கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, March 7, 2026

தேடித் தேடி

 தேடித் தேடி

வாழ்க்கையில் எத்தனையோ தேடல்கள். பணம், அறிவு, ஞானம், புகழ், அதிகாரம், ஆன்மீக முன்னேற்றம் இப்படி. நான் பகிரப்போவது விலாசத்தை தேடுவதைப் பற்றி.

என் அம்மா அவருடைய தோழிகள் வீட்டிற்கு ஏதாவது செய்தி சொல்லி அனுப்புவார். தோழியின் முழு பெயர் தெரியாது, இவர்கள் அழைக்கும் அம்புலு, அம்மாளம், குஞ்சம்மா என்று எதையாவது சொல்வார். தெரு மட்டும் தெரியும். வீட்டு எண் தெரியாது. கேட்டால், "வாயில இருக்கு வார்த்தை,கேட்டா சொல்லப் போறாங்க. அந்த தெருவிலேயே அவர்கள் வீ ட்டு வாசலில்தான் தென்னை மரம் இருக்கும்". என்று சொல்லி அனுப்புவார். 


நாம் போய் பார்த்தால் பத்து வீடுகளில் வாசலில் தென்னை மரம் இருக்கும். திடீரென்றா முளைத்திருக்கும்? அக்கம் பக்கத்தில் "அம்மாளு மாமி/குஞ்சம்மா மாமி வீடு எது?" என்று கேட்டால் "அப்படி யாருமே இங்கே கிடையாதே" என்பவர்கள் தொடர்ந்து அவர் கணவர் பெயர் என்ன?, அவர் எங்கே வேலை பார்க்கிறார்? " என்றெல்லாம் கேட்டால் நாங்கள் 'பே பே' என்று முழிப்போம். "வீடு கண்டுபிடிக்க துப்பு இல்லை" என்னும் திட்டை வேறு அம்மாவிடம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அப்பா இதற்கு ஜஸ்ட் ஆபோசிட். கையில் விலாசத்தை வைத்துக் கொண்டே தேடுவார். ஒரு முறை நானும் அப்பாவும் கோயம்புத்தூர் சென்றோம். அங்கு இருக்கும் ஒரு உறவினர் அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் பணி புரிந்து கொண்டிருந்தார். பேயிங் கெஸ்டாக ஒரு வீட்டில் தங்கிக் கொண்டிருந்த அவர் அதைக் குறிப்பிடாமல் அந்த வீட்டின் எண்ணை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு ஆட்டோவில் அங்கு சென்றோம். அது ஒரு பங்களா. ஹாலில் ஒரு பெரிய சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த ஒருவர், யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். என் அப்பா, "இந்த வீடு கிடையாது நாம் தவறாக வந்து விட்டோம்" என்று அடுத்த தெருவிற்கு ஆட்டோவை விடச் சொன்னார்.  அங்கு அலைந்து மீண்டும் அதே வீட்டிற்கு வந்தோம். இந்த வீடாகத்தான் இருக்கும், நாம் கேட்டுப் பார்க்கலாம் என்று நான் உள்ளே சென்று( நல்ல வேளை நாய் இல்லை) எங்கள் உறவினரின் பெயரைச் சொல்லி விசாரித்தேன். என் குரல் கேட்டு, மாடி ரூமில் தங்கியிருந்த என் உறவினர் இறங்கி வர பிரச்ச்னை தீர்ந்தது. இப்போது போல செல்ஃபோன், கூகுள் மேப் எல்லாம் இல்லாத காலம்.

கூகுள் மேப் என்ன வாழ்ந்தது? சமயங்களில் அதுவும் சுற்றி விடும். ஒரு முறை  திருச்சி சென்ற நாங்கள் தென்னூரில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். அங்கிருந்து மாலை திருவானைக்கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்து, அண்ணாசிலை வந்த நாங்கள் காவேரி பாலத்தில் பயணித்திருந்தால் சீக்கிரம் திருவானைக்கோவிலை அடைந்திருக்கலாம், திருச்சியில் பிறந்து வளர்ந்த என்னைக் கேட்காமல் கூகுள் மேப்பைக் கேட்டதில் அது எங்களை எங்கேயோ சுற்றி, திருவானைக்கோவிலின் விபூதி பிரகாரத்திற்கு அனுப்பியது. சுற்றி வளைத்துக் கொண்டு செல்லும் வழியில் தவறாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூ வீலரில் இடித்து, ஐநூறு ரூபாய் தண்டம் அழ வேண்டியிருந்தது. அந்த் பஞ்சாயத்து முடிந்து கோவிலுக்குச் செல்லும் பொழுது மார்கழி மாதமாக இருந்ததால் சீக்கிரமே நடை அடைக்கப்பட்டு விட்டது :((


அது மட்டுமில்லை, அங்கிருந்து எங்கள் ஊரான கண்டமங்கலத்திற்கு செல்ல கூகுள் மேப் துணையைத்தான் நாடினான் மகன். திருக்காட்டுப் பள்ளியிலிருந்து இடது பக்கம் செல்லும் ஒரு சாலையில் சென்றால், எங்கள் ஊருக்கு நேர் வழியில் சென்று விடலாம். இந்த கூகுள் செய்த வேலை அடன்சூர் என்னும் ஊர் வழியாக திருப்பி விட்டு, எங்கள் ஊருக்கு பின் வழியில் சென்றடைந்தோம். கூகுளார் எல்லா வீட்டிற்க்கும் புழக்கடை வழியாகத்தான் செல்வார் போலிருக்கிறது. கண்டமங்கலம் என்று போடாமல், மைக்கேல்பட்டி என்று குறிப்பிட வேண்டுமாம். அப்போதுதான் நேர்வழியில் ஊருக்குள் நுழைய முடியுமாம். சிலரை பூதலூர் வரை துரத்தி விடுகிறதாம்.

என் கணவரோடு ஒரு முறை ராகவரெட்டி காலனியில் வசித்த அவர் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. சினிமா நடிகை சரிதா அப்போது அங்குதான் வசித்தார். அவர் வீட்டிற்கு நேர் எதிரே நண்பரின் வீடு.  வீட்டு எண் தெரியாது, எங்களுக்குத் தெரிந்த ஒரே அடையாளம் சரிதா வீட்டிற்கு எதிர் வீடு என்பதுதான்,என் கணவருக்கு ஏனோ அதை சொல்ல தயக்கம், அதைத்தவிர, மற்ற விவரங்களைச் சொல்கிறார், யாருக்கும் தெரியைவில்லை, கடைசியில் பொறுக்க முடியாமல் நான் "சரிதா வீட்டிற்கு எதிர் வீடு என்றவுடனேயே எப்படி போக வேண்டும் என்ற விவரம் கிடைத்து விட்டது. 

அதைப் போலத்தான் திருச்சி BHEL ல் வேலை பார்த்த என் கணவரின் பெரியப்பா மகனை பார்க்க திருவெறும்பூர், பி.ஹெச்.இ.எல். டவுன்ஷிப்புக்குச் சென்றிருந்தோம்.  முன்பே சில முறைகள் சென்றிருக்கிறோம், அந்த முறை      தவறான இடத்தில் இறங்கி விட்டோம், அதனால் எங்களுக்கு வீடு கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்களிடம் என் கணவர் என் மச்சினர் பற்றிய தகவல்களைக்கூறி அவர் வீடு எங்கே என்று கேட்டார்,அந்த இளைஞர்களுக்குத் தெரியவில்லை. நான்,"அவருக்கு மனோ,பிரசாத் என்று இரண்டு மகன்கள் உண்டு" என்றதும், உடனே அவர்கள் "ஓ நம்ப ஆளு" என்று வீட்டை காட்டி விட்டார்கள். மச்சினருக்கு இளம் பெண் இருந்திருந்தால் வீடு வரை கொண்டு விட்டிருக்கலாம் :))

நானும் என் தோழியும் எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டைத் தேடியது ஒரு தமாஷ். பாலகுமாரன் தொலைபேசியில் டைரக்டர் கே.பாலசந்தர் வீட்டிலிருந்து நேராக வந்தால் என் வீட்டை அடையலாம். வீட்டு காம்பவுண்டில் ரஜினிகாந்த் படம் வரைந்திருக்கும் என்றார். சில சமயம் கூகுள் படுத்தும், சில சமயம் ஆட்டோகாரர்கள் படுத்துவார்கள். அந்த ஆட்டோக்காரர் நாங்கள் சொன்ன வழியில் செல்லாமல், வேறு ஏதோ வழியில் சென்றதால் பாலகுமாரன் வீட்டை கண்டுபிடிப்பதில் சிக்கல். நான் விடாமல் "காம்பவுண்ட் சுவரில் ரஜினிகாந்த படம் வரைந்திருக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இலக்கை அடைந்து விட்டோம். அந்த ஆட்டோக்காரர், " ஒண்ணு சொல்லணும் ரஜினிகாந்த் படம் வரஞ்சிருக்கும், ரஜினிகாந்த் படம் வரஞ்சிருக்கும் என்று சொல்லி கூட்டிட்டு வந்துட்டாங்க" என்று கிண்டல் வேறு செய்தார். தேவைதான் எனக்கு என்று நினைத்துக் கொண்டேன்.     



  

28 comments:

  1. இந்த விலாசம் தேடுதல் வேட்டை பலசமயங்களில் படுத்தியிருக்கிறது. இப்பவும் சரி நீங்கள் சொல்லியிருப்பது போல் கூகுள் மேப் இருந்தும் என்ன பயன்? பல சமயங்களில் சுற்றோ சுற்று என்று சுற்றும். சிலசமயம் சரியான இடத்தில் இருப்போம் ஆனால் சந்தேகம் வந்துவிடும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranMarch 9, 2026 at 2:30 AM

      வாங்க கீதா. ஒரு முறை பெங்களூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பும் பொழுது அந்த ஓலா ஆட்டோ எங்கெல்லாமோ சுற்றியதில் நான் பயந்தே போனேன்.

      Delete
  2. மச்சினருக்கு இளம் பெண் இருந்திருந்தால் வீடு வரை கொண்டு விட்டிருக்கலாம் :))//

    ஹாஹாஹா அக்கா, நானும் நினைத்துக் கொண்டே வந்தேன் நீங்க அதைச் சொல்லிவிட்டீர்கள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெMarch 9, 2026 at 2:31 AM

      அந்த மச்சினர் யாரென்று யூகிக்க முடிந்ததா?

      Delete
    2. GMB? அவர் தான் உங்க கணவரின் பெரியப்பா மகன்னு சொல்லி இருக்கீங்க. அதோடு பிள்ளைகளின் பெயரும் ஒத்துப் போகிறது.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பாலச்சந்தர் வீடெல்லாம் ஆட்டோக்காரருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா?

    ஒரு வேளை ரஜனியின் படம் பல சுவர்களிலும் வரைந்திருந்தாலோ, படத்தை யாரேனும் அழித்திருந்தாலோ அல்லது போஸ்டர் ஒட்டியோ சாணி அடிச்சோ மறைந்திருந்தால் அந்த அடையாளம் இன்னும் சிரமப்படுத்தியிருக்கும்!

    சாலையைச் சொல்லியிருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்குமோ?

    தென்னைமரம். படங்கள், சுவர்....விளக்குக் கம்பம், இவை எல்லாமே சிலசமயம் மிஸ் கைட் பண்ணலாம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாலசந்தர் வீடு இருந்த இடம் வாரன் ரோடு. இப்பொழுது அதை பக்தவத்சலம் தெரு என்று மாற்றியிருக்கிறார்கள். அங்கிருந்து நேரே செல்ல முடியாமல் ஒரு வழிப் பாதையாக மாற்றியதால் சுற்ற வேண்டியிருந்தது என்று நினைவு.
      ரஜனிகாந்த் படம் அந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

      Delete
  5. //நாம் போய் பார்த்தால் பத்து வீடுகளில் வாசலில் தென்னை மரம் இருக்கும். திடீரென்றா முளைத்திருக்கும்? அக்கம் பக்கத்தில் "அம்மாளு மாமி/குஞ்சம்மா மாமி வீடு எது?"//

    அம்மா சொல்லி தென்னை இருக்கும் வீட்டைத் தேடும் இளம் பெண் அழகு.
    படத்தேர்வு அருமை.


    //மச்சினருக்கு இளம் பெண் இருந்திருந்தால் வீடு வரை கொண்டு விட்டிருக்கலாம் :))//

    நேற்று , இன்று , நாளை படத்தில் ராதிகாவின் தோழி வீட்டு முகவரி கேட்பார் யாரும் சொல்ல மாட்டார்கள் அவர்கள் வீட்டில் இளம் வயது பெண்கள் இருக்கிறார்கள் என்றது, பாக்கியராஜ நண்பர்கள் குழு வீடு வரை கொண்டு வந்து விடுவார்கள்.



    ReplyDelete
    Replies
    1. வாங்க கொமதி அக்கா. //அம்மா சொல்லி தென்னை இருக்கும் வீட்டைத் தேடும் இளம் பெண் அழகு.
      படத்தேர்வு அருமை.// நானும் செயற்கை அறிவை பயன்படுத்தி படம் எடுக்க கற்றுக் கொண்டு விட்டேன்.
      //நேற்று , இன்று , நாளை படத்தில் ராதிகாவின் தோழி வீட்டு முகவரி கேட்பார் யாரும் சொல்ல மாட்டார்கள் அவர்கள் வீட்டில் இளம் வயது பெண்கள் இருக்கிறார்கள் என்றது, பாக்கியராஜ நண்பர்கள் குழு வீடு வரை கொண்டு வந்து விடுவார்கள்.// ஹாஹா! எழுதும்போது எனக்கும் அந்தப் படக்காட்சிதான் நினைவுக்கு வந்தது. ஆனால் படம் ண்'நேற்று,இன்று, நாளை' கிடையாது, 'இன்று போய் நாளை வா'.

      Delete
    2. சாரி உங்கள் பெயர் தப்பாக டைப் ஆகியிருக்கிறது.

      Delete
  6. சுவாரஸ்யமான அனுபவங்கள். நாங்களும் ஓரளவு விலாசம் தேடி இருக்கிறோம் என்றாலும் இந்த அளவு சிரமப்பட்டதாக எதுவும் நினைவில் இல்லை!

    ReplyDelete
  7. இணைத்திருக்கும் படங்கள் இரண்டுமே அழகாக உள்ளன. குறிபபா க அந்த தாவணி போட்ட தீபாவளி!

    ReplyDelete
  8. நானாக இருந்தால் நடிகை சரிதா வீடு என்று அந்த வீட்டிலேயே கேட்டு அவர்கள் "இதுதான்" என்று கதவைத் திறக்கும்போது அல்லது சொல்லும்போது ஒன்றும் சொல்லாமல் சட்டென்று திரும்பி எதிர்வீடு செல்வேன்! ஹா.. ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. என் கணவருக்கு நடிகை வீட்டைத் தேடுகிறார் என்று நினைத்துவிட போகிறார்களே என்று எண்ணம்.

      Delete
  9. சரி, பாலச்சந்தர் வீடு அடையாளம் வைத்தும் போனது போனீர்கள்.. அவரையும் பார்த்து விட்டு வந்திருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. சரிதான். வாசலில் நிற்கும் கூர்கா விட வேண்டாமா? அந்த வீட்டை அவர் பிறகு அபார்ட்மெண்டாக மாற்றி விட்டார்.

      Delete
    2. என்னுடைய BHEL மச்சினர் யார் என்று தெரிகிறதா?

      Delete
  10. அனுபவங்கள் பலவிதம்....

    கூகுள் - ஒரு பயணத்தில் பஞ்சாப் பகுதியில் செல்லும்போது கூகுள் காட்டிய வழியில் சென்றபோது எங்களைக் கொண்டு சேர்த்தது ஒரு வயலுக்கு அருகே! சீக்கிரம் சேர்க்கிறேன் பேர்வழி என அது சொன்ன பாதையில் போனதால், மீண்டும் வந்த வழியே திரும்பி நெடுஞ்சாலையைப் பிடித்துச் சென்றோம்.

    ReplyDelete
  11. வாங்க வெங்கட். கூகுளை முழுவதுமாக நம்பிவிட முடியாது போலிருக்கிறது.

    ReplyDelete
  12. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் கண்டமங்கலம் என்று ஒரு ஊர் உண்டு. அங்கு பள்ளியில் ஆசிரியராக இருந்திருக்கிறேன்.

    இத்தனை தேடி அலையும் கதைகளையும் ஒருங்கிணைத்து ஒரு "அனுபவங்கள் பலவிதம்" என்று கட்டுரையாகியது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranMarch 11, 2026 at 8:19 AM

      வாங்க ஜே.கே.சி. சார். எங்கள் ஊர் தஞ்சை மாவட்டம். திருவையாறுக்கு அருகில். பாராட்டுக்கு நன்றி.

      Delete
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நாம் நெடுநாட்கள் கழித்து செல்லும் வீட்டைத் தேடும் கதைகளை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    :/வாயில இருக்கு வார்த்தை,கேட்டா சொல்லப் போறாங்க. அந்த தெருவிலேயே அவர்கள் வீ ட்டு வாசலில்தான் தென்னை மரம் இருக்கும்". என்று சொல்லி அனுப்புவார். /

    ஆம். அடையாளங்கள் எப்போதும் ஒரே மாதிரி அமையதல்லவா என்றால், எங்கள் நாத்தனாரும் இதே மாதிரித்தான்" வாயில் இருக்கு வழி" என்பார்கள். சென்னையிலிருக்கும் போது, அவர்களுடன் நானும் பலமுறை சென்று இப்படித்தான் அலைந்திருக்கிறேன். எனக்குத்தான் முகம் தெரியாத எல்லோருடனும் அவர் இயல்பாக பேசுவது சங்கோஜமாக இருக்கும். ஆனால், அவருக்கு அது பெருமை. :))

    "முகவரிகள் தொலைந்ததினால் முகிலினங்கள்..... அழுதிடுமோ..! அது மழையோ..! என்ற பாடல் உங்கள் பதிவை படித்ததும் நினைவுக்கு வருகிறது. நன்றாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள். நான்தான் தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. பானுமதி வெ.March 11, 2026 at 8:22 AM

    வாங்க கமலா. நன்றி. தாமதமாக வந்தால் என்ன? கட்டுரையின் ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் பாணி தனி.
    எங்கள் அம்மாவுக்கு ஒரு அதிர்ஷ்டமும் உண்டு. எப்படியோ கண்டு பிடித்து விடுவார். சில சமயங்களில் அவர் தேடிப் போகும் ஆசாமி எதிரில் வந்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி.

      /எங்கள் அம்மாவுக்கு ஒரு அதிர்ஷ்டமும் உண்டு. எப்படியோ கண்டு பிடித்து விடுவார். சில சமயங்களில் அவர் தேடிப் போகும் ஆசாமி எதிரில் வந்து விடுவார்./

      அதுவும் நல்லதுதானே..!! மூத்தோர் சொல்லுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அவர்கள் சொல்வது அப்படியே நடந்து விடுமென்பதும் உண்மைதான்.

      Delete

  15. கண்டமங்கலம் ஊர்ப் பெயர் மாறினது பத்தி ஒரு கருத்துப் போட்டிருந்தேன். அது ஏனோ வரலை. நம்ம சொந்த ஊரில் நம்ம ஊரின் பெயரை இப்போ வந்தவங்க உரிமையா மாத்திக்கறாங்க. ஆனால் நாமோ? பயந்து கொண்டு இருக்கோம்.

    ReplyDelete
  16. அக்கா நீங்கள் தேடிய நபர் யாரென்று தெரிந்தது. அன்றே இங்கு சொல்ல நினைத்து என்னவோ குறிப்பிடாமல் விட்டேன். மைத்துனர் நம்ம ஜி எம் பி ஸார்.

    கீதா

    ReplyDelete