கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 10, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

என்னுடைய சென்ற பதிவில் எனக்கு வாட்ஸாப்பில் வந்த  பஞ்சம் போக்கிய ஐ.ஆர் 8 என்னும் ஃபார்வர்ட் மெசேஜை பகிர்ந்திருந்தேன். அதற்கு மறுப்பு இயற்கை விவசாயம் என்னும் குழுவிலிருந்து வந்திருக்கிறது.
இரண்டாம்  உலகப்போர் அத்தனை சீக்கிரம் முடிந்து விடும் என்று அதில் ஈடுபட்ட நாடுகள் எதிர்பார்க்கவில்லையாம். வெடிகுண்டுகள் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ரசாயன கலவையை விவசாய நிலத்தில் போடும்பொழுது அதில் விளையும் பயிர்கள் நல்ல விளைச்சலை தந்ததைக் தற்செயலாக கண்டு பிடித்த அமெரிக்க கம்பெனிகள் அதை காசாக்குவதற்காக  உரமாக பயன் படுத்தினார்களாம். நார்மென்ஃபோர்லாக் ஒன்றும் நல்ல எண்ணத்தில் செய்யவில்லை என்கிறார் அதை அனுப்பியவர்.  ஐ.ஆர்.8 பஞ்சத்தை போக்க பயன் பட்டது என்பது ஆகச் சிறந்த பொய் என்பது அவரது கருத்தாக இருக்கிறது. நம் நாட்டில் அரிசி எல்லோருடைய உணவாகவும் இருந்ததில்லை. புன்செய் தானியங்களைத்தான் பெரும்பான்மையோர் பயன்படுத்தினார்கள். அரிசி என்பது மேட்டுக்குடியினரின் உணவு என்கிறார்.

இதற்கான ஆடியோ க்ளிப்பிங்கை எப்படி பகிர்வது என்று தெரியாததால் பகிரவில்லை. .

என்னுடைய தோழி சமீபத்தில்,"இப்போதைய இளைய தலைமுறை நம்மோடு பேசுவதில்லை. நாம் சொல்வதை கேட்பதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை, எப்போதும் செல்ஃபோன், கூகுள் சொல்வதைத்தான்
கேட்கிறார்கள்." என்றாள்.  எனக்கு கூட இதில் ஒரு அனுபவம் இருக்கிறது. என் மருமகளிடம் நான் பலமுறை கோலம் போடச் சொல்லியும் அவளுக்கு அதில் ஏதோ தயக்கம் இருந்தது. ஆனால் எங்களுடைய யூ டியூப் சேனலில் தினசரி கோலங்கள் என்று என் அக்கா போட்டிருந்ததை பார்த்து விட்டு, அதை ஒரு நோட்டில் போட்டுக்கொண்டு இப்போது தினசரி சாமிக்கு முன் போடுகிறாள்.
"தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பதில்லை என்று கூறுகிறவர்கள், மற்றவர்கள் கேட்கும் வண்ணம் கூற கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாண்டிச்சேரி அன்னை கூறியிருப்பதின் தாத்பர்யம் இதுதானோ?


எனது சமீபத்திய சென்னை விஜயத்தின் பொழுது, கிருஷ்ணகிரியில் காலை சிற்றுண்டிக்காக நிறுத்தினார்கள். அங்கு சிறுண்டியை சாப்பிட்டுவிட்டு கேஷ் கவுண்டர் அருகே வைக்கப்பட்டிருந்த  டெரகோட்டா பொருள்களை பார்வையிட்டேன். அங்கிருந்த ஒரு சிறு குருவி பொம்மை என்னைக் கவர்ந்தது. ஊதுபத்தி ஸ்டாண்ட் போல இருந்த அது விசில் என்றார் விற்பனை பெண்மணி. அது இரண்டு விதமாக விசில் அடிக்கும் என்று ஊதியும் காட்டினார். முதலில் ஊதிய பொழுது எல்லா விசில்களையும் போல கீச்சென்ற ஒலியைத்தான் எழுப்பியது. அதில் நீர் நிரப்பி விட்டு ஊதினால் பறவை கத்துவது போல ஒலி வருகிறது. அந்த விசிலடிச்சான் குஞ்சு ஒன்றை அக்காவின்  பேத்திக்காக வாங்கினேன்.

துக்ளக்கில் நான் ரசித்த கார்ட்டூன்



நான் ஒரு விளம்பர பிரியை. தவறாக நினைக்க வேண்டாம், தொலைகாட்சியில் வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பவள். கற்பனைத்திறன் மிக அதிகமாக தேவைப்படும் ஒரு துறை விளம்பரத்துறை. ஒரு பொருளைப்பற்றி நச்சென்று சுருக்கமாக கூறி பார்ப்பவர் மனதில் ஆசையைத்தூண்ட வேண்டும்.



சின்ன வயதில் ரேடியோவில் விவிதபாரதியில் கேட்ட "இன்பமூட்டிடும் கோககோலா இன்பமூட்டிடும் கோக்.." பாடல் திடீரென்று ஒரு நாள் நினைவுக்கு வந்தது. அதை முகநூலில் நான் பகிர்வதற்கு முன் ஸ்ரீராம் கேட்டு விட்டார். நினைவில் நிற்கும் வேறு சில விளம்பரங்கள்:

"கரகரப்ரியா ராகத்தில் எவரெடி ட்ரான்ஸிஸ்டர் பேட்டரி..." பாடல்.

 "மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்..."

"வானவில்லும் மெய் சிலிர்க்கும் எதனைக்கண்டு?
வண்ண வண்ண கீதா சேலைகளின் அழகைக் கண்டு" என்று எங்கள் ஊர்(திருச்சி) கீதாஸ் விளம்பரத்திற்காக ரதி அக்னிஹோத்ரி, மஞ்சு பார்கவி  நடித்த விளம்பர படம்+ பாடல். இப்பொழுது கீதாஸ் கடையே இல்லை.

"வாஷிங் பவுடர் நிர்மா..."

"சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்.."

பலராலும் மறக்க முடியாத,மிகப் பிரபலமான "என்னாச்சு? குழந்தை அழுதது" என்னும் க்ரைப் வாட்டருக்கான விளம்பரம்.

இதயம் நல்லெண்ணெய் வந்த புதிதில் ஒளி பரப்பப்பட்ட,"இதுல காரல் இல்ல, கசப்பு இல்ல, போய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்களேன், இதெல்லாம் பொம்பளைங்க விஷயம்" என்னும் விளம்பரம் மிகவும் பிரபலமாகி அதில் நடித்த நடிகைக்கு 'நல்லெண்ணய் சித்ரா' என்ற பட்ட பெயரே கிடைத்தது.

ஹார்லிக்ஸுக்கான விளம்பரத்தில் ஒரு நடன மாது, "ஒரு தில்லானா ஆடிட்டு ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்சா அது தரும் தெம்பே தனி" என்பார்.
ஒரு மருத்துவர் எல்லாருக்கும் ப்ரிஸ்க்ரைப் பண்றேன், நானும் குடிக்கிறேன், தினமும் ரெண்டு வேளையும் என்பார்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ஹார்லிக்ஸ்தான், எங்கம்மாவும் அதே குடிச்சா" என்று ஒரு மூதாட்டி சொல்லுவார்.
ஒரு பொடியனோ,"குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்" என்பான்.

இதை அடிப்படையாக வைத்து, ஒரு முறை சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு மலரில் பிட் அடிப்பதை பற்றி,
"நானும் பிட் அடிக்கிறேன், எல்லோருக்கும் சொல்றேன், எல்லா பரீட்சைக்கும்"
"எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து பிட் தான், எங்கம்மாவும் அதே அடிச்சா"
"படிக்க வேண்டாம், அப்படியே அடிக்கலாம்" என்று ஜோக் எழுதியிருந்ததாக குமுதத்தில் எடுத்து போட்டிருந்தார்கள்.

மீண்டும் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நண்பன், மன்னிக்கவும் விளம்பரம் என்றதும் ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது. ஹி ஹி!





















24 comments:

  1. எல்லாம் சுவையான மசாலா சாட்கள். நினைவாகக் காலா நமக் சேர்த்திருப்பதால் சுவை அதிகமாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. அந்த அரிசிப் பதிவு தேடி எடுத்துச் சுட்டி தர மறந்தே விட்டேன். நாளைக்காவது நினைவாப் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் லிங்க் அனுப்புங்கள். 

      Delete
  3. ஆடியோ க்ளிப்பை யு டியூபில் கூட ஏற்றலாம் என்றுதான் நினைக்கிறேன். 

    ReplyDelete
  4. சிலர் யு டியூபில் சொல்வதைக்கேட்டு செய்கின்றனர்.  சிலர் அவர்களின் குறிப்பிட்ட வட்டத்தில் இருக்கும் சிலர்தான் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்!

    ReplyDelete
  5. அப்பா... அப்பா...    கடைக்குப்போறியா?
    ஆமாம் கண்ணு உனக்கு என்ன வேணும் சொல்லு...
    டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட்   டாலர் பிஸ்கட் வேணும்!  - இது நினைவிருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதான் டாலர் பிஸ்கெட்  நினைவுக்கு வருகிறது

      Delete
  6. ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் ஒரு பாடல் வரும். "சுஜாதா சங்கர் ராஜு ரவி சுஜாதா என்றும் சுறுசுறுப்புடனே ஆரோக்கியம் பொங்கும் நல்ல குடும்பம் அது ஹார்லிக்ஸ் குடும்பம்..."  இதில் இரண்டு தடவை சுஜாதா என்று வருமா, நினைவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சுஜாதா என்று எத்தனை முறை வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள் அந்த பாடலில் இரண்டு முறை சுஜாதா வராது அது சுசித்ரா,சங்கர்,ராஜூ, ரவி சுஜாதா  

      Delete
  7. "பொங்கல் இட்லி வடை, தோசை தயிர் பகோடா  ... ஸாருக்கு?
    இட்லி... சூடா கிடைக்குமா இட்லி?
    தும்பைப்பூ ஸார்.. தும்பைப்பூ...
    எதுய்யா எது?
    உங்க சட்டை...எதால ஸார் வெளுக்கறீங்க...

    இது இதன்விளம்பரம் என்றுநினைவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ரின் என்று ஞாபகம். சரியாகாத் தெரியவில்லை.

      Delete
  8. மூட்டை முடிச்சைக் குறையுங்கள் ...வண்டிப்பயணம் சுகமாகும் குடும்ப அளவைக்குறையுங்கள் வாழ்க்கைப்பயணம் சுகமாகும்...வண்டியாயினும் வாழ்க்கையாயினும்...

    அப்புறம் இன்னும் என்னமோ வரி வரும்!

    ReplyDelete
    Replies
    1. அதற்கப்புறம் என்ன வரும் என்று தெரியவில்லை. அதற்கு முன்னால் பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறள் வரும்.  

      Delete
  9. ஆரோக்ய வாழ்வினையே காத்திடும் லைஃபாய்.லைஃபாய் இருக்குமிடம் ஆப்ரோக்யம் இருக்குமிடம்.
    என் மேனி ஏழிலைக் காப்பது லக்ஸ் டாய்லெட் சோப்.
    ரெமி பவுடர் ரெமி ஸ்னோ இன்றே வாங்குங்க ரெமி பவுடர் ரெமி ஸ்னோ என்றும் வாங்குங்க. 
    இதையெல்லாம் விட்டுட்டீங்களே 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன பிறகுதான் இதெல்லாம் நினைவுக்கு வருகின்றன. லக்ஸ் சோப் திரையில் பார்த்ததுதான் நினைவில் இருக்கிறது.ஆண்களை சோப் விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஒரே சோப் லைஃபாய் என்னும் பெருமை அதற்கு உண்டு. வருகைக்கு நன்றி. 
       

      Delete
  10. சில விளம்பரங்கள் மனதை கவரத்தான் செய்கின்றன...

    // ஆடியோ க்ளிப்பிங்கை எப்படி பகிர்வது //

    https://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், சுட்டி பகிர்வுக்கும் நன்றி. 

      Delete
  11. மிக மிக அருமை பானுமா,
    லைஃப்பாய் விளம்பரம், வஜ்ரதந்தி,கால்கேட்
    கண் கட்டும் அளவிற்கு விளம்பரங்கள்.
    நன்றி நினைவுகளுக்கு.
    வீக்கோ டர்மெரிக் ஆயுர்வெதிக் க்ரீம்.:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வல்லி அக்கா.

      Delete
  12. கண்கவர் தோற்றம் ....
    ஜில்லெனக் காற்று ....
    நீடித்த உழைப்பு .....
    குறைந்த செலவில் ....
    நிறைந்த பயன்கள் .....

    உஷா டேபிள் ஃபேன் !

    இந்த வரிகள் என் வாய் அடிக்கடி (1970-1972) வாக்கில் முனுமுனுப்பதுண்டு.

    =======

    பிறந்த நாள் ..... இன்று பிறந்த நாள் ..... பிள்ளைகள் போலே ,,,,, தொல்லைகள் யாவும் மறந்த நாள் .....

    ReplyDelete
  13. உஷா டேபிள் ஃபேன்? ம்ஹூம்! சுத்தமாக கேட்ட நினைவே இல்லை. வருகைக்கு நன்றி.  

    ReplyDelete
  14. //தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பதில்லை என்று கூறுகிறவர்கள், மற்றவர்கள் கேட்கும் வண்ணம் கூற கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாண்டிச்சேரி அன்னை கூறியிருப்பதின் தாத்பர்யம் இதுதானோ?//

    உங்கள் அக்கா அழகாய் அமைதியாய் சொல்கிறார்கள் எல்லாம். கேட்க இனிமை.

    ReplyDelete
  15. விசிலடிச்சான் குஞ்சு ஒன்றை அக்காவின் பேத்திக்காக வாங்கினேன்.//
    அருமை.

    தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு... ஆனால், பொடி ஒன்றே!
    !.டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டின பொடி விள்மபரம். அத்தனை மனிதர்களின் மாறுபட்ட உடைஅமைப்புடன் விளம்பரம் வரும் .

    2.
    ஆனந்தமான வாழ்க்கைக்கு காட்பரீஸ் சாக்கலேட் மிட்டாய் மட்டுமல்ல ஒரு உணவும் கூட.

    3.விவித பாரதி விளம்பரம்
    ஒவ்வொரு வாரமும் 666 மணி நேரம் இனிய பொழுது போக்கு நிகழ்ச்சியை ஒளி பரப்புகிறது. ஒவ்வொரு மாதமும் 45, 000 ரசிகர்கள் தபால்களை பெறுகிறது.
    இந்தியா முழுவதும், ஆசியா, ஆப்பிரிக்கா, நாடுகளில் பல இடங்களிலும் நேயர்களால் கேட்கப்படுகிறது.

    4. எந்த வயதினருக்கும் ஏற்றதொரு விஸ்டம் டூத் பிரஸ். இப்படி வித்தியசமான விள்மபரங்கள் அம்மாவின் தொகுப்பு குமுதம் புத்தகத்தில் நிறைய இருக்கிறது.
    ம்சலா சாட் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete