கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 23, 2020

கடலைக் கடந்து - 2

கடலைக் கடந்து - 2 

இண்டியன் ஏர்லைன்ஸ் செய்த சோதனை:

நான் திருச்சியிலிருந்து ஜனவரி நான்காம் தேதி மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கிளம்பி, அன்று இரவு சென்னையிலிருந்து இரவு 7:30 மணி இண்டியன் ஏர்லைன்ஸில் அப்போதைய பாம்பே சென்று என் பெரிய நாத்தனார் வீட்டில் இரவு தங்கி விட்டு, மறு நாள் மாலை ஐந்து மணி ஏர் இந்தியாவில் மஸ்கட் செல்வதாக ஏற்பாடு. அதற்கான பி.டிஏ.வை திருச்சியில் இருக்கும் இண்டியன் ஏர் லைன்ஸ் அலுவலகதிற்கு டிசம்பர் 31ஆம் தேதி டெலக்ஸ் அனுப்பியிருப்பதாகவும், என்னை இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படியும் தொலைபேசியில் என் கணவர்  கட்டளையிட்டார். இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திலோ டெலக்ஸ் வரவேயில்லை, வந்தால்தான் நாங்கள் டிக்கெட் இஷ்யு செய்ய முடியும் என்றார்கள். இரண்டாம் தேதி வரை இதே நிலைதான். எனக்கு டென்ஷன், என் கணவருக்கோ டென்ஷனோ டென்ஷன்!

இரண்டாம் தேதி காலையும் பி.டி.ஏ. வரவில்லை என்று இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கூற, நொந்து போன நான் ஒரு ஆட்டோ பிடித்து, நேராக மலைகோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் சென்று,”பிள்ளையரப்பா சோதிக்காதே”, என்று வேண்டிக்கொண்டு ஒரு சூரைக்காய் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தால், “இண்டியன் ஏர் லைனஸிலிருந்து ஃபோன் வந்தது, பி.டி.ஏ. வந்து விட்டதாம்” என்றார்கள். அப்பாடா! என்று மூச்சு விட்டேன். நான்காம் தேதி கிளம்ப வேண்டும் என்றால் மூன்றாம் தேதிதான் டிக்கெட் கையில் வந்தது.

நான்காம் தேதி நல்ல நேரத்தில் கிளம்பினேன். ஐந்து மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வர வேண்டிய ஐ.ஏ. விமானம் எட்டு மணிக்குத்தான் வந்தது. “உங்களால் பம்பாய் செல்லும் கனெக்டிங்க் ஃபளைட்டை பிடிக்க முடியாது, நாளை காலை பம்பாய் செல்லும் விமானத்தில் உங்களுக்கு நிச்சயம் இடம் கொடுப்பார்கள்” என்றார்கள். அவர்கள் சொன்னதை கேட்டுத்தானே ஆக வேண்டும், வேறு வழி? ஒவ்வொரு முறை ஏர் இண்டியா, இண்டியன் அல்லது இண்டியன் ஏர் லைன்ஸில் பயணித்த பொழுதும் கிடைத்த அனுபவங்களை தனிப் பதிவாகப் போடலாம்  இரவு சென்னையில் இறங்கி, மாமா வீட்டில் தங்கி விட்டு, மறு நாள் பம்பாய் சென்று, என் நாத்தனார் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விட்டேன். அப்போதெல்லாம் விமான நிலயங்களில் அத்தனை கெடுபிடி இல்லாததால், என் நாத்தனாரின் கணவர் தன்னுடைய பாஸ் போர்டை கையில் வைத்துக் கொண்டு என்னோடு செக் இன் கவுண்டர் வரை வந்து விட்டார். அங்கு எக்செஸ் பாகேஜ் இல்லாத பயணி ஒருவரோடு பேசி என்னிடம் அதிகமாக இருந்த பாகேஜை அவரை எடுத்துக் கொள்ள வைத்தார். அன்று ஏர் இண்டியாவில் கும்பல் அதிகம் இல்லை. என்னைப் போலவே முதல் முறையாக மஸ்கெட் வந்த கலைச்செல்வி என்னும் பெண், ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்த்த ஒரு இஸ்லாமிய பெண் ஆகிய நாங்கள் மூவரும் அரட்டை அடித்தபடி பயணித்து, ஒரு வழியாக ஓமானில் காலடி வைத்தேன்.    


26 comments:

  1. நல்ல பயண அனுபவம். புள்ளையாருக்கு சூரை காய் போட்டது வீண் போகவில்லை.

    எனக்கும்பம்பாயிலிருந்து பஹரைன் செல்லும்போது எக்ஸெஸ் லக்கேகை , குறைந்த லக்கேஜ் வைத்திருந்த முன் பின் அறியாதவர் அவரது லக்கேஜ் போல கட்டி உதவியது உங்கள் பதிவை வாசிக்கும்போது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. விநாயகன் வினை தீர்ப்பவன். வருகைக்கு நன்றி.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    உங்களின் பயண அனுபவத்தை தெளிவாகவும், கோர்வையாகவும் நீங்கள் சொல்லுவது தொலைதூர விமான பயணத்தில் உள்ள கஸ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள முடிகிறது சுவாரஸ்யமாக சொல்லுகிறீர்கள். தனியாக அவ்வளவு தூரம் பயணித்து செல்வதென்பது என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். நானெல்லாம் துணையில்லாமல் எங்கும் பிரயாணித்ததே இல்லை. சிறு வயது முதல் வீட்டில் அப்படியே வளர்ந்து விட்டேன். இப்போதும் கஸ்டமாக உணர்கிறேன். என்ன செய்வது? தொட்டில் பழக்கம்.. ஹா ஹா. தங்கள் தைரியத்திற்கு வாழ்த்துகள் சகோதரி. அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வெளினாடுகளுக்குச் செல்லும் பொழுது துணையை எதிர்பார்க்க முடியாது. தனியாகத்தான் வர வேண்டும் என்றால் தைரியம் தன்னால் வந்து விடும். என்னுடைய இரண்டாவது பிரசவத்திற்கு உதவுவதற்காக வந்த என் அம்மாவே தனியாகத்தான் வந்தார். அம்மாவுக்கு தமிழ் தவிர வேறு பாஷை தெரியாது. அப்போதெல்லாம் சென்னை-பம்பாய்-மஸ்கட் என்று வர வேண்டும். கருத்துக்கு நன்றி கமலா.

      Delete
  3. கலகலப்பான பதிவு..
    பிள்ளையாருக்கு சூறைக்காய்... அருமை...

    ReplyDelete
  4. பயண டிக்கெட் கடைசி நிமிடம் வரை வந்து சேராதது எவ்வளவு பதட்டத்தைக் கொடுத்திருக்கும் என்று தெரிகிறது.  பிள்ளையார் டென்ஷன் ரிலீவ் செய்திருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. என் அக்கா என் பதிவை படித்து விட்டு,"இப்போது நீ நன்றாக எழுதியிருகிறாய் என்று தோன்றுகிறது.ஆனால் அப்போது எவ்வளவு டென்ஷன்? நீ ஊருக்குப் போய் சேர்ந்து ஃபோன் செய்ததும்தான் நிம்மதி வந்தது" என்றார். இப்போதும் பிள்ளையாரை வேண்டிக் கொண்டிருகிறேன். நன்றி ஸ்ரீராம்.

      Delete
  5. பிள்ளையார் பிள்ளையார் தான். நம்பியவர்களைக் கைவிட்டதே இல்லை. ஆனால் செக் இன் கவுன்டர் வரை அம்பேரிக்காவில் வரலாம். இந்தியாவில் தான் முடியாது. இப்போ மருமகள் அம்பேரிக்காவுக்குப் போனப்போ அவர் அப்பா அனுமதி வாங்கிக்கொண்டு தான் உள்ளே போய் அனுப்பி இருப்பார். அதோடு சாமான்கள் எல்லாம் அப்போ அம்பேரிக்காவுக்கு ஒரு பெட்டியில் 32 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். நாங்க முதல் முறை போனப்போ ஒருத்தருக்கு 64 கிலோ என்றதால் வீட்டில் இருந்த மளிகை சாமானெல்லாம் எடுத்துட்டுப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டோம். இப்போக் குறைச்சுட்டாங்க. 23 கிலோதான் ஒரு பெட்டிக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா அப்போ எல்லாம் 32+32 64 எடுத்துட்டுப் போகலாம் இப்ப 23+23 46 தான் எடுத்துட்டுப் போக முடியும். யுகே இன்னும் கம்மி.

      கீதா

      Delete
  6. வேலையில் சேர்ந்ததும் உங்கள் அலுவலக அனுபவங்கள், அங்கே குடித்தனம் நடத்திய அனுபவங்கள் எல்லாவற்றையும் பகிர்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //இப்போ மருமகள் அம்பேரிக்காவுக்குப் போனப்போ அவர் அப்பா அனுமதி வாங்கிக்கொண்டு தான் உள்ளே போய் அனுப்பி இருப்பார்.// அனுமதி கிடைத்ததா? அதுவே பெரிய விஷயம்! என் அக்கா பெண் பிரசவதிற்குப் பிறகு துபாய் சென்ற பொழுது தனியாக குழந்தையை எடுத்துக் கொண்டு செல்கிறாள் என்று மன்றாடியும் அனுமதி வழங்க மறுத்து விட்டர்கள். முன்பெல்லாம் நாங்கள் செக் இன் செய்து விட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருப்போம்.பாதுகாப்பு சோதனைக்கு அழைப்பு வந்ததுதான் உள்ளே செல்வோம். பிறகு அதுவும் மாறி விட்டதே. செக் இன் செய்த பிறகு வெளியெ வர முடியாது. கல்ஃப் ரீஜனுக்கு எப்போதுமே 20+5 கிலோதான். நன்றி அக்கா.

      Delete
    2. இதுவே எதிர்பாராமல் எழுத ஆரம்பித்துதான். கில்லர்ஜி ஒரு முறை உங்கள் ஓமான் அனுபவங்களை எழுதாலாமே என்றார். அப்போது அப்படி என்ன ஸ்வாரஸ்யமாக இருக்கிறது என்று நினைத்தேன். அதில் இரண்டு நிகழ்ச்சிகளை கதையாகவே எழுதாலாம்.

      Delete
  7. ஏர் இந்தியா அனுபவங்கள் - தனிப்பதிவாகவே போடலாம்! உள்நாட்டு விமானங்களிலேயே நிறைய பிரச்சனை என நினைத்தால் வெளிநாடுக்குச் செல்லும் விமானங்களிலுமா? எனக்கும் இவர்களோடு சில முறை கசப்பான அனுபவங்கள் உண்டு.

    பிள்ளையார் தான் இவர்களையும் காப்பாற்ற வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஏர் இந்தியாவின் ஒரே ஒரு விசேஷ அம்சம் உணவு. சாப்பாடு நன்றாக இருக்கும். மற்றபடி நம்பி டிக்கெட் வாங்க முடியாது. கருத்துக்கு நன்றி வெங்கட்.

      Delete
  8. ஆஹா பானுக்கா இன்னா டென்ஷன்க்கா.. கடைசி நிமிடத்தில் டிக்கெட். நம்ம தோஸ்த் விக்ன விநாயக் ஹெல்ப் பண்ணிவிட்டார்!! எக்ஸெஸ் லக்கேஜ் ஹப்பா நல்லகாலம் கைகொடுக்க ஆள் கிடைத்ததே.

    இப்ப எல்லாம் உள்ளே விடுவதில்லை. அன்னிய மண்ணில் கால் வைச்சாச்சு இனி வரும் அனுபவங்களை ஆவலோடு தொடர்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  9. முதல் பகுதியும் வாசித்துவிட்டேன்.
    பதற்றம் நிறைந்த பயணமாகத் தொடங்கியிருக்கிறது. அங்கு சென்றதும் எல்லாம் மகிழ்ச்சியாக அமைந்திருக்கும் இல்லையா?
    பல அனுபவங்கள். அறிய தொடர்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  10. துணையாக இருவர் வந்தவுடன் சிறிது நிம்மதி கிடைத்திருக்கும்...

    ReplyDelete
  11. ஆமாம். நன்றி டி.டி.

    ReplyDelete
  12. பி//ள்ளையரப்பா சோதிக்காதே”, என்று வேண்டிக்கொண்டு ஒரு சூரைக்காய் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தால், “இண்டியன் ஏர் லைனஸிலிருந்து ஃபோன் வந்தது, பி.டி.ஏ. வந்து விட்டதாம்” என்றார்கள்.//

    வழி முழுவதும் வழிதுணையாக வந்து இருப்பார் பிள்ளையார்

    ReplyDelete
  13. வழித்துணையாக விநாயகர் வந்தார். நன்றி.

    ReplyDelete