ஒரு வழிகாட்டியின் அனுபவங்கள்
ஆர்.கே. நாராயணன் ‘கைட்’ என்று ஒரு நாவல் எழுதியிருந்தார். அது திரைப்படமாகவும் வந்தது. அதைப்போல பி.வி.ஆர். மதுரையில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றிய ஒரு பெண்ணைப் பற்றி மதுர நாயகி என்று ஒரு நாவல் எழுதினார். கதைகளில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறவர்கள் பற்றி படித்திருக்கலாம், ஒரு நிஜ கைடை சந்தித்திருக்கிறீர்களா? அவருடைய அனுபவங்கள் எப்படிப்பட்டவை என்று தெரியுமா? எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு சமீபத்தில் வாய்த்தது. மிக மிக சுவாரஸ்யமான அனுபவங்களை கேட்டறிந்தேன்.
இந்த முறை சென்னை விஜயத்தில் நண்பர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ராஜு என்று அழைக்கப்படும் நடராஜன் சுப்பிரமணியன் அவர்கள். மஸ்கட்டில் எங்களுக்கு நெருங்கிய நண்பர். ராமாபுரத்திலும் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் வசித்தார். நாங்கள் பெங்களூர் சென்றோம், அவரும் இடம் மாறினார். தொடர்பு விட்டுப் போயிற்று. இப்போது வேறொரு தோழி மஸ்கட்டிலிருந்த நண்பர்களை இணைத்து ஒரு வாட்ஸாப் குழு உருவாக்கினார். எனவே சென்னைக்கு செல்லும்பொழுது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சந்தித்த பொழுது அவர் தற்சமயம் ஒரு டூர் ஆபரேட்டராகவும், கைடாகவும் பணி புரிவது தெரிந்தது. அவரோடு பேசிக் கொண்டிருந்த பொழுது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை, காஞ்சிபுரம் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறார். சென்னை சுற்றுலாவில் செயிண்ட்.ஜார்ஜ் கோட்டை, உயர்நீதிமன்றம் இரட்டை கோவில்கள் எனப்படும் சென்ன கேசவ பெருமாள் கோவில், சென்ன மல்லீஸ்வரர் கோவில், ஆர்மீனியன் தேவாலயம், கபாலீஸ்வரர் ஆலயம், சாந்தோம் சர்ச், மஹாபலிபுரம் போன்றவை அடங்கும்.
இதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மட்டுமே இரண்டு மணி நேரம் எடுக்குமாம். அங்கிருக்கும் மியூசியத்தில் நம் நாடு சுதந்திரம் அடைந்ததும் முதலில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி இன்றும் இருக்கிறதாம்.
அதைப்போல உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தில் அந்தக்கால நீதிமன்றத்தின் மாடல் வைத்திருக்கிறார்களாம். லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு போன்ற பிரபலமான வழக்குகளின் கேஸ் ஃபைல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளனவாம்.
ஆர்மீனியன் தேவாலயத்தில் அன்னை மேரி, குழந்தை ஏசுவோடு தேவலோகத்திற்கு எழுந்தருளும் அபூர்வ ஓவியம் உலகில் வேறு எங்கும் கிடையாதாம். அங்கு இருக்கும் மணிகள் இந்தியாவிலேயே பெரியவையாம். அவை ஒவ்வொரு ஞாயிறு காலை 9:30 மணிக்கும் ஒலிக்கப்படுமாம்.
மஹாபலிபுரத்தில் அங்கிருக்கும் கைடுகளைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது விதியாக இருப்பதால், இவரைப் போன்றவர்கள் அங்கே வாயைத் திறக்க முடியாதாம். அங்கு காரில் செல்லும் பொழுதே மஹாபலிபுரத்தில் என்னென்ன இடங்களை பார்க்கப் போகிறோம், அவற்றின் சிறப்பு என்ன போன்ற தகவல்களை கூறி விடுவாராம்.
நாமெல்லாம் டூரிஸ்ட் கைட் என்றால் சரித்திர பிரசித்தி பெற்ற இடங்கள், கோவில்கள் இவைகளை மட்டும் சுற்றிக் காட்டுவார்கள் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால், டூர்களில் வைல்ட் லைஃப் டூர், கிச்சன் டூர், மேரேஜ் ஷாப்பிங் டூர் என்றெல்லாம் இருக்கிறதாம்.
சென்னையைப் பொறுத்த வரை வைல்ட் லைஃப் டூர் என்பதில் crocodile park, snake park, வண்டலூர் மிருககாட்சி சாலை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வார்களாம்.
சில சமயங்களில் வெளி நாட்டிலிருந்து வரும் உல்லாச பிரயாணிகள் நம் நாட்டு சமையல் கற்றுக் கொள்ள விரும்புவார்களாம். ஒரு முறை கொரியன் தம்பதிகளில் மனைவி கான்ஃப்ரென்சிற்கு சென்று விட, கணவன் நம் நாட்டு சமையலை கற்றுக் கொள்ள விரும்பினாராம். அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று குக்கர் வைப்பதிலிருந்து, பருப்பு போட்டு, புளியை கரைப்பதிலிருந்து, சாம்பார், ரசம், கறி, சப்பாத்தி போன்றவை அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுத்தாராம். அவரும் இவருக்கு உதவிகள் செய்து கொடுத்து, சப்பாத்தி கூட இட்டாராம். அசைவ சமையல் கற்ருக் கொள்ள விரும்பினால் அதற்கேற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்றிருப்பாரோ?

ராஜு என்னும் நடராஜன் 
(இ-வ) லக்ஷ்மி நடராஜன், பிரமிளா ரவி, பா.வெ., ராஜு
வெட்டிங் ஷாப்பிங் டூர் என்பதை பெரும்பாலும் பெண் கைடுகள்தான் செய்வார்களாம். நம்முடைய திருமணத்தில் நாம் வாங்கும் உடைகள், நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள், அலங்கார பொருள்கள் இவைகளைப் பற்றி புரிய வைக்கும் முயற்ச்சி எனலாம். இதற்காக பயணிகளை பொட்டீக்குடன் கூடிய பிரபலமான ஜவுளிக் கடை ஒன்று, நகைக்கடை ஒன்று, வீட்டு உபயோக பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று போன்றவைகளுக்கு அழைத்துச் செல்வார்களாம். அந்த கடைகளில் அவர்கள் விரும்பினால் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.காரில் செல்லும் பொழுதே நம் திருமணம் பற்றி விவரங்களை சொல்லி விடுவார்களாம்.
இவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளி நாட்டவர்கள்தான். ஜப்பானிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரை மகிழ்விக்க இவர் சில ஜப்பானிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேச, அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்களாம். இந்திய பெண்ணை மணந்து கொண்டிருக்கும் ஐரிஷ் ஒருவர் கேள்விக் கணைகளை சரமாரியாக தொடுத்தாராம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் உமா ஸ்ரீனிவாசன் என்னும் பெண்மணி ப்ளாகராம். அவர் “கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற்யவர்கள் வசித்த வீடுகள் எங்கே?”என்று கேட்டாராம். “ராபர்ட் கிளைவ் வசித்த வீடுதான் மிஞ்சியிருக்கிறது. அதுவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் இலாகா அலுவலகமாக மாற்றப்பட்டு விட்டது” என்றாராம். மிகவும் எளிமையாக இருந்து, சகஜமாக பழகிய ஒரு பெண்மணி கனடா நாட்டு தூதுவரின் மனைவி என்று தெரிய வந்ததும் ஆச்சர்ய பட்டேன் என்றார். அதைப் போல ஒடிசாவில் இருக்கும் ஒரு பிரபல நடன மாதுவும் இவருடைய வாடிக்கையாளராம்.
கோவாவிலிருந்து வந்த ஒரு கணவான், பான் லிக்கர் வேண்டும் என்று கேட்டாராம். வெற்றிலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சாராயம்தான் பான் லிக்கர் என்பது இவருக்கு அப்போதுதான் தெரிந்ததாம். அதைத்தேடி டாஸ்மாக், டாஸ்மாக்காக அலைந்திருக்கிறார் பாவம்.
எப்படியோ பெரும்பான்மையான டூரிஸ்டுகள் இவரைப்பற்றி நல்ல ரெவ்யூ கொடுத்து 5/5, என்று மதிப்பெண்கள் தந்திருக்கிறார்களாம். வழிகாட்டியாக இருப்பதின் முக்கிய அம்சம் பிரயாணிகள் தங்களுள் ஒருவராக கருதும்படி நடந்து கொள்வதுதான் என்கிறார்.
இவரைப்பற்றி இன்னொரு கொசுறு தகவல்: உங்களுக்கு சினிமா பார்க்கும் பொழுது கடைசி வரை இருந்து டைட்டில் கார்ட் படிக்கும் பழக்கம் உண்டா? அப்படியென்றால் ‘ஓகே கண்மணி’ படத்தில் உபசரிப்பு - நடராஜன் என்று பார்த்திருப்பீர்கள். யெஸ்! ஓகே கண்மணி படத்தில் ஹாஸ்பிடாலடி மேனஜராக பணியாற்றினாராம். அதன் பிறகு சுஹாசினி பொறுப்பேற்று நடத்திய ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவெல்லுக்கு இவரைத்தான் ஹாஸ்பிடாலடி மேனஜராக போட்டாராம். அதில் இவர் விருந்தாளிகளை கவனித்துக் கொண்ட விதத்தை பாராட்டி அவர்கள் தங்கள் நாடு திரும்பியதும் மெயில் அனுப்பினார்களாம்.
சாப்பிடுவதிலும், சமைப்பதிலும் விருப்பம் கொண்ட இவர் எங்களுக்கு செவிக்கும், வயிற்றுக்கும் விருந்தளித்தார். அடுத்த சென்னை விஜயத்தில் இவரோடு மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்.
