கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 18, 2026

படித்ததும், பார்த்ததும்

 படித்ததும், பார்த்ததும்

இன்றைய பதிவில் இரண்டு விமர்சனங்கள். ஒன்று புத்தக விமர்சனம், மற்றொன்று திரைப்பட விமர்சனம். மெர்க்குரிப் பூக்கள் சாவியில் தொடராக வந்த பொழுது படிக்கவில்லை, அதற்குப் பிறகும் படிக்கத் தோன்றவில்லை. யாரோ ஒருவர்," பாலகுமாரனனின் சிறந்த புதினங்கள் என்றால் மெர்க்குரி பூக்களும், அகல்யாவும்தான் என்றார். புஸ்தகாவில் இரண்டுமே உள்ளன. மெர்குரிப் பூக்கள் படித்தேன். 

மெர்குரிப் பூக்கள்



டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தியை பெருக்குவதற்காக ஓவர் டைம் செய்ய தொழிலாளர்கள் கேட்டுக்   கொள்ளப்படுகிறார்கள். தொழிலாளர்கள் ஒவர்டைம் கூலியைத்  தாண்டி இன்னும் அதிகமாக கூலி கேட்கிறார்கள், நிர்வாகம் மறுக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். 

லாக் அவுட் அறிவித்த நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க கூலிப் படையை ஏவுகிறது. அதில் ஒரு அப்பாவி தொழிலாளி கணேசன்  கொல்லப்படுகிறான்.தொழிற்சங்க தலைவன் கோபாலன் தலை   மறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில்   கணேசன் மனைவி சாவித்திரி அவனுடைய தலைமறைவு வாழ்க்- கைக்கு உதவுகிறாள். 

அதே கம்பெனியில் ஸ்டெனோவாக பணிபுரியும் சங்கரன் தன்  அண்ணா,மன்னியோடு வசிக்கிறான். கம்பெனி லாக் அவுட் ஆனதில் வீட்டோடு இருக்கும் அவனுக்கும், அந்த வீட்டில் குடியிருக்கும் தண்டபாணியின் மனைவி சியாமளிக்கும் முறைகேடான உறவு பூக்கிறது. சியாமளி மனதில் எத்தனையோ நிறைவேறாத ஆசைகள். அவள் தன் பெண் குழந்தையைக் கூட விட்டு விட்டு சங்கரனோடு ஓடிப்போக  முடிவெடுக்கிறாள்.

கம்பெனி முதலாளியான ரங்கசாமி தொழிலாளர்கள் தன் தொழிற் சாலையை நாசமாக்கியதில் மனசு நொந்து அதை விற்று விட்டு  வெளிநாட்டில் தங்கி விடலாம் என்று முடிவுசெய்கிறார்.

இதைத்தவிர பிற்படுத்தப்பட்ட குலத்திலிருந்து வந்து போலீஸ்  அதிகாரியான துரைசிங்கம், கணேசனை குத்தி கொலை செய்த  பாவாடை என்னும் அறிவரசன் அவனைப் பழி தீர்க்கும்  தொழிலாளி சுப்பையா, ரங்கசாமியின் தாய், சங்கரனின் அம்மா என்று சின்ன  ஆனால் கதையில் முக்கிய திருப்பங்களை கொண்டு வரும் பாத்திரங்களைக் கொண்டு மிக அழகாக கதையைப் பின்னியிருக்கிறார் பாலகுமாரன். இது அவருடைய முதல் நாவல். முதல் நாவலிலேயே புகுந்து விளையாடியிருக்கிறார்.

 ‘கெட்டாலும் ஆண் மக்கள்’ என்ற சிறுகதையில் வந்த சியாமளி கதா பாத்திரம் இதில் விரிவடைந்திருக்கிறது.  அதில் சியாமளி இறந்து  போவாள். இதில் கணவனையும், குழந்தையையும் உதறி காதல னோடு ஓடத் துணிந்து, சங்கரன் அண்ணியால் தடுக்கப்பட்டு மனம் மாறுகிறாள். ஆனாலும் அவள் மீது ஏனோ பரிதாபம் வரவில்லை.  நல்ல வேளை இதை பாலகுமாரன் நியாயப்படுத்தவில்லை.

//இத்தனை நாள் சியாமளியிடம் சொன்ன ‘லவ் யூ’ அர்த்தமற்றது. ‘லவ்’ என்பதே என்ன என்று தெரியாமல் சொன்னது தான். இரண்டு   பேருக்கும் ஒரே சினிமாப்பாட்டு பிடித்திருக்கிறது. இரண்டு பேருக்கும்ஒரே ராகத்தில் ஈடுபாடு இருக்கிறது. இரண்டு பேருக்கும் கொஞ்சம்    இலக்கியம் தெரிந்திருக்கிறது. இவை போதுமா லவ் பண்ண. ஈடுபாடு ஒன்றாய் இருந்தால் அடுத்த வார்த்தை லவ் தானோ? இதே சியாமளி ஆணாய் இருந்தால் நல்ல நண்பனாய் ‘ஹலோ’ என்ற சொல்லும்  ஆளாய் இருந்திருப்பாள் இல்லையா? பெண்ணாகிப் போனதால்   ஈர்ப்பு வந்துவிட்டது.// 

சாவித்திரியின் பாத்திரப் படைப்பு அற்புதம்! “எனக்கு தெரிஞ்சு எல்லாபோராட்டமும், யுத்தமும் ஒரு கட்டத்துல ஏன் எதுக்குனு காரணம்  புரியாமல் முழிக்கத்தான் செய்கிறது”. என்று சாவித்திரி கூறுவது  இன்றைக்கும் பொருந்துமே.  அவளிடம் கோபாலன் “ஐ லவ் யூ” என்று  சொல்லும் பொழுது காதலின் பரிமாணம் மாறி உயர்கிறது.

"கெஞ்சறவாளை பொம்மனாட்டிக்குப் பிடிக்காது சங்கர், மதிக்கறவாளைத்தான் பிடிக்கும்.” இப்படியெல்லாம் எழுதியதுதான் அவருக்கு  பெண் ரசிகைகளை குவித்ததோ?

ரங்கசாமியும் அவர் அம்மாவும் உரையாடும் இடம் மிகவும் அழகு. மறந்து போனது நீ ரங்கு. உனக்குத்தான் மரந்து போச்சு. நாலணா  காசு கூட கேட்டா, சரின்னு சந்தோஷமா சொல்லத் தெரியாம போச்சு”

“காசு மட்டும்தான் முக்கியமா?”

“இல்லாதவாளுக்கு காசுதான் முக்கியம். உனக்கு என்ன தெரியும் காசு பத்தி?” ரங்கசாமியின் அம்மா தொழிலாளர்களுக்காக பரிந்து பேசி அவர் மனதை மாற்றுகிறாள். 

சாவித்திரி, கோபாலன் மனதை மாற்றுகிறாள். மன்னி, சியாமளி  மனதை மாற்றுகிறாள். அதனால் சங்கரன் மனம் மாறுகிறது. சங்கரன் முதலில் மன்னி மீது கோபப்பட்டாலும், அவன் அலுவலகத்தில் பணி புரியும் நாராயணசாமியின் மகளை, ஏற்கனவே ஒரு இடத்தில்  நிச்சயிக்கப்பட்ட, வதட்சணை தர முடியாததால் திருமணம் நின்று போன  பெண்ணை மணந்து கொள்கிறான். எல்லாமே விரும்பத் தகுந்த மாற்றங்கள். 

கதையை படித்து முடிக்கும்பொழுது நம் மனதிலும் பளிச்சென்று  மெர்க்குரிப் பூக்கள் பூக்கின்றன.

நான் புஸ்தகாவில் படித்தேன்.

தாய் கிழவி


நிறைய பேர் பார்த்து பாராட்டி விட்டார்கள். நானும் பார்த்தேன். ராதிகாவை பொறுத்தவரை இப்படிப்பட்ட ரோல்கள் ஜுஜுபி. ஆனால் நிஜமான ஒரு கிராமத்துக் கிழவியை போலவே வாழ்ந்திருக்கிறாரே அங்குதான் ராதிகா நிற்கிறார். அது ராதிகாதான் என்பதை குரல்தான் காட்டிக் கொடுக்கிறது.  (இந்தக் காலத்திலும் இப்படி காது வளர்ப்பவர்கள் இருக்கிறார்களா?).

ராதிகா மட்டுமல்ல படத்தில் வரும் அத்தனை பேரும் ரொம்ப இயல்பாக, நிஜமான கிராமத்து மனிதர்களாகவே இருக்கிறார்கள். நடை, உடை பாவனை எல்லாமே அசல் கிராமம். 

பொதுவாக விமன் சென்ட்ரிக் படங்கள் என்றால் அவளை தியாக சீலியாக காண்பித்து, படம் முடியும் பொழுது நம் கண்கள் குளமாகி, மனசு பாரமாகி விடும். ஆனால் இந்தப் படத்தில் நெகடிவ் ஹீரோயினிஸம், தவிர படம் முழுவதும் இயல்பான நகைச்சுவை. குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் ப்ராஸ்தடிக் மேக்கப்பிற்காக அத்தனை மெனக்கெட்டிருக்கும் ராதிகா மதுரைத் தமிழுக்காகவும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தாய்கிழவி லேசுப்பட்டவள் இல்லை!

ஒரு சின்ன சந்தேகம், மெர்க்குரி பூக்கள், தாய்கிழவி இரண்டிலுமே ஒற்றெழுத்து விட்டுப்போய் விட்டதோ?


Thursday, April 2, 2026

பூக்கி

பூக்கி 



சமீபத்தில் 'பூக்கி' என்று ஒரு படம் பார்த்தேன். பூக்கி என்பது ஜென் சீ காதலர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் பாஷை போலிருக்கிறது. அதில் காதலனும், காதலியும் ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். அந்தப் பெண் சிக்கன் லசான்யா சாப்பிட விரும்புகிறாள். அவன் இரண்டு பேருக்கும் மெக்ஸிகன் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்கிறான். தான் சிக்கன் லசான்யா சாப்பிட விரும்பவதாக அவள் கூறியதும், எரிச்சலாக ஒரு சிக்கன் லசான்யாவுக்கு ஆர்டர் கொடுத்தவன் தனக்கு எதுவும் வேண்டாம் என்கிறான். "உனக்கு எதுவும் வேண்டாமா?" என்று அவள் கேட்க, "மெக்சிகன் ப்ரை வாங்கினால் ஷேர் பண்ணிக்கலாம்னு நினைச்சேன், இப்போ பசிக்கல" என்பான். உடனே அவள் ஐயோ நம்மால் அவன் சாப்பிடாமல் இருக்கிறானே? என்று தான் ஆசைப்பட்ட சிக்கன் லசான்யாவைத் துறந்து, அவன் ஆசைப்படி மெக்சிகன் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்வாள். உடனே சந்தோஷமான அவன் மெக்சிகன் ஃப்ரைட் ரைஸ் எக்ஸ்ட்ரா லார்ஜ்" என்று கூறி விட்டு ஒரு நய வஞ்சக புன்னகை புரிவான். 

அவர்கள் இருவருக்கும் ஒரு சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் அவன், சிக்னலில் நிற்கும்பொழுது சம்பந்தமேயில்லாத ஒரு மூன்றாம் மனுஷனிடம் தங்கள் பிரச்சனையை சொல்லி நியாயம் கேட்பான். எவ்வளவு அசிங்கம்! 

அந்த சமயத்தில் பின்னால் காரில் வரும் ஒருவர் இவனுடைய காரின் ரியர் வியூ மிரரை உடைத்து விட, அவள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அந்தக் காரை துரத்திப் பிடித்து, அதன் ஓட்டுனரோடு சண்டைக்குச் சென்று, அடிதடியில் இறங்குகிறான். கோபத்தில் அவள் அவனை அறைந்து விட்டுச் சென்று விடுகிறாள். இந்த விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. அதனால் பிரிந்த இருவரும் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்ற செய்யும் அசட்டுத்தனங்கள் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது.  

இருவருமே பழைய காதலை மறந்து விட்டு, வேறு ஒருவரோடு பழக ஆரம்பிக்கிறார்கள். அவள் தன் அலுவலகத்தில் பணிபுரிபவனோடும், அவன் உறவில் ஒரு பெண்ணொடும் பழகுகிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தை அந்தஸ்து காட்டி தன் அப்பாவை கேலி செய்கிறார். அந்தப் பெண்ணோ நாம் இருவரும் ஒரே ஜாதி என்பதால் என் அப்பா திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார் என்றது பிடிக்காமல் அவளை உதறி பழைய காதலியை நினைத்து அழுகிறானாம். 

இவளுக்கு வாய்த்த புது காதலன் ரெஸ்டாரெண்ட் போனால், "உனக்கு பிடித்ததை ஆர்டர் பண்ணிக்கொள்" என்கிறான். பழைய காதலனை அவள் அறைந்த ரீல்ஸை அலட்சியப்படுத்துகிறான். மேலும், "நீ அவனை இன்னும் மறக்கவில்லை, அவனை சந்தித்து ப்ரேக் அப் என்று சொல்லி விட்டு வா" என்று கூறும் அளவிற்கு ஜெண்டில்மேன். அதன்படி அவனை சந்திக்கச் சென்றவள், அவன் பூக்கி என்று அழைத்ததும் அப்படியே உருகி, அவனோடு சேர்ந்து விடுகிறாளாம். என்ன கொடுமை!

நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த படங்களில் கதாநாயகனின் தங்கையோடு கள்ளத்தனமாக உறவு கொண்டு அவளை ஏமாற்றி விட்டு செல்லும் வில்லனின்(அப்போதெல்லாம் வில்லன்தான் அப்படி செய்வான். கதாநாயகன் செய்ய மாட்டான்) காலைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி, "அத்தான், என்னை கை விட்டு விடாதீர்கள்" என்று கதறுவாள். அவனோடு தன் தங்கையை சேர்த்து வைக்க கதாநாயகன் படாத பாடு படுவான். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? 

அதைப்போல நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் பெண், படிக்காத, ஒழுங்காக ஒரு வேலையில் இல்லாத ஒரு தற்குறியை மணந்து கொள்வதாக காட்டும் படங்களை பார்க்கும் பொழுது கடவுளே! என்ன எழவு இது? என்றுதான்  தோன்றும். 

இந்தப் படத்திலும் கூட ஒரு கணவானை விட்டு விட்டு, நார்சிஸ்டிக் மெண்டாலிடியோடு இருக்கும் ஒருவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதன் மூலம் ஒருவனை காதலித்து விட்டால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத்தான் கை பிடிக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.


Tuesday, March 17, 2026

குமுதம் ஆஃபிசில் கோபாலன்

குமுதம் ஆஃபிசில் கோபாலன்

ஆசிரியர் : பாமா கோபாலன்

புஸ்தகா வெளியீடு

குமுதத்தில் நிருபராக பணியாற்றிய பாமா கோபாலன் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கும் நூல் தான் குமுதம் ஆஃபிஸில் கோபாலன். இதில் அவர் ஒரு நிருபராக செய்திகளை    சேகரிக்க பட்ட பாடு,  அவை உதவி ஆசிரியர்களாலும் ஆசிரியராலும் எப்படி செம்மையாக்கப்பட்டன என்பதை யெல்லாம் சுவைப்படை எழுதி இருக்கிறார். 

குமுதத்தின் ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி. இணை ஆசிரியர் திரு ரா.கி. ரங்கராஜன், துணை ஆசிரியர்கள் ஜ.ரா. சுந்தரேசன் என்னும் பாக்கியம் ராமசாமி மற்றும் புனிதன் போன்றவர்களை பற்றியும் அதன் பிறகு சுஜாதா, மாலன் இவர்கள் ஆசிரியர்களாக இருந்த பொழுது இவர் அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய  அனுபவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து இருக்கிறார். 

முதத்தில் வெளியான ஒவ்வொரு புது பகுதியும் ஆசிரியருக்கு எப்படி  தோன்றியது என்பதை அறிவதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் படித்த ஒரு வரியில் இருந்தோ அல்லது இவர்கள் சொல்லும் விஷயங்களில் இருந்தோ இன்ஸ்பயர் ஆகி, அது குறித்து செய்திகளை திரட்டச் சொல்வாராம். ஒருமுறை மெரினா பீச்சில் இருக்கும் சிலைகள் அழுக்காக இருக்கிறதே அவற்றை சுத்தப்படுத்தலாமே என்று யாரோ ஒரு வாசகர் எழுதப் போக, சில கல்லூரி மாணவர்களை  அழைத்துக் கொண்டு பீச்சிற்கு சென்று  சிலைகளை சுத்தம் செய்யச் சொன்னாராம். வள்ளுவர் சிலையை முடித்து உழைப்பாளர் சிலையை அந்த மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்துவிட்டதாம். போலீசை கண்டதும் மாணவர்கள் எங்கோ கும்பலில் மறைந்து விட்டார்களாம். இவரையும் போட்டோகிராஃபரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த அதிகாரி ஒரு காலத்தில் பத்திரிகையாளராக இருந்தவராம்.  பர்மிஷன் இல்லாமல் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை கையில் எடுப்பதில் இருக்கும் ஆபத்துகளை கூறி அனுப்பினாராம்.  அதே போலத்தான் பொழுது போகாத பொம்மு என்று இவர் எழுதிய ஒரு விஷயம்  எப்படி வந்தது என்றும் கூறியிருக்கிறார்.

இப்படி பல விஷயங்கள். குமுதத்தை ஒரு வாரம் ரா.கி. ரங்கராஜன் தயாரிப்பாராம் ஒரு வாரம் புனிதன் தயாரிப்பாராம் ஒரு வாரம் ஜ.ரா. சுந்தரேசன் தயாரிப்பாராம் இந்த மூன்று பேருடைய சிறப்பு இயல்புகள் அவர்கள் எப்படி எல்லாம் செய்தியை திரட்ட சொல்வார்கள் என்று இவர் எழுதியிருப்பது மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் ஒரு முறை மடத்தை விட்டு வெளியேறினார். அப்போது ரா.கி.ரங்கராஜன் அவர்கள் இவரிடம் காஞ்சிபுரத்திற்குச் சென்று அங்கு "பூ விற்பவர், சாலையோர உணவு விடுதி நடத்துகிறவர்கள் போன்ற எளிய மனிதர்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டு வாருங்கள். மொத்தம் எட்டு பேர், நான்கு ஆண்கள்,நான்கு பெண்கள்  இருக்க   வேண்டும்" என்றாராம். "ஜெயேந்திரர் பற்றிய செய்தி வந்துவிடக் கூடாது என்பது நிபந்தனையாம். அதை 'என்னதான் நடக்கிறது காஞ்சிபுரத்தில்?' என்று விளம்பரம் செய்து வெளியிட்டாராம். மற்ற பத்திரிகைகள் வரிந்து வரிந்து ஜெயேந்திரரைப் பற்றி எழுத, அந்த விஷயத்தையே தொடாமல் மாற்றி யோசித்ததுதான் குமுதம். சில சமயங்களில் இவர் நீளமாக எழுதிக் கொண்டு வரும் விஷயங்களை எடிட் செய்து ரத்தின சுருக்கமாக வெளியிடுவாராம் ரா.கி.ர.

தமிழ் ஆசிரியராக இருந்த புனிதன் தயாரிக்கும் இதழில் நகைக் சுவைக்கும், தமிழ் இலக்கிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவாராம்.ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பாராம். அவர் தயாரிக்கும் பொழுது குமுதம் அலுவலகமே சுறுசுறுப்பாக இருக்குமாம். இசை ஞானம் கொண்ட ஜ.ரா.சு. ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாராம்.  

குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அவர்கள் செய்யும் பொழுது அவர் நடுத்தர உயரத்தினராக இருப்பாரோ என்று எனக்குத் தோன்றும் ஆனால் சற்று குள்ளம் என்றுதான் இவர் குறிப்பிட்டு இருக்கிறார். மிகவும் மென்மையாக பேசுவாராம். டெலிஃபோனை எடுத்ததும் ஹலோ என்று சொல்லாமல், ஹரி ஓம் என்பாராம். பல இடங்களில் ரா.கி.ரங்கராஜன், ஜ்.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகிய மூவருமே ஆசிரியரும் மீது வைத்திருந்த மரியாதையும் அன்பும்  வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

குமுதத்தில் நடிகர்கள் பாடகர்கள் போன்ற பிரபலமானவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக இருந்து தயாரித்த இதழ்கள் வந்ததாம் அப்பொழுது  அவர்களுக்கு 20 பக்கங்கள் ஒதுக்குவார்களாம். அந்த இருபது  பக்கங்களில் அந்த பிரபலம்  அவர்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி எழுதலாம், பேட்டி எடுக்கலாம்,  குறிப்புகள், ஆலோசனைகள் வழங்கலாம். எந்த பிரபலம் ஆசிரியராக இருந்து தயாரிக்கப் போகிறாரோ அவரிடம் பாமா கோபாலனை உதவியாசிரியர்களுள் ஒருவர்  அறிமுகப்படுத்தி விடுவார்களாம் அதன் பிறகு அவர்களிடம் இருந்து விஷயங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டியது பாமா கோபாலனின் வேலை. அதைப் பற்றிய பல அனுபவங்கள் மிக மிக சுவாரசியமாக இருக்கின்றன. 

கர்நாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் இறுதி நாட்களில் இருந்தபொழுது அவர் கொடுத்த ஒரு பேட்டியை ரெகார்ட் செய்து கொண்டு வீட்டில் வந்து பார்த்தால் எதுவுமே பதிவாகவில்லையாம். கேஸ்ட்டின் அடி பாகத்தில் ஒரு சிறிய ஒட்டை இருந்திருக்கிறது. அதை அவர் மனைவி அடைத்துக் கொடுத்ததும் பதிவு செய்ய முடிந்ததாம். 

புனிதன் தயாரித்த ஒரு இதழுக்காக ஒரு கல்யாண மண்டபத்தில்  யாரையும் தெரியாமல் அந்த கல்யாணத்தை அட்டென்ட் செய்து விட்டு  அதைப் பற்றி எழுத வேண்டும் என்று  ன்னாராம். அவரும் உடன் வந்திருக்கிறார். இவர்கள் ஒரு பரிசையும் வாங்கிக்கொண்டு அந்த மாப்பிள்ளை பையனிடம் கொடுத்துவிட்டு சாப்பிட்டு விட்டார்கள் ஆனால் திடீரென்று அந்த மாப்பிள்ளை பையன் இவரை அழைத்து நீங்கள் கொடுத்த கவரில் ஒரு புதிய நண்பன் என்று இருக்கிறது, எனக்கு யார் என்று தெர்யவில்லையே?" என்று கேட்டதும் இவர்கள் குமுதத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று உண்மையைச் சொன்னார்களாம். அவர் சிரித்துக் கொண்டே நல்லது என்று விட்டு விட்டாராம். 

சுஜாதா ஆசிரியராக இருந்த பொழுது மிகவும் எளிமையாக பழகுவாராம். எளிய மனிதர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்று அவர்கள் வீட்டிற்குச் சென்று கவனித்து எழுதச் சொன்னாராம். அவருக்கு வரும் கையெழுத்துப் பத்திரிகைகளை கொண்டு வந்து தந்து அவற்றிலிருந்த சுவையான விஷயங்களை எழுதச் சொன்னாராம். இஸ்லாமியர்கள் நடத்திய ஒரு கையெழுத்து பத்திரிகையில் 'முஸ்லிம்கள் அமாவாசையை அடிப்படையாக கொண்டுதான் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவார்கள் அதனால் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டு' என்று வெளிவந்திருந்ததாம். அந்த செய்தியை குமுதத்தில் வெளியிட்டார்களாம். 

மாலன் ஆசிரியராக இருந்த பொழுது பாமாஜி அவர்களிடம், "உங்கள் மனைவியை ஐந்து ஒரு பக்க கதைகள் எழுத சொல்லுங்கள் அந்த ஐந்து கதைகளும் தனித்தனியாக இருக்க வேண்டும் ஆனால் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் தொடர்பு இருக்க வேண்டும், எந்த கதையில் இருந்து படிக்க ஆரம்பித்தாலும் அந்த கதை முற்றுப் பெற வேண்டும், கொஞ்சம் கஷ்டம் தான், ட்ரை பண்ணி பார்க்கலாமே" என்றாராம் அவருடைய மனைவியும் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஐந்து ஒரு பக்க கதைகள் எழுதினாராம்.  இந்த மாதிரி நாம் அறியாத அரிய விஷயங்கள் இந்த புத்தகத்தில் நிறைய இருக்கிறது.  

ஒரு முறை ரா.கி.ர. இவரிடம் ஆர்.எஸ்.மனோகர் அவர் நாடங்களில் பயன்படுத்தும் கதையை குமுதத்தில் ஒரு பக்கத்தில் பிரசுரிக்கத் தோதாக  புகைப்படம் எடுத்து வரச் சொன்னாராம். அந்த கதை வேறு உடைந்து இருந்ததாம். அதை எப்படியோ ஒட்டி, புகைப்படம் எடுத்து கொடுத்தால், அந்த படத்தை குமுதத்தில் 'ஆர்.எஸ்.மனோகரின் ஒரு பக்க கதை' என்று பிரசுரம் செய்திருந்தார்களாம் :)) (gathai ஐ kathai ஆக்கிய வார்த்தை விளையாட்டு)அதுதான் குமுதம்!

இவர் தகவல்களை திரட்டி கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து விடுவாராம் மனைவி இரவு கண்விழித்து உட்கார்ந்து 11.30 மணியோ 12:00 மணியோ அதை டைப் அடித்துக் கொடுத்து விடுவாராம். அதைத்தவிர துணுக்குகள், ஒரு கதைகளும் குமுதத்தில் வேதா கோபாலன் எழுதிக் கொண்டிருந்தாராம். ஓரு சிறுகதைப் போட்டிக்கு வேதா கோபாலன் எழுதி அனுப்பிய கதை தேர்வானாலும், எடிட்டர், "அவரும்(வேதா கோபாலன்)நம் ஸ்டாஃப்தான்" என்று பரிசு கொடுக்கவில்லையாம்.

ஒவ்வொரு வெள்ளியன்றும் நடக்கும் லைப்ரரி மீட்டிங் பற்றிய செய்திகளும் சுவாரஸ்யம்.

பத்திரிகையுலகில் ந்ழைய விரும்பும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.  ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.  உதாரணமாக கமலஹாசன் வீட்டிற்கு சென்றேன் என்று எழுதிவிடலாம் ஆனால் அவர் அப்படி எழுதவில்லை, 'கமலஹாசன் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றேன் கமலஹாசன் வீட்டிற்கு நேர் எதிரே ஆட்டோவை நிறுத்தினார். நான்  இறங்கி சாலையை குறுக்கே கடந்து அங்கே சென்றேன்' என்று இத்தனை விவரமாக எழுதுகிறார் அந்த காட்சி நம் மனதிலே வருகிறது.

ரா.கி. ரங்கராஜன் தன்னோடு பேசியதை, 'ரா.கி. ரங்கராஜன் மாடிப்படி வளைவில் சாய்ந்து கொண்டு என்னோடு பேசினார்' என்றும்,  ஹேமமாலினி படியில் இறங்கி வந்தார் என்பதை அதிக மேக்கப் இல்லாமல் பளிச்சென்றிருந்தார். குழந்தைகளை மிஸ் பண்ணுகிறேன் என்று தோளை குலுக்கினார் என்றெல்லாம் அவர் அழகாக வர்ணித்திருக்கும் பொழுது ஒரு செய்தியை எப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு புரிகிறது.

சுஜாதா ஆசிரியராக இருந்த பொழுது கட்டம் கட்டி, ஆசிரியர், இணை, துணை ஆசிரியர்கள் பெயர்களை போடும்பொழுது சிறப்பு நிருபர் என்று இவருடைய பெயரையும் போட்டாராம். சாதாரணமாக நிருபர்களின் பெயர்களை குறிப்பிட மாட்டார்களாம். முதல் முறையாக இவருக்கு அந்த கௌரவம் அளித்தாராம் சுஜாதா.  

வரதராஜன் அவர்கள் எம்டியாக பொறுப்பேற்ற பிறகு ஒரு கம்பெனியை போல இந்த குமுதம் பத்திரிகையை நடத்த ஆரம்பித்தாராம். எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டதாம். ஒவ்வொருவரும் காலை ஒன்பது முப்பதுக்கு கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்பராம். அதேபோல மாலை ஆறு முப்பது மணிக்கு எல்லோரும் கிளம்பி விட வேண்டும் என்பதிலும் மிகவும் கண்டிப்பாக இருந்தாராம். 6:30க்குப் பிறகு யாரும் இருப்பதை அவர் அனுமதிக்க மாட்டாராம் அப்படி சில மாறுதல்கள் கொண்டு வந்திருக்கிறார். மேலும் ஒவ்வொருவரும் அன்றைய தினம் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்று ஒரு பிரிண்டட் ஷீட் கொடுக்கப்பட்டு விடுமாம். முடிக்காத வேலைகள் ஏன் முடிக்கப்படவில்லை என்பதற்கு காரணம் குறிப்பிடப்பட வேண்டுமாம்.  

குமுதத்தில் ஒரு ஃப்ரீலான்ஸ்ராகப் பணியாற்றி, எடிட்டோரியில் கன்சல்டண்ட் என்ற அளவிற்கு உயர்ந்த பாமா கோபாலன் "நான் கற்ற பாடம், எந்த தகவலைத் தந்தாலும், துருவித் துருவி கேள்விகள் கேட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்த பின்னரே எழுதித் தர வேண்டும் என்பதுதன். இந்தமுறையில் நேர விரயமும், அலைச்சலும் குறைந்தன என்றால் மிகையில்லை." என்கிறார். குமுதத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான் புனிதன் ஒரு முறை, பேட்டி எடுப்பதை பற்றி, "கண்டிப்பாக இத்தனாம் தேதியில் இந்த பேட்டி வரும் என்று கமிட் ஆகி விடாதீர்கள், ஏதாவது காரணத்தினால் பிரசுரிக்க இயலாவிட்டால் பதில் சொல்ல வேண்டும். அடுத்த முறை பேட்டி எடுக்க முடியாமல் போய் விடும்" என்று அட்வைஸ் தந்தாராம். எத்தனை உபயோகமான அட்வைஸ்! என்கிறார். உபயோகமான புத்தகம்.