கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 29, 2018

வேதபுரீஸ்வரர் ஆலயம் - திருவேற்காடு

வேதபுரீஸ்வரர் ஆலயம் - திருவேற்காடு




சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களை கூறுங்கள் என்றால்,நம்மில் பலரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலையும், மயிலை கற்பகாம்பாள் கோவிலையும் கூறிவிடுவோம். அதற்குப் பிறகு கொஞ்சம் யோசித்து காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டம் போன்றவற்றை கூறலாம். திருமுல்லைவாயில், திருவொற்றியூர் போன்றவை எத்தனை பேரின் நினைவிற்கு வரும் என்று தெரியாது. ஆனால் சென்னையில் பாடல் பெற்ற தலங்களும், புராண சம்பந்தப்பட்ட தலங்களும் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயம். திருவேற்காடு பஸ் டெப்போவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கிறது இந்த பழமையான ஆலயம்.

சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த பொழுது தேவர்கள் அத்தனை பேரும் கைலாயத்தில் குழுமி விட வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்து விடுகிறது. அதை சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு  அனுப்புகிறார்கள்.அதன் படி தென்திசைக்கு அகத்தியர் வருகிறார். ஆனால் அவர் மனதுக்குள் தன்னால் இறைவன், இறைவி திருமணத்தை காண முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அதை நீக்கும் பொருட்டு சிவனும் பார்வதியும் தங்கள் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளித்த தலங்களில் திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயமும் ஒன்று.




ஓரளவு பெரிய ஆலயம்தான். கொடிமரத்தையும் நந்தியையும் தாண்டி உள்ளே சென்றால் நேராக கருவரையின் உள்ளே லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிவ பெருமானும், பார்வதி தேவியும் தம்பதிகளாக சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார்கள். சாதாரணமாக சிவன் கோவில்களில் காண கிடைக்காத காட்சி. வணங்கி வெளியே வந்தால், சிறிய உள்சுற்று. அதில் சைவ சமய குரவர் நால்வரைத் தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்கள்.
கோஷ்டத்தில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, பின்னால் லிங்கோத்பவர், வடக்கில் ப்ரம்மா. உள் பிரகாரத்திலேயே பாலாம்பிகையாக அம்மன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். அம்மனுக்கு அருகில் பைரவர்.  வாயிலுக்கு இரு புறமும் சூரியனும், சந்திரனும் இருக்கிறார்கள். சந்திரனை ஒட்டி அகத்தியர். பின்னர் வட்ட வடிவ மேடையில் நவகிரகங்கள்.

அகத்தியர் 
பெரிய வெளி பிரகாரம். அதில் தல விருட்சமான வில்வ மரம். நுழை வாயிலின் இரு புறங்களில் ஒன்றில் சனி பகவானுக்கும், மற்றொன்றில் அருணகிரிநாதருக்கும் தனி சந்நிதிகள். பிரகாரம் முழுவதும் செப்பனிடப்பட்டு நன்றாக இருக்கிறது.



அருணகிரிநாதர் சந்நிதி 

சனி  பகவான் சந்நிதி 
சிவனும் பார்வதியும் இங்கே திருமண கோலத்தில் இருப்பதால் இது திருமண பரிகார தலமாகவும் விளங்குகிறது. திருமணம் தடை படுபவர்கள் இங்கு சென்று சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. 

கோவிலுக்கு வெளியே பெரிய குளம். ஆனால், அது இப்போது வறண்டு கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் தண்ணீரை சேமித்ததை போல நாம் செய்வது இல்லை. மழை நீரை வீணாக்காமல் இப்படிப்பட்ட குளங்களில் சேமித்தால் நிலத்தடி நீர் குறையாமல் இருக்குமே. 



நம்முடைய பெரியவர்கள் இறைத்தொண்டு, சமூகத் தொண்டு இரண்டையும் ஒன்றாக செய்திருக்கிறார்கள். நாம் தொடர்வோம். 













14 comments:

  1. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்தான் சென்றுள்ளேன். இங்கு சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேருக்கு தெரியாது. எங்கள் உறவில் ஒரு பெண்ணிற்கு இங்குதான் திருமணம் நடந்தது. அப்போதுதான் முதல் முறையாக இங்கு சென்றேன். இங்கு பங்குனி உத்திரம் சிறப்பு.

      Delete
  2. திருவேற்காடுக்கே ஏதோ ஒரு முறைதான் போக முடிந்திருக்கிறது. அதிலும் இந்தக் கோயில் போனதில்லை. நல்ல தரிசனம் உங்கள் தயவால்!

    ReplyDelete
    Replies
    1. 🙏🙏 அஹோ பாக்யம்!அடுத்த முறை சென்னை வரும் பொழுது சொல்லுங்கள். நாம் சேர்ந்து செல்லலாம்.

      Delete
  3. //கருவரையின் உள்ளே லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிவ பெருமானும், பார்வதி தேவியும் தம்பதிகளாக சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார்கள்.// இந்தக் காட்சியை இன்னும் சில கோயில்களிலும் பார்க்க முடியும். முக்கியமா நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயில்!

    ReplyDelete
    Replies
    1. எங்கெல்லாம் அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்திருக்கிறார்களோ,அங்கெல்லாம் இப்படி சிலா ரூபத்தில் காட்டசி அளிப்பார்களாம். அந்த தலங்கள் திருமண பரிகார தலங்களாகும்.

      Delete
  4. பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. விரைவில் பார்க்கவுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அவசியம் சென்று வாருங்கள்.

      Delete
  5. நல்லதொரு கோயில் பற்றி அறிய முடிந்தது. மிக்க நன்றி.

    துளசி: அடுத்த முறை சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தால் செல்லவேண்டும். திரு ஆலங்காடும் லிஸ்டில் உள்ளது....2 வருடம் முன்பு சென்னை வந்த போது.திருவள்ளூர் தாண்டி..ஊத்துக்கொட்டை அருகில் ஆந்திர மாநில பார்டாரில் சுருட்டப்பள்ளியில் இருக்கும் பள்ளிகொண்டீஸ்வரர்
    ஆலயம் சென்றோம்...வழியில் கொஞ்சம் டிவியேட் செய்து போனால் திருஆலங்காடும்...மிஸ் ஆகிவிட்டது...

    கீதா: திருவேற்காடு சென்றதில்லை..குறித்துக் கொண்டேன் பானுக்கா..பழவேற்காடும் போனால் கோயில் ப்ளஸ் பேக்வாட்டர்...பறவைகள் பார்க்கலாம்...

    அதே போல சுருட்டப்பள்ளி சென்ற போது திருஆலங்காடும்....மிஸ் ஆன ஒன்று...

    கோயிலில் படங்கள் எடுக்கவிட்டார்களா...அக்கா..படங்கள் நன்றாக உள்ளன...

    ReplyDelete
    Replies
    1. @துளசி: அவசியம் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.
      @கீதா: உங்களுக்கும் விரைவில் இந்த கோவிலின் தரிசனம் கிட்டட்டும். படங்கள் எடுக்க அனுமதிக்கிறார்கள். என் செல் போனில்தான் எடுத்தேன்.

      Delete
  6. திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உதவும் கரங்கள் போன்ற இடங்களே சென்று இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. இந்த கோவில் திருவேற்காடு தேவஸ்தானத்தை சேர்ந்ததுதான். அடுத்த முறை சென்னை விஜயத்தின் பொழுது செல்ல முயலுங்கள். நன்றி!

      Delete
  7. கருமாரியம்மன் கோயில் பலமுறை தரிசித்தது உண்டு. . இன்று உங்கள் மூலம் மனதால் வேதபுரீசுவரரையும் மனக்கண்ணால் தரிசனம் செய்தேன். நன்றி. அன்புடன்

    ReplyDelete
  8. இப்பொழுதுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கிறேன். நன்றி!.

    ReplyDelete