கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 18, 2014

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?



வழக்கறிஞர் சுமதியின் மேடை பேச்சை மிகவும் விரும்பி ரசிப்பவள் நான். பட்டி மன்ற மேடை களில் தன் தரப்பு வாதத்திற்கான பாயிண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி  நச்சென்று அவர் முடிக்கும் அழகை வியப்பேன். ஆனால் கடந்த ஞாயிறன்று(15.6.2014) சன் டி.வி.யில் ஹூஸ்டனில் நடை பெற்ற 'கல்யாண மாலை' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமான பட்டி மன்றத்தில் அவர் பேசியதை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்! 'திருமண வாழ்க்கை சுவையா? சுமையா'?  என்பதில் சுமையே என்னும் தலைப்பில் பேச வந்த அவர் ஸ்டேஜ் டேகோரம்  என்பதை பற்றி கவலைப் படாமல் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடியில்  சண்டை போடுபவர் ரேஞ்சுக்கு பேசியது கொஞ்சம்  கூட ரசிக்கும் படியாக இல்லை.  

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணிடம்  அவள் மாமியார் குளித்து விட்டு சமையல் அறைக்குள் வா என்று கூறுவது சுமையாம். "குளிக்காம வந்தா டிஸ்மிஸ் பண்ணிடுவியா?" என்பது சுமதியின் கேள்வி. இப்பொழுது எந்த மாமியார் அப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.அப்படியே கூறினாலும் என்ன தவறு? ஆசாரம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது ஒரு குடும்பம் முழுவதற்கும் உணவு தயாரிக்க வேண்டிய இடத்தில் சுகாதாரத்தை கடை பிடிக்க சொல்வது தவறா? 

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அவள் கணவன், "நீ என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாயோ இல்லையோ என் அப்பா அம்மாவை அட்ஜெஸ்ட்  செய்து கொள்" என்று கூறுவது அவருக்கு எரிகிறதாம். அதாவது ஒரு நல்ல பையன் தனக்காக கஷ்டப்பட்ட தன் பெற்றோர்களை அனுசரித்து தன் மனைவி நடந்து கொண்டால் போதும்,அதற்காக இவன் அவளை அனுசரித்து போக தயாராக இருக்கிறான். அது கூட இவருக்கு எரியும் என்றால் வேறு எது இவருக்கு குளிர்ச்சி ஊட்டும் என்று தெரியவில்லை. மேலும் நடுவர் பாக்யராஜை தனிப்பட்ட முறையில் தாக்கியதும் பட்டிமன்ற நாகரீகமாக இல்லை.

என்னதான் வாழ்க்கை முறை மாறி இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் வேதனைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இன்றும் கூட இருக்கின்றன. என்றாலும் பட்டிமன்ற மேடையை பெண்ணியம் பேசும் மேடையாக மாற்றுவது சரியில்லை என்று சுமதிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். 

ஒரு வேளை இவை எல்லாமே pre fixingஆக  கூட இருக்கலாம் (இப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஷோக்கள் அப்படித்தானே நடத்தப் படுகின்றன)  இருந்தாலும் உலகம் முழுவதும் ஒளி பரப்பக் கூடிய ஒரு நிகழிச்சியின் தரம் தாழ்ந்து போகலாமா?           

Monday, June 9, 2014

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II


இந்த முறை நாங்கள் சென்ற கோவில்கள் எல்லாம் பிரபலமானவை என்பதால் அவைகளைப் பற்றி பெரும்பாலனோர் அறிந்திருப்பீர்கள். எனவே அவைகளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

திருவிடைமருதூர்:

பெரும்பாலான சோழ  தேச கோவில்களையும் போல இதுவும் மற்றொரு பிரும்மாண்டமான கோவில்.  மிகப் பெரிய சுதை நந்தியும், கர்பக்ரஹத்தில் பெரிய லிங்கமும் பிரமிப்பூட்டுகின்றன. 'மூன்று முழமும் ஒரு  சுற்று,முப்பது முழமும் ஒரு சுற்று' என்னும் சொலவடை உருவாக காரணமான மூன்று கோவில்களுள் இதுவும் ஒன்று. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர்  , திருவிடைமருதூர் மகாலிங்கம்,திருச்சி தாயுமானவர் கோவிலில் இருக்கும்  மாத்ருபூதேஸ்வரர் ஆகிய மூன்றுமே பெரிய லிங்கத் திரு மேனிகள். எனவே இவற்றிற்கு சாற்ற வேண்டிய வஸ்திரம் மூன்று முழமாக இருந்தாலும் சரி முப்பது முழமாக இருந்தாலும் சரி ஒரு சுற்றுதான் வரும் என்பதால் ஏற்பட்ட வசனம்.

கோவிலில் அம்மன் சந்நிதி தவிர மூகாம்பிகைக்கென்று ஒரு தனி சந்நிதி உள்ளது. அங்கு ஸ்ரீ சக்ர மேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தியை தாண்டிச் செல்லும் பொழுது பிரதான வாயிலுக்கு முன் இடது புறம் வரகுண பாண்டியனை பிடிப்பதற்காக காத்திருக்கும் ப்ரஹ்ம்மஹத்தி தம்மை பீடித்து விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. அம்மன் சந்நிதியில் தரிசனம் தரிசனம் முடித்துக் கொண்டு அப்படியே வெளியே வந்து விடுகிறார்கள்.

மருத மரத்தை(அர்ஜுன மரம்) தல வ்ருக்ஷமாக கொண்ட மூன்று முக்கிய தலங்களுள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலம்  எனப்படும்  மல்லிகார்ஜுன ஷேத்ரம் தலை மருதம் என்றும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருபுடை மருதூர் கடை மருதம் என்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதால் இது இடை மருதம் என்றும் அழைக்கப் படுகிறது. சுவாதி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது.

சாதாரணமாக சிவன்  கோவில்களில் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர்,சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். இந்த கோவிலுக்கோ திருவலஞ்சுழி(விநாயகர்), சுவாமி மலை(சுப்பிரமணியர்), ஆலங்குடி(தட்சிணாமூர்த்தி), பட்டீஸ்வரம் (துர்க்கை) சீர்காழி சட்டநாதர் கோவில் (பைரவர்), சிதம்பரம்(நடராஜர்) போன்ற கோவில்களே பரிவார தேவதைகளாக விளங்குவது ஒரு சிறப்பு.

பட்டீஸ்வரம்:

காமதேனுவின் மகள் பட்டியல் வணங்கப்பட்ட தேனுபுரிஸ்வரர் என்னும் சிவன் கோவிலே பிரதானமாக இருந்தாலும், பட்டீஸ்வரம் என்றாலே இங்குள்ள துர்க்கை அம்மனே பெரும்பாலநோர்க்கு நினைவில் வரும். அத்தனை சக்தி வாய்ந்த அம்மன். ராஜராஜசோழனின் மந்திரியாக இருந்த அன்பில் அநிருத்த பிரம்ம ராயரின் இஷ்ட தெய்வம். சாந்தம் தவழும் அழகிய வடிவம். இரண்டு வருடங்கள் முன்பு வரை கூட அம்மனுக்கு மடிசார் புடைவைதான் அணிவித்து வந்தார்கள். இப்போதோ சாதாரண மாம்பழ கட்டு. காலம் போகிற போக்கில் சூடிதார் அணிவிக்காமல் இருந்தால் சரி!

இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியிலிருந்து பார்த்தால் நேராக வீதி கண்ணில் படுகிறது. நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று நகர்ந்து உள்ளது. ஒரு கோடை காலத்தில் பக்தர்கள் புடை சூழ திருஞான சம்பந்தர் பஜனை செய்தபடி வரும் அழகை காண விரும்பிய சிவா பெருமான் நந்தியை சற்று நகர்ந்து இருக்கும்படி கட்டளை இட்டாராம். அதன்படி அவரும் நகர்ந்து இருக்கிறார்.

திரு நாகேஸ்வரம்:

ராகுவிற்கான பரிகார தலம் இது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மூன்று யுகங்களுக்கான(த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்) மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.  தனி கோவிலில் குடி கொண்டிருக்கும் கிரி குஜாம்பாள் சந்நிதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ச சாமர ரமா வாணி சவ்ய தக்ஷின சேவிதாயை என்னும் நாமத்திர்கேற்ப சரஸ்வதியும்,லக்ஷ்மியும் அம்மனுக்கு இரு புறங்களிலும் எழுந்தருளி இருப்பதை தரிசிக்கலாம். அம்மனுக்கு புனுகு சட்டம் சார்த்தப் பட்டிருக்கிறது, அபிஷேகம் கிடையாது.



திருபுவனம் கோவில் நன்றாக பராமரிக்கப்படுகிறது. அதைப் போலவே கணபதி அக்ரஹாரம் விநாயகர் கோவிலும் அளவில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் அர்ச்சகர் ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து அர்ச்சனை செய்து விட்டு போன திங்களூர்(நவ கிரக கோவில்களில் சந்திரனுக்கு உரியது) இன்று யத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு முன்னால் மண்டபம் எடுத்து கட்டப்பட்டு சிறப்பாக இருப்பதை காண சந்தோஷமாக இருக்கிறது. இங்கு நவக்ரகங்களும் சூரியனை பார்த்தபடி இருக்கின்றன.

இன்றைக்கு சிறு கிராமங்களாக இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் பிருமாண்டமான கோவில்களை பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் அவை பெரிய ஊர்களாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அவைகளில் சில நன்றாக பராமரிக்கப் படுகின்றன. சில கோவில்களில் ஒரே ஒரு அர்ச்சகர் அம்மன் சந்நிதியை பூட்டி விட்டு சுவாமி சந்நிதிக்கும், சுவாமி சந்நிதியை பூட்டி விட்டு அம்மன் சந்நிதிக்கும் வந்து பூஜை செய்கிறார். நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கும் பொக்கிஷங்கள் கோவில்கள். அவைகள் காப்பாற்றப் பட வேண்டுமானால் அர்ச்சகர்கள் போஷிக்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது நம் கடமை.  





Friday, May 16, 2014

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?




ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


      
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு. 

Wednesday, April 30, 2014

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

சுவாமி மலைக்குச் செல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது, "ஏன் சுவாமி மலை மட்டும் செல்ல வேண்டும்? பக்கத்தில் இருக்கும் வேறு சில கோவில்களுக்கும் சென்று வரலாமே" என்று என் மகன் கேட்க, இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று அப்படியே செய்ய முடிவெடுத்தோம்.

உழவன் விரைவு வண்டியில் பயணித்து காலை 5:45க்கு கும்பகோணத்தை அடைந்தோம். ஏப்ரல் மாத மத்தியல் விடியல் காலையில் மூடு பனி!!! ஆச்சர்யம்! கும்பகோணம் இப்போது சுற்றுலா மையம் ஆகி விட்டது.  நவீன வசதிகளோடு நிறைய ஹோட்டல்கள். குக்கிராமமான  சுவாமி மலையில் கூட நவீன வசதிகளோடு விடுதிகள்..!ஆன் லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சுவாமி மலை என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்கு திருவேரகம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதும் இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். சுவாமி மலை என்று அறியப்பட்டாலும் உண்மையில் இது ஒரு மலை கிடையாது,சிறிய குன்றுதான் அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்று என்பதால் கட்டுமலை என்று அழைக்கப்படுகிறது என்பது சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த கோவில் இரண்டு நிலைகளாக உள்ளது. முதல் நிலையில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர், மற்றும் நவக்ரகங்களுக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன. அங்கிருந்து வருடங்களின் பெயர்களை கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி. அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும்விநாயகரை வணங்கி கொள்கிறோம் (வேறு ஏதாவது கோவில்களில் இப்படி தென் திசை பார்த்திருக்கும் பிள்ளையார் உண்டா என்று தெரியவில்லை). நெடிதுயெரெந்திருக்கும் முருகன். கண் குளிர தரிசனம் செய்கிறோம்!


அங்கிருந்து திருவலஞ்சுழி சென்றடைந்தோம். திருவலஞ்சுழி என்றதும் பெரும்பாலானோர்  வெள்ளை விநாயகர் கோவில்தான் பிரதானம் என்று நினைத்துக் கொள்வோம்.  ஆனால் அடிப்படையில் இது பெரிய நாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும்! பிருமாண்டமான கோவில்! கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர் என்னும் ஸ்வேத விநாயகர் சந்நிதி.
இந்திரன் பூஜித்த சிறிய வெண்ணிற விநாயகர்!அவருக்கு முன் பிரசித்தி பெற்ற ஒற்றைக் கல்லினால் ஆன  பலகணி(சாளரம்). அந்த பலகணி மட்டுமல்ல கோவில் முழுவதிலுமே அழகான சிற்ப வேலைப்பாடுகள்! சுவாமியை தரிசனம் செய்து விட்டு தனி கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜ ராஜ சோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' இதுதான் என்றும் ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைக்கப் பட்டிருக்கும் அறிவிப்பு பலகை சொல்கிறது. ஆனால் நிசும்ப சூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருக்கும் அஷ்டபுஜ துர்கையை ராஜ ராஜ சோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் கூறுகிறார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் துர்கையை வணங்கிக் கொள்கிறோம்.

--தொடரும்

பின் குறிப்பு:

திருவலஞ்சுழி தல புராணம்:


குடகு மலையிலிருந்து புறப்பட்ட காவிரி, திருவலஞ்சுழிக்கு முன்னால் ஒரு
த்வாரத்தில்(குழிக்குள்) சென்று மறைந்து  விட்டது. காவேரி தஞ்சையின் இறுதி வரை வரும், தாம் பயன் பெறலாம்,என்று நினைத்த சோழ தேச மக்களும், மன்னனும் ஏமாற்றமடைந்தனர். காவிரியை மீண்டும் வெளியே கொணர்வது எப்படி என்று ஆலோசித்தப்பொழுது, ஒரு அரசன் அல்லது முற்றும் துறந்த முனிவர் ஒருவரை பலியிட்டால், காவேரி மீண்டும் வெளிவந்து ஓடத் துவங்கும் என்று கூறப்பட்டது. உலக மக்களின் நன்மைக்காக ஏரகண்ட முனிவர் தன்னை பலியிட்டுக் கொள்ள காவிரி தான் மறைந்திருந்த பிலத்திலிருந்து வெளிப்பட்டு இவ்விடத்தில் வலப்புறமாக சுழித்துக்கொண்டு ஓடத் துவங்கியது. அதனாலேயே இவ்விடம் திருவலஞ்சுழி என்று வழங்கப்படலாய்ற்று. அப்பொழுதே காவேரியை தஞ்சை டெல்டா பகுதிக்கு வரவழைப்பது பிரச்சனைதான் போலிருக்கிறது!!   


   








Thursday, April 10, 2014

ராகு காலமும் எம கண்டமும்

ராகு காலமும் எம கண்டமும் 





ஒரு முறை சூரியன் முதல் சனி வரை உள்ள கிரகங்கள்  சிவ பெருமானிடம் சென்று தாங்கள் மனிதர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு நாளில் சில நாழிகைகளை(மணித்துளிகளை) தங்களுக்கு தருமாறு வேண்டினர். சிவனும் அவர்களின் நல்ல எண்ணத்தை மதித்து ஒரு நாளில் மூன்று மணி நேரங்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கினார். அந்த மூன்று மணி நேரங்களையும் சேர்ந்தர்போல ஒரே சமயத்தில் கொடுக்காமல் காலையில் ஒரு மணி நேரம். மதியம் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று பிரித்து வழங்கினார். அது ஹோரை என்று வழங்கப்படும்! ஒவ்வொரு நாளும் அதற்குரிய ஹோரையில் துவங்கும். உதாரணமாக திங்கள் கிழமையின் முதல் ஹோரை சந்திர ஹோரை ஆகும். ஒவ்வொரு ஹோரையிலும் சில காரியங்கள் செய்வது சிறந்த பலனைத் தரும். இதை விவரித்தால்... 

சூரிய (ஞாயிறு) ஹோரையில் அரசாங்க அலுவல்களை செய்யலாம். 
சந்திர ஹோரையில் பிரயாணங்கள்,திருமண விஷயங்கள் செய்வது நலம். 
செவ்வாய் ஹோரையில் மருந்துண்ணுவதும், சிகிச்சை மேற்கொள்ளுவதும், போருக்கு செல்லுவதும், கடன் அடைப்பதும், நிலம்,வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடங்குவதும் வெற்றியைத் தரும். 
புத ஹோரையில் கல்வி, வியாபாரம் போன்ற காரியங்களை ஆற்றுவது நலம் பயக்கும். 
குரு(வியாழன்) ஹோரை எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்தது. குறிப்பாக, கோவிலுக்குச் செல்லுதல், மகான்களை தரிசித்தல், பூஜை போன்ற தெய்வீக விஷயங்களுக்கு சிறப்பானது. 
சுக்ர(வெள்ளி) ஹோரை திருமணம் பேச,திருமணம் நடத்த, நிச்சயதார்த்தம் முடிக்க,ஆபரணங்கள் வாங்க, பூன,க்ரஹ பிரவேசம் சாந்தி முஹுர்த்தம் போன்ற சுப காரியங்கள் நடத்த ஏற்றது. 
சனி ஹோரையில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அமைப்பது/இயக்குவது எண்ணெய் ஆட்டுவது போன்ற காரியங்களைச் செய்யலாம்.  

மேற்கண்ட ஏழு கிரகங்களுக்கும் கிடைத்த வரத்தை கேள்விப்பட்ட சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தங்களுக்கும் அதைப் போல  நாளில் மூன்று மணி நேரம் வேண்டும், ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் மற்ற கிரகங்களைப் போல மனிதர்களுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்ய பயன் படுத்துவோம் என்று எண்ணின. அவைகளின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட இறைவன், "மற்ற கிரகங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்ய நினைத்தன, ஆனால் நீங்கள் இருவரும் கெடுதல் செய்ய விரும்புகிறீர்கள், நன்மை,தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை, ஆகவே உங்களுக்கும் ஒரு நாளில் சில மணித் துளிகளை ஒதுக்குகிறேன், ஆனால் மற்ற கிரகங்களுக்கு போல் மூன்று மணி நேரம் கிடையாது,அதில் பாதியான ஒன்றரை மணி நேரமே.." என்றார். அது முதல் தினமும் ராகுவிற்கான ஒன்றரை மணி நேரம் ரகு களம் என்றும், கேதுவிற்கான ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றும் கடைபிடிக்கப் படலாயிற்று. அந்த நேரத்தில் நல்ல செயல்கள் எதுவும் தொடங்குவது அத்தனை ஸ்லாகியமல்ல என்பது ஒரு நம்பிக்கை
என்றாலும் விருச்சிக லக்னம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கும், மகர ராசியில் ராகு இருக்க பிறந்தவர்களுக்கும் ராகு காலம் எந்த வித தீய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் அனுபவ ஜோதிட பாடம். மேலும் ரகு காலம், எம கண்டம் இரண்டிற்கும் இடையில் நல்ல ஹோரைகள் வந்து விடுவதும் அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இப்படி நல்ல ஹோரைகளால் நம்மை காக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் துவங்குகின்றன போலும்!     

Monday, March 24, 2014

idiot box wisdom box

idiot box wisdom box


தொலை காட்சியை அதாவது டி.வி. யை இடியெட் பாக்ஸ் என்று சொல்பவர்கள் உண்டு. காரணம், டி.வி. பார்க்கும் பொழுது நம் சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதுதான். ஆனால் முட்டாள்கள் என்று நாம் நினைக்கும் சிலர் சில சமயங்களில் சில அபூர்வ கருத்துக்களை கூறுவார்கள். அது போல டி.வி.மூலமும் நாம் சில புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

டி.வி.யில் எனக்கு கிடைத்த சில விஷய தானங்கள்:

சமையலுக்கு தாளித்தவுடன் பாத்திரத்தை மூடி விட வேண்டும். அப்போதுதான் சூடாக தாளித்த கடுகு அல்லது சீரகத்திலிருந்து வெளிப்படும் புகை தாளிக்கப்பட்ட பண்டத்தின் மீது ஒரு ஏடு போல படிந்து அந்த பண்டம் மூன்று மணி நேரம் வரை கேட்டுப் போகாமல் பாதுகாக்குமாம். இதை கூறியது திரு. சுகி சிவம் அவர்கள்!

சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம்(வாக்கம், பாக்கம் இரண்டும் ஒரே பொருள் உடையவைதான்),மேடவாக்கம், புழுதிவாக்கம்,மடிப்பாக்கம் என்று பல வாக்கங்கள்/பாக்கங்கள் இருப்பதை அறிவோம். இங்கு மட்டும் ஏன் இத்தனை பாக்கங்கள் தெரியுமா? ஏரி போன்ற நீர் நிலையை ஒட்டிய பகுதிதான் பாக்கம் என்று அழைக்கப்படுமாம். இதை கூறியது திரு.கண்ணன் பட்டச்சார்யா அவர்கள்.

மேலே குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் ஒரு லேக்வியு(lake view) தெருவோ, லேக் வியு அபார்ட்மெண்டொ இருப்பதை பார்க்கலாம். சென்னையின் உள்ளேயும் புறமும் நூற்றி ஐம்பதிர்க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் இருந்தனவாம்!  அவற்றில் பெரும்பான்மை தூர்க்கப்பட்டு விட்டன என்பது எவ்வளவு பெரிய சோகம்!  

நேஷனல் ஜாக்ரபி சானலில் ஒரு முறை பகார்டி ரம் தயாரிப்பதை காட்டினார்கள். ரம் நிரப்பும் முன் அந்த குப்பிகளை தண்ணீரால் கழுவாமல் ரம்மால்தான் கழுவுவர்களாம். காரணம் குப்பிகளில் ஒரு வேளை தண்ணீர் தேங்கி,அதனுடன் ரம் கலந்து விட்டால், ரம்மின் சுவை மாரி விடும் என்னும் எச்சரிக்கையாம்! செய்யும் தொழிலில் அவர்களின் அக்கறை என்னை வியக்க வைத்தது.

இதைத் தவிர 'அனிமல் பிளானெட்' சானலில் காண்பிக்கப் படும் மிருகங்களின் வாழ்கை முறைகளைப் பார்க்கும் பொழுது மனிதர்களாகிய நாம் மிருகங்களிடமிருந்து எந்த வகையில் வித்தியாசப்படுகிறோம்? என்று தோன்றும். நமக்கிருக்கும் அத்தனை உணர்வுகளும் அவைகளுக்கும் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அதை நம்மைப் போலவே அவைகளும் வெளிப் படுத்துகின்றன என்பதுதான் ஆச்சர்யம்!

இதைத் தவிர ஜோதிட சம்பந்தமாக சில நல்ல தகவல்கள் டி.வி.யில் கிடைத்திருக்கின்றன. அதைப் போலவே ஒரே பெற்றோருக்கு பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று சிறப்பாகவும், மற்றொன்று கஷ்ட நிலைமையிலும் இருக்க காரணம் என்ன என்னும் என்னுடைய நீண்ட கால கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் அவர்கள் அளித்த கர்மா பற்றிய விளக்கம் விடையளித்தது. பூஜ்ய ஸ்ரீ முரளி தர சுவாமிகளின் அருளுரைகள் திறக்கும் கதவுகள் ஏராளம்!
ஆக தொலைகாட்சி தொல்லை காட்சியாக எப்போதுமே இருப்பதில்லை.









Thursday, March 13, 2014

சாவித்ரி

சாவித்ரி

இன்னும் இரண்டு நாட்களில் காரடையான் நோன்பு வருகிறது. அஸ்வபதி என்னும் அரசனுக்கு மகளாக பிறந்து, குறை ஆயுள் உடையவன் என்று அறிந்தும் சத்தியவானை மணந்து, தன பதிவ்ரதா தன்மையினாலும், தெய்வ பக்தியினாலும், எமனுடன் போராடி தன் கணவனின் உயிரை மீட்டவள் சாவித்ரி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சாவித்ரி என்னும் அந்தப் பெண் மட்டுமல்ல, சாவித்ரி என்னும் பெயரே ஒரு அசாதரணமான தன்மை கொண்டதோ என்று தோன்றுகிறது.

சாவித்ரி வித்யாசாலா:

முதலில் எங்கள் ஊரான திருச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். யாரிடமாவது நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில்தான் என்றால் உடனே அவர்கள், "எங்கே படித்தீர்கள்? சாவித்ரி வித்யாசாலாவிலா?"  என்பார்கள். அப்படி திருச்சிக்கே ஒரு அடையாளமான கல்வி நிறுவனம் அது. நாம் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே எஸ்.வி.எஸ்.சிலோ  (சாவித்ரி வித்யா சாலா வின் சுருக்கம்) அல்லது அதன் சகோதரி நிறுவனமான எஸ்.ஆர். காலேஜிலோ படித்த ஒரு பெண்ணை சந்திக்க முடியும். அவர் அங்கு பிரபலமாகவும் இருப்பார்.

சாவித்ரி வைத்தி:



எண்பது வயதை கடந்தும் சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கொண்டிருக்கும் திருமதி சாவித்ரி வைத்தி 'மண்டே சாரிட்டி கிளப்' மூலம் தன சமூக சேவையை தொடங்கியவர். பின்னர் அதரவற்ற பெண்களுக்காக விஸ்ராந்தி என்னும் முதியோர் இல்லத்தை அமைத்தார். தமிழகத்தின் முதல் முதியோர் இல்லமான அதில் 150 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் வசிக்கிறார்கள். இதைத்தவிர ஒற்றை பெற்றோரை(single parent) உடைய குழந்தைகளுக்காக "மலர்ச்சி" என்னும் நிறுவனத்தையும் மனச் சோர்வு உடைய இளம் பெண்கள் தற்காலிகமாக தங்கிப் போக 'நிழல்' என்னும் அமைப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சாவித்ரி - அரபிந்தோவின் அற்புத காவியம்!



ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களால் எப்படி  ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும், ரமண மகரிஷியையும் தவிர்க்க முடியாதோ அப்படி  தவிர்க்க முடியாத மற்றொரு  மகான் ஸ்ரீ.அரவிந்த கோஷ்!
அவர் எழுதிய பல நூல்களுள் முக்கியமானவை 'லைப் டிவைன்(life divine)',சிந்தசிஸ் ஆப் யோகா(synthesis of yoga)', மற்றும் சாவித்ரி என்னும் அமர காவியம். இதை எழுத அரவிந்தர் 50 வருடங்கள் எடுத்துக் கொண்டார். வெளியிடப்படும் முன்  18 முறைகள் திருத்தி அமைத்தாராம். இரண்டு பாகங்களாக 1950 ம் வருடமும் 1951 ம் வருடமும் வெளியிடப்பட்டது. 

49 காண்டங்களில்,24000 வரிகளில் எமனோடு போராடி தன் கணவன் சத்யவானின் உயிரை சாவித்ரி மீட்ட கதை அருமையான ஆங்கிலத்தில் விவரிக்கப் படுகிறது. இங்கு சத்ய ஜீவிதத்தை சுமந்திருந்தாலும், மரணத்திற்கும்,அறியாமைக்கும் இலக்காகும் ஜீவனுக்கு சத்யவானும், அவனை காக்க இறங்கி வரும் தெய்வீக அருளுக்கு சாவித்ரியும், நிலயாமைலிருந்து சாஸ்வததிர்க்கு நம்மை உயர்த்தும் தவ வலிமைக்கு சாவித்ரியின் தந்தை அஸ்வபதியும், விஷய ஞானம் இருந்தும் தெளிவு இல்லாததால் குருடாகி, தன்னுடைய சிறப்பான ஆளுமையை இழக்கும் அறிவுக்கு சத்யவானின் தந்தையும் உருவகப்படுத்தப் படுகின்றனர் என்று சான்றோர் உரைப்பர். என்னைப் போன்ற சிற்றறிவு கொண்டார்க்கு இக்காவியத்தை படித்து புரிந்து கொள்வது கடினம்தான். அர்த்தம் புரியாவிட்டாலும் என்ன இதன் ஒவ்வொரு வரியும் விசேஷ சக்தி கொண்டது . மந்திரமாக ஜபித்து பலன் அடையலாம். அப்படி பலன் அடைபவர் பலர் இருக்கிறார்கள்.

நடிகையர் திலகம் சாவித்ரி:





நல்ல வேளை இப்போது போல அப்போது கதா நாயகி என்றால் தோள் பட்டை எலும்புகள் தெரிய வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அது கூட பரவாயில்லை, கதா நாயகி நடிக்கவே தேவை இல்லை என்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால் குண்டு முகமும், வண்டு கண்களும் கொண்ட இந்த நடிகையின் இயல்பான திறமை கண்டுகொள்ளபடாமலே போயிருக்கும். என்ன நடிப்பு! என்ன நடிப்பு! மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் எத்தனை முறை பார்த்திருக்கிறேன்..! சிவாஜிக்கு இணையாக பலர் நடித்திருக்கிறார்கள், ஆனால் சிவாஜியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது இரண்டே பேர்தான். ஒன்று நாகேஷ், மற்றொன்று சாவித்ரி! 


இவருடைய நடிப்பு திறமைக்கு ஒரு சாம்பிள் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை பின்னணி பாடகி பி.சுசீலா கூறியதைத்தான் குறிப்பிட வேண்டும். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பி.சுசீலாவிடம், "நீங்கள் பாடியதற்கு எந்த நடிகை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நினைக்கீறிர்கள்?" என்று கேட்டபொழுது, அவர், சரஸ்வதி சபதம் படத்தில் கோமாதா எங்கள் குலமாதா பாடலில் கொஞ்சம் தம் பிடித்து பாடி  விட்டு இறுதியில் வண்ணகோமதா... என்று முதித்து விட்டு கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டிருப்பேன். நான் எந்த இடத்தில மூச்சு வாங்கிக் கொண்டேனோ அதே இடத்தில் சாவித்திரியும் லேசாக மூச்சு வாங்கிக் கொள்வது போல நடித்திருப்பார், அதைப் பார்த்த பொழுது எனக்கு மிகுந்த சந்தோஷமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது."என்றார். அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படவில்லை.

சாவித்ரி - திரைப்படம்!

1980இல்  பரதன் இயக்கத்தில் மேனகா நடித்து வெளியான 'சாவித்ரி' திரைப்படம் எதிர்ப்பு அலையை சந்தித்தது. வயோதிகரை மணந்து கொள்ளும் இளம் அந்தணப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு உறவு கொள்வதாக எடுக்கப்பட்ட அந்த படத்தை தடை செய்யக் கோரி பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக வரலாற்றில் முதல் முறை.

சாவித்ரி என்னும் பெயர் ஒரு கலக்கு கலக்கும் போலிருக்கிறது. உங்களுக்கு தெரிந்த சாவித்ரிகளைப்  பற்றி எழுதுங்கள்! 





  






Sunday, March 2, 2014

கண் தானம் - என் எண்ணம்!

கண் தானம் - என் எண்ணம்!



அவ்வப்பொழுது நம் ஊடகங்களில் கண் தானத்தைப் பற்றி கட்டுரைகளோ, சொர்பொழிவுகளோ வரும். அவை எல்லாமே இலங்கையில்தான் மிக அதிகமாக கண் தானங்கள் நடக்கின்றன, அதற்கு காரணம் அந்த நாடு புத்த மதத்தை தழுவியிருக்கும் நாடு, புத்த மதம் மற்ற உயிர்களுக்கு உதவி புரிவதை வலியுறுத்தும் மதம், எனவேதான் அங்கு கண் தானம் அதிக அளவில் நடக்கிறது என்று கூறுவார்கள்/எழுதுவார்கள். நேற்று(1.3.2014) சனிக்கிழமை சன் டி.வி.யில் 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் பேசிய திரு.சுகி.சிவம் அவர்களும் இதையே கூறினார். நம் மத நம்பிக்கைகள் கண் தானத்தை தடுக்கின்றன என்று வருத்தமும் கொஞ்சம் கோபமும் பட்டார். சுகி.சிவம் அவர்களே இப்படி கூறியவுடன், நம் மத நம்பிக்கை ஏன் கண் தானத்தை  தடுக்கிறது? என்று யோசித்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், சரியாய், தவறா கூறுங்கள்.

நம் இந்து மதமும் எல்லா மதங்களையும் போல மற்ற உயிர்களுக்கு உதவி செய்வதை வலியுறுத்தத்தான் செய்கிறது. ஆனால் அது ஏன் உறுப்பு தானங்களை ஆதரிப்பதில்லை? இந்து மதம் என்ன இதயம் இல்லாததா? இல்லவே இல்லை, இங்குதான் நாம் கொஞ்சம் நுட்பமாக யோசிக்க வேண்டும். மற்ற மதங்களில் இல்லாத ஒரு விஷயம் இந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் கர்மக் கொள்கையும் மறு பிறப்பில் நம்பிக்கையும். அதன்படி ஒருவன் இந்தப் பிறவியில் அடையும் நன்மை தீமைகளுக்கு அவன் சென்ற பிறவிகளில் செய்த நன்மை தீமைகளே (பாவ, புண்ணியங்களே) காரணம் என்பதை அழுத்தி சொல்வதோடு, அந்தக் கர்மங்களை ஆகாமி, சஞ்சித, பிராரப்த என்று மூன்றாகவும் பிரித்து விவரிக்கின்றது. இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப  முடியாது, கடவுள் உட்பட! இதை இந்து மத புராணங்கள் விளக்கும். 

இருக்கட்டும், இதற்கும் உறுப்பு  தானத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இந்து மத கோட்பாட்டின்படி யாரோ ஒருவருக்கு இந்தப் பிறவியில் உறுப்பில் குறைபாடு உண்டாகிறது என்றால் அதற்கு அவர் தன்னுடைய  முந்தைய பிறவியில்/பிறவிகளில் செய்த ஏதோ ஒரு தீவினைதான் காரணம். இதை சற்றே விரிவு படுத்திக் கூறினால் அவர் தன்னுடைய பூர்வஜென்ம வினைப் பயனை இந்தப் பிறவியில் அனுபவித்துக் கழிக்கிறார் என்று பொருள். அந்த வினைப் பயனை அவரை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் தன்னுடைய உறுப்பை தானமாக தருவதன் மூலம் வேறு ஒருவர் தடுத்து விட்டால் அனுபவிக்க வேண்டிய வினை எங்கே செல்லும்? உதாரணமாக நாம் ஒரு பேருந்தில் பயணிக்கிறோம், நல்ல கும்பலான அந்த பேருந்தில் நமக்கு உட்கார இருக்கை கிடைத்து விட்டது. அமர்ந்திருக்கிறோம், அப்போது கையில் குழந்தையோடு ஒரு பெண்மணி ஏறுகிறாள், அவளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அவளுக்கும் இடம் கிடைக்க வேண்டும், நானும் உட்கார வேண்டும் என்றால் நடக்குமா?

மகான்களால் மட்டுமே ஒருவரின் வினைப் பயனை வேரறுக்க முடியும். அவர்களுமே சில சமயங்களில் தன் பக்தர்களின் வியாதியை நீக்கிய பிறகு அதன் பாதிப்பை சில நாட்களோ,சில மணி நேரங்களோ அனுபவித்திருக்கிறார்கள் என்பதை படித்தும், கேட்டுமிருக்கிறோம்.  இந்தக் காரணத்தினால்தான் ஹிந்துக்களுக்கு கண் தானம் செய்வதில் தயக்கம் இருக்கும் இன்று நினைக்கிறேன். சரியா? தவறா? சொல்லுங்கள்...






Thursday, October 31, 2013

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்? என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் தங்கை!!  சுயம்பு உருவம் என்றார் பட்டாச்சாரியார். கிருஷ்ணன் அவதரித்த பொழுது அவனோடு அவதரித்த மாயாதான் இங்கே விஷ்ணு துர்கையாக எழுந்தருளியிருக்கிறாள் என்றார். தன்னைவணங்கும் பக்தர்களுக்கு கல்வி, உத்யோக ப்ராப்தி, திருமண பேறு, குழந்தை பாக்யம் என அணித்தையும் தருகிறவளாம். 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் திருமுகத்தோடு 20 அடி உயர மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய திருவடிக்கருகே மஹாலட்சுமி, உயர்த்திய திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன்,இடது திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  அதைத்தவிர முதல் மூன்று ஆழ்வார்கள் மற்றும் மிருகண்டு முனிவர் பெருமாளுக்கு இடது புறம் இருக்கிறார்கள். பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். மற்ற கோவில்களில் பார்க்க முடியாத ஒரு அதிசயம், கொடி மரத்திற்கு எதிரே சற்று உயரத்தில் ஒரு சாளரம் போன்ற அமைப்பில் கையில் வெண்ணெய் ஏந்தியபடி நிற்கும் கண்ணனையும் காண முடியும்.

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்ய ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 
புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ,
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ, 
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான். 
என்னும் கம்ப ராமாயணப் பாடல் நினைவுக்கு வருகிறது.  ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர் முடியாமல் தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருக்கோவிலூருக்கு விழுப்புரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! திருவண்ணாமாயிலிருந்தும் செல்லலாம். 

Tuesday, October 15, 2013

ராஜா ராணி

ராஜா ராணி 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாராவின் வருகை! கை தட்டி வரவேற்கலாம்! படத்தின் மிகப் பெரிய பலம் அவர்தான்! படம் முழுவதும் பிழியப் பிழிய அழுகிறார் கிளிசரின் போட்ட சினிமா அழுகை இல்லை கண்களில் உள்ள மை கரைந்து வழியும் நிஜ அழுகை! என்றாலும் அதைப் பார்க்கும் நமக்கு எரிச்சலோ, அலுப்போ வராதது அவருக்கு கிடைத்த வெற்றிதானே!  
இரண்டு ஹீரோக்கள், இரண்டு கதா  நாயகிகள், முன்பாதியில் ஒன்று பின்பாதியில் ஒன்று என்று இரண்டு பிளாஷ்  பாக்குகள் இப்படி படமே இரண்டு பாதியாக பிரிந்து நிற்கிறது. முதல் பாதியை சத்யராஜ், நயன்தார,ஜெய் இவர்களின் திறமையும் அனுபவமும் காப்பாற்றுகின்றன. இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்த சந்தானம் மட்டும் முயலுகிறார்.  ஆர்யா கொஞ்சம் நடிக்கவும் முயற்சிக்கலாம் நஸ்ரியாவுக்கு போகப் போக நடிக்க வரும் என்று தோன்றுகிறது.
ஜீ .வீ .பிரகாஷின் இசையில் எந்த பாடலும் ஈர்க்கவில்லை. வசனம் சில இடங்களில் மட்டும் பளிச்சிடுகிறது. ஆர்யா படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். அதனாலோ என்னவோ படம் கொஞ்சம் தள்ளாடுகிறது. இந்தப் படத்தை சிலர் மௌன ராகத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதற்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லலாம் முக்கியமான வித்தியாசம் மௌன ராகம் காலத்தை வென்ற கிளாசிக் !

Friday, October 4, 2013

மஹாலய அமாவாசையும் மாடும்!
இன்றைக்கு மகாளய அமாவாசை! இன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது என்று ஏதாவது புத்தகத்தில் படித்திருப்பேன் அல்லது டி.வீ. சானெல் எதிலாவது யாராவது கூறியிருப்பார்கள்... அது நினைவுக்கு வரவே கே.கே.நகரில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இருக்கும் மாடுகளுக்கு அகத்தி கீரை கொடுக்கலாம் என்று நானும் என் மகனும் ஒரு கட்டு  அகத்தி கீரை வாங்கிக் கொண்டு சென்றோம்.
என் மகனுக்கு ஒரு கட்டு என்பது ரொம்பவும் குறைந்த அளவு என்று தோன்றியது. கோவில் வாசலிலே அகத்தி கீரை விற்பார்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. எனக்கு முன்னாலேயே பலர் அங்கு விற்றுக் கொண்டிருந்த அகத்தி கீரை அனைத்தையும் வாங்கி மாடுகளுக்கு போட்டு விட்டனர். என் மகன் நீட்டிய அகத்தி கீரை கட்டை முகர்ந்து பார்த்த மாடு முகத்தை திருப்பி கொண்டு விட்டது. கொட்டிலில் வைக்கோல் போடும் இடம் முழுவதும் அகத்தி கீரையாகவே இருந்தால் அது என்னதான் செய்யும்?
சரி நம் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாடு கட்டியிருப்பார்கள், அங்கு போட்டு விடலாம் என்று திரும்பினோம். அங்கும் சிலர் அகத்திகீரை கட்டை போட்டிருந்தார்கள் என்றாலும் கீரை அதுவரை திகட்டாததால் நாங்கள் கொடுத்ததை சாப்பிட்டது. எங்களுக்கு பின்னாலேயே இன்னொருவர் கீரை கட்டோடு வந்தார்... அடுத்த முறை  கொஞ்சம்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
அகத்தி கீரை போடப் போனால் நம்மை மாடு முட்டினாலும் ஆச்சர்யமில்லை.

Wednesday, October 2, 2013

பெரியோரைப் போற்றுவோம்!

பெரியோரைப் போற்றுவோம்!
 
 
 
அகில இந்திய காங்கிரெஸ் கமிட்டி அந்த இளைஞருக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தது. அதை வைத்துக் கொண்டுதான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். ஒரு சமயம் எதிர் பாராத திடீர் செலவு வந்தது எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பிய பொழுது அவர் மனைவி, "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம்" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துத் தந்தார். இவருக்கோ ஆச்சர்யம், "உன்னிடம் ஏது பணம்"? என்று எல்லா கணவன்மார்களையும் போலவே கேட்க, "நீங்கள் தந்த பதினைந்து ரூபாயில் பன்னிரண்டு ரூபாய்  மட்டும் செலவழித்து விட்டு மிச்சம் மூன்று  ரூபாயை சேமித்து வந்தேன்" என்றார். அப்படியா என்று கேட்டுக் கொண்ட அவர் உடனே காங்கிரெஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார் என்னவென்று தெரியுமா? "ஐயா! நீங்கள் எனக்கு தரும் சம்பளம் அதிகம் எங்கள் குடும்ப செலவிற்கு ரூ.பன்னிரண்டு  மட்டும் போதும். எனவே அடுத்த மாதம் முதல் ரூ.பன்னிரண்டு  மட்டும் அனுப்புங்கள்" என்று!!! நம்ப முடிகிறதா? அதனால்தான்  பிரதமராக பணியாற்றிய அவர் இறந்த பொழுது அவர் கடனில் அம்பாசிடர் கார் வாங்கிய நிலுவை பாக்கி இருந்தது.  
 
இப்படி பட்ட எளிய, நேர்மையான மா மனிதர் திரு.லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் (அக்டோபர் இரண்டு). இன்று அவரையும் நினைவு கூர்வோம்! 
 
இன்றைய அரசியல் வாரிசுகள் எந்த வியக்கும் செல்லாமல் கோடி கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள். அவர்கள் வாங்கியிருக்கும் ஆடம்பர கார்களை நிறுத்துவதற்கே கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்களை வாங்குகிறார்கள்.  இந்த சூழலில் லால் பகதூர் சாஸ்திரி போல ஒருவர் நம் நாட்டு பிரதமராக இருந்திருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். சரித்திரம் தன்னைத் தானே புரட்டிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள்(history repeats itself) என்பார்கள். அப்படி புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும் மீண்டும் நமக்கு உன்னதமான தலைவர்கள் கிடைக்கட்டும் என்று இந்த நாளில் வேண்டிக் கொள்வோம்!
  

Thursday, July 25, 2013

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!


சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.

கற்றதும் பெற்றதும்:

ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன.

 பிரபல கொலை வழக்குகள்:

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப்  பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர்.

நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட  ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு   சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே  வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும்  அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார்  எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம்  இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம்.

அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக   சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை  கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.

நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி  விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.

பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச்  சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது.  உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.

நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.

     






   

Tuesday, June 18, 2013

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...
 
 
இப்போதெல்லாம் தொலை  காட்சியில் நிறைய ஜோதிட நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதில் ஜாதகத்தில் என்னென்ன  தோஷங்கள் இருந்தால்  எந்தெந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். அதைத் தவிர கோவில்களைப் பற்றி சிறப்பு நிகழ்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. அவைகளிலும் அந்த ஆலயங்களில் சென்று வழி படுவதால் ஒருவருக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று சிறப்பித்து சொல்கிறார்கள். இந்த நிகழ்சிகளைப் பார்க்கும் மக்கள் எப்படியாவது தன்  துன்பம் தீராதா என்ற ஆதங்கத்தோடு அந்த கோவிலுக்குச்  செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? பெரும்பாலான பெரிய கோவில்களில் அர்ச்சனை செய்வதே கிடையாது. நாம் வாங்கிச்  செல்லும் தேங்காயை வெளியிலேயே உடைத்து விட்டு நம்மிடம் திருப்பித்  தந்து விடுகிறார்கள்.
 
கடவுளுக்கு மாலை சாற்றுவது மிகவும் சிறப்பு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் எனவே திருச்சிக்கு அருகில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்ற பொழுது மாலை வாங்கி சென்றேன் ஆனால் அங்கிருந்த அர்ச்சகரோ மாலையிலிருந்து ஒரு ரோஜாப் பூவை பிய்த்து என் கையில் கொடுத்து விட்டு மாலையை நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்த படியே சந்நிதியை நோக்கி விட்டெரிந்தர் அது அம்மன் காலடியில் போய் விழுந்தது. நான் மனம் நொந்து போனேன்.
 
இன்னொரு முறை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு தேங்காய் மாலை சாற்ற சொன்னதால் தேங்காய் மாலை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றேன். அங்கு, "நாங்கள் ஏற்கனவே ஒரு மாலை சாற்றி விட்டோம் எனவே இதை நாளை சாற்றுகிறோம் என்றார்கள்". சதுர்த்தி அன்று சாற்ற வேண்டிய மாலையை அவர்கள் மறு நாள் சாற்றுவர்களாம்...!
அதை விட கொடுமை அன்றைக்கு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கிக்   கொண்டு சென்றோம். அவர்கள் அஷ்டோத்திரம்(108) சொல்லி  அர்ச்சனை செய்யாமல் விநாயகருக்கு உரிய ஷோடச நாமாக்களை (16 மட்டும்) சொல்லி அர்ச்சித்து கொடுத்து விட்டார்கள். இதன்  பிறகும் நமக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தோன்றுமா? ஒரு வேளை விளக்கு ஏற்றக் கூட வழி இல்லாமல் இருந்த கோவில்களில் இன்று கும்பல் நெரிகிறது, அதை நல விதமாக அங்குள்ளோர் பயன் படுத்திக்கொண்டால் பக்தர்களுக்கும் மனம் நிறையும் கோவில்களும் செழிக்கும்!

Wednesday, May 29, 2013

குருவே சரணம்!

குருவே சரணம்!


இன்று (28.5.2013)வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி  குரு பெயர்ச்சி! திருக்கணித காரர்கள் 24ம் தேதியே குரு பெயர்ந்து விட்டார் என்கிறார்கள். எப்படியோ, இது வரை ரிஷப ராசியில் இருந்த குரு  பகவான் மிதுன  ராசிக்கு மாறுகிறார்.

ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம். தேவர்களின் ஆச்சர்யனாக(ப்ரஹஸ்பதி)  விளங்குவதால்  குரு  என  அறியப்படுகிறார். பொன் வண்ண நிறத்தில் விளங்குவதால் 'பொன்னன்' என்றும் 'வியாழன்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

சிலர் குரு பகவானும்  தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக் கொள்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு ரூபம். தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி சிவ பெருமானை வழிபட்டு அவரால் "குரு" என்று
அழைக்கப்பட்டு நவ கிரகங்களில் ஒன்றானவர்.

குரு வழிபட்ட தலங்களுள் முக்கியமானவை குருவாயூர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சென்னைக்கு அருகில்  உள்ள பாடி,  தஞ்சாவூருக்கு  அருகில் உள்ள திட்டை, முதலிய கோவில்கள் ஆகும். ஆலங்குடியில்  தட்சிணாமூர்த்தியே குரு  வடிவாக வணங்கப் படுகிறார்.

குருவிற்கு உரிய மூலிகை : பொன் ஆவரை
திசை                                            :  வட கிழக்கு என்னும் ஈசான்யம்
உலோகம்                                  :   தங்கம்
நிறம்                                            :  மஞ்சள்
மரம்                                             :  சந்தனம்
சமித்து                                        :  அரசு(அரச மர பட்டை/குச்சி)
குருவிற்குரிய தலம்             :  திருச்செந்தூர்




 

Sunday, May 26, 2013

கொஞ்ச நாட்களாக ஏனோ சலிப்பு! ப்ளாக் எழுத அலுப்பாக இருந்தது. ஆமாம், நான் எழுதி என்ன சாதிக்கப் போகிறேன்? என்று தோன்றியது. மழை யாருக்காக பொழிகிறது? இதோ இந்த வேப்ப மரத்திலிருந்து கூவுகிறதே ஒரு குயில் அது கை தட்டலை எதிர் பார்த்தா கூவுகிறது? என்றெல்லாம் என்னை நானே தேற்றிக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்ற வந்து விட்டேன்.

மீண்டும் திருவண்ணாமலை பயணம். இந்த முறை விடி காலை 4.30 மணிக்கு பஸ்சில் ஏறி விட்டோம்!!  அதி காலையில் சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பது பொய்யாய், பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கிறது!பேருந்தில் நல்ல கூட்டம், டோல் கேட்டில் வாகன நெரிசல், கடக்க 10 நிமிடங்களாகியது. 

அந்த விடிகாலை நேரத்தில் பஸ்சில் சினிமா பாடல்களை அலற விட்டார்கள். மற்றவர்களின் மௌனத்தில் இப்படி அத்து மீறி பிரவேசிக்கும் நம்மவர்களின் அதிரடி உரிமை என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். நல்ல வேளை  போட்டது எல்லாம் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள். ஆகவே  கொஞ்சம்  ரசிக்க  முடிந்தது. எம்.ஜி.ஆர். பாடல்கள்  தீர்ந்த  பிறகு  ஒன்றிரண்டு  சிவாஜி  பாடல்களும், சந்திரபாபு பாடல்களும் வந்தன.  சிவாஜியைப்  போல  'போனால் போகட்டும் போடா' என்றோ 'சட்டி சுட்டதடா'   என்றோ விரக்தியாக இல்லாமல் 'சிரித்து வாழ வேண்டும்' 'நாளை நமதே' என்ற உற்சாக பாடல் வரிகள்,  தாளம்  போட  வைக்கும் இசை அமைப்பு.... அந்த 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலைச் சொல்லுங்கள்! அதற்க்கு ஈடாகவோ அல்லது அதை  விட சிறப்பாகவோ வேறு ஒரு பாடல் வந்ததாக தெரியவில்லை.

சந்திர பாபுவின் தனித்தன்மை கொண்ட இனிய பாடல்களை கேட்ட பொழுது, ஏன் இவர் பாடல்களை சூபர் சிங்கர்கள் பாடுவதில்லை? என்று தோன்றியது.

சந்திக்கலாம்...





     
 

Tuesday, March 26, 2013

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன்.
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:




தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று.

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு.

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.



ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார்.

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள்.

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:



முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான்.



இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை.

அனுராதா ரமணன்:



லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார்.

ரமணி சந்திரன்:



ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:




பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:



கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம்.
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:




தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:



பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை.

பி.கு. இது ஒரு மீள் பதிவு.