கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 19, 2022

குளிரும் நானும்


குளிரும், நானும்


"உங்களுக்கு அந்த குளிர் தாங்குமா? பெங்களூர் குளிரே பொறுக்காதே..?"உங்களுக்கு  அக்டோபரில் கனடா செல்லலாம் என்று நான் முடிவெடுத்ததும் என் மருமகள் கேட்டாள். 

உணமைதான். எனக்கு குளிர் தாங்காது.திருச்சியில் இருந்த பொழுது அந்த குளிருக்கே, "குளிருகிறது.." என்றால் வீட்டில் எல்லோரும் கேலி செய்வார்கள். 

மஸ்கட்டில் டிசம்பர்,ஜனவரியில்தான் குளிரும். பிப்ரவரியில் இரவுகள் தான் குளுமையாக இருக்கும். மார்ச் மாதத்திலிருந்து போர்வை தேவையிருக்காது. ஆஹா! என்ன சுகம்!

பெங்களூர் வந்ததும் வருடம் 365 நாட்களும் வீட்டிற்குள்ளேயே செருப்பு அணிந்து கொள்வேன். சென்னையில் செய்வது போல் தரையில் ஒரு துணியை விரித்து படுத்துக் கொள்ள முடியவில்லையே என்று தாபமாக இருக்கும். ஜனவரியில் , "என்ன கிளைமேட் இது? அனீசியாக இருக்கிறது"என்று புலம்புவேன்.

பல்வேறு காரணங்களால் அக்டோபர் இறுதியிலேயே கனடா வந்து விட்டேன். அப்போது இங்கு 10°C இருந்திருக்கும். ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாள் என் மகள் மாலையில் கொஞ்சம் நடந்துவிட்டது வரலாம் என்று அழைத்துச் சென்றாள். என்னதான் ஓவர் கோட் அணிந்திருந்தாலும் சிலீர் என்று குளிர் தாக்கியது. 

நவம்பர் மாதத்திலேயே பனி பொழிவு இருந்தது என்றாலும் வீட்டிற்குள் குளிர் தெரியவில்லை.  சுளீர் என்று வெய்யலடித்த ஒரு நாள் நான்,"நல்ல வெய்யில் இருக்கிறதே..? நான் கீழே போய் வெய்யிலில் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன்" என்று வெளியே வந்தேன்" 

வெய்யிலா..? அது பாட்டுக்கு இருந்ததே ஒழிய உடம்பில் உரைத்தால் தானே வம்பு? தவிர சீறும் காற்றில் விரல்கள் மறத்து விடும் போலாயிற்று. ஐந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. "இப்போ புரிஞ்சுதா? சொன்னால் கேட்க மாட்ட.. அதனால்தான் நாங்க எதுவும் சொல்லவில்லை. வெய்யிலில் நிற்கணும்னா ஜன்னல் வழியாக வரும் வெய்யிலில் காய்ந்து கொள்" என்றாள். 

என்னிடம் எல்லோரும் "குளிர் எப்படி இருக்கிறது?" என்றால் நான் ஜம்பமாக வீட்டிற்குள் தெரியவில்லை" என்றேன். "அப்படியா சொல்ற? இரு இரு.." என்று இயற்கை நினைத்துக் கொண்டது எனக்குத் தெரியவில்லை.

அப்போதெல்லாம் என் மகள், " குளிர் தொடங்கி விட்டால், லேயர்ஸ் அணிந்து கொள்ள வேண்டும் " "குளிர் தொடங்கி விட்டால் குளித்து விட்டு உடை அணிந்து கொள்வதற்குள் அப்படி குளிரும்.." என்றெல்லாம் சொல்லும் பொழுது "இப்போதே குளிராகத்தானே இருக்கிறது? இன்னும் என்ன குளிர் தொடங்கி விட்டால்..?" என்று நினைத்துக் கொண்டேன். 

என்னுடைய அந்த கேள்விகளுக்கு ஜனவரியில் விடை கிடைத்தது. டெம்பரேச்சர் கிடுகிடுவென்று கீழே இறங்க, கூடவே காற்றும் சேர்ந்து கொள்ள, நான் சினிமாக்களில் வரும் திமிர் பிடித்த பணக்கார மாமியார்கள் போல, எப்போதும் ஒரு ஷாலை போர்த்திக்கொண்டு நடந்தேன். 

அப்போதுதான் பிரும்மரீ பிராணாயாமம் செய்தால் குளிரை உணராமல் இருக்கலாம் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. யோகா டீச்சராக இருக்கும் எங்கள் உறவினர் ஒருவரிடம் பிரும்மரீ பிராணாயாமம் செய்வதை கேட்டு தெரிந்து கொண்டு செய்ய ஆரம்பித்தேன். ஷால் தேவையாக இல்லை. 

சகோதரிகளின் வீடியோ கான்ஃப்ரன்ஸின் பொழுது, என்ன பானு இன்னிக்கு ஸ்வெட்டர் போட்டுக்கல? குளிர் இல்லையா? என்றதும் நான் பிரும்மரி பிராணாயாமத்தின் மகிமையை அவிழ்த்துவட என் மகள் சிரித்தாள் "இன்றைக்கு சூரியன் இருக்கிறது. சன் வரும் நாட்களில் வீட்டிற்குள் அவ்வளவாக குளிர் தெரியாது. சில நாட்களில் சூரியன் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த நாட்களில் நீ பிரம்மரி பிராணாயாமம் செய்து குளிரை உணர வில்லை என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்றாள். எப்படியோ குளிர் தெரியாமல் சந்தோஷமாக இருந்தேன். 

இப்படி இருக்க 16ஆம் தேதி ஞாயிறு அன்று மறுநாள் திங்கள் முதல் குழந்தைக்கு பள்ளியில் இன் பெர்சன் வகுப்புகள் துவங்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை மகள் செய்த பொழுது, மாப்பிள்ளை,"நாளை கடுமையான பனிப்புயலை எதிர்பார்ப்பதால் பள்ளி இயங்குமா? இருக்காதா?  என்பது குறித்து நாளை காலை ஆறு மணிக்கு மெயில் அனுப்புகிறோம் என்று பள்ளியிலிருந்து மெயில் வந்திருப்பதாகக் கூறினார். 

அன்று இரவே பனிப்பொழிவு தொடங்கி விட்டது. காலை எழுந்து பார்த்தால் கடுமையான பனிப்பொழிவு. மரங்கள் மீதெல்லாம் கொத்து கொத்தாக பனிப்படலம். மகள் வீட்டு பால்கனியில் சிறு பனிக்குன்று. எதிரே இரண்டு கார்கள் பனியில் மாட்டிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. 20செ.மீட்டரிலிருந்து 30 செ.மீ.வரை பனிப்பொழிவு இருக்கும், மிகவும் அத்தியாவசியம் என்று இருந்தாலே யொழிய பயணம் மேற் கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. சாலையில் போக்குவரத்து இல்லை என்றே கூறலாம். ஓடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு வாகனங்களும் மிகவும் மெதுவாகச் சென்றன.

பதினோரு மணி வாக்கில் சற்று நின்றது போலத் தோன்றிய பனிப்பொழிவு மீண்டும் உக்கிரமாகத் தொடங்கியது. அறிவித்திருந்த 30 செ.மீ.யையும் தாண்டி 60 செ.மீ.வரை சென்றதாக செய்திகள் வந்தன. 

எப்படி இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியுமா? அதற்கேற்ற முஸ்தீபுகளோடு சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன். 

இந்த ஊரில் கொஞ்சம் கடியான விஷயம் ஒன்றன் மேல் ஒன்றாக உடைகள் அணிய வேண்டியிருப்பதும், குப்பையை போட வேண்டும் என்றால் கூட கோட், தலைக்கு குல்லாய், காலில் பூட்ஸ் என்று அணிந்து கொள்ள வேண்டியிருப்பதும்தான். 

இங்கு வந்ததும் தான் இதைப் போன்ற குளிர் தேசங்களில் இருப்பவர்கள் ஏன் தரையில் அமர்வதில்லை? ஏன் டாய்லெட் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துகிறார்கள்? ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் ஏன் நீண்ட கால் சராய் அணிகிறார்கள்? என்பதெல்லாம் புரிகிறது. வருடத்தில் முக்கால் வாசி நேரம் ஏகப்பட்ட உடைகள் அணிய வேண்டி இருப்பதால்தான் கோடை வந்தவுடன் மினிமம் உடைக்கு வந்து விடுகிறார்கள் போலிருக்கிறது.

திருச்சி வெய்யிலில் பிறந்து வளர்ந்து, மஸ்கட் வெய்யிலில் வாழ்ந்து, சென்னை வெய்யிலில் புழுங்கி, திருவண்ணாமலை வெய்யிலில் கூட சில வருடங்கள் இருந்த, வெய்யில் தவிர வாழ்க்கையில வேற எதுவும் தெரியாமல், வெய்யிலோடு விளையாடி, வெய்யிலோடு உறவாடிய எனக்கு how fortunate are we to born in India! என்று தோன்றுவது நியாயமான விஷயம்தானே? 

எங்கள் அப்பா அடிக்கடி "இந்தியா போல ஒரு இடம் கிடையாது. என்ன இயற்கை வளம்! கன்ட்யூசிவ் கிளைமேட்.. எப்படி இருக்க வேண்டிய தேசம், அரசியல்வாதிகளால் பாழாகிறது" என்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

23 comments:

 1. எனக்கும் இப்படிப்பட்ட பனிப்பொழிவுப் பிரதேசங்களில் சில மாதங்களாவது இருக்கணும் என ஆசை.

  ஜனவரி பெங்களூர் குளிரே கொஞ்சம் அசௌகரியமா இருக்கு.

  படங்கள், ஆவலைத் தூண்டுகிறது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசை நிறைவேற
   ஸ்நோ ஏஞ்சலை வேண்டுகிறேன்

   Delete
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. பனிப்பொழிவுப் படங்கள் பார்க்கவே அருமையாக உள்ளது. ஆனால் அந்த குளிரின் வேகம் எப்படி இருந்திருக்குமெனவும் உணர முடிகிறது. நாங்கள் இங்கு (பெங்களூர்) வந்த புதிதில் இருந்த குளிர் இப்போது இல்லை. நீங்கள் சொல்கிற மாதிரி பிறந்ததிலிருந்து வெயிலோடு உறவாடி இங்கு வந்ததும் வேர்வை இல்லாத இந்த குளிர் மிகவும் சௌகரியமாக இருந்தது. (எனக்கு ரொம்பவே) இப்போது வயது ஏற,ஏற அதுவும் இந்த வருடம் எனக்கும் இங்கு குளிர் தெரிகிறது. ஆனாலும்,இந்தப் பனிப் பொழிவை நேரில் காண ஆசையும் உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பெங்களூரில் இருந்து விட்டு சென்னை சென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும்.

   Delete
 3. பனிப் பிரதேசங்களில் வாழ்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். பனிப்பொழிவு எப்போதாவது பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர அங்கேயே வாழ்பவர்களுக்கு இது கடினமான ஒரு காலம் தான். இந்தியாவிலும் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் அடையும் தொல்லைகள் மிகவும் அதிகமே. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் கடினமா? மஹா அவஸ்தை. நான் வெய்யில் கொளுத்தும் அரபு நாட்டிலும் வசித்திருக்கிறேன்.‌ கத்திரி வெயிலில் சென்னை கொடுமையாகத்தான் இருக்கும். ஒரு தடவைக்கு இரண்டு தடவை குளித்துக் கொள்ளலாம்.‌மொட்டை மாடியில் தூங்கலாம். விபரீத குளிரில் என்ன செய்வது?

   Delete
 4. பாரதத்தில் தென் மாநிலங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, குளிர் பிரதேசங்களில் வசிப்பது சற்று சிரமமே. அதுவும் பனிப்பொழிவு பிரதேசங்களில் என்றால் அவ்வளவுதான். இளைய வயதினர் என்றால் காலப்போக்கில் பழகிவிடும். மற்றபடி வெயில் இல்லாத நாட்களில் சென்னையில் கூட சிலசமயம் வீட்டுக்குள் இருப்பது கடுப்பாக இருக்கும்.

  // How fortunate are we to born in India! என்று தோன்றுவது நியாயமான விஷயம்தானே? + கடைசி பத்தி // முற்றிலும் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு.‌ முதல் வருடம் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்கிறார்கள்.

   Delete
 5. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? நானும் பனிப்பொழிவை முதல் முதலாக அம்பேரிக்கா போனப்போ மெம்பிஸிலும் பின்னர் இமாலயப் பயணங்களிலும் பின்னர் மறுபடி அம்பேரிக்காவிலுமாகப் பார்த்திருக்கேன். உறை பனி நிலைமை கொண்ட குளிருக்கு ராஜஸ்தான், தில்லி, எப்போதேனும் குஜராத்தில் பழகி இருந்ததால் குளிர் எனில் பயம் தெரியாது. தாங்கும்படியே இருந்து வந்தது. ஆனால் என்னோட தோலுக்குத் தான் குளிரில் ஒவ்வாமை வந்து விடும். கை விரல்கள் சிவந்து வீங்கி வலியும் அரிப்புமாக இருக்கும். அதே போல் கால் விரல்களிலும், பாதங்களிலும்! எப்படியோ சுமார் பதினைந்து வருடங்கள் அந்தக் குளிரிலும் சமைச்சுச் சாப்பிட்டுப் பாத்திரங்கள் தேய்த்து, அரைத்து, துவைத்துனு காலத்தை ஓட்டியாச்சு. ஊட்டியிலும் நவம்பரிலிருந்து ஆரம்பிக்கும் கடுங்குளிர் டிசம்பர், ஜனவரியில் உச்சத்தை எட்டிப் பின்னர் பிப்ரவரியானாலும் நான் இங்கே தான் இருக்கேன்னு சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Great! நான் நம்மூர் நினைவில் ஜனவரி முடியப் போகிறது. பிப்ரவரியில் குறையத் தொடங்கும் மார்ச்சில் நார்மலாகி விடும் என்று நினைத்தேன் என் மகளோ மார்ச்சிலும் குளிரும் ஏப்ரலில் தான் கொஞ்சம் குறையும் தவிர இந்த ஊரில் எல்லா நாட்களிலும் ஓவர் கோட் அணிந்து ஆகவேண்டும் என்றாள். என்னவோ இதுவும் கடந்து போகும் இன்று காத்திருக்கிறேன்.

   Delete
 6. நம்ம ஊர்தான் எல்லா கிளைமேட்டையும் சமமாக வைத்திருக்கிறதோ...  அபப்டியும் சொல்ல முடியாது.  நாம் அந்தந்த ஊர் கிளைமேட்டுகளுக்கு பழகி விடுகிறோம்!   இவ்வ்வளவு குளிர் எல்லாம் தாங்குமா என்று தெரியவில்லை.  போர் அடித்து விடும்!

  ReplyDelete
 7. நம் ஊரில் எக்ஸ்ட்ரீம் லெதர் ஒரு சில இடங்களில்தான்.

  ReplyDelete
 8. சிரமம் தான்... நன்றாகவே புரிகிறது...

  ReplyDelete
 9. குளிர் தாங்குவது கஷ்டம் என்றால் கனடாவின் இப்பகுதிகள் கொஞ்சம் கஷ்டம்தான் பானுக்கா. உங்கள் சிரமம் புரிகிறது. வீட்டிற்குள் வார்மர் இருக்கும் இல்லையா?

  எனக்கு வெயில் தாங்காது. குளிர் சமாளிக்க முடிகிறது இதுவரை

  படங்கள் ரொம்ப அழகு!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்னதான் வீட்டிற்குள் வார்மர் இருந்தாலும் சில நாட்கள் குளிரை நன்றாக உணர முடிகிறது.

   Delete
 10. உங்களின் குளிர் நடுக்கம் புரிகிறது. வெளியில் செல்ல முடியாமல் இருப்பதும் கஷ்டம்தான்.

  எனக்கும் குளிர் கொஞ்சம் கடினம்தான். இப்போது எனது பெரிய மகன் இருக்கும் ரஷ்யாவின் வடக்கும் பகுதி இப்படித்தான் உறைபனி. கல்லூரி ஹாஸ்ட்டலில் எல்லாம் ஹீட்டர் இருப்பதால் பரவாயில்லை என்கிறான் என்றாலும் அவன் சிறியவன் பழகிவிட்டான்.

  துளசிதரன்

  ReplyDelete
 11. நம்மைப் போல வெய்யிலில் உழன்றவர்களுக்கு இந்த அளவு குளிர் கஷ்டம்.

  ReplyDelete
 12. Aunty, அருமையான பதிவு! சென்னையிலிருந்து வருபவர்களின் மனப்போக்கை அருமையா சொல்லியிருக்கீங்க. யாராவது இது பழகிடும்னு சொன்னா நம்பாதிங்க��

  ReplyDelete
 13. நான் நினைத்தை நீங்க ரொம்ப அழகாக சொல்லிட்டிங்க எனக்கு இவ்வளவு அழகாக‌ சொல்ல தெரியாது. Excellent
  -Vedavalli's mother

  ReplyDelete