கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, January 29, 2022

ஆயிரம் பொய் சொல்லி ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லி 

ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்


"தீர்க்க சுமங்கலி பவ

ஆயுஷ்மான் பவ, ஷேமமா இருக்கணும்.. சீக்கிரம் மாப்பிள்ளை வரட்டும்.."
தன்னை நமஸ்கரித்த சீதாராமனையும், அவன் மனைவி ஜானகியையும் ஆசிர்வதித்தார் ராம சுப்பு. 

எழுந்திருந்தவர்களிடம் "சக்குவோட ஜாதகம் எடுத்துட்டியா?"  

"எடுத்தாச்சு.. ஆனா ஒண்ணும் சரியா அமையல, ரெண்டு மூணு பேர் வந்து பாத்துட்டு, நிறம் மட்டுனு சொல்லிட்டு போயிட்டா, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இவளுக்கு
அப்புறம் இன்னும் ரெண்டு பேர் இருக்கா" கவலையோடு சீதாராமன் சொன்னார்.

"என்ன வயசாறது?"

"பதினெட்டு நடக்கறது.."

"எப்படி பாக்கற..?"

"நல்ல குடும்பமா இருக்கணும், அதான் முக்கியம்."

அது சரி, பையன் உத்யோகத்துல இருக்கணுமா? கிராமத்துல விவசாயம் பார்த்ததுண்டு இருந்தா பொண்ணு குடுப்பியா?"

"அதுக்கென்ன..? நீங்க பாத்து நல்ல பையன்னு சொன்னா போதாதா..?"

பக்கத்து ஊரு பட்டாமணியர் மஹாதேவன் என்னோட சிநேகிதன்தான். அவன் கடைசி பையனுக்கு பொண்ணு தேடிண்டிருக்கான், அவனுக்கு மூணு பசங்க, பெரிய பையன் தஞ்சாவூரில் வக்கீல், அடுத்தவன் பட்டணத்துல வேலையா இருக்கான். இவன் ஊரோடு தங்கி விவசாயம் பாக்கறான். அவாளுக்கு நூறு வேலி நிலம். மாமி நல்லவ, நம்பி கொடுக்கலாம்"

"நீங்க இவ்வளவு தூரம் சொல்றது போதாதா? நான் ஊருக்கு போய் ஜாதகம் அனுப்பறேன்.."

"அனுப்பறயா..?" என்ன யாருக்கோ மாதிரி பேசற? ஒரு நல்ல நாளாக பாத்து  கையோடு எடுத்துண்டு வா..
நாம நேர பாத்து ஜாதகத்தை குடுத்துட்டு பையன் ஜாதகம் வாங்கிட்டு வரலாம். பையனையும் நேர பாத்த மாதிரி இருக்கும். அப்புறம் பகவான் சித்தம்.." அவர் சொல்லி முடிக்க, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த நூறு வருட கடிகாரம் யாரென்று மணியடித்தது. 

"பாத்தியா? மணி அடிக்கிறது" என்றதும் சீதாராமனுக்கு சந்தோஷமாக இருந்தது.  ராமசுப்பு சொன்னபடியே ஒரு நல்ல நாளில் தன் பெண் சகுந்தலாவின் ஜாதகத்தை எழுதிக் கொண்டு, வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு ரஸ்தாளி வாழைப்பழம், கல்கண்டு, ஒரு பந்து மல்லிகைப்பூ இவைகளோடு ராமசுப்பு  வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து இருவரும் வில் வண்டியில் புறப்பட்டனர். 

"வில் வண்டி புதுசா வாங்யிருக்கேளா அத்திம்பேர்?"

"நம்ம மைனரோடது, சம்பந்தம் பேசப் போறோம், கொஞ்சம் கெளரவமா இருக்க வேண்டாமா?"

இவர்களைக் கண்ட பட்டாமணியம் ஆரவாரமாக வரவேற்றார். வாசலில் பளிச்சென்று கோலம் போடப்பட்டு செம்மண் இடப்பட்டிருந்தது. ஸ்வாமி அலமாரியில் பெரிய தஞ்சாவூர் ராமர் பட்டாபிஷேக படம். வெள்ளி குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, உள்ளிருந்து பட்டாமணியத்தின் மனைவி போர்த்திய தலைப்போடு வந்து, " வாங்கோ.. செளக்கியமா? மீனாட்சி குழந்தைகள் செளக்கியமா?" என்று சம்பிரதாயமாக விசாரித்து விட்டு சென்றாள்"

"எல்லாரும் செளக்கியம், ஒரு தாம்பாளம் கொண்டு வா"

அவள் கொண்டு வந்த பித்தளை தாம்பாளம் நன்றாக தேய்க்கப் பட்டு பளிச்சென்று மின்னியது. அதில் இவர்கள் கொண்டு சென்ற வெற்றிலை, பாக்கு, பழம், பூ  இவைகளை எடுத்து வைத்து அதன் மீது சீதாராமன் மகள் சகுந்தலாவின் ஜாதகத்தை எடுத்து வைத்து, "இவன் என் மச்சினன், இவன் பொண்ணு சகுந்தலாவை நம்ம விச்சுவிற்கு பார்க்கலாம்னு தோண்றது, இது சகுந்தலா ஜாதகம்" என்று தட்டை நீட்ட, அவர் அதை வாங்கி சாமிக்கு முன்னால் வைத்து விட்டு, "உட்காருங்கோ.." என்று ஊஞ்சலைக் காட்டினார். 
வந்தவர்கள் ஊஞ்சலில் அமர, அதற்கு எதிரே இருந்த பெஞ்சில் பட்டாமணியம் உட்கார்ந்தார். அவர் மனைவி மூன்று தட்டுகளில் கேசரியும், தட்டையும், ஒரு வெங்கல கூஜாவில் குடிக்க தண்ணீர் மற்றும் வெங்கல டம்ளர் கொண்டு வைத்தாள். 

"சாப்பிடுங்கோ.. " என்று வந்தவர்களை உபசரித்தவர் "ரொம்ப சந்தோஷம்! நீங்க ஜாதகம் கொண்டு வந்திருக்கேள், ஆனா நான் ஜாதகம் பார்க்கற வழக்கம் இல்லை.. ஸ்வாமி ட்ட உத்தரவு கேட்பேன், உத்தரவு கிடைக்கணும். என் மூணு பொண்கள், இரண்டு பசங்களுக்கும் அப்படித்தான் பண்ணினேன்"

"உத்தரவுனா எப்படி? பூக்கட்டி பார்க்கிறதா?"

"இல்லை யில்ல.. உனக்கு தெரியாதா ராமு, எனக்கு பேச்சியம்மன்தான் எல்லாம். நான் இந்த ஜாதகத்தை பிரிச்சு கூட பார்க்க மாட்டேன். கொண்டு போய் அம்பாள் காலடியில் வெச்சு அர்ச்சனை பண்ணுவேன். பிரகாரம் சுத்தி வரும்போது எனக்கு ஒரு மட்டை தேங்காய் கிடைச்சா உத்தரவு கொடுத்தூட்டாள்னு அர்த்தம்"

"மட்டைத் தேங்காயா..?" சீதாராமன் அவநம்பிக்கையோடு கேட்க, 

"ஆமாம், கிடைக்கும், கிடைச்சிருக்கே.." என்றார் அழுத்தமாக. "உங்களுக்கு ஜாதகம் பார்க்கணும்னா தாராளம பாருங்கோ.  அப்புறம் எனக்கு சொல்லுங்கோ, இப்போ இந்த காபியை குடிங்கோ, விச்சு உரம் வாங்க போயிருக்கான்.  இப்போ வந்துடுவான்.

காபியை குடித்து விட்டு அவர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார். மூன்று  கட்டு வீடு, கொட்டில் நிறைய கறவை மாடுகளும், காளை மாடுகளும். 
மாப்பிள்ளை பையனாக விஸ்வநாதனாகிய விச்சுவையும் அவர்களுக்குப் பிடித்தது. 

திரும்பி வரும்பொழுது, "என்ன அத்திம்பேர் என்னவோ சாமி உத்தரவு என்கிறாறே..?" 

"நீ முதலில் ஜாதகப் பொருத்தம் பாரு. யார்கிட்ட காட்டுவ?"

"நம்ம வேம்பு கிட்டதான்" 
பார்த்து ஜாதகம் பொருந்தி யிருக்கிறது என்று தகவல் அனுப்பினார்.

பட்டாணி யம் மஹாதேவன், "ரொம்ப சந்தோஷம். வர புதன் நாள் நன்னா இருக்கு. அன்னிக்கே பேச்சி அம்மன் கோவிலில் உத்தரவு கேட்டு விடுகிறேன். நீங்கள் யாராவது வர வேண்டும் என்றாலும் வரலாம்"  என்று கூற, ராமசுப்பு அவரோடு செல்வதாக முடிவாயிற்று. 

ராமசுப்பு நேராக கோவிலுக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு, மஹாதேவன் வருவதற்கு சற்று முன்னதாகவே கோவிலை அடைந்து விட்டார். கோவில் வாசலில் பூக்கடை வைத்திருந்த சண்முகம் பண்டாரத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
மஹாதேவன் வண்டி வருவது தெரிந்ததும்,  "பார்த்துக்கோ" என்று விட்டு நகர்ந்து கோவில் வாசலுக்கு சென்று நின்று கொண்டார். 

இருவரும்  சேர்ந்து கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்து பிரகாரத்தை சுற்றத் தொடங்கினர். ராமசுப்பு தெரிந்தவர் ஒருவரோடு பேசியதில் கொஞ்சம் பின் தங்கினார், பிரகாரம் முடியும் தருவாயில் மஹாதேவன் கண்ணில் அந்த தேங்காய் பட்டது. வளைந்து நின்றிருக்கும் தென்னை மரத்தை ஏறிட்டார். பின்னர் அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு ராமசுப்பு வர காத்திருந்தார். 

"ராமு இங்க பார் மட்டை தேங்காய், இப்போதுதான் மரத்திலிருந்து விழுந்திருக்கிறது, அம்பாள் உத்தரவு கொடுத்துட்டா" என்று மகிழ்ச்சியோடு கூற, அம்பாள் சன்னதியை நோக்கி கும்பிடு போட்டவர் சண்முகம் பண்டாரத்தையும் பார்த்து லேசாக சிரித்தார். மனசுக்குள் "ஏதோ இந்த மட்டும் மஹாதேவன் மட்டை தேங்காய் கிடைக்கணும்னு சொன்னான், நானே ஒரு தேங்காயை போட்டு வைத்து, அதை வேறு யாரும் எடுத்துக் கொண்டு போய் விடாமல் பண்டாரம் சண்முகத்தையும் காவலுக்கு போட்டு சமாளித்து விட்டோம், அவன் மட்டும் கருட தரிசனம் கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.

பிறகு என்ன, விச்சு என்னும் விஸ்வநாதனுக்கும், சக்கு என்னும் சகுந்தலாவிற்கும் சுபயோக, சுப தினத்தில் திருமணம் நடந்து, அறுபது வருடங்களை கடந்து விட்டது. 

பி.கு: மத்யமரில் ஆயிரம் பொய் சொல்லி என்னும் தலைப்பில் நம் திருமணத்தில் சொல்லப்பட்ட பொய் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்காக நான் கதை போல எழுதியிருந்தாலும் எங்கள் ஊரில் நிஜமாகவே நடந்த சம்பவம். 

 

15 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சுபமாக நடந்த உண்மைக் கதை நன்றாக உள்ளது. நீங்களும் விவரமாக,அழகாக எழுதியுள்ளீர்கள். சிலருக்கு சில கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை. ஆனாலும் முன்கூட்டியே அவருக்கு (மஹா தேவன்) நடந்ததெல்லாம் அப்படியே நடந்திருக்கிறதே....! அதுவே ஒரு அதியசந்தான்...!

    ராமர் பட்டாபிஷேக படம் என்று நீங்கள் கதையில் குறிப்பிட்டதும் எனக்கு சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் நினைவு வந்தது. சுவாரஸ்யமாக சென்ற கதை சுபமாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி. கொடுத்த ஒரு கருத்தை நல்ல கதையுடன் இணைத்து மத்யமரில் நீங்கள் அழகாக எழுதியிருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த கரு, இப்போதுதான் எழுத சந்தர்ப்பம் அமைந்தது.

      Delete
  2. மாப்பிள்ளையோ, பெண்ணோ பிடித்து விட்டால் பெரியவர்கள் எனப்படுபவர்கள் ஒரு பொய்யாவது சொல்லி கல்யாணம் பண்ணி விடுகிறார்கள்.  அதுசரி, இப்போதெல்லாம் மாப்பிள்ளைக்கு பெண்ணையும், பெண்ணுக்கு மாப்பிள்ளையையும் பிடிக்க வேண்டி இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் ஸ்ரீராம்....இல்லைனா என்னதான் பொருத்தம் எல்லாம் இருந்தாலும் இந்தப் பொருத்தம் மட்டும் யாராலும் கணிக்க முடிவதில்லை!!!!

      கீதா

      Delete
    2. அப்படி இல்லை. ஸ்ரீராம்... பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடித்தாலே போதும் என்கிற காலமாகிவிட்டது

      Delete
    3. ஸ்ரீ ராமும், கீதாவும் சொல்லியிருப்பது உண்மை, நெல்லை சொல்லியிருப்பது மகத்தான உண்மை.

      Delete
    4. நெல்லை உண்மை உண்மை

      ஸ்ரீராம் உங்களுக்கு அனுபவமே உண்டே தற்போது...

      கீதா

      Delete
  3. படிச்சேன் மத்யமரில். எல்லாம் நல்லபடியாக முடிஞ்ச வரைக்கும் சரியே. சில சமயங்கள் சொதப்பியும் விடும். மற்றபடி பெண்ணுக்கோ/பிள்ளைக்கோ ஜாதகப் பொருத்தம் என ஆரம்பித்தது கடந்த 200 வருடங்களில் தான் என்பார்கள். ஆகவே இங்கே பிள்ளையின் அப்பா செய்திருப்பதும் ஒரு வகையில் சரியே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், முன்பெல்லாம் ஜாதக பொருத்தம் பார்ப்பதில் கூட பத்து பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் யோனி பொருத்தமும், ரஜ்ஜூ பொருத்தமும் இருந்தால் போதும் என்பார்கள். இப்போது அந்த பத்து பொருத்தங்கள் தேவையில்லை தசா புக்தி பார்க்க வேண்டும் என்கிறார்கள். என் தோழியின் மகனுக்கு ஜாதகம் பார்த்து பார்த்து பொருந்தாமல் கடைசியில் அவர்களுக்கு மற்ற விஷயங்களில் திருப்தி தந்த பெண்ணை முடித்து விட்டார்கள்.

      Delete
  4. பானுக்கா கதை செம. ஃபாஸ்ட் ட்ராக்ல ஓடுது!! ஹாஹாஹாஹா இல்லை உங்கள் உரையாடல் நடையைச் சொன்னேன்!!! வாசித்து வரும் போதே தெரிந்துவிட்டது மட்டைத் தேங்காய் என்று மஹாதேவன் சொன்னதுமே ராமசுப்பு கால்குலேஷன் போட்டுவிடுவார் என்று.

    கடைசில சொன்னதுதான் சிரித்துவிட்டேன் அதானே கருட தரிசனம்!!! ரசித்து வாசித்தேன் பானுக்கா.

    இது நல்லதாக அமைந்தது 60 வருஷம் ஆகியிருக்கிறதே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த சம்பவத்தை எங்கள் மாமா மிகவும் ஸ்வாரஸ்யமாக சொல்ல கேட்டிருக்கிறேன்.

      Delete
  5. சுவாரசியமான சம்பவத்தை அழகாக எழுதி இருக்கிறீர்கள். இங்கேயும் வாசிக்கத் தந்தமைக்கு நன்றி. பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete
  6. ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  7. கடைசி முடிவை ரசித்தேன். நல்லகாலம் முடியாத ஒன்றைத் தன் நம்பிக்கையாகச் சொல்லவில்லி. இருந்திருந்தால் ராமசுப்பு அவர்களும் நாடகமாடி இருக்க முடியாது. இப்படி நடப்பதும் இறைவன் அருள்தான்.

    கதையை ரசித்தேன்

    துளசிதரன்

    ReplyDelete