கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 15, 2024

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

சில சமயங்களில் நாம் சில விஷயங்களைத் தொடங்கும் பொழுது நம் உள்ளுணர்வு ‘ஜாக்கிரதை’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ எச்சரிக்கை கொடுக்கும். அதை மதிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது குடை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளுணர்வு சொல்லும், மதிக்காமல் சென்றால் மழையில் மாட்டிக் கொள்வோம்.

என் மகளின் வளைகாப்பிற்கு பொன் காப்பு, வெள்ளி காப்பு வாங்க ஜி.ஆர்.டி. சென்றிருந்தோம். அந்த காப்புகளை கையில் வாங்கும் பொழுது, “இதை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மனதில் தோன்றியது. “எத்தனையோ முறை நகைகள் வாங்கியிருக்கிறோம், இப்படி தோன்றியதில்லையே?” என்று நினைத்துக் கொண்டேன். பொன் காப்பு,வெள்ளி காப்பு இருந்த சிறிய நகைப்பெட்டியை என் தோள் பைக்குள் வைத்துக் கொண்டு, பையை மாட்டிக் கொண்டேன். பையின் ஜிப்பை திறக்கும் ஹூக், பின் பக்கம் இருந்தது.

அங்கிருந்து வளையல்கள் ஆர்டர் கொடுப்பத்ற்காக ரங்கநாதன் தெரு சென்றோம். அங்கு வளையல்களை செலக்ட் செய்துவிட்டு, மறு நாள் மண்டபத்திற்கு வரச்சொல்லி, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். அந்த கடையில் கார்டில் பே பண்ணும் வசதி இல்லாததால், என் கணவர் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுக்க சென்றார்.

என் சகோதரியிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டியிருந்ததால், சகோதரியை செல்ஃபோனில் அழைத்தேன். கடைக்குள் சிக்னல் சரியாக கிடைக்காததால் வெளியே வந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நலைந்து பெண்கள் வந்து, கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஹேர் கிளிப்புகளை கிளறி, “இது எடுக்கலாம், இது வேண்டாம்..” என்றெல்லாம் சளசளவென்று பேசியபடியே தேடினார்கள். நான் என் சகோதரியோடு ஃபோனில் உரையாடிக்கொண்டே அவர்களை கவனித்தேன். அப்போது என் தோள் பைக்குள் யாரோ கை விட்டு அசைப்பது போல உணர்ந்தேன். “ஏய் யாரது..?” என்று கேட்டபடியே திரும்பியதும், என் பின்னால் நின்று கொண்டு என் தோள் பைக்குள் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்த ஒரு பெண் கையை எடுத்து விட்டு சட்டென்று நகர்ந்தாள். அவளோடு கிளிப்புகளை பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் நகர்ந்து விட்டார்கள், அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக வந்து, சிலர் ஏதோ வாங்குவது போல பேச்சு கொடுத்து என் கவனத்தை கலைத்திருக்கிறார்கள். நான் செல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தது, என் பையின் ஜிப்பின் ஹூக் திறக்க சௌகரியமாக பின் புறம் இருந்தது எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் அதை முழுமையாக திறக்க முடியவில்லை, மேலும் தோள் பை பெரியதாகவும், நீளமாகவும் இருந்ததால் அவள் கைக்கு எதுவும் சிக்கவில்லை. பொன்காப்பு, வெள்ளிகாப்பு பத்திரமாக இருந்ததை உறுதி செய்து கொண்டதும்தான் நிம்மதியானது. வீட்டிற்கு போய் ஸ்வாமிக்கு முன்னால் வைத்து, நன்றி சொல்லி, நமஸ்கரித்தேன்.

சமீபத்தில்(டிசம்பர் 23) பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் ஓர்ப்படியை பார்க்க நானும், என் நாத்தனார் பெண்ணும் ஈரோடு சென்றோம். என் நாத்தனார் மகள் அங்கிருந்து அப்படியே பெங்களூர் திரும்பி விட்டாள். நான் சென்னை சென்று விட்டு திரும்பலாம் என்று அதற்கேற்றார்போல் டிக்கெட் வாங்கியிருந்தேன். ஆனால் மனசுக்குள் சென்னை செல்ல வேண்டாம், பெங்களூரே திரும்பி விடலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதை மதிக்காமல் சென்னைக்குச் சென்று, அந்த மழை, வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, போக நினைத்த இடங்களுக்கு  போக முடியாமல், பார்க்க விரும்பியவர்களை பார்க்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பும் பொழுது, இறங்கும் அவசரத்தில் என் செல்ஃபோனை தவற விட்டு… இப்படி ஏகப்பட்ட கந்தரகோளங்கள்! இப்போது சொல்லுங்கள் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையை மதிக்க வேண்டுமா? வேண்டாமா?

Friday, March 8, 2024

முதல் முதலா..

முதல் முதலா..

என்னுடைய முதல் முதலா அனுபவங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு வேடிக்கையான அனுபவம் இருக்கிறது. 

எங்கள் வீட்டில் என்னுடைய கடைசி அக்கா உபவாசமெல்லாம் இருப்பாள். சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், பட்டினி கிடந்து விட்டு, ராத்திரிதான் சாப்பிடுவாள் எனக்கும், என்னுடைய மூன்றாவது அக்காவுக்கும் பட்டினி கிடக்க முடியாது.”பானு உன்னாலும், என்னாலும் பட்டினியெல்லாம் கிடக்க முடியாது. அப்படிப்பட்ட பூஜையெல்லாம் நமக்கு வேண்டாம்” என்பாள். 

ஷிர்டி பாபா பட்டினி கிடக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். என்று பாபாவை துணைக்கு அழைத்துக் கொள்வேன். எனக்கு பசியே பொறுக்காது. அப்படிப்பட்ட நான் சஷ்டியில் உபவாசம் இருப்பதால் விளையும் நன்மை பற்றி படித்து விட்டு, சஷ்டியில் உபவாசம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும். காலையில் கஞ்சி மட்டும் குடித்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக மதிய உணவு உட்கொள்ளவில்லை. மூன்று மணிக்கு பசிப்பது போல இருந்தது. அதை மற, புத்தியை வேறு எதிலாவது செலுத்து என்று மனதிற்கு ஆணையிட்டேன். நேரம் ஆக ஆக, பசி அதிகரிக்க, புத்தி முழுவதும் பசிதான் இருந்தது. ஏழு மணிக்கு முகம் சுருங்கி, அழுது விடுவேன் போல ஆகி விட்டேன். என் பெரிய அக்கா, “ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று கேட்டார். “இன்னிக்கு சஷ்டி, விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் ரொம்ப பசிக்கிறது” என்று சொல்லும்போதே கிட்டத்தட்ட அழுது விட்டேன். “அட பைத்தியமே! உன்னையெல்லாம் யார் உபவாசம் இருக்கச் சொன்னது? முதலில் சாப்பிடு.” என்றதும், சாப்பிட்டு விட்டேன். அப்பாடா! உயிர் வந்தது. இப்படியாக என்னுடைய முதல் உபவாசம் பாதியில் பணால் ஆனது 

Monday, February 12, 2024

கர்னாடகா யாத்திரை - 2

கர்னாடகா யாத்திரை – 2 

இடகுஞ்சி மஹாகணபதி கோவில் முன்பு


கோகர்ணத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, அடுத்த இடகுஞ்சி மஹாகனபதி கோவிலை தரிசித்துக் விட்டு முருடேஷ்வர் செல்ல வேண்டும் என்பது ஒரிஜினல் திட்டம். ஆனால், கோகர்ணத்திலிருந்து கிளம்பவே நேரமாகி விட்டதால் நேராக முருடேஷ்வர் சென்று விட்டோம். 

முருடேஷ்வர் கோவில் முகப்பு 




முருடேஷ்வர் கோவில் கோபுரம் இரவில்



முருடேஷ்வர் கோவில் கோபுரம் பகலில்

சக பயணிகள் திருமதி புவனா & திருமதி வசந்தா

பஸ்ஸிலிருந்து க்ளிக்கியது 

முருடேஷ்வர் கோவில் கோகர்ணத்தைப் போல் அவ்வளவு புராதனமானது இல்லை 500 வருட பாரம்பரியம் மட்டுமே உண்டு என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் கோகர்ணம் கோவில் தல புராணத்தோடு சம்பந்தப்பட்டிருகிறது.

சிவபெருமானிடமிருந்து பெற்று வந்த ஆத்ம லிங்கத்தை, சிறு பையனாக வந்த விநாயகர் தந்திரமாக கீழே வைத்ததும், அதை பெயர்த்தெடுக்க முயலும் ராவணன் லிங்கத்தின் மேல் இருந்த கவசங்களை கழற்றி வீசி எறிகிறான். அவை விழுந்த இடங்களுள் முருடேஷ்வரும் ஒன்று. சமீப காலத்தில், பெரிய சிவன் சிலை அமைத்த பிறகு, இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக படகு சவாரி, வாட்டர் ஸ்கீய்ங் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. கோவில் பிரும்மாண்டமாகவும், நவீனமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் தெய்வீகத்திற்கும் குறைவில்லை. 



நாங்கள் சென்ற பொழுது அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கும் நேரம். அப்போது நடக்கும் சீவேலியை காணும் பாக்கியம் கிடைத்தது. சீவேலி முடிந்து கண்குளிற ஸ்வாமி தரிசனம் செய்து, வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனாலும், பெரிய கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் ஏறி பார்க்க முடியாத குறை பலருக்கு இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் கடற்கரை. ஆனால் அங்கிருந்து சிவன் சிலையின் பின் புறத்தைதான் பார்க்க முடிந்தது. நேர் தோற்றம் கிடைக்கவில்லையே என்பது என் வருத்தம். 

மறு நாள் அதிகாலையில் இடகுஞ்ஜி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம். பஸ்ஸை கோவிலுக்கு சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு, நடந்து செல்ல வேண்டும். கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் விஸ்தாரமாக இருந்தாலும், பிரதான கோவில் சிறியதுதான். இடம் என்றால் இடது புறம், குஞ்ஜி என்றால் தோட்டம், ஷராவதி நதிக்கு இடது புறம் அமைந்துளதால் இடகுஞ்சி என்று பெயராம். விநாயகரின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. சாதாரணமாக விநாயகருக்கு நான்கு கரங்கள்(தும்பிக்கையை சேர்த்து ஐந்து) இருக்கும், இங்கு விநாயகருக்கு இரண்டு கரங்கள்தான். இடது கையில் மோதகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்தி, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வாமன ரூப என்பதற்கு ஏற்ப கால்கள் குட்டையாக இருக்கின்றன. விநாயகர் மிகவும் வரப்பிரசாதியாம். இவரிடம் நாம் எதற்காக வேண்டிக் கொள்கிறோமோ அந்த காரியத்தை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுப்பாராம், நம் வேண்டுதல் நிறைவேறியதும், அவரை தரிசித்து, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ காணிக்கை செலுத்தினால் போதுமாம்.

நாங்கள் சென்ற நேரம் காலை அபிஷேகம் துவங்கும் நேரம். எங்கள் குழுவில் எல்லோரும் ஸ்வாமியை தரிசித்துக் கொண்டு வெளியே வந்து விட்டோம். ஒரு தம்பதியினர் மட்டும் வராததால் அவர்களுக்காக காத்திருந்த நேரத்தில் எங்களுக்கும் பால் அபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மனம் குளிர தரிசித்தோம். 

ஹோட்டலுக்குத் திரும்பி, பகலுணவு முடித்துக் கொண்டு, கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கொல்லூர் நோக்கி சென்றோம். 

தல புராணம்: 

துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை விட்டு, தன் இருப்பிடத்திற்கு திரும்ப முடிவு செய்திருப்பதை உணர்ந்த முனிவர்கள் கலியுகம் பிறக்கப் போவதை அறிந்து அச்சம் கொள்கிறார்கள். அதன் தீமைகளிலிருந்து விடுபட கிருஷ்ணரின் உதவியை நாடி, வால்கில்ய முனிவர் கர்நாடகாவின் ஷராவதி நதிக்கரையில் குஞ்சவனத்தில் யாகங்கள் செய்யத் தொடங்கினார். ஆனால் அதில் பலவிதமான தடைகள் வரத் தொடங்க நாரதரின் உதவியை நாடுகிறார். அவர் விநாயகரை வழிபடச் சொல்கிறார். வாலகில்ய முனிவரின் வேண்டுகோளை ஏற்று நாரதரும், மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்னும் ஏரியை உருவாக்குகிறார்கள். அவர்கள் விநாயகரை துதித்து, பார்வதியிடம் விநாயகரை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விநாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கே வர இசைகிறார். அதுவே இடகுஞ்சி ஆகும். அந்த சமயத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு விநாயக தீர்த்தம் என்று பெயரிடப்படுகிறது. விநாயகர் இன்றும் தன்னை வழிபடுவோரின் இன்னல்களை தீர்த்து வருவது கண்கூடு.

Friday, February 2, 2024

கர்நாடகா யாத்திரை

 கர்நாடகா யாத்திரை

கர்னாடகாவில் இருக்கும் சில முக்கியமான,பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்க வேண்டும் என்பது பல நாட்கள் ஆசை. ஃபேஸ்புக்கை மேய்ந்த பொழுது, கர்நாடகா யாத்திரை அழைத்துச் செல்வதாக விளம்பரப் படுத்தியிருந்த சில ட்ராவல்ஸ்களில் திருவடி தரிசனம் என்னும் டிராவல்ஸின் அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. அதில் புக் பண்ணிக் கொண்டேன்.


டிசம்பர் 19 புறப்படுவதாக இருந்தது. டிசம்பரில் சென்னையில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் அங்கிருந்து வந்தவர்கள்(என்னைத்தவிர எல்லோரும் சென்னைவாசிகள்தான்) பயணத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்ததால், பிரயாணம் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற எல்லோரும் சென்னையிருந்து 4ஆம் தேதி மதியம் கிளம்ப, நான் பெங்களூரிலிருந்து பெலகாவி செல்லும் வேறு ஒரு ரயிலில் இரவு புறப்பட்டேன்.  எல்லோரும் ஹூப்ளியில் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் பெங்களூர் வழியாகத்தான் ஹூப்லியை அடையும். அதே ரயிலில் எனக்கும் புக் பண்ணியிருக்கலாம். அவர்கள் ரயிலும் லேட், என்னுடையது அதைவிட லேட். காலை 6:05க்கு ஹூப்ளி செல்லவேண்டிய ரயில் 7:00 மணிக்குத்தான் ஹூப்லியை அடைந்தது. அதற்குள் முன்னால் அங்கு சென்று விட்ட குழுத்தலைவர் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எனக்கு ஃபோன் செய்து, நான் வந்து விட்டேனா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் போய் சேர்ந்ததும், அவருடைய உதவியாளர், என்னிடமிருந்து பெட்டியை பிடுங்கிக் கொண்டு, ஐம்பதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். இங்கு ஒரு சிறு தகவல். ஹூப்ளி ஸ்டேஷனின் நடை மேடைதான் இந்தியாவிலேயே நீளமான நடை மேடை(1505மீட்டர்). இதற்கு முன் இந்தப் பெருமையை கோரக்பூர் ரயில் நிலைய நடை மேடை பெற்றிருந்தது.


ஹூப்லியில் ஒரு ஹோட்டலில் குளித்து, உடை மாற்றி, சிற்றுண்டி(பூரி மசால், வடை, ஊத்தப்பம் சற்று காரமான சட்னி, காபி/டீ) சாப்பிட்டு விட்டு, கர்னாடகா யாத்திரையின் முதல் தலமான கோகர்ணத்தை அடைந்தோம். வழியில் மதிய உணவிற்காக நிறுத்தினார்கள். அதிலும் சாம்பார் சற்று காரமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கு செல்லும்பொழுது மணி பகல் 2:30 இருக்கும். அந்த நேரத்தில் கோவிலின் நடை சாத்தியிருந்தது, மாலை 4:00 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம்.


சக பயணி திருமதி வசந்தா




உத்தர(வடக்கு) கர்னாடகாவில் அரபிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இடம் கோகர்ணம். மிகவும் புராதனமான கோவில். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். பாடல் பெற்ற தலங்களில் கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் இது மட்டுமே. அப்பரும்,சம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.


கோவில் இருக்கும் வீதியிலும், கடற்கரைக்குச் செல்லும் வழியிலும் வரிசை கட்டி நிற்கும் கடைகளில் மசாலா பொருள்களும், கலர் கலராக சாம்பிராணியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மஹாபலேஷ்வர் கோவிலுக்குச் செல்வத்ர்கு முன்பாக ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அதிலிருக்கும் விநாயகர் நாம் சாதாரணமாக பார்க்கும் விநாயகரைப் போல் இல்லாமல் வித்தியாசமாக, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் தல புராணத்தை அறிய வேண்டும்.


நாலு மணிக்குத்தான் நடை திறக்கும் என்றாலும், அதற்கு முன்பே கோவில் திறக்கப்பட்டு விட்டதால், உள்ளே சென்று, வரிசையில் நின்றோம். கேரள பாணியில் அமைந்திருந்த சிறிய கோவில். கேரள கோவில்களைப் போலவே மரத்தில் ஓடுகள் வேயப்பட்ட தாழ்ந்த விதானம். சன்னிதிக்கு எதிரே இரு பக்கங்களிலும் திண்ணைகள். கருவறைக்குள் நாம் சென்றதும் ஆவுடையாருக்கு கீழே புதைந்திருக்கும் மஹாபலேஷ்வர் என்னும் ஆத்மலிங்கத்தை நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் இந்த கோவிலின் சிறப்பு. மற்ற கோவில்களில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்களை பூஜாரியைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. ஆனால் இங்கு எல்லோரும் பூஜிக்கலாம், தொடலாம், தொடுவதற்கு அனுமதிக்கக் காரணம், ஆத்மலிங்கம் அளவில் மிகச்சிறியது. அதை தரிசிப்பது கடினம், தொட்டுதான் உணர வேண்டும்.

ஆதி மஹாபலேஷ்வர் சன்னதி

மஹாபலேஷ்வரை தரிசனம் செய்து விட்டு, கோவிலை வலம் வரும் பொழுது, அருகிலேயே ஆதி மஹாபலேஷ்வர் என்று ஒரு சன்னிதியில் இருக்கும் சிவபெருமானை வணங்கி, நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தாமிரகௌரி என்றழைக்கப்படும் அம்பாளையும் வணங்கி, அங்கிருந்த ஒரு குளத்தை பார்தோம். அந்த குளத்தின் சிறப்பு, அங்கு இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கலாமாம். மேலும் இங்கிருக்கும் கடற்கரையில் இரவில் பைசாச ஸ்ரார்தம் என்று ஒன்றும் தேவஸ்தானதால் நடத்தப்படுமாம்.

இதற்குப் பிறகு, அருகில் இருந்த மஹாகணபதி கோவிலுக்குச் சென்று தலையில் கிரீடம் எதுவும் இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தரும் விநாயகரை வணங்கினோம். முறைப்படி வழிபடுவதாக இருந்தால் முதலில் இந்த விநாயகரைததான் முதலில் வணங்க வேண்டும்.


தல புராணம்:


சிவ பக்தையாகிய ராவணனின் தாயார், தன் மகனுக்காக பிரார்த்தித்து ஒரு சிவ லிங்கத்தை வழிபட்டு வந்தார். அவளுடைய கடுமையான பூஜைக்கு இரங்கி, சிவ பெருமான் வரம் தந்து விட்டால் தனக்கு ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சிய இந்திரன், அவள் பூஜித்த சிவ லிங்கத்தை கடலில் வீசி விடுகிறான். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான தன் தாயாரிடம், தான் கைலாயத்திலிருந்தே சிவலிங்கத்தை பெற்று வருவதாக கூறி கைலாயம் செல்கிறான். கைலாச மலையை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று விட அவன் முயலும் பொழுது சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டு நசுங்கி விடுகிறான். ஆனால் அந்த நேரத்திலும் வீணை வித்தகனான அவன் தன் நரம்புகளையே வீணையின் கம்பிகளாக்கி சாம வேதத்தை வாசிக்க, அதில் மயங்கிய சிவ பெருமான் அவன் முன் காட்சி அளித்து, அவன் வேண்டும் வரம் என்ன? என்று கேட்க, தனக்கும், தான் ஆளும் இலங்கைக்கும் அழிவு வரக்கூடாது என்றும், தன் தாயாருக்காக, சிவலிங்கமும் வேண்டுகிறான். சிவபெருமான் தன் பிராணசக்தியையே மிகச் சிறிய வடிவில் ஒரு லிங்கமாக்கி(ஆத்மலிங்கம்), அதை தலையில்தான் சுமந்து செல்ல வேண்டும் என்றும், கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலிருந்து எடுக்க முடியாது என்னும் இரண்டு நிபந்தனைகளோடு அவனிடம் தருகிறார்.


அவன் அந்த லிங்கத்தை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்த தேவர்கள் கவலை கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கைக்குச் செல்வதை தடுக்க வேண்டுகிறார்கள். ராவணன் திரிகால சந்தியாவந்தனத்தை தவறாமல் செய்பவன் என்பதால், தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தால் சூரியனை மறைத்து, அதே நேரத்தில் விநாயகரை ஒரு சிறுவன் வடிவில் ராவணன் இருக்கும் இடத்திற்கு செல்லுமாறு பணிக்கிறார். மாலை நேர சந்தியாவந்தனம் செய்ய நேரம் வந்து விட்டது ஆனால் லிங்கத்தை கீழே வைத்து விட்டால் எடுக்க முடியாது, அருகில் யாராவது இருந்தால் அவர்களிடம் கொடுத்து விட்டு, சந்தியாவந்தனம் செய்யலாமே என்று யோசிக்கும் அவன் கண்களில் சிறுவனாக வந்த விநாயகர் படுகிறார். லிங்கத்தை வாங்கிக்கொண்ட விநாயகர், “நான் மூன்று எண்ணுவதற்குள் நீ வந்து விட வேண்டும்,வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்கிறார். ராவணனும் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படுகிறான். ஆனால் விநாயகர் அவசர அவசரமாக எண்ணிவிட்டு, ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். பூமியில் பதிந்து விட்ட லிங்கத்தை ராவணன் எத்தனை பலத்தை பிரயோகித்து முயன்றும் எடுக்க இயலவில்லை. அவனுடைய முயற்சியில் அந்த இடமே பசுவின் காது வடிவிற்கு மாறியதாம். அதனால்தான் அவ்விடம் ‘கோகர்ணம்’ என்னும் பெயர் பெற்றது. கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. மிகப்பெரிய பலம் பொருந்திய லிங்கம் என்பதால் அந்த லிங்கம் மஹாபலேஷ்வர் என்னும் பெயர் பெற்றது.


தன்னை ஏமாற்றிய அந்தச் சிறுவனை துரத்திச் சென்று அவன் தலையில் ஒரு குட்டு வைக்கிறான். விநாயகர் தன் உண்மை ஸ்வரூபத்தை காட்ட, திடுக்கிட்டு அவரை குட்டிய தவறுக்கு பிராயசித்தம் செய்யும் விதமாக தன் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு குட்டிக் கொள்கிறான். அதனால்தான் இன்று வரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொள்கிறோம்.


கோகர்ணத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் மஹாகணபதி கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு தலையில் கிரீடம் இல்லை. யானகளுக்கு இருப்பது போல நெற்றியில் இரண்டு முண்டுகளுக்கு இடையில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது ராவணன் குட்டியதால் ஏற்பட்டதாம்.


அம்மனின் பெயர் தாமிரகௌரி. பிரும்மாவின் கையிலிருக்கும் தாமரை மலரிலிருந்து தோன்றிய பெண் சிவபெருமானை மணந்து கொள்ள விரும்பினாள், அதற்காக தவம் செய்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.

Friday, January 26, 2024

கூத்தாடிகள் இல்லை

 கூத்தாடிகள் 

அன்று வெளியில் சென்றுவிட்டு திரும்பிய பொழுது என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் ஒரு சினிமா ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கேரவன் ஒன்று, அவுட்டோர் யூனிட் வேன் ஒன்று, காமிராக்கள், ரிஃப்ளெக்டர்கள், ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள், சந்தேகமேயில்லை, சினிமா ஷூடிங்தான். என் அக்கா வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம், “தமிழ்ப் படமா?” என்றேன். “ஆமாம்” என்றார். “யார் நடிக்கிறார்கள்?” “ஷ்ரத்தா ஸ்ரீ” என்றார்.

“அவங்க வருவாங்களா?”

“வந்துட்டு போய்ட்டாங்க”

எதிரே, ஒருவர் சில முகமூடிகளை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததால், “க்ரைம் த்ரில்லரா?” என்று கேட்டதற்கு, “ஆமாம்” என்றார்.

ஓரு காரின் முன்னால் காமிராவை இணைத்து சில காட்சிகளை படமாக்குவதைப் பார்த்தேன். உள்ளே போய் விட்டேன். மாலையில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார்களாம்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் என் அக்கா வீட்டு வாசலிலேயே படப்பிடிப்பு நடந்ததால் வேடிக்கைப் பார்த்தோம்.

கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவரோடு ஒரு பெண்(துணை நடிகை?) பேசிக்கொண்டிருந்தார். காமிரா கோணங்களை அமைத்து விட்டு, அவரை அழைத்ததும், எழுந்து சென்றவர் அட! ஷ்ரத்தா ஸ்ரீ! மதியம் அவர் சரியாக சொல்லவில்லையா? நான் சரியாக காதில் வாங்கவில்லையா? படங்களில் தெரிவதை விட ஒல்லியாகத்தான் இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லை.

உள்ளே சென்று என் அக்காவை அழைத்து வந்தேன்.

“ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறா”

“யார் அவள்?”

‘விக்ரம் வேதா’வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவள், ‘இறுகப்பற்று’வில் விக்ரம் ப்ரபுவிற்கு ஜோடியாக நடித்தாளே..?”

“நான் சினிமாவே பார்ப்பது கிடையாது” என்றாலும் ஷூட்டிங் பார்ப்பதில் என் அக்காவிற்கு எந்த விரோதமும் இல்லை. வாசலுக்கு வந்தாள்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடந்து வரும் பொழுது, அவரைத் தொடர்ந்து வரும் முகமூடியணிந்த இருவர் அவரைப் பற்றி இழுத்துச் செல்வது போல காட்சி.

முதலில் அவர் நடந்து வர, என்ன இப்படி நடக்கிறார்? என்று தோன்றியது. குடித்து விட்டு நடந்து வருவது போல காட்சியோ?, அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால், டைரக்டர் அவரிடம் ஏதோ சொல்ல, நடையில் இன்னும் கொஞ்சம் தள்ளாட்டத்தை கூட்டி, ஒரிடத்தில் தடுக்கி விழுவது போல செய்தார். இந்த காட்சியையே ஆறேழு முறை எடுத்திருப்பார்கள்.

பிறகு, அவர் கையில் வைத்திருக்கும் ட்ராஃபியை முகமூடி அணிந்திருக்கும் வேறு ஒருவர், வாங்கிக் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்கு அருகில் செல்ல, ஷ்ரத்தாவை இரு முகமூடிக்காரர்கள் காருக்குள் செலுத்துவது போல காட்சி.

என் சகோதரியின் வீட்டு போர்டிகோவில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கச் சொன்னார்கள். ட்ராஃபியை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டிய இளைஞரின் நடை டைரக்டருக்கு திருப்தி தரவில்லை, அவரே செய்து காட்டினார். அதை ஒரு ஆறேழு முறை எடுத்திருப்பார்கள். எங்களுக்கு போர் அடித்ததால் உள்ளே சென்று விட்டோம். இரண்டு காட்சிகளையே இப்படி திரும்பத் திரும்ப எடுக்கிறார்களே, முழு படத்தையும் எத்தனை முறை எடுக்க வேண்டும்? அதுவும் பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளை நினைத்தால் கண்ணைக் கட்டியது. இரவு வெகு நேரம், “காமிரா ரோல், ஆகஷன்..” என்று குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சினிமாவை நாம் வெகு ஈசியாக விமர்சனம் செய்து விடுகிறோம், எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது? நாங்கள் பார்த்த காட்சி புகை மூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சட்டியை பக்கெட் போல தூக்கிக் கொள்ளும் விதமாக அமைத்து,“ஸ்மோக்” என்று குரல் வந்ததும் அதில் நிறைய புகை வரும்படி சாம்பிராணி போட்டு, முன்னும் பின்னும் ஊஞ்சலாட்டியபடி அந்த தளம் முழுவதும் சுற்றி வருகிறார் ஒருவர். மூன்று காமிராக்கள்,அதன் ஆபரேட்டர்கள், ஒருவர் ஒரு பேடில் என்னவோ எழுதிக் கொண்டே இருந்தார். டச் அப் உமன், என்று நிறைய பேர்கள் இருந்தார்கள். நாங்கள் பார்த்த காட்சி படத்தில் இடம் பெறுமா? இடம் பெற்றாலும் எத்தனை நிமிடங்கள் இருக்கும்? அதற்கு இவ்வளவு உழைப்பு. கூத்தாடிகள் என்று துச்சமாக சொல்லக் கூடாது என்று தோன்றியது.

Monday, January 22, 2024

சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்

 சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்


சென்னையில் இருந்தவரை புத்தக கண்காட்சியை தவற விட்டதில்லை. பெங்களூர் சென்ற பிறகு புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத ஏக்கம் வாட்டும். இந்த வருடமும் அந்த வருத்தம் இருந்தது. 

சென்ற வியாழனன்று நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். பத்தாம் நாள் காரியங்களுக்காக சனிக்கிழமை சென்னை வர வேண்டிய நிர்பந்தம். அந்த வேலைகள் முடிந்து மதியம் வீடு திரும்பினோம். மாலையில், "புக்ஃபேர் போகலாமா?" என்று மகன் கேட்டதும் கிளம்பி விட்டேன். "சனிக்கிழமை மாலை, கும்பல் அதிகமாக இருக்கும்" என்றார்கள். நிஜம்தான். தேர்க்கூட்டம், திருவிழா கூட்டத்தை புத்தகத் திருவிழாவில் பார்த்தது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

என் மகன் நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலிலும் அலச,  நான் சற்று மேம்போக்காகத்தான் பார்வையிட்டேன். அதிக நேரம் செலவிட்டால், அதிக புத்தகம் வாங்கி விடுவேன் என்று பயம். 

ஒரு  ஸ்டாலில் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுதுமணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணனை சந்தித்தேன். அறிமுகப்படுத்திக் அவரோடு உரையாடிய பொழுது என்னைப் பற்றி விசாரித்தார். நான் இதுவரை நான்கு மின்னூல்கள், குவிகம் மூலமாக ஒரு சிறுகதை திரட்டும் வெளியிட்டிருப்பது கூறியதும், "நீங்கள் ஏன் மணிமேகலை பிரசுரத்திற்காக உங்களுடைய புத்தகம் ஒன்றை தரக்கூடாது?"(பார்ரா) என்று கேட்டு தன்னுடைய பிஸினஸ் கார்டை கொடுத்தார்(பானு.. என்ன நடக்கிறது இங்க?)


அவரிடம் "எங்கள் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு கடுமையான காலத்தை கடக்க வேண்டியிருந்த பொழுது உங்கள் தந்தை திரு.தமிழ்வாணன் எழுதிய 'துணிவே துணை' என்னும் கட்டுரைகள்தான் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்ததாம்" என்றதும், "அதனால்தான் நான் என் அப்பாவை எங்கே வைத்திருக்கிறேன் பாருங்கள்" என்று அவருடைய மார்பின் இடது பக்கத்தில் தன் தந்தையின் உருவத்தை(கல்கண்டு லோகோ) பச்சை குத்திக்கொண்டிருந்ததை காண்பித்தார். "என் அப்பாவின் வாசகரின் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று விடை பெற்றார்.

நான் வாங்க நினைத்திருந்த நாராயணீயம் புத்தகத்தை கிரி டிரேடிங்கில் வாங்கிய பிறகு வேறு ஒரு ஸ்டாலில் நம் தோழர் ராய செல்லப்பா அவர்களின் நாராயணீயம் புத்தகம் கண்ணில் பட்டது. "அடடா! இதை வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது.

அதன் பிறகு சில பல ஸ்டால்களை பார்வையிட்டுவிட்டு  'விருட்சம்'(குவிகம்) ஸ்டாலை அடைந்தேன். அங்கு லா.ச.ரா.வின் புத்தகம் ஒன்றும், சுஜாதாவின் புத்தகம் ஒன்றும் வாங்கினேன். நம்முடைய 'கல்யாண கதைகள்' இருக்காதா? என்று ஒரு நப்பாசை. "வணக்கம்" என்று பின்னால் ஒரு குரல். திரும்பினால், குவிகம் பதிப்பகத்தை சேர்ந்த திரு.கிருபானந்தன்.(அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறி விட்டேன்) "உங்களுடைய புத்தகம் இருக்கிறதே? பார்த்தீர்களா?" என்றார்.  அட! ஆமாம், டிஸ்ப்ளேயில் என் புத்தகத்தையும் கண்டேன்! கண்டேன்! கண்டேன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பானு.. என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்."அம்மா பரவாயில்லையே, புக் ஃபேரில் புத்தகங்கள் வாங்குவாய். இந்த வருடம் உன் புத்தகம் இடம் பெற்றிருக்கிறது. Congratulations!" என்று கை குலுக்கினான் மகன். ஆம்,  சங்கப் பலகையில் இடம் பிடித்து விட்டேன்,இல்லையா?

Saturday, January 20, 2024

பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha)

பெஸ்டோ  பாஸ்தா(Pesto Pastha)


தேவையான பொருள்கள்:



பாஸ்தா    -  400 கிராம் 

பாலக் கீரை  - 1/2 கட்டு 

கொத்துமல்லி  - 1/4 கட்டு 

பூண்டு  - 7 பல் 

பாதாம்  - 8

முந்திரி பருப்பு - 7

ஆலிவ் ஆயில்  - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு  - 2 டீ ஸ்பூன் 

கரம் மசாலா தூள்  - 1 டீ ஸ்பூன் 

சர்க்கரை  - ஒரு சிட்டிகை 

செய்முறை:

ஒரு அகலமான வாணலியில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.

பாஸ்தா வெந்ததும், அதை வடிய வைத்து, குளிர்ந்த நீரில் அலம்பி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசிறி வைக்கவும். 


சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரை,  கொத்துமல்லி, பூண்டு, பாதாம், முந்திரி இவைகளோடு ஆலிவ் எண்ணையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். 

பாஸ்தா வேகவைத்த வாணலியிலேயே கொஞ்சம் எண்ணெய்  விட்டு, *சீரகம் சேர்த்து வெடித்ததும், பாஸ்தாவை போட்டு, அதோடு அரைத்து வைத்த கீரை, பூண்டு, பருப்புகள் விழுதையும் சேர்த்து கிளறிவிடவும். அந்த கலவையில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை ஒரு சிட்டிகையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு  அல்லது மூன்று நிமிடங்கள் சின்ன தீயில் வைத்திருந்து இறக்கி விடலாம். 

ஜெயா டி.வி.யில் பார்த்ததை நேற்று முதல் முறையாக செய்தேன். என் மகனுக்கும், மருமகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது. Quality of pudding is in eating என்பது நிரூபிக்கப்பட்டது. செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். டொமேட்டோ கெச்சப்புடன் நன்றாக இருந்தது. 

பெஸ்டோ பாஸ்தா -   பெஸ்டோ என்றால் கீரை, ஆலிவ் ஆயில், மற்றும் பருப்புகள் சேர்த்து செய்யும் சாஸ். இதில் வறுத்த வால்நட் கூட சேர்க்கலாம். அப்போது முந்திரியின் அளவை குறைக்க வேண்டும். பாதம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

* அவர்கள் செய்து காட்டியதில் கரம் மசாலா, சர்க்கரை போன்றவை சேர்க்கவில்லை. சப்பென்று இருக்கப் போகிறதே என்று நான் சேர்த்தேன். அதே போல சீரகம் தாளித்ததும் என் விருப்பம். 





     




 

Monday, January 1, 2024

பார்க்கிங் (திரை விமர்சனம்)

 பார்க்கிங் (திரை விமர்சனம்)

 


மலையாளப் படங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை எத்தனை அழகாகவும்,இயல்பாகவும் படமாக எடுக்கிறார்கள்! நம் ஊரில் ஏன் அப்படி எடுக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஏக்கமாக இருக்கும். சமீபத்தில் ‘டிரைவிங் லைசன்ஸ்’ என்னும் மலையாளப் படத்தை பார்த்தேன். அதில் இரண்டு மனிதர்களுக்கு இடையே எழும்  ஈகோ மோதல்தான் கதை, மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே தமிழில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வந்திருக்கும் பார்க்கிங் படமும் இருவருக்கிடையே எழும் ஈகோ மோதலை விவரிக்கும் படம்தான். ஆனால் களம் வேறு.

 

காதல் திருமணம் செய்து கொண்ட ஈஷ்வரும்(ஹரிஷ் கல்யாண்),ஆதிகாவும்(இந்துஜா ரவிசந்திரன்) ஒரு வீட்டின் மாடி போர்ஷனுக்கு குடி வருகிறார்கள். கீழ் போர்ஷனில் அரசு அதிகாரியாக பணி புரியும், காசை எண்ணி எண்ணி செலவழிக்கும் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்), அவர் மனைவி(ரமா) மற்றும் மகள்(பிரதனா நாதன்) பத்து வருடங்களாக வசிக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் மனைவி ஆசைப்படும் எல்லாவற்றையும் நிறைவேற்றுபவர் என்றால், எம்.எஸ்.பாஸ்கர் மிக்ஸியின் ப்ளேட் உடைந்தால் மீண்டும் மீண்டும் சரி செய்து கொடுக்கிறாரே தவிர புதிதாக மிக்ஸி வாங்கித் தர யோசிப்பவர்.

 

கர்பிணியாண மனைவியை செக் அப்பிற்கு அழைத்துச் செல்ல புக் பண்ணிய டாக்ஸிகாரர் கான்ஸல் செய்துவிட, மனைவிக்காக ஒரு புது காரை வாங்குகிறார் ஈஷ்வர். இளம்பரிதியிடம் ஒரு டூவீலர் மட்டும் இருக்கிறது. கார், டூ வீலர் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க் பண்ணுவதில் இருவருக்கும் சின்னச் சின்ன தகராறுகள் வருகின்றன. இதை பஞ்சாயத்து பண்ண வரும் வீட்டு உரிமையாளர், கார் பார்க்கிங், காருக்குத்தான், டூ வீலர் வைத்திருப்பவர் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட, அது இளம்பரிதியின் ஈகோவை உசுப்பி விடுகிறது, அவசியமான செலவு செய்யவே யோசிக்கும் அவர் மொத்தமாக பணம் செலுத்தி, ஒரு புது காரை வாங்கி விடுகிறார். அதன் பிறகு அந்த இருவரில் யார் காரை வீட்டு வாசலில் இருக்கும் கார் பார்க்கிங்கில் நிறுத்துவது என்று இருவருக்கும் நடக்கும் ஈகோ கிளாஷ்தான் மீதிப் படம்.

 

எம்.எஸ்.பாஸ்கருக்கென்ன நடிப்பதற்கு? தூள் கிளப்பி விட்டார். அவர் மனைவியாக வரும் ரமாவும், மகளாக வரும் பிரதனா நாதனும் சிறப்பாக தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக சாஃப்ட் ஹீரோவாக வந்து கொண்டிருந்த ஹரீஷ் கல்யாண் angry young man அவதாரம் எடுத்து, எம்.எஸ்.பாஸ்கருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். குட் மூவ்! அவருடைய கேரியரில் இது ஒரு முக்கியமான படம். அவர் மனைவியாக வரும் இந்துஜா ஜஸ்ட் பாஸ்! பாடல்கள் மனதைத் தொடவில்லை, ஆனால் பின்னணி இசை சிறப்பு! எடிட்டிங்க் மற்றும் திரைக்கதை சூப்பர்ப்!  

 

யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ்தான். மைக்ரோவேவ் அவனில் வைக்கப்பட்ட செல்ஃபோன் அத்தனை நேரம் வெடிக்காமல் இருக்குமா?  இறுதிக் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து விட்டு வரும் ஹரீஷ் கல்யாண் அந்த smugging smileஐ தவிர்த்து, குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கலாம் போன்ற சிறு குறைகளை மன்னித்து விடலாம்.

 

தனியாக வில்லன் கிடையாது, சம்பவங்கள்தான் வில்லன். தனி காமெடி ட்ராக், தேவையில்லாத சண்டை காட்சிகள் போன்றவற்றை தைரியமாக தவிர்த்திருக்கும் புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டலாம்! குட் ஜாப்!




Wednesday, December 13, 2023

மழையும் கொலுவும்:

 மழையும் நானும் கொலுவும்:

பள்ளி நாட்களில் மழை வந்தால் ஜாலியாகத்தான் இருக்கும். மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வந்தால் அப்பா குமுட்டியில் கணகணவென்று தணலை ரேழியின் கதவிற்கு பின்னால் வைத்திருப்பார். 

தலையை துவட்டிக் கொண்டு, அந்த குமுட்டியில் காய வைத்துக் கொள்வோம். கூடத்தின் ஓட்டின் வழியாக மழை நீர் சொட்டினால், குச்சியால் ஓடுகளை தள்ளி ஒழுகலை நிறுத்துவார். பெரிதாக ஒழுகியதில்லை, ஆனால் கூடத்தின் நடுவில் இருந்த முற்றத்தின் மூலம் சாரல் அடிக்கும். அதில் சாக்கை போட்டுக் கொள்வோம். 

எங்கள் வீட்டில் எப்போதும் நவராத்திரி கொலு பெரிதாக அம்மா வைப்பாள். பதினோரு படி+ பக்கத்தில் ஒரு மேஜையில் ராதா கிருஷ்ணன் ஊஞ்சல்+பார்க்க என்று பிரும்மாண்டமாக இருக்கும்.  

ஒரு வருடம் கூடத்தில் கொலு வைத்து விட்டு, எங்கள் மாமா முற்றத்து சாக்கடையை அடைத்து ஃபவுண்டன் 

அமைத்துக் கொடுத்தார். ஃபவுண்டனுக்கு கீழே பீங்கானில் குழலூதும் கிருஷ்ணன். அதைத்தவிர இன்னும் பல பீங்கான் பொம்மைகளை வைத்திருந்தோம்.மிகவும் அழகாக இருந்த அந்த அமைப்பை பலரும் பாராட்டினார்கள். திருஷ்டி பட்டதை போல ஒரு விஷயம் நடந்தது.

அந்த வருடம் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த பத்மாமணி தியேட்டரில் 'திருமால்பெருமை' படம் வந்திருக்கிறது. இரவு காட்சிக்கு பெரியவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது நல்ல மழை கொட்டியிருக்கிறது. முற்றத்தின் நீர் செல்லும் வழியை அடைத்து விட்டதால், தண்ணீர் வெளியேற முடியாமல் முற்றம் நிரம்பி கூடத்திற்குள் வந்த மழை நீர் கிட்டத்தட்ட மூன்று படிகள் வரை மூழ்கடித்து விட்டது. 

சினிமா முடிந்து வீடு திரும்பிய பெரியவர்கள் சாக்கடை அடைப்பை நீக்கி தண்ணீரை வெளியேற்றி விட்டார்கள். நவராத்திரி முடிந்ததும் பொம்மைகளை மச்சில் அதற்குரிய மரப்பெட்டியில் வைத்தாகி விட்டது. 

அடுத்த வருடம் நவராத்திரிக்கு பொம்மைகளை எடுக்கலாம் என்று பெட்டியைத் திறந்த நாங்கள் அதிர்ந்து போனோம். முதல் வருடம் ஈரத்தோடு பொம்மைகளை மரப்பெட்டியில் அடுக்கியதால் கரையான் நிறைய பொம்மைகளை தின்றிருந்தது. மேல் படியில் இருந்த பொம்மைகள் தப்பித்திருந்தன. ஆனால் சிலவற்றில் வர்ணம் போகியிருந்தது. எங்கள் வீட்டு பொம்மைகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது. கரையான் தின்ற பொம்மைகளை களைந்த பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பிரும்மாண்ட கொலு வைக்கவே இல்லை. 😔

Monday, November 13, 2023

திருமண கலாசார மாற்றங்கள்

 திருமண கலாசார மாற்றங்கள்

சென்னைய்யிலிருந்து கும்பகோணம் செல்ல ரயிலில் ஏறி உட்கார்ந்த நாம், “கும்பகோணம் வந்து விட்டதா? கும்பகோணம் வந்து விட்டதா?” என்று அருகில் இருப்பவரை தொனப்புவோம். கும்பகோணமா வரும்? நாமல்லாவா அங்கு செல்கிறோம். அதைப் போலத்தான், “சென்ற வருடம் தீபாவளிக்கு தைத்த சட்டை டைட்டாகி விட்டது” என்போம், சட்டை தைத்த அதே அளவில்தான் இருக்கும், நாம் வெயிட் போட்டிருப்போம், ஆனால் சொல்வதென்னவோ சட்டை டைட் ஆகி விட்டது என்று.

அதே கதைதான் திருமண மாற்றங்களிலும் நடக்கிறது. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மாற்றுவது என்னவோ நாம்தான். ஆனால் ஏதோ ஒரு தேவதையோ, அல்லது சாத்தானோ இந்த மாற்றங்களை கொண்டு வந்தது போல காலம் மாறி விட்டது காலம் மாறி விட்டது என்று புலம்பல்.

கல்யாணங்களில் இதுவரை இல்லாத புது பழக்கங்களை மற்றவர் வீட்டு திருமணங்களில் நடத்தும் பொழுது “இது என்ன புது பழக்கம்? நம் வீட்டில் கிடையாதே?” என்போம். அதே பழக்கத்தை நம் வீட்டுத் திருமணங்களில் கொஞ்சம் பெருமையாகவே நடைமுறை படுத்துவோம். அப்படி வந்ததுதானே நம் திருமணங்களில் கலயாணத்திற்கு முதல் நாள் ரிஷப்ஷனும், மெகந்தியும், சங்கீத்தும்? யாரோ ஒருவர் செய்யப் போக, பியர் பிரஷரில் மற்றவர்களும் தொடர்கிறார்கள்.

பெரியவர்கள் இப்படி சிலவற்றிர்க்கு வளைந்து கொடுக்க, சிறியவர்களின் கேண்டிட் ஃபோட்டோகிராஃபி போன்ற சில ஆசைகளுக்கும் பிடித்திரிக்கிறதோ இல்லையோ கட்டுப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறிய வயதில் அதிகமாக சம்பாதிக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரே ஒரு பெண்ணை வைத்திருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பணம் ஒரு பொருட்டு அல்ல. அதனால் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.

சமீபத்தில் எனக்கு வாட்ஸாப்பில் ஒரு செய்தி வந்தது. உங்களில் பலருக்கும்கூட வந்திருக்கும். மணப்பெண்ணின் பின்னலில் வைத்துக் கட்டும் ஜடை பாதாம், முந்திரி, வால்நட், கிஸ்மிஸ் போன்ற உலர் பழங்களால் தயாரிக்கப் பட்டிருந்தது. என்னுடைய ஒரு தோழி என்னிடம் ஒரு முறை, “உங்கள் பிராமணத் திருமணங்களில் ரிசப்ஷனில் பனிக்கட்டியால் சிற்பங்களும், வெஜிடபிள் கார்விங் என்று காய்கறி அலங்காரங்களும் செய்வீர்கள், நேஷனல் வேஸ்ட்!” என்றார். இந்த உலர்பழ ஜடையை என்ன சொல்வாரோ?

திருமணங்களில் சமீபத்திய மாற்றம் ஃபியூஷன் திருமணங்கள். கலப்புத் திருமணங்கள் அதிகமாகி விட்டதால் இரண்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடக்கும் இந்த திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சிலும் கூட திருமணங்கள் நடக்கின்றன. ஆணவக்கொலை செய்யாமல் ஏற்றுக் கொள்கிறார்களே!

மிக சமீபத்தில் எங்கள் குடும்ப குழுவில் ஒரு திருமண அழைப்பிதழ் பகிரப் பட்டிருந்தது. ஹிந்து முறைப்படி அச்சிடப்பட்டிருந்த அந்த மஞ்சள் நிற பத்திரிகை ஒரு இரு வீட்டார் அழைப்பு. மணமகன் பெயரைக் கொண்டு அவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரிந்தது. மணமகள் ஹிந்துப் பெண். யாரும் மதம் மாறாமல் அவரவர் மாதத்திலேயே இருக்க, பெரியவர்களும் அதை அங்கீகரிக்கிறது நல்ல அந்த அழைப்பு என்னைக் கவர்ந்தது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கும் பொழுது வாழ்த்தத்தானே வேண்டும்? 

Wednesday, November 1, 2023

பெற்றால்தான் பிள்ளையா?

 பெற்றால்தான் பிள்ளையா?

"உன் மகளிடமிருந்து செய்தி" என்றது வாய்ஸ் மெஸேஜர்.
"என்னவாம்?" என்றாள் தீக்ஷா.
"அம்மா, உன் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது, நீ பாட்டியாகப் போகிறாய், உடனே எக்ஸைட் ஆகி அழைக்காதே, ஐயாம் பிஸி. ஐ வில் கால் யூ லேட்டர்"என்றது மகள் நீதாவின் குரல்.
தன் கணிணியை மூடிய தீக்ஷாவுக்கு உடனே மகளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அழைத்தால் பதிலளிக்க மாட்டாள்.
திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி விட்டது. முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டவள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிள்ளை பேற்றை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
வயதாகி முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதையெல்லாம் நவீன மருத்துவம் பொய்யாக்கி விட்டது.
மாலையில் நீதா வீடியோ காலில் வந்ததும், " டாக்டரை பார்த்தியா? எவ்வளவு நாட்கள் ஆகிறது?" என்றதும் நீதா கொஞ்சம் யோசித்து ஐ திங்க் ஃபைவ்மன்த்ஸ்"என்றாள்.
"திங்கா? என்னடி. ?" என்றதும் கொஞ்சம் யோசித்து, செல்போனில் எதையோ தேடி, ஆ.. ஐஞ்சு மாசங்கள் முடிஞ்சாச்சு.." என்றாள் நீதா.
"மை காட்!" இத்தனை நாள் எங்கிட்ட சொல்லவேயில்லை..?" கொஞ்சம் தள்ளி நில், உன்னை முழுமையாக பார்க்கிறேன்" என்றதும், காமிராவை விட்டு தள்ளி நின்று கையாட்டினாள்.
"என்னடி இது? ஐஞ்சு மாசம் முடிஞ்சாச்சு என்கிறாய், வயிறே தெரியலை..?"
"எனக்கு ஏன் வயிறு தெரியனும்?" என்று நீதா கேட்டதும், தீக்ஷாவுக்கு குழப்பமாகியது.
"நீ கர்பமாக இருப்பதாக சொன்னாயே..?"
நான் எங்கே அப்படி சொன்னேன்? நீ அப்படி புரிந்து கொண்டிருக்கிறாய்"
" நான் பாட்டியாக வேண்டும் என்றால் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்?"
தீக்ஷா இப்படி கேட்டதும்,"வெயிட் வெயிட், எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆனால் நான் கர்ப்பமாக இல்லை.. எங்கள் குழந்தையை சுமக்க ஒரு வாடகைத் தாயை புக் பண்ணி விட்டோம்"
"உன் குழந்தையை உன்னால் சுமக்க முடியாதா?"
"கஷ்டம் மா..இப்போது என் கேரியர் ரொம்ப க்ரூஷியல் ஸ்டேஜில் இருக்கு. ஃபர்ஸ்ட் நானே பெத்துக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனால் என் ஃப்ரண்டு வாமிட்டிங்,நாஸியானு பட்ட கஷ்டத்தை பார்த்ததும் வேண்டாம், சர்ரகஸி இஸ் பெட்டர்னு தோணிடுத்து. ரகு ஆல்ஸோ ஓகே வித் திஸ்."
"வளர்க்கவாவது செய்வியா..?"
"கண்டிப்பா.. பட் இனிஷியலா பார்த்துக்க நானி புக் பண்ணியாச்சு"
யாரோ பெத்து குடுக்க போறா, யாரோ வளர்க்க போறா..நீ என்ன அம்மா..?"
"பட் ஸ்டில் அது எங்களோட குழந்தை. கொஞ்சுவோம், விளையாடுவோம், படிக்க வைப்போம்.."
அம்மா அலுத்துக் கொண்டதற்கு சமாதானமாக பதில் சொன்னாள்.
"இதுக்கு பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே..?"
"அம்மா உனக்கு புரியவில்லையா? தத்து குழந்தை எங்கள் குழந்தை கிடையாது. இது எங்கள் குழந்தைதான், எனக்கு கர்ப்ப கால தொந்தரவுகள் கிடையாது. எவ்வளவு சௌகரியம்!"
"ம் ம், என்னவோ போ.. அந்த வாடகைத் தாய் எப்படிப் பட்டவள்?"
"அதெல்லாம் நல்ல பெண்தான். நல்ல ஏஜென்சி மூலம் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்". என்று நீதா சொன்னதும், 2023க்கு முன்பாகவே வாடகைத் தாய் கான்செப்ட் வந்து விட்டாலும், 2053ல் இது மிகவும் பிரபலமாகி விடும் என்று அப்போது தோன்றவேயில்லையே..? என்று தீக்ஷா நினைத்துக் கொண்டாள்.

Tuesday, October 31, 2023

மாற்றம்

'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 

வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம்.  கடலைக் கடந்தது,  அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?

நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா?  சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?

பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.

விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். 

குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.

இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.

பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.

கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.

கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும். 

கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.

புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.

அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.

இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.

இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.

காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும். 

வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார். 

நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.

Thursday, October 26, 2023

நவராத்திரி அலப்பறைகள்

நவராத்திரி அலப்பறைகள்


எங்கள் குடியிருப்பில் நவராத்திரி நவராத்திரி முதல் நாள் ஒரு சிறப்பு பூஜை இருந்தது லலிதா சகஸ்ரநாம சகஸ்ரநாம பாராயணம், பக்தி பாடல்கள் என்று நடந்த பூஜையில் பிரசாத வினியோகமும் இருந்தது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, தயிர் சாதம் என்று ஐட்டங்கள். "புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா"? என்று கேட்டார் ஒருவர். எனக்கு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடித்த புதிதில் அதன் நிர்வாகி ஒருவர் மஹாபெரியவரை பார்க்கச் சென்றாராம். சென்றவர் மஹா பெரியவரிடம், "நாங்கள்,கோவிலில் , சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று போட்டு, வருகிறவர்களுக்கு தாராளமாக வயிறு ரொம்பும் அளவு வினியோகிக்கிறோம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் நிறைய கொடுக்க கூடாது, கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய் என்றாராம். இவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக போய் விட்டதாம். 

கோவிலில் வழக்கம் போல பிரசாத வினியோகம் தொடர்ந்து கொண்டிருந்ததாம். ஒரு நாள் காலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கியிருக்கிறார்கள். அதை சாப்பிட்ட ஒருவர், இவரிடம் வந்து, " நீங்க என்ன பண்ணுங்க.. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் போட்டு விடுங்கள், சாப்பிட சௌகரியமாக இருக்கும்" என்றாராம். அப்போதுதான் அவருக்கு பெரியவா சொன்னது புரிந்ததாம். எல்லோருக்கும் புரிய வேண்டும். 

நேற்று சரஸ்வதி பூஜை, உறவினர் ஒருவர் கிரக பிரவேசம் வைத்திருந்தார். அவர்கள் பூஜை மணி கேட்டதால் கொடுத்தோம். கிரக பிரவேசம் அதிகாலையில் முடிந்து விடும், அதன் பிறகு நம் வீட்டு பூஜைக்கு மணியை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தோம், ஆனால் எடுத்து வர மறந்து விட்டோம். நைவேத்தியம் செய்யும் பொழுதும், தீபாராதனையின் பொழுதும் மணி அடிக்க வேண்டுமே..? என்ன செய்வது? என்று யோசித்தேன். இருக்கவே இருக்கிறது யூ ட்யூப், அதில் மணியை ஒலிக்கச் செய்து விட்டேன்.. எ..ப்..பூ..டி..?! எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் பிராமண பையன் வட இந்தியப் பெண்ணை மணந்து கொண்டான். தென்னிந்திய முறைப்படி திருமணம். ஆனால் திருமணத்தில் நாதஸ்வரம் கிடையாது. கெட்டி மேளம் உட்பட D.J. வைத்தே சமாளித்தார்கள். வாழ்க டெக்னாலஜி!

Sunday, October 8, 2023

குஷி(தெலுங்கு)

 குஷி(தெலுங்கு)


எத்தனை நாட்களாயிற்று இப்படி ஒரு காதல் கதையை திரையில் பார்த்து? எங்கே பார்த்தாலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆகாயத்தில் பறக்கும் கார்கள், தீப்பிழம்புகள் என்று பார்த்து அலுத்த கண்களுக்கு இதமாக அழகான இடங்கள், அதைவிட கண்களுக்கு குளுமையாக அழகான ஜோடி. அற்புதமான கெமிஸ்ட்ரியோடு(இதற்கு ஒரு தமிழ் வார்த்தையை யாரவது கண்டுபிடியுங்கள்,ப்ளீஸ்)இப்படி ஒரு ஜோடியை திரையில் பார்த்தும்தான் எத்தனையோ நாட்களாகி விட்டது.

கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானியான ஒருவரின் மகனும், புராண பிரவசனங்கள் செய்யும், கடவுள் மற்றும் சடங்குகள் முடலியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவரின் மகளும் காதலித்து மணமுடிக்கிறார்கள். சில காலம் வரை அவர்கள் எக்கச்சக்க முத்தங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். கதாநாயகியின் குழந்தை ஆசை நிறைவேறாத பொழுது தன் தந்தை கூறியபடி ஒரு பரிகார ஹோமம் அதுவும் மகன், தந்தை இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆராத்யா(ஸமந்தா) வலியுறுத்த, “என் அப்பாவுக்கென்று சொஸைட்டியில் ஒரு மரியாதை இருக்கிறது, அவர் இப்படிப்பட்ட ஹோமங்களை ஒரு நாளும் செய்ய மாட்டார்” என்று விப்லவ்(விஜய் தேவரகொண்டா) மறுத்துவிட, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இருவரும் இணைந்தார்களா? விப்லவ் அப்பா ஹோமத்திற்கு ஒப்புக் கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை. விப்லவ் மிகவும் இறங்கி வந்து தன் காதலை வெளிப்படுத்திய பிறகும் ஆராத்யா ஏன் அத்தனை பிடிவாதமாக பிரிந்து போகிறாள் என்பது புரியவில்லை.

விஜய் தேவரகொண்டாவின் உயரதிகாரியாக ரோகிணி, அவர் கணவராக ஜெயராம், வி.தே.வின் அம்மாவாக சரண்யா, சமந்தாவின் பாட்டியாக லக்ஷ்மி, என்று நிறைய தெரிந்த முகங்கள். அப்பாக்களாக சச்சின் கேடேகர், முரளி ஷர்மா என்று எல்லோருமே தங்கள் பகுதியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். சரண்யா அப்பாவி, அம்மா என்னும் டெம்ப்ளேட்டிலிருந்து வெளி வந்தால் நல்லது. கண்ணுக்கினிய லொகேஷன், காதுக்கினிய பாடல்கள், படத்தோடு இணைந்த நகைச்சுவை, விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் நெருக்க்க்கமான காட்சிகள் படம் ஓடாமல் இருக்குமா? ரசிகர்களுக்கு குஷிதான்!

Sunday, September 24, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

 போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

படம் உபயம் கூகுள் 

என் பேத்தியோடு திருச்சி கோவில்களுக்குச் சென்றதை மூன்று பகுதிகளாக எழுதினேன். நிறைவுப் பகுதியானா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றதை எழுதுவதற்கு ஏனோ இத்தனை நாட்களாகி விட்டது

ஸ்ரீரங்கத்தில் பல வருடங்கள் இருந்திருந்தாலும் ஒவ்வொரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும்பொழுதும் மனம் விகசிக்கும். எத்தனையெத்தனை மகான்கள் இங்கு வந்து அரங்கனை தொழுதிருக்கிறார்கள்! இங்குதானே ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்தார்கள்! பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் அல்லவா? இங்கிருப்பது சாட்சாத் ராமபிரானின் முன்னோர்கள் வழிபட்ட, அவர்களின் குலதெய்வம் அல்லவா? என்றெல்லாம் நினைவுகள் அலைமோதும். என் பேத்தியோ முதல்முறையாக திருவரங்கம் வருகிறாள்.


இதை எடுத்தது என் பேத்தி 

நாங்கள் முதலில் 21 கோபுரங்களை தரிசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கருடாழ்வாரை தரிசித்தோம். பிரும்மாண்டமான கருடாழ்வாரை பார்த்த அவள், “ஆ..! இவ்ளோ பெரிய கருடனா?” என்று வியந்தாள். “ஆமாம் இங்கு எல்லாமே பெரிசு. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய திருவடி” என்றேன். அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்றாள். ஆசி வாங்கிக் கொண்டு, கட்டண சேவைக்காக நுழைவு சீட்டு வாங்க காத்திருந்த நேரத்தில் அவளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் தல புராணம் சுருக்கமாக சொன்னேன். அப்போது பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றியிருந்ததால் முகமண்டலம் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னதியை விட்டு வெளியே வந்தவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ஐ குட் நாட் சீ த ஸ்னேக், தே புஷ்ட் மி” என்றாள். “நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்” என்று கூறி சமாதானம் செய்து விட்டு, தாயார் சன்னதிக்ககுச் சென்றோம்.

தாயார் சன்னதியில் பூ வாங்கிக் கொண்டோம். அங்கிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர், இவளிடமிருந்து பூவை வாங்கிக்கொண்டு, “இங்கு மூன்று பேர்கள் இருக்கிறார்கள், ரங்கநாயகி, பூமாதேவி, மஹாலக்ஷ்மி, இந்த மூவரில் யாருக்கு இந்த பூவை சாற்ற வேண்டும்? ஒன்? டூ? திரி?” என்றார். அவள் டூ என்றதும், மத்தியில் இருந்த தாயாருக்கு சாற்றி, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார்.

*அங்கிருந்து கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்திற்கு வந்ததும், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய பொழுது அவர் ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தை விவரித்திருந்த விதம் சரியில்லை என்று அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூறினாலும் மேட்டழகியசிங்கராகிய நரசிம்மர் கர்ஜனை செய்ததால் ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்” என்று நான் சொன்னதும், “அரங்கேற்றம் என்றால் என்ன?” என்று கேட்டாள். “புக் பப்ளிஷ் பண்ணி, அதை லான்ச் பண்ணுவது” என்றேன். உடனே, எனக்கு அந்த நரசிம்மரை பார்க்கணும்” என்றாள்.

அந்த படிகளில் ஏறிச் சென்றால் அவரை தரிசிக்கலாம். நீ போய் தரிசனம் செய்து விட்டு வா. நேற்று மலைக்கோட்டையில் ஏறியதில் எனக்கு கால் வலிக்கிறது. நான் கீழே நின்றபடியே தரிசித்துக் கொள்கிறேன்” என்று அவளை மேலே அனுப்பினேன். மேட்டழகிய சிங்கரை தரிசித்துவிட்டு வந்தவள், “வென் ஐ ரோட் அ புக் அண்ட் பப்ளிஷ், யூ ஷுட் ஹெல்ப் மீ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றவள் தொடர்ந்து, “வில் ஹீ அண்டர்ஸ்டாண்ட் இங்க்லிஷ்? பிகாஸ் ஐ பிரேட் டு ஹிம் இன் இங்கிலிஷ் ஒன்லி” என்றாளே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்பு வந்தது. “தமிழ் கடவுள், சமஸ்கிருத கடவுள், என்றெல்லாம் நாம் பிரித்து பேசும் பொழுது கடவுளுக்கும் இப்படித்தான் சிரிப்பு வருமோ?  

*கம்பர் ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியெல்லாம் நான் கூறவில்லை.






 "

Wednesday, August 23, 2023

தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்

முன்குறிப்பு: இது கோவில் பற்றிய பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவு செய்து நகர்ந்து விடவும். நன்றி.


தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்


காலையில் முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு, மாலையில் மலைகோட்டை சென்று தாயுமானவரையும், உச்சிப்பிளையாரையும் தரிசிக்கலாம் என்று பேத்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். தாயுமானவர் சன்னதியில் வாழைத்தார் கட்ட வேண்டிய பிரார்த்தனை இருந்தது.


முதலில் மலையேற வேண்டும் என்றதும், அந்த பாறையில் ஏற வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ, வருவதற்கு கொஞ்சம் முரண்டு பிடித்தாள். “அங்கு படிகள் இருக்கும், உன்னால் முடிந்தால் ஏறு, இல்லாவிட்டால் போக வேண்டாம்” என்று என் மன்னி, அவளை கன்வின்ஸ் செய்தார். ஆட்டோகாரர், நேராக தாயுமானவர் சன்னிதிக்கு செல்ல படிகள் துவங்கும் இடத்திலேயே நிறுத்தினார். இருந்தாலும், மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் செல்ல மனம் வரவில்லை. கீழே சென்று மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு, மலையேறத் துவங்கினோம். கிடுகிடுவென்று படிகளில் ஏறியவள், “பாட்டி யூ ஆர் ஸ்லோ” என்றுஅலுத்துக் கொள்வாள். “நாங்களும் இப்படி வேகமாக ஏறியிருக்கிறோம், இப்போது வயதாகி விட்டது” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். உள்ளுக்குள் இன்னொரு முறை தாயுமானவரை தரிசிக்க முடியுமா? என்று ஏக்கமும் வந்தது.


தாயுமானவர் சன்னிதியில் அபிஷேக நேரம். அதற்குள் அம்பாள் சுகந்த கூந்தலாம்பாளை தரிசித்து விட்டு வந்தோம். தாயுமானவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழும். ரத்னாவதிக்கு பிரசவம் பாரப்பதற்காக தாயாக வந்தவர் அல்லவா? என் மகளின் இரண்டாவது பிரசவம் கொரோனா காலத்தில் நிகழ்ந்ததால், என்னால் உதவிக்கு போக முடியவில்லை. அவளிடம், “தாயுமானவரை நினைத்துக்கொள்”என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தேன். பேத்திக்கும் அந்த கதையைக் கூறினேன். தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தாரை வைத்து,அர்ச்சனை செய்து, வழிபட்டுவிட்டு, உச்சி பிளையாரை தரிசிக்கச் சென்றோம். வழியில் குளிர் பானங்கள், சிப்ஸ் போன்றவை விற்கும் சிறிய கடை வைத்திருப்பவர் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது என்று கூறி ஆச்சரியமூட்டினார். பே.டி.எம். வைத்திருந்தாலும், “சில்லறை இல்லை என்று கூறினால், வியாபாரம் பண்ண முடியாது, தினசரி இரவு பெட்ரோல் பங்கில் சில்லறை மாற்றிக் கொண்டுவிடுவேன்” என்றார். உச்சிப் பிள்ளையாரை வணங்கி, கீழே இறங்கினோம்.

ஊர்த்துவ தாண்டவ சிற்பம்

இந்த சங்கிலி இரும்பினால் ஆன தில்லை, கருங்கல் சங்கிலி!


கீழே இறங்கும் பொழுது, என் பள்ளி பருவத்தில் தோழிகளொடு பெட் வைத்து கீழே இறங்கியபொழுது கால் தடுக்கி விழுந்து, சுளுக்கிக் கொண்டு, கால் புசுபுவென்று வீங்கிக் கொண்டு, பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட நேர்ந்ததை சொன்னதைக் கேட்டு, பயந்து விட்டாள். “யூ ஆர் டெல்லிங் ஸ்கேரி ஸ்டோரி” என்று மெதுவாக இறங்கினாள். சாரதாஸில் கொஞ்சம் பர்சேஸ் செய்து கொண்டு(திருச்சிக்கு போய் விட்டு சாரதாஸ் போகாமல் வர முடியுமா?), அவளுக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமும், நான் ஜிகிர் தண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம். ஜிகிர் தண்டா சென்னையில் ஒரு மாதிரியாகவும் திருச்சியில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. மதுரையில் எப்படி இருக்கிறது என்று சுவைத்து பார்க்க வேண்டும்.

தல புராணம்:

இப்போது தாயுமானவர் என்று அறியப்பட்டாலும், ஆதி காலத்தில் இவருக்கு ஜவந்தி நாதர், அல்லது ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம். ஜவந்தி பூக்கள் நிறைந்த காடாக இருந்ததால் அந்தப் பெயர். அம்பாள் மட்டுவார் குழலம்மை அல்லது, சுகந்தி கூந்தலாம்பாள். இந்த ஜவந்தீஸ்வரரிடம் பக்தி பூண்ட ரத்னாவதி என்னும் செட்டிப் பெண் தினசரி அவரை வந்து தரிசனம் செய்வாள். அவள் கருவுற்றபொழுது அவளுடைய தாயார் பிரசவ நேரத்தில் உதவி செய்வதற்காக புறப்பட்டு வருகிறாள். ஆனால், அந்த சமயம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்துவிட, அவளால் வர முடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவ வலி எடுத்து விடுகிறது. அவள் தினசரி சென்று வணங்கிய ஜவந்தீஸ்வரர் தானே ரத்னாவதியின் தாயாரைப் போல வந்து, பிரசவம் பார்த்து, அதற்குப் பிறகு அவளுக்கு பத்தியம் வடித்து போடுவது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்றவைகளை செய்கிறார்.

வெள்ளம் வடிந்த பிறகு, மகள் வீட்டிற்கு வருகிறாள் தாய். தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ வேலையாக இருந்த மகள் வீட்டிர்க்குள் நுழையும் அம்மாவிற்கு முகமன் கூறி வரவேற்கவில்லை. தன்னை மகள் வரவேற்காததை விட, மகளின் வடிந்த வயிரும், தூளியில் தூங்கும் குழந்தையும் அதிர்ச்சி அளிக்கின்றது. “ என்னடி இது? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை? எப்போது பிறந்தது?” என்று தாயார் கேட்டது மகளுக்கு ஆச்ச்ரயமாக இருந்தது. “ என்னம்மா? நீதானே பிரசவம் பார்த்தாய்? இப்போது புதுசா, எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறாய்?” “நான் வந்தேனா? ஆற்றில் வெள்ளம் வந்ததால், என்னால் வர முடியவில்லை, வெள்ளம் வடிந்த பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று அம்மா சொன்னதும் அதிர்ச்சியடைந்த ரத்னாவதிக்கு தனக்கு தாயாக வந்து உதவியது அந்த ஜவந்தீஸ்வரர்தான் என்பது புரிய, “எனக்காக இறங்கி வந்தீர்களா?” என்று புளகாங்கிதம் அடைந்து கேட்கிறாள். சிவ பெருமானோ,  நீ தினசரி என்னைப் பார்க்க மேலே ஏறி வந்தாயே? அதனால்தான் நான் உனக்காக இறங்கி வந்தேன்” என்றாராம். அது முதற்கொண்டே பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொண்டு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.  



திருச்சி மலைக்கோட்டை இமயமலையை விட மூத்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து..’என்பார்களே அப்படி உலகில் முதலில் தோன்றிய கல் மலை இது. இதன் மேலிருக்கும் கோவில் மகேந்திரவர்மன் காலத்து குடைவரை கோவில். இங்கிருக்கும் லிங்கத் திருமேனி திருவுடைமருதூர் மஹாலிங்கத்திற்கு இணையாக பெரிதானது. பின்னாளில்தான் இவைகளை விட பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. மூன்று முழமும் ஒரு சுத்து,முப்பது முழமும் ஒரு சுத்து என்னும் சொலவடைக்கு காரணமான கோவில்கள் இவை. அதாவது இறைவனுக்கு சாற்றும் ஆடை மூன்று முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும், முப்பது முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும் என்பது பொருள்.

தாயுமானவர் மீது அதீத பக்தி பூண்டவர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள். தாயுமானவரை தரிசிக்கும் பலர் தங்கள் தாயை நினைவு கூர்ந்து கண் பனிப்பதுண்டு.


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே