எடுத்தேன். உங்களுடைய பிசி ஷெட்யூலுக்கு நடுவிலும் வருகை தந்ததற்கு நன்றி.

      Delete
  14. அழகான படங்கள். உங்கள் மூலம் நானும் கோலாப்பூரை கண்டுகொண்டேன். நன்றிம்மா...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புகைப்பட நிபுணர். உங்கள் வாயால் பாராட்டு பெறுவது சந்தோஷமளிக்கிறது. நன்றி.

      Delete
  15. பானுக்கா படங்கள் செமையா இருக்கு அதுவும் முதல் படங்கள் அப்புறம் அந்த இரண்டாவது படம் சிற்பம் வாவ்!!

    நானும் சென்றிருக்கிறேன் 15 வருடங்களுக்கு முன்.

    நல்ல விவரணம் பானுக்கா. அழகா நினைவு வைச்சு சொல்லிருக்கீங்களே...சூப்பர்.

    நாங்களும் கோயில் சென்ற போது எம் எஸ் ஆல்பத்திலிருந்து ராகத்துடன் சொல்லக் கற்றுக் கொண்ட கனகதாரா, அப்புறம் வந்தே பத்மஹராம், அஷ்டோத்திரம் குறிப்பாக இந்த வரி நீங்கள் சொல்லியிருப்பது வருமே அது என் கோஸிஸ்டர் (பாடகி ஆச்சே) அவங்க பாட நானும் கூடவே பின்பாட்டு பாடினேன் ஹிஹிஹி...

    கீதா

    ReplyDelete