கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 2, 2025

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு 

இரண்டு வாரங்களாக ஸ்ரீராம் வியாழனன்று சாப்பாட்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் பதிவுகளை படித்ததும் நான் சாப்பிட்ட சில உணவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. 


சென்ற வாரம் சனியன்று என் மகள் அவர்களின் நண்பர் மகளுக்கு வளைகாப்பு என்று அழைத்துச் சென்றாள். வளைகாப்பு பதினோரு மணிக்கு  என்றிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பத்தரை ஆகி விட்டது. ப்ரேக்ஃபாஸ்ட் முடிந்திருக்கும் என்று நினைத்தோம். முடியவில்லை. 

ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டம்கள்: கருப்பட்டி ஹல்வா, சத்துரண்டை, வெஜிடபில் ரோல், முறுக்கு, நாடா தேன்குழல், மஃப்பின்ஸ், காபி, டீ, மற்றும் மேங்கோ ஜூஸ். இவ்வளவு பண்டங்கள் இருக்கும் என்பது தெரியாமல் வீட்டில் பேகல் சாப்பிட்டு விட்டதால் ஒரு வெஜ் ரோலும், அரை கப் காபியும் மட்டும் எடுத்துக் கொண்டேன். 

வளைகாப்பு முடிந்ததும் ஒரு மணிக்கு சாப்பாடு தயார். வெள்ளை அரிசி சாதம், சிவப்பு அரிசி சாதம் இரண்டுமே இருந்தன. தால், புளிக்குழம்பு போல ஒன்று, கத்தரிக்காய் வதக்கல், ரசம், மாங்காய் சாதம், பருப்பு வடை, உளுந்து வடை, இளநீர் பாயசம்(ஒரு காலத்தில் நம்மூரில் முழங்கிய இளநீர் பாயசத்தை இப்போது காண முடிவதில்லை) உருளை சிப்ஸ், அப்பளம்(இங்கு அப்பளத்தை முழுசாக பொரித்து வைக்காமல் உடைத்து விடுகிறார்கள்). மொத்தத்தில் சுவையான விருந்து. பஃபே முறை, உணவு வைத்திருந்த டேபிளுக்கருகில் ஏகப்பட்ட கும்பல், அதனால் புகைப்படமெடுக்க முடியவில்லை.

அங்கிருந்து நேராக மிஸிஸாகா சென்று விட்டோம். அங்கு அடுத்த நாள் ராதா கல்யாணம். முதல் நாளே தீப பிரதிஷ்டை செய்து, சில அஷ்டபதிகளை பாடி விடுவார்கள். நாங்கள் சென்ற போது பஜனை துவங்கவில்லை. வந்தவர்களுக்கு இரண்டு சமோஸா, டீ வழங்கிக் கொண்டிருந்தார்கள். நான் டீ மட்டும் எடுத்துக் கொண்டேன். பஜனை முடிந்ததும் ரெண்டு சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. 

கனடாவில்தான் இருக்கிறோமா? மேற்கு மாம்பலம் வந்து விட்டோமா? என்று சந்தேகமாக இருந்தது. அவ்வளவு மாமாக்கள், மாமிகள். பட்டுப்பாவாடை சட்டையில் பெண் குழந்தைகள், ஒட்டிக்கோ,கட்டிக்கோ வேஷ்டியில் ஆண் குழந்தைகள். தமிழ் பேச்சு. மறுநாள் பெரும்பாலான பெண்மணிகள் மடிசாரில் வந்திருந்தார்கள்.


ராதா கல்யாணத்திற்காக பருப்புத் தேங்காய், முறுக்கு, அதிரசம், மைசூர்பாக், திரட்டுப்பால் என்று பட்சணங்கள், மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கும், மணமகள் ராதைக்கும் வேஷ்டி,புடவைகள் வந்து குவிந்திருந்தன. அந்த சீர் சகையறாக்களை பெண்கள் processions போலகொண்டு சென்றது பார்க்க நன்றாக இருந்தது.

நான் சிறு வயதில் பார்த்த ராதா, சீதா கல்யாண உற்சவங்களில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் பங்கேற்பார்கள். இங்கு பெண்களும் பங்கேற்றார்கள். முத்து குத்துவது கூட பெண்களும் செய்தார்கள்.

காலையில் இரண்டு இட்லி, சாம்பார், சட்னி, காபி, டீ இருந்தது. இட்லி தீர்ந்ததும் குக்கீஸ், 1/2 வாழைப்பழம், காபி, டீ என்று வைத்து விட்டார்கள். காபி கடையில் சத்தம் அதிகம் இருந்ததால் அது பஜனை பாடுபவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் காபி ஜக்கை ஹாலுக்கு வெளியே வைத்து விட்டார்கள். லன்ச் - சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு கறி, சிப்ஸ், தயிர் சாதம் ஊறுகாய் என்று சிம்பிள் மெனு. கும்பல் அதிகம் என்று நினைத்ததாலோ என்னவோ, சாம்பார் சாதத்தையும், தயிர் சாதத்தையும் அளந்து ஸ்பூன் அளவிற்கு போட்டார்கள். எனக்கிருந்த பசியில் வெட்கத்தை விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பட்சணங்களை கொஞ்சம் கவரில் போட்டு எல்லோருக்கும் தந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது, சம்ப்ரதாய பஜனை பாடல்களில் இத்தனை பாடல்கள் எனக்கு நினைவில் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இரண்டு நாட்கள் முன்பு என் பேத்திகள் 'ஸ்லஷ்' குடிக்க வேண்டும் என்றார்கள். நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன். ஸ்லஷ் என்பது வேறு ஒன்றும் இல்லை, நம் ஊரில் ஐஸ் கோலா என்று துருவிய ஐஸில் வெவ்வேறு ஃப்ளேவர்களில் சர்பத்தை ஊற்றித் தருவார்களே அதுதான். குச்சிக்கு பதிலாக டம்ப்ளரில் வெவ்வேறு ஜுஸ்கள் கலந்த ஐஸ் துருவலை பிடித்து ஸ்டாரா போட்டு உறிஞ்ச வேண்டியதுதான். 

நேற்று அருகிலிருக்கும் புத்தர் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த உணவகத்தில் தாமரை மொக்கு போலிருந்த பீச் மூஸ்கேக், ஸ்டாராபெர்ரி ரோல் கேக், சாக்லேட் கேக், என்று ஆர்டர் செய்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். 


அங்கிருந்த ஒரு கடையில் விதம்விதமான தேயிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஜாஸ்மின் டீ என்று ஒன்றை எங்களை முகர்ந்து பார்க்கச் சொன்னாள். பின்னர் எங்கள் எல்லோரையும் உபசரித்து உட்கார வைத்து பாலில்லா ஜாஸ்மின் டீ தயாரித்து எங்களுக்கெல்லாம் ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். கொஞ்சமாக குடிக்கலாம். அவள் டீ தயாரித்த விதம் நளினமான நடன அசைவுகளைப் போல வசீகரமாக இருந்தது. சுவையான டீ தயாரிக்க வேண்டுமானால் தண்ணீரை 90°Cக்கு சூடாக்க வேண்டும். Not 100°C என்றாள். 

எங்களோடு வந்தவர் ஜாஸ்மின் டீ வாங்கிக் கொண்டார்.  அவர் காபியோ டீயோ குடிக்க மாட்டார், ஒருவேளை வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பாரோ என்னவோ.




Friday, May 16, 2025

மேப்பில் சிரப் ஃபெஸ்டிவெல்

மேப்பல் சிரப் உற்சவம்(Maple Syrup Festivel)

கனடாவின் தேசிய மரம் மேப்பில் மரம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.  ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பால் எடுப்பதை போல மேப்பில் மரத்திலிருந்து கிடைக்கும் தேன் போன்ற இனிமையான திரவத்தை(Maple Syrup)எடுப்பார்கள்.

குளிர் குறைந்து, வசந்தம் துவங்கும் காலம்தான் மேப்பில் சிரப் எடுக்க உகந்த காலம். பனி உறையாத இரவுகள், மிதமான உஷ்ண பகல்கள், அதனால் பனி உருகத் தொடங்கி விடும் காலத்தில்தான் மேப்பில் திரவத்தை மரத்திலிருந்து எடுப்பது சுலபமாக இருக்குமாம். அப்படி சேகரித்த சிரப்பை கொதிக்க வைத்து அதிலிருக்கும் நீர் ஆவியானதும் பாட்டிலில்களில் சேகரித்து வைப்பார்களாம். இதன் அறுவடைக் காலம் நான்கு வாரங்களிலிருந்து ஆறு வாரங்கள் வரை நீடிக்குமாம். அந்த காலத்தில் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பத்து காலன் வரை மேப்பில் சிரப் கிடைக்கலாம். இது அந்த வருடம் நிலவும் சீதோஷ்ணம், மண் மற்றும் மரத்தின் வளத்தை பொருத்து மாறலாம்.





மேப்பில் சிரப்பில் முக்கி எடுக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரம் முதல் மே முதல் வாரம் வரை வெவ்வேறு இடங்களில் மேப்பில் சிரப் ஃபெஸ்டிவல் கொண்டாடுகிறார்கள். அன்று நகரின் பிரதான சாலை ஒன்றை வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்து சாலையின் இரு புறங்களிலும் சிறு வியாபாரிகள் தங்கள் பொருள்களை கடை பரப்பியிருக்கிறார்கள். மேப்பில் சிரப்பில் செய்த உணவு பண்டங்கள் தவிர அணிகலங்கள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், முக ஓவியம்(face painting) என்று பல வித கடைகள். இதற்கு நுழைவு கட்டணமும் கிடையாது, வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் கிடையாது என்பது கூடுதல் கவர்ச்சி.  காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். 

மேப்பில் சிரப் லாலி பாப்


செவிக்கும் உணவு


மர பொம்மைகள்

பறவை வீடுகள்



Saturday, April 26, 2025

கனடா டைரி -1

 கனடா டைரி -1

சென்ற வருடம் செப்டம்பரிலேயே கனடா வந்திருக்க வேண்டும். சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டதில் கொஞ்சம் சிக்கலாகி கோர்ட்,கேஸ் என்று இழுப்பறிகள் இருந்ததால் என் கனடா பயணம் ஒத்தி போடப்பட்டது. அந்த கேஸ் முடிவுக்கு வந்து விட்டதால் கனடாவுக்கு கிளம்பினேன். 

பெங்களூர்-ஃப்ராங்க்ஃப்ர்ட்-டொரண்டோ என்பது பயண திட்டம். என்னால் நடக்க முடியும், வீல் சேர் தேவையில்லை என்றாலும், என் மாப்பிள்ளை வீல் சேர் சர்வீஸுக்கு கோரியிருந்தார். டிஜி யாத்ரா ஆப்பின் QR கோட் அனுப்பியிருந்தார். அதனால் விரைவில் உள்ளே சென்றுவிட முடிந்தது. Digi yatra QR code ஐ விமான நிலையத்தில் ஸ்கேன் செய்பவர்களுக்கு தனி வரிசை. செக் இன் செய்யும் பொழுது டிக்கெட்டையெல்லாம் காட்ட வேண்டாம். செக் இன் ப்ராஸஸ் விரைவாக முடிந்து விட்ட்து. என்னை வீல் சேரில் அழைத்துச் சென்ற பெண் அமரவேண்டிய கேட்டின் முன் உட்காரச் சொல்லி விட்டு, "உங்களுக்கு மூன்று மணிக்குத்தானே விமானம், நான் இரண்டே முக்காலுக்கு வருகிறேன்" என்று கூறிச் சென்றாள்.

லவுஞ்சில் காத்துக் கொண்டிருந்த பொழுது, ஆஸ்லோவுக்கு செல்லும் ஒரு பெண், என் டெஸ்டினேஷனை கேட்டுவிட்டு, நான் தனியாக பயணப்படுவதற்கு ஆச்சரியப்பட்டாள். நான் தண்ணீர் குடித்து, கொஞ்சம் நடந்து, ஒரு கப்பிசீனோ காபி குடித்து நேரத்தை கடத்தினேன். சிறிது நேரத்தில் வீல் சேர் பெண் வந்து விட்டாள். விமானத்தில் ஏற மிக நீண்ட வரிசையில் நின்றிருக்கும் பயணிகளை பார்த்தபொழுதுதான் வீல் சேரின் மகிமை புரிந்தது. வீல் சேர் பயணிகளுக்கு முன்னுரிமை. 

விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்த இளம் ஜெர்மானிய பெண் இரண்டாவது முறையாக இந்தியா வந்து திரும்புகிறாராம். சென்ற முறை ஹரித்வார், ரிஷிகேஷ், ஆரோவில்(பாண்டிச்சேரி), போன்ற இடங்களுக்குச் சென்றாராம். இந்த முறை மைசூர் மட்டும் என்றார். அவரது ஆன்மீகத் தேடல் அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறது. என் பெயர் என்னவென்று கேட்டதோடு நிற்காமல் அதற்கு என்ன பொருள் என்றும் கேட்டார்.

அரபு நாடுகள் வழியே சென்றால் இந்திய மொழிப் படங்கள் நிறைய பார்க்கக் கிடைக்கும்.  லுஃப்தான்ஸா என்பதால் ஒரிரு ஹிந்தி படங்கள் மட்டுமே இருந்தன. தமிழில் 'கருடன்' இருந்தது. ஃப்ராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் இறங்கியதும் வீல் சேருக்கு கோரிக்கை வைத்தவர்களை ஒரு பாட்டரி காரில் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து வேறொருவர் எங்களை விமான நிலைய மெட்ரோ ரயிலில் அழைத்துச் சென்று வேறொரு டெர்மினலில் இறக்கி விட்டார். அங்கிருந்து மீண்டும் ஒரு பாட்டரி காரில்(buggy) இமிக்ரேஷன் பண்ணும் இடத்தில் இறக்கி விட, அங்கு ஃபார்மாலிடிகளை முடித்து காத்திருந்த பொழுது பக்கத்தில் ஒரு பெண்மணி  அவர் வீட்டாரோடு செல்ஃபோனில் உரக்க உரையாடுவதை கேட்க நேர்ந்தது. ஆஹா தமிழ் குரல், விடுவேனா? ரயில் சிநேகம் போல ஒரு ஏர்போர்ட் சிநேகம். ஃப்ராங்க்ஃபர்ட் ஏர் போர்டில் வைஃபை தானே இணைத்துக் கொண்டு விட்டது. மகனோடும், மகளோடும் பேசினேன். 

அடுத்த கட்ட பயணத்தில் சாப்பிட ஏதோ கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு ஹிந்தி சினிமா, கொஞ்சம் வீடியோ கேம், கொஞ்சம் தூக்கம் என்று பொழுது போனது.  டொரண்டோ விமான நிலையத்திற்கு என்னை வரவேற்க வந்திருந்த என் மகள் ஒரு ஜாக்கெட்டை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னாள். "குளிரவில்லை" என்றதற்கு, "இங்கே குளிராது, வெளியே சென்றதும் குளிரும்" என்றாள். மகள், மருமகன், பேத்திகள் எல்லோருமே ஜாக்கெட் அணிந்து கொண்டிருந்தார்கள்.

குளிர்தான் (-2டிகிரி). அந்த குளிர் தாங்காமல் எனக்கு இரண்டாம் நாள் தலை சுற்றல் வந்து விட்டது. திடீரென்று அதிகமான குளிருக்கு எக்ஸ்போஸ் ஆகும்பொழுது, நம் காதில் வேக்ஸ் அதிகமாகி விடுமாம், அதனால் வெர்டிகோ வரும். சென்னையிலிருந்து பெங்களூக்கு வந்த புதிதிலும் எனக்கு வெர்டிகோ வந்தது நினைவுக்குவந்தது. காதில் லேசாக சூடாக்கிய எண்ணையை விட்டுக் கொள்ளும் பொழுது அந்த வேக்ஸ் வெளியேறி விடும் என்று கூறிய என் மகள் என் காதில் எண்ணெய் விட்டாள். அந்த ட்ரீட்மெண்டுக்கு நிஜமாகவே நல்ல பலன் இருந்தது. அதன் பிறகு சில நாட்கள் காதில் பஞ்சு வைத்துக் கொண்டேன். :)) 

ஞாயிறு(30.03.25) சாயி பஜன் சென்ற பொழுது freezing rain. அன்று எங்கள் ஏரியாவுக்கு அருகில் மரங்களில் விழுந்த பனியால் மரங்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மறுநாள் திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நம் ஊரில் மழை என்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் இங்கும் நடந்தது. 

கன்யா பூஜை @ தேவி கோவில்

நான் அங்கு சென்றதும் வசந்த நவராத்திரி துவங்கியது. அஷ்டமி அன்று அங்கு ஒரு தேவி கோவிலில் கன்யா பூஜை செய்தார்கள். அதற்கு என் பெண்ணின் தோழியின் தாய் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்மணி என்னைப் பார்த்து புனகைத்தார், அவர் வேறு அதிரா மாதிரி இருந்தாரா நானும் ட்ரம்ப்பின் செகரெட்டரி என்று நினைத்து புன்னகைத்தேன், ஆனால் அவர் அதற்கு மேல் பேசவில்லை. யாரோ அவர் யாரோ?




இரண்டு நாட்களாகத்தான் குளிர் குறைந்து வருகிறது. சாதாரணமாக ஏப்ரலில் இவ்வளவு குளிர் இருக்காது என்று சிலர் சொல்கிறார்கள். சென்ற வாரம் லாங் வீக் எண்ட்! என் பெண்ணின் தோழி ஒருவர் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். மெனொபாஸில் இருக்கும் பெண்ணின் மூட் ஸ்விங்க்ஸ் போல வானம் திடீரென்று மழை, திடீரென்று வெய்யில் என்று மாறி மாறி படுத்தியது. அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் jack darling என்னும் பார்க்கிற்கு அழைத்துச் சென்றார். அந்த பார்க்கை ஒட்டியிருக்கும் பெரிய ஏரியில் சமுத்திரத்தைப் போல அலை. காற்று, தூரலும் தொடங்க பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்ததால் புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விட்டோம்.


இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன். பின்னர் சந்திக்கலாம். 







 

Friday, April 11, 2025

படங்களாக ஒரு பதிவு

படங்களாக ஒரு பதிவு


அம்மாவின் திவசத்திற்காக திருச்சி சென்றபோது முத்தரசநல்லூர் குருவாயூர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் போன்ற கோவில்களுக்குச் சென்றோம். எப்போதும் செல்லும் மாணிக்க விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கமும் விடவில்லை. இவைகளைப்பற்றி என்ன எழுதுவது? படங்கள் பேசட்டும். நேரம் குறைவாக இருந்ததால் சந்திக்க விரும்பிய தோழிகளையும், பதிவர்களையும் சந்திக்க இயலவில்லை.




பரமபத வசல்



சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில். நாங்கள் திருச்சியில் வசித்த பொழுது இப்படிப்பட்ட அலங்காரங்கள் கிடையாது.











மாணிக்க விநாயகர் கோவில் விதானத்தில் இருந்த விநாயகர் சிற்பங்களை படமெடுக்க முயன்றபொழுது ஒருவர்,"புகைப்படம் எடுக்காதீர்கள்" என்றார். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர் என்று நினைத்தால்,"ஏதாவது சாப்பிடுகிறீர்களா? போளி இருக்கு, வடை இருக்கு" என்கிறார். கர்ர்ர்....


சின்னக்கடை வீதியின் வழியே St.Joseph church




Krishna Readymade Hall:

இந்த கடையோடு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எங்களின் சிறு வயதில் எங்கள் அம்மா எங்களுக்கு உடைகள் (skirt& blose frock) வாங்கியிருக்கிறார். நான் என் மகளுக்கு வாங்கினேன், இப்போது என் பேத்திகளுக்கு, தொடரும் பாரம்பரியம்.

சமயபுரம் கோவிலுக்குச் சென்றபொழுது மயக்கிய அந்திவானம்

மேற்கண்ட படத்தை'தெய்வீகம்' என்ற புகைப்பட போட்டிக்கு அனுப்ப நினைத்தேன்.

திருச்சியில் நான் தவற விட்ட விஷயம் பெரிய கடை வீதியின் சவுக்கில்(செளக் என்னும் ஹிந்தி வார்த்தையை உள்ளூர்வாசிகள் சவுக்கு என்பார்கள்) இருக்கும் பழைய புத்தக கடை :((

வைத்தீஸ்வரன் கோவில் குளக்கரையில்

கங்கை கொண்ட சோழபுரம்


சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இதைக்கட்டிய ராஜேந்திர சோழன் தன் அப்பா கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்று நினைத்ததால் இது 157 அடி உயரமாக கட்டப்பட்டதாம். பெரிய கோவில் 212 அடி. உயரம். மேற்கண்ட படத்தில் பிரமிடு போல தோன்றவில்லை? 

வெங்கட் நாகராஜ், கோமதி அக்கா, தி.கீதா போன்றவர்கள் போடும் படங்களோடு ஒப்பிடாதீர்கள். நான் ஒரு கத்துக்குட்டி.

Wednesday, April 9, 2025

பாடலாத்ரி, திருநின்றவூர்

சிங்கபெருமாள் கோவில்

கேரள விருந்தாளியோடு பாடலாத்திரி எனப்படும் சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோவில் எல்லாம் தரிசனம் செய்தோம். 

சிங்கப் பெருமாள் கோவில் ஒரு குடைவரை கோவில். அந்த சிறு குன்றே நரசிம்மர் என்ற கருதப்படுவதால் அந்த குன்றை வலம் வருவது சிறப்பு என்பது நம்பிக்கை. இங்கே தவம் செய்த ஜாபாலி முனிவர் தனக்கு நரசிம்மராக திருமால் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால் உக்ர நரசிம்மராக அவருக்கு காட்சி அளித்தாராம். இங்கு பெருமாளுக்கு நெற்றிக் கண் உண்டு. தீபாராதனையின் பொழுது நெற்றிக்கண்ணை திறந்து தரிசிக்க வைக்கிறார்கள். அபூர்வ அனுபவம் அது. 



ஹிருதயாலீஸ்வரர் கோவில்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் சிவ பெருமான் மீது அதீத பக்தி பூண்டவர். தற்சமயம் திண்ணனூர் என்று அழைக்கப்படும் திருநின்றவூரில் வசித்த அவர், பெரும்பாலும் அங்கிருந்த இலுப்ப மர காட்டில்தான் அமர்ந்து தியானத்தில் எடுபட்டிருப்பார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், கைலாசநாதர் கோவிலை கட்டிக் கொண்டிருந்தார். அதைப்போல தானும் இறைவனுக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று விரும்பிய பூசலார் மானசீகமாக இறைவனுக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார். பல்லவ மன்னன் கோவிலை கட்டி முடித்த அதே சமயத்தில் இவருடைய மனக்கோவிலும் முற்றுப் பெருகிறது. பல்லவ மன்னன் எந்த நாளில் கும்பாபிஷகேத்திற்கு நாள் குறித்திருந்தாரோ அதே நாளில் பூசலாரும் தன் இதயக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய சிவ பெருமான், "நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு,  நான் அங்கு செல்ல இருப்பதால் நீ கட்டியிருக்கும் கோவிலில் எழுதருளுவது இயலாது" என்று கூறி விடுகிறார். மறுநாள் திருநின்றவூருக்குச் சென்ற மன்னன், "இங்கு பூசலார் கட்டியிருக்கும் ஆலயம் எங்கிருக்கிறது?" என்று விசாரிக்க, அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். "எப்போதும் இலுப்ப காட்டில் உட்கார்ந்திருக்கும் ஓரு ஏழை பிராமணர் கோவில் கட்டியிருக்கிறாரா?"  அவர் மன்னன் முன் நிறுத்தப்படுகிறார். "ஐயா! நீங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கேயிருக்கிற்து?" என்று அரசன் கேட்க, அதிர்ச்சி அடைந்த பூசலார், " பிறர் அறியாமல் நான் மானசீகமாக கட்டிய கோவில் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்?" என்று கேட்க, அரசர் தன் கனவைப் பற்றி விவரிக்கிறார். 

"என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா நான் வணங்கும் ஈசன்?" என்று நெகிழ்ந்தார் பூசலார். அரசன் அவரை வணங்கி திரும்பினான் என்று  முடிகிறது பெரிய புராணம். ஆனால் பூசலார் விரும்பியது போல அவருக்கு கோவில் எழுப்பிக் கொடுத்தார் பல்லவ ராஜா என்கிறது கோவில் தல புராணம்.

பூசலார் இதய பூர்வமாக கோவில் எழுப்பியதால், இந்த கோவிலின் கருவறை விமானம் இதய வடிவத்தில் இருக்குமாம். கருவறைக்குள் சிவலிங்கத்திற்கருகில் சிலா வடிவில் பூசலாரையும் தரிசிக்கலாம். தனி சன்னிதியில் தாயார் மரகதாம்பிகை.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்திருந்ததால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த ஏரிகாத்த ராமர் கோவிலுக்குச் சென்றோம். 

அங்கு கோவில் மூடும் நேரமாகி விட்டாலும், அங்கிருந்த வயது முதிர்ந்த பட்டாச்சாரியார் மிக அன்போடு எங்களை வரவேற்று தரிசனம் செய்வித்தார். நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக ராமர். பக்கத்தில் வாத்ஸ்யல்யமே உருவாக ஜானகி மாதாவும், இளவல் லட்சுமணனும். அந்த பட்டாச்சாரியார் எங்களை அந்த கோவிலில் மூன்று விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். கோவிலின் பின் பக்கம் இருக்கும் ஏரி, முன் பக்கம் இருக்கும் நவீன கஜேந்திர மோட்ச சிற்பம்,  கோவிலுக்குள் இருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் இவைதான் அந்த மூன்றும்.


ராம லட்சுமணர்களை சுமந்து செல்லும் ஹனுமான்

ஹனுமனின் பின்புறம், ராம லட்சுமணர்களின் திருவடிகள்

அவர் சொன்னபடி  செய்தோம். அங்கிருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் வேறு எங்கும் காண முடியாதது. தன் இரு தோள்களிலும் ராமனையும், லட்சுமணனையும் ஹனுமன் தூக்கிச் செல்வது போன்ற அபூர்வ சிற்பம். எங்களை அந்த ஹனுமந்தனை வலம் வரச் சொல்லி ஹனுமாரின் முன்னும்,பின்னும்(மார்பிலும், முதுகிலும்)கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் ராம,லட்சுமணர்களின் பாதங்களை தரிசிக்க சொன்னதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நன்றாக தரிசனம் செய்த நிறைவோடு வீடு திரும்பினோம்.