வரமா? சாபமா?
என்னுடைய 'நாள் நல்ல நாள்' என்னும் பதிவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிப்பது என்பதை பற்றி நகைச்சுவையாக எழுதியிருந்தேன். ஆனால் சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் இதைப் பற்றிய செய்தி ஒன்றை படித்த பொழுது அதே விஷயத்தை கொஞ்சம் சீரியசாக யோசிக்கலாமோ என்று தோன்றியது.
மேற்கண்ட செய்தியை மேலெழுந்தவாரியாக பார்த்தால் பெண்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகத்தான் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்...?
மேலும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆசிரியைக்கும் மாதம் மூன்று நாட்கள் விடுமுறை என்பது எவ்வளவு பெரிய சிக்கல்? அன்றைக்கு தேர்வு இருந்தால் அதிலிருந்தும் விலக்கு கோருவார்களா ? தவிர பெண்களின் அந்த வலியையும், வேதனையையும் உணர முடியாத விடலை பருவ ஆண்கள், "இவர்களுக்கு வேறு வேலை கிடையாது," என்றோ, "உங்களுக்கு என்ன மாதம் மூன்று நாள் ஜாலியாக லீவு போட்டு விடுவீர்கள்" என்றோ கேலிதான் பேசுவார்கள்.
மாத விலக்கின் பொழுது எல்லா பெண்களுக்கும் வயிற்று வலி வரும் என்று கூறி விட முடியாது. அப்படியே வந்தாலும் அது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்காது. அப்பொழுது, சூடாக ஏதாவது குடித்து விட்டு,கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும். எனவே பள்ளிகளில், ரிட்டயரிங் ரூம் ஒன்று கட்டி, வயிற்று வலியால் அவதிப் படும் பெண்களை ஓய்வெடுக்கச் சொல்லலாம். வேண்டுமென்றால் வலி நிவாரணி மருந்துகளை தரலாம். இன்னும் நிஜமான அக்கறை இருந்தால் யோகா பயிற்சிகள் கொடுத்து வயிற்று வலியை சமாளிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய, விடுமுறை அளிப்பது பயன் அளிக்காது.
என்னுடைய இரண்டாவது அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். அவர் வயதுக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டாராம். ஒரு முறை ஊரிலிருந்த வந்திருந்த எங்கள் பெரிய மாமா,(அவருக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு) என் அக்காவுக்கு கவுன்சிலிங் கொடுத்து பள்ளி செல்ல வைத்தாராம். அதுதான் முறையான செயல்.
அலுவலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பணி புரியும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்கள் செயல் திறன் குறைவாக மதிப்பிடப்படாதா? கட்டிட வேலை, வயல் வேலை, ஏன் திரைப்பட துறையில் கூட ஆண்களுக்கு வழங்கப் படும் சம்பளம் பெண்களுக்கு கிடையாது. காரணம், ஆண்கள் செய்யும் அளவிற்கு, பெண்களால் வேலை செய்ய முடியாது என்பதுதான். மாதம் மூன்று நாள் விடுமுறை என்பதை ஒப்புக் கொண்டால், எல்லா துறைகளிலும் ஆண்கள் அளவு பெண்கள் செயலாற்றுவதில்லை என்று குறிப்பிட்டு, பெண்களுக்கு சம்பளத்தை குறைத்தால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா?
பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போது மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. காடு,கழனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த தொந்திரவுகள் கிடையாதா? இந்த திட்டத்தை வரவேற்பவர்கள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தயாரா?
பெண்கள் பணியாற்ற மிகவும் கடினமான துறைகளான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, திரை உலகில் தொழில் நுட்ப பிரிவுகள் ஆகி இவற்றில் பெண்கள் புகுந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் சிறகுகளை வெட்டும் முயற்சியாகத்தான் இது எனக்குப் படுகிறது.
































