கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, March 13, 2021

மசாலா சாட் - 23

 மசாலா சாட் - 23


பெங்களூரிலிருந்து டில்லிக்கு விஸ்தாராவில் பயணப்பட்டோம். விமான நிலையம் பழையபடி ஆகி விட்டது. மாஸ்க் அணிந்திருப்பது மட்டுமே மாறுதல். விமானம் முழு கொள்ளளவில் இருந்தது. நடு இருக்கையில் அமர்ந்திருப்பவர் முழு  பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும் என்னும் விதியை என்னருகில் அமர்ந்திருருந்த பெண்மணி கடை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் அவருடைய தாத்தாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தோடு (ஏறக்குறைய பதினைந்து பேர்கள்) சென்று கொண்டிருந்தார்கள். பிளேன் டேக் ஆஃப் ஆனதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கும்  உபசாரம்! 

இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது.  முதல் விமானப் பயணம் என்று  தோன்றியது.  விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது. 

டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும்  போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது.  எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன். 

சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார்.  முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.

திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை. 

கூரத்தாழ்வார் சன்னதி

கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில்

எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை. 


ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி  வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம். 

ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன.  ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 


Saturday, March 6, 2021

சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்

 சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப் 


டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.







 நகரின் மையத்தில் இத்தனை பெரிய பூங்கா அமைந்திருப்பது ஆச்சர்யம்தான். அது நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. 





நாங்கள் உள்ளே சென்ற பொழுது அழகாக அலங்கரித்துக் கொண்ட ஒரு யுவனும்,யுவதியும் புகைப்பட கலைஞர் தொடர உள்ளே வந்தனர். போட்டோ ஷூட் ஆக இருக்கும் என்று தோன்றியது. இன்னொரு பக்கத்தில் ஒரு மரத்தின் ஒரு பக்கத்தில் நீல நிற பலூன்கள், மற்றொரு பக்கத்தில் பிங்க் நிற பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்க கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது ஒரு சீக்கிய குடும்பம். வெட்டிங் போட்டோ ஷூட் போல, இந்த ப்ரெக்னென்சி போட்டோ ஷூட்டும் இப்போது பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு விஷயமாச்சே!



நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள். 




வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன். 


இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது. 


அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து  கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம்.  மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும்,  அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.   

அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ? 




சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை  கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.     







ஹுமாயூன் கல்லறை 



கல்லறையின் மேல் விதானம் 

ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம். 


இந்தியா கேட் அருகே  அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது  யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 


தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர்


  


 


Monday, March 1, 2021

பெயர் சூட்டும் வைபவம்

பெயர் சூட்டும் வைபவம் 


என் மருமகளுக்கு பேறு காலம் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து, மார்ச் முதல் வாரத்திற்குள் என்றுதான் முதலில் கூறினார்கள். ஆனால் ஜனவரியில்,  பிப்ரவரி 16லிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லி விட்டதால், நானும் என் மகனும் பிப்ரவரி 14 பெங்களூரிலிருந்து, டில்லிக்கு பயணப்பட்டோம். அதன்படியே பிப்ரவரி 17 காலை அவளுக்கு பனிக்குடம் உடைந்துவிட, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவளை அப்சர்வேஷனில் வைத்து, ட்ரிப் ஏற்றி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழுவதற்காக வலி வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தொடங்கினார்கள். 

ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் பொழுது நான் குளித்து விட்டுதான் கிளம்பினேன். ஆனால் என் மருமகளின் தாயார் குளிக்காமல் வந்து விட்டார். அவரிடம்,"குழந்தை பிறப்பதற்கு எப்படியும் இன்று இரவு, அல்லது நாளைக்  காலை ஆகி விடும்,ஆகவே நீங்கள் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்றேன். அவர் குளித்து, சமையல் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நானும், கீழே வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானாவில் என் மகனும் காத்திருந்தோம். நான் கீழே சென்று என் மருமகளை பார்த்து விட்டு மேலே வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், என் மகன் கைபேசியில் அழைத்தான்.  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதுதான் நல்லது. வெய்ட் பண்ணி பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க், உங்கள் மனைவியோடு டிஸ்கஸ் செய்து விட்டு கூறுங்கள் என்றார்களாம். டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கிறது? சிசேரியன் செய்து விடுங்கள் என்றார் கூறி விட்டேன்" என்றான். நான் உடனே கீழே இறங்கி வந்தேன். சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்தார்கள். "பெண் குழந்தை, பாருங்கள்"என்று ஹிந்தியில் கூறி துணியை விலக்கி காண்பித்து, "உங்களுக்கு வேண்டுமென்றால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்கள். என் மகன் தன் மகளை செல் போனில் படமெடுத்து செல்(ல) மகளாக்கினான். 

என் மருமகளுக்கு பிள்ளைதான் பிறக்கும் என்று எல்லோரும் கூறியதால் அவர்கள் ஆண்  குழந்தைக்கான பெயர்களை மட்டும் யோசித்து வைத்திருக்கின்றனர். இப்போது பெண் என்றதும் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.  என் ஒரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருக்கிறாள், சியாமளா நவராத்திரி சரஸ்வதி தேவிக்கானது எனவே  சரஸ்வதியின் பெயர் ஏதாவது வையுங்கள்" என்றார். இன்னொரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருப்பதால் பெயரில் ஸ்ரீ வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார். 

என்னை பொறுத்தவரை "எங்கள் ஊர் பெண் தெய்வம் ஹேமாம்பிகா, அதை அப்படியே வைத்தாலும் சரி, ஹேமா என்று சுருக்கமாக வைத்தாலும் சரி, என்று கூறி விட்டேன். அவர்கள் ஹேமாம்பிகா என்பதை தேர்ந்தெடுத்தார்கள். "உன்னுடைய கோட்டா முடிந்து விட்டது, ஒதுங்கிக்கொள்" என்றாள் மகள். 

சரஸ்வதி அஷ்டோத்திரத்தை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில் 'ரிதன்யா' என்னும் பெயர் எனக்குப் பிடித்தது. இப்போ இருக்கும் ட்ரெண்ட் ,"பெயரை ஒரு முறை கேட்டால் புரியக் கூடாது, அந்த வகையில் ரிதன்யா ஓகே" என்று மகன் கிண்டலடித்தான். இருந்தாலும் ஷார்ட் லிஸ்ட் செய்தார்கள். 

அம்பாளின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் 'த்ரயீ' விசேஷமான பொருள் கொண்டது. ஆனால் மருமகளின் பெரியப்பா பேத்திக்கு த்ரயீ என்றுதான் பெயர். எனவே மறுதலிக்கப்பட்டது. 'வாகீஸ்வரி' என்று நான் கூறியதும், என் மகன்,"நான் வைத்து விடுவேன், கொஞ்ச நாள் கழித்து,  தந்தையே ஏன் எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்தீர்கள்? என்றால் என்ன செய்வது?" என்றான். மருமகளோ, "இப்படியெல்லாம் பெயர் வைத்தால் அவள் மாற்றிக் கொண்டு விடுவாள்" என்றாள். "நித்யஸ்ரீ?" நல்ல பெயர்தான். ஆனால்  பழசு" நித்யஸ்ரீயே பழசு என்பவர்கள் மருமகளின் பாட்டி கூறிய ஸ்ரீவித்யாவை ஏற்பார்களா? 

மிதாலி என்று என் மருமகள் கூறிய பெயர் ரொம்பவும் வட இந்திய வாடை வீசியதால் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு சில பெயர்கள் ஆந்திர பெயர்கள் போலவும், சில பெயர்கள் மலையாள பெயர்கள் போலவும் தோன்றின. என் சம்பந்தி 'அக்ஷரா' என்னும் பெயரை பரிந்துரைத்தார். என் மகன்,"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் கமலஹாசன் மகள் பெயரை வைக்க வேண்டுமா?" என்றான். இது அம்பாள் பெயர் என்று அவனை கன்வின்ஸ் செய்தோம். அதுவும் ஷார்ட் லிஸ்டில் சேர்ந்தது. 

நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை. நிஹாரிகா என்று என் மகன் கூறியதும் நாங்கள் யாரும் பதில் பேசவில்லை. 

ஒரு பெயருக்கு இவ்வளவு யோசனையா? முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பார்கள், அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்களோ அந்த பெயரை மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள். அது பெரும்பாலும் குல தெய்வத்தின் பெயராக, அல்லது அவர்கள் ஊர் கோவிலில் குடி கொண்டிருக்கும் சாமியின் பெயராக, அல்லது குடும்பத்தில் இருந்த யாராவது பெரியவர்களின் பெயராக, இருக்கும். இப்படி மண்டையை உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

எப்படியோ பல பெயர்களை அலசி, ஆராய்ந்து சாமியின் பெயரான ஹேமாம்பிகா, சியாமளா நவராத்திரியை முன்னிட்டு அக்ஷரா, தாயும், தந்தையும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நவ்யா என்னும் பெயரோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்னும் பெயர்களை சூட்டினோம். இதில் நவ்யாஸ்ரீ என்னும் பெயர்தான் பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்கப் போகிறார்கள். நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம். 

இந்த பெயர் சூட்டும் வைபவத்திற்கு என் அழைப்பை ஏற்று நம் வெங்கட் அவர்கள் வந்து கௌரவித்தார். 

 

Thursday, February 25, 2021

மந்திரச்சொல்

 மந்திரச்சொல்

வேலை செய்யும் பொழுது யூ ட்யூபில் இசை,அல்லது சொற்பொழிவுகள் கேட்பது என் வழக்கம். அப்படி சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்ட பொழுது, ஒரு சொற்பொழிவில் அவர் சிலர் வாழ்க்கையில் சில சமயங்களில் யாரோ ஒருவர் கூறிய சில வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையையே  மாற்றி விடும் என்று கூறி விட்டு, அதற்கு உதாரணமாக திருநீலகண்ட  நாயனார்  வாழ்க்கை, அருணகிரி நாதர் வாழ்க்கை முதலியவற்றை குறிப்பிட்டார். அதைக் கேட்ட பொழுது என் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

என் கடைசி அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்திருந்த நேரம். அப்போதெல்லாம் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் வரவில்லை. எனவே ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு நாம்தான்  உணவு கொண்டு போக வேண்டும். என் அக்காவுக்கு நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று என் அம்மாவை வீட்டிற்கு அனுப்பினேன். 

நான் அங்கிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் எழுப்பிய  சத்தம் என் அக்காவின் அறை வரை கேட்டது. அதை கேட்டு விட்டு நான் என் அக்காவிடம், " பொறுத்துக் கொள்ள முடியாமல்  இப்படி கத்தும் அளவிற்கு வலிக்குமா?"  என்றதும் என் அக்கா, "அப்படி எல்லாம் இல்லடி, பொறுத்துக்கணும்னா பொறுத்துக்கலாம், கத்தறதுனா கத்தலாம்" என்றாள்.  எனக்கு அது ஒரு மந்திரச் சொல்லாகப் பட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வது என்றால் பொறுத்துக்  கொள்ளலாம், கத்தறது என்றால் கத்தலாம் என்று தோன்றும். நாம் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்! வெகு சிலரே பொறுமையாக சகித்துக் கொள்வார்கள். எனக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். பொறுத்துக்கொள்வது என்றால் பொறுத்துக்கொள்ளலாம், கத்துவது என்றால் கத்தலாம். 

இதைப்போன்ற இன்னொரு மந்திரச்சொல் உண்டு.

 மந்திரச்சொல் -2  

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வாசல் போர்டிகோவில் அமர்ந்து பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மாமி  "நீ இப்போது உன் மனதில் எதைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். நான், "நாளைக்கு எக்ஸாம், என்ன மாதிரி கேள்விகள் வரும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். உடனே அவர், "ராமகிருஷ்ணா பரமஹம்சர், யாராவது நம்மிடம் வந்து நீ எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், நானா? ஒரு பூவைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லக் கூடிய  விதத்தில் நம் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதை உன்னிடம் சோதிக்கலாம் என்று கேட்டேன்" என்றார்.  எவ்வளவு அருமையான அறிவுரை! மனது கொஞ்சம் தாறுமாறாக போகும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். 

அந்தப் பக்கத்து வீட்டு மாமி யார் தெரியுமா? இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியிருக்கிறாரே திருச்சி  கே.கல்யாணராமன், அவருடைய தாயார். 

Sunday, February 14, 2021

மசாலா சாட்!

மசாலா சாட்!

பகுள பஞ்சமி அன்று யூ ட்யூபில் வெளியிட சத்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி பேசி அனுப்ப கேட்டிருந்தார்கள். அதற்காக திரட்டிய தகவல்களில் இதுவரை கேள்விப்படாத சில சங்கதிகள்:

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பினாராம். அப்போது இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் மீது ஆனந்த பைரவி ராகத்தில் பல பாடல்களை பாடியிருப்பதை கேட்ட பிறகு,அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து, தியாகராஜர்  அதற்குப் பிறகு ஆனந்த பைரவி ராகத்தில் பாடப் போவதில்லை என்று முடிவெடுத்தாராம். 

தியாகராஜர் சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிடம் இவற்|றிலும் வல்லவராக இருந்தாராம். 

ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், போன்ற புகழ் பெற்ற இசை நாடகங்களும் எழுதியிருகிறார்.  

பஜனை சம்பிராதய வழியில் திவ்ய நாம கீர்த்தனங்கள், உற்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் போன்றவைகளையும் இயற்றியிருக்கிறார். 

***********************************************************************************

மனதார சொல்கிறேன், என்று கூறும் பொழுது நம் கையை இதயம் இருக்கும் இடத்திற்கருகே வைத்துக் கொள்வது நம் பழக்கமாக இருந்தாலும்,  மனம் என்பது எது? அப்படி நிஜமாகவே ஒன்று உண்டா? மனமும், மூளையும் ஒன்றுதானா? என்று பல சந்தேகங்கள் உண்டு. மனம் என்று தனியாக ஒன்று கிடையாது, அது எண்ணங்களின் தொகுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் மனம் ஒரு குரங்கு என்னும் கூற்றில் சந்தேகம் இருக்க முடியாது. அதை அடக்குவதும் ஆள்வதும் பிரும்ம பிரயத்தனம்தான். இல்லாத ஒன்று என்ன பாடு படுத்துகிறது? அன்று சௌந்தர்யலஹரி வகுப்பில் திரிஷா என்று ஒரு வார்த்தை,  காது கேட்பதை, வாய் சொல்லிக் கொண்டிருக்க,  இந்த பொல்லாத மனம், அழகான அஜித்தைப் பார்த்து, மிக அழகான திரிஷா, "இப்படி ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போனால்மா நாங்களெல்லாம் என்ன செய்வது?" என்று கேட்கும் காட்சிக்கு தாவி விட்டது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகப் போனது. 

தடந் தோளினாய்! மனம் அலையும் தன்மையது, அதை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அப்பியாசத்தாலும், வைராக்கியதாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கீதாச்சார்யன். வைராக்கியம்.. அதுதானே குறைவாக இருக்கிறது.  

***********************************************************************************

என் மகன் காதி சோப்தான் உபயோகப்படுத்துவான். இப்போது காதி சந்தன சோப் பயன்படுத்திகிறான். குளித்துவிட்டு வந்தால் வீடே மணக்கிறது. இன்று அவன் குளித்து விட்டு வந்ததும், ஒரே கம கம மணம். அது எனக்கு ஒரு பழைய விளம்பரத்தை நினைவூட்டியது.

கம,கமா, நிதம் நிதம் கம கமா

இதென்ன சரிகமா? ஏதாவது சுரமா?

நறுமண சுரம் 

புதுவிதமா?

எக்ஸோடிகா டால்கம் கம,கமா 

சரி சரி சரி 

யாருக்காவது இந்த விளம்பர பாடல் நினைவிருக்கிறதா?

*************************************************

இரண்டு வார்த்தைகளால் எந்த கதவையும் திறக்க முடியும் 

அப்படியா?

ஆமாம், தள்ளு, இழு... 

இந்த ஜோக் கூகுள் சொன்னது. அவ்வப்பொழுது செல் போன் திரையில் ஒரு மைக் தோன்றி, இதை சொல்லிப் பாருங்கள் என்று ஒரு தமிழ் வார்த்தை தோன்றும். இன்று, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்டு, கீழே ஒரு கட்டத்துக்குள்  ஒரு ஜோக் சொல்லு, என்ற ஆணையும் இருந்தது. சரி என்று அழுத்தினேன், அப்போது வந்த ஜோக் இது. 

ஒரு திரைப்புதிரோடு முடித்துக் கொள்கிறேன். 

தமிழ் திரையுலகில் சகோதர,சகாதரிகள் நடித்திருக்கிறிர்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி சிலரை நினைவு கூற முடிகிறதா? 

  

Sunday, February 7, 2021

சித்திரமும்...

சித்திரமும்...

எனக்கும் நுண் கலைகளுக்கும் வெகு தூரம். அதுவும் ட்ராயிங்..?சுத்தம்!  பள்ளி நாட்களில் ட்ராயிங் வகுப்புகளில் பென்சில் சீவியே நேரத்தை ஓட்டுவேன். வரைய வேண்டியவைகளை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ராதா என்னும் அக்கா வரைந்து கொடுப்பார். அவர் ஊர் மாறி மதுரைக்குச் சென்றதும் என் அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து கொள்வேன். சயின்ஸ் பரீட்சையில் படம் வரைந்து பாகங்களைக்குறி என்னும்  கேள்விகளை தவிர்க்கப் பார்ப்பேன். என் நினைவில் நானே வரைந்த முதல்படம் முதுகெலும்பின் படம். 

எனக்கு குழந்தைகள் பிறந்ததும்,"இவர்கள் பள்ளியில் ப்ராஜக்ட் பண்ண சொன்னால் என்ன செய்வது?" என்று கவலை வந்தது. ஆனால் என் குழந்தைகள் இரண்டு பேருமே நன்றாக வரைந்து என் கவலையைத் தீர்த்தார்கள். 

இந்த லட்சணத்தில் நான் போடும் கோலம் எப்படி இருக்கும்? ஒரு முறை நான் மஸ்கட் போய் விட்டு திரும்பியவுடன் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி,"பொண்ணு நல்லா கோலம் போடுதம்மா.." என்றாள். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், "நீ நல்லாவே போட மாட்ட.." என்று உண்மையைக்கூறி என்னை நோகடித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுவதிலும் என் திறமையை வளர்த்துக் கொண்டேன். 

இவை நான் போட்ட ரங்கோலி, நீர் மேல் கோலம்,மற்றும் மாக்கோலம் 

இந்த வருடம் கொலு பொம்மையில் வைத்திருந்த வெங்கடாஜலபதி,பத்மாவதி தாயாரின் பொம்மைகள் கலர் மங்கியிருப்பதாக தோன்றியதால், அதை பெயிண்ட் பண்ணி வைத்தேன். பார்த்தவர்கள் அழகாக இருப்பதாக கூறினார்கள். 

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஒரு மண் பானையில் தயிர் வாங்கி வந்தான். தயிர் தீர்ந்ததும் அதிலேயே மீண்டும் தயிர் தோய்க்க முயற்சி செய்தோம். இந்த பெங்களூர் குளிரில் அதில் தயிர் சரியாக தோயவில்லை. அழகாக இருந்த அந்த குட்டிப் பானையை தூக்கிப் போட மனமில்லை. அதில் பெயிண்ட் பண்ணி பூ ஜாடியாக பயன் படுத்தலாம் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வகையில்  அதை கொஞ்சம் சிம்பிளாக பெயிண்ட் பண்ணினேன். எப்படி இருக்கிறது சொல்லுங்கள். 
 

Friday, January 29, 2021

திரை விமர்சனங்கள்

திரை விமர்சனங்கள் 

சில்லு கருப்பட்டி: 


தொலைகாட்சியில்தான் பார்த்தேன் சில்லு கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி படத்தை. ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் படம். நான்கு விதமான காதல்களை பேசுகிறது. முதல் கதையில்(Pink bag) குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கு தினமும் பிங்க் நிற பையில் குப்பைகளை போடும் ஒரு பெண் மீது ஏற்படும் லயிப்பு. சாரா அர்ஜுனும்(சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்) ராகுலும் நடித்திருக்கும் படம். இதில் வசனங்கள் மிகவும் குறைவு. பின்னணி இசை அற்புதம்!  அடுத்த கதை காக்கா கடியில் மீம்ஸ் கிரியேட்டரான, கான்சரில் பாதிக்கப்பட்ட  ஒரு ஐ.டி. இளைஞனுக்கும், அவனோடு காரில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை  சொல்கிறது  மணிகண்டனும், நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். டர்டில் என்னும் இந்தப் படம் முதியவர்களின் காதல் என்னும் கத்தியில் நடப்பது போன்ற விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணிக்கும்(லீலா சாம்சன்), மனைவியை இழந்து, மகனோடு வாழ்ந்தாலும் தனிமையாக உணரும் ஒரு முதியவருக்கும்(க்ரவ் மேக ஸ்ரீராம்) இடையே அரும்பும் காதலை காட்டுகிறது. மிகவும் டெலிகேட்டான ஒரு  விஷயத்தை கண்ணியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.  கடைசி கதை ஹே அம்மு. சமுத்திர கனியும், சுனைனாவும் நடித்திருக்கும் இந்தக் கதை திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற, குடும்ப வாழ்க்கையின் ரொடீனில் காதலித்த தொலைத்த அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு கணவன், மனைவி இழந்த தங்கள் காதலை மீட்டெடுக்கும் கதை. மிக மிக இயல்பான இந்த படத்தை பார்க்கும் நடுத்தர வயதினர் பலர் தங்களை இதில் அடையாளம் காண முடியும்.  எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் சமுத்திர கனியும், சுனைனாவும் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள். மிகச் சிறப்பான வெளிப்பாடு. சுனைனா இவ்வளவு நன்றாக நடிப்பாரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமுத்திரக்கனியின்  
இதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய சில எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம்!காட்சி அமைப்புகளும், வசனங்களும் வெகு இயல்பு.  எல்லா படங்களுமே மிகவும் கண்ணியமாக, ரசிக்கும்படி எடுக்கப் பட்டிருக்கின்றன. நான்கு படங்களுக்கும் நான்கு ஒளிப்பதிவாளர்கள். இந்தப் படத்தின் மூலம் இரு விருதுகளை வென்றுள்ள ஹலிதா ஷமீம் நம்பிக்கையூட்டுகிறார். பெரிய நட்சத்திரங்கள் இவரை மசாலா உலகிற்கு இழுத்து வராமல் இருக்க வேண்டும்.  

மாறா:  

திரையரங்குகளுக்குச் செல்லாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள படம். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மௌலி,ஷிவ்தா முதிலியவர்கள் நடித்திருக்கும் படம். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டாண்ட் அப்  காமெடியன்  அலெக்ஸ்  திருடனாக வந்து சிரிப்பூட்டுகிறார். மலையாளத்தில் வந்து விருதுகளை குவித்த சார்லி என்னும் படம்தான் ரீ மேக் ஆகியிருக்கிறது. அதனாலோ என்னவோ மலையாளம் படம் பார்க்கும் உணர்வு. அவர்களால்தான் ஒரு காதல் கதையை மிஸ்ட்ரி போல எடுக்க முடியும்.  இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா! மலை நாட்டின் அழகை சிறைப்பிடித்து நம் பார்வைக்கு விரித் திருக்கிறது. மலையாள படம் என்று சொல்லி விட்டதால் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மௌலியின் குறிப்பிடத்தக்க படங்களுள் இது ஒன்று. இசை ஜிப்ரான். புதுமுக இயக்குனர் திலிப் குமாருக்கு ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நமக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். 

Monday, January 18, 2021

கலை, கைவினை கண்காட்சி - 2

 கலை, கைவினை கண்காட்சி - 2 







இந்த மாடர்ன் ஓவியம் என்ன உணர்த்துகிறது என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். 




இந்த 3டி ஓவியம் மிகவும் பிடித்தது. பெண்ணின் தோளில் இருக்கும் பென்சில், அதில் கட்டியிருக்கும் நூல் எல்லாமே மிகவும் தத்ரூபமாக இருந்தன. ஏன் மரச்சட்டம் போல் தெரிகிறதே அது கூட ஓவியம்தான்.



எனக்கு இந்த ஓவியம் மிகவும் பிடித்தது. 


பொம்மலாட்டத்திற்கான ராமன், ராவணன், சீதை ஓவியங்கள்.






 

Wednesday, January 13, 2021

கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!

 கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!


உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. தொழில்கள் முடங்கி யிருக்கின்றன, லட்சக்கணக்கில் மரணம், காட்டுத் தீயாய்  பரவிய நோய் இப்போதுதான்  கட்டுக்குள் வந்திருக்கிறது. அதற்குள் இரண்டாவது அலை என்கிறார்கள். சில நாடுகள் மீண்டும் பொது முடக்கம் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில்  மாஸ்டர் என்று ஏதோ ஒரு சினிமாவாம் அது திரையரங்கில்தான் வெளியிடப்பட வேண்டுமாம், மக்களை பற்றியும், அவர்கள் நலனைப் பற்றியும், இதனால் சமூகமும், அரசாங்கமும் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் 100% ஆகுபன்சி வேண்டும் என்று அந்த நடிகர் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். அவருடை ரசிகர்கள் ஏதோ அந்த படத்தை பார்க்காவிட்டால் தங்கள் ஜென்மம் கடைத்தேறாது என்பது போல மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி என்ற பிரக்ஞை இல்லாமல் முன்பதிவுக்கு முட்டி மோதுகிறார்கள். என்ன கொடுமை இது? 

விஜய்க்கு சமூக பொறுப்பு என்பது கொஞ்சமாவது இருந்தால் தன்னுடைய  படத்தை OTTஇல் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது தன் ரசிகர்களுக்கு ஆன் லைனில் மட்டுமே பதிவு செய்து படத்தை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் எப்படி செய்வார்? தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்காதவர்கள்தானே இவர்கள்.  இவர்கள் ஒரு புறம் கோக கோலா  விளம்பரத்தில் நடிப்பார்கள், இன்னொரு புறம் கார்ப்பரேட் கம்பெனிகள் நம் நீராதாரத்தை சுரண்டுகின்றன என்று குரல் கொடுப்பார்கள்.  'ஒரு விரல் புரட்சியே..' என்று இவர்கள் பாடினால் போதுமா? மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டாமா?

அரசாங்கத்தின் செயல்பாடும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.  திரை
யரங்குகளுக்கு ஆன் லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க  வேண்டும். சுற்றுலா தளங்களிலும், விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம் சினிமா அரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 



Tuesday, January 12, 2021

கலை,கைவினை கண்காட்சி

கலை, கைவினை கண்காட்சி!

ஞாயிறன்று கர்நாடகா சித்திரகலா பரிக்ஷித்தின் ஆதரவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்கு சென்றிருந்தோம். அங்கு என் செல்போனில் சிறை பட்டவை :

பழைய பித்தளை பாத்திரங்கள் 


                    





வெண்கல சிலைகள் பகுதியிலிருக்கும் விநாயகரை தனியாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை.  தலைப் பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தனியாக இருந்தது.   

ஒடிசா ஓவியங்கள் அற்புதம்! அங்கு துணியில் செய்யப்பட்டிருந்த தாய  கட்டத்தை விளையாடிவிட்டு மடித்து வைத்து விடலாம், பிரயாணங்களில் பயன்படும். 1500 ரூபாய் மட்டுமே. சீ! சீ! என்ன இருந்ததும் நாம் கையால் வரைவது போலாகுமா? 









Sunday, January 10, 2021

சார் போஸ்ட்!

 சார் போஸ்ட்!


'நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும்கடிதம், மலருக்கு தேன் எழுதும் கடிதம், ..' என்று ஒரு பழைய பாடலில் வரும்.  இவையெல்லாம் கடிதம் எழுதுமா? என்று தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம்.

Sunday, January 3, 2021

மசாலா சாட் - 21

மசாலா சாட் - 21


எனக்கு என்னவோ சிறு வயதிலிருந்தே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்தனை ஈடுபாடு கிடையாது. எங்கள் அம்மா ஆங்கிலப் புத்தாண்டு அன்று இனிப்பு செய்வதுண்டு. ஒரு முறை நான் என் அம்மாவிடம், "நம்முடைய புது வருடம் சித்திரை மாத பிறப்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அம்மா," அது விசேஷங்களுக்கு, மற்ற விஷயங்களுக்கு ஆங்கில  தேதியைத்தானே ஃபாலோ பண்ணுகிறோம். ஒண்ணாம்  தேதிதான்  சம்பளம் வாங்குகிறோம். இதையும் கொண்டாடத்தான் வேண்டும்" என்றாள். என்றாலும் பெரிதாக கொண்டாடியதில்லை. புத்தாண்டு தினத்தன்று அதிக கும்பலாக இருக்கும் என்பதால் அன்று கோவிலுக்குச் செல்வதையும்  தவிர்ப்பேன்.  பள்ளி, கல்லூரி நாட்களில் நேரில் பார்க்கும் பொழுது வாழ்த்து சொல்வதோடு சரி. மஸ்கட்டில் இருந்த பொழுது புத்தாண்டு பார்டிகளில் கலந்து கொண்டதுண்டு. அந்த பார்ட்டிகளில் உற்சாக பானம் கட்டாயம் இருக்கும். விளையாட்டுகள், தம்போலா, பின்னர் சாப்பாடு என்று செல்லும். ஒரு முறை நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த புது வருட பார்ட்டியில் ஒருவருக்கு உற்சாகம் பீறிட்டு, அவர்கள் வீட்டு டீபாயில் ஏறி நடனமாடியதில் அந்த டீபாயின்  கண்ணாடி  உடைந்து  விட்டது. வீட்டம்மா ," புது வருடத்தில் கண்ணாடி உடைவது நல்ல சகுனம்" என்றாள். வேறு என்ன சொல்ல முடியும்?  

ஓமானில் ஆங்கில புத்தாண்டிற்கு விடுமுறை கிடையாது. அவர்கள் கொண்டாடவும் மாட்டர்கள். நாம் வாழ்த்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "திஸ் இஸ் நாட் அவர் நியூ இயர்" என்று கூறி விடுவார்கள். எனக்கும் கூட இதைப்புது வருடம் என்கிறார்களே, இதில் என்ன புதிது? நம்முடைய புது வருடம் என்றால் அன்று சூரியன் ரசிக்கட்டத்தில் முதலாவதான மேஷத்தில்  நுழைகிறார், ஜனவரி ஒன்று இன்னொரு நாள்தானே என்றுதான் தோன்றும். இருந்தாலும், எல்லோரும் வாழ்த்து சொல்வதால் நானும் பதிலுக்கு  வாழ்த்துவேன். காசா? பணமா? வாழ்த்திவிட்டு போகலாமே? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 *************** 

நேற்று பொன்னியின் செல்வன் ஆடியோ புக் கேட்டேன். இதற்கு முன் பவா செல்லத்துரை அவர்கள் சொல்லிய சில கதைகளையும், பாரதி பாஸ்கர் படித்த சில கதைகளையும் கேட்டிருக்கிறேன். அவை வேறு விதம். ஆடியோ புக் என்றால் ஒலிச்சித்திரம் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பொன்னியின் செல்வனை படித்த ஒருவர் அதை இன்னொருவருக்கு சொல்வது போல் குரலில் எந்தவித ஏற்ற இரக்கமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே போகிறார். கல்கியின் வர்ணனை அழகுகளையோ, பாத்திர படைப்புகளின் சிறப்பையோ உணர முடியவில்லை. குந்தவையின் கம்பீரம், நந்தினியின் தந்திரம், பெரிய பழுவேட்டரையரின் சபலம், வந்தியத்தேவனின் சாதுர்யம், ஆழ்வார்கடியானின் நகைச்சுவை,  அநிருத்த  பிரம்மராயரின் அறிவு தவறு, அநிருத்த பிரம்மராயரே காணோம். பொன்னியின் செல்வன் படித்து கொஞ்சம் குழப்பம் இருப்பவர்கள் இதைக் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம். மற்றபடி கேட்டலில் படிப்பதே நலம். 

*************

ஒரு மைக்ரோ கதை!

திருமணம் முடிந்து எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். தன் அறையில் துணிகளை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த மகளை நெருங்கி அவள் தோளை தட்டினார் சந்திரசேகர்  "எல்லா ப்ராப்லங்களையும் தாண்டி நீ ஆசைப்பட்டபடியே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுத்து" என்று அவள் கையை குலுக்கியதும் அவளுக்கு கண்கள் லேசாக கலங்கின. துணி மடிப்பதை நிறுத்தி விட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். அவளுடைய அம்மாவும் அவள் அருகில் அமர்ந்து பெண்ணை மெல் அணைத்துக் கொண்டு பேசத்  தொடங்கினாள், "உனக்கு நாங்க சொல்லிக் கொடுக்க வேண்டாம். உனக்கே  எல்லாம் தெரியும், நீ கெட்டிக்காரி. இத்தனை நாட்கள் இருந்ததும், நல்ல பெயர் வாங்கியதும் பெரிசு கிடையாது. இனிமேல்தான்  கஷ்டம். நீ சாதாரணமா பேசுவது கூட தவறாக புரிந்து கொள்ளப் படலாம். நல்ல மாட்டுப்பொண்ணுனு பெயர் வாங்கி விடலாம், நல்ல மாமியார்னு பெயர் வாங்குவதுதான் கஷ்டம். ஜாக்கிரதை!" என்றாள் மகனுக்கு திருமணம் முடித்து மாமியாராகியிருக்கும் மகளிடம். 

************

சென்ற வாரம் ஊரிலிருந்து வந்திருந்த அக்கா பெண், மாப்பிளை, குழந்தைகளோடு பன்னர்கட்டாவில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்தோம். நல்ல கும்பல் இருந்தது.  பெரும்பான்மையோர்  மாஸ்க் அணிந்திருந்தார்கள்.  அங்கே சஃபாரிக்காக செல்லும் பொழுது நான் கால் இடறி கீழே விழுந்தேன் . நல்ல வேளை பெரிதாக அடி படவில்லை.  
"கையில் செல்ஃபோன்" (அதனால் இல்லை)
"புடவை தடுக்கி விட்டதா?" (இல்லை)
"கீழே கவனிக்கவில்லையா?" (ஆமாம்)
விழும் பொழுது கையை ஊன்றிக் கொண்டு விட்டீர்கள், அப்படி செய்யக் கூடாது (அது அனிச்சை செயல் அல்லவா?)
மாரல் ஆஃப் தி ஸ்டோரி: நாம் தவறு செய்யும் பொழுது நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.


அபூர்வமான வெள்ளைப் புலி 



 
சிற்றுண்டி மற்றும் சிறுகடைகள் 


சில வருடங்களுக்கு முன்னர் இங்கு சஃபாரி ரைட் சென்ற பெண் குழந்தையை ஒரு புலி கவ்விச் சென்ற செய்தி நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இப்போது பாதுகாப்பாக வேலி  அமைத்து விட்டார்கள்.  அதிலும் மிகவும் நெருங்கிச் சென்று பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பும் இருக்கிறது.  சஃபாரி சவாரிக்கு அழைத்துச் செல்லும் வண்டிகளும் கம்பிகள் அமைக்கப் பட்டு, புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சிறிய திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.   

***********



பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சிலிருந்த கண்டக்டர்,:"சிதம்பரம் எல்லாம் ஏறுங்க" 
பயணி ஒருவர்: "சார், நான் ராமசாமி, ஏறலாமா?" 
                                      

               







Saturday, December 26, 2020

தெய்வம் மனுஷ ரூபேண

 தெய்வம் மனுஷ ரூபேண


சென்ற வார சண்டே டாபிக்காக மத்யமரில் கொடுத்திருந்தார்கள். அதற்காக நான் எழுதிய கட்டுரை. அதில் எழுதாத சில விஷயங்களையும் இதை எழுதியிருக்கிறேன். 

எனக்கு பல சமயங்களில் தெய்வம் போல் மனிதர்கள் உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமான இரண்டு தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகே  மஸ்கட்டில் இருந்த என் கணவரோடு சேர்ந்து வாழும் விதமாக எனக்கு விசா கிடைத்து அங்கு செல்ல முடிந்தது. 1987 ஜனவரியில் அங்கு சென்ற நான் உடனே கருவுற்றேன். வெளிநாட்டில்தான் பிறக்க வேண்டும் என் மகன் தீர்மானித்திருந்தான் போலிருக்கிறது. என் மணிவயிற்றில் வந்துதித்தான். 

வீட்டில் கடைசி பெண்ணான என்னை சூலுற்ற கோலத்தில் பார்க்க என் வீட்டில் எல்லோருக்கும் ஆசை. பிரசவத்திற்கு ஊருக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள். ஆனால் என் கணவரோ, "நாம் மினிஸ்டரி ஆப் ஹெல்த்தில் வேலை பார்ப்பதால் நமக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ செலவு இலவசம்தான், மேலும், நீ இப்போதுதான் இங்கு வந்திருக்கிறாய், அதனால் பிரசவத்திற்கு முன்பாக ஊருக்குச் சென்றால் குழந்தை பிறந்து அதிக நாட்கள் அங்கு இருக்க முடியாது, அதற்குப் பதிலாக இங்கு பிரசவித்து விட்டு பிறகு ஊருக்குச் சென்றால் மெட்டர்னிட்டி லீவையும் சேர்த்து மூன்று மாதங்கள் அங்கு இருந்துவிட்டு வரலாம்" என்று என்னை அங்கேயே இருக்கச்சொல்லி விட்டார். என் பெற்றோர்கள்  எத்தனையோ சொல்லியும் கேட்கவில்லை. அங்கும் நண்பர்கள் எல்லோரும், எப்போது ஊருக்குச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்பார்கள்,நான் "ஊருக்கு போகப்போவதில்லை, இங்கேயேதான் இருக்கப்போகிறேன்" என்றால் "ஊரிலிருந்து யாரவது உதவிக்கு வருகிறார்களா? என்பார்கள். "அதுவும் இல்லை, பிரசவத்திற்குப் பிறகு நான் ஊருக்குப் போகப் போகிறேன்" என்ற என் பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். "தனியாக எப்படி மேனேஜ் பண்ணுவீர்கள்?" என்ற பலரும் கேட்ட பொழுது, "இருக்கலாம் பானு, ஒண்ணும்  கவலை இல்லை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று தைரியம் கொடுத்தவர்கள் மூன்று  பேர்கள்தான்.  என் கணவரின் நண்பரான  திரு.ரமணன் என்பவரின் மனைவி திருமதி வசந்தா ரமணனும், இன்னொரு நண்பரான திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரின் மனைவி திருமதி. ராஜேஸ்வரி ஸ்ரீதரன். அறிமுகத்திற்காக ராஜேஸ்வரி என்று சொல்லி விட்டேன், இனிமேல் ராஜி என்று குறிப்பிடுகிறேன். 

ராஜியும் ஸ்ரீதரும் என் முதல் பிரசவத்தில் செய்த  உதவிகளை  எப்படி சொல்வது? அவளுக்கும் எனக்கும் சம வயதுதான். மூணு வயதில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அவள் நிறைய அனுபவம் மிகுந்தவன் போல் எனக்கு தைரியம் சொன்னாளே அதைச் சொல்வதா?  எனக்கு ஃபால்ஸ் பெயின் எடுத்த பொழுது,  தன் மைத்துனருக்கு போன் பண்ணி பள்ளியிலிருந்து வரும் குழந்தையை பிக் அப் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, என்னோடு மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தாளே அதைச் சொல்வதா? எனக்கு பனிக்குடம் உடைந்து, மருத்துவ  மனைக்கு கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, ஸ்ரீதர் "தைரியமா இரு பானு," என்று கூறி வழியில் என்னை உற்சாகப்படுத்தியபடி பேசிக்கொண்டே வந்ததை சொல்வதா? மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிய நாளில் தன்னுடைய  மாஸ்டா காரை ஒரு சிறு குலுங்கல் கூட இல்லாமல் ஒட்டிக் கொண்டு வந்ததை சொல்வதா? பதினைந்து நாட்கள் என்னை அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டு உடன் பிறந்த சகோதரிக்கு செய்வதைப் போல் பத்தியம் வடித்துப் போட்டு, பார்த்துக் கொண்டதை சொல்வதா? என்னைப் பார்ப்பதற்காக தினசரி யாரவது வருவார்கள், அவர்களை யெல்லாம் முகம் சுளிக்காமல் உபசரித்ததை சொல்வதா? 

இதைத் தவிர,நான் ஆஸ்பத்திரியில் இருந்த எட்டு நாட்களும் பல நண்பர்களின் மனைவிகள் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சாப்பாடு கொடுத்து  அனுப்புவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் என் கணவரின் மற்றொரு நண்பரின் மனைவியான  மாலா சங்கர் ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் எனக்கு தினசரி மதிய உணவு கொடுத்தனுப்பியதோடு தன் காரையும் என் சகோதரருக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். 

என்னை வார்டுக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் திருமதி வசந்தா ரமணன் என் உதவிக்காக வந்திருந்தார். சிசேரியன் ஆகியிருந்த எனக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர் எனக்கு உதவாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நான் எப்படியோ  வலியை பொறுத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்ததும்," நீங்கள் எழுந்திருக்க சிரமப்படுவதை பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் நான் உங்களுக்கு உதவி விட்டால், உங்களுக்கு தானாக முயற்சிக்க வேண்டும் என்று தோன்றாது, அதனால்தான் நான் உதவவில்லை" என்றார். உண்மைதான். நானே முயற்சி செய்து எழுந்திருந்து, நடந்து எல்லாம் செய்ததால் தான் பதினைந்து  நாட்களே ஆன குழந்தையை தூக்கிக் கொண்டு திருச்சி வரை விமானத்தில் பயணிப்பது எனக்கு எளிதாக  இருந்தது. 

மேலும் நான் செவிலியர்களை உதவிக்கு அழைக்காமல் இருந்ததால்  அவர்களுக்கு பிடித்த பேஷண்டானேன்.   நான் கேட்கும் சின்ன சின்ன  உதவிகளை மறுக்காமல் செய்வார்கள். அந்த அனுபவம் என்னுடைய இரண்டாவது பிரசவத்திலும்  எனக்கு கை கொடுத்தது. இரண்டாவதும் சிசேரியன்தான். நான் ஐ.சி.யூ.வில் இருந்தபொழுதே ஒரே பக்கமாக  படுத்துக் கொள்ளாமல், உதவிக்கும் நர்ஸுகளை அழைக்காமல் நானே திரும்பி படுத்துக்க கொள்வேன். பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செல்வேன்.  அப்படி ஒரு மனோ தைரியத்தை அளித்தது திருமதி வசந்த ரமணன் செய்யாமல்  செய்த உதவி

1995ஆம் வருடம் என் கணவருக்கு ஒரு விபத்தில் வலது கை தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு மூன்று சில்லுகளாக உடைந்து விட்டது. முதலில் செய்யப்பட்ட சிகிச்சையில் சரியாக சேரவில்லை. மீண்டும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அப்பொழுதும் என் குழந்தைகளை பார்த்து கொண்டது, ராஜிதான். அந்த சமயத்தில் என் மைத்துனர் இறந்து விட்டதால் எங்களுக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டே, அப்பொழுது மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்பார்கவே என்று நான் தயங்கிய பொழுது,"இந்த சமயத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? நீ தாராளமாக எங்கள் வீட்டிற்கு வரலாம்" என்றதோடு இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கு சமையல் வேலை இல்லாமல்    பார்த்துக் கொண்டாள்.   

என் கணவருக்கு இரண்டாம் முறை அறுவை சிகிச்சை நடந்த பொழுது சாயி அன்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஷிஃப்ட் முறையில் மருத்துவமனையில் என் கணவரோடு இருந்து கவனித்துக் கொண்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும், என் கணவரால் வண்டி ஓட்ட முடியாத மூன்று மாதங்களும்  மாதாந்திர சாமான்கள் வாங்கவும், கறிகாய்கள் வாங்கவும் பல நண்பர்கள் உதவினார்கள். 

அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய நாளன்று என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய  ஓமானியர்   சமீர் என்பவர் தன்னுடைய காரை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் நீங்கள் முதலில் பணம் கட்ட வேண்டும், பின்னர் அது ரீ எம்பர்ஸ் செய்யப்படும் என்றார்கள், என் கையிலோ பணம் இல்லை,  அப்பொழுதெல்லாம் ஏ.டி.எம். கார்ட் இப்போது போல் அவ்வளவு புழக்கத்தில் வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது  உடனே என் அலுவலக சக ஊழியர் தன்னுடைய  க்ரெடிட்  கார்ட்டில் பணம் கட்டிவிட்டு பின்னர் வாங்கி கொண்டார். எத்தனை தெய்வங்கள்!