அதெல்லாம் ஒரு காலம், தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள், இதோடு தீபாவளி மலர்களும் இடம் பிடித்த காலம். தீபாவளி மலர்கள் விலை அதிகம் என்பதால் வீட்டில் வாங்க மாட்டார்கள். யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீடுகளில் அதைப் பார்க்கும் பொழுதே கை துறுதுறுக்கும். அவர்களோ அதை தொட விட மாட்டார்கள். அவர்கள் கவனிக்காத பொழுது, நைசாக புரட்டி விட்டு கீழே வைத்து விட வேண்டும். அவர்கள் வீட்டில் எல்லோரும் படித்த பிறகுதான் படிக்க கொடுப்பார்கள். சில சமயங்களில் ஒரு மாதம் கூட ஆகி விடும்.
அந்தக் காலத்தில் சில்பி அவர்கள் வரைந்த தெய்வ உருவங்களில் பங்காரு காமாட்சியும், சிக்கல் சிங்காரவேலனும் பலர் வீடுகளில் படங்களாக சட்டமிடப்பட்டு பூஜையறையில் இடம் பெற்றிருந்தன. ஒரு காலத்தில் முழு பக்கத்தை ஆக்கிரமித்த சில்பி அவர்களின் ஓவியங்கள் மொத்தமாக ஒரே பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. சில்பி அவர்களை நினைவு கூர்ந்திருப்பவர் தற்கால ஓவியர் பத்மவாசன்.
1998ஆம் வரும் ஏதோ ஒரு பத்திரிகை(தினமலர் என்று நினைவு) அவர்களுடைய தீபாவளி மலரில் பரிசு கூப்பன் ஒன்றை இணைத்து அதை நிரப்பி அனுப்புகிறவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு என்று அறிவிக்க, அதை தொடர்ந்து வேறு சில பத்திரிகைகளும் இப்படி பரிசுகளை அறிவித்தன. கடைசியில் இப்படி பரிசுகள் வழங்கக்கூடாது என்று ஹை கோர்ட் தடை உத்தரவு போட்டது. அந்த பரிசு தொகைக்காக நிறைய பேர்கள் தீபாவளி மலர்களை முன் கூட்டியே புக் பண்ணினார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு 2019ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலர்
வாங்கினேன். நிறைய மாற்றங்கள். முதலில் சைஸ்! பழைய ஆ.வி. போல அத்தனை பெரிதாக இல்லை. உள்ளடக்கத்திலும் நிறைய வேறுபாடு. கதைகள் மொத்தம் மூன்றுதான், அவையும் பிரபலமானவர்கள் எழுதியது இல்லை. ஆனால் நன்றாக இருக்கின்றன. நிறைய நேர்காணல்கள்.
கவிஞர் யுகபாரதியின் பேட்டியில்,"பழைய படங்களில் தத்துவ பாடல்கள், நகைச்சுவை பாடல்கள் என்று நிறைய வகைகள் இருக்கும். இன்றைய சினிமாவில் அந்த மாதிரி சவால்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, " இன்றைக்கு மனோ நிலையில் நிறைய மாற்றங்கள், அன்றைக்கு மாதிரி இல்லை என்று நினைப்பதே சமூகத்துக்கு விரோதமானது. தேவைகளும், ஆசைகளும் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் புறக்காரணிகள் என்னவோ அவைதான் சினிமாவில் கான்பிக்கப் படுகின்றன. சமூகமே அப்படி இல்லை, பாடலில் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார். பத்திரிகைகளும் இதற்கு விலக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது.
அடுத்து நான் படித்தது துக்ளக்கின் பொன் விழா ஆண்டு சிறப்பு மலர். இதை துக்ளக்கின் பொன் விழா ஆண்டு சிறப்பு மலர் என்பதை விட, சோ நினைவு மலர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அட்டை டு அட்டை சோ தான்.
வேளுக்குடி கிருஷ்ணன், ஸ்டாலின், ஜி.கே.வாசன், லேனா தமிழ்வாணன், எஸ்.பி.முத்துராமன் போன்ற பல்துறை பிரமுகர்கள் சோவை பாராட்டி எழுதியிருக்கும் கட்டுரைகள், இந்திராகாந்தி படுகொலை, பார்பரி மஸ்ஜித் இடிப்பு போன்ற சம்பவங்களை குறித்து துக்ளக்கில் வெளிவந்த தலையங்கம், சுவாரஸ்யமான கேள்வி பதில்கள், அவரது ஆன்மீக கட்டுரைகள் துக்ளக்கில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் போன்றவை தொகுத்து தரப்பட்டிருக்கின்றன.
துக்ளக்கில் வெளியான சினிமா விமரிசனங்களில் ஒன்றிரெண்டை வெளியிட்டிருக்கலாமோ? துக்ளக்கில் ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவதோடு அதன் இயக்குனரிடமும் பதில் வாங்கிப் போடுவார்கள். பெரும்பாலானவர்கள் அதை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளாததால் நிறுத்தி விட்டார்கள். அவள் ஒரு தொடர்கதை பட விமர்சனத்திற்காக கே.பாலச்சந்தருக்கும், சோவுக்கும் நடந்த விவாதம் இன்னும் நினைவில் இருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு சோ நல்ல நண்பர் என்பது தெரியும். கருணாநிதிக்கும் அவர் சிறந்த நண்பர் என்று பலரும் கூறியிருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பி. சிதம்பரத்தின் அறிவையும், சட்ட ஞானத்தையும் சிலாகித்து எழுதிய சோ அவருடைய வெற்றி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்றும் கூறியிருக்கிறார். இப்போது இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ? ராஜீவ் காந்தி நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். பேசும் பொழுது அதிகாரத்திமிரோ, ஆணவமோ கொஞ்சம் கூட இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதிவீரராமபாண்டியர் கூறிய "மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்' வள்ளுவர் கூறியது" என்று அனந்தநாயகியும், "இல்லை ஒளவையார் கூறியது" என்று கருணாநிதியும் சட்டசபையில் சண்டை போட்டுக் கொண்டதை, சட்டசபையில் தமிழ் விளையாடுகிறது என்று அவர் கிண்டல் செய்திருப்பது அவருக்கே உரியது.
மற்றவர்களை மட்டுமல்ல தன்னையே கேலி செய்து கொண்டு கார்ட்டூன் |
தி.மு.க. திருந்தவே இல்லை |
இன்று கமல், அன்று சிவாஜி |
துக்ளக்கின் முதல் இதழ் வெளியானவுடன் அதற்கு கடிதம் எழுதிய வாசகர்களுள் நம் எங்கள் பிளாக் ஆசிரியர் திரு. கௌதமனும் ஒருவர். சோவை கிண்டலடித்து அவர் எழுதியிருந்த கடிதம் பிரசுரமாகியிருக்கிறது. ஒரு சரித்திர புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார். மொத்தத்தில் சுவாரஸ்யம்!
சிறப்பு. தீபாவளி மலர்களை முன்னர் ஆர்வமாகப் படிப்பேன். இப்போது அந்த ஆர்வம் அறவே இல்லை. ஆக்கபூர்வமான உள்ளடக்கங்கள் இப்போது அவற்றில் கிடையாதே?
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பதிவுகள் தம்பட்டம் – பதிவுத் தொகுப்பு 17.02.2020 எமது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி! மிக்க நன்றி!
Deleteநான் முன்பு வெகுகாலமாக துக்ளக் படித்துக் கொண்டு இருந்தேன் காரணம் நான் அறிவாளி ஹி.. ஹி.. ஹி..
ReplyDeleteபிறகு முரசொலி படித்தேன் ஹி.. ஹி.. ஹி..
இப்போது என்ன படிக்கிரீர்கள்? நன்றி.
Deleteநான் இந்த விளையாட்டிற்கு வரலை...!
ReplyDeleteஹா! ஹா!
Deleteஇந்த மாதிரி தீபாவளி மலர்களில் முந்தைய சுவாரசியம் இல்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவரும் விஷயங்கள் நமக்கு முன்னமே தெரிவதும், வெறும் சினிமா, அக்கப்போர் என்று விஷயமில்லாமல் மலர்கள் வெளிவருவதும் காரணம் என நினைக்கிறேன்.
ReplyDeleteஒரு வருடத்தில் தி இந்து முதல்கொண்டு அனைத்து மலர்களையும் வாங்கி, தி இந்து சிறப்பாக இருந்ததாக எண்ணினேன்.
துக்ளக்கின் 50 ஆண்டு மலர் - எங்க கிடைக்குதுன்னு பார்க்கணும்.
ஆமாம், பெரும்பாலும் சினிமா செய்திகள். ஓரு வேளை நாம் வளர்ந்து விட்டோமோ..?;)
Deleteதுக்ளக் ஆண்டு மலர் நான் முன் பதிவு செய்து வாங்கினேன்.
நன்றி!
Deleteமுந்தைய தீபாவளி மலர்கள் சிலவற்றை தில்லி தமிழ்ச் சங்க நூலகத்தில் எடுத்து படித்தேன் - சில பொக்கிஷங்களைப் பகிர்வாகவும் எனது பக்கத்தில் தந்திருக்கிறேன். இப்போது தமிழ் வார/மாத இதழ்களைப் படிப்பது இல்லை - எப்போதாவது நூலகத்தில் திருப்புவதோடு சரி.
ReplyDeleteவாரப் பத்திரிகைகளில் ஸ்வாரஸ்யம் குறைந்து விட்டது நிஜம்தான். வருகைக்கு நன்றி.
Deleteமலர்களைப் பற்றி மலர்ந்த நினைவுகள் எல்லாம் அருமை. எங்க அப்பா வீட்டிலோ அல்லது நாங்களோ வாரப் பத்திரிகைகள் வாங்கி இருக்கோம். ஆனால் தீபாவளி மலர் எல்லாம் வாங்கியதில்லை. குமுதத்தில் தனியாக மலர்னு வெளியிடாமல் அந்த வாரத்துக் குமுதம் பத்திரிகையே குனேகா சென்ட் தடவிக்கொண்டு அதிகப் பக்கங்களோடு வரும். அதை வாங்கிப் படித்தது தான்! சில பழைய தீபாவளி மலர்களை என் சித்தப்பா எனக்குக் கொடுத்திருக்கார். அதில் ஒன்றிரண்டு இன்னமும் வைத்திருக்கிறேன்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. குனேகா செண்ட் தடவிக்கொண்டு குமுதம்..!! ஆஹா! இப்போது கூட அவர்கள் தனியாக தீபாவளி மலர் போடுவதில்லை. தீ.மலரில் எனக்குப் பிடித்த அம்சம் பழைய எழுத்தாளர்களின் கதைகள். அது இல்லாத பொழுது சுவைக்கவில்லை.
Deleteஇந்தக் கட்டுரை எழுததோன்றிய காரணம் என் பேஸ்புக் பதிவா என்று அறிய விரும்புகிறேன். அந்தக் காலத்திலொரு லட்ச ரூபாய் மட்டும் இல்லை, கார், கனவு இல்லம் என்று ஏகப்பட்ட ஆபர்கள்கொடுத்தார்கள். எங்கள் அலுவலகத்தில் மொத்தமாக புக் செய்து புத்தகங்கள் வாங்கினார்கள். சிலர் லாட்டரி சீட்டு போல இரண்டு புக் கூட (ஒரே புத்தகத்தையே) வாங்கினார்கள். தினகரன், தினமலர் என்று பரிசு அறிவித்த அதனை புத்தகங்களும் புக் செய்யப்பட்டன. நானும் இரண்டு வாங்கினேன்! (வெவ்வேறு புத்தகங்கள்)
ReplyDelete//இந்தக் கட்டுரை எழுததோன்றிய காரணம் என் பேஸ்புக் பதிவா என்று அறிய விரும்புகிறேன்.// இல்லை. 'தாமிரபரணி என்னும் தோழி' புத்தக விமர்சனத்திலேயே மூன்று புத்தகங்கள் படித்தேன் என்று குறிப்பிடிருந்தேன். அதன் பிறகு, நீங்கள், வல்லி அக்கா போன்றவர்கள் தீபாவளி மலர் பற்றி முகநூலில் எழுதியிருந்தீர்கள். க்ரேட் பீபிள் திங்க் அலைக்!
Deleteதீபாவளி மலர்கள் என்றால் ஒரு வழக்கமான பார்மேட் வைத்திருந்தார்கள். சிலர் கங்கை நீர் எல்லாம் கொடுத்தார்கள்.
ReplyDeleteகுமுதம் பக்தி கங்கை நீர் வழங்கினார்கள் என்று நினைக்கிறேன்.
Deleteக கோ கௌதமன் என்பதற்கு பதில் க கொ கௌதமன் என்று பிரசுரித்து விட்டார்கள்! இந்தப்புத்தகம் என் சகோதரர் வாங்கி இருக்கிறார். முதலில் முன்னரே முன்பதிவு செய்பவர்களுக்குதான் புத்தகம் என்று சொன்னார்கள். ஆனால் புத்தகத்திருவிழாவில் கிடைத்ததாய் நண்பர் ஒருவர் வாங்கி வந்து தந்தார்.
ReplyDelete//ஆனால் புத்தகத்திருவிழாவில் கிடைத்ததாய் நண்பர் ஒருவர் வாங்கி வந்து தந்தார்.// அப்படியா? வருகைக்கும், மீள் வருகைகளுக்கும் நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது. படித்ததும், ரசித்ததும், பகிர்ந்ததும் சிறப்பு. தீபாவளி மலர் எல்லாம் எப்போதோ படித்தது. எனக்கு படிக்கும் ஆர்வமிருந்தும் வீட்டில் வாங்கும் ஆர்வம் கிடையாது. நீங்கள் மலரில் கூறிய விஷயங்களை நானும் கேள்விபட்டுள்ளேன். (கங்கை நீர்) எப்போதோ ஒரிரு தடவை அம்மா வீட்டில் இருக்கும் போது வாங்கிய மலரில் சில்பியின் தத்ரூபமான ஓவியங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். தற்சமயம் வலைத்தளம் மூலமாக ஓய்வு நேரத்தில் எழுத்துகளை எழுதியும், படித்தும் ரசித்ததும் வருகிறேன். தங்கள் பதிவின் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.
Delete