கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 22, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


பார்த்தசாரதி பெருமாளை தரிசித்தப் பிறகு நாங்கள் மம்மியூர் மஹாதேவன் கோவிலுக்குச் சென்றோம். குருவாயூர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு நினைவுக்கு வரலாம்... அங்கு பகவதியை தரிசித்து விட்டு ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது, ஒரு மூலையில் ஒரு மரத்தடியில் இங்கு நின்றபடி மம்மியூர் மகாதேவன் இருக்கும் திசை நோக்கி வணங்கவும் என்ற அறிவிப்பை காணலாம். அப்படி என்ன விசேஷம் மம்மியூர் மஹாதேவன் கோவிலில் என்று கேட்கலாம்.

குரு பகவானும், வாயு பகவானும் தங்களுக்கு கிடைத்த கிருஷ்ண விக்கிரஹத்தை எங்கே பிரதிஷ்டை செய்வது என்று பொருத்தமான இடத்தை தேடி அலைகிறார்கள். அவர்கள் குருவாயூரை அடைந்த பொழுது, அந்த குளக்கரையில் அமர்ந்து நெடு நாட்களாக தவம் செய்து கொண்டிருந்த சிவ பெருமான் இங்கே குருவாயூரப்பனுக்கு கோவில் கட்ட இடத்தை விட்டு கொடுத்து விட்டு பார்வதி தேவியோடு தான் பக்கத்துக்கு ஊருக்கு நகர்ந்து சென்றாராம், அவருடைய அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே மம்மியூர் மகாதேவனை வழிபட வேண்டும் என்கிறார்கள். மம்மியூர் மகாதேவனை தொழுதால்தான் குருவாயூர் யாத்திரை முழுமை பெரும் என்பதும் ஒரு நம்பிக்கை. சிவபெருமானின் மஹிமை பெற்ற ஊர், 'மஹிமையூர் ' என்பதே மருவி மம்மியூர் ஆகி விட்டதாம். 

நாங்கள் அங்கு சென்ற நேரம் உச்சிகால பூஜை நேரம். தீபாராதனை முடிந்தவுடன் உள்ளே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள், சிவன் சந்நிதியில் வணங்கி, பிரகாரம் சுற்றிக் கொண்டு மஹாவிஷ்ணு சந்நிதியில் வணங்கி அங்கிருந்த ஒரு வாசல் வழியே வெளியே வந்து விட்டோம். உடனே நடை அடைத்து விட்டார்கள். சிவன் சந்நிதிக்கு, மஹாவிஷ்ணு சந்நிதிக்கும் இடையே இருந்த பார்வதி தேவியின் சந்நிதியை தரிசனம் செய்ய முடியவில்லை. வெளியில் இருந்தபடியே வணங்கினோம்.

மம்மியூரைத் தொடர்ந்து குருவாயூர் தேவஸ்தானம்(அங்கு தேவோஷம் என்கிறார்கள்) பராமரிக்கும் 'ஆன கூட்டா'  சென்றோம். நுழைவு கட்டணம் தலைக்கு ரூ.20/- வசூலிக்கிறார்கள். காமிரா உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் செல் போன் அனுமதிக்கிறார்கள். 

இருக்கும் யானைகளில் பெரும்பான்மை ஆண் யானைகள்தான். இந்த யானைகளெல்லாம் ஏன் சோனியாகவும் கொஞ்சம் சோகமாகவும் இருக்கின்றன? என்ற அனுவின் கேள்வி நியாயமாகத்தான் பட்டது.

அங்கிருந்து குருவாயூர் சென்று தேவஸ்தான கெஸ்ட் ஹவுசில் வசதியான சூட் ஒன்று கிடைத்தது. பள்ளிகள் திறந்து விட்டன, மழை வேறு, எனவே கும்பல் அதிகம் இருக்காது என்ற கணக்கெல்லாம் பொய்த்து கும்பல் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் சீக்கிரம் பார்த்து விட  முடிந்தது. மாலை தரிசனம் முடித்து,  மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்திற்க்காக இரவு 2:00 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்த பொழுது, மிக நீண்ட வரிசையைப் பார்த்து பயந்து விட்டோம். காலை 3:00 மணி முதல், 3:20 வரைதான் நிர்மால்ய தரிசன நேரம் என்றார்கள். 20 நிமிடத்திற்குள் இத்தனை பெரும் பார்த்து விட முடியுமா? என்று பயம் வந்தது. ஆனால் கிடு கிடுவென்று வரிசை நகர்ந்ததால் எல்லோராலும் பார்க்க முடிந்தது.

வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது சுற்றுப் புறத்தை நோட்டம் விட்ட அனு, குருவாயூர் எப்படி மாறிப் போய் விட்டது? என்றாள். 
ஆமாம், எல்லா இடங்களும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன..?
பக்தர்கள் அதிகமாக வராத தொடங்கும் பொழுது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டாமா?
வசதிகள் செய்து தரட்டும், அதற்காக அடைப்படை மாறிவிடக் கூடாது..
ஆரம்பித்து விட்டாயா? இங்கே என்ன அடிப்படை மாறி விட்டதாம்? 
உனக்கு நினைவில்லையா? முன்பெல்லாம் கிழக்கு நடையில் நின்று பார்த்தால் கோவிலை முழுமையாக தரிசிக்க முடியும். இப்போது டின் ஷீட்டில் பெரிதாக கொட்டகை போல போட்டிருக்கிறார்கள், அது வாசல் தோற்றத்தை மறைத்து விடுகிறது. கொடிமரம் பாதிதான் தெரிகிறது. 
நீ சொல்வதும் சில சமயம் சரியாகத்தான் இருக்கிறது.
இன்னொன்றும் கவனித்தாயா? முன்பெல்லாம் எல்லா கேரள கோவில்களை போலவே குருவாயூரும் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது யாத்ரீகர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ சளசளவென்று பேச்சு..
சரி சரி, நீ பேச்சை நிறுத்து, நடை திறக்கப் போகிறார்கள்....

ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வரும் பொழுது, இத்தனை ப்ராசீனமான கோவில்.. ஏன் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யவில்லை? அனுவிற்கு சந்தேகம்.  

எனக்கும் தெரியவில்லை.. தெரிந்தவர்கள் யாராவது பதில் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.

அங்கிருந்து பாலக்காடு செல்வதற்கு காலை 6:30க்கு கிளம்பி விட   வேண்டும் என்று தீர்மானித்ததால் அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மற்றவர்கள் தூங்கி விட நான் மட்டும் மீணடும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழலோடு கட்சி அளித்த அந்த குழந்தை கண்ணனை ஆசை தீர தப்பு தப்பு ஆசை தீருமா என்ன? மீண்டும் ஒரு முறை தரிசித்தேன்.  

அங்கிருந்து 7:30க்கு கிளம்பினோம். பாலக்காட்டை அடையும் பொழுது மணி 11 ஆகி விட்டது. என் கணவரின் சொந்த ஊரான கோவிந்தராஜபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலிலும் 10:30க்கு நடை அடைத்து விடுவார்களாம். ஆகவே அங்கும் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. என் கணவரின் பூர்வீக வீட்டில் இப்போது வசிப்பவர்கள் ஊரில் இல்லாததால் அங்கும் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

தொடர்ந்து செல்லலாம்.... 


Thursday, July 21, 2016

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு 


விடுமுறையில் வந்திருக்கும் மகன், மருமகளோடு குருவாயூர் மற்றும் என் கணவரின் சொந்த ஊரான  கோவிந்தராஜபுரம் (பாலக்காடு) மற்றும் எமூர் ஹேமாம்பிகா கோவிலுக்கும் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஆலப்புழா விரைவு வண்டியில் திருச்சூரை அடைந்த நாங்கள் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே ஒரு விடுதியில் குளியலை முடித்துக் கொண்டு, காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம். 

"அதென்னவோ நமக்கும் வருண தேவனுக்கும் ஒரு ராசி இருக்கிறது.. நாம் எங்காவது கிளம்பினால் அவர் நமக்கு முன் அங்கு வந்து விடுவார்.  இப்பொழுதும் அப்படித்தான்!"
 நான் இப்படி சொன்னதும், எப்பொழுதும் என்னை விட்டு பிரியாத என் தோழி அனு, நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.  
"என்ன சிரிப்பு? என்றேன், 
"மழை சீசனில் கேரளாவிற்கு போக முடிவெடுத்து விட்டு இப்படி ஒரு பேச்சு!"  என்றாள், 
என்ன பதில் சொல்ல முடியும்? மணி ஆகிறது, கிளம்பு என்றா? அவள்தான் எனக்கு முன்னாள் கிளம்பி நிற்கிறாளே!

எப்படியோ நாங்கள் கோவில்களுக்கு செல்லும் விதமாக மழை அவ்வப்பொழுது ஒதுங்கி வழி விட்டது. கேரள கோவில்களில் சூடிதார் அணிந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், எனவே புடவை கட்டிக்கொள் என்று என் மருமகளிடம் கூறினேன். ஆனால், சூடிதாரை அனுமதிக்கிறார்கள். 



பிரமாண்டமான திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் திருமேனி மீது நெய் சாற்றுகிறார்கள். அதற்காக கோவில் வளாகத்துக்குளேயே சிறிய அகல் விளக்கில் நெய் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி கருவறைக்கு அருகில் வைத்து விட்டால், அவர்கள் ஸ்வாமி மீது அதையே அபிஷேகம் செய்வது போல ஊற்றி விடுவார்கள். ஆனால் கர்பகிரஹத்தில் சிவ லிங்கம் எதுவும் காண கிடைக்காது.

இதன் தாத்பரியம் என்ன? தாத்பர்யம் என்ன? என்று அனு நச்சரித்தாள். இவள் ஒரு சள்ளை, ஏதோ கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா? பிரசாதம் சாப்பிட்டோமா என்று இருக்காமல், எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிய வேண்டுமாம்..

அங்கு தமிழ் புரிந்து கொள்ளும் ஒருவர் இருந்தார், அவரிடம் கேட்டதற்கு, அவர்," யாருமே லிங்கத்தை கண்டதில்லை, உறைந்திருக்கும் நெய்க்குள் லிங்கம் இருப்பதாக ஐதீகம்" என்றார். அங்கு ஊற்றப்பட்டிருக்கும் நெய் கடும் கோடையில் கூட உருகாது என்றும், அந்த நெய்யில் எறும்பு மொய்க்காது என்றும் கூறுகிறார்கள். நெய் உறைந்த திரு மேனியை முழுமையாக அலங்கரித்திருந்தார்கள். மிக நன்றக இருந்தது. 



வடக்குநாதர் சந்நிதியிலிருந்து அப்பிரதக்ஷிணமாக சென்று ஸ்வாமி சன்னதிக்கு பின்னால் இருக்கும் பகவதியை தரிசனம் செய்து கொள்ள வேண்டும். ஸ்வாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகியை கங்கை என்கிறார்கள். அங்கு கங்கைக்கு ஒரு சிலையும் இருக்கிறது. கங்கையை கடந்து செல்ல அனுமதி இல்லை என்று போர்டோடு தாண்டிச் செல்ல முடியாமல் கயிறும் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு மட்டுமில்லை வேறு சில சிவன் கோவில்களிலும் இதைப் போன்ற அமைப்பை காண முடிகிறது. 

வடக்குநாதர் சந்நிதிக்கு அருகில் தனி சந்நிதியில் ராமர். வெளி பிரகாரத்தில் அய்யப்பன், கிராதன்(வேடனாக வந்த சிவன்), கோ சாலை கிருஷ்ணன், ஆதி சங்கரர் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி. இதை தவிர ஆதி சங்கரர் சமாதியும் இருக்கிறது. 

ஆதி சங்கரரின் பெற்றோர்களான ஆர்யாம்பாளும், சிவ குருவும் இங்கு வந்து பஜனம் இருந்துதான் அதி சங்கரரைப் பெற்றெடுத்தார்கள். எனவே அதி சங்கரரின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்த என் சிநேகிதி அனு, "இந்த சித்திரங்களில் ஆர்யாம்பாளை கேரள பெண்மணி போல சித்தரித்துள்ளார்கள், என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்றாள். 
உன் ஒப்புதல் யாருக்கு வேண்டும்? வாயை மூடிக்கொண்டு வா என்று விரட்டினேன்.
அவளோ விடாமல், ஆதி சங்கரரின் பெற்றோர்கள் வைதீக பிராமணர்கள், அவர்களை அப்படித்தானே வரைய வேண்டும்? என்று தொணப்பினாள். 
நாம் கும்பகோணத்திற்கு அருகில்  சென்ற போது, ஒரு கோவிலில் கோவிந்த தீக்ஷதருக்கும் அவர் மனைவிக்கும் சிலை இருந்ததை பார்த்தோமே அதில் அவர்கள் வைதீக பிராமணர்கள் போலவா உடை அணிந்திருந்தார்கள்?" என்று கேட்டு அவள் வாயை அடைத்தேன்.   

திருச்சூரிலிருந்து அதே காரில் குருவாயூர் சென்று விட்டோம். குருவாயூரில் உள்ள வெங்கிடாசலபதி கோவிலுக்கு முதலில் சென்றோம். கேரள பாணியில் அமைந்த சிறிய கோவில். நெடியோனாகவே தரிசித்த மாலவனை வாமன மூர்த்தி போல சிறிய உருவில் தரிசிப்பது வித்தியாசமாக இருக்கிறது. உள் பிரகாரத்திலேயே தனி சந்நிதியில் வெங்கிடாதம்மாளாக அருளை அள்ளி வழங்கும் தாயார். கொடி மரத்திற்கருகில் நமஸ்கரித்து வெளியே வருகிறோம்.  ராமானுஜர் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறாராம் ஆகவே அவருக்கும் தனி சந்நிதி. 

கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் தயாராக உள்ளது சாப்பிட்டு  விட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். குறிப்பாக நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொண்டு அந்தக் காலங்களில் கல்யாணங்களில் மாப்பிளை வீட்டாரை உபசரிப்பது போல பேர் பேராக உபசரித்தார்கள். இப்படி ஒரு உபசாரம் எங்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் திருச்சூரில் டிபன் சாப்பிட்டிருக்க மாட்டோம். அவர்கள் உபசரிப்பை நன்றியோடு மறுத்துவிட்டு, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.



இதுவும் சிறிய கோவில்தான். நுழையும் முன், வேறு கோவில் பிரசாதம் உட்பட சாப்பிடும் பொருள்கள் ஏதாவது இருந்தால் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, வெளியே வைத்து விடுங்கள் என்றார்கள். பார்த்தசாரதி என்பதாலோ என்னவோ தேர் போன்ற கருவறை அமைப்பு. உள்ளே நின்ற திருக்கோலத்தில் சிறிய மூர்த்தி. 

"மீசை வைத்து கொண்டு ஆஜானபாகுவாக பார்த்தசாரதி பெருமாளை சேவித்த நமக்கு, இப்படி சிறியவராக பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது இல்லையா?" என்றாள் அனு.

இதுதான் உன்னிடம் பிரச்சனை, ஏன் எப்போதும் ஒரு விஷயத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு கொண்டே இருக்கிறாய்?  

உனக்கு ஏன் கோபம் வருகிறது? நம் ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி என்றுதான் சொல்ல வந்தேன்.

அது கலாச்சார வித்தியாசம்.

ஒவ்வொரு இடத்திலும், ஓவ்வொரு பழக்கம், நடிகர் ஜெயராம் சொன்னது போல..

ஜெயராம் என்ன சொன்னார்?

தமிழ் படத்திற்கும் மலையாள படத்திற்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் கேட்டபொழுது, "மலையாள படத்தில் அம்மா என்று அழைக்க வேண்டுமென்றால் வெறுமனே அம்மே என்று அழைத்தால் போதும், ஆனால் தமிழ் படத்தில் அ...ம்ம்ம்ம்.மா... என்று அடி வயிற்றிலிருந்து அழைக்க வேண்டும் என்றார். 

ஓகே.. அதனால.. என்ன சொல்ல வர?

நமக்கு எல்லாமே கொஞ்சம் பிருமாண்டமாக, ஆரவாரமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எல்லாம் சட்டிலாக இருந்தால் போதும் போலிருக்கிறது. கோவில் உட்பட. சிறிய கோவில், சிறிய மூர்த்தங்கள்..

அடடா! என்ன கண்டு பிடிப்பு?

நான் சொல்வதை எதையாவது நீ ஒப்புக் கொண்டிருக்கிறாயா? நீ கோவிலை பார்த்து விட்டு மெல்ல வா, நான் முன்னாள் மம்மியூருக்கு  செல்கிறேன்.. அவள் எனக்கு முன்னாள் மம்மியூருக்குச் சென்று விட்டாள்.  
   
நாம் தொடரலாம்...

Sunday, July 17, 2016

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கவிச் சக்ரவர்த்தி கம்பர் சோழ அரசன் குலோத்துங்கனின் அவையை அலங்கரித்தவர் மட்டுமல்ல,அவனுடைய சிறந்த நண்பரும் கூட. ஆனால் ஒரு முறை சோழ அரசனோடு ஏற்பட்ட ஏதோ மன வருத்தத்தத்தில் சோழ தேசத்தை விட்டு நீங்கி சேர தேசத்தை அடைகிறார். சேர தேச அரசன் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்து அங்கு பராமரித்தாலும் கொஞ்ச நாட்களிலேயே கம்பருக்கு குலோத்துங்கன் மீது கொண்ட பகை உணர்ச்சி நீங்கி விடுகிறது. சோழ அரசனையும் தேசத்தையும் காண வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. அப்போது மருத நிலத்தை (அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும்) புகழ்ந்து அவர் பாடிய பாடல்தான் 

தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக் 
கொண்டல்கள் முழவின் ஏங்கக் 
குவளைகண் விழித்து நோக்கத் 
தெண்திரை எழினி காட்டத் 
தேம்பிழி மகர யாழின் 
வண்டுகள் இனிது பாட 
மருதம்வீற் றிருக்கும் மாதோ 


என்னும் அழகிய பாடல் 
 
கம்பனை போலவே எனக்கும் சேர நாட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், அந்த சற்றே அலுப்பூட்டும் பசுமையைக் காணும் பொழுதெல்லாம் எங்கள் சோழ நாட்டின் அழகு நினைவுக்கு வரும். ஆனால் என் மகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டாள். என்ன இருந்தாலும் அவள் சேர தேசத்து(பாலக்காடு) பெண் அல்லவா?   இதை படிப்பபவர்கள் எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியாது. தஞ்சை மாவட்டத்தில் எங்கே நிலம் இருக்கிறது? எல்லாவற்றையும் பிளாட் போட்டுக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்கலாம்.  

அது கிடக்கட்டும், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கூறுங்கள், சொல்கிறேன்.

Sunday, July 10, 2016

வேலை வேலை வேலை

வேலை வேலை வேலை 

"வித்யா வந்தாச்சு, நீ பேசறயா, நான் பேசட்டுமா"? கணேஷ் தன் மனைவி கீதாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்.

"நானே பேசறேன், நீங்க ஏதாவது சொல்லப் போக பிரச்சனை ஆகிடப்போகுது.." பேசிக்கொண்டே ஒரு தட்டில் வித்யாவுக்காக ரெண்டு பிஸ்கேட், கொஞ்சம் மிக்சர் எடுத்து வைத்துக் கொண்டு, காபியும் கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், வித்யா உடை மாற்றி, முகம் அலம்பிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மாவிடமிருந்து தட்டை வாங்கி கொண்டு, டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சேனலை மற்றது துவங்க, அருகில் அமர்ந்து கொண்ட கீதா,
"உனக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது"

"ஆமாம்"

"இனிமே கொஞ்சம் பொறுப்பா இருக்கணும்"

"என்ன பண்ணனும்"?

"வீட்டு வேலையெல்லாம் செய்ய கற்றுக் கொள்"

"என்ன வேலை"?

"வீட்டை க்ளீன் பண்ணுவது, மாப் போடுவது, வாஷிங் மெஷினில் துணி துவைக்க போடுவது, துணி உலர்த்துவது, இப்படி சின்ன சின்ன வேலைகள் எல்லாம்"

"இதுக்கெல்லாம் வேலைக்காரி கிடைக்க மாட்டாளா"?

"என்னதான் வேலைக்காரி இருந்தாலும் நமக்கும் செய்யத் தெரியணும்"

"ஓ.கே."

"அப்புறம் இப்படி ஆபிசிலிருந்து வந்தவுடன் அம்மா காபி கலந்து நீட்டுவது போல கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காபி போட கத்துக்கோ, அதோட மட்டுமில்ல, குக்கர் வைக்க, சிம்பிளா ஒரு வற்றல் குழம்பு, ரசம் வைக்க கற்றுக் கொள்".

அம்மா சொல்வதை எல்லாம் புன்னகையோடு கேட்டுக்கொண்டு, "அது சரிம்மா, எல்லா வேலையையும் நானே செய்து விட்டால் வீட்டில் பெண்டாட்டி என்று ஒருத்தி இருப்பாளே,அவள் என்னதான் செய்வாள்"? என்றான் வித்யா என்னும் வித்யாசாகர்.

"ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க, உனக்கு எவ்வளவு டயர்ட் நெஸ் இருக்குமோ அவளுக்கும் அதே அளவு ட்யர்ட்னெஸ் இருக்கும்டா, புரிஞ்சு நடந்துக்கோ" என்றாள் கீதா.

"சரி, சரி இப்போ இந்த காபி கப்பை நான்தான் கொண்டு போய் சிங்கில் போட வேண்டுமா"?

"முடிந்தால் கழுவி வைத்து விடேன்" என்றால் 21ம் நூற்றாண்டு  பிள்ளையைப் பெற்ற அம்மா. 


ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

இதில் உனக்கு அப்படி என்ன சந்தோஷம்? என்று கேட்க்கிறீர்களா? எனக்கும் என் அக்காவுக்கும் சரியாக ஒரு வருடம்தான் வித்தியாசம். முதல் வருடம் ஜூலை 5ம் தேதி அவள் பிறந்தாள். நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் ஸ்லோ, அவளோடு சேர்ந்து பிறந்திருக்க வேண்டியவள் ஒரு வருடம் லேட்டாக அடுத்த வருடம் அதே ஜூலை 5ம் தேதி பிறந்தேன். எனவே இரட்டையர்களைப் போலவேதான் வளர்ந்தோம். அவளை பள்ளியில் சேர்க்க வேண்டிய காலம் வந்த பொழுது, அவளை பிரிய முடியாது என்று நான் அழுதேனாம், எனவே என்னையும் அவளோடு சேர்த்து பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் பர்த் செர்டிபிகேட் கெடுபிடியெல்லாம் கிடையாது என்பதால் என் அக்காவுக்கு எனக்கு இரண்டு பேருக்குமே ஒரு வயது அதிகம் கொடுத்து சேர்த்து விட்டார்கள். பிறந்த நாள் எல்லாம் யாருக்கு தெரியும். பள்ளி ஆசிரியரிடம் ஆனி  மாதம் என்று சொல்லி இருப்பார்கள், அவர் தனக்கு தோன்றிய ஒரு தேதியை போட்டிருப்பார். சமீபத்தில் என் சகோதரிக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டி வந்தது. அதர்க்காக அவள் அந்த அலுவலகம் செல்வதற்கு முன் அவள் பேரன், "அம்மம்மா உன் டேட் ஆப் பர்த் கேட்டால், ஜுலை 5 என்று சொல்லக் கூடாது, ஜூன் 24 என்று
சொல்ல வேண்டும்" என்று அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தான். ஆக, சீனியர் சிட்டிஸின்களுக்கு வழங்கப் படும் ரயில்வே சலுகைகள் இனிமேல் அவளுக்கு கிடைக்கும். எனக்கு அடுத்த வருடம்தான். இதில் என்ன அவ்வளவு சந்தோசம் என்று மீண்டும் கேட்காதீர்கள், என் சொந்த கதை சோகக் கதையை சொல்கிறேன்.

ஒரே வகுப்பில் படித்தாலும் நாங்கள் இருவரும் சகோதரிகள் என்று நிறைய பெருக்குத் தெரியாது. வகுப்பு வாசல் வரைதான் ஒன்றாக செல்வோம், பிறகு அவளுடைய குழு வேறு, என்னுடைய குழு வேறு. ஒத்த ஜாடையும் கிடையாது.  அது மட்டுமல்ல, பழக்க வழக்கங்களிலும் நானும் அவளும் எதிரெதிர் துருவங்கள்தான். நான் கொழு கொழுவென்றிருக்க, சவலைக் குழுந்தையாகிய அவள் சோனியாக இருப்பாள் (இன்றும் அப்படித்தான்). எங்கள் வகுப்புக்கு புதிதாக வரும் ஆசிரியர்கள் இருவருக்கும் ஒரே இனிஷியல் வருவதைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் சிஸ்டெர்ஸா? என்று ஆச்சர்யமாக கேட்பார்கள், ஆமாம் என்றால் யார் அக்கா?, யார் தங்கை என்பார்கள்? உண்மையைச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பலரும் இன்று வரை அவள்தான் அக்கா, நான்தான் தங்கை என்பதை நம்புவதில்லை. 

இதை விட பெரிய கொடுமை அப்போதெல்லாம் பஸ்ஸில் அரை டிக்கெட் உண்டு. நான் சிறுமியாக இருந்த பொழுது நாங்கள் திருச்சி உறையூரில் இருந்தோம், அங்கிருந்த ராம விலாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து மெயின் காட் கேட் செல்ல முழு டிக்கெட் 10 பைசா, அரை டிக்கெட் 5 பைசா. பஸ்ஸில் கண்டக்டரிடம் என் அம்மா, ரெண்டு அரை டிக்கெட் என்றால், அவர் என்னை காண்பித்து, இந்த பாப்பாக்கு முழு டிக்கெட் வாங்கிடுங்க, அந்த பாப்பாக்கு அதாவது என் அக்கா அரை டிக்கெட் வாங்கிக்கலாம் என்று என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார். ஒரு முறை எங்கள் பள்ளியில் திருச்சி ஏர் போர்ட் காண்பிக்க அழைத்துச் சென்றார்கள். அப்போது ஒரு அசிரியை மாணவிகளை இரெண்டு வரிசையாக பிரித்தார். ஒரு வரிசை முழு டிக்கெட்டுக்கானது, மற்றது அரை டிக்கெட். என்னை முழு டிக்கெட் வரிசையில் நிற்க வைத்துவிட்டு, என் அக்காவை அரை டிக்கெட்டுகளோடு சேர்த்தார். என்ன கொடுமை!!

என்னை பொறாமை பட வைத்த என் சகோதரியும் நானும் 


இப்படி எத்தனை முறை என் காதில் புகை வர வைத்திருக்கிறாள்.. அந்த பாச்சாவெல்லாம் இனிமேல் பலிக்காது  ட்ரெயினில் டிக்கெட் புக் பண்ணும் போதே சீனியர் சிட்டிசன் என்று குறிப்பிட்டால், சலுகை கிடைக்கும். நான் இன்னும் ஒரு வருடம் ஜாலியாக காத்திருப்பேன்.

இதற்காகவே அவளோடு எங்காவது ரயிலில் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. டிக்கெட் புக் பண்ணி விட்டு," பாத்தியா நீதான் சீனியர் சிட்டிசன், நான் கிடையாது", என்று கொக்கரிக்கலாமே.(அட அசட்டு அல்பமே! இவ்வளவுதானா நீ?!!?)  

Tuesday, June 28, 2016

நன்றி ஸ்ரீராம்!

நன்றி ஸ்ரீராம்! 

சனிக்கிழமை அன்று மாங்காடு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கால் டாக்ஸி புக் பண்ணி விட்டு காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பைக்கில் உட்கார்ந்திருந்த இளைஞன் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தான். 

இவன் ஏன் என்னை முறைக்கிறான்? பயந்து போய் பார்வையை திருப்பிக் கொண்டேன். அப்போதுதான் புரிந்தது அவன் என்னை முறைக்கவில்லை அவனை காக்க வைத்து விட்டுச் சென்ற அவன் தயார் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்.. அவரைத்தான் உன்னிப்பாக பார்த்திருக்கிறான்... கடவுளே!

புக் பண்ணிய கால் டாக்ஸி இன்னும் ஒரு நிமிடத்தில் வந்து விடும் என்று அறிவிப்பு வருகிறது, ஆனால் இன்னும் காணவில்லையே..? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு வாகனம் என்னை மெதுவாக கடந்து செல்கிறது... 
"மேடம் எங்க இருக்கீங்க?" 
"கோவிலுக்கு வெளியே ட்ராபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில்.."
 "அங்கதான் நானும் இருக்கேன், கொஞ்சம் முன்னால பாருங்க..."
 
என்னை கடந்து சென்ற வாகனம்தான். ஏறி உட்கார்ந்தேன்.  
எப்போதும் போல் என் பெயரை கேட்டு ஊர்ஜிதம் பண்ணிக்க கொள்ளவில்லை. வண்டியில் 'ஓலா' ஸ்டிக்கரும் இல்லை. 

சரியான வண்டிதானே? என்னை யாரும் கடத்திச் செல்லவில்லையே? மீண்டும் பயம். 

"உங்க வண்டியில் ஏன் பெயர் ஸ்டிக்கர் இல்லை?"

"சின்ன வண்டியில்தான் மேடம் ஸ்டிக்கர் இருக்கும், இது பெரிய வண்டி. தவிர ஓலா, உபர் இரண்டிலும் ஓடும்".

என்னதான் ட்ரைவர் சமாதானம் சொன்னாலும், எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. 

ஆனால் என் பயம் அர்த்தமற்றது. சரியான வண்டிதான், ஓட்டுனரும் நல்லவர்தான்.

மறு நாள் டூ வீலரில் அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரி வீட்டுக்குச்  சென்றேன். அங்கு போனதும் மழை பிடித்துக் கொண்டதால் வண்டியை அங்கேயே விட்டு விட்டு உபர் கார் புக் பண்ணி வந்தேன். 130 ரூபாய் ஆகியிருந்தது. 150 ரூபாய் கொடுத்தால், "சில்லறை இல்லை மேடம், 30 ரூபாய் தாங்களேன்". என்றார் ட்ரைவர்.

30 ரூபாயை எடுப்பதற்காக மாடிக்கு வந்தவள் வாசல் கதவை சாத்தவில்லை.
 
ஐயோ, வாசல் கதவை திறந்தே வைத்து விட்டு வந்து விட்டோமே? அந்த ட்ரைவர் பின்னாலேயே வந்து நம்மை கத்தியால் குத்தினால்...? என்னதான் அபார்ட்மெண்ட் என்றாலும், அக்கம் பக்கம் எல்லாம் கதவை அடைத்துக் கொண்டு வெளியே அல்லவா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.." மீண்டும் பயம். 

அந்த ட்ரைவர் பாவம் அப்படி எல்லாம் எதுவும் செய்யாமல் நான் வருவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். 

இத்தனை பயம் ஏன்? என் குடும்பத்தினர்கள் வெளியூர் செல்லும் போதெல்லாம் அவர்களை விடியற் காலையிலும், இரவிலும் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கொண்டு விட்டு விட்டு தனியாக வரும் போதெல்லாம் தோன்றாத பயம் இப்போது ஏன்? உலகம் இனிமையானது, மனிதர்களில் பெரும்பான்மையோர் நல்லவர்கள் என்று நம்புகிறவன் நான்.  துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் மரணம் என்னை வெகுவாக பாதித்து விட்டது. என் நம்பிக்கை பொய்த்துப் போன பயம், மானுடம் தோற்ற பயம். 

'எங்கள் ப்ளாக்'இல் ஸ்ரீராம் பதிவு செய்திருந்த பாசிட்டிவ் செய்திகளை படித்தப் பின் என் நம்பிக்கை மீண்டது. நன்றி ஸ்ரீராம்!         

Thursday, June 23, 2016

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி 

முருங்கை காயில் சாம்பார் செய்யலாம், பொரித்த குழம்பு செய்யலாம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கறி கூட சமைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் (இளசாக இருக்க வேண்டியது அவசியம்) - 4
காரப்பொடி - ஒன்றரை டீ ஸ்பூன் 
உப்பு -  1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க: எண்ணெய், மற்றும் கடுகு.



செய்முறை: 

முதலில் முருங்கைக்காய்களை அலம்பி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அலம்பி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை போட்டு மஞ்சள் பொடி, உப்பு, காரப்பொடி இவைகளை சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்த பிரட்டி விட வேண்டும். முருங்கைக்காய்கள் நிறம் மாறுவது வெந்ததற்கு அறிகுறி. உடனே இறக்கி விடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.   

தன் மாமியாரிடமிருந்து என் மகளும், அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் இது.



Sunday, June 19, 2016

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

Tuesday, June 14, 2016

புத்தகத் திருவிழா 2016!

புத்தகத் திருவிழா 2016!

எல்லா வருடங்களும் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த வருடம் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப் பட்டு இப்போது ஜூனில்தான் நடை பெற்றது. சென்ற வருடம் டிசம்பரில் வந்த வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை விடுபடாததுதான் தாமதத்திற்கு காரணம். 
இது 39வது புத்தகக் கண்காட்சி. புத்தக கண்காட்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், புத்தக ஆர்வலர்கள் இதை புத்தக திருவிழா என்றே குறிப்பிடுகிறார்கள்.

முதலில் காயிதே மில்லத் கல்லூரியிலும், பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயின்ட்.ஜான் பள்ளியிலும், சென்ற வருடம் ஒய்.எம்.சி.ஏ. க்ரௌண்டிலும் நடை பெற்ற புத்தக கண்காட்சி இந்த வருடம் ஏனோ தீவு திடலில் நடை பெற்றது. 

ஜூன் மாதம் என்பது புத்தக கண்காட்சி நடத்த ஏற்ற மாதம் கிடையாது. இப்போதுதான் பள்ளிகள் திறக்கும், அதற்காக நிறைய செலவு செய்திருக்கும் பெற்றோர் புத்தக கண்காட்சிக்கு வருவார்களா? அதனால் வருகையும் விற்பனையும் எதிர்பார்த்தது போல இல்லை. நடுவில் இரண்டு நாட்கள் மழை வேறு, என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நான் சென்றது ஞாயிற்று கிழமையாக இருந்ததாலோ என்னவோ, புத்தக திருவிழா என்பதற்கு ஏற்ப தேர் கூட்டம், திருவிழா கூட்டமாக இருந்தது. கார் பார்கிங்கிலிருந்து நுழைவு வாசலுக்கு மினி பஸ் ஷட்டில் சர்வீஸ் விட்டிருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு நின்றது. நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று, நேபியர் பாலத்தை கடந்து கண்காட்சிக்குள் நுழைந்தோம். 

எழுநூறு ஸ்டால்கள்! இட வசதி தாரளமாக இருந்ததால் அத்தனை கும்பலிலும் சௌகரியமாக நடக்க முடிந்தது என்றாலும் என் தோழி கால் வாசி சுற்றுவதர்க்குள் களைப்படைந்து விட்டார். ஆகவே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. வழாக்கம் போல பொன்னியின் செல்வன் நிறைய கண்ணில் பட்டது. நான் சந்தியா பதிப்பகத்திலிருந்து திரு.ஜீ.வி. அவர்களின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகமும்,லா.ச.ரா.வின்' புத்ர' புத்தகமும் மட்டும் வாங்கினேன். பக்கத்தில் இருந்த 3D ஓவிய அரங்கில் சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு நடையை கட்டினோம். அசோகமித்ரனின் 'புலிக் கடன்' பிலிப்கார்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். 



Friday, June 10, 2016

பழையன விரும்பு!

பழையன விரும்பு!

ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து இன்று வழக்கொழிந்து போன சில விஷயங்கள், உங்களுக்கு பரிச்சயமா? பாருங்கள்..




வண்ணான் கூடை:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் பலர் வீடுகளில் இருந்த விஷயம் இது. சலவைக்கு போடா வேண்டிய துணிகளை இந்த கூடையில் சேர்த்து வைப்பார்கள். வண்ணான் ஒவ்வொரு புதன் கிழமை அல்லது சனிக் கிழமை வந்து சாவை செய்த துணிகளை கொடுத்து விட்டு, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துச் செல்வார். 

கல் சட்டி: 



கச்சிட்டி என்று வழக்கு மொழியில் அறியப்படும் பொருள். இதில் வைக்கப் படும் வற்றல் குழம்பு தனி சுவை. அதைத் தவிர சாதாரண சாம்பார், அரைத்து விட்ட சாம்பார், கூட்டு போன்றவையும் சமைக்கலாம். கெமிகல் ரிஆக்ஷன் இல்லாததால் உணவு சுவை மாறாமல் இருக்கும். ஆனால் வாங்கியவுடன் உடனே அடுப்பில் ஏற்றி விட முடியாது,பழக்க வேண்டும். பழகிய கல் சட்டி பல வருடங்கள் இருக்கும். இப்படி மாமியார் பழக்கி பயன் படுத்தி வந்த கல் சட்டியை  மருமகள் உடைத்து விட்டால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உண்டு. இப்பொழுதும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. எப்பொழுது போய் கேட்டாலும், "கல் சட்டி எல்லாம் வரதே இல்லீங்க" என்றபடியே உள்ளே அடுக்கி வைத்திருப்பதிலிருந்து எடுத்து தருவார். 

இரும்பு தோசைக் கல்:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் நான் ஸ்டிக் தாவாவில் தான் தோசை வார்கின்றனர். எங்கள் வீட்டில் தோசைக் கல்லில் வார்க்கப்படும் தோசைக்குதான் வரவேற்பு. தோசைக் கல்லும் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு ஐடெம். நானும் என் சகோதரிகளும் ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் செல்லும் போதும் காவேரியில் குளிப்பது, ரெங்கநாதரை சேவிப்பது இவை தவறலாம், ஆனால் தோசைக் கல்லோ, இலுப்பை கரண்டியோ(தளிக்கும் கரண்டி), இரும்பு சட்டியோ வாங்குவது தவறாது. என் அண்ணா ஒரு முறை "நீங்கள் தோசை கல் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லையா"?. என்று கேட்டார். 

வெண்கலப் பானை:

ஒரு காலத்தில் இதில்தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தோம். குக்கர் என்ற ஒன்று வந்ததும் இதை பரணில் போட்டு விட்டோம். அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் செய்தால் அதன் ருசியே தனி..!

அம்மி:




முன்பெல்லாம் தேங்காய் துவையல் போன்றவற்றை இதில்தான் அரைத்துக் கொண்டிருந்தோம். அம்மியில் அரைப்பது என்பதெல்லாம் இந்த தலைமுறை அறியாத ஒன்று. 

இதையெல்லாம் பயன் படுத்துவதால் என்னை பழமைவாதி என்று கருதி விடாதீர்கள். 

Thursday, June 9, 2016

வராக நதிக்கரை ஓரம் - 2

வராக நதிக்கரை ஓரம் - 2

திருவக்கரையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கு பகல் உணவை முடித்துக் கொண்டு மாயவரத்திற்கு அருகி இருக்கும் பெரம்பூர் என்னும் சிற்றூரை நோக்கி சென்றோம். அங்குதான் எங்கள் சம்பந்தியின் குல தெய்வம் கோவில் உள்ளது. மாலையில் அங்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

நாங்கள் அங்கு சென்ற போது ஐந்தரை மணி இருக்கும். அர்ச்சகர் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். சிறிய கிராமமாக இருந்தாலும் கோவில் பெரிதாகத்தான் இருந்தது. இதுதான் நம்முடைய பாரம்பரிய சிறப்பு. எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அங்குள்ள பெரிய வீட்டை விட கோவில் பெரியதாக இருக்கும். எத்தனையோ அரசர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள், அவர்களின் அரண்மனைகள் நமக்கு காண கிடைப்பதில்லை, அவர்கள் கட்டிய கோவில்கள் இன்னும் அழியாமல் காலங்களை கடந்து நிற்கின்றன. அது மட்டுமல்ல தன்னிடம் உள்ள சிறப்பான பொருள்களை இறைவனுக்குத்தான் படைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன், மணி, இரத்தினங்களையும் அரசர்கள் கோவில்களில்  வீற்றிருக்கும் கடவுளுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். நாம்தான் அந்த கோவில்களை சரியாக பராமரிக்காமல் இருக்கிறோம். ஆனால் பெரம்பூர் வாசிகள் அப்படி இல்லை. கோவில் ஓரளவு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது.

கர்பக்ரஹத்தில் வள்ளி,தேவசேனா இரு புறமும் நின்றிருக்க முருகன் அந்த பெயருக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக மயில் மீது ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்க விட்டுக் கொண்டும் அமர்ந்த கோலத்தில் எழிலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். தனி சந்நிதியில் தேவானை குடி கொண்டிருப்பதால் முருகனுக்கு முன் யானை வாகனம். அபிஷேகம் முடிவதற்குள் இருட்டி விட்டதால் பிரகாரத்தை வலம் வர முடியவில்லை.

அங்கிருந்து மாயவரம் வந்து இரவு அங்கே தங்கினோம். மறுநாள் காலை மாயவரத்தின் புகழ் பெற்ற காளியாகுடி ஹோட்டலில் பொங்கலில் முந்திரி பருப்பை சேர்த்தார்களா? அல்லது முந்திரி பருப்பில் பொங்கலைச் சேர்த்தார்களா என்று நினைக்கும்படி முந்திரி நிறைந்த நெய் சொட்டும் பொங்கலோடு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம்.    

வைத்தீஸ்வரன் கோவில் என்று அறியப்படும் கோயிலின் பண்டைய பெயர் 'புள்ளிருக்கு வேளூர்' என்பதாகும். புள் என்றால் பறவை என்று பொருள். ஜடாயு(இராமாயணத்தில் வருமே அதே ஜடாயுதான்), ரிக் வேதம், மற்றும் நவக்ரகங்களில் ஒன்றான செவ்வாய்(வேள்) இந்த மூவரும் வழிபட்ட தலம். ஜடாயுவிற்கு ராமபிரான் இங்கு கோவில் பிரகாரத்தில் உள்ள ஜடாயு குண்டம் என்னும் இடத்தில்தான் இறுதிச் சடங்குகளை செய்ததாக நம்பப் படுகிறது. 

செவ்வாய் இங்கிருக்கும் சிவபெருமானை வழிபட்டு சக்திகள் பெற்றதல் செவ்வாய்க்கு தனி சன்னிதி உள்ளது. நவக்ரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகவும் கருதப் படுகிறது. ப்ராசீனமான சிவன் கோவில்களில் நவக்ரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லாமல் இருப்பது போல இங்கும் நவக்ரக சந்நிதி கிடையாது. ஆனால் இன்று இது ஒரு செவ்வாய் பரிகார ஷேத்திர மாகிவிட்டது. சுவாமி சன்னிதியை விட செவ்வாய் சந்நிதியில் கூட்டம் அதிகம்.

சுவாமி சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கத் திரு மேனிக்கு முன்னால் ஆடி(கண்ணாடி) போன்றஒன்று பித்தளையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும். அதே போன்ற ஒன்றை திருவண்ணாமலையிலும் காணலாம். காரணம், மிகவும் சக்தி பொருந்திய வடிவாதலல் அதன் அதிர்வுகளை நம்மால் முழுமையாக தாங்க முடியாது அந்த லிங்கத் திருமேனி எதிரே வைக்கப்பட்டிருக்கும் பித்தளை ஆடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இறைவன் வைதீஸ்வரனாக, மருத்துவனாக வரும் பொழுது இறைவி அவனுக்கு உதவியாக வரும் செவிலி போல கையில் தைலப் பாத்திரம் ஏந்தி தைலாம்பாளாக வருகிறாள். 

ஒரு முனிவருக்கு மகளாக அவதரித்த அம்பாளை முதியவராக வந்த சிவ பெருமான் தனக்கு திருமணம் செய்து தர கேட்டாராம். மகளோ சிறுமி இந்த முதியவருக்கு எப்படி திருமணம் செய்து தருவது என்று முனிவர் தயங்க, இறைவன், கவலைப் படாதீர்கள் உங்கள் மகளின் இரும்பைப் போன்ற உறுதியான மாங்கல்ய பாக்கியம் என் உயிரை காப்பாற்றும் என்று கூறி அவளுக்கு இரும்பால் தாலி அணிவித்தராம். அந்த இரும்புத் தாலியே இன்றும் அம்மனை அலங்கரிக்கிறது. முன்பெல்லாம் இந்த விவரங்களை அர்ச்சகர் கூறி அம்பாளின் இரும்புத் தாலியை தரிசனம் செய்யச் சொல்வார். இப்போது அதையெல்லாம் சொல்வதில்லை. ஒரு பக்கம் சரியாக பராமரிக்கப்படாத கோவில்கள், இன்னொரு பக்கம் பக்தர்கள் வந்தாலும் அங்கு அர்ச்சகர்களின் அலட்சியம்...!  ஹூம்! 

இங்குள்ள குளத்தில் வெல்லம், உப்பு, மிளகு இவைகளை கரைத்தால் நம் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது.  அவைகளை கரைப்பவர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ யாரையும் குளத்தில் கரைக்க விடுவதில்லை. குளக்கரையில் உள்ள பெட்டியில் போட்டு விடச் சொல்கிறார்கள். வெகு அழகான குளம்,




இந்தக் கோவிலில் உள்ள செல்ல முத்துக் குமரனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். கத்திரி வெய்யலின் பொழுது அவர் இங்கே இருக்க முடியாமல் கைலாசம் சென்று விடுவதால் அப்போது முருகன்(செல்ல முத்துக் குமரன்) சந்நிதியை பூட்டி விடுவார்கள் என்றார்கள். 

வைதீஸ்வரன் கோவிலிலிருந்து சிதம்பரம் சென்று இரத்தின சபாபதி அபிஷேகம், தீபாராதனை தரிசித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இரத்தின சபாபதி என்பது சிவப்பு கல்லினால் ஆன சிறிய நடராஜ மூர்த்தம். சிதம்பரத்தில் தினமும் காலை 10:30க்கு ஸ்படிகத்தால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பிறகு, இந்த இரத்தின சபாபதிக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனையை இரத்தின சபாபதியின் முன் பக்கம் காண்பித்து விட்டு பிறகு பின் பக்கமும் காட்டுவார்கள். ரத்தினம் வழியே ஒளி ஊடுருவி செல்லும் என்பதால், பார்க்க மிக அழகாக இருக்கும்.   

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரத்தை தான் குறிக்கும். அப்படிப் பட்ட சிறப்பான பாடல் பெற்ற தலமாகிய இதனுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியும் இருப்பது ஒரு சிறப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே நேராக சிவபெருமானையும் பக்கவாட்டில் கோவிந்தராஜ பெருமாளையும் தரிசனம் செய்ய முடியும். ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு இல்லையா?

சிதம்பரம் கோவிலைப் பற்றி நிறைய விஷயங்கள் facebook, whatsaap இவைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நான் புதிதாக எழுத எதுவுமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் திருவண்ணாமலையைப் போலவே சிதம்பரமும் ஒரு முறை அங்கு சென்றால் மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது.    

Wednesday, June 1, 2016

கார்பரேட் கோவில்கள்

கார்பரேட் கோவில்கள்

ஆகம முறைப் படி இயங்கும் கோவில்களில் நாலு கால பூஜை ஒரு நியமத்தோடு நடக்கும். கோவில் திறப்பதற்கும், மூடுவதற்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு. சமயபுரம் போல சில கோவில்களில் காலையில் நடை திறந்தால் இரவுதான் நடை அடைப்பார்கள். சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் திங்கள் மற்றும் வெள்ளிதான் தரிசனம். இப்படி ஒரு முறையோடு இருக்கும். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் கோவில்கள் ஒரு அலுவலகத்தைப் போல காலை 6:00 மணிக்கு திறந்து 10:30 அல்லது 11:00க்கு மூடி விடுகிறார்கள். அதே போல மாலை 4:30 அல்லது 5:00 க்கு திறந்து 8:30 க்கு நடை அடைத்து விடுகிறார்கள்.    

சென்ற ஞாயிரன்று எங்கள் தெருவில் இருக்கும் கோவிலில் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கலாம் என்று காலை ஆறு முப்பதிற்கு சென்றேன். கோவில் திறக்கவே இல்லை. வாசலை கூட்டிக் கொண்டிருந்தவர் முதல் நாள் பௌர்ணமியாக இருந்ததால் அன்று கோவில் திறக்க சற்று நேரம் ஆகும்  ஏழரை மணிக்குத்தான் திறப்பார்கள் என்றார். 

சரி கோவிலுக்கு என்று கிளம்பி விட்டோம், கே.கே.நகர் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு வரலாம் என்று அங்கு சென்றேன். 
அங்கும் கோவில் திறக்கப் படவில்லை. கோவில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் எத்தனை மணிக்கு கோவில் திறப்பார்கள் என்று கேட்டதற்கு," தெரியாதே" என்றார். சரிதான் என்று அதே வீதியின் கோடியில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றேன். 

அங்கு சண்டே கொண்டாட்டமெல்லாம் கிடையாது போலிருக்கிறது, எப்போதும் போல் கோவிலை திறந்து வழக்கப் படி பூஜைகளை துவங்கி விட்டனர். அமைதியான சூழலில் ஐயப்பன், பகவதி, விநாயகர் இவர்களோடு புதிதாக திறந்திருக்கும் கோசாலை கிருஷ்ணன் (திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குப் பிறகு சென்னை கே.கே. நகர் ஐயப்பன் கோவிலில்தான் கோசாலை கிருஷ்ணனுக்கு தனி சன்னிதி உள்ளது. மாடு மேய்க்கும் சிறுவனாக கையில் சாட்டையோடு காட்சி அளிக்கும் கிருஷ்ணன் கொள்ளை அழகு!) இவர்கள் எல்லோரையும் தரிசனம் செய்து கொண்டு மன நிறைவோடு திரும்பினேன். 

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்கு நிலவும் அமைதி என்னை ஆச்சர்யப் படுத்தும். இங்கு வரும் அதே மக்கள்தானே மற்ற கோவில்களுக்கும் வருகிறார்கள், இங்கு அமைதியை கடை பிடிக்கும் இவர்கள் நம் ஊர் கோவிகளில் ஏன் சள சளவென்று பேசுகிறார்கள்?

நான் மீண்டும் எங்கள் தெரு கோவிலுக்கு வந்தேன். இப்பொழுது கோவிலை திறந்து விட்டார்கள்(மணி 8:00) ஆனால் உள்ளே சுத்தம் செய்து கொண்டிருந்த பூசாரி, அபிஷேகம் ஆரம்பிக்க எட்டரை மணி ஆகும். என்றார். பாலை அவரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். எனக்கு அன்றைய கொடுப்பினை அவ்வளவுதான்!

Friday, May 20, 2016

வராக நதிக்கரை ஓரம்

வராக நதிக்கரை ஓரம்

ஏப்ரல் 8,9,10 குட் ப்ரை டே ஐ ஒட்டி வந்த மூன்று விடுமுறை நாட்களில் தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்த எங்கள் சம்பந்தி எங்களையும் தங்களோடு வரச் சொன்னார்.  11ஆம் தேதி எங்களுக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், முதலில் தயங்கினோம். ஞாயிறு இரவே திரும்பி வந்து விடலாம் என்று அறிந்து கொண்ட பின் எங்களுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

எட்டாம் தேதி காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். தாம்பரம் வசந்த பவனில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மயிலம் நோக்கி சென்றோம். 

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 15 KM தொலைவில் உள்ளது மயிலம். அங்கு ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முருகன் கோவில். புராதனமான, சிறிய கோவில். கோவிலும், கோவிலைச் சார்ந்த குளமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம். 

சூர பத்மனை முருகன் போரிட்டு அழிக்க முற்பட்டபொழுது அவன் இறக்கும் தருவாயில் தன்னை முருகனின் வாகனமாக கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, முருகப் பெருமான் அவனை மயில் வடிவமெடுத்து தன்னை குறித்து தவம் செய்யும்படி கூறுகிறார்.  அதன் படி சங்கராபரணி நதி என்னும் வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த குன்றின் மீது மயில் வடிவமெடுத்து சூர பத்மன் தவம் செய்கிறான். அவன் தவத்திற்கு இறங்கி முருகப் பெருமான் அவனுக்கு காட்சி அளித்து அவனை ஏற்றுக் கொள்கிறார். தனக்கு காட்சி அளித்த கோலத்திலேயே முருகன் இங்கே எழுந்தருள வேண்டும் என்ற சூர பத்மன் வேண்டுகோளுக்கு இணங்கி முருகன் இங்கே எழுந்தருளியதாக தல வரலாறு. கர்ப்ப க்ரஹத்தில் வள்ளி, தேவ சேனையோடு நின்ற திருக் கோலத்தில் கட்சி அளிக்கும் முருகனை வணங்கினோம்.

அங்கிருந்து திருவக்கரை நோக்கி சென்றோம். திருவக்கரை என்றதும் பலருக்கும் வக்கிர காளிதான் நினைவிற்கு வரும். ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கோவில் என்னும் சிவன் கோவில்தான் பிரதானம். அங்கிருக்கும் பரிவார தேவதைகள் சந்நிதிகளில் ஒன்றுதான் வக்கிரகாளி சந்நிதி. பிரபலமான அரசியல்வாதி ஒருவர் அம்மாவாசையிலும், பௌர்ணமியிலும் யாகங்கள் செய்து பலன் அடைந்ததால், கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் வக்கிர காளியை தரிசனம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதித்த சோழனால் கட்டப்பட்ட  கிழக்கு நோக்கி அமைந்த ஏழு நிலைகளை கொண்ட புராதனமான பெரிய கோவில். இக்கோவில் பல சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் ஆவுடையாருக்கு மேல் லிங்கத் திரு மேனியாக இல்லாமல், மூன்று முகங்களோடு காட்சி அளிக்கும் சிவ பெருமானை இங்குதான் வணங்க முடியும். கிழக்கே தத் புருஷ முகம், வடக்கே வாம தேவ முகம், தெற்கே அகோர முகம். தெற்கு நோக்கி உள்ள அகோர முகத்தில் இரண்டு கோரை பற்களை பால் அபிஷேகம் செய்யும் பொழுது மட்டும் காண முடியும் என்கிறார்கள். 

அதிகாலையில் தத் புருஷ முகத்தை மஞ்சள் பூசியும், உச்சி வேளையில் வாம தேவ முகத்தை சந்தனம் பூசியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் பூசியும் வணங்க நம்மை இன்பம் சூழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

கருவறைக்கு தென் புறம் குண்டலினி முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. இங்கே  பத்து நிமிடங்களாவது அமர்ந்து தியானம் செய்ய மனம் எளிதில் ஒருமைப் படும் என்கிறார்கள். எங்களுக்குத்தான் அப்படி அமர முடியவில்லை. அடுத்த முறை முயற்சி செய்யலாம் என்று வந்து விட்டோம். 

பிரகாரத்தை வலம் வந்தால் கோஷ்டத்தில் அழகிய தக்ஷிணாமூர்த்தி, பின்புறம் மேற்கு நோக்கி ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே தனி சந்நிதியில் கருட பகவான். சிவன் கோவிலில் பெருமாள் எங்கிருந்து வந்தார் என்று தோன்றுகிறதா? அதற்கு தல புராணம் தெரிந்து கொண்டே ஆகா வேண்டும். 

வக்ராசுரன் என்னும் அசுரன் சிவா பெருமானை குறித்து கடும் தவம் இயற்றி வரம் பெறுகிறான். அந்த இறுமாப்பில் எல்லோரையும்  துன்புறுத்த, அவர்கள் அவனை அழித்து, தங்களை காக்க வேண்டும் என்று சிவ பெருமானிடம் சென்று வேண்டுகிறார்கள். தன்னிடம் வரம் பெற்றவனை தானே அழிக்க முடியாது என்று கூறிய சிவபெருமான், வக்கிராசுரனை அழிக்கும் பணியை திருமாலிடம் ஒப்படைக்கிறார். அதன் படி தன் 
சக்ராயுதத்தால் அவனை அழிக்கிறார் பெருமாள்.  அதனால்தான் இங்கு பெருமாள் பிரயோக சக்கிரத்தோடு காட்சி அளிக்கிறார். 

வக்ராசுரனின் சகோதரியான துர்முகி என்பவளும் தேவர்களுக்கு தொல்லை தந்ததால் அவளை அழிக்கும் பொறுப்பை பார்வதி தேவியிடம் ஒப்படைக்கிறார் சிவன். அந்த சமயத்தில் துர்முகி கர்ப்பமாக இருக்கிறாள், கர்ப்பிணியை  கொல்லக் கூடாது என்பதால் பார்வதி தேவி கற்பதில் இருந்த சிசுவை எடுத்து தன காதில் குண்டலமாக அணிந்து கொண்டு துர்முகியை அழிக்கிறாள். பின்னர் அதே கோலத்தில் வக்கிர காளியாக இங்கே குடி கொண்டு பக்தர்களுக்கு அருளுகிறாள்.

தலையில் தீச்சுடரும், கபால ஓடும் க்ரீடமாகவும், வலது காதில்  
சிசுவை குண்டலமாக அணிந்து கொண்டு, வலது புறம் இருக்கும் நான்கு கரங்களில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, முதலியவை கொண்டு இடது புறம் இருக்கும் கரங்களில் மூன்றில் உடுக்கை, கேடயம், கபாலம் தாங்கி நான்காவது கரத்தில் எல்லா விரல்களையும் மடக்கி ஆள் காட்டி விரலை மட்டும் நிலத்தை நோக்கி நீட்டியபடி ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை தொங்க விட்டபடியும் அமர்ந்திருக்கிறாள்.

அமாவாசை அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கும், பௌர்ணமி அன்று இரவு பன்னிரண்டு மணிக்கும் வக்கிர காளியின் கோபுரத்தின் மேல் ஐந்து கிலோ கற்பூரம் ஏற்றப்படுமாம் அந்த ஜோதி தரிசனத்தை காண்பது சிறப்பு என்கிறார்கள். மேலும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் இங்கு வந்து வக்கிர காளியை தரிசிப்பது அந்த தோஷத்தை போக்குமாம். 

வடிவுடை அம்மன் தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறாள்.

இந்த கோவிலின் பிற சிறப்புகள், நவகிரக சந்நிதியில் உள்ள சனி பகவானின் வாகனமான காக்கை எல்லா கோவில்களிலும் போல் இல்லாமல் தென் புறம் திரும்பி உள்ளது. அதே போல நடராஜரும் கால் மாற்றி ஆடுகிறார். மேலும் சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் சிவ லிங்கம், நந்தி, கொடி மரம் இவை எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும், ஆனால் இங்கு அப்படி இல்லாமல் அவையும் வக்கிரமாகத்தான் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலை தரிசிக்க கிடைத்தது பாக்கியம்தான்!

-தொடர்ச்சிக்கு காத்திருக்கவும் 

Sunday, May 1, 2016

திக் திக் நிமிடங்கள்!

திக் திக் நிமிடங்கள்!

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. *நேற்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

நேற்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 
"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது,
இன்னொரு பக்கமோ வியர்வை தங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 
என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர்வீட்டுகாரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீடு ரதி உதவ முன் வந்தார். 
"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு அருகேதான் இருக்கு என்று கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."
"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"
எதிர் வீடு நவநீதாவின் ஆலோசனை. 
"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".
போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!
இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.
ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னல் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 
"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"
"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 
வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

last but not the least இக்கட்டான நேரத்தில் பதட்டப் படாமல் உதவிய ரதி தேவதாசுக்கும், நவநீதா ராமசாமிக்கும் என் நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்!

*இது ஒரு மீள் பதிவு, எனவே நேற்று என்பது நான்கு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு.

Tuesday, April 26, 2016

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

நான் சுகம், நீ சுகமானு 
நாலுவரி எழுதேன்னு நச்சரிக்கும் அம்மாவுக்கு
நாளைக்குத்தான் எழுதணும் இன்று  
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது!

அடுத்த வீட்டு அக்காவுக்கு அறுவை சிகிச்சை 
ஆச்சுதாம், ஆதரவாய் பார்த்து பேச 
ஆகவில்லை இன்னோமும் 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது!

கையில்எடுத்த சோறு காஞ்சு போன பின்னாலும் 
வாய் போய் சேரவில்லை வாய்க்கு ருசி ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது 

வீட்டினுள் பேச்சில்லை, வீதியில் உறவில்லை 
கலகலக்கும் விளையாட்டு, கைவேலை ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது.



Wednesday, April 20, 2016

Morning Marina

MORNING MARINA


"ஞாயிரு காலை பீச்சுக்கு போகலாமா"? என்றேன், வெளியே செல்வதில் அதிக விருப்பம் கொண்ட என் கணவர் உடனே ஆமோதித்தார். காலை ஐந்து முப்பதுக்கு பீச்சில் இருந்தால் உதய சூரியனை, சீ சீ சூரிய உதயத்தை காணலாம். அப்படியே பிள்ளையார் சதுர்த்தி அன்று வாங்கிய பிள்ளையாரையும் கடலில் விசர்ஜனம் செய்து விடலாம். ஒ.கே. டன்! என்று முடிவு செய்தோம். எங்களோடு பெண், மாப்பிளையும் சேர்ந்து கொண்டார்கள். பிறகு என்ன, காலையில் பீச், பிறகு கற்பகாம்பாள் கோவில், பிறகு சரவண பவனில் சிற்றுண்டி.. என்று திட்டம் போட்டு கொண்டோம்.

எல்லோரையும் போலவே எனக்கும் கடலை பார்க்க பிடிக்கும். கடலோ,மலையோ அந்த பிரம்மாண்டத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றும். கடலை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஏதோ ஒன்றிர்க்கு கட்டுப்பட்டு கடல் தன் எல்லையை மீறாமல் இருக்கிறது. அது மீறினால்..? சீறினால்..? ஒரு முறை சீறியதை பார்த்தோமே.! 

திருச்சியில் வசித்த வரை விடுமுறையில் போர் அடிக்கும் பொழுதெல்லாம், "மெட்ராசில் இருந்தால் பீச்சுக்காவது போகலாம், இங்கு எதுவும் இல்லை" என்று கூறுவோம். எங்களுக்கெல்லாம் அப்போது  மெட்ராசில் இருக்கும் அத்தனை பேரும் தினசரி பீச்சுக்கு செல்வார்கள் என்றுஒரு நினைப்பு .  இதைத் தவிர லா.ச. ரா. அவர்கள் தன்னுடைய சிந்தாமணி என்னும் நூலில் இரவில் பீச்சில்  அமர்ந்து கொண்டு  க.நா.சு., புதுமை பித்தன்,ந.பிச்சமூர்த்தி போன்ற மணிக் கொடி இலக்கிய ஜாம்பவான்கள் நடத்திய இலக்கிய பரிவர்த்தனை பற்றியும், என் அபிமான எழுத்தாளராகிய இந்துமதி தன் நண்பர்களான மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களோடு தான் நடத்திய இலக்கிய விவாதங்களைப் பற்றியும் படித்த பிறகு என் பீச் ஆசை அளவு கடந்து போனது. ஆனால் இங்கு வந்த பிறகு நிதர்சனம் வேறு மாதிரி இருக்கிறது. 

சென்னையில் செட்டில் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன, இது வரை பதிமூன்று முறை பீச்சுக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகம்.ஆரம்பத்தில் சில முறை மாலையில் கடற்கரைக்குச் சென்றோம். அது கடற்கரையாக இல்லை. நடக்க முடியாமல் கடைகள், கடற்காற்றை அனுபவிக்கலாம்.. உணவகங்களிலிருந்து வரும் எண்ணை கமறல் வாசம் + மீன் பஜ்ஜி வாசத்தையும் சகித்துக் கொண்டு... குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால் கையேடு ஒரு குடை எடுத்துச் செல்வது நலம், அப்போதுதான் பொது இடம் என்று கூட தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்பவர்களை உங்கள் குழந்தைகள் கண்ணில் படாமல் மறைக்க முடியும். ஆகவே இப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்வதென்றால் காலையில்தான் செல்கிறோம். 

எங்களைப் போல நிறைய பேர்கள் கலையில் வருகிறார்கள் என்பது அங்கு போகும் பொழுதுதான் தெரிகிறது. வாக்கிங் செல்லவும், உடற் பயிற்சி செய்யவும், விளையாடவும், குடும்பத்தோடு பொழுதை செலவிடவும், கை கோர்த்து நின்றபடி சிரிக்கவும்(லாபிங் கிளப்), பறவைகளுக்கு உணவிடவும், மூலிகை சாறு பருகவும்  பலர் வருகிறார்கள். பஜ்ஜி கடை மட்டும் வந்து விடக் கூடாது.