கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 19, 2026

நான் படித்த புத்தகம் - ஆஹா இன்ப நிலாவினிலே - புத்தக விமர்சனம்


நான் படித்த புத்தகம்


ஆஹா இன்ப நிலாவினிலே 

ஆசிரியர்: மஞ்சுளா சுவாமினாதன்

புஸ்தகா வெளியீடு



எந்த குழு சிறுகதை, நாவல் போட்டிகள் போன்றவை நடத்தினாலும் அதில் பரிசு பெறும் பெயர்களில் மஞ்சுளா சுவாமிநாதன் என்னும் பெயரை பார்க்கலாம். நிறைய இதழ்களிலும் எழுதுகிறார். அவருடைய சிறுகதை தொகுப்புதான் 'ஆஹா இன்ப நிலாவினிலே'.

மொத்தம் பதினாறு கதைகள். எல்லாமே தற்கால சூழலை கூறுபவை. இந்த நவீன யுகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கூறியிருப்பதோடு, அவற்றிர்கான தீர்வையும் கூறியிருக்கிறார். 

'டிரைவர் அங்கிள்' என்னும் முதல் கதையில் எல்.கே.ஜி.யிலிருந்து சென்ற பஸ் டிரைவர் ஒரு குழந்தையை இட்லி என்று செல்லமாக அழைக்கிறார். அந்தக் குழந்தை வளர்ந்து, திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி விடுகிறாள். தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு வரும்பொழுது தன்னை 'இட்லி' என்றழைத்த டிரைவர் அங்கிளை பார்க்கிறாள். இப்போதும் தன்னை இட்லி என்றழைக்கும் அவரிடம்,"என் பேர் என்னனு சொல்லுங்க பார்க்கலாம்" என்று அவள் கேட்க, "இட்லினு கூப்பிட்டே பழகிடுச்சு, உன் பேர கேட்கணும்னு தோணவே இல்ல" என்கிறார். அப்போதுதான் அவளுக்கும் தானும் அவரை "டிரைவர் அங்கிள்" என்றுதான் அழைத்ததும், அவர் பெயரை தெரிந்து கொள்ள தோணவே இல்லை" என்பதும் உறைக்கிறது. நுட்பமான சிந்தனை!

தனக்கு பிடித்த ஒரு எழுத்தாளர், அதுவும் தந்தையின் நண்பரை நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட ஏமாற்றத்தை சொல்கிறது 'டமால்,குணால்' கதை. 

திருமணமாகி இருபது வருடங்கள் ஆன பிறகும் தனக்கு புகுந்த வீட்டில் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் பெண்ணிற்கு(அம்மாவிற்கு) ஆறுதலும், தேறுதலும் அளிக்கும் மகனை 'அங்கீகாரம்' கதையில் பார்க்கிறோம்.

காதலித்த காலத்தில் கண்ட பல கனவுகளை நிதர்சனத்தில் நடத்திக் கொள்ள முடியாவிட்டாலும், குழந்தைகளின் அன்பே அவை எல்லாவற்றையும் விட பெரிது என்று உணர்த்தும் கதை 'ஆஹா இன்ப நிலாவினிலே'

தாத்தாவோடு நெருங்கிய பந்தமும், பாசமும் கொண்ட பேத்தி அவருக்கு உடம்பு சரியில்லை என்பதை கேள்விபட்டு அவரோடு ஒரு வாரத்தை சந்தோஷமாக கழித்து விட்டு, இனிமேல் தாத்தாவுக்கு என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாள். தாத்தாவோடோ, பாட்டியோடோ அல்லது வேறு ஏதோ ஒரு சொந்தத்தோடு அன்னியோன்ய்மாக இருந்திருக்கும் எல்லோருமே இந்தக் கதையோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியும்.

தன் நணபனின் காதலி, எதிர்கால மனைவியை சந்திக்கும் ஒருவன் அவள் தனக்குதான் பொருத்தமானவள் என்று கருதி அதை அவளிடமே சொல்கிறான். அவனுடைய தவறை அவனுக்கு அழகாக சுட்டிக் காட்டுகிறாள் அந்தப் பெண். சபாஷ் சொல்ல வைக்கும் நவீன பெண்!

மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டு, கல்யாண மண்டபத்தை தேடி பெற்றோர்கள் அலையும் பொழுது, நிச்சயிக்கப்பட்ட பையன் தனக்கு ஒத்துப் போகவில்லை என்று திருமணத்தை நிறுத்தி விடுகிறாள். இதனால் கோபம் அடைந்த தந்தை மகளோடு பேசுவதை நிறுத்துகிறார். மனைவிக்கும் அவருக்கும் எப்போதுமே அத்தனை நல்ல உறவு இல்லை. தனிமையில் வாடும் அவரை ஒரு விடுமுறைக்குச் செல்ல அறிவுறுத்துகிறார் அவர் நண்பர். அதன் பிறகு மகள் மீது அவருக்கு இருந்த கோபம் மாறுகிறது. இந்தக் கதையில் திருமணத்தை நிறுத்திய பெண்ணை குற்றம் சொல்லாத மனப்பாங்கு எனக்கு பிடித்தது.

'நீ என்ன தப்பு செஞ்ச?' கதையில் நவீன உலகில், பிற ஆணோடு நட்பு கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் அதை எதிர் கொள்ள அவளுடைய கணவன் உதவ முன்வருகிறான் என்பது மூலமும், ஆண்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்.

வழுக்கை வரதன் மூலம் தன் நகைச்சுவை உணர்வை நிரூபித்திருக்கிறார். 

'கௌரி கல்யாணமும், எண்ணெய் பிசுக்கும்' ஒரு யதார்த்தமான சம்பங்களைக் கொண்ட சுவாரஸ்யமான படைப்பு.

ரைட்டர்ஸ் கஃபே சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற 'ஊன்றுகோல்' ஏதோ ஒரு குறையோடு பிறந்த குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அருமையாக அறிவுறுத்தும் கதை. 

'துளிர்' என்னும் கதையில் திருமணம் நிச்சயம் ஆன பிறகு அந்த ஆணும்,பெண்ணும் முதல் முறையாக வெளியே செல்ல விரும்புகிறார்கள். இருவருக்குமே ஏகப்பட்ட கற்பனைகள். ஆனால் குறுக்கே நிற்பது பழமையில் ஊறிய அந்த பையனின் தாய். அவன் தாய் மனதையும் நோகடிக்காமல், தன் விருப்பத்தையும் நிறைவேற்றியதை பார்த்த பிறகு அவன் மீது அவளுக்கு காதல் பிறக்கிறது.  நிகழ்காலத்தை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

நமக்காக நாம் செய்து கொள்ளும் காரியங்களை விட, மற்றவர்களுக்காக நாம் செய்யும் காரியங்கள்தான் திருப்தி அளிக்கும் என்றால் அதைச் செய்ய வேண்டும் என்பதை 'ஒரு நாள்' கதையில் வலியுறுத்தியிருக்கிறார்.

அன்பு, அக்கறை, காதல் என்ற பெயரில் அளவிற்கதிகமாக மனைவிக்கு பர்சனல் ஸ்பேஸ் கொடுக்காமல் அவளுடைய பிரைவஸியில் குறுக்கிடுவது சரியில்லை என்று 'இதுவும் அத்துமீறல்தான்'என்ற கதையில் துணிச்சலாக கூறியிருக்கிறார்.

'அநாயாச மரணம்' கதை மிகவும் வித்தியாசமான கரு. 

அன்பை வலியிறுத்துகிறது 'வினையும், விளைவும்' கதை

பரபரவென்ற எழுத்து. "கதை நடுவில் ஒரு ட்விஸ்ட், இறுதியில் ஒரு ட்விஸ்ட் என்றெல்லாம் யோசிக்கவில்லை, என் மனதிற்கு பட்டதை, உகந்ததை எழுதியிருக்கிறேன்'' என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். குற்றம் சாட்டாத மனப்பாங்கும் பிடித்திருக்கிறது. 


10 comments:

  1. நல்லதொரு அறிமுகம்.  நீங்கள் எடுத்துக் காட்டி இருக்கும் சிறுகதைகள் யாவுமே மனத்தில் இடம்பெறுகின்றன. 

    ReplyDelete
    Replies
    1. ஆம், சிறப்பான கதைகள்.

      Delete
  2. எழுத்தாளரை நான் பார்த்திருக்கிறேன், ஓரிரு வார்த்தைகள் பேசியும் இருக்கிறேன்.  திறமையானவர்.  இவரைப்பற்றி செல்லப்பா ஸார் மேடையில் பத்திரிகாசிரியர் கிரிஜா ராகவன் மேடையிலேயே பாராட்டிப் பேசினார்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.August 20, 2026 at 4:35 AM

      அந்த நிகழ்சியின் காணொளியை நானும் பார்த்தேன்.

      Delete
  3. பேஸ்புக்கிலிருந்து அப்படியே எடுத்துக் போட்டீர்களா தெரியவில்லை.  பதிவு வித்தியாசமாக இருக்கிறது.  பாதகமில்லை.  படிக்க முடிகிறது.  ஓரிரு எழுத்துப் பிழைகள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.August 20, 2026 at 4:37 AM

      கோ பைலட்டில் டைப் செய்தது. Co pilot is not user friendly.

      Delete
  4. புத்தக விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. Bhanumathy VenkateswaranAugust 20, 2026 at 4:38 AM

    நன்றி கோமதி அக்கா.

    ReplyDelete
  6. காலை வணக்கம். நல்லதொரு நூல் அறிமுகம். கதைகள் பற்றி நீங்கள் கொடுத்த விமர்சனம் நூலை வாசிக்கத் தூண்டுகிறது.

    எழுத்துப் பிழைகள் சரி பார்த்து வெளியிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  7. Bhanumathy VenkateswaranAugust 22, 2026 at 2:15 AM

    நன்றி வெங்கட். பிழைகளை திருத்தி விட்டேன், நன்றி. எதிர்காலத்தில் கவனமாக இருக்கிறேன்.

    ReplyDelete