கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 2, 2026

மின்சாரக் கண்ணா!

மின்சாரக் கண்ணா!

வெளிநாட்டில் இருக்கும் வசதிகளித்தான் பெரும்பான்மையோர் பகிர்ந்து கொள்வார்கள். நேற்று 30.6.26 கனடாவில் நாங்கள் வசிக்கும் ஏரியாவில் கரெண்ட் கட்டாகிய பொழுது எங்கள் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெதர் ஃபோர்காஸ்ட் பார்த்தபொழுது, 30.6.26 செவ்வாய் அன்று காலை ஒன்பது மணி வரை மழை இருக்கும் என்றும், அதற்கு ப் பிறகு வெய்யில் 35 - 40 C வரை செல்லும் எனவே வெளியே செல்ல வேண்டாம் என்றூ ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். அது பொய்யாகவில்லை, மதியம் வெய்யில் கொளுத்தியது.

துபாயிலிருந்து கனடா வந்திருந்த எங்கள் விருந்தினர்கள் 30.6.26 அன்றுதான் துபாய் திரும்ப டிக்கெட் புக் பண்ணியிருந்தார்கள். காலை 9:30 மணி முதல் 11:30 வரை எமகண்டம் இருந்ததால்(கனடா பஞ்சாகத்தை ஒட்டி), 11:30க்கு கிளம்ப நினைத்தார்கள்.  முதல் நாளே வெப் செக்இன் செய்து விட்டார்கள்.

செவ்வாய் அன்று காலை ஆறு மணிக்கு எழுந்த நான் காபி கொட்டையை அரைத்து டிகாஷன் போட்டு விட்டு, பாலை காய்ச்ச அடுப்பில் வைத்தேன். ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, கரெண்ட் கட்டானதால் மின்சார அடுப்பு அணைந்து விட்டது. வெளியே நல்ல மழை. மழை பெய்யும் சமயங்களில் எப்போதாவது இப்படி பவர் கட் ஆகும். ஆனால் உடனே பவர் வந்து விடும். ஆனால் நேற்று காலை பதினோரு மணிக்குதான்பவர் திரும்ப வரும் என்று செல்ஃபோனில் மெசேஜ் வந்திருந்தது. இதற்கு முன் இதை விட மோசமான பனிப்புயலடித்த பொழுதும், பயங்கரமான காற்று வீசிய பொழுதும் கூட இப்படி இத்தனை நேரம் பவர் போனதில்லை.  

ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள், "பதினோரு மணிக்கு மேல்தான் பவர் வரும் என்றால், அதற்கு மேல் குளித்து, சாப்பிட்டு கிளம்ப அதிக நேரமாகி விடும் என்பதால் நாங்கள் 9:30க்கு முன்னால் கிளம்பி விடுகிறோம்" என்றார்கள். விருந்தினர்களை வழியனுப்புவதற்காக என் மகள் வீட்டிலிருந்து வேலை செய்ய அலுவலகத்தில் அனுமதி பெற்றிருந்தாள். ஆனால் மின்சாரம் இல்லாததால் இணையம், இணையவில்லை. டேட்டா துரிதமாக வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் நிலைமையைச் சொன்ன பொழுது அலுவலகத்திற்கு வரச்சொல்லி விட்டார்கள். நெல்ல வேளை காரை கராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தியிருந்ததால் அவளால் காரை எடுக்க முடிந்தது. இல்லாவிட்டால் மின்சாரத்தால் இயங்கும் கராஜ் கதவை எப்படி திறப்பது?

ஊருக்குச் செல்ல வேண்டியவர்களை விமான நிலையத்தில் விடுவதற்காக என் மாப்பிள்ளை விடுமுறை எடுத்திருந்தார். இப்போது மகள் அலுவலகம் செல்வதற்காக காரை எடுத்துச்சென்று விட்டதால். அதுவும் இயலாது என்ற நிலையில் அவர்கள் ஊபரின் உதவியை நாடினார்கள். டேட்டாவில் சிக்னலே கிடைக்கவில்லை. கிடைத்தபொழுது ஒரு வண்டி புக் பண்ணினார்கள். ஐந்து நிடங்களில் வருவதாக சொன்ன ஊபர் அரை மணி நேரம் கடந்தும் வரவில்லை. அதை கேன்சல் பண்ணிவிட்டு வேறு ஒரு ஊபர் புக் பண்ணி சிறிது நேரத்தில் அந்த கேன்சல் செய்யப்பட்ட வண்டி வந்தது. அந்த டிரைவரிடம் நிலைமையை விளக்கியதும், "இட்ஸ் ஆல்ரைட்" என்று கூறி சென்று விட்டார். அதன் பிறகு வந்த இரண்டாவதாக புக் பண்ணிய ஊபரில் அவர்கள் கிளம்பினார்கள். 

இப்போது நாங்கள் குளிக்க முடியாது(தண்ணீர் ஜி..ல்..) சமைக்க முடியாது. நல்ல வேளையாக முதல் நாள் கொஞ்சம் அதிகமாக வார்த்து வைத்த இட்லி இருந்தது. அதை சாப்பிட்டு, ஜூசைக் குடித்து வயிற்றை ரொப்பிக் கொண்டோம். நான் மட்டும் இரண்டு கோல்ட் காஃபி குடித்தேன். கோல்ட் காஃபி போடும் சூட்சுமம் தெரிந்தது. பாலை காய்ச்சக் கூடாது(pasteurized milk தானே? எனவே பாதகமில்லை) குளிர்சாதன்பெட்டியிலிருந்து எடுத்து, அதில் டிகாஷனைக் கலந்து சர்க்கரைப் போட்டு நுரைக்க ஆற்றி குடித்தால் நன்றாகத்தான் இருக்கிறது. 

நோ டி.வி., நோ செல்ஃபோன், என்ன செய்வது? நான் ஒரு தூக்கம் போட்டேன், ஊரிலிருந்து வந்திருந்த தீபாவளி மலர்களில் ஒன்றை முக்கால்வாசி முடித்தேன். குழந்தைகளோடு ஸ்னேக்&லாடர் விளையாடினேன். அவர்களுக்கு கல்லாங்காய் ஆட கற்றுக் கொடுத்தேன். 

கரெண்ட் திரும்ப வரும் நேரம் 11, 3, 5, 8 என்று மாறிக்கொண்டே இருந்தது. இரவு உணவிற்கு வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் ஏரியாவில் எல்லா உணவகங்களும் மூடப்பட்டு விட்டதால் பக்கத்து ஊரில் இருந்த 'ட்ரூலி பெங்களூர்' என்னும் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம். அங்கு நான் மைசூர் மசாலா தோசை, என் மகள் நெய் பொடி மசாலா தோசை, மாப்பிள்ளை சாளுக்கியா தோசை, குழந்தைகள் பேப்பர் ரோஸ்ட் ஆர்டர் செய்தார்கள். அதைக்கொண்டு வந்தவர் மாற்றி மாற்றி கொடுத்து குழப்பினார். ஆக இன்று நாம் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கப்போகும் நாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம். 

வீட்டிற்கு திரும்பி போகும்பொழுது கரெண்ட் வந்திருக்கலாம் என்ற எங்கள் எதிர்பார்ப்பு பொய்யானது. நம் ஊராக இருந்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி தரையில் கொஞ்சம் சொட்டவிட்டு அதில் நிற்க வைத்து விடலாம். இங்கு தரை மரமாக இருப்பதால் அப்படி செய்ய முடியாது. கிண்ணங்களில் வரும் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தோம். ஆளுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடி குட்டியாக சாயி பஜன் செய்தோம். தரையிலேயே பாயை விரித்து படுத்து விட்டோம். 

அக்கம் பக்கம் வீட்டிலிருந்தவர்கள் எதிர் வீட்டு லானில் ஒன்று மூன் லைட் டின்னர் போல கூடி ஒன்றாக உணவருந்தினார்கள். அவர்கள் குழந்தைகள் வெளியில் விளியாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி 11:45க்கு திடீரென்று "ஹோ." வென்ற ஆனந்தக் கூச்சல் கேட்டது. பவர் வந்து விட்டது. அப்பாடா! முதலில் செல்ஃபோனை சார்ஜில் போட்டேன்.  மறக்க முடியாத நாளாகி விட்டது 30.6.26! ஐந்து வயதாகும் என் பேத்தி, "திஸ் இஸ் த பெஸ்ட் டே இன் மை லைஃப்" என்றாள் தோடா!  


பின் குறிப்பு: இதற்கு கருத்து தெரிவிப்பவர்கள் தங்கள் பெயரை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி


      

  

 

26 comments:

  1. பேத்தியின் கமென்டிற்கு நான் ஹைஃபைவ் சொல்லிக் கொள்கிறேன்!!!! ஹாஹாஹா

    நாட்டிற்கு நாடு வாசப்படி! / எல்லைப்படி!

    இங்கும் அடிக்கடி கரன்ட் போகிறது. கூடவே கிட்டத்தட்ட முழு நாள்....மெயின்டெனன்ஸ் என்று சொல்லப்படும் ஒரு நாள்....மற்ற தினங்களில் முணுக் முணுக்கென்று போகும் போது சார்ஜ்ஜும் போட முடிவதி9ல்லை கணினியும் திறக்க முடியவில்லை. இப்படிப் பல நாட்கள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 3, 2026 at 7:35 AM

      வாங்க கீதா. இங்கெல்லாம் பவர்கட் என்பது அபூர்வம். அதனால்தானே பதிவு போடுகிறோம்.

      Delete
  2. செல்ஃபோன் கணினி இல்லாத வருடங்களில் நான் பெரும்பாலும் அப்போது வெளியில் செல்ல வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்வேன். இங்கு மட்டுமில்லை....அமெரிக்காவில் இருந்தப்ப, இப்படி ஆனது. அப்ப கார் எடுத்துக் கொண்டு கடைகளுக்குப் போய் அங்கு முடித்துக் கொண்டு அப்படியே மகனை கராத்தே வகுப்புக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நம்மவரின் ஆஃபீஸ் சென்று அவரையும் ராத்திரி 10 மணி அளவில் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்த சற்று நேரத்தில் கரன்ட் வந்தது. ஒரே ஒரு நாள்தான் அப்படி ஆனது.

    அதன் இன் பவர் கட் என்பதே இல்லை அங்கிருந்தவரை.

    கீதா

    ReplyDelete
  3. இங்கே கரண்ட் கட் என்பது நமக்கு பழகிப்போன ஒன்று தவிர வீடுகளில் இன்வெர்ட்டர் வைத்திருப்போம் அதனால அதன் இம்பாக்ட் அவ்வளவாக தெரிவதில்லை

    அபயா அருணா

    ReplyDelete
    Replies
    1. இங்கும் சில வீடுகளில் ஜெனரேட்டர் உண்டு, ஆனால் அதன் பயன்பாடு குறைவு.

      Delete
  4. மிகவும் வித்தியாசமான அனுபவம்தான்.

    22 வருட பஹ்ரைன் வாழ்க்கையில் ஒரு நாள் ஆறுமணிநேரம் வீட்டில் கரன்ட் இல்லை. எல்லோரும் மாலுக்குப் போயிட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. மாலில் கரெண்ட் இருந்ததா? சென்னையில் அப்படி செய்வதுண்டு.

      Delete
  5. உங்கள் அனுபவம் எந்த பிரச்சனை எப்போ வரும் தெரியாது Expect the unexpected என்பதை நினைவுபடுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. நம் கையில் எதுவும் இல்லை.

      Delete
  6. இதுபோல ஒரு நாள் முழுவதும் டிவி இணையம் மொசைல் வேலை செய்யவில்லை என்றால் குடும்பத்தினரிடையே நெருக்கம் அதிகரிக்குமா இல்லை தூங்கிக் கழிப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. நெருக்கம், சண்டை எல்லாமும்தான்.

      Delete
  7. கனடாவுக்கு தனி பஞ்சாங்கம் இருக்கிறதா? அப்படி ஒன்று போடும் வழக்கம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அந்தந்த நாட்டிற்கு தனித்தனியாக பஞ்சாங்கம் உண்டு. முன்பெல்லாம் எங்கு பிறந்தாலும், இந்திய நேரத்திற்கு மாற்றி ஜாதகம் குறிப்பார்கள். இப்போது அப்படி செய்வதில்லை.

      Delete
  8. மாப்பிள்ளை லீவு போட்டும் வண்டி இல்லா நிலை.  பெண் லீவ் போடமுடியாத நிலை.  ஊபரை தொடர்பு கொள்ளவே இணையம் இல்லா நிலை.  கனெக்ட் ஆனதும் கேன்சல்...  ஊர் கிளம்பியவர்களுக்கு திக் திக் என்றிருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கே திக் திக் என்றிருந்தது.

      Delete
  9. சாளுக்கியா தோசையா? தொட்டுக்கொள்ள புலிகேசி சட்னியா?!!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா. நல்ல கேள்வி...

      Delete
  10. எதிர்வீட்ட்டில் மட்டும் கரண்ட் இல்லாமல் எப்படி மூன்லைட் டின்னர் சாப்பிட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே சமைத்து ஃபிரிட்ஜில் வைக்கப் பட்டிருந்ததை சாப்பிட்டிருப்பார்கள்..

      Delete
  11. சென்னையில் இரண்டு முறை மூன்று நாட்களுக்கும் மேல் கரண்ட் இல்லாமல் இருந்திருக்கிறோம்.  அவஸ்தைதான்.  தண்ணீர்தான் பெரிய பிரச்னையாக இருந்ததது அப்போது.

    ReplyDelete
  12. இந்த ஊரில் இரண்டு நாட்கள் பவர் இல்லையென்றால் ரொம்ப கஷ்டமாகி விடும். குளிர் காலத்தில் பவர் கட் ஆனால் ரொம்ப கொடுமை!

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி

    அங்கு வீட்டில், மின்சாரம் இல்லாமல் அவதி பட்டதை தொகுத்து நன்றாக எழுதியுள்ளீர்கள். வெளிநாடென்றாலும், சில சமயம் நாம் நினைப்பது நடவாதுதான போகிறது.

    தினமும் நாம் தவறாது, உபயோகப்படுத்தியபடி இருக்கும் மின்சாரம், நம்முடன் தினமும் ஒத்துழைக்கும் அது ஒருநாள் இல்லாத போது கை ஒடிந்து போலத்தான் இருக்கும். அப்போதுதான் அதனின் பயன்பாடுகள் நம் அத்தியாவசிய தேவையானதாக போய் விடும்.

    அதிலும் வந்த விருந்தினர்களின், நேரத்திற்கு ஊருக்கு திரும்ப போகும் பயணங்கள், அவர்களுக்கான சமையல் வேலைகள், மகளும், மருமகனும் அவர்களுக்காக எடுத்த பயனுள்ள விடுமுறைகள், மதிய சாப்பாடு, என அத்தனையும் சேர்ந்து, நீங்கள் அனைவரும் எப்படித்தான் சமாளித்தீர்களோ என இங்கிருக்கும் என்னையே பயமுறுத்தி விட்டது. கடைசியில் உறவினர்கள் வீட்டில் என்ன சாப்பிட்டார்களோ. ?

    பதிவை படித்து வருகையில், "அதென்ன சாளுக்கிய தோசை" என நான் வியப்புற்ற போது, சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் கருத்தில் நகைச்சுவையாக கேட்டு விட்டார். :))

    எப்படியோ இரவு உணவை முடித்து வீடு திரும்பிய பின் படுக்கும் தருவாயில் பவர் வந்தது நல்லதாகப் போய் விட்டது.

    "மின்சார கண்ணா" என்ற பொருத்தமான தலைப்பு நன்றாக உள்ளது. எல்லாமே "அவன்" (கண்ணன்) லீலைகள்தாமே ..! "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..! என்ற பாடலும் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranJuly 7, 2026 at 2:22 AM

      அழகான நீண்ட கருத்துக்கு நன்றி!

      Delete
  14. மின்சாரம் இல்லா வாழ்க்கை...... சில பயணங்களில் இப்படி இருந்திருக்கேன். மலைப்பகுதிகளில் எந்த வசதியும் இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்கள்..நமக்கு பழகி விட்டது என்பதால் மின்சாரம், இணையம் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒரு அனுபவம் தான். உங்கள் பேத்தி சொன்ன விஷயம் தான் சிறப்பு.....

    ReplyDelete
  15. பானுமதி. வெ.July 7, 2026 at 2:31 AM

    உண்மைதான். சிறு வயதில் மின்சாரம் இல்லாவிட்டால் பெரிதாக பாதிப்பு இருக்காது, இங்கு அடுப்பிலிருந்து அத்தனையும் மின்சாரத்தால் இயக்கப் படுவதால் ரொம்ப கஷ்டம்!

    ReplyDelete