கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, June 23, 2016

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி 

முருங்கை காயில் சாம்பார் செய்யலாம், பொரித்த குழம்பு செய்யலாம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கறி கூட சமைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் (இளசாக இருக்க வேண்டியது அவசியம்) - 4
காரப்பொடி - ஒன்றரை டீ ஸ்பூன் 
உப்பு -  1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க: எண்ணெய், மற்றும் கடுகு.



செய்முறை: 

முதலில் முருங்கைக்காய்களை அலம்பி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அலம்பி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை போட்டு மஞ்சள் பொடி, உப்பு, காரப்பொடி இவைகளை சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்த பிரட்டி விட வேண்டும். முருங்கைக்காய்கள் நிறம் மாறுவது வெந்ததற்கு அறிகுறி. உடனே இறக்கி விடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.   

தன் மாமியாரிடமிருந்து என் மகளும், அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் இது.



Sunday, June 19, 2016

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

Tuesday, June 14, 2016

புத்தகத் திருவிழா 2016!

புத்தகத் திருவிழா 2016!

எல்லா வருடங்களும் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த வருடம் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப் பட்டு இப்போது ஜூனில்தான் நடை பெற்றது. சென்ற வருடம் டிசம்பரில் வந்த வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை விடுபடாததுதான் தாமதத்திற்கு காரணம். 
இது 39வது புத்தகக் கண்காட்சி. புத்தக கண்காட்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், புத்தக ஆர்வலர்கள் இதை புத்தக திருவிழா என்றே குறிப்பிடுகிறார்கள்.

முதலில் காயிதே மில்லத் கல்லூரியிலும், பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயின்ட்.ஜான் பள்ளியிலும், சென்ற வருடம் ஒய்.எம்.சி.ஏ. க்ரௌண்டிலும் நடை பெற்ற புத்தக கண்காட்சி இந்த வருடம் ஏனோ தீவு திடலில் நடை பெற்றது. 

ஜூன் மாதம் என்பது புத்தக கண்காட்சி நடத்த ஏற்ற மாதம் கிடையாது. இப்போதுதான் பள்ளிகள் திறக்கும், அதற்காக நிறைய செலவு செய்திருக்கும் பெற்றோர் புத்தக கண்காட்சிக்கு வருவார்களா? அதனால் வருகையும் விற்பனையும் எதிர்பார்த்தது போல இல்லை. நடுவில் இரண்டு நாட்கள் மழை வேறு, என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நான் சென்றது ஞாயிற்று கிழமையாக இருந்ததாலோ என்னவோ, புத்தக திருவிழா என்பதற்கு ஏற்ப தேர் கூட்டம், திருவிழா கூட்டமாக இருந்தது. கார் பார்கிங்கிலிருந்து நுழைவு வாசலுக்கு மினி பஸ் ஷட்டில் சர்வீஸ் விட்டிருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு நின்றது. நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று, நேபியர் பாலத்தை கடந்து கண்காட்சிக்குள் நுழைந்தோம். 

எழுநூறு ஸ்டால்கள்! இட வசதி தாரளமாக இருந்ததால் அத்தனை கும்பலிலும் சௌகரியமாக நடக்க முடிந்தது என்றாலும் என் தோழி கால் வாசி சுற்றுவதர்க்குள் களைப்படைந்து விட்டார். ஆகவே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. வழாக்கம் போல பொன்னியின் செல்வன் நிறைய கண்ணில் பட்டது. நான் சந்தியா பதிப்பகத்திலிருந்து திரு.ஜீ.வி. அவர்களின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகமும்,லா.ச.ரா.வின்' புத்ர' புத்தகமும் மட்டும் வாங்கினேன். பக்கத்தில் இருந்த 3D ஓவிய அரங்கில் சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு நடையை கட்டினோம். அசோகமித்ரனின் 'புலிக் கடன்' பிலிப்கார்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். 



Friday, June 10, 2016

பழையன விரும்பு!

பழையன விரும்பு!

ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து இன்று வழக்கொழிந்து போன சில விஷயங்கள், உங்களுக்கு பரிச்சயமா? பாருங்கள்..




வண்ணான் கூடை:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் பலர் வீடுகளில் இருந்த விஷயம் இது. சலவைக்கு போடா வேண்டிய துணிகளை இந்த கூடையில் சேர்த்து வைப்பார்கள். வண்ணான் ஒவ்வொரு புதன் கிழமை அல்லது சனிக் கிழமை வந்து சாவை செய்த துணிகளை கொடுத்து விட்டு, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துச் செல்வார். 

கல் சட்டி: 



கச்சிட்டி என்று வழக்கு மொழியில் அறியப்படும் பொருள். இதில் வைக்கப் படும் வற்றல் குழம்பு தனி சுவை. அதைத் தவிர சாதாரண சாம்பார், அரைத்து விட்ட சாம்பார், கூட்டு போன்றவையும் சமைக்கலாம். கெமிகல் ரிஆக்ஷன் இல்லாததால் உணவு சுவை மாறாமல் இருக்கும். ஆனால் வாங்கியவுடன் உடனே அடுப்பில் ஏற்றி விட முடியாது,பழக்க வேண்டும். பழகிய கல் சட்டி பல வருடங்கள் இருக்கும். இப்படி மாமியார் பழக்கி பயன் படுத்தி வந்த கல் சட்டியை  மருமகள் உடைத்து விட்டால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உண்டு. இப்பொழுதும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. எப்பொழுது போய் கேட்டாலும், "கல் சட்டி எல்லாம் வரதே இல்லீங்க" என்றபடியே உள்ளே அடுக்கி வைத்திருப்பதிலிருந்து எடுத்து தருவார். 

இரும்பு தோசைக் கல்:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் நான் ஸ்டிக் தாவாவில் தான் தோசை வார்கின்றனர். எங்கள் வீட்டில் தோசைக் கல்லில் வார்க்கப்படும் தோசைக்குதான் வரவேற்பு. தோசைக் கல்லும் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு ஐடெம். நானும் என் சகோதரிகளும் ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் செல்லும் போதும் காவேரியில் குளிப்பது, ரெங்கநாதரை சேவிப்பது இவை தவறலாம், ஆனால் தோசைக் கல்லோ, இலுப்பை கரண்டியோ(தளிக்கும் கரண்டி), இரும்பு சட்டியோ வாங்குவது தவறாது. என் அண்ணா ஒரு முறை "நீங்கள் தோசை கல் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லையா"?. என்று கேட்டார். 

வெண்கலப் பானை:

ஒரு காலத்தில் இதில்தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தோம். குக்கர் என்ற ஒன்று வந்ததும் இதை பரணில் போட்டு விட்டோம். அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் செய்தால் அதன் ருசியே தனி..!

அம்மி:




முன்பெல்லாம் தேங்காய் துவையல் போன்றவற்றை இதில்தான் அரைத்துக் கொண்டிருந்தோம். அம்மியில் அரைப்பது என்பதெல்லாம் இந்த தலைமுறை அறியாத ஒன்று. 

இதையெல்லாம் பயன் படுத்துவதால் என்னை பழமைவாதி என்று கருதி விடாதீர்கள். 

Thursday, June 9, 2016

வராக நதிக்கரை ஓரம் - 2

வராக நதிக்கரை ஓரம் - 2

திருவக்கரையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கு பகல் உணவை முடித்துக் கொண்டு மாயவரத்திற்கு அருகி இருக்கும் பெரம்பூர் என்னும் சிற்றூரை நோக்கி சென்றோம். அங்குதான் எங்கள் சம்பந்தியின் குல தெய்வம் கோவில் உள்ளது. மாலையில் அங்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

நாங்கள் அங்கு சென்ற போது ஐந்தரை மணி இருக்கும். அர்ச்சகர் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். சிறிய கிராமமாக இருந்தாலும் கோவில் பெரிதாகத்தான் இருந்தது. இதுதான் நம்முடைய பாரம்பரிய சிறப்பு. எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அங்குள்ள பெரிய வீட்டை விட கோவில் பெரியதாக இருக்கும். எத்தனையோ அரசர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள், அவர்களின் அரண்மனைகள் நமக்கு காண கிடைப்பதில்லை, அவர்கள் கட்டிய கோவில்கள் இன்னும் அழியாமல் காலங்களை கடந்து நிற்கின்றன. அது மட்டுமல்ல தன்னிடம் உள்ள சிறப்பான பொருள்களை இறைவனுக்குத்தான் படைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன், மணி, இரத்தினங்களையும் அரசர்கள் கோவில்களில்  வீற்றிருக்கும் கடவுளுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். நாம்தான் அந்த கோவில்களை சரியாக பராமரிக்காமல் இருக்கிறோம். ஆனால் பெரம்பூர் வாசிகள் அப்படி இல்லை. கோவில் ஓரளவு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது.

கர்பக்ரஹத்தில் வள்ளி,தேவசேனா இரு புறமும் நின்றிருக்க முருகன் அந்த பெயருக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக மயில் மீது ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்க விட்டுக் கொண்டும் அமர்ந்த கோலத்தில் எழிலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். தனி சந்நிதியில் தேவானை குடி கொண்டிருப்பதால் முருகனுக்கு முன் யானை வாகனம். அபிஷேகம் முடிவதற்குள் இருட்டி விட்டதால் பிரகாரத்தை வலம் வர முடியவில்லை.

அங்கிருந்து மாயவரம் வந்து இரவு அங்கே தங்கினோம். மறுநாள் காலை மாயவரத்தின் புகழ் பெற்ற காளியாகுடி ஹோட்டலில் பொங்கலில் முந்திரி பருப்பை சேர்த்தார்களா? அல்லது முந்திரி பருப்பில் பொங்கலைச் சேர்த்தார்களா என்று நினைக்கும்படி முந்திரி நிறைந்த நெய் சொட்டும் பொங்கலோடு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம்.    

வைத்தீஸ்வரன் கோவில் என்று அறியப்படும் கோயிலின் பண்டைய பெயர் 'புள்ளிருக்கு வேளூர்' என்பதாகும். புள் என்றால் பறவை என்று பொருள். ஜடாயு(இராமாயணத்தில் வருமே அதே ஜடாயுதான்), ரிக் வேதம், மற்றும் நவக்ரகங்களில் ஒன்றான செவ்வாய்(வேள்) இந்த மூவரும் வழிபட்ட தலம். ஜடாயுவிற்கு ராமபிரான் இங்கு கோவில் பிரகாரத்தில் உள்ள ஜடாயு குண்டம் என்னும் இடத்தில்தான் இறுதிச் சடங்குகளை செய்ததாக நம்பப் படுகிறது. 

செவ்வாய் இங்கிருக்கும் சிவபெருமானை வழிபட்டு சக்திகள் பெற்றதல் செவ்வாய்க்கு தனி சன்னிதி உள்ளது. நவக்ரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகவும் கருதப் படுகிறது. ப்ராசீனமான சிவன் கோவில்களில் நவக்ரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லாமல் இருப்பது போல இங்கும் நவக்ரக சந்நிதி கிடையாது. ஆனால் இன்று இது ஒரு செவ்வாய் பரிகார ஷேத்திர மாகிவிட்டது. சுவாமி சன்னிதியை விட செவ்வாய் சந்நிதியில் கூட்டம் அதிகம்.

சுவாமி சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கத் திரு மேனிக்கு முன்னால் ஆடி(கண்ணாடி) போன்றஒன்று பித்தளையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும். அதே போன்ற ஒன்றை திருவண்ணாமலையிலும் காணலாம். காரணம், மிகவும் சக்தி பொருந்திய வடிவாதலல் அதன் அதிர்வுகளை நம்மால் முழுமையாக தாங்க முடியாது அந்த லிங்கத் திருமேனி எதிரே வைக்கப்பட்டிருக்கும் பித்தளை ஆடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இறைவன் வைதீஸ்வரனாக, மருத்துவனாக வரும் பொழுது இறைவி அவனுக்கு உதவியாக வரும் செவிலி போல கையில் தைலப் பாத்திரம் ஏந்தி தைலாம்பாளாக வருகிறாள். 

ஒரு முனிவருக்கு மகளாக அவதரித்த அம்பாளை முதியவராக வந்த சிவ பெருமான் தனக்கு திருமணம் செய்து தர கேட்டாராம். மகளோ சிறுமி இந்த முதியவருக்கு எப்படி திருமணம் செய்து தருவது என்று முனிவர் தயங்க, இறைவன், கவலைப் படாதீர்கள் உங்கள் மகளின் இரும்பைப் போன்ற உறுதியான மாங்கல்ய பாக்கியம் என் உயிரை காப்பாற்றும் என்று கூறி அவளுக்கு இரும்பால் தாலி அணிவித்தராம். அந்த இரும்புத் தாலியே இன்றும் அம்மனை அலங்கரிக்கிறது. முன்பெல்லாம் இந்த விவரங்களை அர்ச்சகர் கூறி அம்பாளின் இரும்புத் தாலியை தரிசனம் செய்யச் சொல்வார். இப்போது அதையெல்லாம் சொல்வதில்லை. ஒரு பக்கம் சரியாக பராமரிக்கப்படாத கோவில்கள், இன்னொரு பக்கம் பக்தர்கள் வந்தாலும் அங்கு அர்ச்சகர்களின் அலட்சியம்...!  ஹூம்! 

இங்குள்ள குளத்தில் வெல்லம், உப்பு, மிளகு இவைகளை கரைத்தால் நம் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது.  அவைகளை கரைப்பவர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ யாரையும் குளத்தில் கரைக்க விடுவதில்லை. குளக்கரையில் உள்ள பெட்டியில் போட்டு விடச் சொல்கிறார்கள். வெகு அழகான குளம்,




இந்தக் கோவிலில் உள்ள செல்ல முத்துக் குமரனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். கத்திரி வெய்யலின் பொழுது அவர் இங்கே இருக்க முடியாமல் கைலாசம் சென்று விடுவதால் அப்போது முருகன்(செல்ல முத்துக் குமரன்) சந்நிதியை பூட்டி விடுவார்கள் என்றார்கள். 

வைதீஸ்வரன் கோவிலிலிருந்து சிதம்பரம் சென்று இரத்தின சபாபதி அபிஷேகம், தீபாராதனை தரிசித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இரத்தின சபாபதி என்பது சிவப்பு கல்லினால் ஆன சிறிய நடராஜ மூர்த்தம். சிதம்பரத்தில் தினமும் காலை 10:30க்கு ஸ்படிகத்தால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பிறகு, இந்த இரத்தின சபாபதிக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனையை இரத்தின சபாபதியின் முன் பக்கம் காண்பித்து விட்டு பிறகு பின் பக்கமும் காட்டுவார்கள். ரத்தினம் வழியே ஒளி ஊடுருவி செல்லும் என்பதால், பார்க்க மிக அழகாக இருக்கும்.   

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரத்தை தான் குறிக்கும். அப்படிப் பட்ட சிறப்பான பாடல் பெற்ற தலமாகிய இதனுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியும் இருப்பது ஒரு சிறப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே நேராக சிவபெருமானையும் பக்கவாட்டில் கோவிந்தராஜ பெருமாளையும் தரிசனம் செய்ய முடியும். ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு இல்லையா?

சிதம்பரம் கோவிலைப் பற்றி நிறைய விஷயங்கள் facebook, whatsaap இவைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நான் புதிதாக எழுத எதுவுமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் திருவண்ணாமலையைப் போலவே சிதம்பரமும் ஒரு முறை அங்கு சென்றால் மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது.    

Wednesday, June 1, 2016

கார்பரேட் கோவில்கள்

கார்பரேட் கோவில்கள்

ஆகம முறைப் படி இயங்கும் கோவில்களில் நாலு கால பூஜை ஒரு நியமத்தோடு நடக்கும். கோவில் திறப்பதற்கும், மூடுவதற்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு. சமயபுரம் போல சில கோவில்களில் காலையில் நடை திறந்தால் இரவுதான் நடை அடைப்பார்கள். சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் திங்கள் மற்றும் வெள்ளிதான் தரிசனம். இப்படி ஒரு முறையோடு இருக்கும். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் கோவில்கள் ஒரு அலுவலகத்தைப் போல காலை 6:00 மணிக்கு திறந்து 10:30 அல்லது 11:00க்கு மூடி விடுகிறார்கள். அதே போல மாலை 4:30 அல்லது 5:00 க்கு திறந்து 8:30 க்கு நடை அடைத்து விடுகிறார்கள்.    

சென்ற ஞாயிரன்று எங்கள் தெருவில் இருக்கும் கோவிலில் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கலாம் என்று காலை ஆறு முப்பதிற்கு சென்றேன். கோவில் திறக்கவே இல்லை. வாசலை கூட்டிக் கொண்டிருந்தவர் முதல் நாள் பௌர்ணமியாக இருந்ததால் அன்று கோவில் திறக்க சற்று நேரம் ஆகும்  ஏழரை மணிக்குத்தான் திறப்பார்கள் என்றார். 

சரி கோவிலுக்கு என்று கிளம்பி விட்டோம், கே.கே.நகர் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு வரலாம் என்று அங்கு சென்றேன். 
அங்கும் கோவில் திறக்கப் படவில்லை. கோவில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் எத்தனை மணிக்கு கோவில் திறப்பார்கள் என்று கேட்டதற்கு," தெரியாதே" என்றார். சரிதான் என்று அதே வீதியின் கோடியில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றேன். 

அங்கு சண்டே கொண்டாட்டமெல்லாம் கிடையாது போலிருக்கிறது, எப்போதும் போல் கோவிலை திறந்து வழக்கப் படி பூஜைகளை துவங்கி விட்டனர். அமைதியான சூழலில் ஐயப்பன், பகவதி, விநாயகர் இவர்களோடு புதிதாக திறந்திருக்கும் கோசாலை கிருஷ்ணன் (திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குப் பிறகு சென்னை கே.கே. நகர் ஐயப்பன் கோவிலில்தான் கோசாலை கிருஷ்ணனுக்கு தனி சன்னிதி உள்ளது. மாடு மேய்க்கும் சிறுவனாக கையில் சாட்டையோடு காட்சி அளிக்கும் கிருஷ்ணன் கொள்ளை அழகு!) இவர்கள் எல்லோரையும் தரிசனம் செய்து கொண்டு மன நிறைவோடு திரும்பினேன். 

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்கு நிலவும் அமைதி என்னை ஆச்சர்யப் படுத்தும். இங்கு வரும் அதே மக்கள்தானே மற்ற கோவில்களுக்கும் வருகிறார்கள், இங்கு அமைதியை கடை பிடிக்கும் இவர்கள் நம் ஊர் கோவிகளில் ஏன் சள சளவென்று பேசுகிறார்கள்?

நான் மீண்டும் எங்கள் தெரு கோவிலுக்கு வந்தேன். இப்பொழுது கோவிலை திறந்து விட்டார்கள்(மணி 8:00) ஆனால் உள்ளே சுத்தம் செய்து கொண்டிருந்த பூசாரி, அபிஷேகம் ஆரம்பிக்க எட்டரை மணி ஆகும். என்றார். பாலை அவரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். எனக்கு அன்றைய கொடுப்பினை அவ்வளவுதான்!

Friday, May 20, 2016

வராக நதிக்கரை ஓரம்

வராக நதிக்கரை ஓரம்

ஏப்ரல் 8,9,10 குட் ப்ரை டே ஐ ஒட்டி வந்த மூன்று விடுமுறை நாட்களில் தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்த எங்கள் சம்பந்தி எங்களையும் தங்களோடு வரச் சொன்னார்.  11ஆம் தேதி எங்களுக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், முதலில் தயங்கினோம். ஞாயிறு இரவே திரும்பி வந்து விடலாம் என்று அறிந்து கொண்ட பின் எங்களுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

எட்டாம் தேதி காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். தாம்பரம் வசந்த பவனில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மயிலம் நோக்கி சென்றோம். 

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 15 KM தொலைவில் உள்ளது மயிலம். அங்கு ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முருகன் கோவில். புராதனமான, சிறிய கோவில். கோவிலும், கோவிலைச் சார்ந்த குளமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம். 

சூர பத்மனை முருகன் போரிட்டு அழிக்க முற்பட்டபொழுது அவன் இறக்கும் தருவாயில் தன்னை முருகனின் வாகனமாக கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, முருகப் பெருமான் அவனை மயில் வடிவமெடுத்து தன்னை குறித்து தவம் செய்யும்படி கூறுகிறார்.  அதன் படி சங்கராபரணி நதி என்னும் வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த குன்றின் மீது மயில் வடிவமெடுத்து சூர பத்மன் தவம் செய்கிறான். அவன் தவத்திற்கு இறங்கி முருகப் பெருமான் அவனுக்கு காட்சி அளித்து அவனை ஏற்றுக் கொள்கிறார். தனக்கு காட்சி அளித்த கோலத்திலேயே முருகன் இங்கே எழுந்தருள வேண்டும் என்ற சூர பத்மன் வேண்டுகோளுக்கு இணங்கி முருகன் இங்கே எழுந்தருளியதாக தல வரலாறு. கர்ப்ப க்ரஹத்தில் வள்ளி, தேவ சேனையோடு நின்ற திருக் கோலத்தில் கட்சி அளிக்கும் முருகனை வணங்கினோம்.

அங்கிருந்து திருவக்கரை நோக்கி சென்றோம். திருவக்கரை என்றதும் பலருக்கும் வக்கிர காளிதான் நினைவிற்கு வரும். ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கோவில் என்னும் சிவன் கோவில்தான் பிரதானம். அங்கிருக்கும் பரிவார தேவதைகள் சந்நிதிகளில் ஒன்றுதான் வக்கிரகாளி சந்நிதி. பிரபலமான அரசியல்வாதி ஒருவர் அம்மாவாசையிலும், பௌர்ணமியிலும் யாகங்கள் செய்து பலன் அடைந்ததால், கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் வக்கிர காளியை தரிசனம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதித்த சோழனால் கட்டப்பட்ட  கிழக்கு நோக்கி அமைந்த ஏழு நிலைகளை கொண்ட புராதனமான பெரிய கோவில். இக்கோவில் பல சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் ஆவுடையாருக்கு மேல் லிங்கத் திரு மேனியாக இல்லாமல், மூன்று முகங்களோடு காட்சி அளிக்கும் சிவ பெருமானை இங்குதான் வணங்க முடியும். கிழக்கே தத் புருஷ முகம், வடக்கே வாம தேவ முகம், தெற்கே அகோர முகம். தெற்கு நோக்கி உள்ள அகோர முகத்தில் இரண்டு கோரை பற்களை பால் அபிஷேகம் செய்யும் பொழுது மட்டும் காண முடியும் என்கிறார்கள். 

அதிகாலையில் தத் புருஷ முகத்தை மஞ்சள் பூசியும், உச்சி வேளையில் வாம தேவ முகத்தை சந்தனம் பூசியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் பூசியும் வணங்க நம்மை இன்பம் சூழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

கருவறைக்கு தென் புறம் குண்டலினி முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. இங்கே  பத்து நிமிடங்களாவது அமர்ந்து தியானம் செய்ய மனம் எளிதில் ஒருமைப் படும் என்கிறார்கள். எங்களுக்குத்தான் அப்படி அமர முடியவில்லை. அடுத்த முறை முயற்சி செய்யலாம் என்று வந்து விட்டோம். 

பிரகாரத்தை வலம் வந்தால் கோஷ்டத்தில் அழகிய தக்ஷிணாமூர்த்தி, பின்புறம் மேற்கு நோக்கி ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே தனி சந்நிதியில் கருட பகவான். சிவன் கோவிலில் பெருமாள் எங்கிருந்து வந்தார் என்று தோன்றுகிறதா? அதற்கு தல புராணம் தெரிந்து கொண்டே ஆகா வேண்டும். 

வக்ராசுரன் என்னும் அசுரன் சிவா பெருமானை குறித்து கடும் தவம் இயற்றி வரம் பெறுகிறான். அந்த இறுமாப்பில் எல்லோரையும்  துன்புறுத்த, அவர்கள் அவனை அழித்து, தங்களை காக்க வேண்டும் என்று சிவ பெருமானிடம் சென்று வேண்டுகிறார்கள். தன்னிடம் வரம் பெற்றவனை தானே அழிக்க முடியாது என்று கூறிய சிவபெருமான், வக்கிராசுரனை அழிக்கும் பணியை திருமாலிடம் ஒப்படைக்கிறார். அதன் படி தன் 
சக்ராயுதத்தால் அவனை அழிக்கிறார் பெருமாள்.  அதனால்தான் இங்கு பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு காட்சி அளிக்கிறார். 

வக்ராசுரனின் சகோதரியான துர்முகி என்பவளும் தேவர்களுக்கு தொல்லை தந்ததால் அவளை அழிக்கும் பொறுப்பை பார்வதி தேவியிடம் ஒப்படைக்கிறார் சிவன். அந்த சமயத்தில் துர்முகி கர்ப்பமாக இருக்கிறாள், கர்ப்பிணியை  கொல்லக் கூடாது என்பதால் பார்வதி தேவி கற்பதில் இருந்த சிசுவை எடுத்து தன காதில் குண்டலமாக அணிந்து கொண்டு துர்முகியை அழிக்கிறாள். பின்னர் அதே கோலத்தில் வக்கிர காளியாக இங்கே குடி கொண்டு பக்தர்களுக்கு அருளுகிறாள்.

தலையில் தீச்சுடரும், கபால ஓடும் க்ரீடமாகவும், வலது காதில்  
சிசுவை குண்டலமாக அணிந்து கொண்டு, வலது புறம் இருக்கும் நான்கு கரங்களில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, முதலியவை கொண்டு இடது புறம் இருக்கும் கரங்களில் மூன்றில் உடுக்கை, கேடயம், கபாலம் தாங்கி நான்காவது கரத்தில் எல்லா விரல்களையும் மடக்கி ஆள் காட்டி விரலை மட்டும் நிலத்தை நோக்கி நீட்டியபடி ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை தொங்க விட்டபடியும் அமர்ந்திருக்கிறாள்.

அமாவாசை அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கும், பௌர்ணமி அன்று இரவு பன்னிரண்டு மணிக்கும் வக்கிர காளியின் கோபுரத்தின் மேல் ஐந்து கிலோ கற்பூரம் ஏற்றப்படுமாம் அந்த ஜோதி தரிசனத்தை காண்பது சிறப்பு என்கிறார்கள். மேலும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் இங்கு வந்து வக்கிர காளியை தரிசிப்பது அந்த தோஷத்தை போக்குமாம். 

வடிவுடை அம்மன் தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறாள்.

இந்த கோவிலின் பிற சிறப்புகள், நவகிரக சந்நிதியில் உள்ள சனி பகவானின் வாகனமான காக்கை எல்லா கோவில்களிலும் போல் இல்லாமல் தென் புறம் திரும்பி உள்ளது. அதே போல நடராஜரும் கால் மாற்றி ஆடுகிறார். மேலும் சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் சிவ லிங்கம், நந்தி, கொடி மரம் இவை எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும், ஆனால் இங்கு அப்படி இல்லாமல் அவையும் வக்கிரமாகத்தான் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலை தரிசிக்க கிடைத்தது பாக்கியம்தான்!

-தொடர்ச்சிக்கு காத்திருக்கவும் 

Sunday, May 1, 2016

திக் திக் நிமிடங்கள்!

திக் திக் நிமிடங்கள்!

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. *நேற்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

நேற்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 
"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது,
இன்னொரு பக்கமோ வியர்வை தங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 
என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர்வீட்டுகாரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீடு ரதி உதவ முன் வந்தார். 
"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு அருகேதான் இருக்கு என்று கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."
"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"
எதிர் வீடு நவநீதாவின் ஆலோசனை. 
"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".
போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!
இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.
ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னல் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 
"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"
"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 
வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

last but not the least இக்கட்டான நேரத்தில் பதட்டப் படாமல் உதவிய ரதி தேவதாசுக்கும், நவநீதா ராமசாமிக்கும் என் நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்!

*இது ஒரு மீள் பதிவு, எனவே நேற்று என்பது நான்கு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு.

Tuesday, April 26, 2016

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

நான் சுகம், நீ சுகமானு 
நாலுவரி எழுதேன்னு நச்சரிக்கும் அம்மாவுக்கு
நாளைக்குத்தான் எழுதணும் இன்று  
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது!

அடுத்த வீட்டு அக்காவுக்கு அறுவை சிகிச்சை 
ஆச்சுதாம், ஆதரவாய் பார்த்து பேச 
ஆகவில்லை இன்னோமும் 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது!

கையில்எடுத்த சோறு காஞ்சு போன பின்னாலும் 
வாய் போய் சேரவில்லை வாய்க்கு ருசி ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது 

வீட்டினுள் பேச்சில்லை, வீதியில் உறவில்லை 
கலகலக்கும் விளையாட்டு, கைவேலை ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது.



Wednesday, April 20, 2016

Morning Marina

MORNING MARINA


"ஞாயிரு காலை பீச்சுக்கு போகலாமா"? என்றேன், வெளியே செல்வதில் அதிக விருப்பம் கொண்ட என் கணவர் உடனே ஆமோதித்தார். காலை ஐந்து முப்பதுக்கு பீச்சில் இருந்தால் உதய சூரியனை, சீ சீ சூரிய உதயத்தை காணலாம். அப்படியே பிள்ளையார் சதுர்த்தி அன்று வாங்கிய பிள்ளையாரையும் கடலில் விசர்ஜனம் செய்து விடலாம். ஒ.கே. டன்! என்று முடிவு செய்தோம். எங்களோடு பெண், மாப்பிளையும் சேர்ந்து கொண்டார்கள். பிறகு என்ன, காலையில் பீச், பிறகு கற்பகாம்பாள் கோவில், பிறகு சரவண பவனில் சிற்றுண்டி.. என்று திட்டம் போட்டு கொண்டோம்.

எல்லோரையும் போலவே எனக்கும் கடலை பார்க்க பிடிக்கும். கடலோ,மலையோ அந்த பிரம்மாண்டத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றும். கடலை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஏதோ ஒன்றிர்க்கு கட்டுப்பட்டு கடல் தன் எல்லையை மீறாமல் இருக்கிறது. அது மீறினால்..? சீறினால்..? ஒரு முறை சீறியதை பார்த்தோமே.! 

திருச்சியில் வசித்த வரை விடுமுறையில் போர் அடிக்கும் பொழுதெல்லாம், "மெட்ராசில் இருந்தால் பீச்சுக்காவது போகலாம், இங்கு எதுவும் இல்லை" என்று கூறுவோம். எங்களுக்கெல்லாம் அப்போது  மெட்ராசில் இருக்கும் அத்தனை பேரும் தினசரி பீச்சுக்கு செல்வார்கள் என்றுஒரு நினைப்பு .  இதைத் தவிர லா.ச. ரா. அவர்கள் தன்னுடைய சிந்தாமணி என்னும் நூலில் இரவில் பீச்சில்  அமர்ந்து கொண்டு  க.நா.சு., புதுமை பித்தன்,ந.பிச்சமூர்த்தி போன்ற மணிக் கொடி இலக்கிய ஜாம்பவான்கள் நடத்திய இலக்கிய பரிவர்த்தனை பற்றியும், என் அபிமான எழுத்தாளராகிய இந்துமதி தன் நண்பர்களான மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களோடு தான் நடத்திய இலக்கிய விவாதங்களைப் பற்றியும் படித்த பிறகு என் பீச் ஆசை அளவு கடந்து போனது. ஆனால் இங்கு வந்த பிறகு நிதர்சனம் வேறு மாதிரி இருக்கிறது. 

சென்னையில் செட்டில் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன, இது வரை பதிமூன்று முறை பீச்சுக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகம்.ஆரம்பத்தில் சில முறை மாலையில் கடற்கரைக்குச் சென்றோம். அது கடற்கரையாக இல்லை. நடக்க முடியாமல் கடைகள், கடற்காற்றை அனுபவிக்கலாம்.. உணவகங்களிலிருந்து வரும் எண்ணை கமறல் வாசம் + மீன் பஜ்ஜி வாசத்தையும் சகித்துக் கொண்டு... குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால் கையேடு ஒரு குடை எடுத்துச் செல்வது நலம், அப்போதுதான் பொது இடம் என்று கூட தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்பவர்களை உங்கள் குழந்தைகள் கண்ணில் படாமல் மறைக்க முடியும். ஆகவே இப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்வதென்றால் காலையில்தான் செல்கிறோம். 

எங்களைப் போல நிறைய பேர்கள் கலையில் வருகிறார்கள் என்பது அங்கு போகும் பொழுதுதான் தெரிகிறது. வாக்கிங் செல்லவும், உடற் பயிற்சி செய்யவும், விளையாடவும், குடும்பத்தோடு பொழுதை செலவிடவும், கை கோர்த்து நின்றபடி சிரிக்கவும்(லாபிங் கிளப்), பறவைகளுக்கு உணவிடவும், மூலிகை சாறு பருகவும்  பலர் வருகிறார்கள். பஜ்ஜி கடை மட்டும் வந்து விடக் கூடாது.







Friday, March 25, 2016

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)




படித்த,நாகரீகமான ஒரு பெண் படிக்காத ஒரு பேட்டை ரௌடியை காதலிக்கும் வழக்கமான கதைதான்!

விழுப்புரத்திலிருந்து ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து  தோழிகளோடு தனி வீட்டில் தங்கி முழுமையான ஐ.டி. பெண்ணாக வாழ்க்கையை அனுபவிக்கும் யாழினி (மடோனா செபாஸ்டியன்) பணி செய்யும் அலுவலகம் ஒரு மோசமான நாளில் மூடப்படுகிறது. சென்னையிலேயே தங்கி வேறு வேலை தேடிக் கொள்ள நினைக்கும் அவர் எளிய மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு குடி வந்து, செய்யாத ஒரு கொலைக்காக சிறைக்குச் சென்று விட்டு பார் ஓனராக ஆகும் ஆசையில் இருக்கும் அடியாள் விஜய் சேதுபதியின் எதிர் வீட்டு பெண்ணாகிறார். இந்த இருவருக்கும் இடையே மலரும் காதல்தான் படமாக விரிகிறது.

படத்தின் முன் பாதி பெரிதாக சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் இல்லாமல்,அடியாளாக உதார் காட்டி கிளம்பும் கதிர் (விஜய் சேதுபதி) பரிதாபமாக அடி வாங்கி திரும்பும் நகைச் சுவையிலும், வேலை தேடி அவமானப் படும் யாழினியின் சோகத்திலும் சுற்றிச் சுற்றி வருகிறது. இரெண்டாம் பாதி காதல் வயப் படும் கதா நாயகிக்காக படிக்காத கதா நாயகன் அவளுடைய மேலதிகாரியாக நடிப்பது, அவளுக்காக நேர்காணல் அறையில் கதா நாயகன் புகுந்து கோக்குமாக்காக நடந்து கொள்வது என்று ஒரே சினிமாத்தனம், அந்த க்ளைமாக்ஸ் உள்பட..!

விஜய் சேதுபதி திறமையான நடிகர்தான், இந்த படத்திலும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார், என்றாலும் இன்னும் எத்தனை படங்களில் மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கப் போகிறார்?   விழுப்புரம் பெண் என்று கூறப்படும் கதா நாயகி மடோனா செபாச்டியென் வியென்னாவிலிருந்து வந்து இறங்கியது போல இருக்கிறார். ஆனால் நடிப்பு கச்சிதம்! சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அமர்க்களம்! பாடல்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கின்றன. 

பழைய கள்ளை, நளன் குமாரசாமியின் ட்ரீட்மென்ட்  என்னும் புதிய மொந்தையில் ஊற்றி தந்திருக்கிறார்கள்.

Sunday, January 24, 2016

ஊருக்கு இளைத்தவன்...!

ஊருக்கு இளைத்தவன்...!

கோவிலுக்கு செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து செல்லக் கூடாது என்னும் உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இடைக் கால தடை வாங்கி   இருக்கிறார் ஒரு பெண்மணி. அவர் கூறி இருக்கும் காரணம் இந்த உத்தரவு பெண்கள் தங்கள் இஷ்டப் படி உடை உடுத்தும் சுதந்திரத்தை மறுக்கிறதாம்.

அம்மணி உங்கள் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் என்பதை அறியாதவரா நீங்கள்? வழிபாட்டு தலத்தில் ஜீன்சும், இறுக்கமான மேல் சட்டையும் அணிந்து வரும் பெண்ணால் மற்றவர்களின் கவனம் கலையாதா? இப்படி கூறினால் உடனே "கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது, அதற்கு பெண் என்ன செய்வாள்"? என்று கேட்காதீர்கள். பெண்ணைப் பார்த்து சலனப் படுபவன்தான் ஆண், அப்படித்தான் இயற்கை படைத்திருக்கிறது. வழிபாட்டு தலத்தில் அவனை சலனப் படுத்த வேண்டாமே.

அப்படியாவது பொது இடங்களுக்குச் செல்லும் போது இப்படி உடை அணியுங்கள், ஷாப்பிங் செல்லும் போது அப்படி உடை அணியுங்கள், விசேஷங்களுக்குச் செல்லும் போது இந்த மாதிரிதான் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. நீச்சல் குளத்திற்குச் செல்லும் பொழுது ஒன்பது முழம் புடவையை கட்டிக் கொண்டுதான் நீந்த வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. கோவிலுக்குச் செல்லும் பொழுது நாகரீகமாக( I mean dignified not fashionable) மற்றவர்களுக்கு உறுத்தாமல் உடை அணிந்து செல்லுங்கள் என்று சொல்லுவது தவறா?

அவரிடம் ஒரு கேள்வி, நட்சத்திர விடுதிகளிலும், கார்பொரேட் விருந்துகளிலும் டிரஸ் கோட்  என்பது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய விஷயம். அவை எல்லாம்  இவரைப் போன்றவர்களின் சுதந்திரத்தை  பறிக்கவில்லையா? அல்லது அங்கெல்லாம் செல்லும் பொழுதும் தன் இஷ்டப்படிதான் உடை அணிந்து செல்வார?  

 மற்ற மதங்களில் வழிபாடு செய்யும் பொழுது பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் உண்டு. அவர்கள் தங்கள் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று கூப்பாடு போடுவதில்லை. எந்த கட்டுப்பாடும் விதிக்காத இந்து மதத்தில்தான் எல்லாவற்றிர்க்கும் எதிர்ப்பு! என்ன செய்வது? இந்தியாவில்   ஊருக்கு  இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி இந்து மதம்தானே? 

Friday, December 18, 2015

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும்

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும் 

 
மழை இல்லை மழை இல்லை என்று சென்னை வாசிகள் புலம்பியது போக கிட்ட தட்ட ஒரு மாதமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி சென்னையை ஒரு வழி பண்ணி விட்டது. அக்டோபர் மாத ஆரம்பம் வரை வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டாவது வெள்ளம் இது. 38 வருடங்களுக்கு முன் 1977 நவம்பரில் திருச்சியில் சரியாக சொன்னால் ஸ்ரீரங்கத்தில் சந்தித்த வெள்ளம். கரை புரண்டோடிய காவேரி திருச்சியை வெள்ளக் காடாக்கியதில் ஸ்ரீரங்கம் துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்தாறு குடும்பத்தினர் எங்கள் வீட்டு மாடியில்தான் அடைக்கலம் ஆனர். சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி, கவனியுங்கள் சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி... ஆம் சினிமாக்களில் காண்பிப்பது போல வெள்ளம் சப்தம் போட்டுக் கொண்டு, ஆர்பரித்து, சீறிப் பாய்ந்து வராது. சப்தமே இல்லாமல்தான் வரும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த குடிசைகளை ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளி, எங்கள் தெருவில்(ராகவேந்திரபுரம்) நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.தண்ணீர் ஏறிக் கொண்டிருந்து, பெரும்பான்மையோர் மாடியில், கீழே படுத்த படுக்கையாக இருந்த எங்கள் தாத்தா, சின்ன தாத்தா, அப்பா,அம்மா, மாமா, மற்றும் எங்கள் வீட்டு பசு மாடு. 

நாங்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்த தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். காலையில் எங்கள் மாமா மாட்டிடமிருந்து பால் கறந்து தர, அம்மா எல்லோருக்கும் காபி வழங்கினாள். பின்னர் தீபாவளி பட்சணங்கள் விநியோகிக்கப்பட்டன. எட்டு மணிக்குப் பிறகு எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு சரோஜா மாமியும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் தயாரித்து எல்லோருக்கும் போட்டார்கள். ஏதோ பிக்னிக் சென்றது போல கொஞ்சம் ஜாலியாக அனுபவித்த வெள்ளம் அது. மதியம் நீர் மட்டம் நன்றாக குறைந்து விட அவரவர் வீடுகளுக்குச் சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். தொன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வெள்ளம் என்றார்கள். ஆஹா! வாழ்க்கையில் ஒரு முறை வெள்ளம் பார்த்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன். 

இந்த வருட கதையை பார்ப்போமா: நவம்பர் 25ம் தேதி மதியம் வெளியே சென்ற என் கணவரும் மருமகளும் மாலை ஆறு மணிக்கு அமிஞ்சி கரையிலிருந்து கிளம்பி  விட்டதாகவும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் வண்டிகள் வேறு பாதையில் திருப்பி விடப் பட்டிருப்பதாகவும் அவர்கள் தேனாம்பேட்டை வழியாக வந்து கொண்டிருப்பதாகவும் கை பேசியில் கூறினார்கள். ஒன்பது மணி ஆகியும் வீடு வந்து சேராததால் தொடர்பு கொண்ட போது, டிராப்பிக் ஜாம் காரணமாக  சைதாபேட்டை பாலத்தில்  நிற்பதாக கூறினார்கள். மணி பத்து, பதினொன்று என்று ஓடிக் கொண்டே இருந்தது அவர்கள் வீடு திரும்பவில்லை,மழையும் நிற்கவில்லை. பல முறை கை பேசியில் அழைத்த பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை.. பன்னிரண்டு மணிக்கு என் கணவர், "இப்போதுதான் ஒவ்வொரு வண்டியாக விட ஆரம்பித்திருக்கிறார்கள், கிண்டியில் இருக்கிறோம் வந்து விடுவோம்" என்றார். அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று முப்பது. அதன் பிறகு சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  ஆட்டோ ஓட்டுனரையும் எங்கள் வீட்டிலேயே உறங்கச் சொல்லி விட்டோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஓட்டுனருக்கு இருட்டி விட்டால் கண் சரியாக தெரியாது. அதனால் அவர் ஏழு மணிக்கு மணிக்கு மேல் சவாரிக்குச் செல்ல மாட்டார். அன்று இருட்டோடு மழையும் சேர்ந்து கொண்டு விட்டது..!இந்த கூத்தில் அவர்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தது கடவுள் அருள்தான்.

அன்று பெய்த மழையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாய் நிரம்பி எங்கள் குடியிருப்பின் பின் வாசல் வழியாக தண்ணீர் உள்ளே புகுந்து குழைந்தைகள் விளையாடும் இடத்திர்க்கருகே உள்ள கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை லேசாக சேதம் செய்தது.


அதன் பிறகு 29ம் தேதி வரை மழை இல்லை. ஆனால் பளிச்சென்று வானம் கண் திறக்கவில்லை. 29ம் தேதி மீண்டும் மழை துவங்கியது. 30ம் தேதி விடியல் காலை நல்ல மழை.வழக்கம் போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை விட்டு கொஞ்சம் வெய்யல் கூட வந்தது!!! 

அன்று மதியம் தொடங்கிய மழை மறு நாளும் விடாமல் கொட்டித் தீர்க்க, காலை ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்பிய என் மாப்பிள்ளை தாம்பரம் சென்று சேர பத்து மணி ஆகி இருக்கிறது. வண்டலூர் வரை சென்றவரை ஊரப்பாக்கம் ஏரி உடைந்து விட்டதால் இப்படியே திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி விட்டு விட்டார்களாம். அப்போது மணி இரண்டு, அவர் வடபழனியில் இருக்கும் தன் வீட்டை அடையும் போது மாலை ஆறு மணி ஆகி இருக்கிறது என்றால் போக்கு வரத்து நெரிசலை யூகித்துக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு பிற்பகல் பதினோரு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டது. பன்னிரண்டு மணி சுமாருக்கு என் மகள் தொலை பேசியில் அழைத்து, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 30000 கண அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்களாம், அங்கு தண்ணீர் வந்து விட்டதா?" என்றாள்.நான், "இல்லை கார் பார்கிங்கில் மணல் மூட்டைகள் போட்டிருக்கிறார்கள், எனவே தண்ணீர் வராது" என்று மிகவும் நம்பிக்கையோடு கூறினேன். மேலும் குழந்தைக்கு பால் பவுடர் டப்பா வாங்கி கை வசம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தி விட்டு, அவர்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்த அவள் மாமியாருக்கு நன்றி கூறி அப்படி அவசியம் வந்தால் வருகிறோம் என்றேன்.

மாலை அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரியிடம் பேசிய பொழுது,செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப் பட்டால் எங்கள் தெருவிற்கு தண்ணீர் வரும், ஆனால் சீக்கிரம் வடிந்து விடும் என்றாள். நான் தமாஷாக அழகன் படத்தில் வரும்,
"என் வீட்டில் இரவு, அங்கே இரவா? இல்ல பகலா? 
எனக்கும் மயக்கம்.." 
என்னும் பாடலை ரீ மிக்ஸ் செய்து, 
என் வீட்டில் வெள்ளம் அங்கே வந்துச்சா, இன்னும் வல்லையா? எத்தனை அடி? " 
என்று பாடி சிரித்தோம். அப்போது கூட நான் வெள்ளம் வரும் என்று நம்பவில்லை.

இரவு பதினோரு என் கணவர் என்னை எழுப்பி நம் காலனியில் தண்ணீர் புகுந்து விட்டது, "உன் வண்டி சாவி கொடு வண்டியை வேறு இடத்தில் வைக்கலாம்" என்றார். கீழே சள சளவென்று  மக்களின் பேச்சுக் குரல். அர்த்த ராத்திரியில் வெள்ளம் வந்ததால் செய்வதறியாது தவித்த மக்கள்!!. இரண்டு மணிக்கு தரை தளத்தில் புகுந்தது தண்ணீர். அங்கிருந்தோர் மாடி வீடுகளுக்கு வந்தனர். காலை ஆறு மணிக்கு மாடிப் படியின் கடைசி படியில் இருந்த தண்ணீர் பத்து மணிக்குள் விறு விறுவென்று பத்து படிகளுக்கு மேல் ஏறி விட்டது.  நாங்கள் முக்கியமான பொருள்களையும், ஆவணங்களையும்(documents) லாப்டில்(loft) வைத்தோம். ஓவர் ஹெட் டாங்கில் இருந்த தண்ணீரை குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்த்து தேவையான பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது இவைகளுக்கு மட்டும் பயன் படுத்தினோம்.
மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்தில் இருக்கும் செல்லம்மாள் நகர் மக்களுக்கு  ஒரு ஏணிக்கு அடியில் இரண்டு தெர்மோ கோல்அட்டைகளை வைத்து கட்டி  படகு போல செய்து அதில் வந்து உணவும் நீரும் தன்னார்வ தொண்டர்கள் வழங்குவதை வேடிக்கை பார்த்தோம். மறு நாள் இதே படகில்தான் செல்லம்மாள் நகரில் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றினார்கள். 
எங்கள் காலனியை சூழும் வெள்ளம் 

வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடியிருப்பின் கார்கள்

மேலே ரோந்து வரும் ஹெலிகாப்டர்

அசோக் நகரிலிருந்து வட பழனி செல்லும் என் சகோதரி குடும்பம்
எங்கள் குடியிருப்பில் இருந்த ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் ராணுவ வீரர்களால் ஹெலிகாப்டர் மூலம் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இரட்டை குழந்தைகளை ஈன்றதை செய்தி தாள்களில் படித்திருப்பீர்களே.

புதன் கிழமை இரவு சீக்கிரம் எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள் என்றுதான் தோன்றியது. முதல் நாள் ஏறிய நீர் மட்டம் உயரவும் இல்லை தாழவும் இல்லை. என்னதான் செய்ய முடியும்? ஆனால் அந்த அமைதி கொஞ்சம் அச்சம் ஊட்டியது. 

மறு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது குறைந்திருந்த நீர் மட்டம் சற்று தைரியம் அளித்தது. மொட்டை மாடியில் சென்று பார்த்த என் மருமகள்,"ரோடு தெரிகிறது" என்று சந்தோஷப் பட்டாள். மதியம் சாப்பிட்டு விட்டு கை அலம்பினோம், தண்ணீர் தீர்ந்தது. நான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை வைத்து ஒரு நாள் ஓட்டி விடலாம்.. நாளை என்ன செய்வோம் என்று கவலை வந்தது.

அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தெரிய,"அப்பாடா! நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன இனிமேல் மழை வராது" என்று சந்தோஷப் பட்டேன். என் மகிழ்ச்சியில் தண்ணீர் ஊற்றி அணைத்தது  மீண்டும் கொட்டிய மழை. நல்ல வேளை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பெய்யவில்லை.

வெள்ளி அன்று காலை சுத்தமாக தண்ணீர் வடிந்து விட்டிருந்தது. ஆனால் பாதிப்பு அதிகம்! குறிப்பாக தரை தள வீட்டில் இருந்தவர்களுக்கு மிக மிக அதிகம். வீடிற்கு வெளியே போடப் பட்டிருந்த விலை உயர்ந்த சோபக்களையும், தொலை காட்சி பெட்டிகளையும், வீட்டு  உபயோக பொருள்களையும் பார்க்க, பார்க்க மனது நொந்தது. எங்கள் குடியிருப்பில் மட்டும் ஏறத்தாழ இருநூறு கார்களும், முன்னூறுக்கும் மேல் இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. இது ஒரு புறம் என்றால் உடுத்த மாற்றுத்  துணி கூட இல்லாமல் வாழ்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபம். 

நகரின் பல இடங்களில் வெள்ளம் வடிந்து பதினைந்து நாட்கள் ஆன பிறகும் கூட தண்ணீர் வடியவில்லை. சாலைகள் கிழித்து போடப் பட்டிருக்கின்றன. என்றாலும் சாலையில் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கி விட்டது. சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டார்கள். "எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ப நல்லவன்டா" என்னும் வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.    

ஒரு பின்னூட்டம்:

1977ல் ஒரு வெள்ளம் 2015ல் ஒரு வெள்ளம் என இரு வெள்ளங்களை பார்த்திருக்கிறேன். இந்த 38 கால இடைவெளியில் நம் வாழ்க்கை எத்தனை மாறி விட்டது? 

அப்போது திருச்சியில் தொலை காட்சி பெட்டி,வாஷிங் மிஷின்  யாரிடமும் கிடையாது. பிரிஜ், மிக்சி, கிரைண்டர், போன்றவை ஆடம்பர பொருள்கள். விலை உயர்ந்த புடவைகளும் மிகக் குறைவு. ஆனால் இன்றோ அரசாங்கமே விலை இல்லா மிக்சி, கிரைண்டர் என்று கொடுத்து மக்களை ஆடம்பரத்திற்கு பழக்கி விட்டு விட்டது. அப்போது தனி மனித இழப்பு குறைவு. இப்போதோ தனி மனித இழப்பே அதிகம்.

முற்றிலும் கணினி மயமாக்கப் பட்டு விட்டதால் வங்கியில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்., ஆன் லைன் செயல்பாடு என்று இருப்பதால் வாடிக்கையாளர்கள் யார் என்றே வங்கி மேலாளர்களுக்கு தெரியாத நிலையில் அவர் எப்படி உதவுவார்? யோசிக்க வேண்டிய விஷயம் இது.  

Saturday, October 10, 2015

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம்

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம் 


அகல்யா திரௌபதி குந்தி மண்டோதரி தாரா 
ததா பஞ்சகன்யா ஸமரேன்  நித்யம் 
மஹா பாதக நாசனம்!

தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. அகலிகை, திரௌபதி, குந்தி(குந்திக்கு பதிலாக சீதா என்றும் சிலர் கூறுவார்கள்),மண்டோதரி, தாரா என்னும் ஐந்து பெண்களை தினமும் நினைக்க அல்லது ஸ்மரிக்க மஹா பாதகங்களும் நசித்துப் போகும் என்பது இதன் மேலெழுந்த பொருள். உட்கிடை என்ன என்று சற்று ஆராயலாமா?

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் ஐந்து பெண்களும் பெரிய தபச்வினிகள் கிடையாது. பெரும்பாலும் சோகத்தில் தன் வாழ் நாளை கழித்தவர்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கற்பு நிலையில் கூட விஞ்சி நிற்பவர்கள் இல்லை. 




இந்திரனால் வஞ்சகமாக தன கற்பை இழந்தவள் அகலிகை,அதனால் கல்லாய் சமைந்தவள்.  கல்லாய் சமைவது என்றால் நாம் எல்லோரும் நினைப்பது போல அவள் வெறும் பாறையாகி விடவில்லை.கல் போல சமைந்தாள். அதாவது பசிக்கும் ஆனால் சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும் நீர் அருந்த முடியாது. இந்திரன் அவளை ஆட்கொண்ட பொழுது அது தன் கணவன் இல்லை வேறு ஒருவன் என்று அவளுக்கு தெரிகிறது இருந்தாலும் உடல் இச்சையை கட்டுப் படுத்த முடியாமல் கல் போல் கிடந்ததால், "கல் போல கிட" என்று கௌதமர் இட்ட  மிகக் கடுமையான சாபம்.  

திரௌபதி இந்த காலத்தில் கூட ஒப்பு கொள்ள முடியாதபடி ஒரே சமயத்தில் ஐந்து கணவர்களோடு வாழ்ந்தவள்.அவள் அனுபவிக்காத சோகங்களா? அரசியல் காரணங்களுக்காக ஐந்து ஆண்களை மணக்க வேண்டிய நிர்பந்தம். மாவீரர் களாகிய ஐந்து கணவர்கள் இருந்த போதும் சபையில் துகிலுரிக்கப் பட்டாள். 


 

குந்தியோ திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியோடு வாழ் நாளை கழித்தவள்.  குந்திக்கு பதிலாக சீதை என்று கொண்டாலும் ஜனக ராஜன் மகள், தசரதன் மருமகள், பேராண்மை கொண்ட ராமனின் மனைவி என்று இத்தனை பெருமைகள் இருந்தாலும் ராவணனால் சிறையெடுக்கப் பட்டாள். அதற்குப் பிறகும் மிகக் கடுமையான சுடு சொற்களை ராமன் பேசி அவள் தீக்குளித்து
 தான் பரிசுத்தமானவள் என்று நிரூபித்த பிறகே அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் ராமன். அதன் பிறகும் நிறை மாத கர்பிணி என்ற இரக்கம் இல்லாமல் காட்டிற்கு விரட்டப் படுகிறாள்.  சுக்ரீவன் மனைவியாகிய தாரா மைத்துனனாகிய வாலியால் கவர்ந்து செல்லப் பட்டவள். ஒவ்வொரு பெண்ணிற்கும் இப்படி ஒரு சோகமான பின்னணி.  அவர்களால் எப்படி நம் மஹா பாதகத்தை நசிக்கச் செய்ய முடியும்? அப்போது இந்த ஸ்லோகம் பொய் சொல்லுகிறதா? இல்லை, இந்தப் பெண்களின் வாழ்கையை சிந்தியுங்கள். ஒவ்வொரு பெண்ணின் சோகத்திற்கும் ஏதோ ஒரு ஆண், அவனுடைய பேராசை, கூடா  ஒழுக்கம் இவைகளே காரணமாக இருந்திருக்கின்றன. இதை சிந்திக்கும் எந்த ஆணும் பெண்ணுக்கு தீங்கிழைக்க விரும்புவானா? 

மண்டோதரியின் கணவனாகிய ராவணன் பிறன் மனை விழைதல் என்னும் பெரும் பாவத்தை செய்ததால் அவள் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவள் தன் புதல்வர்களை இழக்கிறாள், கணவனை இழந்து தானும் மாண்டு போகிறாள்.

மே ற்கண்ட  ஸ்லோகத்தில் இந்த பெண்களை வணங்குகிறேன்
என்றோ, துதிக்கிறேன் என்றோ குறிப்பிடப் படவில்லை. நினையுங்கள், மஹா பாதகம் நசித்துப் போகும் என்றுதான் உள்ளது. அந்த பெண்களை நினைப்போம், அவர்கள் பட்ட துயரங்களை நினைத்துப் பார்ப்போம் அதற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்போம், பாவம் செய்ய மனம் வராது, அதாவது பாவம் நசித்துப் போகும்.  

Thursday, October 8, 2015

மாயா - விமர்சனம்

மாயா - விமர்சனம் 



நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா, அதற்குள் ஒரு சினிமா, ஒரு கட்டத்தில் நிஜ சினிமா மாந்தர்கள் கதை சினிமா பாத்திரங்களாக மாறி விடும் அமானுஷ்யம்தான் கதையின் ஜீவன். வண்ணத்தில் வருவது நிஜ சினிமா,கருப்பு வெள்ளையில் வருவது சினிமாவுக்குள் வரும் சினிமா என்பது நமக்கு புரியும் பொழுது இடை வேளை வந்து விடுகிறது. நிஜ சினிமா கதா நாயகி நயன்தாரா கதை சினிமாவுக்குள் எப்படி  புகுந்து புறப்பட்டார் என்பதுதான் பின் பாதி.

கணவனைப் பிரிந்து கைக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் அடைக் கலமாகி, கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கும், சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்க முயன்று கொண்டிருக்கும் நயன்தாரா கதை ஒன்று, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் ஆரிக்கு 'மாயாவனம்' என்னும் தொடருக்கு படம் வரைய தொடங்கியவுடன் நேரும் விபரீதங்கள் ஒருகதை, அதில் கிளை கதையாக அவருடைய பாஸின் மனைவிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு,  இருள் என்று ஒரு திகில் படம் எடுத்து விட்டு அது போனி ஆகாததால், இந்த படத்தை தனியாக இரவுக் காட்சி பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வெகுமதி என்று அறிவிக்கும் இயக்குனர் கதை ஒன்று. (உஸ்ஸ்! அப்பாடா?) இப்படி தனித் தனியாக இயங்கும் கதைகளை எப்படியோ ஒன்று சேர்த்து விடுகிறார் இயக்குனர்.  ஒளிப் பதிவும், இசையும் அவருக்கு நல்ல துணை! 

நயன்தாராவை பொறுத்த வரை படம் முழுவதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்து விட்டு, கொஞ்சம் பயந்தால் போதும். அதை சரியாக செய்திருக்கிறார். அவர் தோழியாக வரும் லக்ஷ்மி பிரியா நன்றாக செய்திருக்கிறார்.  மற்ற நடிகர்கள் எல்லோருமே கச்சிதம்! மர்மங்களை யூகிக்க முடிவது ஒரு குறை. படத்தை பார்த்து விட்டு பயப் படுகிறோமோ இல்லையோ குழம்புவது நிச்சயம். குழப்பம் தீர்ந்தால் ரசிக்கலாம்.   

Wednesday, May 20, 2015

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 




அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.



விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் .