பரவசம் தந்த நவ திருப்பதியும்
நவ கைலாசமும் - 2
விஜயாசன பெருமாள் கோவில் - வரகுணமங்கை |
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அடுத்த திருப்பதியான வரகுணமங்கையை நோக்கிச் சென்றோம். வரகுணமங்கை என்று குறிப்பிடப்பட்டாலும் நத்தம் என்றே அறியப்படுகிறது. நவகிரஹங்களில் சந்திரனுக்கு உரிய ஷேத்திரம்.
மூலவர் விஜயாசன பெருமாள் விஜயம்(வெற்றி) என்னும் பெயருக்கேற்றாற்போல இடது கை நம்மை வா என்று அழைக்க, வலது கை அபய ஹஸ்தமாக வெகு கம்பீரமாக ஆதிசேஷன் குடை பிடிக்க, அதன் மீது அமர்ந்திருக்கிறார். மனதை கொள்ளை கொள்ளும் அழகு! தாயாருக்கு தனி சன்னிதி இல்லை. உற்சவர் எம் இடர் கடிவான் இரண்டு தாயார்களோடு சேவை சாதிக்கிறார். சிறிய கோவில்தான்.
தல சிறப்பு: ரேவா நதிக்கரையில், புண்ணியகோஸம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த வேதவித் என்னும் அந்தணர் தன லௌகீக கடமைகளை முடித்த பிறகு, மஹாவிஷ்ணுவின் திருவடியை அடையும் பொருட்டு தவம் செய்து வந்தார். அவருக்கு ஸ்ரீமன் நாராயணனே ஒரு அந்தணராக வந்து வரகுணமங்கைகுச் சென்று தன் தவத்தை தொடரச் சொல்ல, வேதவித்தும் அவ்விதமே வரகுணமங்கையை அடைந்து ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததாக வரலாறு. ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததால் இங்கு பெருமாள் விஜயாசனத்தில் வீற்றிருக்கிறார்.
ரோமச மஹரிஷி, அக்னி பகவான், சத்யவான் மனைவியான சாவித்திரி ஆகியோருக்கு பெருமாள் இங்கு காட்சி அளித்திருக்கிறார். இங்கே இருப்பவர்களுக்கு முக்தி என்பது ஒரு நம்பிக்கை.
புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்துவை குந்தத்துள் நின்று
தெளிந்தவெண் சிந்தை அகங்கழி யாதே
என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்பநீ காணவா ராயே.
என்ற ஒரே ஒரு பாசுரத்தால் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
அங்கு பெருமாளை சேவித்து விட்டு அடுத்து திருப்புளியன்குடி என்னும் புதன் ஷேத்திரத்திற்கு வந்தோம். இங்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமாளின் திரு உந்தியிலிருந்து(தொப்புளிலிருந்து) பிரம்மா காட்சி அளிக்கிறார். மூலவர் பூமிபாலன். தாயார் லட்சுமி தேவி என்னும் மலர் மகள். உற்சவ தாயாருக்கு புளிங்குடிவல்லி என்னும் திருநாமம்.
இங்கு கர்ப்பகிரஹத்தில் பெருமாளின் திருமுகமண்டலத்தை சேவித்து, திருவடியை பிரகாரம் வலம் வந்து ஒரு ஜன்னல் வழியாக சேவிக்க வேண்டும். திருவடிக்கருகில் லட்சுமி தேவியும், பூமா தேவியும் அமர்ந்து பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கல்கண்டு, உலர்ந்த திராட்சை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். குழந்தை பேற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்குமாம். இதுவும் சற்று சிறிய கோவில்தான்.
ராஜ கோபுரம் அப்படி சொல்ல முடியாமல் மொட்டை கோபுரமாக நிற்கிறது. |
தல வரலாறு:
ஒரு முறை லட்சுமி தேவியுடன் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி தனித்திருந்த பொழுது, பூமிக்கு வந்தும் தன்னை உதாசீனப் படுத்துகின்றாரே என்று பூமிதேவி மனம் வருந்தி, கோபித்து பாதாள லோகத்திற்கு சென்று விடுகிறார். அதனால் பூலோகம் இருண்டு விடுகிறது. உடனே, திருமால் லட்சுமி தேவியுடன் பாதாள உலகம் சென்று, தனக்கு இருவருமே சமம்தான் என்று சமாதானப்படுத்தி, இருவருக்கும் நட்பு உண்டாக்கி இரெண்டு பேருடனும் இங்கே எழுந்தருளுகிறார். பூமி தேவியை சமாதானம் செய்ததால் இங்கு அவர் பூம் பாலன் என்று வழங்கப்படுகிறார்.
தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். தன் சாப விமோசனத்தால் மகிழ்ந்து தேவேந்திரன் பெரிய யாகம் ஒன்றை செய்ய, அதற்கு வருகை தந்த வசிஷ்டரின் மகளையும், அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் தவறான கடும் சொற்களை பேசிய யக்ஞசர்மா என்னும் அந்தணன் அரக்கனாக சபிக்கப்பட்டான். அவன் தன தவறை உணர்ந்து வருந்தியதால் அவனுக்கு பாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம் இதுதான்.
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
அடுத்தது நாங்கள் சென்றது நம்மாழ்வாரின் அவதார தலமாகிய ஆழவார் திருநகரி. மிகவும் விசேஷமான தலமாகிய இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் எனவே ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் சந்திக்கலாம்.
// ராஜ கோபுரம். அப்படிச் சொல்ல முடியாமல்...//
ReplyDeleteஎன்ன காரணத்தால் பாதியில் நின்றதோ... அதே சமயம் தமிழகக் கட்டிடக்கலை மாதிரி தெரியாமல் வித்தியாசமாய் இருக்கிறதோ...
நீங்கள் பின்னால் தெரியும் வெள்ளை கட்டிடத்தையும் சேர்த்து பார்த்து விட்டு கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். கோபுரம் முழுமையாக முடிக்கப்படாத பொழுது இப்படித்தான் இருக்கும். ஸ்ரீரங்கதின் தெற்கு வாசல் ராய கோபுரம் கூட முடிக்கப்படாமல் இருந்த பொழுது இப்படித்தான் இருந்தது.
Deleteநாங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களுக்கு அழைத்துச்செல்கின்றீர்கள், பதிவு மூலமாக. நன்றி.
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.
Deleteபுளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று
ReplyDeleteதெளிந்த என் சிந்தை அகம் கழியாதே, என்னை ஆள்வாய் எனக்கு அருளி,
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் கிடப்ப, நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
(உங்கள் பதிவில் உள்ள பாடலில் எழுத்து பிழை இருக்கு. அதனால் புரியும்படி எழுதியிருக்கிறேன்).
புளிங்குடி என்ற திருத்தலத்தில் கிடந்த கோலம் (சயனித்த கோலம்), வரகுணமங்கையில் அமர்ந்திருக்கும் கோலம், திருவைகுந்தத்தில் நின்றிருக்கும் திருக்கோலம்.
பல கோவில்களில் கோபுரங்கள் பாதியில் நிற்பதற்கு முக்கியமான காரணம், அரசர், பல திருக்கோவில்களில் கோபுரங்களை எழுப்பும் பணிகளை ஒரே சமயத்தில் தொடங்கியிருப்பார், நடந்துகொண்டிருக்கும்போது பெரிய போரில் தோல்வியுற்றிருப்பார். அதனால் ஆட்சி மாறியிருக்கும், பழைய திருப்பணிகள் அப்படியே நின்றிருக்கும். திருவரங்கத்திலும் தெற்கு வாசலில் ராயர் கோபுரம்/மொட்டைக் கோபுரம் என்பதும் அப்படித்தான் கிருஷ்ணதேவராயரால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது தோல்விக்குப் பின், மொட்டையாகவே நின்றுவிட்டது (பின்னர் 80களில் அஹோபிலமடம் ஜீயர், பலரின் உதவியோடு இப்போது நாம் காணும் பெரிய கோபுரத்தை எழுப்பினார், பலவித எதிர்ப்பு, பிரச்சனைகளுக்கு நடுவில்)
//(உங்கள் பதிவில் உள்ள பாடலில் எழுத்து பிழை இருக்கு. அதனால் புரியும்படி எழுதியிருக்கிறேன்).//
Deleteஎழுத்துப் பிழை எதுவும் இல்லை நெல்லை. நான் சந்தம் பிரிக்காமல் செய்யுளில் உள்ளபடியே எழுதியிருக்கிறேன். நீங்கள் புரிவதற்காக பிரித்து எழுதியிருக்கிறீர்கள். எழுத்துப் பிழை என்று கூறி விட்டீர்களே..! கர்ர்ர்..
திருநகரி செல்லவேண்டும் என்கிற நினைவு என்றும் உள்ளது...
ReplyDeleteகண்டிப்பாக ஒரு முறை சென்று விட்டு வாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய தலங்கள்.
Deleteஅழகான இடம்.... படங்கள் இன்னும் சேர்த்திருக்கலாம்.
ReplyDeleteதொடர்கிறேன்.
நாங்கள் சென்று வந்த நினைவுகளை மீட்டெடுக்கிறேன். நன்றி.
ReplyDeleteஇங்கு செல்லும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை..
ReplyDeleteஆனாலும் தங்கள் பதிவின் வழி அருமையான தரிசனம்..
வணக்கம் சகோதரி
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டிலேயே நிறைய கோவில்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதில் இக்கோவில்களும் அடங்கும். இங்கெல்லாம் போகும் சந்தர்பத்தை "அவன்" இன்னமும் ஏற்படுத்தி தரவில்லை. அதுவரை தங்கள் பதிவின் மூலமும், படங்களின் மூலமும் அருமையாக தரிக்கும் வாய்ப்பை தந்ததற்கு மிக்க நன்றி. அழகான படங்கள் அருமையான விளக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.