கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 17, 2020

விடுமுறை விளையாட்டுகள்

 விடுமுறை விளையாட்டுகள் 


இப்போது லாக் அவுட் பீரியட். எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம். இந்த வருட கோடை  விடுமுறையை  வீட்டிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் குழந்தைகளுக்கு. இல்லாவிட்டால் அவர்களை ஏதாவதொரு சம்மர் வகுப்பில்  சேர்த்து விட்டிருப்பார்கள். 

எங்கள் காலத்தில் கோடை வகுப்புகள் கிடையாது. பெரும்பான்மையான குழந்தைகள் தாத்தா,பாட்டி வீட்டிற்கு, அதாவது கிராமத்திற்கு அனுப்பப் படுவார்கள். அல்லது நாம் வீட்டிற்கு வரும் உறவினர்களோடு நேரத்தை கழிப்போம்.

காலையில் பழையது பிசைந்து போடப்படும். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், அல்லது மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய். அதன் பிறகு மதியம் சாப்பிடும் வரை எங்கள் நேரம்தான். மதிய சாப்பாட்டிற்குப் பிறகு பெரியவர்கள் சற்று தலையை சாய்க்க, நாங்கள் கல்லாங்காய், புளியங்காய், பல்லாங்குழி, தாய கட்டம், கேரம், வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமல் சீட்டாட்டம்(ரம்மி, ஆஸ், ட்ரம்ப்), மாலை முழுவதும் தெருவில் விளையாட்டு என்றுதான் பொழுது கழியும்.

வீட்டில் விளைந்த புளியங்காய்களை வெயிலில் காய வைத்து ஒரு சிறு சுத்தியலில் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு லேசாக தட்டினால் புளியங்கொட்டை வெளியே வந்து விடும். அவைகளை கூறுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். (ஒரு கூறில் அறுபது நான்கு காய்கள்.) அந்த காய்களை தரையில் கொட்டி, கையில் இருக்கும் புளியம் விதைகளில் ஒன்றை மேலே தூக்கிப் போட்டு, அது கீழே வருவதற்குள்  கீழே  இருக்கும்  காய்களுள் ஒன்றையோ, பலவற்றையோ அருகில் இருக்கும் காய்கள் அசங்காமல் எடுக்க வேண்டும்.  கையில் ஏழு காய்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். எட்டு காய்கள் சேர்ந்து விட்டால்  அதை கீழே வைத்து விடலாம். சில எக்ஸ்பர்ட்டுகள் நிறைய காய்களை கையில் வைத்துக் கொண்டு  அத்தனையையும் மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவார்கள். 
அதை தவற விட்டாலோ, கீழே ஏதாவது காய் நகர்ந்து  விட்டாலோ  எல்லா  காய்களையும் கீழே போட்டு விட வேண்டும்.  யார் நிறைய கூறுகள்  எடுக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். 

இதில் திறமை இல்லாதவர்கள் புளியம் விதைகளை வைத்துக் கொண்டு ஒத்தையா? ரெட்டையா? பம்பையா? பரட்டையா? விளையாடுவோம். அதில் புளியம் விதைகளை தரையில் பரப்பி வாயால் மூன்று முறை ஊத வேண்டும்.  அப்போது வெளி வரும் காய்களை மற்ற காய்கள் அசங்காமல் சேகரித்துக் கொள்ள  வேண்டும். பின்னர் அதிலிருந்து குறிப்பிட்ட அளவு காய்களை அடுத்தவருக்கு காட்டாமல் எடுத்து கையில் மூடி வைத்துக் கொண்டு ஒத்தையா?ரெட்டையா? பம்பையா?பரட்டையா? என்று கேட்க வேண்டும். அடுத்த ஆசாமி கணித்து சொல்ல வேண்டும். ஒத்தை என்றால் காய்கள் ஓற்றைப் படையில் இருக்கிறதா? என்றும் ரெட்டை என்றால் ரெட்டைப் படையில் இருக்கிறதா? என்றும் பாம்பை என்ற்றால் காய் இல்லாத வேறு பொருள் உதாரணமாக ஒரு பேப்பர் துண்டு, அல்லது கல் இப்படி, பரட்டை என்றால் வெறும் கை. அவர் சரியாக கணித்து விட்டால்  கையில் இருக்கும் காய் அவருக்கு, தவறாக கணித்தால் அதே அளவு காய்களை நமக்குத் தர வேண்டும். அதிகம் புளியங்காய்களை சேர்ப்பவரே வெற்றியாளர்.

மேற்சொன்னவை மதிய நேர விளையாட்டுகள். மாலையில்  ஐ ஸ்பை,  கொக்கோ,நொண்டி, பாண்டி  என்று விளையாடுவோம். இவையெல்லாம் எட்டாம் வகுப்பு வரைதான். அதன் பிறகு கிராமம் அலுத்து விட்டது. அங்கு விடுமுறைக்கு வரும் தோழர்கள் குறைந்து விட்டார்கள்.   

புளியங்காய், கல்லாங்காய் பல்லாங்குழி போன்றவை சாத்வீக  விளையாட்டுகள்தான் (தோற்றுப்போனவரை உட்கார வைத்து "சோபான சொக்கப்பான, ஊரான் வீட்டுக்கு போவான, ஊச வடைய தின்பான" என்று கலாட்டா செய்யும் லேசான வன்முறை இருந்தாலும்) . சீட்டாட்டமும், தாய
கட்டமும்  இருக்கிறதே...  சண்டை இல்லாமல்  சுமுகமாக  முடிந்ததாக  வரலாறே இல்லை. 

அநேகமாக எல்லா கோடை விடுமுறைகளிலும்  'பொன்னியின்  செல்வனும், அப்புசாமி கதைகளும் படித்திருக்கிறேன். படிக்க வேறு எதுவும் கிடைக்காத பொழுது தாத்தா வைத்திருந்த பெரிய  எழுத்து பக்த விஜயம் படித்தேன். காலையும் மாலையும் சாய் பஜன் கூட செய்தோம். 

இந்தக் கால குழந்தைகளின் அனுபவம் வேறு. அதை  அவர்கள் எழுதும் பொழுது தெரிந்து கொள்ளலாம்.


38 comments:

  1. சுவாரஸ்யமான விளையாட்டுகள் - அதாவது அதை அப்போது அனுபவித்தவர்களுக்கு! இப்போது இருப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யங்கள் தெரியாமல் போகலாம்

    ReplyDelete
  2. இப்போதைய குழந்தைகள் குறிப்பாக நகரங்களில் இவற்றை எல்லாம் விளையாடுகிறார்களா என்பது கேள்விக்குறி.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் இல்லை. அவர்கள் உலகம் வேறு.

      Delete
  3. பல்லாங்குழி, தாயம் நானும் ஆடி இருக்கிறேன். அதைத்தவிர வேறு சில முரட்டு விளையாட்டுகள், கோலி குண்டு, கிட்டிப்புள் போன்றவை. பின்னாளில் கிரிக்கெட், கொஞ்சமே கொஞ்சம் கால்பந்து!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம். 

      Delete

  4. பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம் விளையாடி இருக்கிறோம் நாம் ஜெயித்தாலும் தோற்றாலும் தின்பத்ற்கு திண்பண்டங்கள் நிச்சயம்..


    பள்ளி பருவ சமயத்தில் மதுரை ரயில்வே காலனியில் வசித்து வந்தோம் அப்போது எங்கள் கீழ்வீட்டில் இருந்தவர்கள் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் 2 ஆண் குழந்தைகள் அவர்கள் வீட்டில்தான் எங்கள் நேரத்தை செலவிட்டு விளையாடுவோம் அவர்கள் வீட்டில் உள்ள 5 பேர்கள் + அந்த மாமி மற்றும் எங்கள் வீட்டில் இருந்து என்னை சேர்த்து 4 சகோதரகள் மற்றும் மேலும் சில குழந்தைகள் சேர்ந்து கார்ர்ட்ஸ் வீளையாடுவோம் அந்த நாட்கள் வாழ்வில் பசுமையான நாட்கள் நீங்கள் இப்போது விளையாட்டை பற்றி சொன்னதுதும் அது நினைவிற்கு வந்துவிட்டது..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

      Delete
  5. மகளுக்கு பல்லாங்குழி வாங்க சென்னையில் அலைந்தேன் ..ஒரு இடத்தில மட்டுமே இருந்தது ஆனா பாலிஷ் செய்யாம கர சொறன்னு இருந்ததால் வாங்கலை .பாண்டி நொண்டி மங்கி எல்லாம் நாங்க விளையாடியது  அதைவிட அதிகம் பறவை நாலுகாலுடன் டைம் ஸ்பென்ட் பண்ணினது .இப்போ மகளுடன் மெமரி ,uno monopoly  லூடோ ஸ்நேக் அண்ட் லேடர் எல்லாம் விளையாடறோம் :)அழகான நினைவுகளை பகிர்ந்திருக்கிங்க பானுக்கா .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல். பல்லாங்குழி வேண்டுமா? அடுத்த முறை ஸ்ரீரங்கம் செல்லும் பொழுது வாங்கி வைக்கிறேன். UNO எனக்கும் பிடித்த விளையாட்டு. 

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. பால்ய கால நினைவுகளை அழகாக மீட்டி விட்டு விட்டீர்கள். அப்போது தொலைக்காட்சி கிடையாது. ரேடியோ மட்டுந்தான். ஆனாலும் அதில் எப்போதும் கேட்கும் அளவுக்கு அந்த சிறு வயதில் சுவாரஸ்யம் வராது. எங்காவது கோவில், அல்லது விஷேடங்களில், ஒலி பெருக்கி வைத்தால் அதை கேட்இரண்டாவதாக அப்போது ரேடியோ வீட்டில் வாங்கி இருந்தால்தானே..! கேட்கும் வயதில் வாங்கிய பொழுதில், "எப்போதும் என்ன ரேடியோ?" என்ற விமர்சனம் வீட்டில் வரும்.

    பல்லாங்குழி, தாயக்கட்டம், கல்லாட்டம் ஆடி பொழுதைப் போக்கிய காலங்கள் இனிதானவை. இப்போது அதையெல்லாம் சொல்லத்தான் முடியும்.இப்போதுள்ள குழந்தைகள் இதையெல்லாம் விரும்புமா எனத் தெரியவில்லை. அவர்களின் மனப் போக்குகளே தனி. சுவையான பதிவு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரேடியோவில் சினிமா பாட்டு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டுமென்றால் மிகவும் மெலிதாக வதுதான் கேட்க வேண்டும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
  7. தாயக்கட்டம் தான் நமக்குச் சரியானது....

    அந்த நாட்களில் ஆழ்ந்து விட்டது மனம்..

    ReplyDelete
  8. இன்றைக்கு அனைத்தும் கனவு தான்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டி.டி. நமக்கு கனவு. இன்றைய குழந்தைகளின் உலகம் வேறு. நன்றி. 

      Delete
  9. ஸ்வாரஸ்யம். எங்கள் வீட்டிலும் சிறு வயதில் இப்படி நிறைய் அவிளையாடி இருக்கிறோம். என் அம்மா சில சமயம் என் மகளுடன் விளையாடி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இதை விளையாட ஒருவரும் முன்வருவதில்லை! எல்லாம் அலைபேசியிலும் தொலைகாட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்!

    ஸ்வாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  10. இந்தக் கால குழந்தைகளோடு விளையாட வேண்டுமென்றால் அவர்களின் விளையாட்டை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி. வெங்கட். 

    ReplyDelete
  11. இன்று பல வீடுகளில் தாயக்கட்டையும், பல்லாங்குழியும் விளையாட வைத்து விட்டது கொரோனா.

    ReplyDelete
    Replies
    1. கொரோனவால் விளைந்த நன்மைகளுள் இதுவும் ஒன்று. நன்றி சகோ.

      Delete
  12. பானுககா ஆஹா எல்லாம் எவ்வளவு விளையாடியிருப்போம் ஊரில்.

    அப்புறம் வயல் போவது, அங்கு பாம்புகள் கண்டு விளியயாடுவது...பிடிக்க மாட்டோம்...அது வளையில் இருந்து எட்டிப் பார்க்கும். எத்தனை பாம்புகள் ஒவ்வொருவர் கண்ணிலும் படுகிறது என்று. பெரும்பாலும் எனக்குத்தான் நிறைய படும் ஹா ஹா ஹா

    அது போல நண்டு, தவளை...அப்புறம் மாங்காய் அடிப்பது, மரத்தில் ஏறிப் பறிப்பது நான் தான் ஹிஹிஹி...ஆற்று நீரில் கல்லை ஒரு விதமாக எரிவது அது தண்ணீரின் மேலே அழகாகத் தண்ணீரை தெறித்துக் கொண்டு போகும் யார் கல் அது பாண்டி விளையாட யூஸ் செய்யும் கல் போல தட்டையாக ஓட்டுக் கல் போல ஆற்று மணலில் கிடைக்கும் அதை வைத்து விளையாடுவோம்.

    ஆமாம் புளியங்கொட்டை போல கல்லிலும் விளையாடியதுண்டு. பம்பை பரட்டை அதே அதே.

    ஆடுபுலி ஆட்டமும். மகனும் நானும் கூட ஆடு புலி ஆட்டம் வரை விளையாடியிருக்கோம் நான் விளையாடியது எல்லாம் அவனும். ஆனால் இப்போதைய குழந்தைகளுக்கு இதெல்லாம் மிஸ்ஸிங்க்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாம்புகளை எண்ணுவீர்களா? அம்மாடியோ! நினைத்தாலே பயந்து வருகிறது. 

      Delete
  13. பதிவு நிறைய நினைவுகளை எழுப்பிவிட்டது பானுக்கா!

    கீதா

    ReplyDelete
  14. உண்மைதான், வீட்டுக்குள் இருந்து இப்போ பழைய விளையாட்டுக்கள் விளையாடும் ஆசை வருகிறது, இருப்பினும், இந்த மூவி, யூ ரியுப் நிகழ்ச்சிகள் அவற்றைத் தடுக்கின்றனவே.... :))

    நான் பல்லாங்குழியைப் பார்த்ததில்லை நேரில்... விளையாடவும் தெரியாது...

    ஆனா வேறு எவ்வளவோ விளையாட்டுக்கள் விளையாடினோம்.. இப்போ நினைவிலில்லை, ஸ்னேக் அண்ட் லடர் உம், மொனோபிளேயும்தான் பெரியவர்களோடு விளையாடியது...

    மற்றும் முற்றத்து மணலில் கோடு கீறி, கிட்டிப்பொல்லு, எட்டுக்கோடு.. இப்படி எல்லாம் விளையாடி இருக்கிறேன், இப்போ பிள்ளைகளைக் கூப்பிட்டால் முறைப்பார்கள் ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. // இந்த மூவி, யூ ரியுப் நிகழ்ச்சிகள் அவற்றைத் தடுக்கின்றனவே.... :))// Correct.
      இப்போதைய குழந்தைகள் செல் போனிலும், கம்யூட்டரிலும் அதிகம் விளையாடுகிறார்கள். நன்றி அதிரா. 

      Delete
  15. இந்த விடுமுறையை நன்றாக அனுபவிக்கிறாள் என் அண்ணன் பேத்தி.
    என் அண்ணன் பேத்தி, என் அண்ணி, என் தங்கை(என் அண்ணன் வீட்டு பக்கம் என் தங்கை இருக்கிறாள்), என் அண்ணன் மருமகள் எல்லாம் தினம் விளையாடுகிறார்கள், தாயம், பல்லாகுழி, சீட்டு ,பாட்டுக்கு பாட்டு எல்லாம் .

    நான் என் பேரனுடன் காலை ஸ்கைப்பில் ஏதாவது விளையாட்டு அவன் கற்பனையில் உயிர் பெறும் அதை காட்சிப் படுத்தி விளையாடுவான் அலுக்காமல்.

    என் இளமை பருவம் மிகவும் மகிழ்ச்சியான பருவம் மாலை முழுவதும் விளையாட்டு கோடை விடுமுறை முழுவதும் விளையாட்டுதான். விடுமுறைகுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் விளையாட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விடுமுறையை அனுபவிக்கிறார்கள் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

      Delete
  16. மாயவரத்தில் அக்கம் பக்கம் குழந்தைகள் எல்லாம் எங்கள் வீட்டில் தான் விடுமுறை என்றால் அவர்களுடன் கேரம், சீட்டு, டிரேட், பல்லாங்க்குழி, ஒத்தையா, இரட்டையா என்று புளியங்க் கொட்டை விளையாட்டு சைனீஸ் சக்கர் . முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.ஏன் குழந்தைகளுடன் விளையாடுவதைவிட
    என்னுடன் விளையாடதான் ஆசை படும் குழந்தைகள்.இப்போதும் குழந்தைகளுடன் விளையாட தயார் ஆனால் இங்குள்ள குழந்தைகள் வந்தால்தானே!

    ReplyDelete
    Replies
    1. //இப்போதும் குழந்தைகளுடன் விளையாட தயார் ஆனால் இங்குள்ள குழந்தைகள் வந்தால்தானே!//உண்மைதான்.இப்போதெல்லாம் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று விளையாடும் பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
  17. //சீட்டாட்டமும், தாய
    கட்டமும் இருக்கிறதே// அது ஒரு வசந்த காலம். இப்பொழுதும் என் மகளுடன் தாயம் விளையாடும் ஒவ்வொரு நாளும் சண்டை வரும் :)

    ReplyDelete
    Replies
    1. //இப்பொழுதும் என் மகளுடன் தாயம் விளையாடும் ஒவ்வொரு நாளும் சண்டை வரும் :)// எங்கள் அப்பாவுக்கு தாயகட்டம் ஆடுவது பிடிக்காது. ஏனென்றால் அதில் 'வெட்டு வெட்டு' என்னும் வார்த்தைகள் வருகின்றது. பல்லாங்குழியில் காசி,காசி என்று சொல்வதால் நல்ல வார்த்தையை சொல்லும் புண்ணியமாவது உண்டு என்பார். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
  18. எல்லாம் பொம்பளைங்க விளையாட்டா இருக்கே....

    தாயக்கட்டை நாங்களும் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல என் பையன் தாயக்கட்டை விளையாடும்போது, அவன் காயை வெட்டிவிட்டால், கோபித்துக்கொண்டு ஆட்டத்தை விட்டு எழுந்துவிடுவான். அது நினைவுக்கு வந்துவிட்டது. ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. //எல்லாம் பொம்பளைங்க விளையாட்டா இருக்கே..// சரியாக படிக்காமலே வந்து விட வேண்டியது கர்ர்ர்ர்ர்! சீட்டாட்டம், கேரம் எல்லாம் உங்கள் ஊரில் பெண்கள் மட்டும்தான் விளையாடுவார்களா? ..உங்களிடம் மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். சிறு வயதில் உங்கள் மகன் செய்ததை, நானும் என் சிறு வயதில் செய்திருக்கிறேன். (என் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்குவதில் என்ன ஒரு சந்தோஷம்!)நன்றி நெல்லை தமிழன். 

      Delete
  19. அநேகமாக எல்லா விளையாட்டுக்களும் தாத்தா வீட்டில் இருந்தப்போ விளையாடி இருக்கேன். தாயமும், பல்லாங்குழியும் அதிகம் விளையாடிய விளையாட்டுகள். என் குழந்தைகளோடும் அவர்களோடு விளையாட வரும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளோடும் தாயம், லூடோ, கார்ட்ஸ் எனப்படும் சீட்டாட்டம், பாம்புப்படத்தில் ஏறி இறங்குதல் என விளையாடுவோம். அந்தக் குழந்தைகள் எல்லாம் எங்க வீட்டுக்கு வரும்போதே மாமி, ஃப்ரீயா இருக்கீங்களா, விளையாடலாம் எனக் கேட்டுக் கொண்டு வருவார்கள். அதெல்லாம் ஒரு காலம்! இப்போதைய குழந்தைகளுக்கு இவை எல்லாம் என்னன்னே தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியதையேதான் கோமதி அரசும் கூறியிருக்கிறார்கள். 

      Delete
  20. இந்த விளையாட்டுகள் பற்றி முன்னர் பதிவுகள் பல போட்டிருக்கேன். அதில் குலைகுலையாம் முந்திரிக்கா, ஐ ஸ்பை, பூப்பறிக்க வருகிறோம், கல்லா மண்ணா? பாண்டி ஆட்டம், பாட்டுக்குப் பாட்டு, கட்டம் கட்டிப் பூர்த்தி செய்தல்னு எல்லாத்தையும் பற்றிச் சொல்லி இருந்தேன்.

    ReplyDelete
  21. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விளையாட்டுகளை நாங்களும்  விளையாடியிருக்கிறோம். ரப்பர் வளையல்களை கல்லாங்காய் போல் விளையாடுவதும் உண்டு. கோடை விடுமுறையில் அதிகம் விளையாடிய விளையாட்டுகளை மட்டும் குறிப்பிட விரும்பியதால் அவைகளை குறிப்பிடவில்லை. கருத்துக்கு நன்றி அக்கா.   

    ReplyDelete