கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 24, 2020

மசாலா சாட் -15

மசாலா சாட் - 15
(மாறுதல் வரும்) 


சமீபத்தில் ஏதோ ஒரு சேனலில் குடும்பம் ஒரு கதம்பம் படம் போட்டார்கள். அதில் ஒரு காட்சியில் எஸ்.வி. சேகர்,"பொண்ண பெத்தவங்க என்ன இப்படி அலையறாங்க? பாஸ்கர் ஊரிலிருந்து வந்து முழுசா ஒரு வாரம் ஆகல, அதுக்குள்ள ரெண்டு ஜாதகம் வந்து விட்டது" என்பார். அதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டேன் சிரிப்பு வந்தது. பையனுக்கு பெண் தேடும் அம்மாக்கள் எல்லோரும் சொல்லுவது,"பெண் வீட்டிலிருந்து கூப்பிடவே மாட்டேன் என்கிறார்கள். நாம்தான் ஃபோன் பண்ண வேண்டியிருக்கு." என்பதாகும்.  இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று வேண்டி ஆண்கள் பாவை நோன்பு நோற்க நேரிடலாம் என்று  நான் முக நூலில் பகிர்ந்த பொழுது ஒரு நண்பர், அது 'காளை நோன்பு' ஆகும் என்று பின்னூட்டம் இட்டிருந்தார். 

இப்படி பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ மாற்றங்களை தவிர்க்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது.    

கல்யாண மாலை நிகழ்ச்சியில் பெண்கள், "என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் பையன் வேண்டும்" என்கிறார்கள். "பெண்ணுக்கு சமைக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் நன்றாக சமைப்பேன்" என்கிறார் ஒருவர்.  

சமையல் என்றதும் ஒரு விஷயம் தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது கௌரவக் குறைச்சல். ஹோட்டல்களும் குறைவுதான். மெஸ் என்பது பேச்சுலர்கள் சாப்பிடும் இடம். சமையல் புத்தகம் என்றால் அது மீனாட்சி அம்மாள் சமயல் புத்தகம் மட்டும்தான். புத்தகத்தை பார்த்து சமைப்பது கேலிக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. 

அரிசியை கழுவி,நீர் ஊற்றி, குக்கரில் வைத்து விட்டு 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சாதம் ஆகவே இல்லை. ஏனென்றால் அடுப்பை பத்த வைக்க வேண்டும் என்று அதில் போடாததால் என் மனைவி அதை செய்யவில்லை. 
போன்ற ஜோக்குகள் அப்போது பிரபலம். 

ஆனால் இப்போதோ ஏகப்பட்ட சமையல் புத்தகங்கள். டி.வி.யில் நாள் முழுக்க எந்த சானலை திருப்பினாலும் யாராவது சமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத்தவிர யூ டியூப், முக நூல், ஹலோ ஆப் என்ற எல்லாவற்றிலும் சமைத்துத் தள்ளுகிறார்கள்.  இருந்தாலும் பலர் வீட்டில் சமைப்பதாக தெரியவில்லை. 

ஹோட்டல்களுக்குச் சென்றால் பார்சல் வாங்கும் இடத்தில் ஸ்விகிகாரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதைத்தவிர சமைத்து கொண்டு வந்து வீட்டில் கொடுக்க  ஏகப்பட்ட கேட்டரிங்குகள்.  வீடு கட்டுபவர்கள், குறிப்பாக அப்பார்ட்மெண்டுகள் சமையலறையின் அளவை குறைத்து விடுகின்றன. காரணம் கேட்டால் இப்போதெல்லாம் யார் சமைக்கிறார்கள்? என்கிறார்கள்!!

எத்தனை விதமான உணவுகள் இருக்கின்றதோ அத்தனை விதமான டயட் முறைகளும் இருக்கின்றன. பேலியோ டயட், வேகன் டயட், ஃப்ரூட் டயட், என்று என்னென்னவோ சொல்கிறார்கள். அரிசி சாப்பிடக் கூடாது, எண்ணெய் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை ருஜூதா திவாகர் முற்றிலுமாய் மறுக்கிறார்.   இரவில் அரிசி சாப்பிடக் கூடாது என்பவர்கள் கரீனா (கபூர்) கானைப் பாருங்கள். அவர் இரவில் தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார். மேலும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளில் கொழுப்பு அதிகம் என்பதையும் இவர் ஏற்பதில்லை. நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், நம் நாட்டில் விளையும் காய்கறிகள், பழங்களையும் தவிர்க்கத் தேவையில்லை என்பது இவர் கருத்து. 


"நெய் சாப்பிடக் கூடாது என்று சொன்ன மேற்கத்தியர்கள் இப்போது நெய் உடலுக்கு அவசியம் என்பதால் அதை காபியில்(ப்ளாக் காபி)  கலந்து குடிக்கிறார்கள். சாதத்தோடு கலந்து கொண்டால் தீமை அளிக்கும் நெய், காபியில் கலந்து கொண்டு விட்டால் நன்மை செய்து விடுமா?  நம்முடைய பாரம்பரிய உணவுகளை  வெளி நாட்டவர் தவிர்க்கச் சொன்னால் அதை ஆராய வேண்டும்" என்று அரசியலும் பேசுகிறார். 

Rujutha Diwakar - celebrity dietician
பார்க்கலாம் இன்னும் என்னென்ன மாறுமோ? இப்போதெல்லாம் பிஸ்ஸாவில் டாப்பிங்காக கத்திரிக்காய் போட ஆரம்பித்து விட்டார்களாமே? கஞ்சியாக குடித்துக் கொண்டிருந்த ஓட்ஸில், இட்லி, தோசை, எல்லாம்  செய்கிறார்கள். நான் ஓட்ஸில் உப்புமா செய்தேன். 

ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.  எல்லா உப்புமாக்களுக்கும் தாளிப்பது போல் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து ஓட்ஸை அதோடு சேர்த்து, உப்பு போட்டு தண்ணீரை தெளித்து, தெளித்து கிளற வேண்டும். அரிசி மாவில் செய்யும் உப்புமா போல் சுவையாக இருக்கிறது. 


ஓட்ஸ் உப்புமாவோடு 'மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா..' என்னும் பாடலையும் சுவையுங்கள் சுட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. https://youtu.be/oE6zm6OAghg41 comments:

 1. இன்னும் பல கொடுமைகளை (மாற்றங்கள்) சந்தித்து ஆகவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நாம் கொடுமை என்கிறோம். மாற்றம் என்பது வளர்ச்சி என்று சொல்பவர்களும் உண்டே. வருகைக்கு நன்றி சகோ.

   Delete
 2. எங்க வீட்டில் பாரம்பரிய முறைப்படி தான் சமையல், சமையலுக்கான பாத்திரங்கள், எண்ணெய் வகைகள் எல்லாமும். நெய்யைத் தவிர்ப்பதே இல்லை. தினமும் சாப்பாட்டில் நெய் உண்டு. சமையலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய். எப்போவானும் வடை, பஜ்ஜி செய்வதெனில் கடலை எண்ணெய். பக்ஷணங்கள் தேங்காய் எண்ணெய் தான். இதை மாற்றுவதே இல்லை. அதே போல் எண்ணெய் சுட வைத்தால் அதைத் திரும்பப் பயன்படுத்த மாட்டேன் என்பதால் அதைக் கொஞ்சமாக வைத்துச் செய்வேன். மிஞ்சினால் ஒரு கரண்டி இருந்தால் அதிகம். அதையும் அன்றே அல்லது மறுநாள் பயன்படுத்தும்படி பார்த்துப்பேன். இல்லை எனில் கொட்டிடுவோம். இப்போல்லாம் வேலை செய்யும் பெண் நான் வாங்கிக்கிறேன் என்பதால் அவங்களிடம் கொடுத்துடறேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பிறந்த வீட்டில் தேங்காய் எண்ணையில்தான் முழு சமையலும். இப்பொழுதுதான் மாறியிருக்கிறார்கள். நான் ஒரு மாதம் கடலை எண்ணெய், ஒரு மாதம் தேங்காய் எண்ணெய், ஒரு மாதம் நல்லெண்ணெய் என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு எண்ணெய் உபயோகிக்கிறேன். வீட்டில் வெண்ணை எடுத்து காய்ச்சும் நெய்தான்.

   Delete
 3. ருஜிதா சொல்லி இருப்பதை நானும் படித்திருக்கேன். இதைப்போலவே நாம் அதிகம் தீட்டு, எச்சல், பத்து போன்றவற்றைப் பார்ப்பது பற்றியும் எல்லோரும் கேலி செய்வார்கள். ஆனால் அதற்கும் அறிவியல் ரீதியாக எழுதி இருந்த கட்டுரை ஒன்றை முகநூல் பதிவு ஒன்றில் படித்தேன். அதில் இந்த விஷயத்தில் யூதர்களுக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை பற்றிக் கூட எழுதி இருந்தார்கள். அதைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. இப்போத் தேடினால் கிடைக்கவில்லை. இதைப் பற்றி எழுதக் கூட ஆரம்பித்துப் பின் பாதியில் நின்று விட்டது.

  ReplyDelete
 4. ஆழமான பதிவு.

  மாறுதல்கள் அன்பு, காதல், கணவன்‍ மனைவி உறவு, திருமணங்கள், முறைமைகள், குழந்தை வளர்ப்பு என்று இப்படி எல்லாவற்றிலும் வந்து விட்டன. அவற்றுக்கு பழகியும் சகித்தும் நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் அடிக்கடி ' நாங்கள் வாழ்ந்த காலம் பொற்காலம் ' என்று சொல்லிக்கொள்வதுண்டு.

  அரிசி வகைகள், கோதுமையில் கூடுதலான மாவுச்சத்து இருப்பதனால்தான் மருத்துவர்கள் இப்போது அவற்றை உண்பதை தடுக்கிறார்கள். அளவுக்கு அதிகமான மாவுச்சத்தை கல்லீரல் உடலில் கொழுப்பாக சேமித்து வைப்பதும் சிலர் உடலில் இன்சுலின் சுரக்க முடியாத கல்லீரல் அந்த அதிகப்ப‌டியான மாவுச்சத்தை ஒன்றும் செய்ய முடியாமல் இரத்தத்தில் அப்படியே சர்க்கரையாக தேங்க வைப்பதும்தான் இதற்குக் காரணங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அந்த அந்த நாட்டுக்கே உரித்தான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உணவுகள் அமைகின்றன, அல்லது பெரியோர் ஏற்படுத்தி உள்ளார்கள். வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகம். ஆவணி மாதம் தொடங்கும் மழைக்காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும் என்பதோடு அப்போதில் இருந்தே பூமி குளிர்ந்து விடும். ஆகவே அவர்கள் தங்கள் சீதோஷ்ணத்துக்கு ஏற்ற உணவுகளை உண்கின்றனர். இதை நான் நன்கு கவனித்து இருக்கிறேன். தென் மாநிலத்தை விடக் குறிப்பாகத் தமிழகத்தை விட அங்கே சர்க்கரை நோயால் பாதிப்புக் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அதே போல் நம் தென்னாட்டுக்குக் குறிப்பாய்த் தமிழ்நாட்டுக்கு உள்ள வெப்பமான நிலைக்கு அரிசி உணவே ஏற்றது. விரைவில் ஜீரணமும் ஆகக் கூடியது! இப்போது வரும் அரிசி வகைகளில் ரசாயன உரக்கலப்பால் ருசி இல்லாமல் சாப்பிட்டால் உடல் நலம் கெடும்படி இருக்கிறது. ஆனால் பாரம்பரிய முறைப்படி பயிரிடப்பட்ட அரிசியை வாங்கி உண்டால் நமக்கு எந்தக் கேடும் வராது. நமக்கெல்லாம் சோறே ஏற்றது. இட்லி, தோசை வகைகள், உப்புமா, பொங்கல் வகைகளும் ஏற்றவை! என்றோ மாறுதலுக்காகச் சப்பாத்தி, பராந்தா, பூரி எனச் சாப்பிடலாமே தவிர்த்து தினம் இரவு அதைச் சாப்பிடுவது நம் உடலுக்கு உகந்தது அல்ல. எங்கள் மருத்துவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டீன் ஆக இருந்தவர் ராத்திரி தயிர் சாதம் மட்டும் சாப்பிடும்படி வற்புறுத்திச் சொல்லுவார். உணவுப் பழக்கங்கள் மாறியதில் இருந்தே நோய்களை அதிகம் பார்க்கிறோம்.

   Delete
  2. //' நாங்கள் வாழ்ந்த காலம் பொற்காலம் ' // உண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 
    

   Delete
  3. இயற்கை ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி பார்த்து பார்த்து ஏற்பாடு செய்கிறது என்பது வியப்பளிக்கக்கூடியது. பருவக்காலங்களுக்கேற்றபடி தானியங்களும், பழங்களும் விளையும். அதனால்தான் அந்த பழங்களை தவற விடாதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  

   Delete
 5. சமையல் விசயத்திலும் திருமண விசயத்தில் இப்படிப்பட்ட தலைகீழ் மாற்றம் நேரும் என யாருமே கற்பனை செய்திருக்க மாட்டோம் அருமையான அலசல்..

  ReplyDelete
  Replies
  1. நம்ம தமிழ்த்தாத்தா தன் திருமணத்தில் திருமணத்துக்குப் பிள்ளை வீட்டாருக்கே செலவு என்பதைப் பற்றியும் தன் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்கப்பட்ட கஷ்டம் பற்றியும் குறிப்பிட்டிருப்பார். ஒரு காலத்தில் இப்படி இருந்தது தான் ஆங்கில ஆட்சி வந்ததும் ஆங்கிலப்படிப்புப் படித்து விட்டு வேலையில் இருக்கும் மணமகன் வீட்டார் வர தக்ஷணை என வாங்க ஆரம்பித்து அது ஓர் கொடுமையாக மாறிவிட்டது. இதெல்லாம் சுமார் 200/300 வருடங்களுக்குள் வந்ததே! ஆங்கிலேய ஆட்சி வந்து நம் பழக்க வழக்கங்கள், உணவு முறை எல்லாமும் மாறி விட்டது. திருமணத்தில் காலை இட்லி போடுவது எல்லாம் அப்போது இல்லை. திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், மாப்பிள்ளை அவர்கள் குடும்பத்தினர் ஆசாரமாக எதுவுமே உண்ணாமல் இருப்பார்களாம். வந்திருப்பவர்களுக்குக் காலை ஆகாரமாகப் பழையது, சுண்டிக் காய்சிய குழம்பு, வத்தல், வடாம் ஆகிய்வை போடுவார்களாம். அதிலும் பெண்கள், இளம்பெண்கள், குழந்தைகள் இருப்பவர்களே இவற்றை உண்பார்களாம். பெரும்பாலான ஆண்கள் மடி, ஆசாரம் பார்ப்பதாலும் பூஜைகள் செய்ய வேண்டி இருந்ததாலும் காலை ஆகாரம் எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். திருமணம் வைதிக சம்பிரதாயங்களை முழுக்க முழுக்கப் பின்பற்றி நடக்கும். திருமண உணவில் இனிப்புக்காக போளியும் ஆமவடையும் மட்டும் அந்த ஒரு வேளைக்கு இடம் பெறுமாம்.

   Delete
  2. அந்த நாட்களில் என் அம்மாவைப் பெற்ற பாட்டியின் திருமணத்தில் தான் முதல் முதலாகக் காஃபி கொடுத்தார்கள் என மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சொல்லுவார்கள் என எங்க குடும்பத்தில் பேசிக் கொள்ளுவது உண்டு. பரமக்குடி ராஜம் ஐயர் பேத்தி கல்யாணத்தில் காலம்பரக் காஃபி கொடுத்ததாகச் சொல்லுவார்கள் என்று பேசிக் கொள்ளுவார்களாம்.

   Delete
  3. ஆமாம், அதுவும் கடந்த பதினைந்து வருடங்களில் வந்திருக்கும் மாறுதல்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வருக. 

   Delete
  4. //நம்ம தமிழ்த்தாத்தா தன் திருமணத்தில் திருமணத்துக்குப் பிள்ளை வீட்டாருக்கே செலவு என்பதைப் பற்றியும் தன் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்கப்பட்ட கஷ்டம் பற்றியும் குறிப்பிட்டிருப்பார். // எனக்கு இது புதிய தகவல். பிள்ளை வீட்டார்கள்தான் பெண்ணைத்தேடிச் சென்று மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் மஹா பெரியவர் கூட சொல்லியிருக்கிறார். நன்றி. 

   Delete
 6. அடுத்து காளைகள் கன்னிகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் பண்ணும் நாள் வெகுதூரத்தில் இல்லை.  அல்லது ஏற்கெனவே தொடங்கி விட்டதோ என்னவோ!

  ReplyDelete
  Replies
  1. கன்யா சுல்கம் என்னும் பெண்ணைப் பெற்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் கன்யாசுல்கம் என்னும் முறையே ஆதிகாலத்தில் இருந்து வந்தது. இந்தப் பெயரில் ஒரு நாவல் கூட இருக்கிறது. தெலுங்கோ, கன்னடமோ மொழிபெயர்ப்புப் படித்திருக்கிறேன் ரொம்பச் சின்ன வயசில். இப்போப் பலருக்கும் கன்யாசுல்கம் என்பதைப் பற்றித் தெரியவில்லை என்பதோடு நாவலைப் படிச்சவங்க இருப்பதாகவும் தெரியவில்லை.

   Delete
  2. படித்ததில்லை.  ஆனால் நீங்களே முன்னர் ஒருமுறை இது பற்றி சொல்லியிருக்கிறீர்களோ...

   Delete
  3. கன்யா சுல்கம் பற்றியும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்த நாவல் ஆன் லைனில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.  

   Delete
  4. //அந்த நாவல் ஆன் லைனில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.//

   ’கன்யா’ பற்றிய விஷயமாக இருப்பதால் ஆண் லைனில் கிடைப்பது கஷ்டம். அதனால் பெண் லைனில் தேடிப்பாருங்கோ, ப்ளீஸ். :)

   Delete
 7. ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே சரவணபவனில் டிபன்பாக்ஸ், கேரியர்களோடு சாம்பார், பொரியல், ரசம், கூட்டு முதலானவை வாங்க வரிசையில் நிற்பது பார்த்து அதிசயித்திருக்கிறேன்.  அதுவும் வார இறுதி நாட்கள் என்றால் கூட்டம் பெரும் கூட்டமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஜனவரி ஒன்று அன்று வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தது. அப்படியே நாரர்ஜுனாவில்(பெங்களூர்) சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அங்கு சென்றோம். நாங்கள் சென்ற போது மதியம் 12.30., கும்பல் இருந்தது. சாப்பிட்டு விட்டு வரும்பொழுது மாடிப்படிகளில் இறங்க முடியாத அளவிற்கு கும்பல். விடுமுறை நாட்கள் என்றால் அப்படித்தான்.

   Delete
  2. வருகைக்கு நன்றி. 

   Delete
 8. இதற்கு எல்லாம்
  அவர்கள் அப்படிச் சொன்னார்கள்..
  இவர்கள் இப்படிச் சொன்னார்கள்..
  என்று தேடி அலைய வேண்டியதில்லை...

  பாரம்பரிய உணவிலிருந்து மாறு.. எனும் போதே அங்கே வஞ்ச வலை விரிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்...

  குளியலறைக்குள் வந்து பற்பசையில் உப்பு இருக்கிறதா.. என்று கேட்கும் ஒன்றே உதாரணம்...

  நம்மை நமது பழக்க வழக்கங்களில் இருந்து விரட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பவை இன்றைய ஊடகங்கள்...

  பிளாஸ்டிக் இலை பற்றியும் விளம்பரம் போடுவார்கள்.. வாழையிலையின் குணநலன்களையும் போடுவார்கள்...

  ReplyDelete
  Replies
  1. பாரம்பரிய உணவிலிருந்து மாறு.. எனும் போதே அங்கே வஞ்ச வலை விரிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.//இப்போது மக்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது. வருகைக்கு நன்றி.   

   Delete
 9. உண்மைதான், குட்டையைக் குழப்பி விடுவதைப்போல நாளுக்கு நாள் ஒவ்வொன்றைக் கண்டு பிடித்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. என்னைப்ப்பொறுத்து எதையும் கவனிக்காமல், நமக்கு எது ஒத்துப்போகிறதோ அதை அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம்தான், உடல்பயிற்சியும் முக்கியம்.

  //இரவில் அரிசி சாப்பிடக் கூடாது என்பவர்கள் கரீனா (கபூர்) கானைப் பாருங்கள். அவர் இரவில் தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார்.//
  சாப்பிடுவது பிரச்சனை இல்லை, அளவில்தான் பிரச்சனை நமக்கு... கரீனா கபூர் எத்தனை ஸ்பூன்கள் உண்ணுவார் எனக் கேட்க வேண்டும்:)... நம்மவர்கள் அகப்பைக் கணக்கில் எல்லோ உண்ணுகிறார்கள்:))

  ReplyDelete
  Replies
  1. சரியான பாய்ண்டைப் பிடித்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் மகன், மருமகள் இரண்டு பேரும் ஒரு கப்பில் அளந்துதான் சாப்பிடுகிறார்கள். அதனால் சாதம் வைக்கவே பயமாக இருக்கிறது.வருகைக்கு நன்றி. 

   Delete
 10. தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார்.//
  சாப்பிடுவது பிரச்சனை இல்லை, அளவில்தான் பிரச்சனை நமக்கு... கரீனா கபூர் எத்தனை ஸ்பூன்கள் உண்ணுவார் எனக் கேட்க வேண்டும்:)... நம்மவர்கள்// ahhaaaaa:}

  ReplyDelete
 11. உங்கள் பதிவும், பின்னூட்டங்களும் அருமை.
  மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.

  அதிரா சொன்னது போல்தான் என் கணவரும் சொல்வார்கள். நம் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் உணவே நல்ல உணவு.

  எங்கள் வீட்டில் பாரம்பரிய முறைப்படி தான் சமையல். சாம்பார் என்றால் தொட்டுக் கொள்ளும் வகை வாழைக்காய், உருளை காரக் பொரியல், மாறும். வத்தல் குழம்பு என்றால் பருப்பு சேர்த்து கூட்டு, பருப்பு துவையல் என்று இருக்கும், புளிக்குழம்பு என்றால் கோஸ் பருப்பு உசிலி, பீன்ஸ் பருப்பு உசிலி , பருப்பு, தேங்காய் போட்ட துவரன்கள்.

  ஒரு நாள் புளி இல்லா குழம்பு, (பொரிச்ச குழம்பு) அதற்கு எண்ணெய் கத்திரிக்காய் வதக்கல். குழம்பில் பிஞ்சு அவரை, பிஞ்சு முருங்க்கைகாய் என்று இருக்கும். மோர்க்குழம்பு என்றால், வடை, வெண்டைக்காய், வெள்ளைபூசணி என்று இருக்கும்.
  ஒரு நாள் காய்கறிகள் போட்டு சொதி,(தேங்காய் பால் குழம்பு)

  உணவில் பாவைக்காய், சுண்டைக்காய், மணதக்காளி, என்று சேர்த்துக் கொள்வோம்.
  ஆறு சுவைகளும் அளவோடு உண்டால் நலம் என்று உண்டார்கள்.

  இப்போது உணவு முறை, பழக்க வழக்கம் எல்லாம் மாறி விட்டது.
  நாம் பார்த்து கொண்டு இருக்கும் காலம்.

  ReplyDelete
  Replies
  1. You have a very good sense of cooking.

   நானும் ஒரு நாள் சாம்பார், ஒரு நாள் புளிக்குழம்பு, ஒரு நாள் பொரித்த குழம்பு, ஒரு நாள் துவையல், மோர்க்குழம்பு என்று செய்வேன். கீரை வாரத்தில் இரண்டு நாட்களாவது இருக்கும்.
   //நாம் பார்த்து கொண்டு இருக்கும் காலம்.)// உண்மை! மாற்றங்களை தவிர்க்க முடியாது. வருகைக்கு நன்றி.

   Delete
 12. காலம் மாறுகிறது வரதட்சிணை ஆணுக்கோ பெண்ணுக்கோ அதுஅவரவர் இனத்தைப் பொறுத்தது அது பல இடங்களில் மாறுபடும் நாமனுபவிப்பதை அது இப்படித்தான் என்று சொல்ல முடியாது

  ReplyDelete
 13. வரதட்சணையைப்பற்றி இந்த கட்டுரையில் எதுவும் குறிப்பிடவில்லையே..? வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. சிந்திக்க வேண்டிய தகவல்கள்...

  ReplyDelete
 15. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. இப்போது இல்லை.. பத்து வருடங்களாகவே திருமணத்திற்கு பெண் கிடைப்பதே கஸ்டமாகத்தான் உள்ளது முன்பெல்லாம் தெரிந்தவர், அறிந்தவர் வீட்டு திருமணங்களில் கலந்து கொள்ளும் போதே, ஒரு கல்யாண வயதில் வீட்டில் பெண்களோ , பையன்களோ இருப்பதை அவரவர்கள் விசாரித்து தெரிந்து கொண்டு அங்கேயை மனம் ஒப்பி ஜாதகங்கள் பரிமாற்றம் என அடுத்தடுத்து நிலைகள் கை கூடும். இப்போது வேலைக்குப்போகும் பெண்கள், பையன்கள் அதிகமாகி விட்டதால், அதுவும் வெவ்வேறு ஊர்களில், /நாடுகளில் என்று ஆன பிறகு, அவர்களை கலந்தோசிக்காமல் பெற்றோர்கள் எதுவும் பேசுவதில்லை. திருமணங்களுக்கு முன்பு மாதிரி இரு தினங்களுக்கு முன்பே சுற்றங்களும் கூடுவதில்லை. மூகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டாக்குப் பின் அவரவர்கள் அவரவர்கள் ஊர்களுக்கு பறந்து விடுகின்றனர். காலம் வெகுவாக மாறி விட்டது.

  சாப்பாட்டு விஷயங்களும், ரொம்பவே மாறி விட்டது. அவர்கள் செய்வத்தான நியாயம் என்கிற மாதிரி நடந்து கொள்கின்றனர். சுவாரஸ்யமான சிறப்பான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 16. மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது... நல்ல மாற்றங்களை ரசிப்போம்.

  ஓட்ஸ் உப்புமா! சுலபமாக இருக்கிறது செய்முறை! செய்து பார்க்கத் தோன்றுகிறது.

  சுட்டி வழி பாடல் கேட்டே(பார்த்தே)ன். நன்று.

  ReplyDelete
 17. நன்றி வெங்கட்!  நீங்கள் மட்டும்தான் பாடல் கேட்டீர்கள் போலிருக்கிறது. ஓட்ஸ் உப்புமா சேது பாருங்கள்.

  ReplyDelete
 18. மன்னிக்கவும் செய்து பாருங்கள் என்று வாசிக்கவும். 

  ReplyDelete