கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, February 6, 2026

மயக்கம் என்ன?

 (இது ஒரு சிம்பிள் ஜாலி  கதை)

மயக்கம் என்ன?

பானுமதி வெங்கடேஸ்வரன்


தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தாத்தா திடீரென மயங்கியதும் வெலவெலத்துப் போனான் ராகுல். அவசரமாக 108 ஆம்புலென்ஸை தொடர்பு கொண்டான்.

"என்னாச்சு?" நன்னாத்தானே இருந்தார்..? பதறினார்கள் அம்மாவும், அப்பாவும்.

"தெரியலை, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா?" என்று கேட்டான் ராகுல்.

"இல்ல.. என்னாச்சுனு தெரியலையே?" தாத்தா மெல்ல கண்விழித்தார்.  அவருடைய கண்களைத் துடைத்து, கொஞ்சமாக தண்ணீர் அருந்த செய்து, மின்விசிறியை சுழல விட்டு, ஜன்னல் கதவை திறந்தான் ராகுல். தாத்தாவின் பார்வை அவன் மீதே நிலைத்தது.

"ராகுல்.." என்று அவர் என்னவோ சொல்லத் தொடங்க ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

"ஆம்புலென்ஸெல்லாம் எதுக்கு? ஐயாம் ஆல்ரைட்" என்றார் பலவீனமாக.

நான் ஆம்புலென்ஸில் போறேன், நீ பின்னால வா" என்ற அப்பா, சட்டையை மாட்டிக் கொண்டார். 

ஆஸ்பத்திரியில் வழக்கமான பரிசோதனைகள் எல்லாவற்றையும் செய்தார்கள். "பி.பி. நார்மல். இஸ் ஹி டயபடீக்?"

"நோ.."

"குட்! தேவையான அளவு தண்ணி குடிக்கறாரா?, டீ ஹைட்ரேஷனால் கூட மயக்கம் வரும்"

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், ராகுலின் அப்பா தன் அப்பாவை பார்த்தார். அவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறேன் என்பது போல தலையசைத்தார்.

"கவலப்படும்படி எதுவும் இருக்கறதாக தெரியவில்லை. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்" என்ற டாக்டர். நர்ஸிடம் "ஐ.வி. குடுங்க" என்று கூறி விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி, "வெயிட் பண்ணுங்க," என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குத் திரும்பினார். 

ராகுலும், அவன் அப்பாவும் வெயிடிங் லவுஞ்சில் போடப்பட்டிருந்த ஜில்லென்றிருந்த மெட்டல் நாற்காலிகளில் அமர்ந்து, தங்கள் செல் ஃபோன்களை எடுத்துக் கொண்டனர். சற்று நேரத்தில் நீரஜா அழைத்தாள். ராகுல் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.

எதிர் முனையில் "என்ன சொல்லிட்டயா?" என்றாள் ஆர்வ நீரஜா. 

"எங்க..? தாத்தாக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ நானும், அப்பாவும் ஹாஸ்பிடலில்தான் இருக்கோம்."

"அடப்பாவமே என்னாச்சு?"

"நான் தாத்தாகிட்ட.." என்று அவன் ஆரம்பிக்க, அவன் அப்பா, அவனை கையசைத்து அழைத்தார். "அப்பா கூப்பிடறார், ஐ வில் கால் யூ லேட்டர்" என்று செல்ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அப்பாவை நோக்கி நடந்தான்.

"ரிசல்ட் எல்லாம் வந்துடுத்தாம், டாக்டர் கூப்பிடறார்" என்றபடியே அப்பா டாக்டரின் கன்சல்டேஷன் அறையை நோக்கி நடக்க, ராகுலும் பின் தொடர்ந்தான்.

உள்ளே நுழைந்தவர்களை உட்காரச் சொல்லி கை காட்டிவிட்டு, மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். மேஜையில் இருந்த ரிப்போர்டுகளை பிரித்துப் பார்த்தவர், நத்திங் அலார்மிங். அவர் வயசுக்கு ஹீ இஸ் குட்! ட்ரிப்ஸ் ஏத்தி முடிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்று மருத்துவ ரிப்போர்ட் ஃபைலை இவர்கள்பால் தள்ளினார். பிறகு நர்ஸை அழைத்து, பேஷண்ட் சுந்தர்ராஜன் டிஸ்சார்ஜுக்கு ரெடி பண்ணுங்க" என்றார்.

இவர்கள் டாக்டருக்கு நன்றி கூறி,  வெளியே வந்து, பணம் கட்ட காத்திருந்த பொழுது, அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது. 

"என்னடா, ரெண்டு பேரும் ஃபோனை எடுக்க மாட்டேங்கறீங்க? தாத்தா எப்படி இருக்கார்?"

"இங்க சிக்னல் பிராப்லம் இருக்குமா, தாத்தாக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஹி இஸ் ஆல்ரைட், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவோம்."

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். மாலை காபி அருந்தும்போது தாத்தா அவனிடம், நீ எங்கிட்ட சொன்ன விஷயத்தை உங்க அப்பா, அம்மாவிடம் சொன்னாயா?" என்றார்.

என்னது என்பது போல அம்மாவும், அப்பாவும் பார்க்க, தாத்தா குறும்பாகச் சிரித்தபடியே, "அவன் சொன்ன விஷயத்தை கேட்டுதான் எனக்கு மயக்கமே வந்தது" என்றார்.

"அப்படி என்னடா சொன்ன?' என்றார் அப்பா.

ராகுல் தர்மசங்கடமாய் நெளிந்தான். "என்னடா அசடு வழியற? லவ் மேட்டரா? தைரியமா சொல்லு, நீ ஜாதி விட்டு ஜாதில கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல" என்று ரொம்ப பரந்த மனதோடு சொல்ல,

"யெஸ், நோ." என்ற ராகுல் தொடர்ந்து, தன் செல்ஃபோனைத் திறந்து, "ஷி இஸ் நீரஜா, நான் இவளதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு "இவளும் நம்ம ஜாதிதாம்பா" என்றான்.

"என்னது? எனக்கே மயக்கம் வரும் போல இருக்கே.." என்றதும், தாத்தா, "எனக்கு மயக்கம் வந்ததில் என்ன ஆச்சர்யம்? என்னோட பேரக் குழந்தைகளில் இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்காத முதல் ஆசாமி இவன்தான். சரி, சீக்கிர்ம் நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.

ராகுல், "சக்ஸஸ்" என்று நீரஜாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவள் முத்த ஸ்மைலி ஒன்றை பதிலாக அனுப்பினாள்.


5 comments:

  1. நேர்த்தியாக கையாளப்பட்ட அழகான கதை. அளவாய் செதுக்கியது போல நடை.

    ReplyDelete
  2. பானுமதி.வெ.February 6, 2026 at 9:33 AM

    மிக்க நன்றி ஸ்ரீராம். எங்கள் பிளாகில் பாராட்டி விட்டீர்கள், மீண்டும் இங்கும் வந்ததில் ரொம்ப சந்தோஷம். வாட்ஸாப்பில் பகிர சுலபமாக இருக்குமே என்பத்ற்காகத்தான் இங்கே பகிர்ந்தேன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல கதையமைப்பு. இறுதியில் தாத்தாவின் மயக்கத்திற்கு காரணத்தை தாத்தாவின் வாயிலாகவே சொல்ல வைத்த தங்களது ட்விஸ்ட் நன்றாக உள்ளது. சுருக்கமாக சொல்ல வருவதை அழகாக எழுதும் கலையில் நீங்கள் வல்லவர். உங்கள் இத்திறமையை நான் எப்போதுமே மிகவும் விரும்புவேன். உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இங்கும் ஒரு தடவை இந்த ரத்னசுருக்கமான நல்ல கதையை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. Mami kalakkarel pongo

    ReplyDelete
  5. மிக அருமை

    ReplyDelete