கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 20, 2025

இழந்த பொக்கிஷங்கள்

 இழந்த பொக்கிஷங்கள்


இதைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கிணறு,  ஜட்கா வண்டி ,எனப்படும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பயணங்களை.

அப்போதெல்லாம் தனி வீடுகள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்  கிணறு இருக்கும். அந்த கிணற்றில் நீர் இரைத்துதான் குளிக்க, குடிக்க, சமைக்க என்று எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்துவோம். கிணற்றுக்கு அருகில் நெல்லி மரம் இருந்தால் அந்த கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

கிணற்றடியில்தான் வீட்டு வேலை செய்பவர் பாத்திரங்களை துலக்குவார்.  கோடையிலும், வாடையிலும் குளிக்க இதமாக இருக்கும் கிணற்று நீரை இரைத்து குளிப்பது அலாதி சுகம்.

பாரதி ஆசைப்பட்டது போல எங்கள் வீட்டு கிணற்றுக்கு அருகில் தென்னை மரம் உண்டு, வளர்பிறை நாட்களில் நல்ல முத்துச் சுடர் போல நிலா ஒளி கிணற்று நீரில் பிரதிபலிக்கும்.

கிணறு இருந்தால் அதில் தவறுதலாக சாமான்கள் விழுவது சகஜம். அதை எடுப்பதற்கு பாதாள கரண்டி என்று ஒன்று உண்டு. அது யார் வீட்டில் இருக்கிறதோ அவர்களிடம் போய் கேட்டால் நம் வீட்டிலிருந்து ஒரு சாமானை வாங்கி வைத்துக் கொண்டுதான் பாதாள கரண்டியைத் தருவார்கள். அப்போதுதான் மறக்காமல் திருப்பித் தருவோமாம்.

இப்போது  வாஸ்துவிற்காக மீன் தொட்டி வைக்கச் சொல்கிறார்கள். அப்போது கிணறு அந்தப் பணியாற்றியது. இப்போது தனி வீடுகளில் கூட கிணறு இல்லை. பம்பு செட்தான். Gone are those days.

குதிரை வண்டி, மாட்டு வண்டி:



எழுபதுகளின் ஆரம்பம் வரையில் குதிரை வண்டிகள் இருந்தன. பழனியில் மட்டும் சமீப காலம் வரை குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. 'குதிரை கிச்சா' கதையில் சுஜாதா எழுதியது போல குதிரை வண்டி ஸ்டாண்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த இடத்திற்கென்று பிரத்யேகமான வாசனை உண்டு. திருச்சி உறையூரில் நாங்கள் இருந்த பொழுது அழகிரி என்பவர்தான் எங்கள் ஆஸ்தான குதிரை வண்டிக்காரர்.


பிள்ளையார் சதுர்த்தி,தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் செல்லவும், பாட்டியை குஜிலித் தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அழகிரியின் குதிரை வண்டிதான். கூலி எட்டணாவோ, பத்தனாவோ. அதை வண்டிச் சத்தம் என்பார்கள். அது என்ன பாஷை?

சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? இப்போது இருக்கும் டிராஃபிக்கில் குதிரை வண்டிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்களுக்கிடையே குதிரை வண்டி.. நினைத்துப் பாருங்கள். இத்தனை ஆட்டோ மொபைல்களை பார்த்து குதிரை மிரளலாம், அல்லது குதிரையைப் பார்த்து டூ வீலர் குமரி மிரளலாம். அவளுடைய போனி டெய்லை புல் என்று நினைத்து குதிரை இழுத்து விட்டால் முடிந்தது கதை. எனிவே போன ஜட்கா வண்டி திரும்ப வரப்போவதில்லை.

விடுமுறைக்கு கிராமத்திற்கு போகும் பொழுதெல்லாம் மாட்டு வண்டியில் நிறைய பயணித்திருக்கிறோம். எங்கள் வீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மோழை மாடுகள் என்னும் கொம்பில்லா மாடுகள் நிறைய உண்டு. வில் வண்டி, மொட்டை வண்டி எனப்படும் மேற் கூரையில்லாத வண்டி இரண்டுமே இருந்தன. அந்த மொட்டை வண்டியின் மீது வளைவான கூரையை பொறுத்தி விட்டால் அது கூண்டு வண்டியாகி விடும். நிறைய பேர் சாமான்களோடு பயணிக்கலாம். பெரும்பாலும் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்திற்கு வருவதற்கு கூண்டு வண்டிதான். அது உயரமாக ஏறுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் ஒரு நாற்காலியை போட்டு ஏறச் சொல்வார்கள். வைக்கோல் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் விரித்து மெத்தென்று உட்காரும்படி செய்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் வில் வண்டியின் கெத்து வருமா? வில் வண்டி வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தான விஷயம். எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்தான் வில் வண்டி இருந்தது. அதில் ஒன்று எங்கள் மாமா வீடு. எங்களுடைய இரண்டாவது மாமாவுக்கு மாடுகள், வண்டிகள் இவற்றில் அதிக ஈடுபாடு. மாடுகளையும், வண்டியையும் விதம் விதமாக அலங்கரிப்பார். வில் வண்டியில் உட்கார மெத்தை, தலை இடிக்காமல் இருக்க குஷன் எல்லாம் இருக்கும். அதில் கடைசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கம்பியை லாக் செய்து கொண்டு,காலை தொங்க போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து வர ரொம்ப ஆசை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பது துர்லபம்.முன்பாரம், பின்பாரம் என்றெல்லாம் சொல்லி எங்களை(குழந்தைகளை) நடுவில் தள்ளி விட்டு விடுவார்கள். ஒரே ஒரு முறை வண்டி ஓட்டுனருக்கு அருகில் முன்னால் உட்காரும் சான்ஸ் கிடைத்தது. காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கேயாவது மாடு சாணம் போட்டு பாவாடையை நாசமாக்கிவிடப் போகிறதே என்று பயமாக இருந்தது. அப்படிப்பட்ட பயத்திற்கெல்லாம் இப்போது இடமில்லை. கிராமங்களில் கூட எந்த வீட்டிலும் மாட்டு வண்டிகள் இல்லை. அதன் இடங்களை டிராக்டர்களும், கார்களும் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள் என்னவாயின?

Friday, March 14, 2025

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

சென்னையில்  ஒரு சிவன் கோவில் இருக்கிறது, நரம்பு, எலும்பு வியாதிகளுக்கு அங்கிருக்கும் சிவனை வழிபடுவது நல்லது என்று யாரோ எங்கள் கேரள விருந்தினருக்கு கூறினார்களாம், எனவே அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவர் குறிப்பிடும் கோவில் கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்ற இடத்தில்தான்  இருக்கிறது, நந்திவரம், நந்தீஸ்வரர் கோவில் என்று என் அக்கா பையன் கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் அவருக்கு கோவில் பற்றிய விவரங்கள் தெரியும். 

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியில் மெயின் ரோடிலிருந்து இடதுபுறம் நந்திவரம் என்று பெயர்ப்பலகை தென்படுகிறது, அந்தப் பாதையில் உள்ளே சென்றால், சிறிது தூரத்திலேயே நந்தீஸ்வரம் கோவிலை அடைந்து விடலாம்.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற அரசன் பெயரால் 'நந்திவரம்' என்று அழைக்கப்பட்ட ஊர். வெகுகாலம் அப்படித்தான் அழைக்கப்பட்டதாம். கூடுவாஞ்சேரி இதன் பக்கத்து கிராமம். ஆனால் காலப்போக்கில் கூடுவாஞ்சேரியின் ஒரு பகுதியாக நந்திவரம் மாறிப் போனது இந்தப்பகுதி மக்களுக்கு ஒரு குறைதானாம். 

கோவிலுக்குள் செல்லலாம், மிகப்பெரிய கோவிலும் இல்லை, மிகச்சிறிய கோவில் என்றும் கூறிவிட முடியாது. சாதாரணமாக கிராமங்களில் இருக்கும் ஆலயங்கள் போல இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

கிழக்கு பார்த்த லிங்கத் திருமேனி, அம்பாள் தெற்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறாள். செளந்தர்யநாயகி என்னும் பெயருக்கேற்றார் போல் அழகாக நம் மனதை கவர்கிறாள். 

பிரகாரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதி கொண்டருளுகிறார். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பின்பக்கம் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சூரிய பகவானுக்கு தனி சன்னதி. அந்த கோபுரத்தில் தேரில் சூரிய பகவானின் அழகான சிற்பம். சூரியனுடன் தேருக்கு ஒற்றைச் சக்கரம்தான் என்பார்கள், அதை அழகுற வடித்திருக்கிறார்கள். 


முன் பகுதியில் நாகலிங்க மரத்தடியில் ஒரு நந்தி இருக்கிறது. கோவில் திருப்பணிக்காக தோண்டிய பொழுது கிடைத்ததாம். நல்ல நிலையில் இருந்ததால் வெளியே வைத்து விட்டார்களாம். அதையும் வழிபடுகிறார்கள். அதற்கு பின்பக்க சுவரில் சித்தர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகலிங்க மரத்தடியிலும், அதை ஒட்டி இருக்கும் சிமெண்ட் பெஞ்சிலும் சிலர் அமர்ந்து ஜபம், தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப்பக்கம் செல்லும் பொழுது அவசியம் சென்று தரிசியுங்கள். அர்ச்சகர் நன்றாக விளக்கங்கள் சொல்கிறார்.

கோவிலுக்கு எதிரே ஒரு ஏரி இருக்கிறது. ஊரப்பாக்கம் உட்பட இந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு பயன் படுமாம். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களில் எத்தனை ஏரிகள்! இன்று எல்லாவற்றையும் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டு, தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம்.  

தல வரலாறு(அர்ச்சகர் கூறியது):

இந்த ஊரில் மாடுகள் வைத்திருந்த ஒரு இடையர் அவருடைய ஒரு காராம்பசு, தினசரி ஒரு இடத்தில் பால் சொரிவதை கண்டு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்த இடத்தை தோண்ட, சிவலிங்கம் புலப்படுகிறது. அதை எடுத்து வழிபடுகிறார்கள். பின்னர் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோவில் கட்ட உதவி, நிவந்தங்களும் அளித்திருக்கிறார்.

ஒரு முறை மூலவரான சிவலிங்கம் பிளந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி அளித்ததால், பின்னமான லிங்கத்தை வைக்கக்கூடாது என்னும் மரபை மீறி அதை இணைத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதனால் திருமணத்தடை நீங்கவும்,ஸ குடும்ப ஒற்றுமைக்கும் வழிபடலாம்.


அப்பர் பெருமான் நந்திவரத்தை தாண்டிச் சென்ற பொழுது அவருக்கு, மூட்டு வலி இருந்ததால் ஊருக்குள் நடந்து வந்து சிவபெருமானை வணங்க முடியவில்லை, தொலைவில் இருந்தபடியே மனதால் சிவனை நினைத்து வணங்கினாராம். அதனால் இது வைப்புத்தலம் எனப்படுகிறது. அப்போது அவர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோயைகள் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டாராம், அதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அப்பர் பெருமானின் பாடல்:

 




Friday, March 7, 2025

சென்னை டைரி - 3

சென்னை டைரி - 3

சென்ற மாதம் என் அக்காவின் பேரனுக்கு பூணூல் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். அது முடிந்ததும் பெங்களூர் திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 17,18 தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி சென்னை விஜயம் என்பதால் பெங்களூர் திரும்புதலை ஒத்தி போட்டேன். 

அமிர்தானந்தமயி மடத்தில் இருக்கும் ஒரு பெண்மணி அம்மா எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் செல்வாராம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் முக்கியமான கோவில்களுக்குச் செல்வாராம். அதுவும் பிராசீனமான கோவில்கள்தான் அவருடைய விருப்பம். இந்த முறை சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் சிலவற்றை பார்க்க விரும்பினார். அவரை அந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என் பெரிய அக்காவின் பெண் ஏற்றுக் கொண்டாள். அவர்களோடு கைடு போல நானும் சென்றேன். 

முதலில் அவரை திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவ பெருமான் காட்சி தந்த இடம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிலா ரூபத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளிக்கிறார்கள். திருமணத் தடை நீக்கும் ஆலயம்.*

அங்கிருந்து திருவேற்காடு சென்று அம்மனை தரிசித்தோம். கோவிலில் நிறைய மாற்றங்கள். கருவறை என்னும் அமைப்பே இல்லை. நிறைய கும்பல் வருவதால் எல்லோரும் தரிசிக்க ஏதுவாக இருக்கலாம்,ஆனால் இதை ஆகம விதிகள் அனுமதிக்கிறதா என்று தெரியவில்லை.  

அங்கிருந்து மாங்காடு சென்றோம்.  கோவில் நடை அடைக்கும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவூரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரியது, கஜ பிருஷ்ட விமானம் போன்ற விஷயங்களை கேரள விருந்தினரிடம் சொல்லியிருந்ததால் அங்கு செல்ல விரும்பினார், ஆனால் நேரமில்லாமல் போய் விட்டது. 

அடுத்த நாள் சென்ற கோவில்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

*வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவாக எழுதியிருக்கிறேன் அதன் சுட்டி: https://thambattam.blogspot.com/2018/01/blog-post_29.html?m=1


   




Monday, February 24, 2025

செளதடுகா கணபதி

செளதடுகா கணபதி

ஜனவரி 25, 26 தேதிகளில் குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா சென்று வரலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். 

வீட்டில் செய்த தக்காளி தொக்கை பிரட்டில் தடவி காலை உணவிற்காக எடுத்துக் கொண்டோம். அதை காரிலேயே சாப்பிட்டோம். வழியில் MTRல் காபி மட்டும் குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி சுகமான பயணம். 

எங்கள் பிரயாணத்தைப் பற்றி எங்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியிடம் சொன்ன பொழுது, "குக்கே சுப்ரமண்யாவிற்கும், தர்மஸ்தலாவிற்கும் இடையில் ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அங்கு கணபதி கட்டிடம் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில்தான் இருப்பார். மிகவும் சக்தி வாய்ந்தவர், அவரையும் தரிசனம் செய்துவி்ட்டு வாருங்கள்" என்றாள். ஆனால் அவளுக்கு அந்த இடத்தின் பெயர் சொல்லத் தெரியவில்லை. 

குக்கேயிலிருந்து தர்மஸ்தலா வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது மாலையில் மத்யமர் சகோதரி உமா மூர்த்தி கைபேசியில் அழைத்தார். 

நாங்கள் தர்மஸ்தலாவில் தங்கியிருப்பதை சொன்னதும், " தர்மஸ்தலாவில் இருக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து செளதடுக்கா கணபதி கோவிலுக்கு அவசியம் செல்லுங்கள்" என்று கூறியதோடு, கோவில் பற்றிய விவரங்கள், செல்லும் வழி எல்லாவற்றையும் விவரமாக சொன்னார். எங்கள் பணிப்பெண் குறிப்பிட்டு, நாங்கள் செல்ல விரும்பிய கோவில் அதுதான். விநாயகரே உமா மூர்த்தி மூலம் விவரங்கள் சொல்லியிருக்கிறார் என்று தோன்றியது. 

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி கோவிலில் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக தரிசனம் கிடைத்தது. அங்கிருக்கும் அம்மனின் நாமம் கன்யாகுமரி என்பது ஆச்சர்யமாக இருந்தது. அம்மனுக்கு இருபுறமும் தர்ம தேவதைகளாம்.

மறுநாள் காலை செளதடுகா கணபதியை தரிசிக்கச் சென்றோம். ஒரு தோப்பில் வானமே கூறையாக அமர்ந்திருக்கிறார். கோவிலாக கட்ட முயன்ற பொழுதெல்லாம் கட்ட முடியாமல் தடை வந்ததால் அப்படியே விட்டு விட்டார்களாம். திருச்சி உறையூர் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது. 





ஒரு மேடையில் விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். இரண்டு பக்கங்களிலும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். அர்ச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம், தரிசனம் மட்டும் செய்பவர்கள் ஒரு பக்கம் விடுகிறார்கள். அந்த கம்பிகளில் வெவ்வேறு அளவுகளில் மணிகள் கட்டப்பட்டு அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

இந்தக் கோவிலின் சிறப்பு இது. தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நேர்ந்து கொள்ளும் பக்தர்கள், அவை நிறைவேறியதும் மணியை இந்த கோவிலில் கட்டுவார்களாம். அதற்காக பல்வேறு சைசில் மணிகள் இங்கிருக்கும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு அங்கு பிரசாதமாக வழங்கப்படும் வெல்ல அவல். பெரிய பாத்திரத்தில் கொண்டு வைத்து நைவேத்தியம் செய்த பிறகு எல்லோருக்கும் ஒரு பையில் அள்ளி,அள்ளி போட்டுக் தருகிறார்கள். இந்த மாதிரி ஒரு வெல்ல அவல் வேறு எங்கேயும் சுவைக்க கிடைக்காது. நாம் வீடுகளில் வெல்ல அவல் போல பிசுக்கென்று கையில் ஒட்டாமல், வேற லெவல் டேஸ்ட்!

இங்கு வெள்ளரிக்காயும் விசேஷமான நைவேத்தியமாம். இங்கிருக்கும் விவசாயிகள் தங்கள் கொல்லைகளில் விளையும் வெள்ளரிக் காய்களை இந்த விநாயகருக்கு படைப்பார்களாம். 

எதிரிகளால் அழிக்கப்பட்ட கோவிலில் இருந்த விநாயகர் விக்கிரகத்தை இடையர்கள் எடுத்துச் சென்று, வெள்ளரிக்காய்கள் விளையும் வயல்காட்டின் நடுவில் இருந்த புல்வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்கள். பின்னாளில் ஆலயம் கட்ட முயன்றபொழுது தடைகள், விநாயகரே சம்பந்தப்பட்டவர்கள் கனவில் தோன்றி தான் வெட்டவெளியில் இருப்பதையே விரும்புவதாக கூற அப்படியே விட்டு விட்டார்கள். கன்னடத்தில் 'செள' என்றால் வெள்ளரிக்காய் என்றும், 'தடுகா' என்றால் புல்வெளி என்றும் பொருளாம், அதனால்தான் இவர் செளதடுகா கணபதி. 

தர்மஸ்தலாவிலிருந்து குக்கே சுப்ரமண்யா செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. காரில் சென்றால் அரைமணிக்கும் குறைவான நேரம்தான் ஆகும். அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால் தவற விடாதீர்கள்.


Thursday, February 20, 2025

சென்னை டயரி - 2

சென்னை டயரி - 2

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கைக்காக பிராது கட்டிவிட்டு வந்தேன். அந்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கி, சுவாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வர வேண்டும் என்பது முறை. அதற்காக13.2.25 வியாழனன்று  விருத்தாசலம் சென்றேன். 



என்னோடு என் பெரிய அக்காவின் பெண்ணும், கடைசி அக்காவும் வந்தார்கள். ஆறு மணிக்கு வீட்டை விட்டோம். வழியில் நல்ல மூடுபனி. சென்னை திருச்சி ஹைவேயில் Only Coffee உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். அங்கு பொங்கலும், வடையும் நன்றாக இருக்கும், of course Coffee too.  சிற்றுண்டியைத் தவிர ஆர்கானிக் உணவுப் பொருட்கள், காட்டன் புடவைகள்,பெட் ஷீட்டுகள் போன்றவையும் விற்பனைக்கு இருக்கிறது. சாலையின் எதிர் புறத்தில் இதன் கிளை இருக்கிறது.


முதலில் விருத்தாசலம் பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்குச் சென்றோம். இங்குதான் சுந்தரர் பதிகம் பாடி பரவை நாச்சியாருக்காக பொன் பெற்று அதை இங்கிருக்கும் மணிமுத்தா நதியில் இட்டு, அதை திருவாரூரில் இருக்கும் குளத்தில் எடுத்துக் கொண்டார். அதை ஒட்டியே *'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' எனினும் பழமொழி வந்தது. 


அங்கிருக்கும் ஆழத்து விநாயகர் சன்னதி தனி கோவில் போல தனியாக கொடிமரத்தோடு இருக்கிறது. விநாயகருக்கான ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. அவரைத் தொழுது விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகையையும் வணங்கி கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்றோம். 


அங்கு நம் வேண்டுதல் நிறைவேறி விட்டால், பிராது வாபஸ் பெற வேண்டும். அதற்காக ரூ200/- கட்டினால் ஒரு form தருகிறார்கள். அதை கொளஞ்சி யப்பருக்கு முன்னால் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் அந்த சீட்டை முனீஸ்வரர் சன்னதிக்கு முன் இருக்கும் பிராது கட்ட வேண்டிய மரத்தின் அடியில் கிழித்து போட்டுவிடச் சொல்கிறார்கள். நான் சென்ற முறை சென்றபோது அங்கிருக்கும் சுதை சிற்பங்கள் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுஜொலித்தன, இப்போது அந்த வண்ணங்கள் உதிர்ந்து விட்டன. அதைப்போல சென்ற முறை சென்றபோது கப்பும் கிளையுமாக செழிப்பாக இருந்த மரத்தின் கிளைகளை கழித்து விட்டிருக்கிறார்கள். 


அங்கிருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் அரபிந்தோ,அன்னை அஸ்ரமம் மற்றும் மணக்குள சென்று வணங்கி விட்டு வீடு திரும்பினோம். வழியில் Only Coffee ல் மசாலா பால் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.  வீடு வந்து சேரும் பொழுது இரவு 8:30.

*'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' என்னும் பழமொழிக்கான விளக்கம் குறித்த என்னுடைய யூ ட்யூப் லிங்க்

https://youtu.be/hkeTKz85fqA?si=NLysRULJro1g62e8





Saturday, February 15, 2025

சென்னை டயரி

சென்னை டயரி

நீ...ண்...ட நாட்களுக்குப் பிறகு மெரீனா பீச் விஜயம். பேத்திக்கு பீச் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

நான் மாலை நேரத்தில் கடற்கரைக்கு செல்வதைவிட, காலை நேரத்தில் செல்லவே விரும்புவேன். மாலை நேரத்தில்  கும்பல், பஜ்ஜி கடைகளின் எண்ணெய் வாசம் இல்லாத கடற்கரையை அப்போதுதான் ரசிக்க முடியும். 

எனக்கு புகைப்படத்திற்கு சிரிக்கவே வராது

நாங்கள் பீச்சுக்கு கிளம்பிய பொழுது காலை 5:45. சூரிய உதயம் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு என் அக்காவின் மாப்பிள்ளை,"போகும் வழியில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார். :))

பீச்சில் ஏகப்பட்ட வண்டிகள், பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏகப்பட்ட காக்கைகள் "பெங்களூரில் புறாக்கள்தான்" என்று நான் சொன்னதும், "சென்னையில் மட்டும் என்னவாம்?" என்றார்கள். 

காக்கை கூட்டத்தை தாண்டியதும், கூட்டமாக சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தனித் தனியாக ஒவ்வொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். புக் க்ளப்பாம். இப்படிப்பட்ட புக் கிளப்புகள் பெங்களூரிலும் உண்டு லால் பாக், கப்பன் பாக்கில் இப்படி படிப்பார்கள் என்றான் என் மகன்.

கடலுக்குச் சென்றோம். சற்று முன்பு உதயமாகியிருந்த சூரியன், பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் போன்றிருந்தது, அதன் கிரணங்கள் பட்ட நீர் தங்கப் பாளமாய் ஜொலித்தது. 

கடலில் கால் நனைத்த பிறகு மணலில் வீடு கட்டினோம். அக்காவின் பேத்தியும், என் பேத்தியும் குதிரை சவாரி போனார்கள். பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, இருந்த பசியில் காம்ப்ளி மெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டை ஒரு கட்டு கட்டினோம்.

தை பூசத்திற்கு அடுத்த நாள் மாலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். அன்றைக்குத்தான் அங்கு தெப்பம் என்பது தெரிந்தது. தெப்பம் புறப்பட அதிக நேரம் ஆகும் என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.




காலையில் அக்கா பேரனின் பூணூல், அதே நாள் தோழியின் மகனுக்குத் திருமணம்.  மாலையில் திருமண ரிசப்ஷனுக்குச் சென்றோம். ஆனால் அங்கு நான் ஒரு சமோசா சாப்பிட்டேன்,  என் அக்கா அதுவும் சாப்பிடவில்லை. 


ரிசப்ஷனில் DJ, முதலில் மெலடிகளை  இசைக்க விட்டார்கள். கேட்க சுகமாக இருந்தது. அப்புறம் போட்டார்கள் பாருங்கள் 'டங்கர டங்கர' என்று இரைச்சல் பாடல்கள். காதை பொத்திக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டோம். இதய நோயாளிகள் யாராவது இருந்திருந்தால் அபாயம்தான்.


நடுவில் ஒரு நாள் பாண்டி பஜார் சென்றேன். அங்கு நாயுடு ஹாலில் தரை தளத்தில் வெயிட்டிங் ஏரியாவில் கேரம் போர்ட், செஸ் போன்றவை வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தில் விளையாடலாம் போல. Good idea! கீழே வரைந்திருப்பது ஏரோபிளேன் பாண்டியா? அதற்கு சில்லாங்காய் தருவார்களா?





Tuesday, January 28, 2025

பத்மினி(மலையாளம்) திரை விமர்சனம்

பத்மினி(மலையாளம்)

 


அன்று நெட்ஃப்லெக்ஸில் ப்ரௌஸ் பண்ணிய பொழுது ‘பத்மினி’ என்ற படம் கண்ணில் பட்டது. 2023ல் வந்த் படம். அதில் அபர்ணா முரளி இருப்பதை பார்த்ததும் பார்க்க முடிவு செய்தேன்.

ரமேஷன்(குஞ்சாக்கோ போபன்) என்னும் மொழியாசிரியருக்கு திருமணமாகிறது. முதலிரவில் தன்னுடைய கவிதைகளை மனைவிக்கு வாசித்துக் காட்டுகிறான். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, ஜன்னலருக்கருகில் நிற்கும் மனைவி நிலவொளியை ரசித்து, அந்த நிலவொளியில் ஒரு வாக் போகலாமா? என்று கேட்க, இருவரும் வெளியே வந்து நடக்கிறார்கள். சற்று தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சத்தை பாய்ச்சியபடி ஒரு பிரீமியர் பத்மினி கார் நிற்கிறது.

இந்த நேரத்தில் யார் இது? என்று அவன் குழம்ப, அவன்தான் தன்னுடைய காதலன், தங்கள் காதலை தன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் தனக்கு வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறி காதலனோடு அவள் பிரீமியர் பத்மினி காரில் ஏறி சென்று விடுகிறாள். அவன் திகைத்து நிற்க, அதை இரண்டு பேர் பார்த்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த ஊரில் அவனை பத்மினி என்று அழைத்து கலாய்க்கிறார்கள்.

இந்த சமயத்தில் அவனுடைய கல்லூரிக்கு பத்மினி என்ற பெயரில் ஒரு ஆசிரியை(மடோனா செபாஸ்டியன்) வருகிறார். ரமேஷனுக்கும், பத்மினிக்குமிடையே காதல் அரும்புகிறது. அவளை பெண் கேட்டுச் செல்லும்போது அவளுடைய தாய் மாமன், “எல்லாம் சரி, நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருவது நல்லது, பின்னால் பிரச்சனைகள் வராது” என்று கூற விவாகரத்து வாங்க வக்கீல் ஸ்ரீதேவியை (அபர்ணா பாலமுரளி) அணுகுகிறார். ஸ்ரீதேவிக்கு அப்போதுதான் மிகவும் மெட்டீரியலிஸ்டான பிசினெஸ்மேனும், சந்தேகப்பிராணியுமான ஜெயனோடு(ஸாஜின் செருகாயில்) திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

விவாகரத்து கேஸை விசாரிக்கும் நீதிபதி, ரமேஷனின் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட, ரமேஷனும், ஸ்ரீதேவியும் ரமேஷனின் மனைவி சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து, அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஓடிவந்த காதலனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஸ்மிருதி, கதவைத் திறந்து, வாசலில் நிற்கும் ரமேஷனைப் பார்த்ததும், “பார்த்தாயா, என்னை அழைத்துச் செல்ல, என் ரமேஷன் வந்து விட்டான்” எங்கிறாள். அதன் பிறகு என்ன ஆனது? ரமேஷனுக்கு அவளிடமிருந்து விவாகரத்து கிடைத்ததா? என்பது மீதி கதை.

படம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் செல்கிறது. அபர்ணா பாலமுரளியும், மடோனா செபாஸ்டியனும் கச்சிதம். அபர்ணா தோற்றத்திலும் கச்சிதமாக இருந்தால் நன்றாக இருக்கும். ரமேஷனின் நண்பனாக வருபவரும், சாஜின் செருகாயிலும் சிறப்பு! குஞ்சாக்கோ போபன் அதிர்ச்சி, கோபம், சங்கடம் எல்லாவற்றிர்க்கும் ஒரே மாதிரி முக பாவம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, நம்ப முடியாத சண்டை காட்சிகள், இரைச்சலான இசை இதெல்லாம் இல்லாத குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். மலையாளத்தில் மட்டும் எப்படி வித்தியாசமாக, எளிமையாக யோசித்து படம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

 

Saturday, January 11, 2025

படித்ததில் பிடித்த கதாபாத்திரம்

 படித்ததில் பிடித்த கதாபாத்திரம் 

சின்ன வயதில் முத்து காமிக்ஸில் 'இரும்புக் கை மாயாவி' என்று ஒன்று வரும். அதில் சி.ஐ.டி யாக வரும் ஒருவர்(பெயர் மறந்து விட்டது) வலது கை மணிக்கட்டு பகுதியிலிருந்து இரும்பால் ஆனதாக இருக்கும். அதை பேட்டரியை சார்ஜ் செய்வது போல சார்ஜ் செய்து கொண்டால் உடல் மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். பார்ப்பவர்களுக்கு இரும்புக் கை மட்டும் நகர்வது போல தோன்றும். அதனால் வில்லன்களுக்கு அவரை தாக்குவது கடினமாக இருக்கும். அவர் அப்படி மறைந்து வில்லன்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பேட்டரியில் சார்ஜ் குறைந்து உருவம் புலப்படத் தொடங்கும், படிக்கும் நமக்கு 'ஐயையோ' என்று படபடப்பாக இருக்கும். இந்த மாறுபட்ட கற்பனை பாத்திரம் அதிகம் கவர்ந்தது.

அதற்குப்பிறகு நான் வாசித்த கதைகளில் முக்கியமானது 'பொன்னியின் செல்வன்' அதில் வந்தியத் தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் பிடிக்காமல் போகுமா? ஆனால் மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் நந்தினிதான்.



நந்தினியை வர்ணிக்கும் கல்கி,"அவளைப் பார்க்கும் ஆண்கள் எல்லோரும் புத்தி பேதலித்து போவார்கள்' என்று எழுதியிருப்பார். நந்தினி பற்றி படிக்கும் நமக்கே புத்தி பேதலித்து, அவள் மீது கோபம் வராது. இரக்கமும்,பரிதாபமும் தான் வரும். ஒரு வேளை கல்கி அவர்களுக்கே நந்தினி மீது ஒரு பச்சாதாபம் இருந்ததோ?

நான் அதுவரை படித்த நாவல்களில் வரும் பெண்களெல்லாம் தியாகிகளாக, சுகமான உணர்வை தூண்டுபவர்களாக இருந்திருக்க, முதல் முறையாக ஒரு பெண் அரசியல் மாற்றங்களை நிகழ்த்துபவளாக இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.  

அதே நேரத்தில் நந்தினி பாத்திரத்தை மிகவும் பிடிக்கும் என்று வெளியே சொல்ல பயம். ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை விரும்புகிறேன் என்று சொன்னால் என்னை தவறாக நினைக்க மாட்டார்களா என்ற அச்சம். பின்னாளில் தெரிந்தது என்னைப் போலவே பலருக்கும் நந்தினியைப் பிடிக்கும் என்பது. இந்த காரணத்தினால் என் நண்பர் ஒருவர் தன் மகளுக்கு நந்தினி என்று பெயர் வைத்தார். எனக்கும் பெண் பிறந்தால் நந்தினி என்று பெயரிட வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் சில காரணங்களினால் அந்தப் பெயரைச் சூட்ட முடியவில்லை. என் மைத்துனருக்கு பெண் பிறந்த பொழுது "என்ன பெயர் வைக்கலாம் நீ சொல்" என்று என்னிடம் கேட்டதும் நான் வேறு எந்தப் பெயரை சொல்லியிருப்பேன்? என் மைத்துனரும் அந்நிய பெண் குழந்தை எல்லாரடமும் ,"என் பெரியம்மாவின் எனக்கு நந்தினினு பேர் வெச்சா" என்று சொல்லும். ஏன் அவள் திருமணத்தில் அவள் கணவரிடமும் அதைச் சொன்னாள்.

பொன்னியின் செல்வனில் பிடித்த மற்றொரு கதாபாத்திரம் பூங்குழலி. அந்தப் பெண்ணின் துணிச்சல், ஆற்றல், சாகசம் அதோடு நேர்மை...இப்படி அத்தனையின் கூட்டாகவும் ஒரு பெண் இருக்க முடியுமா?

சிட்னி ஷெல்டனின் 'ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்' நாவலின் நாயகியான ஜெனிஃபர் பார்க்கர்...! எப்படிப்பட்ட போராளி! வாவ்!

ஆர்தர் ஹெய்லியின் பாத்திரப்படைப்புகள் எல்லாமே கனமானவை. அவருடைய 'Strong medicine' கதாநாயகி சீலியா ஜோர்டனும் மறக்க முடியாத கதாபாத்திரம்.

என்னடா இவள் எல்லாம் பெண் கதாபாத்திரங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாளே? ஆண் பாத்திரங்களே இல்லையா? என்று நினைக்காதீர்கள். முதலில் குறிப்பிட்டது ஆண் கதாபாத்திரம்தான். 

கல்லூரி நாட்களில் படித்த சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகளில் வரும் வசந்தை காதலிக்காமல் இருக்க முடியுமா? விடலைத்தனமாக சில சமயங்களில் நடந்து கொண்டாலும், சாதுர்யம், புத்தி கூர்மை, செயல் திறனோடு நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்ட வசந்தை இளம் பெண்களுக்கு பிடிக்காமல் போகுமா?

ஒரு கதையில் டில்லி சுப்ரீம் கோர்டில் வசந்தை வழக்கு விஷயமாக சந்திக்கும் ஒரு வட இந்தியப் பெண்," ஐ ஆம் மித்ரா வசிஷ்ட்" ஐஎன்று அறிமுகப்படுத்திக் கொண்டதும் வசந்த்,"ஐ ஆம் வசந்த் பரத்வாஜ்" என்பான். அவள் குழம்பி, "நீங்கள் சவுத் இண்டியன் இல்லையா?" என்று கேட்பாள் அதற்கு வசந்த்,"சவுத் இண்டியன்ஸ்தான், உங்கள் பெயருக்கு பொருத்தமாக இருக்கட்டுமே என்று சொன்னேன்" என்பான், இந்த நகைச்சுவை உணர்ச்சியும், 

இன்னொரு கதையில் வில்லன் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட வசந்திடம் அந்த கூட்டத் தலைவன்,"யார் நீ?" என்பான், அதற்கு வசந்த்,"கரெக்ட்! இதே கேள்வியைத் தான் உபநிஷதமும் கேட்கிறது, யார் நீ?" என்பான். இந்த பிரசன்ஸ் ஆஃப் மைண்டும்தான் இளம் பெண்களுக்கு பிடித்ததோ? அதனால்தான் வசந்திற்கு திருமணம் செய்யலாம் என்று சுஜாதா முடிவு செய்த பொழுது என்னைப் போன்ற (அந்தக்கால)இளம் பெண்கள் 'கூடாது' என்று தந்தியடித்து தடுத்து விட்டார்களாம்.

கல்லூரிக் காலத்தில் எனக்கும் என் தோழிகளுக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் இந்துமதி எழுதிய 'மணல் வீடுகள்' கதையின் நாயகன் கிருபாகர். . "அவனைப் போல நமக்கு வரும் கணவன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று பேசிக் கொள்வோம். 

அந்தக் கதைக்கு படம் வரைந்தது மணியன் செல்வன்... கேட்க வேண்டுமா? அந்த ஓவியங்கள் இன்னும் கண்ணுக்குள் இருக்கின்றன. 

இப்படி எத்தனையோ கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராகவே இருந்தார்கள். 




Thursday, January 2, 2025

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி.யில் நாளொரு திரைப்படம் அல்லது சீரிஸ், பொழுதொரு யூ ட்யூப் சேனல் என்று பொழுது கழிகிறது. காலை வேளையில் ஸ்லோகங்கள், பஜன், சுதா சேஷய்யன், துஷ்யந்த் ஸ்ரீதர், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உபன்யாசன்கள் என்று கேட்கும் நான் மாலையில் அப்படியே நேர் எதிராக Dr.காந்தராஜ், கிருஷ்ணவேல், ஸ்ரீவித்யா, Dr.ஷாலினி போன்றவர்களின் யூ டியூப் கேட்கத் தொடங்கி விடுவேன். இதில் Dr. ஷாலினி சற்று தெளிவு. 

திருப்பாவையில் குறிப்பிடப்படும் நப்பின்னை யார்? என்று ஒரு குழப்பம் இருந்தது. ரேவதி சங்கரன் அதை தெளிவித்தார். நல்+பின்னை=நப்பின்னை. அதாவது பாற்கடல் கடையப்பட்ட பொழுது பின்னால் வந்த தேவி. முதலில் வந்தவள் ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி. நாம் அவளை மூதேவி என்கிறோம். பின்னால் வந்த இளையவள் நப்பின்னை என்னும் மகாலட்சுமி என்று அற்புதமாக விளக்கினார். மதுரை கோவிலை எப்படி தரிசிக்க வேண்டும் என்ற அவருடைய வீடியோவும் சிறப்பாக இருந்தது. 

சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த நிகழ்ச்சி அஸ்வின் ரவிச்சந்திரன் கோபிநாத்திற்கு அளித்த பேட்டி. மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பேசினார். 

"உங்கள் திருமணம் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜா?" என்று கோபிநாத் கேட்டதற்கு, " என்ன லவ் கம் அரேஞ்ச்ட்? லவ் மேரேஜ்தான்" என்றார். 

பள்ளி நாட்களில் இவர் பெரும்பாலும் பேட்டை தூக்கிக் கொண்டு விளையாட போய்க் கொண்டிருந்ததால் இவருடன் படித்த சில மாணவர்களின் பெற்றோர்கள் "அஸ்வினோடு சேராதே, சேர்ந்தால் அவன் உன்னையும் மைதானத்திற்கு அழைத்துச் சென்று விடுவான்" என்று கூறியிருக்கிறார்களாம்!! தோடா! 

அவர் தந்தை அவருக்காக பட்ட சிரமங்களை சொல்லும் பொழுது,"இப்பொழுது நாம் மிகவும் சுயநலமாக வாழ்கிறோம், என் பெற்றோர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு செய்ததை என்னால் என் குழந்தைகளுக்கு செய்ய முடியாது" என்று கூறிய அதே நேரத்தில் தந்தையோடு நிறைய சண்டை போடுவதாகவும் கூறினார். :)) அம்மாவின் அறிவுரையை கேட்டுதான் ஸ்பின் பெளலிங் போட ஆரம்பித்தாராம்.

டெஸ்ட் மாட்சிற்கான தயாரிப்புகளை அவர் விவரித்ததை கேட்டபொழுது இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று தோன்றியது. 

"நான் சின்ன வயதில் என் அப்பாவின் காலடியில் உட்கார்ந்து கொண்டுதான் டி.வி.யில் கிரிக்கெட் மாட்ச் பார்த்தேன். அப்போது நானும் மேட்ச் விளையாடுவேன் என்று நினைத்தேனா? கிரிக்கெட் பார்க்க பிடித்தது பார்த்தேன், கிரிக்கெட் விளையாடினால் இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாம் என்றோ, ஐ.பி.எல். ஏலத்தில் என்னை இத்தனை ரூபாய்க்கு எடுப்பார்கள் என்றோ நினைத்தது கிடையாது. கிரிக்கெட் விளையாட பிடிக்கும் விளையாடினேன்" என்றார் கீதையின் சாரம்!


Wednesday, January 1, 2025

Review of 2014

 2024ஆம் வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது நிறைய பயணங்கள். "சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்க சீஸன் டிக்கெட் வாங்கி வைத்துக்கொள்" என்று சிலர் கூறும் வண்ணம் ஷட்டில் சர்வீஸ் போல பெங்களூர்-சென்னை-பெங்களூர் என்று பயணித்தேன்.  

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பயணங்கள். அவற்றில்திருப்பதியில் ஸ்ரீவாரிி தரிசனம் பெற்றதையும், அமிர்தபுரியில் அம்மாவுக்கு ஆரத்தி எடுத்ததையும் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். 

மூன்றாவது பயணம் புட்டபர்த்திக்கு சென்றது. கனடாவில் வசிக்கும் என் மகள்,மாப்பிள்ளை,பேத்தி இவர்கள் புட்டபர்த்தியில் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். அதற்காக டிசம்பர் 20 முதல், 27 வரை அங்கே தங்கினேன். அது ஒரு அற்புத அனுபவம். எட்டு நாட்களும் இறை சிந்தனை தவிர வேறு இல்லை. 

2024 ஜனவரி ஐந்தாம் தேதி கர்நாடகா யாத்திரையில் தொடங்கி, டிசம்பரில் புட்டபர்த்தியில் முடித்தேன். கர்னாடகா யாத்திரையில் அறிமுகமான ஹேமா சுந்தரம் என்பவர் நாராயணீயம் வகுப்புகள் எடுப்பது அறிந்து, அவரிடம் நாராயணீயம் கற்றுக் கொள்ள துவங்கினேன். முகநூல் தோழி ஒருவர் கீதா குஞ்சன் மூலம் பகவத் கீதா கற்றுக் கொண்டதை எழுதியதை படித்து விட்டு பகவத் கீதையும் கற்றுக் கொள்கிறேன். சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன எனலாமா?


Saturday, December 21, 2024

2024 ல் முக்கிய நிகழ்வுகள்:

2024 ல் முக்கிய நிகழ்வுகள்

இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வு என்றால் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இரண்டை சொல்லுவேன். முதலாவது, பிரேக் தரிசனம் எனப்படும் ஸ்ரீவாணி தரிசனத்தில் திருப்பதி பெருமாளை மிக அருகில் தரிசித்ததும், இரண்டாவது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் வாய்த்ததுமே. ஆனால் அந்த நிமிடங்களில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்கும் திறமை எனக்கிருக்கிறதா? என்பது சந்தேகமே. முடிந்த அளவு என் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு திருப்பதியில் அங்க பிரதட்சினம் செய்த பிறகு பெருமாளை அருகே தரிசித்தேன். அதன் பிறகு சென்ற பொழுதெல்லாம் பெருமாளை எட்டி இருந்துதான் தரிசிக்க முடிந்தது. அதிலும், ஜருகண்டி விரட்டல், நமக்கு முன்னால் இருப்பவர் உயரமாக இருந்து விட்டால் வரிசையில் நகரும்பொழுதே பெருமாளை தரிசிக்கும் சான்ஸ் அவுட்! எல்லா கோவில்களிலும் சுவாமியை பார்ப்பது போல் திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியுமா? என்ற ஏக்கம் உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்தது. நாம் எதற்காவது அடி மனதில் ஆசைப்பட்டால் அதை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும் என்பார்களே அப்படி என்னுடைய இந்த ஆசையும் 2024 ஜூலையில் நிறைவேறியது.

என்னுடைய பெரிய அக்காவின் மகளுக்கு திருமணமாகி ஜூலையில் 25வது வருடம்,வெள்ளிவிழா ஆண்டு. இந்த வருடம் அவளுக்கு 50 அகவை முடிகிறது. இவை இரண்டிற்காகவும் அவளுடைய மகனும்,மகளும் இந்த ஸ்ரீவாணி தரிசனதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், என் அக்கா பெண்ணிடம், “எனக்கும் டிக்கெட் கிடைக்குமா? என் மகனும் மகளும் எனக்காக ஸ்பான்ஸர் செய்ய ரெடி, என்றதும், அவள் அவர்கள் ஏஜெண்டிடிடம் கேட்டு "எட்டாம் தேதிதான் கன்ஃபர்ம் பண்ண முடியும்” என்றாள். எட்டாம் தேதி மதியம் “உங்களுக்கும் டிக்கெட் கிடைத்து விட்டது, சென்னைக்கு கிளம்பி வாருங்கள், பத்தாம் தேதி திருப்பதிக்கு காரில் போகலாம் என்றாள்”

நான் ஜூலை ஒன்பதாம் தேதி பெங்களூரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு சென்னை சென்று பத்தாம் தேதி திருப்பதிக்கு கிளம்பினோம். அங்கு ஸ்ரீவாணி சேவைதாரர்களுக்கு தங்கும் இடம் ஒதுக்குகிறார்கள். அறை விஸ்தாரமாகவும்,சுத்தமாகவும் இருந்தது. 11ஆம் தேதி காலை, எழுந்து, குளித்து, அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

வழக்கமாக செல்லும் பாதைதான், ஆதார் கார்ட், ஸ்ரீவாணி டிக்கெட் செக்கிங் போன்ற ஃபார்மாலிடிகளை முடித்துக் கொண்டு கூண்டுகளிள் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் காபி, பால் போன்றவை வழங்கப்பட்டன. அதை அடுத்து பொங்கலும், தயிர் சாதமும். நாங்கள் ஏற்கனவே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டதால் காபியோடு நிறுத்திக் கொண்டோம்.

சற்று நேரத்தில் கூண்டுகளை திறந்து விட்டார்கள். நீளமாக நடந்து, ஏறி, இறங்கி, கோவிலின் பிரதான வாயிலில் காலை நனைத்துக் கொண்டு, பலி பீடத்தை தாண்டி, இதோ பெருமாள் சன்னதியை நெருங்கி விட்டோம். கருடாழ்வாரை சேவித்துக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சன்னதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மனது கோவிந்தா, கோவிந்தா என ஸ்மரிக்க, கோவிந்தனை நெருங்கி விட்டோம். பச்சை பட்டாடை உடுத்தி அந்த மாதவன் நம்மை உற்றுப் பார்க்கிறான். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல அந்த அழகு முகத்தைப் பார்த்த நமக்கு வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படியோ உற்சவரையும் சேவித்துக் கொண்டேன். பெருமாளுக்கு காட்டிய தீபாராதனையை ஒத்திக் கொள்ளச் சொல்கிறார் அர்ச்சகர். பிறகு வாழைப்பழ பிரஸாதம், தீர்த்தம், சடாரி எல்லாம் சாதிக்கப்படுகின்றன. வெளியே வந்த பிறகுதான் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் நம் கண்ணில் படவேயில்லையே? என்று தோன்றியது. மற்றுமொரு வாய்ப்பு வாய்க்காமலா போய் விடும்? பெருமாளின் அந்த அழகு முகம் நிறை கொண்டது என் நெஞ்சினில்.

 




அமிர்தபுரியில் ஆரத்தி:

ஒரு வேண்டுகோள்: மாதா அமிர்தானந்தமயி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து கடந்து போய் விடுங்கள். 







ஜூலையில் தன் திருமண நாளுக்கு திருப்பதி சென்ற என் அக்கா மகள் செப்டம்பரில் அவளுடைய பிறந்த நாளுக்கு அமிர்தபுரி சென்று மாதா அமிர்தானந்தமயியிடம் ஆசி பெற விரும்பினாள். இப்போதும் நான் அவளோடு சேர்ந்து கொண்டேன். இரண்டு அக்காக்கள், ஒரு அக்கா பெண், ஒரு அக்காவின் பேத்தி இவர்கள் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் வர, நான் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கொச்சியை அடைந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்து இன்னோவா காரி்ல் அமிர்தபுரியை அடைந்தோம்.  

என்னுடைய பெரிய அக்கா அடிக்கடி அமிர்தபுரி செல்பவர் என்பதால் அங்கு நிறைய பேர்களைத் தெரியும். எங்களுக்கு ரூம் ஒதுக்கிய பெண் அக்காவை வரவேற்றார். அன்று இரவு தொலைபேசியில் அக்காவை அழைத்து மறுநாள் மாலை அம்மாவிற்கு (அமிர்தானந்தமயி) ஆரத்தி எடுக்க ஒரு ஸ்லாட் இருப்பதாகவும், எங்களில் ஒருவர் அதற்கு வரலாம் என்றும் கூறினார். அமிர்தபுரிக்கு முதல் முறை வந்திருந்த என் கடைசி அக்காவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தோம். 

சாதாரணமாக அம்மாவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் முன்னாலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி திடீரென்று கிடைப்பது அதிர்ஷ்டம்தான். 

அடுத்த நாள் முன்பே பதிவு பண்ணி வைத்திருந்த என் அக்கா பெண் அம்மாவிற்கு ஆரத்தி எடுத்தாள். அவர்கள் என்னையும் பதிவு பண்ண சொன்னார்கள். நான் நம்பிக்கை இல்லாமல்தான் பதிவு பண்ணினேன். அதற்கு அடுத்த நாள் காலை ஆரத்திக்கு ஒருவர் தேவைப்படுவதாகவும், என்னால் வர முடியுமா என்றும் தொலைபேசியில் கேட்ட பொழுது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. 

ஆரத்தி எடுக்கப் போகிறவர்களுக்கு சிறிய பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சியின் பொழுதே என்னோடு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு உணர்ச்சி வசப்பட்டதால் கைகள் நடுங்கின. ஆரத்தி எடுத்த பொழுது அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. எனக்கும் கூட, ஏன் ஆரத்தி எடுத்த அத்தனை பேருக்கும். ஒருவர்கூட அழாமல் இல்லை. அதை அழுகை என்பது தவறு, நம் உள்ளுக்குள் ஏதோ உடைந்து கண்களின் வழியே வழிகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் அம்மாவை பார்க்காமல் இருக்கலாம், நம்மை அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறாரே, அது எவ்வளவு பெரிய பாக்கியம்! குரு பார்க்க கோடி பாவம் தீரும். 



Tuesday, December 10, 2024

லப்பர் பந்து (சினிமா விமர்சனம்)

பழைய எம்.ஜி.ஆர். படங்களில் நல்லவனும், ஏழையுமான கதாநாயகனை அந்த ஊரின் பணக்காரரான பெண் விரும்புவாள். அவளுடைய தந்தை தன் குடும்பத்தின் பரம வைரி என்பதை அறியும் கதாநாயகனின் தாய் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பாள். கதாநாயகனும், கதாநாயகியின் தந்தையும் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இறுதியில் இதெல்லாம் மாறி கதாநாயகனும், நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் முடிவாக இருக்கும்.

இதை அப்படியே வைத்துக்கொண்டு, கதை நடக்கும் களத்தை மட்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு சென்றால் அது 'லப்பர் பந்து'

பூமாலை(அட்டக்கத்தி தினேஷ்) ஒரு பெயிண்டர். ஆனால் அதை விட அவர் அதிகம் நேசிப்பது கிரிக்கெட்டை. வேலைக்கு மட்டம் போட்டு விட்டு மாட்ச் விளையாட போகிறார். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் பனைமரம் உயரத்திற்கு  பறக்கின்றன. அதனால் 'கெத்து' என்னும் பெயர்.

அவரைப்போலவே கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் அன்பு(ஹரீஷ் கல்யாண்) அவருடைய மகள் துர்காவை(சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) நேசிக்கிறார். ஒரு மாட்சிற்குப்பின் பூமாலை பேட்டிங்கை அன்பு குறைவாக பேசுவதை கேட்ட பூமாலையின் தோழர் அவரிடம் போட்டுக் கொடுத்துவிட, அவருக்கு அன்பு மீது வெறுப்பு வருகிறது.

அடுத்த மாட்சில் அன்புவின் பந்து வீச்சால் பூமாலையின் அணி தோற்கிறது. அதுவும் பூமாலையின் வீக் பாயிண்டை புரிந்து கொண்டு அன்பு பந்து வீச, பூமாலையால் வழக்கம்போல் சுழற்ற முடியவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரங்கங்கள் எதுவும் தெரியாத அன்புவின் தாய்(தேவ தர்ஷினி) பூமாலை வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறார், இரண்டு வீட்டார்களுக்கும் பரஸ்பரம் திருப்தியாக, திருமணத்தை நிச்சயிக்க முடிவெடுக்கிறார்கள்.

மறுநாள் காதலி வீட்டிற்கு வரும் அன்புவிற்கு தன் மாமனாராக வரப்போவது யார் என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பூமாலையின் மனைவி யசோதாவிற்கு(ஸ்வஸ்திகா) மாப்பிள்ளையும் தன் கணவனைப் போல கிரிக்கெட் பைத்தியம் என்று தெரிந்து விடுகிறது. இவனை மணந்து கொண்டால் தன்னைப் போலவே தன் மகளும் கஷ்டப்படுவாள் என்று பெண்ணைக் கொடுக்க மறுக்கிறாள். (எம்.ஜி.ஆர். படங்களில் எதிரியின் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கதாநாயகனின் அம்மா தடை போடுவார், இதில் பெண்ணின் அம்மா மறுக்கிறார்).

இன்னொரு மாட்சில் இருவருக்கும் கைகலப்பாக எதிர்கால மாமனாரும், மாப்பிள்ளையும் மைதானத்தில் கட்டிப் புரள்கிறார்கள். யசோதா  கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். பூமாலையும், அன்பும் திருந்தினார்களா? அன்பு காதலியை கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

படம் பார்ப்பது போல் இல்லாமல், நிஜமாக ஒரு கிராமத்தில்  நடப்பதை பார்ப்பது போல இருக்கிறது. படத்தில் வரும் அத்தனை கதை மாந்தர்களும் ரத்தமும், சதையுமாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அதிலும் தினேஷின் மனைவியாகவும், மகளாகவும் நடித்திருக்கும் பெண்கள் அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தினேஷ் மனைவியாக வரும் ஸ்வஸ்திகா இளம் வயதில் அம்மா ரோலில், அதுவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக பாத்திரம் ஏற்று மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

துர்காவாக நடித்திருக்கும் சஞ்சனா பார்க்கவும் அழகு, நடிப்பும் அழகு. இந்த இரு பெண்களையும் தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அட்டகத்தி தினேஷ் அப்பாவா? அதுவும் இத்தனை பெரிய பெண்ணுக்கு? என்று வியப்பாக இருக்கிறது. ஆனால் பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாணுக்கு 'பார்க்கிங்' படத்தை அடுத்து நடிக்க வாய்ப்புள்ள நல்ல ரோல். வாய்ப்பை தவற விடவில்லை ஹரீஷ். அவசரப்படாமல் நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பாராட்டுவோம். ஹரீஷின் தோழனாக வரும் பாலா சரவணன், காளி வெங்கட், அம்மாவாக வரும் தேவதர்ஷினி, தினேஷின் தாய் கீதா கைலாசம் எல்லோருமே ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாதாரணமாக திரைப்படங்களில்  கதாநாயகன் டீம் ஜெயிப்பது போலத்தான் முடியும், இந்த படத்தில் கதாநாயகர்கள் இருக்கும் டீம் தோற்கிறது. அதற்கு செல்லப்படும் காரணமும் சிறப்பு.

வசனங்கள் இயல்பாகவும், நன்றாகவும் இருக்கின்றன. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்ணனி இசை மிக நன்றாக இருக்கிறது. இயல்பான நகைச்சுவை.

கிரிக்கெட் மாட்ச் கொஞ்சம் அதிகம் என்றாலும், குடும்பத்தோடு  ரசிக்கக்கூடிய நல்ல படம்.

நீதி: எம்.ஜி.ஆர் பட ஃபார்முலா எவர்கிரீன்!

Tuesday, October 29, 2024

பாட்டி GOAT!

பாட்டி GOAT!

சீருடை அணிந்து கொண்டு, காலில் ஷூவையும், முதுகில் பையையும் மாட்டிக் கொண்டு, பள்ளிக்கு கிளம்பிய என் பேத்தி, டி.வி. ரிமோட்டை என் கையில் கொடுத்து, "நௌ இட்ஸ் பாட்டி டைம்(டி.வி. பார்க்க என்பது தொக்கி நிற்கும் பொருள்)" என்றாள். அவள் வீட்டில் இருக்கும் பொழுது கார்ட்டூன்தான் ஓடிக் கொண்டிருக்கும். "ஆனால் பாட்டி ஷூட் நாட் வாட்ச் கிருஷ்ணா கார்டூன்" 

"ஏன்? பாட்டிக்கும் கிருஷ்ணா பிடிக்கும், ஷீ ஆல்சோ வாட்ச் கிருஷ்ணா கார்ட்டூன்" என்றான் என் மகன்.

"நோ, தட்ஸ் மை கிருஷ்ணா கார்டூன்.." என்றவள் கொஞ்சம் இடைவெளி கொடுத்து, "பாட்டி வில் வாட்ச் குக்கிங்" என்றதும், என் மகனும், நானும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

'வாசலில் கிடக்கும் 

பால் பாக்கெட்டை அம்மாவிடமும்

செய்தித்தாளை அப்பாவிடமும்

கொடுக்க வேண்டுமென்று

குழந்தைக்கு 

யார் சொல்லிக் கொடுத்தார்கள்?'

என்னும் புதுக்

கவிதை நினைவுக்கு வந்தது.'

எப்படியோ பேத்தியை சரிகட்டி GOAT(உம்) பார்த்து விட்டேன்.  அதற்கு வந்த விமர்சனங்கள் பயமுறுத்தின, ஆனால் அத்தனை மோசமான இல்லை. கிளைமாக்ஸ் இழுவை சகித்துக் கொள்ள வேண்டும். வெங்கட் பிரபுவின் படங்கள் அத்தனை மோசமாக இருக்காதே என்ற என் நம்பிக்கை பிழைத்தது. 

தங்கப்பதக்கத்தில் விஜய் நடித்தது போலிருந்தது என்று நான் கூறினால் சிவாஜி ரசிகர்களுக்கு கோபம் வரலாம். ஏன் எனக்குள் இருக்கும் சிவாஜி ரசிகையே ஏற்றுக்கொள்ளவில்லை. "எதை எதோடு ஒப்பிடுகிறாய்? என்ற கேள்வி வந்தது.  

நல்ல படம் வேறு, நல்ல பொழுதுபோக்கு படம் வேறு. GOAT இரண்டாம் ரகம்.

பி.கு: பாட்டி goat(greatest of all time) என்று நான் சொல்லவில்லை. பாட்டியும் கோட்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, October 16, 2024

Bad Newz (Hindi movie review)

 Bad Newz (Hindi movie review)




என் அக்கா ஸ்போக்கன் ஹிந்தி கற்றுக் கொள்கிறாள். அவளுடைய டீச்சர் "ஹிந்தி படங்கள் பாருங்கள்" என்றாராம். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு புரியும், ஹிந்தி படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஹிந்தி அறிவு விருத்தியாகும் என்று 'Bad News' (பெயரைப் பார், சகுனமே சரியில்லை)என்று ஒரு ஹிந்தி படத்தை கிளிக்கினேன்.   ரொம்ப வித்தியாசமான ஒரு கதை.


ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஷெஃப் ஆக பணியாற்றும் சலோனி பாகாவிற்கு (திருப்தி டிம்ரி) தான் பணியாற்றும் ரெஸ்டெரெண்டிற்கு மெராக்கி ஸ்டார் டைட்டில் வாங்கித்தர வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் திருமணம் செய்து கொண்ட Akil Chadda (ரிக்கி கௌஷல்) மனைவி மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த செய்யும் செயல்களால் அவள் பணியாற்றும் ரெஸ்டெரண்ட் மெராக்கி ஸ்டார் வாங்கும் வாய்ப்பை நழுவ விடுகிறது, அதனால்அவள் வேலையிலிருந்து தூக்கப்படுகிறாள். வெறுத்துப் போன அவள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து முஸ்ஸோரியில் குர்பீர் சிங் பன்னு(Ammy Virk) என்னும் சர்தார்ஜி நடத்தும் ஒரு ரெஸ்டாரெண்டிற்கு வேலைக்குச் செல்கிறாள்.


சலோனியின் மாஜி கணவன் அவளை வெறுப்பேற்றுவதற்காக நிறைய பெண்களொடு சந்தோஷமாக இருப்பது போல் புகைப்படமெடுத்து அவளுக்கு அனுப்ப, அதில் காண்டான சலோனி வோட்காவை குடித்துவிட்டு குர்பீர் சிங்கை பலவந்தப்படுத்தி அவனோடு இணைகிறாள். தன் ரூமிற்கு வந்தால் அங்கே மாஜி கணவன், அவளைத் தான் இன்னும் விரும்புவதாக கூற அவனோடும் உறவு கொள்கிறாள்(என்ன கஷ்டம்டா!). அறுபது நாட்களுக்குப் பிறகுஅவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. தான் போதையில் இருந்ததால் தான் யாருடைய குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த இரவில் தான் உறவு கொண்ட இரண்டு ஆண்களையும் பேடர்னட்டி டெஸ்ட் செய்ய அழைக்கிறாள். அதில் என்ன டிவிஸ்ட் என்றால் அவள் வயிற்றில் உருவாகியிருப்பது இரண்டு குழந்தைகள் அதுவும் இரண்டும் இரண்டு ஆண்மகன்களுடையது(போதுமா?) heteropaternal superfecundation என்னும் அபூர்வ விஷயமாம். இதோடு முதல் பாதி முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? யாரை அவள் மணந்து கொண்டாள்? அந்த குழந்தைகளை என்ன செய்தாள்? போன்றவை அடுத்த பாதியில் ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாதி ஓகே! இரண்டாவது பாதியில் தனக்குதான் நல்ல துணவனாகவும், நல்ல தகப்பனாகவும் இருக்கும் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிக்க ரிக்கி கெளஷலும், அமி விர்கும் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன. இந்த கூத்தில் படம் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. 


ரிக்கி கெளஷலுக்கு கொ..ஞ்..ச..ம்.. ஓவர் ஆக்டிங் என்றாலும் நம்மூர் பிரகாஷ்ராஜ் மாதிரி நடிப்பு பிரவாகமாக வருகிறது. ஆமியும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். 


கடைசியில் சலோமி தன் முன்னாள் கணவனோடு இணைகிறாள், குர்பீர்சிங் பழைய காதலியோடு விட்டுப்போன உறவை புதுப்பித்துக் கொள்கிறான். இரண்டு குழந்தைகளையும் இரண்டு தம்பதிகளும் வளர்க்க முடிவு செய்கிறார்கள், சலோமி ஆசைப்பட்டபடி அந்த ரெஸ்டாரெண்டிற்கு மெராக்கி ஸ்டாரும் கிடைக்கிறது. All is well, they started living happily ever after என்று சந்தோஷமாகத்தான் முடித்திருக்கிறார்கள். நமக்குதான் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.


 

Wednesday, October 9, 2024

பெண்கள் திருவிழா

பெண்கள் திருவிழா


எனக்கும் என் தோழிக்கும் ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை. எங்கள் இருவருக்குமே ஏதோ அந்தக் காலம் பொற்காலம் போலவும், அதில் தவறுகளே இல்லை என்றும், இன்றைய இளைய தலைமுறையை குறை கூறுவதும் கொஞ்சம் கூட பிடிக்காது. அப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் பொழுதெல்லாம் நழுவி விடுவோம். எல்லா காலங்களிலும் நன்மை,தீமை இரண்டும் கலந்துதான் இருக்கும். இளைய தலைமுறையினார் எத்தனையோ விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கும் பொழுது, பொறுப்பு எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. என்னுடைய இந்த நம்பிக்கை எங்கள் காலனியில் நடந்த நவராத்திரி விழாவில் நிரூபிக்கப்பட்டது.


நான் 2019ல் நான் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தேன். அந்த வருடம் எந்த விழாவிலும் பங்கு கொள்ள முடியவில்லை. 2020ல் பரிச்சயமான சிலர் நவராத்திரியின் பொழுது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தார்கள். ஐந்து வீடுகளில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (+பிரசாதம்) செய்தோம். அடுத்த வருடம், ஒன்பது வீடுகளில் பாராயணம்+பிரசாதம். அதற்கு அடுத்த வருடம், நவராத்திரி பாராயணம் என்று வாட்ஸாப் க்ரூபில் அறிவிப்பு வெளியான உடனேயே எல்லா நாட்களுக்கும் புக் ஆகி விட்டது.

கன்யா பூஜை

அந்த சமயத்தில் கல்யாணி மாமி என்பவர் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தார். அவரும், உமாதேவி என்பவரும் “நவராத்திரியின் பொழுதுதான் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ண வேண்டுமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் எங்கள் வீட்டில் பாராயணம் வைத்துக் கொள்ளலாமே?” என்று அழைக்க கல்யாணி மாமி வீட்டில் வெள்ளிக்கிழமை லலித சஹஸ்ரநாம பாராயணம் தொடங்கப் பட்டது. பின்னர்,மற்றவர்களும் தங்கள் வீடுகளில் வைத்துக் கொண்டனர்.


இந்த குழுவில் இருந்த பத்மாவதி இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். அவருடைய ஆலோசனையின் பேரில் சென்ற வருடம் எங்கள் சொசைடியில் இருக்கும் கம்யூனிடி ஹாலை அரை நாள் மட்டும் எடுத்துக் கொண்டு பூஜை செய்தோம். பிரசாதங்கள் நாங்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு ஐட்டம் என்று செய்து கொண்டு வந்தோம். பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது.


இந்த வருடம் ஒரு நாள் முழுவதும் ஹாலை எடுத்துக் கொண்டோம். ஞாயிறு அன்று பூஜை. ஆனால் எங்களுக்கு சனிக்கிழமை இரவு 8:45க்குத்தான் ஹால் கிடைத்தது. மழை வேறு. எங்கள் குழுவின் இளம் பெண்கள் ரங்கோலி போடுவது(ராதா,சிவசங்கரி), ஹால் அலங்காரம், பேக் ட்ராப் (ஜெயஸ்ரீ,மாயா, ஸௌரா,அபூர்வா), அம்மன் அலங்காரம் (துர்கா, கீதா,பாரதி) போன்றவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். குழந்தை பிறந்து சொற்ப காலமே ஆகியிருந்தாலும் ஷோபனா என்பவர் கைக்குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு இங்கே வந்து பிரசாதம் வினியோகித்தல் போன்றவற்றை செய்தார்.

ஜீன்ஸ், பேண்ட்,டீ ஷர்ட், த்ரீ ஃபோர்த்,டீ ஷர்ட் அணிந்து கொண்டு வேலை செய்த இதே பெண்கள் காலையில், பட்டுப் புடவை, திலகம், பூ என்று மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்தார்கள். ஸமஸ்கிருத ஸ்லோகங்களை பிழையின்றி கூறினார்கள், பஜனை பாடல்களை ஸ்ருதியும், தாளமும் பிசகாமல் பாடினார்கள். இவர்களே மாலையில் குஜராத்தி பாணியில் சேலை கட்டிக் கொண்டு தாண்டியா ஆடிய அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? எல்லா ஏற்பாடுகளும் பெண்களால் மட்டுமே செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

Backdrop தயாராகிறது

இதில் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம், இரவில் வேலை செய்த பொழுது, எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக, விரைவாக நேர்த்தியாக செய்தார்கள். எல்லோரும் வீட்டிற்கு தூங்கச் சென்ற பொழுது இரவு 1:30க்கு மேல் ஆகியிருக்கும். மறுநாள் முகத்தில் எந்தவித சோர்வும் இல்லாமல் எப்படி இருந்தார்கள்? அந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் நாள் முழுவதும் எப்படி இருந்தது? அதைத்தந்தது அவர்கள் ஆர்வமா? இறையருளா? முதல் நாள் மாங்கு மாங்கென்று செய்த அலங்காரங்களை மறுநாள் வெகு இயல்பாக கலைத்தார்களே அந்த பக்குவம் என்னை வியக்க வைத்தது. இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. இளைஞர்கள் சரியாகாகத்தான் இருக்கிறார்கள். கோவில்களுக்கும், புனித நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பொழுது தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லாதீர்கள் என்று நாம் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். வேர்கள் மண்ணில் ஆழமாக புதைந்துதான் இருக்கின்றன, கிளைகள் வளைந்திருந்தால் என்ன?   


இளைய தலைமுறையை சிலாகிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவில் யுவதிகளுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தியது, பஜனை, ஸ்லோகங்கள் முதலியவைகளை பயிற்றுவித்தது போன்றவைகளில் அவர்களுக்கு உதவிய சீனியர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்களும் அதைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதைப்போல இளைய தலைமுறையினரில் யார் பெயரையாவது குறிப்பிட விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.

படிப்படியாக வடிவம் பெற்ற அம்மன்:














The entire team