கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 25, 2025

டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்) & காந்தா

 டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்)

காவல் துறையில் பணியாற்றிய டொமினிக்(மம்முட்டி) அங்கு அவர் நடந்து கொண்ட முறையால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மனைவியும் அவரை விவாகரத்து செய்து விடுகிறார். அவர் தனியாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்துகிறார். அதில் பெரிய வருமானம் இல்லை, வீட்டு வாடகை கொடுப்பதற்கே திணறும் நிலை. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரான பெண்மணி இவரிடம் கருணையோடு நடந்து கொள்கிறார். ஒரு நாள் மருத்துவமனையில் அவருக்கு கிடைத்த ஒரு பெண்ணின் பர்ஸுக்கு தொந்தக்காரியை கண்டுபிடிக்கச் சொல்கிறார் அவர்.
அந்த பர்ஸுக்கு சொந்தக்காரி பூஜா ரவீந்திரன் என்னும் ஒரு பெண் என்பது தெரிகிறது. அதை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கச் சென்றால் அவரோடு சேர்ந்து வசிக்கும் பெண், நான்கு நாட்களாக பூஜா மிஸ்சிங் என்கிறார். அதை விசாரிக்கத் தொடங்கினால் அந்தப் பூஜாவின் காதலன் கார்த்திக்கை இரண்டு வருடங்களாக தான் பார்க்கவில்லை என்கிறாள் கார்த்திக்கின் சகோதரி. இப்படி அடுத்தடுத்து திருப்பங்கள். அவைகளை டொமினிக் எப்படி சால்வ் செய்கிறார் என்பதுதான் கதை.
நெய்ல் பைட்டிங் கதையை எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக, ஆனால் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் சிறப்பு!.
டொமினிக்காக மம்முட்டி, அவரது அசிஸ்டெண்டாக கோகுல் சுரேஷ். இதைத் தவிர வினீத் போன்ற நமக்கு பரிச்சயமான பல முகங்கள். எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்குமே? நகைச்சுவை அறவே இல்லை, ரத்தம் பீரிடும் வன்முறை இல்லை. வெப் சீரீஸ் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, ஆனாலும் குடும்பத்தோடு ரசிக்கலாம்.

காந்தா

துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ, காயத்ரி, இவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, நிழல்கள் ரவி, வையாபுரி, ஆடுகளன் நரேன் போன்றவர்களும் இருக்கிறார்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

டி.கே.மகாதேவன் என்னும் சூப்பர் ஸ்டாராக துல்கர், அவரை உருவாக்கிய இயக்குனர் சமுத்திரகனி.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் பாதியில் நின்று போன படத்தை மீண்டும் துவக்குகிறார்கள். அவர்கள் இருவரும் படப்பிடிப்பில்மோதிக் கொள்கிறார்கள். தன் விருப்பப்படிதான் கிளைமாக்ஸ் எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவருமே வீம்பாக நிற்கிறார்கள். துல்கர் மீது காதல் வசப்படும் கதாநாயகி பாக்யஸ்ரீ கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ராணா துப்பு துலக்குவதுதான் இரண்டாம் பாதி. 

MKT ஐ நினைவு படுத்துவது போல துல்கருக்கு TKM என்று பெயர். சிலர் கூறுவது போல எம்.கே.தியாகராஜ பாகவதரை நினைவு படுத்துவது போல எந்த காட்சியும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய நடை, உடை, பாவனைகள் எம்.ஜி.ஆரைத்தான் நினைவு படுத்துகின்றன. அவரும், சமுத்திரகனியும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. ஏன் அந்த புதுமுக கதாநாயகி உள்பட யாரும் சோடை போகவில்லை. ராணாதான் கொஞ்சம் கோமாளித்தனமாக செய்திருக்கிறார். செட், உடைகள் எல்லாம் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன. 

பாடல்கள் கோலோச்சிய அந்தக் கால மெட்டில் பாடல் போட்டு அசத்தியிருக்க வேண்டாமா? கோட்டை விட்ட இன்னொரு விஷயம் ஒரு காட்சியில், "அவர் காலடியில் படுத்துக் கொண்டிருந்தால் தடவிக் கொடுப்பார், பறக்க ஆரம்பித்தால் இறக்கையை வெட்டுவார்" என்று துல்கர் கூறுவாரே தவிர துல்கருக்கும், சமுத்திரகனிக்கும் எதனால் ஆகாமல் போனது என்பது அழுத்தமாக காட்டப்படவில்லை. கொலையாளி யார் என்று யூகிக்க முடிந்தாலும் முடிவு எதிர்பாராதது.  

நெட்ஃப்லெக்ஸில் பார்கலாம்


8 comments:

  1. அட! இன்று ஸ்ரீராமும் இந்த இரு படங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்!

    நீங்களும். படங்கள் பார்க்கும் ஆசை வருகிறது. ஆனால்....ஆனால்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யெஸ் எங்கள் பிளாக்கில் இதைப் பார்த்ததும் எனக்கு வியப்பு.

      Delete
  2. கௌதம் வாசுதேவ் மேனன் மம்முட்டி வைத்துஇயக்குவது பற்றி சொல்லியிருந்ததை வாசித்த நினைவு...

    எனக்கு இப்படியான கதைகள் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். மீண்டும் ஆனால்,,,,, ஆனால்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்தப்படம் கெளதம் மேனன் படம் மாதிரி இல்லை.

      Delete
  3. OTT தளம் எதிலும் நான் இணையவில்லை என்பதால் இந்த படங்களை பார்க்க வாய்ப்பில்லை. YouTube வழி பார்க்க முடியும் படங்களை எப்போதும் பார்ப்பது உண்டு. முதல் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. காந்தா தமிழ்ப்படம் என்பதால் தொலைகாட்சியில் வரும்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புதிதாக வந்த படங்களின் விமர்சனத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள். குழந்தைகள் இந்தப் படங்களையெல்லாம் வார இறுதி நாட்களில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் அவ்வளவாக புதுப் படங்களைப் நானாகப் போட்டு பார்ப்பதில்லை. நீங்கள் அன்று சொன்னதில் "ஆண்பாவம் பொல்லாதது" பார்த்தேன். வன்முறைகள் இல்லாமல் படம் நன்றாக இருந்தது. உங்கள் விமர்சனம் நன்றாக இருப்பதால், இதையும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அட! என் விமர்சனத்திற்கு மதிப்பு இருக்கிறது. நன்றி.

      Delete