கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 20, 2026

சாப்பாட்டு ராமன்

 சாப்பாட்டு ராமன்

புராணங்களில் கிருஷ்ணன்தான் சாப்பாட்டு பிரியனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். கோகுலத்தில் இருந்த எல்லா வீடுகளிலும் புகுந்து பால்,வெண்ணெய், தயிர் என்று எல்லாவற்றையும் கபளீகரம் செய்தவன் அவன்தான். ராமன் அப்படியெல்லாம் செய்யவில்லை. நாமே கூட கோகுலாஷ்டமிக்குத்தான் சீடை, முறுக்கு, தேங்குழல்,அப்பம்,வடை, பாயசம் தவிர நிறைய பழங்கள் வேறு நைவேத்தியம் செய்கிறோம். இவற்றோடு இனிப்பு வகைகளும் உண்டு. ராமனுக்கோ சிம்பிளாக பானகம்,நீர் மோர்.  ஆனால் ராமனைத்தான் சாப்பாட்டு ராமன் என்கிறோம். இது ஏன் என்று யோசித்தபொழுது ஒன்று தோன்றியது. 



ராமனுடைய வாழ்க்கையில் அவன் சாப்பிட்ட மூன்று சாப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. முதல் சாப்பாடு கங்கை கரையில் அவனைப் பார்க்க ஓடோடி வந்த குகன் கொண்டு வந்த தேனையும், மீனையும் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்.  தேன் அவனுடைய பக்தியின் உயர்வையும், மீன் அன்பின் ஆழத்தையும் உணர்த்துகிறது என்பது ஆன்றோர்கள் கருத்து. அந்த எளிய வேடன் அளித்த உணவை அன்போடு ஏற்றுக் கொண்டது ராமனின் எளிமை.



இரண்டாவது வனவாசத்தில் சபரி கொடுத்த கனிகளை உண்டது. சீதையைப் பிரிந்த துக்கத்தில் சரியாக சாப்பிடாத ராமன், சபரி கொடுத்த கனிகளைத்தான் பிரியமாக உண்கிறான். அதைப்பார்த்த தம்பி லட்சுமணனுக்கோ  இத்தனை நாட்களாக சாப்பிடாத தன் அண்ணன் இன்று சாப்பிடுகிறாரே என்பதில் ஆனந்தம். தன் குருவின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு வருடக் கணக்காக ராமனுக்காக காத்திருந்து சபரி அளித்த கனிகளை உண்டது ராமனுடைய கருணை.

யுத்தம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் வழியில் பாரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு விருந்து உபசாரம். சமைத்த உணவை இலை போட்டு எல்லோருக்கும் பறிமாறியாகிவிட்டது ஆனால் ராமன் உண்ணத் தொடங்கவில்லை, யாருக்கோ காத்திருக்கிறான். 

வனவாசம் தொடங்கி சித்திரகூடத்தில் அவர்களை காண வந்த பரதன், தன்னால் அயோத்தி அரியணையில் அமர முடியாது என்று அண்ணனின் பாதுகைகளை வாங்கிச் சென்று அவற்றை ராமனின் பிரதிநிதியாகக் கருதி அரியணையில் வைத்து  ஆட்சி புரிகிறான். அப்போது பரதன் ராமனிடம், பதினான்கு வருட வனவாசம் முடிந்த உடனேயே ராமன் அயோத்தி திரும்பி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் தான் தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவேன் என்று உறுதி வாங்கிக் கொள்கிறான். 

நந்திகிராமத்தில் ராமனுக்காக நாட்களை எண்ணியபடி காத்திருக்கும் பரதன் ராமன் வருவதற்கு சிறிது தாமதமானால் கூட தன் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவான் என்பதால், தன்னுடைய அங்குலியத்தை ஹனுமனிடம் கொடுத்து, தன்னுடைய வருகையை பரதனுக்கு அறிவித்து, பரதன் நிலையை தன்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும் என்று ஹனுமனுக்கு கட்டளையிட்டு, ஹனுமனின் வருகைக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறான்.

அதைப் போலவே நந்திகிராமத்தில் பதினாங்கு வருடங்கள் கழிந்த பின்னாலும் ராமன் வராததால், தீ மூட்டி, அதில் குதிக்கத் தயாரான பரதனிடம் ராமனின் மோதிரத்தைக் காட்டி, ராமனின் வெற்றியையும், அவன் விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களோடு அயோத்திக்கு வந்து கொண்டிருப்பதையும், பரத்வாஜர் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள அங்கு தங்கியதால் அவர்கள் வருகை சற்று தாமதமாவதையும் கூறி பரதனின் உயிரை காப்பாற்றுகிறான் ஹனுமான்.  பிறகு பரதனைப் பற்றிய செய்தியை கூறுவதற்காக பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு திரும்பி வருகிறான். 

ராமனுக்கும், அவரோடு வந்த வானர சேனைகளுக்கும் விருந்தை தயார் செய்த பரத்வாஜர் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கு மட்டும் தலைக்கு ஒரு இலை என்று கணக்காக இலை போட்டு பறிமாறி இருக்கிறார். இலை போடும் பொழுது ஹனுமன் இல்லாததால் அவருக்கு இலை இல்லாமல் போய் விட, ராமன் தன் இலையை ஹனுமனோடு பகிர்ந்து கொண்டு அவரை, அவருடைய சேவையை கௌரவப்படுத்தினானே அது அவனுடைய பேரன்பு.



மேலும் வனவாசத்தில் முனிவர்கள் கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் அன்போடு சாப்பிட்டான்.

இப்படி யார் சாப்பிடக் கொடுத்தார்கள், என்ன கொடுத்தார்கள் என்று பார்க்காமல், எப்படி கொடுத்தார்கள் என்று பார்த்து சாப்பிட்டு அந்த சாப்பாட்டிற்கே கௌரவத்தை சேற்த்ததால்தான் அவன் சாப்பாட்டு ராமனோ?  

 


19 comments:

  1. அருமையான விளக்கம்❤️🌹💕

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 23, 2026 at 9:02 AM

      நன்றி. Pls.let me know your name.

      Delete
  2. நல்ல விளக்கம் அருமை👏👏

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 23, 2026 at 9:03 AM

      Thank you. Pls. let me know your name.

      Delete
  3. நல்லாருக்கு பானுக்கா

    ராமன் அனுமன் இக்கதை அறிந்த கதைதான் உங்கள் விளக்கம் அதைப்பொருத்திப் பார்த்து சொன்னது நல்லாருக்கு

    அதனால்தான் இலையில் மேற்புறத்தில் காய் கனிகள் எல்லாமும் நாம் அமரும் பகுதியில் சாதம் பருப்பு பரிமாறுவதாகவும் சொல்வதுண்டு இல்லையாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 23, 2026 at 9:06 AM

      நன்றி கீதா. //அதனால்தான் இலையில் மேற்புறத்தில் காய் கனிகள் எல்லாமும் நாம் அமரும் பகுதியில் சாதம் பருப்பு பரிமாறுவதாகவும் சொல்வதுண்டு இல்லையாக்கா// எனக்கு இந்த விஷயம் தெய்யாது, ஆனால் வேறு சிலரும் இதே கருத்தை மத்யமரில்(FB group) சொன்னார்கள்.

      Delete
  4. விளக்கம் நன்று.

    ஆனால் மேல் பகுதியில் காய் கனி அனுமனுக்கு, கீழ்பகுதியில் சாப்பாடு (சாதம்) இராமனுக்கு என்பதால்தான் சாப்பாட்டு ராமன் என்று சொல்கிறார்கள் என்று தோன்றியது.

    நிறைய சாதம் சாப்பிடுபவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJune 23, 2026 at 9:11 AM

      வாங்க நெல்லை. சாப்பிடுவதில் பிரியம் அதிகமாக இருப்பவர்களை இப்படி சொல்கிறோம், ஆனால் ஏன் சாப்பாட்டு ராமன் என்று சொல்ல வேண்டும்? என்று யோசித்ததில் பிரியமாக சாப்பிட்டவன் ராமன் என்பதால் அப்படி வந்திருக்கலாம் என்று த்ப்ன்றியது. நன்றி.

      Delete
  5. ​என்னுடைய அனுமானத்தில் சாப்பாட்டு ராமன் என்ற அடைமொழி தற்கால மனிதப் பிறவிகளான ராமனையே குறித்து சொல்லப்படுவது, அல்லாமல் புராண அவதார ராமனைக் குறித்து இல்லை என்பதே.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பானுமதி. வெ.June 23, 2026 at 9:14 AM

      வாங்க ஜே.கே.ஸி. சார், உங்கள் அனுமானமும் சரிதான். என்னுடையது out of the box thinking.

      Delete
    2. Bhanumathy VenkateswaranJune 23, 2026 at 9:21 AM

      உங்களுக்கு ஒன்று தெரியுமா? கிருபானந்த வாரியாரிடம் ஒரு சிறுவன், "ராமனை ஏன் சாப்பாட்டு ராமன் எங்கிறார்கள்?" என்று கேட்டதற்கு அவர் காரணத்தைதான் சொன்னாராம். மத்யமர் என்னும் முகநூல் குழுமத்தில் நான் இதைப் பகிர்ந்த பொழுது ஒரு பெண்மணி பின்னூட்டம் இட்டிருந்தார். எனக்கு அது தெரியாது, இது என் சிந்தனையில் தோன்றிய விஷயம், great people think alike என்று கூறி வாரியாரோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ளும் அதிகப்பிரசங்கித்தனத்தை நான் செய்ய விரும்பவில்லை என்று பதில் அளித்தேன்.

      Delete
  6. நான் ஜெயக்குமார் ஸார் சொல்வதை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.June 23, 2026 at 9:22 AM

      நான் எதிர்க்கவில்லை.

      Delete
  7. ராமனுக்கும் சாப்பாடு ராமனுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் நினைக்கிறேன். நடுவில் யாராவது சாப்பாட்டு கிருஷ்ணன் என்று சொன்னால் பொருந்தவில்லை. சாப்பாட்டு ராமன் என்று சொன்னால் பொருந்துகிறது என்று பெயர் வைத்திருக்க வேண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.June 23, 2026 at 9:26 AM

      கவிஞர்கள் கவிதை சிறப்பிற்காக எழுதும் சில விஷயங்களில் பெரிய உண்மை மறைந்திருக்கிறது என்பதை அறிஞர்கள் எடுத்துச் சொல்வார்கள். அப்படிப்பட்ட விஷயமாகக் கூட இருக்கலாம்.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சாப்பாட்டு ராமன் நல்ல விளக்கம். ஆனால் இராமர் திருமணமான அந்த இளவயதிலேயே அரண்மனை சுக போகங்களை துறந்து, கானகம் சென்றவராயிற்றே..!..! அதற்கு முன் குருகுலவாசம். அரண்மனை வந்தவுடன் முனிவர்களின் நலனுக்காக வேள்விகளுக்கான பயணம் என வேளாவேளைக்கு அமர்ந்து சாப்பிடும் நேரங்களை தவற விட்டவருக்கு ஏன் இந்த பட்டப் பெயர் உண்டானதோ .? நல்ல சாப்பாடு என்பதை அந்த இளவயதில் சாப்பிட்டிருக்கவே இயலாத சூழ்நிலைகளை அவரது வாழ்க்கை அவருக்கு தந்து விட்டிருந்தது.

    நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை படித்து ரசித்தேன்.அனுமனுக்கு இலையை பகிர்ந்த கதையையும் அறிந்து கொண்டேன்.

    "ராமன் எத்தனை ராமனடி" என்ற படத்திலோ என்னவோ சிவாஜியை அந்த சாப்பாட்டு ராமன் என்ற பெயரை குறிப்பிடுவதற்காக எப்போதும் சாப்பாட்டு பிரியராகவே காட்டுவார்கள்.

    தன் வாழ்வில் மன்னர் பட்டத்தை துறந்து சென்ற ஸ்ரீ ராமருக்கு எப்படியோ இந்தப் பட்டத்தை நாம் தந்து விட்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. //இராமர் திருமணமான அந்த இளவயதிலேயே அரண்மனை சுக போகங்களை துறந்து, கானகம் சென்றவராயிற்றே..!..// திருமணமாகி பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ராமர் வனவாசம் சென்றார். என்றாலும் இளம் வயதுதான்.
      ராமன் எத்தனை ராமனடி படத்திற்கு முதலில் சாப்பாட்டு ராமன் என்றுதான் பெயர் வைத்தார்கள். நன்றி

      Delete
  9. மிக அருமையான அலசல்.சிந்தனைக்கு‌உணவு

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.June 23, 2026 at 9:31 AM

      நன்றி.

      Delete