சில நெருடல்கள்
சமீபத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட சில விஷயங்களில் நான் உணர்ந்த நெருடலான விஷயங்களைத்தான் பகிர ஆசைப்படுகிறேன்.
சமீபத்தில் எங்கள் உறவினர் அவருடைய மகனோடு திருப்பதிக்குச் சென்றிருக்கிறார். அவருடைய வயது 77, அவர் மகனுக்கு 47, அவர் உடல் ஊனமுற்றவர். இவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளாமல் திடீரெனெ கிளம்பி சென்றிருக்கிறார்கள். அதனால் பொது தரிசன வரிசையில்தான் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. பெருமாளை தரிசனம் செய்ய எட்டு மணி நேரம் ஆனதாம். முதியவரான அவர் கீழே உட்கார்ந்தால் எழுந்திருப்பது கஷ்டம் என்பதால் எட்டு மணி நேரம் நின்று கொண்டே இருந்திருக்கிறார். திருப்பதிக்கு செல்லும் எல்லோரும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது சரியா? எல்லோருக்கும் அது சாத்தியமா? TTD ஏதாவது மாற்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
Z தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா என்று ஒரு பேச்சரங்கம் வருவது பலருக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பக்கம் வெளிநாட்டில் வேலை செய்யும் சிலர் இந்தியாவிற்கு வரும்பொழுது செய்யும் அலப்பறைகளைப் பற்றி அவர்களுடைய சொந்தங்களும், நண்பர்களும் பரிகசிக்க, எதிர் பக்கத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்கினார்கள்.
அதில் ஒரு பெண்மணி, "மலேஷியாவில் வேலைபார்க்கிறார் என்பதால்தான் என் தங்கையை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம், என் தங்கையை மணந்து கொண்டு சில மாதங்கள் வாழ்ந்து விட்டு மலேஷியா சென்றவர் என் தங்கையை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாக கூறினாரேயொழிய எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதற்கிடையில் என் தங்கை கர்பமாக இருப்பதாக தெரிய வர, குழந்தை பிறந்ததும் அழைத்துச் செல்கிறேன் என்றார். குழந்தை பிறந்ததும், குழந்தைக்கு ஐந்து மாதங்களாவது ஆகட்டும் என்றார். குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டது. இந்தியாவுக்கு வந்தவர் என் தங்கையை மீண்டும் கர்ப்பமாக்கினார். குழந்தை பிறந்ததும், இரண்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்கிறேன் என்றார். பிறகு அவரே இந்தியா வந்து விட்டார்". என்றார்.
இதற்கு பதில் சொன்ன அந்த் எக்ஸ் மலேஷியாவாசி, "சார் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் மலேஷியா போனேன். ஏன்னா இந்த பன்னிங்கெல்லாம்(வார்த்தையை கவனியுங்கள்) பையன் இந்தியாவில் இருக்கான்னா பொண்ணு குடுக்க மாட்டாங்க, ஃபாரின்ல இருக்கான்னா பொண்ணு கொடுத்துடுவாங்க" என்றார். திருமணம் செய்து கொண்டதும் இந்தியா திரும்பி விவசாயத்தை கவனிக்கிறாராம்.
ஆவுடையப்பன்(Anchor) அவரிடம், "நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள்" என்றதற்கு, "நான் ஏமாத்தல சார், அவங்க ஏமாந்தாங்க" என்று இரண்டு மூன்று முறை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சொன்னார். இதற்கும் சரி, பெண்களைப் பெற்றவர்களை பன்னிங்க என்று கூறியதற்கும் சரி, ஆவுடையப்பன் அவரை கண்டிக்கவே இல்லை என்பதுதான் வருத்தம்.
முஸாஃபிர் கஃபே என்னும் ஹிந்தி வெப் சீரீஸை பார்த்தேன். மும்பை ஹை கோர்ட்டில் பிராக்டீஸ் செய்ய வேண்டும், கணவனை இழந்து கூட்டுக் குடும்பத்தில் சிரமப்பட்ட தன் தாயை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற இலட்சியங்களை வைத்திருக்கும் சுதா என்னும் லாயருக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. திருமணம் தன்னுடைய அந்தக் கனவுகளுக்குத் தடையாக இருக்கும் என்று நினைக்கும் அவள் அம்மா காட்டும் வரன்களை தட்டிக் கழிக்கிறாள். ஆனால் சந்தர் என்னும் ஐ.டி. இளைஞன் மீது காதல் வசப்பட்டு, அவனோடு சேர்ந்து வசிக்கிறாள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஹனிமூன் செல்கிறர்கள்(என்ன ஒரு முற்போக்கு சிந்தனை!).
சந்தருக்கும், அவனுடைய அம்மாவுக்கும் கூட அவளைப் பிடிக்கிறது. இந்த நேரத்தில் மும்பையில் இருக்கும் ஒரு சட்ட நிறுவனத்திற்கு அவளை சீனியர் லாயர் சிபாரிசு செய்ய, அந்த நிறுவனம் அவளுக்கு ஆஃபர் லெட்டர் அனுப்புகிறது. ஹனிமூன் சென்ற இடத்தில் அவள் தான் மும்பைக்கு செல்லப் போவதாக சொல்கிறாள். சந்தருக்கு பதவி உயர்வு கொடுத்து அவனை டில்லிக்கு போகச் சொல்கிறது அவன் வேலை பார்க்கும் நிறுவனம். ஆனால் அவன் தான் காதலிக்கும் பெண்ணுக்காக அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த வேலையை உதறி விட்டு, மும்பை வர விரும்புகிறான். "இதுதான் சரியான நேரம், நாம் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு வருடம் நான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன், நீ உன் வேலையில் கவனம் செலுத்து" என்று அவன் கூற, அதை ஏற்றுக் கொள்ள மறுத்து,"ஏன் கல்யாணம் ,கல்யாணம் என்கிறாய்? அவரவர் கனவைத்தான் அவரவர் துரத்த வேண்டும், மும்பைக்குச் செல்ல வேண்டும் என்பது என் கனவு. ஏதாவது ஒரு மலை வாசஸ்தலத்தில் ஒரு கஃபே ஆரம்பிக்க வேண்டும் என்பதுதானே உன் கனவு? நீ அதைத் தேடிச் செல்" என்று கூறுகிறாள்.
ஏமாற்றத்தில், குடித்து விட்டு, சுதாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்து, "உங்களால்தான் சுதா திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள்" என்றெல்லாம் அவன் பேசுவதை கேட்ட சுதா கோபத்தோடு அவர்கள் உறவை முறித்துக் கொள்கிறாள். அவள் மும்பைக்குச் செல்ல, அவன் முசோரியில் ப்ரீதி என்னும் பெண்ணோடு அவன் ஆசைப்படி ஒரு தேனீர் விடுதி தொடங்கி, சிறப்பாக நடத்துவதோடு ப்ரீதியோடும் லிவ் இன் ரிலேஷன்ஷிப். அவனிடம் ப்ரீதி, "என்றாவது ஒரு நாள் சுதா திரும்பி வந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்க, "அது முடிந்து போன கதை" என்கிறான்.
போபாலில் வெறும் டைவர்ஸ் வக்கீலாக இருந்த சுதா மும்பைக்குச் சென்ற பிறகு கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி அடந்து, இன்டர்நேஷனல் லா படித்து, சிங்கப்பூரில் ஒரு லா ஃபர்ம் தொடங்கும் முன் முசோரியில் முசாஃபிர் கஃபேக்கு வருகிறாள். அங்கு சந்தரை சந்தித்து பேசும் சுதா, "நீ ஏன் இன்னும் ப்ரீத்தியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்று கேட்க, "இன்னும் உன்னிடமிருந்து விவாகரத்து கிடைக்கவில்லையே?' என்பவன், அவள் தான் சிங்கப்பூர் செல்லப் போவதாக சொன்னதும், "உனக்கு தேவைனா வருவ, வேண்டாம்னா போவ.. எல்லா முடிவுகளையும் நீதான் எடுக்கற, இனிமேல் நான் விட மாட்டேன், உனக்காக, நமக்காக" என்று டயலாக் அடித்துக் கொண்டிருக்க, அவன் விடுதிக்கு, தன் கர்ல் ஃப்ரெண்ட் சுதா இங்கேதான் தங்கியிருக்கிறாள் என்று கூறிக் கொண்டு ஒரு ஆண் வருவதோடு சீரீஸ் முடிகிறது. என்ன கொடுமடா இது!
என்ன சொல்ல வருகிறார் இவர்? எதை நிறுவ நிணிக்கிறார்? இதை இயக்கியவர்? இந்த சீரிஸில் முசோரியில் சுதாவும், சந்தரும் வந்து தங்கும் வீட்டில் சேர்ந்து வாழும் இருவர் கணவன்,மனைவி என்று நினைத்துக் கொள்வார்கள் ஆனால் அந்தப் பெண்மணி, "சேர்ந்து வாழ வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?" என்று கேட்பார்.
என் வாழ்க்கையில் சுதா என்று ஒரு பெண் உண்டு என்று தெரிந்த பிறகும் என்னை எப்படி காதலிக்கிறாய்?" என்று வினவும் சந்தரிடம் ஒரே நேரத்தில் இரண்டு பேர்களை காதலிக்கக் கூடாது என்று எதில் சொல்லியிருக்கிறது?" என்கிறாள் ப்ரீத்தி.
சுதாவின் கதாபாத்திரம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. எனக்கு தொழில், அதில் முன்னேறுவது முக்கியம், அதனால் திருமணம் செய்து கொள்வதில் ஈடுபாடு இல்லை என்று ஒரு பெண் சொல்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் என் உடல் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள ஒரு ஆணை பயன்படுத்திக் கொள்வேன், அது முடிந்ததும் அவனை உதறி விட்டுச் செல்வேன் என்பது நியாயமா? 30, 40 வருடங்களுக்கு முன் இதை திரைப்படங்களில் ஆண் அதுவும் வில்லன் கதாபாத்திரம் செய்யும். அவன் காலைக் கட்டிக் கொண்டு பெண்,"அத்தான் என்னை கை விட்டு விடாதீர்கள்" என்று கதறுவாள். இதில் அதை ஆணை செய்ய சொல்லியிருப்பது பெண்கள் விடுதலையா? என்ன கன்றாவி இது? இப்படி சொல்லும் என்னை பூமர் என்பார்கள்.
சமீப காலங்களில் டாஸ்மாக் காட்சி இடம்பெறாத திரைப்படங்களே இல்லை. அதிலும் பெண்களே புகைப்பதாகவும், குடிப்பதாகவும் காட்சிகளை அமைத்து, வெகு சகஜமாக்கி அவை ஒரு தவறே கிடையாது என்று நிறுவ முயல்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் போல காண்பிப்பதும் அதிகமாகித்தான் வருகிறது. இது அடுத்த கட்டம். என்னவோ போடா மாதவா!
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நெருடலான விஷயங்கள் என்றும் நெருடலானவைதான். இறைவனை தரிசிக்க இத்தனை கட்டுப்பாடுகள் இருப்பது மனதுக்கு வருத்தந்தான். இதில் நீங்கள் சொல்வது போல மாற்றங்கள் வந்தால் நல்லது.
நீங்கள் கூறிய நிகழ்ச்சி நிரல் பார்த்ததில்லை. ஆனாலும் அதில் அவர் (மலேசியாவில் வசித்தவர்) கூறிய வார்த்தைகள் மன்னிக்க முடியாத தவறுதான். அதை அந்த நடுவர்(Anchor) கவனிக்காமல் விட்டதும் தவறு. இந்த தவறுகளுக்கு மக்கள் மனங்களுக்கிடையே மாறி வரும் /வந்த ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் ஒரு காரணமாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
வெப் சீரிஸ் பட விமர்சனம் கண்டேன். நம் கலாச்சாரம் இப்போது நிறையவே மாறி வருகிறது. இது மேலும் பல வருடங்களுக்குப் பின் எங்கே போய் முடியப் போகிறது எனத் தெரியவில்லை.
நெருடல் என பதிவுக்கு நீங்கள் தலைப்பிட்டது சரிதான். சம்பந்தபட்டவர்களுக்கு இது நெருடாத வரை, இந்த நெருடல்களை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வாங்க கமலா! பதிவின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக அலசி, கருத்து கூறும் உங்கள் பாணி வரவேற்கத்தக்கது. நன்றி.
Deleteஎப்போதுமே கிடைப்பதுபோல வீல்சேர், மற்றும் வயதானோருக்கு ஸ்பெஷல் சலுகை கிடைத்தால் நல்லதுதான். யார் கவனிக்கப் போகிறார்கக்ள்!
ReplyDeleteமுன்பதிவு செய்து கொள்ளாமல் திருப்பதி சென்றாலும், முதியவர்கள் ஆதார் கார்ட் காண்பித்து செக்யூரிடி தலைமை அலுவலரிடம் கடிதம் பெற்றுக் கொண்டு வரிசையில் நிற்காமல் வர முடியுமாம், மத்யமரில் ஒருவர் என் பதிவுக்கு பதில் அளித்திருந்தார்.
Deleteஅந்த மலேஷியா கதை நானும் படித்தேன். அந்த மணமகன் திமுக பேச்சாளர் போல பேசுகிறார்.
ReplyDeleteஅவசரத்தில் கதை என்று எழுதி விட்டீர்களோ? அது தொலைகாட்சி நிகழ்ச்சி.
Deleteமுஸாபிர் கபே நல்லவேளை இதுவரை கண்ணில் படவில்லை. பல எபிசோடுகள் இருக்கும் சீரிஸ் பார்க்க தயக்கமாக இருக்கிறது. அரைகுறையாக முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தில் தொடரும் என்பார்கள். அந்த இரண்டாம் பாகம்,எப்போது வரும் என்றே சொல்ல முடியாது!
ReplyDeleteஇந்த சீரீஸ் எட்டு எபிசோடுகள்தான்.
DeleteTTD நிறைய ஆப்ஷன்கள் வைத்திருக்கிறது. சாதாரண பேருந்து பயணத்துக்கே முன்பதிவு இல்லை என்றால் நமக்கு லக் இருந்தால் இடம் கிடைக்கும் இல்லைனா கஷ்டப்பட்டால்தான் கிடைக்கும். தரிசத்துக்கு டிக்கெட் அங்கே சென்றபிறகு வாங்க இடங்கள் உள்ளன கீழ் திருப்பதியில். திருமலையிலும் அதற்குரிய இடங்களில் அப்ளை செய்து வாய்ப்புகளைச் சோதிக்கணும். இறைவன் அருள் இருந்தால் கிடைக்கும். பொதுவா இப்படி ஜனங்கள் மிக மிக அதிகம் வரும் கோயில்கள், விழாக்காலங்களில் கஷ்டம் தவிர்க்க இயலாது
ReplyDeleteஇதற்கான முயற்சிகளை எடுக்க அலையணும் அல்லது கமிட்டி மெம்பர்களின் கவனத்திற்கு வந்தால் உதவுவார்கள். கோயில் பணியில் உள்ளவர்கள் இரக்கத்துடன் உதவுவதை நான் பார்த்திருக்கிறேன்
//இதற்கான முயற்சிகளை எடுக்க அலையணும்// யெஸ்! மத்யமரில் என் பதிவுக்கு அதைப் பற்றி எழுதியிருந்தார். பேசாமல் 3 மாதங்களுக்கு முன்பே பதிவு பண்ணிக் கொண்டு செல்வது உத்தமம்!
Deleteவெளிநாட்டு வேலை என்ற காரணத்திற்காக எதையும் ஆலோசனை செய்யாமல் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் திருமணம் செய்துகொடுப்பது சரியா?
ReplyDelete36 வருடங்களுக்கு முன் நண்பியோட 26 வயது சித்தி என்னிடம் சொன்னது நினைவுக்கு வருது. 24+ நான். வெளிநாட்டு வேலைக்குப் போனால் மனைவி குழந்தைகளை இந்தியாவில் விட்டுட்டுப் போகக் கூடாது. மனைவிக்கு அது சொல்லமுடியாத மனக் கஷ்டம் தரும் என்றார்.
//வெளிநாட்டு வேலை என்ற காரணத்திற்காக எதையும் ஆலோசனை செய்யாமல் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் திருமணம் செய்துகொடுப்பது சரியா?// சரியில்லைதான். அந்த நிகழ்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர் அதிகம் படித்ததாகதெரியவில்லை. வெளிநாட்டில் கட்டிட வேலை, போண்ற சாதாரண வேலை பார்ப்பவர்களாகத்தான் தோன்றியது.
Deleteஅச்சுப் பிச்சு சீரியல்கள் பார்ப்பதில்லை. நான் ரசித்த (அந்த வயதில்) படங்கள் நாவல்கள் கதைகள் என் பெற்றோரைக் கடுப்படித்திருக்கின்றன.
ReplyDeleteஉதா மூ.பிறை. அசிங்கமான படத்தை ஆஹா ஓஹோங்கறாங்க. பொன் மேனி மற்றும் சில்க்.
காலம் காலமாக நடப்பதுதான். மாரல் வேல்யூ குறைந்துகொண்டே வரும்
உங்கள் மகள் உங்கள் வயது வரும்போது சீரியல்களில் மாமியாரைத் திருமணம் செய்துகொள்வது சகஜமாக இருக்கும்.
பார்த்த பிறகுதானே நல்ல சீரியலா, அச்சுபிச்சு சீரியலா என்று தெரியும்? மேலும் முகநூலில் ஒருவர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தாரே என்று பார்த்தேன்.
ReplyDeleteஎன் மருமகள் மெட்ரோவில் சிலர் இந்த சீரீஸை சிலாகிப்பதை கேட்டு விட்டு பார்த்தாளாம். மகன், மருமகள் இரண்டு பேருக்குமே பிடிக்கவில்லை.
//உங்கள் மகள் உங்கள் வயது வரும்போது சீரியல்களில் மாமியாரைத் திருமணம் செய்துகொள்வது சகஜமாக இருக்கும்.// இந்த விஷயம் ஏற்கனவே நிஜத்தில் நடந்து விட்டதாம். ஒரு பத்திரிகையில் கவுன்சிலிங் பகுதியில் படித்தேன்.
ReplyDeleteஉண்மையைச் சொல்லணும்னா இந்த உறவு பேதம் முஸ்லீம்களிடம் கிடையாது. நமக்கு அண்ணி என்றால் அம்மா ஸ்தானம், மனைவியின் சகோதர சகோதரிகள் நமக்கும் சகோதர சகோதரிகள்னு எல்லா உறவுக்கும் ஸ்தானம் வைத்திருக்கிறோம். அவங்க, அம்மா தவிர மற்ற எல்லோரையும் திருமணம் செய்துப்பாங்க.
Delete