கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 19, 2020

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் 

இந்த நாட்டிலே? 


கொரோனாவின் நேரடி விளைவுகள் நோய், மரணம், வெளியே செல்ல முடியாதது, கோவில்,சினிமா, திருவிழாக்கள் எல்லாவற்றிர்க்கும் தடை. வேலை இழப்பு, சம்பளம் கட்.  இதன் மறைமுக விளைவுகள் மன உளைச்சல், மற்றும் பெருகி வரும் திருட்டுகள், குறிப்பாக ஆன் லைன் திருட்டுகள்.  

வங்கியிலிருந்து பேசுகிறோம், என்று அழைத்து நம் கணக்கு முடக்கப்படும் என்று பயமுறுத்தி விவரங்களை பெற்று கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு முறை. இதிலாவது நாம் விவரங்கள் கொடுத்தால்தான் அவர்களால் பணத்தை எடுக்க முடியும். இன்னொரு மிகவும் ஆபத்தான ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய செல் போனை அப்படியே கடத்தி விடுகிறார்கள். 

எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் ஏதோ கூரியர் அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய கூரியரை டிராக் செய்து பார்த்திருக்கிறாள். ஒரு நாள் அவளுக்கு ஒருவன் தான் கூரியர் கம்பெனியிலிருந்து அழைப்பதாகவும் அதில் பின்கோட் தெளிவாக இல்லை, என்றும், அவன் சொல்லும் ஒரு ஆப் ஐ டவுன்லோட் செய்யும்படியும் கூறியிருக்கிறான்.  முதலில் அந்தப் பெண் அவன் சொன்னதை கேட்க்கவில்லை. அதனால் அவன் அந்தப் பெண்ணின் அப்பாவை செல்போனில் அழைத்து, "உங்கள் மகளை இந்த ஆப் ஐ டவுன்லோட் பண்ணச் சொல்லுங்கள் அப்போதுதான் எங்களால் கூரியர் அனுப்ப முடியும்"  என்று கூற, அவளுடைய அப்பாவும் அந்தப் பெண்ணிடம் ஆப் ஐ டவுன்லோட் பண்ணும்படி கூறியிருக்கிறார். அந்தப் பெண் ஆப் டவுன் லோட் செய்தவுடன் அவள் போன் அடுத்த நிமிடம் அவளுடைய அவளுடைய செல் போன் ஸ்க்ரீன் மிரரிங் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிராள் , பிறகு என்ன? அவள் கண்ணெதிரிலேயே அவள் கணக்கிலிருந்து பணம் சூறையாடுப்படுவது தெரிந்திருக்கிறது, என்றாலும் அதை தடுக்க முடியவில்ல. ஸ்க்ரீன் மிர்ரரிங் செய்யப்= பட்டிருப்பதால் ஆன் லைன் பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ் வார்ட் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது. முப்பது வினாடிக்குள் முப்பதாயிரம் அபேஸ்! இம்மாதிரி சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைப்பது பெரும்பாலும் பெண்களைத்தான். எச்சரிக்கையாக இருங்கள் தோழிகளே. 

புதிதாக எந்த ஆப் ஐயும் டவுன்லோட் செய்ய வேண்டாம் குறிப்பாக உங்கள் கை  ரேகையை பதிவு செய்யச் சொல்லும் ஆப்புகள் நமக்கு அப்பு வைத்து விடும் அபாயம் உண்டு.   பே டி எம், கூகிள் பே என்று எல்லாவற்றையும் பயன் படுத்த வேண்டாம்.  அவை ஏதாவது ஒன்றை ஹாக் செய்தாலும், அதன் மூலம் மற்றவற்றையும் சுலபமாக ஹாக் பண்ண  

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் தொலைகாட்சியில் நான் பார்த்த செய்திகளில் என்னைக் கவர்ந்த இரண்டு செய்திகளை சொல்கிறேன் கேளுங்கள் 

சிறுவயதில் நாமெல்லாம் மயிலறகு குட்டிப் போடும் என்று நம்பி, அதை நோட்டு புத்தகத்திற்குள் மறைத்து வைப்போம். அது ரசிக்கக் கூடிய அப்பாவித்தனம். கிட்டத்தட்ட அதைப்போலவே ஒருவர் பொன் நகைகளை பூமியில் புதைத்து வைத்தால் அவை இரட்டிப்பாக பெருகும் என்று ஒரு போலி மந்திரவாதி கூறியதை நம்பி அறுவது சவரன் நகைகளை தன் வீட்டின் பின் புறம் புதைத்து வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து அந்த இடத்தில் தோண்டி பார்க்க, நகைகள் எதுவும் இல்லை. மந்திரவாதியிடம் கேட்டதற்கு,"உலகத்தில் எதுவும் சரியில்லை அதனால்தான் நகைகள் காணாமல் போய் விட்டன' என்று கூறியிருக்கிறான். அப்போது முழித்துக் கொண்ட அந்த புத்திசாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலி மந்திரவாதியை போலீஸ் கைது செய்திருக்கிறது.  "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?" 

அடுத்த செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குளியல் அறையில் இருக்கும் ஷவர் சரியாக இல்லையாம். அது அவர் குளிக்கும் பொழுது அவருடைய பின் மண்டையை சரியாக நனைப்பதில்லையாம், எனவே அதை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதை சரி பார்த்து மாற்றித் தர வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறதாம். எப்..பூ..டி?  

---------------------------------------------------------------------------------------------------------------------------

தூங்காதே தம்பி தூங்காதே     

காதல் மன்னன்   

வாயை மூடிப் பேசவும்  

பிதாமகன்  
  
தாய்க்குப்பின் தாரம்   

கல்யாணம் பண்ணியும் பிரும்மச்சாரி   

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் சினிமா பெயர்கள் எந்த இந்திய பிரதமர்களுக்கு பொருந்தும்? எத்தனை பேர்கள் என்னைப் போகவே யோசிக்கிறீர்கள் என்று பார்க்கலாம். 

 

 





Thursday, August 13, 2020

மும்மொழிக் கொள்கையும், ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும்

 மும்மொழிக் கொள்கையும், 

ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும் 




நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்போர்ட்ஸ் டே வருவதற்கு முன்புதான் நாங்கள் முனைந்து பயிற்சி செய்வோம். அப்போது எங்களோடு பயிற்சியில் ஈடுபடும் ஒரு மாணவி ஆசையாக கலந்து கொள்ள வருவாள்.

Tuesday, August 11, 2020

கோகுலாஷ்டமி நினைவுகள்.

கோகுலாஷ்டமி நினைவுகள். 



எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 


அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

எங்கள் வீட்டில் இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் ஒரு கிருஷ்ணன் பொம்மை இருந்தது. அம்மா தினமும் ரோஜாப்பூ வாங்கி அந்த கிருஷ்ணனுக்கு சூட்டி, 
"இந்த ரோஜாப்பூ கிருஷ்ணனுக்கு எத்தனை அழகாக இருக்கு பார்" என்று ரசிப்பாள். அதே போல் கீரை மசியல் செய்தாலும், வடு மாங்காய் ஊறுகாய் போட்டாலும்  தயிர் சாதத்தோடு அதை கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். அம்மாவை பொறுத்த வரை குருவாயூரப்பன் ஒரு குழந்தை. தினசரி குளித்து விட்டு ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருக்க மாட்டாள். 

ஒரு முறை அம்மா ஊருக்கு சென்றிருந்த பொழுது நான் சமைத்தேன். என்னுடைய சோம்பேறி தனத்தில் குளிக்காமல் சமைத்து விட்டேன். அதனால் ஸ்வாமிக்கு நோ நைவேத்தியம். 

முதல் நாள் ஓடி விட்டது. இரண்டாம் நாள் வேலைகளை முடித்து விட்டு, ஸ்வாமி விளக்கு ஏற்றும் பொழுது, அந்த கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று சோர்வாக இருப்பது  போல் தோன்றியது. மூன்றாம் நாள் கிருஷ்ணன் முகம் இன்னும் அதிகமாக சோர்வாக, குறிப்பாக பசியால் வாடியிருப்பது போல் தோன்றியது. எனக்கு சுரீரென்றது. அம்மா ஊருக்குச் சென்றது முதல்  நாம் சுவாமி நைவேத்தியம் செய்யவே இல்லை, அதனால்தான் குழந்தை(கிருஷ்ணன்) முகம் வாடியிருக்கிறதோ? என்று தோன்றவே, அன்று குளித்து விட்டு சமைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்தேன். என்ன ஆச்சர்யம்! சற்று நேரத்தில் அந்த கிருஷ்ணன் (இனிமேல் எப்படி அதை பொம்மை என்று செய்வது?) முகம் சட்டென்று மலர்ந்து விட்டது. அதன் பிறகு, அம்மா வீட்டில் இருந்தவரை குளிக்காமல் சமைத்ததில்லை, ஸ்வாமி நைவேத்தியம் செய்யாமல் இருந்ததும் இல்லை. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


Saturday, August 8, 2020

உனக்கும் எனக்கும்

 உனக்கும் எனக்கும் 


*இந்த படத்திற்கு  பொருத்தமான கதை எழுதும்படி மத்யமரில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை கீழே:


திவாகர் அன்று அலுவலகத்திலிருந்து வரும் பொழுது  கையில்  சுருட்டி எடுத்து வந்த ஒரு சுருளை   ஹாலில்   இருந்த  டீபாயில்  போட்டான். 
"என்னது?" ஜனனி கேட்டதற்கு ,"பிரிச்சு பாரேன்.." என்று அவன் சொன்னதும் பிரித்தாள். ஒரு வால் போஸ்டர். அதில் ஒரு இளம் ஆணும், பெண்ணும்  உரக்க சண்டை போட்டு கத்துவது போன்ற  படம். 

"எதுக்கு இது"

"நல்ல கேள்வி. வால் போஸ்டர் எதுக்கு வாங்குவாங்க? வீட்டில் மாட்டதான்" 

"ஏன் இப்படி ஒரு படம்?"

"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்? நல்லா இல்லையா?"

"அப்படி சொல்ல முடியாது,பட்... "  என்று தயக்கத்தோடு ஆரம்பித்தவள் சண்டை போட்ற படத்தை ஏன் வீட்டில் மாட்டனும்?"

"சம்திங் டிஃபரெண்ட் .. நான் தான்  உன்னோடு   சண்டை  போடுவதில்லை, நீ என்ன சொன்னாலும் அதுக்கு சரினு  சொல்லிடறேன். படத்திலாவது ஒருத்தன் தைரியமா மனைவியை  எதிர்த்து சண்டை போடறானே.." குறும்பாக சிரித்துக்  கொண்டே  அவன் கூற, 

"எப்படி? எப்படி? ரிபீட்.." என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொய் கோபத்தோடு ஜனனி கேட்டதும் ,  சிரித்துக் கொண்டே  அவளை தன்னருகே இழுக்க, அவனிடமிருந்து விலகி காபி கலக்க உள்ளே சென்றாள்.  

"காஃபியை உரிஞ்சிக்கொண்டே இதை எங்கே மாட்டலாம்? சொல்லேன்.."

"ஹாலில் நன்றாக இருக்காது, டைனிங்  ரூம்..?"

"நோ ".. 

"யெஸ், பெட் ரூம்தான் ரைட் பிளேஸ்.." என்று முடிவு செய்து அதை அவர்கள் கட்டிலுக்கு எதிரே, இரண்டு பக்கங்களிலும் ஒட்டக்கூடிய செல்லோ டேப் கொண்டு ஒட்டி விட்டு, ஹௌ இஸ் இட்?" என்றான். 

ஜனனிக்கு இப்படி ஒரு படத்தை தங்கள் படுக்கை அறையில்  அதுவும் கண்களில் படும்படி மாட்டுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அதைச்  சொல்லி அவனை வருத்தப் படுத்த அவள் விரும்பவில்லை. அதுதான் அவள் சுபாவம். யாரோடும்  விவாதங்களில் இறங்க மாட்டாள். தனக்கு ஒரு கருத்தில்  உடன்பாடு இல்லையென்றால் மௌனமாகி விடுவாள். சமயம் பார்த்துதான் சொல்வாள். திவாகருக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவ்வப்பொழுது அவளை சீண்டுவான், அவளும் பதில் கொடுப்பாள், இப்படி விளையாட்டு சண்டை, சின்ன  சின்ன  வாக்குவாதங்கள் வந்திருக்கிறதே ஒழிய பெரிய சண்டை  அவர்களுக்குள் வந்ததில்லை. 

அவர்கள் கண்ணே பட்டு விட்டதோ  என்னும்படி  கொஞ்ச  நாட்களாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வர ஆரம்பித்தன. திவாகர் சிடுசிடுப்பதும், சாதாரணமாக பொறுமையாக இருக்கும்  ஜனனி பதிலுக்கு பதில் சொல்லி சண்டையை வளர்ப்பதும் அதிகமாயிற்று. .

அன்று காலை டிஃபன் சாப்பிட திவாகர் உட்கார்ந்தான். ரவை உப்புமாவை கொண்டு ஜனனி வைத்ததும், "ஓ! மை காட்! இன்னிக்கும் உப்புமாவா?"

"என்ன இன்னிக்கும்? இந்த மாசத்தில் இது செகண்ட் டைம்தான், தவிர உப்புமாவுக்கு என்ன குறைச்சல்?" 

"தொட்டுக்க ஒன்னும் இல்லாததுதான் குறைச்சல்."  

"எலுமிச்சங்காய் ஊறுகாய் இருக்கு, சர்க்கரை இருக்கு.." 

"சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட நான் ஒண்ணும்  சின்ன  குழந்தை  இல்ல, நீயே சாப்பிட்டுக் கொள் உன் உப்புமாவை"  விருட்டென்று திவாகர் எழுந்து செல்ல, ஜனனிக்கு அழுகை வந்தது. இதற்கு முன் சில சமயங்களில் வெறும் ஊறுகாயோடு  உப்புமாவை சாப்பிட்டிருக்கிறான். இன்று என்ன வந்தது? இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோபம் வருகிறது. என் மேலும் தப்பு. அன்னிக்கு இப்படித்தான், தோய்த்த  துணிகள்  சோஃபாவில் குப்பலாக இருப்பதைப் பார்த்து, துணியை மடித்து வைக்கவில்லையா? என்று சாதாரணமாகத்தான் கேட்டான், ஆனால் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது, "தெரியறது தானே? நீ மடிச்சு வெச்சா என்ன?"  என்று அவள் பதிலுக்கு கேட்க, அவன் ஏதோ சொல்ல, வாய்ச்சண்டை வலுத்தது. ஏன் இப்படி ஆனது? என்று யோசித்தவள் கண்களில் பட்டது அந்த ஆணும் பெண்ணும்  சண்டை போடும் படம். இதைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில்  நமக்குள்ளும் சண்டை வருகிறதோ? ஜனனி அந்தப் படத்தை  ஜாக்கிரதையாக பிய்த்து எடுத்தாள். அந்த இடத்தில் காதல்  புறாக்கள் படம் ஒன்றை ஒட்டினாள். இனி அவர்களுக்குகள் பிணக்குகள் வராது .


Thursday, August 6, 2020

கடலைக் கடந்து - 5

கடலைக் கடந்து - 5 

நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்லாம்  கிடையாது.  ஓமானியர்கள், எகிப்தியர்கள் எல்லாம் லெபனீஸ் ரொட்டியில் சீஸ், காய்கறி துருவல், அல்லது சிக்கன் போன்றவை சேர்த்து சுருட்டிய கபூஸ் எனப்படும் ஒரு உணவை பட்டர் பேப்பரில் சுற்றி கடித்துக் கொண்டே வேலை செய்வார்கள். நம்மைப் போன்ற இட்லி, உப்புமா ஆசாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை. 

1991க்குப் பிறகுதான் வாரத்தில் ஐந்து நாட்கள் என்பது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு வரை   சனி முதல் வியாழன் வரை அலுவலகம் உண்டு. வியாழனன்று ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் முடிந்து விடும். ஆனால் இதை என் கணவர் என்னிடம் சொல்லவே இல்லை. வேலைக்கு சேர்ந்த முதல் வார வியாழனன்று வேலை விஷயமாக மற்றொரு அலுவலகத்திற்கு சென்ற என் கணவர்  அலுவலகம் திரும்பி வரவில்லை.  இரண்டு மணிக்கு, ஒருவர் வந்து, "கீப் எவ்ரிதிங் ஆஸ் தே ஆர் அண்ட் கம் வித் மீ" என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. "மூர்த்தி டிண்ட் கம் எட் .." என்றதும், "நோ, நோ, ஹி வில் நாட் கம், யூ கம் வித் மீ " என்றதும் நான் ரொம்பவே பயந்து போனேன். நல்ல வேளையாக என் கணவர் அப்பொழுது போன் பண்ணி, நேரத்தைப் பற்றி சொல்லி  தான் நேராக வந்து விடுவதாகவும் என்னை அந்த நண்பரோடு செல்லும்படியும் கூறினார். 

அப்பொழுது எங்களுக்கு வீடு அலாட் ஆகவில்லை. விடுமுறையில் இந்தியா சென்றிருந்த ரமணன் என்னும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கிக் கொண்டிருந்தோம். மதியம் ஸ்ரீதர் வேறொரு நண்பரின் வீட்டில் மதிய உணவருந்துவோம். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என் கணவர் என்னிடம், "வீட்டு சாவியை என் அலுவலக மேஜை டிராயரில் வைத்திருந்தேனே, எடுத்துக் கொண்டு வந்தாயா?" என்று கேட்டார்? அவர், வீட்டு சாவியை தன் மேஜை டிராயரில் வைத்திருக்கும் விஷயமும் எனக்குத் தெரியாது. நான் "இல்லையே.." என்க, நண்பரின் மனைவி, ''நீங்கள் சாவியை அங்கு வைத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா? என்று எனக்கு சப்போர்டுக்கு வந்தார். உணவு அருந்திய பிறகு என் கணவரும், அந்த நண்பரும் எங்கள் அலுவலகம் சென்று சாவியை எடுத்துக் கொண்டு வந்தனர். 

அந்த நண்பர்தான் எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போதோ மஸ்கட் சிவன் கோவில் ஒன்றுதான் இருந்தது. கிருஷ்ணர் கோவில் கட்டப்படவில்லை. சிவன் கோவிலில் கீழே விநாயகர், சிவன், ஹனுமான் சன்னதிகள் இருக்கும். மாடியில் அம்மன் சன்னதி. பக்கத்தில் ஒரு சிறிய கடையில் எண்ணெய், பால், ஊதுபத்தி, தேங்காய் போன்ற பூஜை சாமான்கள் விற்பார்கள்.  ஆரம்ப நாட்களில் அங்கு அத்தனை கும்பல் இருக்காது. பின்னாளில் இரண்டு கோவில்களிலுமே வியாழன்,வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம் போன்ற நாட்களிலும் பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காது.  அதுவும் வியாழக் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சிவன் கோவிலுக்குச் சென்றால் இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்து விடலாம். ஏனென்றால் ஆஞ்சநேயருக்கு அத்தனை பேர்கள் வடை மாலை சாற்றுவார்கள். 
வடை, கேசரி, தயிர்சாதம், சுண்டல் என்று நிறைய பிரசாதங்கள் கிடைக்கும். 

ஆரம்பத்தில் அந்த ஊரில் கடை வீதிகளுக்கும், மற்ற இடங்களுக்கும் சென்ற பொழுது ஒரு விஷயம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு சுவரொட்டிகளையோ, விளம்பர பலகைகளையோ பார்க்க முடியவில்லை. 
"இங்கு என்ன இப்படி சுவரெல்லாம் காலியாக இருக்கிறது?" என்று ஆச்சர்யமாக கேட்டேன். "இங்கு அதற்கெல்லாம் தடை. போஸ்டேரெல்லாம் ஒட்டக்கூடாது" என்றார்கள். "அப்படியென்றால் வியாபாரிகள் தங்கள் பொருள்களை எப்படி விளம்பரம் செய்வார்கள்?" என்றேன். "அதற்குத்தான் ஹௌஸ் வைவ்ஸ் இருக்கிறார்களே?" என்றார் நண்பர். 

2005க்குப் பிறகு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைப்போலவே வெய்யில் கொளுத்தும் அந்த ஊரில் கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் அனுமதி கிடையாது. கோடையில் வெளியில் காரை நிறுத்தி விட்டால், அதை எடுக்கும் பொழுது ஸ்டியரிங்கை தொட முடியாமல் கொதிக்கும். அதனால் பெரும்பாலானோர் ஸ்டியரிங் மீது ஒரு டர்கி டவலை போட்டு வைப்பார்கள். கேசட்டை மறந்து போய் காரிலேயே வைத்து விட்டால் உருகி விடும்.   




 



 

Monday, August 3, 2020

ஆடியில் ஆவணி அவிட்டமா?

ஆடியில் ஆவணி அவிட்டமா?


நாளை ஆவணி அவிட்டம்.  இன்னும் ஆவணி மாதமே பிறக்கவில்லை அதற்குள் ஆவணி அவிட்டம் எப்படி வரும்? இது என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி.  சிலர் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பார்களாக இருக்கும்.

பெரும்பாலானோர் ஆவணி அவிட்டம் என்றால் பிராமணர்கள் பூணூலை மாற்றிக் கொள்ளும் நாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஆவணி அவிட்டம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இந்த நாளை உபாகர்மா என்பார்கள். உபாகர்மா என்பதை உபா+கர்மா என்று பிரிக்க வேண்டும். உபா என்றால் முன்னால் என்றும், கர்மா என்பதற்கு செயல் என்றும் பொருள். அதாவது ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்று பொருள். எந்த செயல் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த கேள்வி வருகிறதல்லவா? செயல் என்பது இங்கே வைதீக கர்மங்களை(குறிக்கும்).  எந்த வைதீக செயலையும் பூணூல் அணிந்து கொள்ளாமல் செய்யக் கூடாது என்பது விதி. ஹிந்து தர்மத்தின்படி நான்கு வர்ணத்தினருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இதில்  பிராமணர்களும், க்ஷத்ரியர்களும் எப்பொழுதும் பூணூலை அணிந்து கொண்டிருக்க வேண்டும், மற்றவர்கள் வைதீக கர்மங்களை செய்யும் பொழுது மட்டும் அணிந்து கொண்டால் போதுமானது.  அதைப் போலவே எல்லோருமே வேதம் படித்திருக்கிறார்கள்.  

பிருமச்சாரியாக வேதம் கற்றுக் கொண்டவர்கள்  திருமணம் செய்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் தாங்கள் கற்றதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக *ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தாங்கள் படித்ததை தினம் ஓதி நினைவுப் படுத்திக்க கொண்டு, மார்கழி மாதம் போகி அன்று நிறைவு செய்வார்கள்.  ஆவணி மாத பௌர்ணமி பெரும்பாலும் அவிட்ட நட்சத்திரத்தன்று வருவதால்  உபாகர்மா ஆவணி அவிட்டம் என்று வழங்கப் படலாயிற்று.  

எல்லாம் சரி, அது ஆவணி மாதத்தில்தான் வர வேண்டும் ஏன் ஆடியிலேயே வருகிறது ? என்று கேட்கிறீர்களா? இது பஞ்சாங்க குழப்பம். இந்தியாவில் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மட்டுமே சூரியனை அடிப்படியாக கொண்ட சோலார் காலண்டரை பின்பற்றுகிறோம். மற்ற மாநிலங்களில் சந்திரனை அடிப்படியாக கொண்ட லூனார் கேலண்டர்தான். இதை விவரித்து சொன்னால் நம்மை பொறுத்தவரை மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் சூரியன் பிரவேசிப்பதை வைத்துதான் மாதப்பிறப்பை கணக்கிடுவோம். உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை மாதப் பிறப்பு. அவர் அங்கிருந்து நகர்ந்து ரிஷபத்திற்குள் செல்லும் பொழுது வைகாசி மாதம் பிறக்கும். ஆனால் மற்ற மாநிலத்தவர்களுக்கு அமாவாசை முடிந்தவுடன்அடுத்தமாதம் பிறந்து விடும். அதன்படி நமக்கு இப்போது நடப்பது கர்கடக மாதம் அதாவது ஆடி மாதம்.  இதர மாநிலத்தவர்களுக்கோ ஆடி அமாவாசை முடிந்தவுடனேயே ஆவணி பிறந்து விடும். அதன் படி அவர்களுக்கு இது ஆவணி மாதம்தான். ஆவணி மாத பௌர்ணமியில் உபாகர்மா. இந்த வருடம் நமக்கு இன்னும் ஆடி மாதம் முடியாததால் நாம் ஆடியில் ஆவணி அவிட்டமா? என்று கேட்கிறோம். 

பண்டிகைகள் எல்லாம் சாந்திரமாசத்தை அடிப்படையாக கொண்டுதான் கொண்டாடப்படும்.  அதனால்தான் நமக்கு ராம நவமி சில சமயம் பங்குனியிலும், சில சமயம் சித்திரையிலும் வரும். விநாயக சதுர்த்தி நமக்கு  ஆவணியிலும் வரும், புரட்டாசியிலும் வரும்.  மற்ற மாநிலக்காரர்களுக்கு ராம நவமி என்றால் அது சித்திரையில்தான், விநாயக சதுர்த்தி புரட்டாசியில்தான். உபாகர்மா என்றால் ஆவணியில்தான்.

*சாம வேதக்காரர்கள் ஆவணி பௌர்ணமியில் உபாகர்மாவை தொடங்காமல் புரட்டாசி சதுர்தியில் தொடங்கி, தைப்பூசத்தன்று நிறைவு செய்வார்கள். புரட்டாசி சதுர்த்தி என்பது விநாயக சதுர்த்தி நாள் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோமே.  எனவே போளி வடையோடு ஆவணி அவிட்டத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள். 








   

Friday, July 31, 2020

மசாலா சாட் - 19

மசாலா சாட் - 19

எப்பொருள் யார்யார் கை பெற்றாலும் 
அப்பொருள் சானிடைஸ் செய்வதறிவு 

மாஸ்க் என்ப சானிடைசரென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப கோவிட் காலத்திற்கு 

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை மாஸ்க் 
அணியாதான் நலம்போல் கெடும் 

என்னது உன் மகனும் மருமகளும் உன்னை வெளியில் தள்ளி கதவை சாத்திட்டாங்களா?
ஆமாம், ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூமில் உட்கார்ந்து, கதவை சாதிக் கொண்டு ஒர்க் ஃப்ரம்
ஹோம் பண்ராங்க , நான் ஹாலில்... :(( 

கீழே இருக்கும் ஓவியங்கள் என் மருமகளின் சித்தி மகள் வரைந்தவை:



பழைய கல்கி ஒன்றில் ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று

60, பஸ்ஸுல்லா ரோட்

தியாகராய நகர்

சென்னை – 17                                                                                      14-12-56

வணக்கம்,

உங்கள் கடிதம் படித்தேன். .வெ.ரா. அவர்கள் கட்டுரை பத்திரிகையில் வந்ததை நான்
படிக்கவில்லை. உங்கள் கடிதத்தில் எடுத்து எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தேன்
என்னுடைய கட்டுரையில் நான் எழுதியிருப்பதில் குழப்பதற்கு இடமில்லை.

நான் சொன்னதாய் பிறர் சொல்வதை வைத்துக் கொண்டு குழப்பம் ஏற்படுத்திக் கொள்வது

சரியல்ல, நான் சொன்ன கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கவும். படிப்புக்கு தமிழ் நாட்டில் தமிழ் வாயில் சொல்லித் தர வேண்டும். விஞ்ஞானப் பெயர்ச் சொற்களும்,பரிபாஷை மட்டும் ஆங்கிலமாக இருக்கலாம். விளக்கமும், பேச்சும் தமிழாக இருக்க வேண்டும். ஆட்சிமொழி, இந்திய மத்திய-நிர்வாகம்,ராஜ்யாந்த்ர

மொழி, இது ஹிந்தி மட்டுமாக இருக்கலாகாது. ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்..

                                                                                                          இராஜகோபாலாச்சாரி


திரு.பி.எஸ்.விஸ்வநாதன்

36 நாராயண விலாஸ்
ரயில்வேஸ்டேஷன் ரோடு
தெப்பக்குளம், திருச்சி

Monday, July 27, 2020

கடலைக் கடந்து - 4

கடலைக் கடந்து - 4

பெயர் குழப்பம்:

நான் படித்தது கி.ஆ.பெ.விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளியில். (K.A.P.VISWANATHAM HIGH SCHOOL) எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்டிலும் அப்படித்தான் இருக்கும். ஆனால் அந்த பர்சனல் ஆஃபிசர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து K.A.P. என்பதை விரித்து எழுத வேண்டும் என்றார். அதன் விரிவாக்கமெல்லாம் யாருக்குத் தெரியும்? “வாட் இஸ் திஸ்? யூ டோண்ட் நோ யுவர் ஸ்கூல் நேம்?” மீண்டும் எள்ளல். என் ஸ்கூலின் பெயரே இதுதான் என்றால் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் யாரிடமாவது கேள்” என்றார். திருச்சியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கேட்டேன், யாருக்கும் தெரியவில்லை. திருச்சியைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி, “கரியமாணிக்கம், ஆராவமுதன், பிச்சமூர்த்தி என்று ஏதாவது எழுதுங்கள்” என்றார். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? கடைசியில் அந்த பெர்சனல் ஆஃபிசர் கே.ஏ.பி. என்பதை அடித்து விட்டு விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளி என்று எழுதச் சொன்னார்.

அப்பொதைக்கு வேலை முடிந்து விட்டாலும் என் மண்டைக்குள் இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பின்னாளில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களின் பேத்தி எனக்கு நட்பானார். அவரிடம் அந்த கி.ஆ.பெ. எதைக் குறிக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறை பெரியவர்களின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வார்களாம். அதன்படி கிருஷ்ணன்.ஆறுமுகம்.பெரியண்ணா என்பதுதான் கி.ஆ.பெ. என்றார்.   

இந்த சமயத்தில் நம் ஊர் பெயர்கள் அவர்களை படுத்தி வைக்கும் பாட்டையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளில் எங்கள் டிபார்ட்மெண்டின் டைரக்டர் என்னிடம் ஊர் பிடித்திருக்கிறதா? வேலை பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் கேட்டு விட்டு என் பெயரைக் கேட்டார். நான் என் பெயரைக் கூறியதும் ,”ஓ டிஃபிகல்ட், இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட்” என்றார் அஹமது பின் அப்துல் காதர் அல் கசானி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்.

என்னுடைய பெயரில் இருக்கும் பானு என்பது அவர்களும் வைத்துக் கொள்ளும் பெயராக இருப்பதால் மதி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். பானுமதியே கஷ்டம் என்றால் என் கணவரின் பெயராகிய கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயர் அவர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அதில் அவர்களுக்கு உச்சரிக்க தோதாக இருந்த மூர்த்தி என்னும் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு மூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நான் சில சமயங்களில் என்னுடன் பணியாற்றிய எகிப்தியர்களிடம்,”மூர்த்தியின் முழுமையான பெயரான கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயரை சரியாக சொல்லிவிடு, உனக்கு 100 ரியால் தருகிறேன் என்று விளையாடுவதுண்டு.

நான் வேலையில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் பணியாற்றிய ஒரு எகிப்திய பெண்மணி,”பானு ஸ்பீக் டெலிஃஃபோன், ராகு காலிங்” என்றாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். மஸ்கட் வருவதற்கு முன் என் ஜாதகப்படி கேதுவுக்கு ப்ரீதி பண்ண வேண்டும் என்றார்கள், நானும் செய்தேன். அதனால் தன்னை புறக்கணித்ததாக கோபம் கொண்டு ராகு அழைக்கிறாரோ? என்று பயந்தபடி ஃபோனை எடுத்தேன். பேசியது ராஜு என்னும் ஒரு நண்பர். பிறகுதான் எனக்குத் தெரிந்தது எகிப்தியர்கள் ‘ஜ’ என்பதை ‘க’ என்றும், ‘க’வை ‘ஜ’ என்றும் உச்சரிபார்கள் என்று. இதை வேடிக்கையாக ராஜு என்னும் நண்பர், “ராஜு என்னும் என்னை ராகு என்கிறார்கள், கீதா, ஜீதா ஆகிவிடுவாள், அங்கே வராத ஜ இங்கே வந்து விடும்" என்பார்.

அவர்கள் மட்டும் தவறு செய்வதில்லை, நாமும் செய்கிறோம். அவர்கள் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அவர் மகன் என்று பொருள்பட பின்(Bin) என்று குறிப்பிட்டு தன் பெயரை குறிப்பிட்டுக் கொள்வார்கள். மகள் என்றால் பின்ட்(Bint)என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒசாமா பின் லேடன் என்றால் ஒசாமவின் மகன் லேடன் என்று பொருள். ஆனால் இதை அறியாத நம் ஊர் பத்திரிகைகள் அவரை பின் லேடன் என்றே குறிப்பிடும்.     


Saturday, July 25, 2020

கடலைக் கடந்து - 3

கடலைக் கடந்து - 3 

அலுவலகத்தில் முதல் நாள்:

நான் மஸ்கட் சென்று சேர்ந்தது ஜனவரி 5 இரவு, மறுநாள் காலையே நான் வேலையில் சேர வேண்டியதாக இருந்தது. அங்கெல்லாம் அரசு அலுவலகங்கள் காலை 7:30க்கு துவங்கி, மதியம் 2:30 வரைதான் செயல்படும். எங்களை பிக் அப் செய்து கொள்ள மினிஸ்ட்ரி பஸ் உண்டு.

Thursday, July 23, 2020

கடலைக் கடந்து - 2

கடலைக் கடந்து - 2 

இண்டியன் ஏர்லைன்ஸ் செய்த சோதனை:

நான் திருச்சியிலிருந்து ஜனவரி நான்காம் தேதி மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கிளம்பி, அன்று இரவு சென்னையிலிருந்து இரவு 7:30 மணி இண்டியன் ஏர்லைன்ஸில் அப்போதைய பாம்பே சென்று என் பெரிய நாத்தனார் வீட்டில் இரவு தங்கி விட்டு, மறு நாள் மாலை ஐந்து மணி ஏர் இந்தியாவில் மஸ்கட் செல்வதாக ஏற்பாடு. அதற்கான பி.டிஏ.வை திருச்சியில் இருக்கும் இண்டியன் ஏர் லைன்ஸ் அலுவலகதிற்கு டிசம்பர் 31ஆம் தேதி டெலக்ஸ் அனுப்பியிருப்பதாகவும், என்னை இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படியும் தொலைபேசியில் என் கணவர்  கட்டளையிட்டார். இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திலோ டெலக்ஸ் வரவேயில்லை, வந்தால்தான் நாங்கள் டிக்கெட் இஷ்யு செய்ய முடியும் என்றார்கள். இரண்டாம் தேதி வரை இதே நிலைதான். எனக்கு டென்ஷன், என் கணவருக்கோ டென்ஷனோ டென்ஷன்!

இரண்டாம் தேதி காலையும் பி.டி.ஏ. வரவில்லை என்று இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கூற, நொந்து போன நான் ஒரு ஆட்டோ பிடித்து, நேராக மலைகோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் சென்று,”பிள்ளையரப்பா சோதிக்காதே”, என்று வேண்டிக்கொண்டு ஒரு சூரைக்காய் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தால், “இண்டியன் ஏர் லைனஸிலிருந்து ஃபோன் வந்தது, பி.டி.ஏ. வந்து விட்டதாம்” என்றார்கள். அப்பாடா! என்று மூச்சு விட்டேன். நான்காம் தேதி கிளம்ப வேண்டும் என்றால் மூன்றாம் தேதிதான் டிக்கெட் கையில் வந்தது.

நான்காம் தேதி நல்ல நேரத்தில் கிளம்பினேன். ஐந்து மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வர வேண்டிய ஐ.ஏ. விமானம் எட்டு மணிக்குத்தான் வந்தது. “உங்களால் பம்பாய் செல்லும் கனெக்டிங்க் ஃபளைட்டை பிடிக்க முடியாது, நாளை காலை பம்பாய் செல்லும் விமானத்தில் உங்களுக்கு நிச்சயம் இடம் கொடுப்பார்கள்” என்றார்கள். அவர்கள் சொன்னதை கேட்டுத்தானே ஆக வேண்டும், வேறு வழி? ஒவ்வொரு முறை ஏர் இண்டியா, இண்டியன் அல்லது இண்டியன் ஏர் லைன்ஸில் பயணித்த பொழுதும் கிடைத்த அனுபவங்களை தனிப் பதிவாகப் போடலாம்  இரவு சென்னையில் இறங்கி, மாமா வீட்டில் தங்கி விட்டு, மறு நாள் பம்பாய் சென்று, என் நாத்தனார் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விட்டேன். அப்போதெல்லாம் விமான நிலயங்களில் அத்தனை கெடுபிடி இல்லாததால், என் நாத்தனாரின் கணவர் தன்னுடைய பாஸ் போர்டை கையில் வைத்துக் கொண்டு என்னோடு செக் இன் கவுண்டர் வரை வந்து விட்டார். அங்கு எக்செஸ் பாகேஜ் இல்லாத பயணி ஒருவரோடு பேசி என்னிடம் அதிகமாக இருந்த பாகேஜை அவரை எடுத்துக் கொள்ள வைத்தார். அன்று ஏர் இண்டியாவில் கும்பல் அதிகம் இல்லை. என்னைப் போலவே முதல் முறையாக மஸ்கெட் வந்த கலைச்செல்வி என்னும் பெண், ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்த்த ஒரு இஸ்லாமிய பெண் ஆகிய நாங்கள் மூவரும் அரட்டை அடித்தபடி பயணித்து, ஒரு வழியாக ஓமானில் காலடி வைத்தேன்.    


Tuesday, July 21, 2020

கடலைக் கடந்து...

கடலைக்  கடந்து... 

திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டாலும் விசா கிடைக்காததால் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கணவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. இறை அருளால் விசா வந்தது, அதுவும் எம்ப்ளாய்மெண்ட் விசா. என் கணவர் வேலை பார்த்த மினிஸ்ட்ரியிலேயே, அதே இலாகவிலேயே வேலை கிடைத்தது. இதில் சிறப்பு என்னவென்றால்

Friday, July 17, 2020

அம்மன் அருள்

அம்மன் அருள் 



எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது, வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவர் என்னிடம்,"அங்கு ஃபாமிலி விசா கிடைப்பது கொஞ்சம் கடினம். நான் உன்னை அங்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறேன், உன்னை அழைத்துச் செல்ல முடியாவிட்டால் நான் இங்கு வந்து விடுவேன்" என்றார். நான் அதற்கு ஒப்புக் கொண்டதால்  திருமணம் நடந்தது. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் எனக்கு விசா கிடைக்காததால்  நான் பிறந்த வீட்டில்தான் இருந்தேன். 
அதற்குள் இங்கு இருப்பவர்கள்,"உனக்கு இன்னும் விசா கிடைக்கவில்லையா? நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா?" என்றெல்லாம் கேட்டு நோகடித்தார்கள். 

என் இரண்டாவது அக்கா, "சமயபுரத்திக்கு ஐந்து சனிக்கிழமைகள் சென்றால், நவகிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்களே, நாமும் செல்லலாம்" என்றாள். நானும் அவளும் ஒரு சனிக்கிழமை சமயபுரம் சென்றோம். சனிக்கிழமை என்பதாலும், நாங்கள் சென்றது மதிய நேரமாக இருந்ததாலும் கூட்டம் அதிகம் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக, கோவிலில் கும்பல் நிரம்பி வழிந்தது. காரணம், கார்த்திகை மாதமாக இருந்ததால் சபரிமலை சீசன் தொடங்கி விட்டதுதான். இலவச தரிசன கியூ எங்கேயோ இருந்தது. சிறப்பு கட்டண வழியில் செல்ல லாம் என்றால் கையில் போதுமான அளவு பணம் இல்லை. 
வெளியே செல்லும் பொழுது கணக்காக பணம் எடுத்துச் செல்லும் என் கெட்ட பழக்கத்தை நொந்து கொண்டு, வெளியே இருந்தபடியே அம்மனை தரிசித்து விட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். 

துவஜஸ்தம்பத்திற்கு அருகில் நின்ற வண்ணம் அம்மனை தரிசித்து விட்டு, நமஸ்கரித்து எழுந்த பொழுது வி.ஐ.பி. தரிசன வழியே ஒரு அரசியல் பிரமுகர் அம்மனை தரிசித்து விட்டு கழுத்தில் மாலையோடு ஆரவாரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். நாங்கள் அவருக்கு வழி விட்டு ஓரமாக ஒதுங்கி நின்றோம். அப்போது எங்களை பார்த்த அர்ச்சகர் ஒருவர், "நீங்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டீர்களா?" என்றார். நான், "வெளியிலிருந்தபடியே தரிசித்து விட்டோம் " என்றேன். என் அக்காவோ, சாமியை தரிசனம் பண்ணக்கூட பைசா தேவையாக இருக்கிறதே" என்றாள். இதைக் கேட்ட அவருக்கு என்ன தோன்றியதோ, " நீங்கள் உள்ளே செல்லுங்கள், உள்ளே இருப்பவரிடம் நான் சொல்கிறேன்" என்றார். 

"பரவாயில்ல, நாங்கள் இங்கிருந்தபடியே பார்த்து விட்டோம்"   என்று நான் மறுத்ததை பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த ஒரு அர்ச்சகரை அழைத்து, " இவங்க ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போய் தரிசனம் செய்து வையுங்கள்" என்றார். உடனே அவர் எங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் சென்று, அம்மனுக்கு வெகு அருகில் தரிசனம் செய்வித்து, பிரசாதமாக என் கையில் ஒரு ஜவந்தி பூ மாலை, என் சகோதரிக்கு ஒரு அரளிப்பூ மாலை, குங்குமம் இவைகளைத் தந்தனர். நாங்கள் சிலிர்ப்போடும்,சந்தோஷத்தோடும், மன நிறைவோடும் வீடு திரும்பினோம்.  அடுத்த சனிக்கிழமைக்குள் எனக்கு விசா கிடைத்தது, அடுத்த மாதமே வெளிநாடு சென்று விட்டேன்.   
சமயமறிந்துதவும் சமயபுரத்தம்மன் என் வாழ்வில் நடத்திய அற்புதம் இது. 




Friday, July 10, 2020

You are cordialy invited....

You are cordialy invited....



திருமணத்தில் ஒரு முக்கியமான அம்சம் அழைப்பிதழ்கள். லக்கின பத்திரிகை எழுதுவது என்பது ஒரு முக்கியமான சடங்கு. குடும்பத்தில் இருக்கும் பெரியவர் அழைப்பதாகத்தான் பத்திரிகைகள் அச்சிடப்படும். 

கல்யாண பத்திரிகைகள் மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தில்தான் இருந்தன. பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஆங்கிலத்திலும், உள்ளே தமிழிலும் அச்சிடப்பட்ட அந்த அழைப்பிதழ்களில் வாக்கியங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்போதோ பத்திரிகைகள் மட்டுமல்ல அதில் இடம் பெறும் வாசகங்களும் பலவிதம். மணமக்கள் தாங்களே அழைப்பது போன்றவை, மணமக்களின் சகோதரன் அல்லது சகோதரன் தங்களின் நண்பர்களுக்காக தனியாக பத்திரிகைகள் அடிக்கின்றனர். 


என் பெற்றோர்கள் திருமணம் நடந்த காலம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் கெஸ்ட் கண்ட்ரோல் இருந்ததாம். அதனால்(இந்த கோவிட் காலத்தில் 20 பேர்களுக்குத்தான் அனுமதி என்பது போல) அதனால் எங்கள் பெற்றோரின் திருமண அழைப்பிதழில் பத்திரிகையில் கீழே 'தாங்கள் வரும்பொழுது தங்கள் ரேஷனை கொண்டு வரவும்' என்று அச்சிடபட்டிருந்தது.  அதாவது ஊரிலிருந்து வந்தவர்கள் தங்களுடைய ரேஷனை கொண்டு வந்து அதைத்தான் சமைத்து சாப்பிட்டார்கள் என்று காட்டுவதற்காக இந்த ஏற்பாடு. 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பத்திரிகை கிடைத்தால் பாருங்கள் அதில் 'நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்து' என்று போட்டிருப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து, முகூர்த்தத்திற்கு மட்டும் அழைக்கும் ஒரு பத்திரிகை, ரிசப்ஷனுக்கு மட்டும் அழைக்கும் பத்திரிகை என்று நம்முடைய விருந்தோம்பல் தேய்ந்து விட்டது.  


இப்போதைய கொரோனா காலத்தில் இருபது பேர்களைத்தான் திருமணத்திற்கு அழைக்க முடியும், மற்றவர்கள் ஆன் லைனில் பார்க்கும் வண்ணம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.இப்போது பத்திரிகைகளில் லைவ் ஸ்ட்ரீமிங்க்கான கோடை அச்சிட்டு வருகின்றன. அதை ஸ்கேன் பண்ணினால் லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க முடியும். 



பட்டணத்தில் பூதம் படத்தில் செய்தித் தாளிலேயே 'நான் ஆணையிட்டால்,அது நடந்து விட்டால்..' பாடலையும், 'பாட்டும் நானே, பாவமும் நானே ..' பாடலையும் ஜீ பூம் பா ஓட்டுவார். அது போல எதிர்காலத்தில் திருமண அழைப்பிதழிலேயே திருமணத்தை ரசிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.  

 


Thursday, July 2, 2020

சுப திருஷ்டி!

சுப திருஷ்டி! 

பலத்த கை தட்டல்களை வணங்கி ஏற்றுக் கொண்டு வசுமதி  மேடையிலிருந்து இறங்கினாள். ராஜாராமன் அவள் தோளைத் தட்டி, "ஜமாய்ச்சுட்ட!" என்றதும் அவர் கால்களை தொட்டு வணங்கினாள். 

"ரொம்ப பயமாயிருந்தது மாமா.. எப்படியோ நல்லபடியா   ஒப்பேத்திட்டேன்.."  

"ஒப்பேத்தறதா? தூள் கிளப்பிட்ட.. இதோட நிறுத்திடக் கூடாது, தொடர்ந்து பாடணும்..." என்று அவர் கூறியதும், வசு சிரித்துக் கொண்டே  தலை  ஆட்டினாள்.     

ராஜாராமன் அவர் புதிதாக வீடு கட்டிக்க கொண்டு குடியேறிய புறநகர் பகுதியில் கல்சுரல் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பித்து அவ்வப்பொழுது 
கச்சேரி, புராண பிரவசனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதற்கான செலவுகளுக்கு ஸ்பான்சர்கள் எப்படியோ பிடித்து விடுவார். இந்த மாதம் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அதற்கு ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு  உடல் நிலை சரி இல்லாததால் வர முடியவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்து விட அவருக்கு மனம் இல்லை. அவருடைய நண்பரின் மகள் வசுமதி முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். நன்றாகப்  பாடுவாள், ஆனால், இதுவரை எந்த மேடையிலும் ஏறி, கச்சேரி செய்ததில்லை. அவளை மேடை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்தார். 

"என்ன விளையாடறயா? இவ நன்னாத்தான் பாடுவா, அதுக்காக கச்சேரி பண்ண முடியுமா?" வசுவின் அப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. 

"தாராளமா பண்ணலாம், எல்லோரும் ஏதோ ஒரு நாள் இப்படி ஆரம்பித்தவர்கள்தான். கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணினால் போதும்" 

நான் வயலின் வாசிக்கப் போகும் பையனையும், மிருதங்கம் வாசிக்கப் போகும் பையனையும் வரச் சொல்றேன், ரெண்டு நாள் பிராக்டீஸ் பண்ணினால் போதும்".

ராஜாராமன் சொன்னதோடு நிற்காமல், அவர்களோடு உட்கார்ந்து என்னென்ன பாடல்கள் பாட வேண்டும், என்பதற்கு உதவி, சின்ன, சின்ன திருத்தங்கள் கூறி கச்சேரியை அமைத்து கொடுத்தார். அவளும் அதை சிக்கென பிடித்துக் கொள்ள கச்சேரி சிறப்பாக அமைந்து விட்டது. 

வசுவின் கச்சேரியை கேட்ட ஒருவர், தன் மகளின்  திருமண  ரிசப்ஷனுக்கு உடனே புக் பண்ணினார்.  அதைத் தொடர்ந்து சில கோவில் கச்சேரிகள் கிடைத்தன. வெளியூருக்கு போய் பாடும் சந்தர்ப்பம் கூட வாய்த்தது. வசுமதிக்கும் சரி, அவள் பெற்றோர்களுக்கும் சரி அது சந்தோஷமளிப்பதாகவே இருந்தது. 

அவர்கள் வீட்டிற்கு  சென்றிருந்த பொழுது,"என்ன வசு, உன் கான்செர்ட்டெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?" என்றதற்கு, "ம்ம் ." என்று அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். 

"ஆச்சு, ஆடி மாசம் வந்துண்டிருக்கு, உனக்கு நிறைய கச்சேரி கிடைக்கும்.."  அவர் மேலே பேச, அவளோ, "பார்க்கலாம்.."        என்றதும், "வொய் ஸோ டிஸ் இன்ட்ரஸ்டட்?" 

"தொண்டை சரியில்ல.."  

"நவராத்திரில பாடுன்னு சொன்னதும் பதில் சொல்ற  மாதிரி  சொல்றயே..?" சிரித்துக் கொண்டே கேட்க, 
அவள் பேசாமல் இருந்தாள். அவளுடைய அம்மா தொடர்ந்தாள், 

"கச்சேரி பண்ண ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு மாத்தி மாத்தி உடம்புக்கு வந்துண்டே இருக்கு. அதுவும் தொண்டை ரொம்ப பாதிக்கிறது. போன  வாரமெல்லாம் பேசவே முடியல.."

"இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்,இதுக்காக கச்சேரி செய்வதை ஏன் நிறுத்தணும்?" 

"திருஷ்டியா இருக்குமோனு தோண்றது, அதனால இனமே கச்சேரி பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். கச்சேரி பண்ண ஆரம்பித்த - -திலிருந்துதான் இந்த பிரச்சனை..."

ராஜாராமன் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களை  கூர்ந்து பார்த்தார். " கச்சேரி பண்றங்களே சௌமியா, சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, இவங்களுக்கெல்லாம் திருஷ்டி படாதா? 

"அது......."

நீங்க மோசமான திருஷ்டி பத்தி மட்டும் யோசிக்கிறீங்க, மோசமான திருஷ்டினு ஒண்ணு  இருந்தா, சுப திருஷ்டியும் இருக்கும்  இல்லையா?" என்று அவர் கேட்க, வசுவும், அவள் தாயாரும்  புரியாமல்  முழித்தார்கள்.

ராஜாராமனே தொடர்ந்தார்," நம்ம ஊரில் கல்யாணம், காது குத்தல், கிரஹப்ரவேசம்  போன்ற எல்லா விசேஷங்களுக்கும் சொந்தம், நட்பு என்று நிறைய பேரை  அழைப்போம்  ஏன் தெரியுமா? " ராஜாராமன் கேள்விக்கு பதில் வராததால் அவரே தொடர்ந்தார். 

சில பேர் பார்வைக்கு நல்ல சக்தி உண்டு, அப்படி பட்டவர்கள் பார்த்தால் நல்லது நடக்கும். சில பேர் சொன்னால் பலிக்கும், அப்படி பட்டவர்கள் வாழ்த்தினால் நல்லது. சில பேர் சங்கல்பத்திற்கு பலன் உண்டு. அப்படிப் பட்ட எல்லோருடைய ஆசிகளும் கிடைக்கணும்னுதான்.." 

நீங்க சொல்றது புரியல.." 

இப்போ உன் கச்சேரியை குறைவான பேர்கள்தான் கேட்கிறார்கள், அதில் இருக்கும் துர் திருஷ்டி உள்ளவர்களின் திருஷ்டியை காம்பன்சேட் பண்ணனும் என்றால் இன்னும் அதிகமானவர்கள் உன் கச்சேரியை கேட்கணும். அப்படி கேட்பவர்கள் அதிகமாக,அதிகமாக சுப திருஷ்டி அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அது இந்த துர் த்ரிஷ்டியின் பலனை குறைத்து விடும். ஸோ நீ இனிமேல் தான் நிறைய கச்சேரி பண்ணனும்".

வசுமதியும் அவள் அம்மாவும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பலாம். 

Saturday, June 20, 2020

வூ ஹான் விளைவுகள்

வூ ஹான் விளைவுகள்


சரித்திரத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் போல உலகத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

Sunday, June 14, 2020

மசாலா சாட் - 18

மசாலா சாட் -18

எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. சில ஜோசியர்களிடமும் நம்பிக்கை உண்டு. ஆனால் ரிஷப ராசிக் காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும், பிரிந்த உறவினர்கள் சேர்வார்கள், புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு என்று பொத்தாம் பொதுவாக அடித்து விடும் ராசி பலன்கள் நிகழ்ச்சியில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும்  தினசரி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராசி பலன்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன்,கேட்பேன் காரணம், ராசி பலன்களுக்கு இடையே அவர்கள் கூறும் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் புகழ் கிடைக்கும் போன்ற ஜோதிட டிப்சுகளை  கேட்பதற்காக.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சன் டி.வி., ஜீ டி.வி., ஜெயா டி.வி. மூன்றிலும் அடுத்தடுத்து ராசி பலன்கள் நிகழ்ச்சி வரும். மூன்றிலும் மூன்று விதமாக கூறுவார்கள். இதில் ஜெயா டி.வி.யில் ராசி பலன்கள் நிகழ்ச்சியை வழங்கும் குமரவேல் பரிகாரமாக சில மந்திரங்களை கூறி விட்டு, ஜெய மோகன் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தைப் படியுங்கள், பால குமாரன் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தைப் படியுங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் உப பாண்டவர்கள் என்னும் நூலை வாசித்துப் பாருங்கள், சாரு நிவேதிதாவின் இணைய பக்கங்களை வாசித்துப் பாருங்கள் என்பார். நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!

***********************************************************************************

எங்கள் ஊருக்கு பக்கத்தில் வரகூர் என்னும் சிறு கிராமம் . அங்கிருக்கும்  பெருமாள் கோவிலும் அதில் கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நடக்கும் உறியடி உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் அங்கு ஒரு திருமணம் நடந்திருக்கிறது. திருமண பெண்ணிற்கு அலங்காரம் செய்ய சென்னையிலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்திருக்கிறார்கள்(ரொம்ப அவசியம்) வந்த பெண்ணிற்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது மணப்பெண் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறாளாம். ஊரில் எல்லோருக்கும் டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்களாம், ஊரே பீதியில்.  கடவுளே! சப்கோ சன்மதி தோ பகவான்.

***********************************************************************************

  கீழே இருப்பவை என் அக்காவின் பேரன் ஆறு வயதே ஆன அர்ஜுன் வரைந்தவை:










அர்ஜுன் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றாலும், முக 
பாவங்களை சிறப்பாக சித்தரித்திருப்பதாக தோன்றியதால் பகிர்ந்திருக்கிறேன்.




 

Thursday, June 4, 2020

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் 




புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது  கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . 

நான் 'வாஷிங்டனில் திருமணம்' தவிர சாவியின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. அது கூட மிகவும் சிறு வயதில் படித்தது. அவருடைய விசிறி வாழையை நிறைய பேர் சிலாகித்து கேட்டிருக்கிறேன். சமீபத்தில் பசுபதிவுகளில் 'பெங்களூர் மெயில்' படித்து வியந்தேன். கல்கி பாணியில் அருமையான நகைச்சுவை சிறு கதை. 

கனவுப் பாலம் க்ரைம் த்ரில்லர். சாவியின் அபிமான தேசமான ஜப்பானில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  காதலும், க்ரைமும் கலந்த கதையில் நகைச்சுவைக்கு இடம் இல்லை. சம்பவங்களும் அத்தனை த்ரில்லாக இல்லாதது ஒரு குறைதான். நடையில் ஆங்காங்கே சுஜாதாவின் சாயல் தெரிவது ஒரு ஆச்சர்யம்.



கேரக்டரோ கேரக்டர் கடுகு என்னும் அகஸ்தியன் அவருக்கே உரிய நகைச்சுவை எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகிறது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் பாட்ஸ்மானைப்  போல முன்னுரையிலேயே விளாசித்தள்ளுகிறார்.

 "இந்தப் புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள், புத்தகம் அபாரம் போங்கள்"

"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டேயிருந்த என் வீட்டு மேஜையின் கீழ் உங்கள் புத்தகத்தை வைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது"   

கடுகு சாரின் நகைச்சுவை போட்டு உடைக்கும் ரகமோ, அல்லது மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் ரகமோ இல்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற நாசூக்கான நகைச்சுவை. 

ராவ் பகதூர் ராமேசம் பற்றி, இவர் மாத்ருபூதத்திடம் பேசுவதும் ஒன்றுதான், தன்  கருத்துக்களை தன்னிடமே உரக்க பேசிக் கொள்வதும் ஒன்றுதான். மாத்ருபூதத்தின் பங்கு 5% என்றால்,மீதி 95% இவருடையதுதான்!

மாணிக்கம் என்னும் கொல்லத்துக்காரர் பற்றி பாவம் மாணிக்கம், நாலடி உயரத்துக்கு இவர் மேடை கட்டினால் அது அரை அடி சாய்ந்து இருக்கும்.அதைச் சரி செய்ய வேறு ஒரு கொல்லத்துக்காரர் தேவைப்படுவார். 

ஜெயம் என்னும் கேரக்டரைப் பற்றி, "ரைட்டர் லட்சுமி வந்திருக்காங்க,பை தி பை அவர் கவிதை எழுதுகிறவரா? நான் எங்கப்பா மேகசீன் படிக்கிறேன்?" என்பது மாதிரி பலரைப் பற்றி பல சமயங்களில் கேட்பார். சீர்காழியிடம், "ஓரம் போ பாட்டு பாடினது நீங்கள்தானே?" என்று கேட்பார். ஏன் சிவாஜியிடமே, 'என்ன சார் ஒரு அம்பது படத்திலாவது நடித்திருப்பீங்களா?' என்று கேட்டிருக்கிறார்.

கனகாம்பரம் என்னும் கேரக்டரைப் பற்றி எழுதும் பொழுது, இவரது நகைச்சுவை உணர்வு கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.  எப்படியாவது ஒரு பிரபல எழுத்தாளராகிவிட வேண்டும் என்ற துடிப்பில் கனகாம்பரம் செய்யம் காரியங்களை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். "அந்த இலக்கிய பத்திரிகையில் வரும் அர்த்தமற்ற வாக்கியங்களை படித்து ரசிப்பார். (இந்த உத்வேகத்தின் எழுச்சியின் பரிணாம ஆழத்தில் உள்ள யதார்த்த வேகத்தில் உள்ள தளை பிரதிபலிப்பாக எழும் பாசிடிவிசமே இடை நிலவரத்தின் கருத்தாகும்.) சந்தடி சாக்கில் ஸோ கால்டு இலக்கிய பத்திரிகைகளுக்கும் ஒரு குத்து. 

பத்திரிகை ஜோக்குகளில் எழுத்தாளரை ஜில்பா, ஜிப்பா ஆசாமியாக யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் போட்டாலும் போட்டார், கனகாம்பரம் அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு எழுத்தாளராகி விட்டார். 

ஒரு கட்டுரை எழுதி விட்டால், அது பிரசுரமானால் ஒழிய அடுத்த கட்டுரை எழுத மாட்டார். இதனால் ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே இரண்டு,மூன்று வருட இடைவெளி கூட ஏற்பட்டு விடும். அடிக்கடியா கல்கத்தாவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் வருகிறார்கள்?

அஞ்சாம் பிளாக் மாமியைப் பற்றி எழுதும் போது, மாமிக்கு தலைவலி, மாமி சினிமா போறேன், மாமி இன்று உபவாசம் என்ற ரீதியில்தான் பேசுவாள். ஏன் சொந்தக் கணவனிடம் பேசும் போது கூட," உங்களை கல்யாணம் பண்ணிக்க கொண்டதில் என்ன லாபம்? மாமிக்கு ஒரு நகை நட்டு உண்டா? இல்லை சினிமாதான் உண்டா?" என்பாள்.

இவர் சித்தரித்திரிக்கும் கேரக்டர்களை பற்றி படிக்கும் பொழுது,  ஒரு வருத்தம் படருகிறது. அப்போதெல்லாம் இப்படி விதை விதமான, தனித்தன்மை கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்தது. அவர்கள் இயல்பாகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், இப்போது குறிப்பாக நகரங்களில் நெருங்கி பழகினாலே ஒழிய மற்றவர்களின் சுய ரூபம் தெரிவதில்லை. எல்லோரும் ஒரு முகமூடியோடுதான் திரிகிறார்கள். 

அதிலும் " உன் தலையில் இடி விழ, நீ காலரா வந்து போய் விட" என்று திட்டிக் கொண்டேதான் உதவி செய்யும் பட்டம்மா என்னும் 
கேரக்டரையும், ராமசேஷு என்னும் காரெக்டரையும், தபால்காரர்  அல்லா பக்ஷ் ஐயும் பற்றி படிக்கும் பொழுது இப்படிப்பட்ட கேரக்டர்களை நாம் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்றுதான் தோன்றுகிறது.  தீபாவளி, பொங்கல் என்றால் அல்ல பக்ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து,பத்து என்று கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடிய திருப்தியே அவர்களுக்கு இருக்காது. என்று அவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது, எப்படியிருந்த தேசத்தில் இன்று பிரிவினை தோன்றி விட்டதே என்னும் வருத்தம் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. 

கடைசியில் தன்னையும் ஒரு கேரக்டராக அவர் வர்ணித்திருக்கும் சிறப்பை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவருடைய வர்ணனைக்கு தன் ஓவியத்தில் உயிர் கொடுத்திருக்கிறார் கோட்டோவிய மன்னன் கோபுலு.

நம் சேமிப்பில் இருக்க வேண்டிய புத்தகம்.    

இது ஒரு மீள் பதிவு.  

Sunday, May 31, 2020

சில கோவிட்-19 கற்பனைகள்

சில கோவிட்-19 கற்பனைகள் 

இந்த வருடம் நாம் பண்டிகைகளை எப்படி கொண்டாடப் போகிறோம் என்று தெரியவில்லை. கோகுலாஷ்டமி அன்று குட்டி கண்ணனை வரவேற்க முறுக்கு,சீடை, அப்பம், என்று பட்சணங்கள் செய்து வைத்து விட்டு கூடவே சானிடைசரும் வைக்க வேண்டுமோ? 

நவராத்திரியின் பொழுது தினமுமே வீட்டிற்கு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுக்கும் பழக்கம் மாறி, வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ அழைப்பு அனுப்பி வெற்றிலை பாக்கு தரும் வழக்கம் வந்து விட்டது. இந்த வருடம் அதிலும் சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் செய்வதற்காக நேரமும் குறிப்பிடப்படுமோ? அதிலும் நவராத்திரி கிஃப்ட்டை ஒரு பையில் போட்டு ஒரு கழியில் மாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்வார்களோ?

தீபாவளிக்கு டிரஸ் வாங்கும் பொழுது கண்டிப்பாக மேட்சிங்காக மாஸ்க்கும் வாங்கப்படும். 

மார்கழியில் கோலம் போடும்பொழுது சிலர் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வார்கள். அதோடு சேர்ந்து மாஸ்க்கும் அணிந்து கொண்டால் கொஞ்சம் பயமுறுத்துவது போலத்தான் இருக்கும். 

போகி அன்று கொரோனாவை கொளுத்தி விட்டு, புத்தாண்டை புது மலர்ச்சியோடு வரவேற்கலாம். 

*கொரோனவை கொளுத்தி விட்டு என்றதும் வட கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் ஒரு வினோதமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எப்போதெல்லாம் ஊரில் உயிர்கொல்லி வியாதிகள் பரவுகிறதோ அப்போதெல்லாம் அந்த வியாதியையே ஒரு பெண் தெய்வமாக பாவித்து, வேப்பிலைகளால் அலங்கரித்து, பூஜித்து, இனிப்புகள் படைத்து எங்கள் ஊரை விட்டு வெளியேறு என்று வேண்டி, ஊரின் எல்லையில் கொண்டு விட்டு விடுவார்களாம். இதற்கு முன்னால் சிக்கன் குனியா வந்து பொழுதும் இப்படி செய்தார்களாம். இப்போது கொரோனமாவுக்கு(பெயரை கவனியுங்கள்) இந்த பூசை நடந்திருக்கிறது.   


கொரோனாவால் வியாபாரம் படுத்து விட்டது, வியாபாரிகளுக்கு நஷ்டம் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். டாபர் கம்பெனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. கடந்த இரண்டு மாதங்களில் இதன் தயாரிப்பான தேன், மற்றும் ஸ்யவனபிராஷ் லேகியம் நிறைய விற்றிருப்பதால் டாபர் கம்பெனி லாபம் ஈட்டியிருக்கிறதாம்.  பலருக்கு துன்பம், சிலருக்கு இன்பம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
சில கோவிட்-19 ஜோக்குகள்:

முதலாமவர்: என்னது லேப்டாப் சர்வீஸ் பண்ண போனவனை குவாரண்டைன்னுக்கு அனுப்பி விட்டார்களா?

இரண்டாமவர்:ஆமாம், எங்கே போற என்று கேட்ட போலீசிடம், வைரஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான், முழுமையாக கேட்காமல் குவாரன்டைனுக்கு அனுப்பி விட்டார்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
மணப்பெண்ணின் அப்பா: என்ன ஐயரே, தாலிக் கயிறா? தாம்புக் கயிறா?  இவ்வளவு நீளமா வாங்கியிருக்கீங்க?

ஐயர்: நாத்தனார் தாலி முடியும் பொழுது சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான் 

வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகட்டும். 


* நன்றி Times of India




Monday, May 25, 2020

இரு கதைகள்

மத்யமரில் வெளியான என் இரு கதைகள் அங்கு வாசிக்கத்தவர்களுக்காக:

அவள் வருவாள் 

அலைபேசியை துண்டித்த பாலாவிற்கு சந்தோஷம் கரை புரண்டது.
"மண்டே கிரிஜா வராளாம்.." 
"ஓ அப்படியா? வெரி குட்" ராதா என்னும் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது. 
ஞாயிறு மாலையிலிருந்தே பாலா பரபரப்பானாள். 
திங்கள் காலை டிகாஷன் போடும்பொழுது, கிரிஜா நினைவுதான். அவள் வந்ததும் நல்ல காபியாக கொடுக்க வேண்டும். காபி  கிரிஜாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள். 
எட்டு மணி ஆனதும் தவிப்பாகி விட்டது. "இத்தனை நேரம் வந்திருக்க வேண்டுமே? ஏன் இன்னும் வரவில்லை?
செல்போனில் கிரிஜாவை தொடர்பு கொண்டபொழுது அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரிக்கார்ட் செய்யப்பட்ட  குரல் கூறியது. 
பாலா வாசலுக்கும், உள்ளுக்கும் நடப்பதைப் பார்த்து ராதா,"ஏன் டென்ஷனாகுற? கிரிஜா வருவாள் .." என்றார். 
பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த பொழுது கிரிஜா தன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவது தெரிந்தது. 
தோ! கிரிஜா வந்துட்டாளே! குடுகுடுவென்று வாசலுக்கு ஓடி கதவை திறந்தாள்.
"வாவா! ஏன் இவ்வளவு நேரமாயிடுச்சு?.. இந்தா காபியை  குடிச்சுட்டு அப்புறம் வேலையைப் பார். "
சரிம்மா, இத்தனை நாளா எல்லா நீங்களே தனியா பாத்துக்கிட்டீங்களா?" என்றாள் லாக் அவுட் முடிந்து வேலைக்கு வந்திருக்கும் வேலைக்காரி கிரிஜா.