கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 16, 2026

நோயற்ற வாழ்வே - ஜெ.பாஸ்கரன் (நூல் விமர்சனம்)

 நோயற்ற வாழ்வே

Dr.ஜெ.பாஸ்கரன்


அறிவியல் கட்டுரை அல்லது மருத்துவ கட்டுரை போன்றவைகளை சுவையாக எழுதுவது சற்று கடினம். தகவல்களும் இருக்க வேண்டும், சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்றால் கட்டுரையாளர் அந்த துறையில் இருப்பதோடு, எழுத்தாளராகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது. டாக்டர். பாஸ்கரன் ஜெயராமன் மருத்துத்துவத்தை தொழிலாக கொண்டவர், அதே நேரத்தில் எழுத்தில் ஆர்வம் கொண்டவர், இதனால்தான் அவரால் சுவையான மருத்துவ கட்டுரைகளை எழுத முடிந்திருக்கிறது.

கல்கி, கல்கி ஆன்லைன், குமுதம், குமுதம் சிநேகிதி, குமுதம் டாக்டர், அமுதசுரபி, பூபாளம், கலைமகள், குவிகம் போன்ற பல பத்திரிகைகளில் வெளியான மருத்துவ கட்டுரைகளை தொகுத்து ‘நோயற்ற வாழ்வே’ என்னும் புத்தகமாக கொணர்ந்திருக்கிறார்.

அவர் சந்தித்த வித்தியாசமான நோயாளிகள், அவர்களை அவர் குணப்படுத்திய விதம் எல்லாம் வெகு சுவாரஸ்யம்! மாமியார் படுத்தலாலும், கணவனின் மீதிருந்த கோபத்தாலும் பேசுவதை நிறுத்திக் கொண்ட பெண்ணை பேச வைத்ததையும், உடம்பை சொறிந்து கொண்டே இருந்த பத்து வயது பெண் குழந்தையை குணமாக்கிய விவரமும் சிறுகதைக்கு ஒப்பான சுவாரஸ்யம்!

நவீன இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் சைபர்கோண்ட்ரியா என்னும் வியாதி பற்றி விவரித்திரிப்பதும், டிமென்ஷியாவுக்கும், அல்சீமர்க்கும் உள்ள வித்தியாசம் பற்றி தெளிவு படுத்தியிருப்பதும் பாமரர்களுக்கும் புரியக் கூடிய எளிமை!

தோல் நோய் நிபுணராக இருப்பதாலோ என்னவோ தோல் வியாதிகளைப் பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கண்ட களிம்புகளையும், காய்கறி, பழச்சாறு போன்றவைகளையும் முகத்தில் தடவிக் கொள்வது சரியே கிடையாதாம்.  

கட்டுரைகளின் தகவல்கள் இவர் ஒரு மருத்துவர் என்று தெரிவித்தாலும், அவற்றின் முத்தாய்ப்பு இவர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்று நிரூபிக்கின்றன.

நண்பர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால் இந்த புத்தகத்தை பரிசளியுங்கள். பெற்றுக் கொண்டவர்களின் வாய் மட்டுமல்ல, மனமும் வாழ்த்தும்.

No comments:

Post a Comment