கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 15, 2011

konjam kavithai



 

 
சூடுதான், காய்ந்துவிட்டு போகட்டுமே வெய்யில்
கதவைத் திறந்து வை!
புழுதிதான், வீசிவிட்டு போகட்டுமே காற்று
கதவைத் திறந்து வை!
ஈரம்தான், நனைத்து விட்டு போகட்டுமே மழை
கதவைத் திறந்து வை!
வாடைதான் வீசிவிட்டுப் போகட்டுமே குளிர்
கதவைத் திறந்து வை
தென்றலும் ஒரு நாள் வீசும்
கதவைத் திறந்தே வை!
                                        









  


  

Thursday, May 26, 2011

Ko - film review

கோ 

கே.வி. ஆனந்தின் படைப்பில் வெளி வந்திருக்கும் மற்றொரு படம். அரசன் என்று பொருள் தரும் அழகான தமிழ் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இளங்கோ என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? 


நாட்டில் நல்ல ஆட்சி நிலவ வேண்டுமென்றால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கருதும் ஒரு இளைஞர் குழு, அதற்கு மறைமுகமாக உதவும் பத்திரிகையாளர் ஜீவா! அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,  நடுவில் கிளை கதையாக ஜீவா, கார்த்திகா, பியாவுக்கிடையே நிலவும் முக்கோண காதல். 

பத்திரிகையின் புகைப்பட நிருபராக பச்சென்று பதிகிறார் ஜீவா. பியாவின் இயல்பான கலகல நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இளைஞர் குழுவின் தலைவராக வரும் அஜ்மலின் நடிப்பும், பாடி லாங்குவேஜும் சபாஷ் போட வைக்கின்றன! கார்த்திகா...?  ஹும்! கண்கள் அழகுதான், அதற்காக எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி விழித்தால்..? அதீத மேக்- அப்பில் செயற்கையாக நடித்து எரிச்சலூடுகிறார்! இவரைத்தான் கதாநாயகியாக போட 
வேண்டும் வேறு வழி இல்லை என்னும் அளவிற்கு கதா நாயகி பஞ்சம் நிலவுகிறதா என்ன? பிரகாஷ் ராஜ், கோடா ஸ்ரீனிவாச ராவ் என்று இரண்டு வில்லன்கள் இருந்தாலும் அவர்கள் இருவருமே பிரதான வில்லன் கிடையாது என்பது ட்விஸ்ட் ! பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர்தான் என்றாலும் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டாவது வார்த்தையில் பல்லை கடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம்.

காமெடி ட்ராக் என்று தனியே வைக்காமல் காட்சி அமைப்புகளிலேயே நகைச்சுவையை வைத்திருப்பதை பாராட்டலாம்! இளமை துள்ளும் வசனத்தை எழுதி 
இருக்கும் இரட்டையர் சுபாவில் சுரேஷ் ஒரு காட்சியில் தலை காட்டவும் செய்திருக்கிறார். இதே போல பட்டிமன்ற ராஜாவும், வனிதாவும் வந்து போகிறார்கள்!

பாடல்கள் நன்றாகதான் இருக்கின்றன.லோகேஷன்களும் அருமை இருந்தாலும் படத்தின் ஓட்டத்திற்கு ஸ்பீட் ப்ரேகர்களாகவே இருக்கின்றன. குறிப்பாக தனக்கு நெருங்கிய தோழி பரிதாபமாக இறந்த அன்று டூயட் பாடுவது என்ன எதிக்ஸ்? படத்தின் முற் பாதியில் காட்டப்படும் நிகழ்சிகள் யாவும் பிற் பாதியில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்
என்பது பின்னால்தானே தெரிகிறது.. எனவே இடை வேளைக்கு முன் திரும்பத் திரும்ப 
ஒரே காட்சியே வருவது போல தோன்றுகிறது. இடை வேலைக்குப் பிறகு சூப்பர்!

 

 

 



     

 



 

Tuesday, May 17, 2011

TN Election result 2011

ELECTION RESULT 2011

சமீபத்திய தேர்தலில் இத்தனை அமோக வெற்றியை ஜெயலலிதாவே எதிர் 
பார்த்திருக்க மாட்டார்.   complete sweep! படுத்துக்கொண்டே   ஜெயிப்போம் என்று 
காமராஜர் சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன், நிஜமாகவே அதை செய்து 
காட்டி இருக்கிறார் ஜெயலலிதா! நான்கு வருடங்களை பெரும்பாலும் கொட
நாட்டில் ஓய்வு எடுப்பதிலேயே கழித்த ஜெயலலிதா மாபெரும் வெற்றியை 
தழுவி இருப்பது மக்களின் மனதை பிரதிபலிக்கிறது! 

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற கருணாநிதியிடம், "உங்களின் வெற்றிக்கு 
காரணம்?" என்று கேட்ட பொழுது, "ஜெயலலிதாதான்..!" என்றார் கிண்டலாக.
இப்பொழுது யாராவது ஜெயலலிதாவிடம், "உங்கள் வெற்றிக்கு காரணம்..?"
என்று கேட்டால், "கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும்" என்று கூறுவாரா?
தெரியாது.

எலக்க்ஷன்  கமிஷன் கண்டிப்பாக இருந்தும் பணம் பெருமளவில் விளையாடி 
இருக்கிறது. ஆனால் அதையும் மீறி மக்கள் அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்திருப்பது
மக்கள் எந்த அளவிற்கு எதேச்சாதிகாரத்தை வெறுக்கிறார்கள் என்பதையும் 
அவர்கள் தெளிவாகத்தான்  உள்ளார்கள் என்பதையும் காட்டுகிறது.  ஆனால் 
 ஒரு  சோகம்  அவர்கள்  தேர்ந்தெடுக்க  கழகங்களுக்கு  மாற்றாக  வேறு  ஒரு 
கட்சி இல்லாதது. 

தமிழ் நாட்டைப்பொருத்தவரை காங்கிரசிற்கு உட்கட்சி பூசலுக்கே நேரம் 
போதவில்லை. மேலும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு  பக்கம்   பேசிக்கொண்டே மறு பக்கம் ஊழல்வாதிகளுக்கு உதவுவது அதன் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க.,  போன்றவைகளை  மக்கள் கழகங்களின் கிளையாகதான் கருதுகிறார்கள். மிஞ்சி இருக்கும் ஒரே 
ஒரு உருப்படியான தேசிய கட்சி பி.ஜே.பி ஒன்றுதான். அதுவோ இன்னும்
தமிழ் நாட்டில் வேர் ஊன்றவே   இல்லை.

       
பி.ஜே.பி ஒரு மத வாத கட்சி என்னும் இமேஜை உடைக்க வேண்டும். 
ஆர்.எஸ்.எஸ். உடன் தனக்கு சம்மந்தம் கிடையாது  என்பதை  உறுதிப்படுத்தி, மற்ற மதத்தினரும் அமைதியாய் வாழ தாம் உதவுவோம்
என்பதையும் நிச்சயப்படுத்த வேண்டியது அதன் கடமை.  தமிழக மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள் என்று கருணாநிதி கூறினாலும் தன்
முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனை போன்று உடனேயே வேலை 
செய்ய ஆரம்பித்து விடுவார். அவரைப்போல உழைக்க தமிழக பி.ஜே.பி யில் 
யாராவது இருக்கிறர்களா என்று தெரியவில்லை. இனிமேலாவது 
தமிழக பி.ஜி.பி. தீவிரமாக உழைத்து முதலில் தன் இருப்பை வலுப்படுத்தினால் 
நிஜமான தேசிய உணர்வு கொண்ட ஒரு மாற்றுக் கட்சி தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
ஜெய் ஹிந்த்!
                        

    
      
                                         


              

Monday, May 2, 2011

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

நவக்ரகங்களில் மிகவும் முக்கியமான கிரகம் குரு. முழு சுபரான இவர் ஒருவரின் 
வாழ்கையில் கல்வி, தனம், குடும்பம், வாக்கு, மக்கள் செல்வம் என்னும் ஐந்து 
செல்வங்களை நிர்ணயிக்கச் செய்பவர். பெண்களுக்கு கூடுதலாக மாங்கல்ய 
பலத்தையும் அளிக்க கூடியவர்.  குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்வை சிறப்பானது. குரு பார்க்க கோடி பாவங்கள் விலகும் என்பது வழக்கு  மொழி!

இத்தனை சிறப்புகள் கொண்ட குரு பகவான் சிறப்பாக வழிபட படும் சில தலங்களுள்  
ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம் எனப்படும் பாடி மற்றும் கோவிந்தவாடி 
முதலியவை ஆகும். இப்பொழுது கோவிந்தவாடியின் சிறப்புகளை பார்க்கலாம்:

காஞ்சிபுரத்திலிருந்து 15  Km  தூரத்தில்  உள்ளது கோவிந்தவாடி தலம்.  சிறிய கோவில்.  கோவிந்தராஜ  பெருமாள்  தன்  குடும்பத்தோடு   வந்து  இங்குள்ள சிவனை வழிபட்டதால் கோவிந்தவாடி என்ற காரணப் பெயர் கொண்டுள்ளது.   சாதாரணமாக சிவன் கோவில்களில் தக்ஷினாமூர்த்தி கோஷ்டத்தில் இருப்பார்.  இங்கு மூலவரும் தக்ஷிணா மூர்த்தியும் ஒரே விமானத்தின் கீழ் இரு 
தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். எங்கும் காண முடியாத விதத்தில் 
கோஷ்டத்தில் மஹா விஷ்ணுவும், பிரும்மாவும் இருபது ஒரு அபூர்வ காட்சி! பிரகாரத்தில் பைரவருக்கும்,கோவில் பெயர்  காரணராகிய, தன் தேவியர் இருவரோடும் 
எழுந்தருளி இருக்கும்  கோவிந்தராஜ  பெருமாளுக்கும்  தனி  சந்நிதிகள்  உள்ளன. 

கோஷ்டத்தில் மகாவிஷ்ணு

 
கோஷ்டத்தில் பிரம்மா

   
குருவின் தலம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான பக்தர்கள் ராஜா கோபுரம் 
வழியாக உள்ளே வராமல் தக்ஷினாமூர்த்தி சந்நிதி உள்ள வாயில் வழியாகவே 
வருகின்றனர்.   இங்குள்ள தட்சிணா மூர்த்திக்கு தேங்காயில் நெய் விளக்கு ஏற்றுவது 
விசேஷமாக கருதப்படுகிறது. கோவில் வாசலிலேயே தேங்காய், நெய்,  திரி  போன்றவை விற்கப்படுகின்றன. தேங்காயை உடைதுக்கொடுக்க கோவிலுள்  ஒரு ஆள் இருக்கிறார், உடைத்த தேங்காயின் கண் உள்ள பகுதியில் நெய்யை 
ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இதன் தாத்பர்யம் 
என்னவென்று தெரியவில்லை.

ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படும் குரு தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி  ஆவார் என்றாலும் சனி பரிகார தலமாகிய  திருநள்ளாரில்  சனி  பகவானுக்கென்று  தனி சந்நிதி  இருப்பது  போலவோ,  வைதீஸ்வரன் கோவிலில் செவ்வாய்கென்று தனி  சந்நிதி  இருப்பது  போலவோ திருநாகேஸ்வரத்தில் ராகுவுகென்று தனி சந்நிதி இருப்பது போலவோ குரு பரிகார தலங்களில் குரு  அதாவது  ப்ரஹஸ்பதிகென்று  தனி சந்நிதி இல்லாமல் தட்சிணாமூர்த்தியே குருவாக வழிபட படுவது ஏன் 
என்றும் புரியவில்லை...? காரணம் எதுவாக இருந்தாலும் ஆதி குருவான
தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லதுதானே!

மே மாதம் 8 ம் தேதி குரு மீனத்திலிருந்து மேஷத்திற்கு வருகிறார். அன்று 
முடிந்தால் கோவிந்த வாடி சென்று குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி 
வணங்கி விட்டு வாருங்கள். குருவருளால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

           



                     


                                   

Saturday, April 23, 2011

யாதுமாகி நின்றாய்!
(a play by Gurukulam theatres, Written & Directed by M.B.Moorthy)

Artists: Mr.Sriram, Mrs.S.S.Malathy,Mr.M.B.Moorthy,Mrs.R.Jayanthi,MrVenkat,&Master Sharad Bhardwaj

தமிழ் நாடகங்கள் என்றால் பெரும்பாலும் துணுக்கு 
தோரணங்கள்தான் என்ற நிலையை மாற்றும்படி
அவ்வப்பொழுது நல்ல கருத்துள்ள நாடகங்களும் 
அரங்கேறுகின்றன! அவற்றில் ஒன்றுதான் குருகுலம் 
தியேட்டர்சாரின் 'யாதுமாகி நின்றாய்' நாடகம்!

குடும்பம், அலுவலகம் இரண்டையும் திறம்பட 
நிர்வகிக்கும் பெண்(பிரியா),அவளுடைய மேலதிகாரியாக 
வரும் ஆணோடு(பாஸ்கர்) கொள்ளும் நட்பால், அவளுக்கு ஏற்படும் உறவுச் சிக்கலை சற்றே மேலோட்டமாக விவரிக்கும் 
கதை. இதற்கு இணை கதையாக ஹவுஸ் வைப்(பிருந்தா)-
வேலை பார்க்கும் கணவன்(மூர்த்தி), மனைவியின் தம்பி(பாச்சு) 
என்று  மற்றொரு  குடும்பம்,  எப்பொழுதும் சண்டை போட்டுக்
கொண்டாலும்  உள்ளுக்குள்  அக்கறையும் அன்பும் கொண்ட 
இந்த குடும்பம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல 
உதவுகிறது.

மறைந்த நாடக உலக ஜாம்பவான் திரு.பூர்ணம் விசுவநாதன் 
அவர்களோடு நடித்த அனுபவம் கை கொடுக்க அதனை பேரும் 
சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ரியாவின் கணவராக 
வரும் கோகுலும், ப்ரியாவின் மேலதிகாரியாக வரும் ரமேஷும்!

பாத்திரத்தை உணர்ந்து நடிப்பது என்பது ஒரு வகை, பத்திரத்தில் 
ஒன்றி நடிப்பது ஒரு வகை, பார்வையாளர்களை பாத்திரத்தோடு 
ஒன்றச் செய்வது என்பது ஒரு வகை, இதில் மூன்றாவது வகையைச்
சேர்ந்த பண்பட்ட நடிப்பை வழங்கியுள்ள ரமேஷுக்கு சிறப்பான 
பாராட்டுகள்! கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு கிடைத்த 
வாய்ப்பை ஸ்ரீராம் சிறப்பாக பயன் படுத்திக்கொன்டுள்ளார்!
ஜெயந்திக்கும், மூர்த்திக்கும் இடையே உள்ள புரிதல், நகைச்
சுவை காட்சிகளை கலகலப்பாக்குகின்றன! பாச்சுவாக வரும் 
வெங்கட் தன்னுடைய பாடி லாங்குவேஜை இன்னும் கொஞ்சம் 
மேம் படுத்திக்கொள்ளலாம்..!

மற்றபடி எளிய காட்சிகள், இயல்பான வசனங்கள் என்று தெளிவாக
செல்லுகிறது நாடகம்! இசை இன்னும் கொஞ்சம் பவர்புல்லாக
இருந்திருக்கலாம்! அன்றைக்கு வாணி மஹால், மஹா பெரியவா
செண்டினேறி ஹாலில் ஒலி அமைப்பு சரியாக இல்லை போலும், 
என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி வசனமே காதில் 
விழவில்லை என்று புலம்பிக்கொண்டே இருந்தார்!  

யாதுமாகி நின்றாய் நாடகம் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு 
நாடகம்!     
            
           

            

Thursday, April 14, 2011

thambattam: vasantha navarathri

thambattam: vasantha navarathri: "வசந்த நவராத்திரி தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி. ஒரு வருடத்தில் நான்கு ..."

Wednesday, April 13, 2011

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி



தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அவர்களால்
கொண்டடப்பட்கின்றன. அவைகள் ஆஷாட நவராத்திரிசாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி,  மற்றும்  வசந்த  நவராத்திரி.


இவற்றில் ஆஷாட நவராத்திரி  என்பது  ஆடி மாத  அமாவாசைக்குப்  பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஆஷாட நவராத்ரியில் உபா சிக்கப்பட வேண்டிய தேவி மாதங்கி! மதுரை மீனாக்ஷி  மாதங்கியின்  வடிவே!  சாரதா  நவராத்ரியில்  சிறப்பாக  வழிபடப்படுவது  மகிஷாசுரமர்தினி.  பௌஷிய நவராத்ரி வாரஹிக்கு உரியது. ஜம்புகேஸ்வரம்  என்னும் திருவானைகோவிலில் குடி கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரி 
வாரஹியின் அம்சமே! வாரஹி வழிபாடு இரவில் செய்யப்பட வேண்டியது.


பங்குனி மாத  அமாவாசைக்குப்பிறகு  வரும்  பத்து  நாட்கள்  வசந்த  நவராத்ரி ஆகும். தென் இந்தியாவில் சாரதா நவராத்ரியும் வட இந்தியாவில் வசந்த நவராத்ரியும்  சிறப்பாக  கொண்டாடப் படுகின்றன.  சாரதா நவராத்ரியின்  முக்கிய அம்சம் பொம்மை கொலு என்றால், வசந்த நவராத்ரியின்  சிறப்பு  விரதமும்  பூஜையும்.  தெற்கே  நவராத்திரியின் கடைசி நாளான நவமி அன்று கல்விக்  கடவுளான  சரஸ்வதி  தேவியை  பூஜிக்கிறார்கள்,  வட இந்தியர்களோ வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.  

இனி வசந்த நவராத்ரியின் சிறப்பை விளக்கும் கதையைப் பார்போம்: 

கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் 
சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமாவிர்க்குப் பிறந்த 
சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே 
பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான 
உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட
மனோரமாவின் தந்தை  கலிங்க  தேச  அரசர்  வீரசேனர்  யுத்தத்தில்  மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட  மனோரமா  தன்  மகன்  சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும் அழைத்துக் கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள்.

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூட்டிய  பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,
தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று 
கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான். 

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் 
மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று
அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று 
கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் 
உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் 
மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள்.

நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச 
அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு
விடுக்கிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது
அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம்
கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில்
முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தன் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூசித்திருக்கிரர்கள்.  

வசந்த நவராத்திரியில்தான் ராம நவமியும் வரும். அன்று விசிறி, பலாச்சுளை, பானகம், நீர்மோர் இவை விநியோகிப்பது சிறப்பு.

*இந்த வருடம் ஏப்ரல் 3 தொடங்கிய வசந்த நவராத்திரி ஏப்ரல் 12 ராம 
நவமியோடு முடிந்தது.  இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம் 
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:      

*இது 2011இல் எழுதப்பட்டது. ஹேவிளம்பி வருடமான இந்த வருடம்(2018) 18.3.2018 தொடங்கி, 26.3.2018 அன்று முடிகிறது.