கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 16, 2018

திருப்பட்டூர்

திருப்பட்டூர் 





திருச்சியிலிருந்து  சென்னை நெடுஞ்சாலையில் முதல் டோலை தாண்டிய பிறகு, இடது பக்கம் பிரிகிறது திருப்பட்டூர் செல்லும் சாலை. சிறிய கிராமம்.   

இங்கிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சமீப காலங்களில் பிரபலமாகி இருக்கிறது. காரணம் இது பிரம்மா சிவனை பூஜித்து அவரை இங்கு வழிபடுகிறவர்களின் தலை எழுத்தை மாற்றும் வல்லமை பெற்றவர் என்னும் நம்பிக்கை. 

மும்மூர்த்திகளுள் பிரம்மாவிற்கு தனியாக கோவில் கிடையாது. ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் விதிவிலக்கு. திருப்பட்டூரைப் போலவே  திருச்சிக்கு அருகில் உள்ள  ஸ்ரீரங்கத்திற்கு (கொள்ளிடத்தின்) வட கரையில் அமைந்திருக்கும் உத்தமர்கோவிலிலும் பிரம்மாவுக்கு தனி சன்னதி உண்டு.

சிவ பெருமானைப் போலவே ப்ரம்மாவிற்கும் ஆதி காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் அவர் கர்வம் கொள்ளவே, சிவ பெருமான் அவருடைய ஐந்தாவது தலையை கொய்து விடுவதோடு படைக்கும் தொழிலையும் அவரிடமிருந்து பறித்து விடுகிறார்.  தன் தவறை உணர்ந்து தன்னை மன்னித்து அருள வேண்டும் என்று பிரம்மா சிவ பெருமானிடம் வேண்ட, அவரை பூமிக்குச் சென்று பல்வேறு தலங்களில் தன்னை பூஜிக்கும்படியும், தக்க தருணம் வரும்பொழுது தான் அவருக்கு அருள் புரிவதாகவும் கூறுகிறார். அதன்படி பூமிக்கு வந்து பல் வேறு தலங்களில் சிவ பெருமானை வழிபட்ட பிரம்மா இத்தலத்தில்  துவாதச லிங்கங்களை(12 லிங்கங்கள்)வைத்து வழிபட, மனம் மகிழ்ந்த சிவ பெருமான், அவருக்கு இழந்த பதவியை மீண்டும் தருவதோடு, இத்தலத்தில் பிரம்மாவை வழிபடும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப அவர்கள் தலை எழுத்தை மாற்றும் உரிமையையும் தருகிறார். 

பிரம்மாவால் பூஜிக்கப் பட்டதால் இங்கு உறையும் சிவ பெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். பூலோகம் எங்கும் அலைந்து திரிந்ததால் தன்னுடைய பொலிவை இழந்த பிரம்மாவுக்கு மீண்டும் தோற்றப் பொலிவை அருளியதால் இங்கிருக்கும் அம்மன் ப்ரம்மசம்பத் கௌரி அன்று அழைக்கப் படுகிறாள். 

கோவில் பெரியது என்று கூற முடியாது. அதன் அமைப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலைப் போகவே இருக்கிறது.  அண்ணாமலையார் கோவிலைப் போலவே இங்கும் தல விருட்சம் மகிழ மரம்தான்.  உள்ளே நுழைந்ததும் கொடிமரம் தாண்டி, மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியில் பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி. அங்கு வணங்கிவிட்டு வெளியே வந்தால், வலது பக்கம் ஒரு மேடையில் பிரும்மாவின் சந்நிதி.  பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் ஒரு மேடையில் விநாயகர், முருகன், கஜலக்ஷ்மி கொலுவீற்றிருக்கிறார்கள். அங்கிருந்து திரும்பி கிழக்கு நோக்கி வரும்பொழுது அம்மன் சந்நிதிக்கு செல்லும் வாசல். அதன் வழியே சென்று ப்ரம்ம சம்பத் கௌரி அம்மனை வழிபடுகிறோம். (திருவண்ணாமலையிலும் இப்படித்தான் ஸ்வாமி சந்நிதியிலிருந்து பிரகாரம் சுற்றி வரும்பொழுது இடது புற வாசல் வழியே அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்).

அங்கிருந்து இடது புறம் இருக்கும் வாசல் வழியே சென்றால் நந்தவனம் போன்ற பகுதிக்கு செல்கிறது. அங்கு பூச்செடிகளுக்கு மத்தியில் சற்று பெரிய தனி கோவிலாக கைலாசநாதர் என்னும் சந்நிதி இருக்கிறது. அதற்கு முன்னால் பெரிய நந்தியும் இருக்கிறது. ஆனால் அந்த கோவில் விமானம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்னும் நிலையில்தான் இப்போது இருக்கிறது. ஆகவே அதை வலம் வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப் பட்டிருக்கிறது.  அதைத் தவிர, ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளத்திநாதர், மண்டூகநாதர் என்ற பெயரில் தனித்தனி சிறு சந்நிதிகள் உள்ளன. கோவிலின்  ஸ்தல விருஷமான மகிழம்பூ மரமும், கோவிலுக்கான திருக்குளமும்  இங்குதான் இருக்கின்றன. குளம் வித்தியாசமான வடிவில்(ஸ்வஸ்திக் வடிவோ என்று தோன்றுகிறது) இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட தண்ணியில்லாமல் வறண்டு கிடக்கிறது.

கோவிலின் உள்ளே பிரம்மா சந்நிதிக்கு எதிரே யோக சாஸ்திரத்தை உலகுக்குத் தந்த பதஞ்சலி முனிவரின் ஜீவா சமாதி இருக்கிறது. அங்கே அமர்ந்து தியானம் செய்வது நலம் என்கிறார்கள். 

இங்கிருக்கும் மூலவர் சன்னிதி எப்போதும் நல்ல வெளிச்சத்துடன் இருக்குமாம். பிரம்மா சிவ பெருமானிடம் வேண்டி இழந்த தன் படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றதால், வேலையில் பிரச்சனை இருப்பவர்களும், வேலை இழந்தவர்களும் இங்கு வந்து வழிபட வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பிரம்மாதானே படைப்புக்கு அதிபதி எனவே குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. இவை எல்லாவற்றையும் விட சிவபெருமான் இங்கு வந்து பிரம்மாவை வழிபடும் பக்தர்களின் தலை எழுத்தை அவரவர் தகுதிக்கு ஏற்ப மாற்றி எழுதும் (இதை இரண்டு முறை படிக்கவும்) அதிகாரத்தையும் பிரம்மாவுக்கு வழங்கி இருக்கிறார். அதனால்தான் இப்போதெல்லாம் இங்கு அதிக கூட்டம்.  

பிரம்மா குருவுக்கு இணையானவர் என்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்பாக கருதப் படுகிறது. குருவிற்கு உகந்த நாளான வியாழக் கிழமையிலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும், அல்லது அவரவர் ஜென்ம நட்சத்திர தினத்திலும் இங்கு வழிபடுவது சிறப்பு. 

நான் இந்தக் கோவிலுக்கு இதற்கு முன் இரண்டு முறைகள் சென்றிருக்கிறேன். முதல் முறை சென்ற பொழுது ப்ரம்மா சந்நிதியில் எந்த தடுப்பும் கிடையாது, இரண்டாவது முறை சென்ற பொழுது, நடுவில் கம்பி தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்போது  பக்தர்களை  உள்ளே அனுப்புவதர்க்கு வளைத்து வளைத்து அமைக்கப்பட்டிருக்கும் வரிசை. அதோடு கோவில் வாசலில் பூ,பழம், அர்ச்சனை பொருள்கள்,பிரம்மாவிற்கு சாற்ற மஞ்சள் வஸ்திரம் போன்றவை விற்கும் கடை. அதில் 12 பேர்கள் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை பேர் வருவார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பக்கத்திலேயே காபி,டீ, வடை, சமோசா போன்றவை விற்கும் கடையும் இருக்கிறது.
 
காரை நிறுத்தியவுடன் ஒருவர் ரசீது புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கிங்  செய்யவதற்கு பணம் வசூல் செய்கிறார்.  எல்லா கோவில்களையும் போலவே இதை யார் வசூல் செய்கிறார்கள்? என்ற கேள்விக்கு விடை கிடையாது. நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. 

நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு பூக்கடையில் பூ வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது, ஐம்பது வயது தாண்டிய தம்பதியர் ஒருவர்,"இந்த கோவிலில் எப்படி வழிபட வேண்டும் என்று உங்களுக்கு த் தெரியுமா?, சிவனை தொழுது விட்டு ப்ரம்மாவை வணங்க வேண்டுமா? அல்லது ப்ரம்மாவை வணங்கி விட்டு சிவனை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்கள். அவர்கள் ஏதோ பத்திரிகையில் இந்த கோவிலைப் பற்றி படித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

"முதலில் சிவன் சன்னதிக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து ப்ரும்மா சன்னதிக்குச் செல்லலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களின் ஜாதகங்களை கொண்டு வந்திருந்தால் அதை ப்ரும்மாவின் சன்னதியில் வைத்து பூஜித்து கொடுப்பார்கள்" என்றேன்
கேட்டுக் கொண்டவர்கள், "ஜாதக நோட்டு கொண்டு வரவில்லை, சரி அடுத்த முறை பார்க்கலாம்" என்று தங்களுக்குள் பேசிவிட்டு, 
"ப்ரும்மாவிற்கு தாமரைப் பூ மாலை சாற்றுவது சிறப்பு என்று அந்த புத்தகத்தில் போட்டிருந்தது, தாமரை மாலை இருக்கிறதா?என்ன விலை?"
"ஒரு மாலை இரண்டாயிரம் ரூபாய்" 
அவர்கள் ஜெர்க்காகி, வெறும் அர்ச்சனைத்தட்டு மட்டும் வாங்கிக்கொண்டு சென்றனர்.

நீங்களும் ஒரு முறை சென்று  ப்ரம்மசம்பத் கௌரி சமேத பிரம்மபுரீஸ்வரரையும், நான்முகக் கடவுளான பிரம்மாவையும் வணங்கி விட்டு, அங்கிருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்ய முடியாவிட்டாலும், மௌனமாக அமர்ந்து விட்டு வாருங்கள். வாழ்க நலம்!



Friday, January 12, 2018

உங்களிடம் சில வார்த்தைகள் ... கேட்டால் கேளுங்கள் ...

உங்களிடம் சில வார்த்தைகள் ...
கேட்டால் கேளுங்கள் ...



அறிவுரை! இதற்கா பஞ்சம் நம் நாட்டில்? அதுவும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு? சிறு வயதிலிருந்து நிறைய கேட்டிருக்கிறோம். எப்படி உட்கார வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்?,ஏன்? எப்படி தூங்க வேண்டும்? என்பது வரை பல பல அறிவுரைகள். 

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் விசேஷமாக அறிவுரைகள் கிடைக்கும்."பத்து பேர் வந்திருக்கும் பொழுது குறுக்கும் நெடுக்கும் என்ன நடை?, கெக்கே பிக்கே என்று என்ன சிரிப்பு?" இவை எல்லாம் மற்றவர்கள் கவனத்தை கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தத்தான், ஸ்வாதீனம் இருப்பதால் கொஞ்சம் கோபமாக சொல்கிறார்கள் என்பதை புரிய வைத்தவர் எங்கள் குடும்பத்திற்கு  மிகவும் நெருக்கமான ஐயங்கார் மாமி.  நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு முறை என்னை எதற்கோ என் மாமா திட்டிக் கொண்டே இருந்தார். எனக்கு பயங்கர எரிச்சல். ஐயங்கார் மாமியிடம் சென்று, "மாமா என்னை திட்டிண்டே  இருக்கா, எனக்கு பிடிக்கவே இல்லை", என்றதும், என்னை உற்றுப் பார்த்த மாமி, மெல்லிய குரலில்(மாமி கோபமாக குரலை உயர்த்தி பேசி நான் கேட்டதே இல்லை),

"நேத்திக்கு மாமா பானுவை டவுனுக்கு அழைச்சுண்டு போய், சோன்பப்டி, ரோஸ் மில்க் எல்லாம் வாங்கி கொடுத்தப்போ பானுவுக்கு மாமாவை பிடித்தது, இன்னிக்கு கோபித்துக் கொள்ளும் பொழுது மாமாவை பிடிக்கவில்லை,அப்படித்தானே?" என்றார். இந்த நிகழ்ச்சி நடந்த பொழுது நான் மிகவும் சிறியவள், பத்து வயது கூட ஆகவில்லை, ஆனாலும்  என் மனதில் ஆழப் பதிந்த விஷயம் நம்மை திட்டுகிறவர்கள் நம் எதிரிகள் அல்ல. 

என் பாட்டி இதையே வேறு விதமாக சொல்வார். வீட்டில் யாராவது நம்மை கோபித்து,அதற்காக நாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால், உடனே என் பாட்டி,  "அழ அழ சொல்பவர்கள் நம் மனுஷா சிரிக்க சிரிக்க சொல்பவர்கள் அயலார்" என்பார்.

 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை என் பி.டி. டீச்சர் நான் அணிந்திருந்த சட்டை நீளம் குறைவாக இருக்கிறது என்று என்னைத் திட்டினார். அவருக்கு பயந்து நான் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, பாவாடை, தாவணி அணிந்து செல்வேன்.(இந்த விஷயத்தை என் மகளால் நம்பவே முடியவில்லை. தாவணி அணிந்து கொண்டா ஸ்கூலுக்குச் செல்வீர்கள்?) . அன்றைக்கு பி.டி. பீரியட் இல்லாததால் சாதாரண சட்டை அணிந்து கொண்டு சென்று விட்டேன். அதுவும் குட்டை சட்டை கிடையாது. அப்படி குட்டையாக சட்டை போட்டுக் கொள்ள வீட்டில் அனுமதிப்பார்களா என்ன? இருந்தாலும் சட்டையை இன் பண்ணிக்க கொள்ளவில்லை என்று டீச்சர் ஒரே திட்டு. வீட்டில் வந்து என் பாட்டியிடம்,

"பாட்டிமா இன்னிக்கு என்னை ஸ்கூலில் பி.டி. டீச்சர் திட்டினா பாட்டிமா" என்றதும் என் பாட்டி "ஏன்?" என்று கேட்கவில்லை, "நீ என்ன பண்ணின?" என்றுதான் கேட்டார். விஷயத்தை சொன்னதும், "நல்லதுக்குத்தானே சொல்றா, டீச்சருக்கு என்ன உன் மேல் விரோதமா? உன்னை திட்டணும்னு ஆசையா? புருஷாளோட(ஆண்களோடு) படிக்கிறோம், நாமதானே  ஒதுக்கமா இருக்கணும்?" என்று என் வாயை அடைத்து  விட்டார். 

பாட்டி எத்தனை நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பது என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முறை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு சென்ற பொழுதுதான்  புரிந்தது. என் மகனோடு படித்த ஒரு பெண்ணின் தாய் முதலில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், அந்த வகுப்பாசிரியர் அவருடைய பெண்ணைப் பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தோரா இல்லையோ இவருக்கு முகம் மாறி விட்டது. "complaining, complaining" என்று பொருமித் தள்ளினார். தன் பெண்ணை மேம்படுத்தவே அந்த ஆசிரியர் அந்த குழந்தை செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் என்பதை  கூட புரிந்து கொள்ள முடியாத தாய், அந்தப் பெண்ணை எப்படி நெறி படுத்துவார் என்று நினைத்துக் கொண்டேன்.  என் பாட்டி போல ஒரு பாட்டி அவர்கள் வீட்டில் இல்லையோ என்னவோ?

என் அப்பாவோ, அம்மாவோ அதிகம் அட்வைஸ் கொடுத்ததில்லை. அம்மா மிகவும் வேகமானவர். நான் என் அம்மாவை வந்தியத் தேவி என்பேன். ஏனென்றால், கல்கி, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனைப் பற்றி "அவன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் கால இடைவெளியே இருக்காது, ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அதை செய்து முடித்திருப்பான்" என்று வர்ணித்திருப்பார். என் அம்மாவும் அப்படித்தான். அவ்வளவு வேகமாக இருப்பவரர்களுக்கு மற்றவர்களுக்கு சொல்லித் தரும் பொறுமை இருக்காது. 
"மேயற மாட்டுக்கு கொம்பிலா புல் சுற்ற முடியம்?" என்பது என் அம்மாவின் கேள்வி. அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்ட விஷயங்களுள் முக்கியமானது மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தக் கூடாது என்பதுதான். அதை அம்மா வலியுறுத்துவாள் சொல்லிலும்,செயலிலும். 

சிறு வயதில் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் என் பெரிய மாமி. "சாப்பாட்டை மென்று சாப்பிட வேண்டும், ஆனால் சாப்பிடும் பொழுது சத்தம் வரக்கூடாது". "குளித்து விட்டு முகத்தை அழுத்தி துடைக்கக் கூடாது, மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்" என்று அவர் சொல்லி கொடுத்ததை இன்று வரை கடை  பிடிக்கிறேன். இதைத் தவிர 'குட் டச்', 'பேட் டச்' போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

என் பெரிய அக்காவும் என்னைப் போலவே புத்தகப் பிரியை. புத்தகங்களை மடக்குவதோ, அடையாளத்திற்காக ஓரத்தை மடிப்பதோ அவருக்கு பிடிக்காது. அவருக்கு எந்த புத்தகம் படிக்க கொடுத்தாலும் உடனே அட்டை போட்டு விடுவார். புக் மார்க் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அவர்தான். புத்தகங்களில் கிறுக்குவது போன்ற விஷயங்கள் அவருக்கு கட்டோடு பிடிக்காது. பெயரைக் கூட முதல் பக்கத்தின் ஓரத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்பார். இன்றைக்கும் என் சேமிப்பில் இருக்கும் புத்தகங்கள் புதிது போலவே இருப்பதற்கு என் அக்காதான் காரணம்.

என் அண்ணா சிக்கலான சில நேரங்களில் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவைகள் மிகவும் ப்ரத்யேகமானவை என்பதால் பகிந்து கொள்ள முடியாது. என் கோபத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லி என்னை விட ஒரே ஒரு வயது மூத்தவளான என் கடைசி அக்கா எத்தனையோ அறிவுரைகளை கூறியும் நான் அவைகளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவளால் இயலாததை என் மகள் சாதித்தாள்.

ஒரு முறை எனக்கும் ஒரு ஆட்டோக்காரருக்கும் எங்களை சுற்றி கூட்டம் கூடும் அளவிற்கு பெரிய வாக்குவாதமாகி விட்டது. இறுதியில் அவர் கேட்ட தொகையை கொடுத்து விட்டு வரும்பொழுது, என் மகன்,"அம்மா நீ ரொம்ப கத்திவிட்டாய்" என்றான்.
"என்னடா, அவன் செய்தது சரியா?" என்றேன்
 உடனே என் மகள்,"அவன் செய்தது தப்புதான்மா , ஆனால் அதுக்காக நீ சண்டை போட்ட பொழுது உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே..! " என்றாள். 

என்னை யாரோ கன்னத்தில் ஓங்கி அடித்தது போல்  இருந்தது. அப்போது என் மகளுக்கு எட்டு வயதுதான், அந்த வயதில் அவ்வளவு மெச்சூரிட்டியோடு அவள் கூறிய அந்த அறிவுரை நம்முடைய கோபம் எத்தனைதான் நியாயமாக இருந்தாலும் பொது இடத்தில் கோபப படுவது அநாகரீகம் என்பதை உணர்த்தியது. 

படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எங்கே சென்றாலும் அங்கிருக்கும் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவேன். அங்கிருப்பவர்களோடு உரையாடுவதை விடுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல மாட்டேன். அந்த கேள்விகள் என் காதில் விழுந்தால்தானே? இதற்காக கொஞ்சம் திட்டு, கொஞ்சம் கேலி இவைகளை வாங்கி கொண்டாலும் என்னால் அந்த பழக்கத்தை அறவே  விட முடியவில்லை. எங்கள் நண்பர்கள், நான் அவர்கள் வீட்டுக்கு வருகிறேன் என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை மறைத்து வைப்பார்கள். 

ஒரு முறை என் அக்காவின் வீட்டிற்குச் சென்ற பொழுது வழக்கம்போல் நான் புத்தகத்தில் மூழ்கி விட்டிருக்கிறேன், என் அக்காவின் மாமியார் என்னிடம் ஏதோ கேட்டிருக்கிறார், நான் வழக்கம் போல் மௌனம்.. வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என் மகள், "அங்க வந்து நீ பாட்டுக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டாய், மாமி உன்னிடம் ஏதோ கேட்கிறார், நீ பதிலே சொல்லாமல் புத்தகம் படிக்கிறாய்... மற்றவர்கள் வீட்டுக்கு போய் புத்தகம் படிப்பதென்றால் எதற்கு மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? வெரி ரூட்(rude) பிஹேவியர்! என்று அட்வைஸ் மழை பொழிந்து விட்டாள்.(காய்ச்சி எடுத்து விட்டாள் என்றா சொல்ல முடியும்?)அத்தோடு விட்டேன் போகும் இடத்திலெல்லாம் புத்தகம் படிக்கும் கெட்ட பழக்கத்தை.

நான் பெற்ற இன்னொரு முக்கியமான அறிவுரை ஸ்ரீரெங்கத்தில் நாங்கள் வசித்த பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பௌராணிகரான  திருச்சி.கே.கல்யாணராமனின் தாயார் வழங்கியது. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். 
"நட்புக்கு வயது கிடையாது, பானு என்னுடைய ஃ பிரென்ட்" என்பார். அப்போது நான் கல்லூரி மாணவி. பரிச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கல்யாணராமனின் தாயார் என்னிடம்,
" நீ இப்போது எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். 
நான், நாளை பரீட்சை. அதில் என்ன கேள்விகள் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். 
மாமி உடனே, " இப்போதுதான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகத்தில் படித்தேன். உன்னிடம் யாராவது நீ எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நானா அந்தப் பூவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லும்படியாக உன் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்" என்று அதில் இருந்தது. அதை உன்னிடம் பரிசித்துப் பார்த்தேன் என்றார். 

என்ன அழகான மெசேஜ்! இதை பின்பற்றினால் மனதில் கள்ளத்தனம் தோன்றுமா?   

என் தோழி ஒருத்திக்கு நாம் ஏதாவது பரிசளித்தால் அதை உடனே உபயோகித்து நம்மிடம் காட்டுவாள். உதாரணமாக நாம் அவளுக்கு புடவை வாங்கி கொடுத்தால், அதை உடனே உடுத்திக்கொண்டு நமக்கு காண்பிப்பாள். இதை அவளிடமிருந்து கற்றுக் கொண்டேன். 

இன்னொரு தோழியை தொலைபேசியில் அழைக்கும் பொழுது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், "நன்னா இருக்கோம் பானு" என்று நிறைவாக சொல்வாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

விருமாண்டி படத்தில்,"நாம சந்தோஷமா இருக்கும் பொழுது பெரும்பாலும் அது நமக்குத் தெரிவதில்லை" என்று  ஒரு வசனம் வரும்.  நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது, அதை உணர்வதும், கர்வமில்லாமல் அதை வெளிப்படுத்துவதும் பெரிய விஷயம் இல்லையா?

(ஸ்ரீராம் நான்  நண்பர்களை குறிப்பிட்டு விட்டேன்).

இதைத் தவிர வாழ்க்கை நிறைய அறிவுரைகளை வழங்குகிறது,  கற்றுக் கொடுக்கிறது.

பிறப்பில் வருவது யாதென கேட்டேன் 
பிறந்து பார் என இறைவன் பணித்தான் 
இறப்பில் வருவது யாதென கேட்டேன் 
இறந்து பார் என இறைவன் பணித்தான் 
மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன் 
மணந்து பார் என இறைவன் பணித்தான் 
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் 
ஆண்டவனே நீ ஏன் என்றேன் 
படைத்தவன் சற்றே அருகினில் வந்து 
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவன் வார்த்தைகள் இவை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஓவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

அவற்றுள் மிக முக்கியமான பாடம், பெரிதாக கொண்டாடவோ, தூற்றவோ எதுவும் இல்லை என்பதுதான். 

அசோகாமித்ரன் ஒரு கதையில்,"உண்மையில் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்று எதுவும் இல்லை. ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அது புத்திசாலித்தனம், தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம்,முட்டாள்தனமாகி விடுகிறது" என்று எழுதி இருப்பார், எவ்வளவு உண்மை! இது புரிந்த பிறகு யாரையும் வியக்கவும் முடியவில்லை, யாரையும் இகழவும் முடியவில்லை.  காலம் சிலரை உயரத்தில் ஏற்றி உட்காரவைத்து விடுகிறது, சிலருக்கு அது வாய்ப்பதில்லை, அவ்வளவுதான். எனவே பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்னும் முதிர்ச்சி இறையருளால் வாய்த்து விட்டது. 

இந்த Blogathan ஐ தொடங்கி வைத்த மதுரை தமிழனுக்கும், அதில் என்னையும் பங்கு கொள்ள அழைத்த ஸ்ரீராமுக்கும் என் மனமார்ந்த நன்றி! இந்த ஒலிம்பிக் ஜோதியை என் கையிலிருந்து வாங்கி தொடர,

திரு.ராய செல்லப்பாவையும், 
திரு.நடன சபாபதி அவர்களையும், 
திரு.ஜீ.வி. அவர்களையும், 
திருமதி மனோ ஸ்வாமிநாதன் அவர்களையும், 
திருமதி. மிடில்க்ளாஸ் மாதவி அவர்களையும்  
அழைக்கிறேன். 

Wednesday, January 10, 2018

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

சும்மா சொல்லக் கூடாது, இந்த வருட சீசன் ஆரம்பமே அமர்க்களம். ராமா கான சபையில் அஷ்டபதி பஜனை முடிந்து தொன்னையில் சுடச் சுட வழங்கப்பட்ட பொங்கல் மார்கழி குளிருக்கு வெகு சுகம்! அதில் ஊற்றப்பட்டிருந்த நெய் ஆண்டாள் விரும்பியபடி உள்ளங்கையில் எடுத்தால் முழங்கையில் வழிந்தது. பொங்கலின் சிறப்பே அதில் ஆங்காங்கே முழித்துக் கொண்டிருக்கும் மிளகும், சரியான பதத்தில் வறுத்துப் போடப்பட்ட முந்திரியும்தான். கறிவேப்பிலை இருக்க வேண்டும், ஆனால் அதிகமாகி விடக் கூடாது. ஒரு தொன்னைக்கு ஒரு கறிவேப்பிலை வரும்படி எப்படித்தான் சேர்த்தார்களோ..?! என்னிடம் யாராவது உங்களுக்கு இட்லி வேணுமா? வடை வேணுமா? என்று கேட்டிருந்தால், நான் ராமா கான சபாவின் பொங்கல்தான் வேண்டும் என்று சொல்லியிருப்பேன்.



கொத்ஸு உண்டா? என்று யாரோ கேட்கிறார்கள், கொத்ஸு என்னங்காணும் கொத்சு? அப்படிப்பட்ட பக்க வாத்தியங்கள் எதுவும் தேவையே இல்லை, சோலோவாகவே ரசிக்க முடிகிறது அந்த பொங்கலை. 

காலையில் சாப்பிட்ட பொங்கலுக்கு சற்றும் குறைந்ததில்லை மதியம் சாப்பிட்ட லன்ச்! சாதாரணமாக ஹோட்டல்களில் முழு சாப்பாடு ஆர்டர் கொடுப்பது வேஸ்ட் என்று சொல்பவர்கள் உண்டு. 
ஆனால் கூல் சிப்ஸில் நாங்கள் ஆர்டர் கொடுத்த முழு சாப்பாடு பிரமாதம்! முதலில் வந்தது தக்காளி சூப். டின் சூப்பாக இல்லாமல் அசல் தக்காளியில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த சூப் ஆஹா ரகம்!

அடுத்து வந்த பூல்கா சப்பாத்தி மிருதுவாகவும்,நன்றாக வெந்தும் சீராக நெய் தடவப்படும் நம் தொண்டைக்கு இடம் அளித்தது. அதற்கான சைட் டிஷான சன்னா மசாலாவில் சன்னா வாயில் போட்டதும் கரையும்படி வெந்திருந்தது. 



சாம்பாரும்,புளிகுழம்பும் கொஞ்சம் காரம்தான். அடுத்து வந்ததம்மா ஒரு பைனாப்பிள் ரசம்! அடடா! அதன் பிறகு வந்த எல்லாமே சூப்பர் ரகங்கள்தான். புளிக்காத கட்டித் தயிர், கடாரங்காய் ஊறுகாய், செர்ரி சொருகப்பட்ட ஐஸ்க்ரீம்..! எதைச் சொல்ல? எதை விட? ஓஹோ!

மாலை ஜன ரஞ்சக சபா கேண்டீனின் மெது பக்கோடாவும், தயிர் வடையும் ஏமாற்றமளித்தன. அதுவும் தயிர் வடையின் மீது தூவப்பட்டிருந்த காரா பூந்தி கண்ராவி ராகம் சாரி ரகம்! போகட்டும், காபி குடிக்கலாம் என்றால் சூடு இல்லாமல், ஆடை படிந்த காபி..!  ஹும்! மூன்று தலைமுறைக்கு முன் மாயவரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் வாரிசு. அப்போதெல்லாம் இந்த ஹோட்டலின் ரவா தோசைக்காகவும், டிகிரி காபிக்காகவும் கும்பகோணத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வருவார்களாம். 

இரவு எட்டு மணி கிருஷ்ணன் கிருதி நடத்திய கச்சேரியின் உணவுத் திருவிழாவில் தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு இவற்றோடு மேற்கத்திய உணவும் கலந்து கட்டி எதை சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாமல் முழி பிதுங்கினோம். 

ஆனந்தசிரிப்பின் ஆஸ்தான விமரிசகர் குப்புடு தான் எழுத வேண்டிய சங்கீத விமர்சனத்திற்க்காக கூட அழைத்து வந்த தன் உதவியாளர் பப்படுவிடம் விமர்சனத்தை எழுத சொல்லி விட்டு ஸ்டார் ஹோட்டலில் போய் சுகமாக தூங்கி விட்டு மறு நாள் எந்தெந்த கான்டீன்களுக்குச் செல்வது என்று பட்டியலிட்டுக்  கொண்டிருந்த பொழுது  அவர் அறையின் டெலிபோன் விடாமல் ஒலித்தது. எடுத்தால் எதிர் முனையில் ஆ.சி.யின் ஆசிரியர்.

"என்ன சார் இப்படி பண்ணிடீங்க?"

"என்ன சார் யாராவது விட்டேனா பார் அந்த குப்புடுவை என்று கத்தினானா?"

"நானேதான்" என்று மனசுக்குள் கருவிக்கொண்ட பத்திரிகையாசிரியர், "நீங்க எழுதி அனுப்பி இருப்பதை உங்கள் ஐ.டி.க்கு மெயில் அனுப்பி இருக்கிறேன், ஒரு முறை பார்த்து விட்டு திருப்பி அனுப்புங்கள்" என்று கூறி போனை துண்டித்தார்.  

"அப்படி என்ன எழுதி விட்டான்? என்னை விட குத்தல் அதிகமோ..?"என்று யோசித்துக் கொண்டே மெயில் இன் பாக்ஸை திறந்து மேலே நீங்கள் படித்த விமரிசனத்தை படித்த குப்புடு அதிர்ந்தார். "அடப் பாவி! கெடுத்தானே குடியை..!" வரட்டும் என்று வன்மத்தோடு காத்திருக்க, "இன்றைக்கு எந்த காண்டீனுக்கெல்லாம் என்னை அழைத்துச் செல்லப் போகிறாரோ" என்று ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பப்படு உள்ளே நுழைய, அங்கே ஆரம்பமாகியது ஒரு தனி ஆவர்த்தனம்.

படங்கள் உபயம் கூகுள் 

Sunday, January 7, 2018

நாள் காட்டியும், நாள் குறிப்பும்

நாள் காட்டியும், நாள் குறிப்பும் 


















புது வருடம் என்றால் தவிர்க்க முடியாத விஷயங்களில் முக்கியமானவை காலண்டரும் டைரியும். புது வருடம் பிறக்கும் பொழுது புது காலண்டர் வீட்டில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத குடும்பஸ்தர்கள் உண்டா? குறிப்பாக ஆண்களுக்கு டைரியில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்கி கொள்வதில் இருக்கும் ஆர்வத்திற்கு நிகரானது.

 பெண்கள் காலண்டரில் காட்டும் ஆர்வத்தை டைரியில் காட்டுவதில்லை.  நல்ல டைரி ஏதாவது காம்ப்ளிமென்ட்டாக கிடைத்து, அதை வீட்டம்மாவிடம் ஐயா கொடுத்தாலும், அதில், தொலைக்காட்சியில் காட்டப்படும் சமையல் குறிப்புகள், பரிகார ஸ்லோகங்கள், போன்றவற்றை எழுதி வைக்கத்தான் பயன் படுத்துவார்கள். சிலர் ஸ்ரீ ராமஜெயம் எழுதவும் உபயோகப்படுத்திக் கொள்வதுண்டு.

தினசரி கணக்கெழுதும் எங்கள் தாத்தாவுக்கு அதற்கு லிஃ ப்கோ டைரிதான் வேண்டும்.  எங்கள் தாத்தா வயதொத்த பெரியவர்கள் பலருக்கு தினசரி டைரி எழுதும் பழக்கமிருந்தது. எங்கள் அப்பாவின் மாமா  தினசரி விடாமல் டைரி எழுதுவார். ஒவ்வொரு வருடமும் புது டைரி வாங்கிய பிறகு சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புது டைரியில் குறித்து வைத்து விடுவார். உதாரணமாக 2015 டிசம்பர் 2ல்  சென்னையில் வெள்ளம் வந்ததல்லவா, அதை 2016 டைரி வாங்கியவுடன் டிசம்பர் மாத ரெண்டாம் தேதி அன்று சென்ற வருடம் வெள்ளம் வந்தது என்று குறித்து வைத்துக் கொள்வதோடு ஒவ்வொரு வருடமும் அப்டேட்டும் செய்து கொள்வார்.  இதனால் அவருடைய ஞாபக சக்தி மிகப் பிரமாதமாய் இருக்கும். குடும்பத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் வருடம், தேதி, கிழமையோடு சொல்வார். 

அது மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களுக்கு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த தேதி, கிழமை, நட்சத்திரம் நேரம் இவற்றை குறித்து வைத்துக் கொள்வார். எங்கள் குடும்பத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதகம் குறிக்க வேண்டும் என்னும் பொழுது அவரிடமிருந்துதான் தங்கள் குழந்தைகளின் பிறந்த விவரங்களை பெற்றுக் கொள்வார்கள்.  வருடத்தை சொன்னால் அந்த வருட டைரியை எடுத்துப் பார்த்து, தேவையான தகவல்களை சொல்லி விடுவார்.  

மற்றபடி வேறு யாரும் அவ்வளவு முறையாக நாட்குறிப்பு எழுதி நான் அறியவில்லை. பெரும்பான்மையோர் அதிக பட்சமாக இரண்டு   மாதம் வரை எழுதுகிறார்கள் பின்னர் லாண்டிரி கணக்கு எழுதத்தான் பயன்படும், அல்லது சும்மா கிடக்கும். சுஜாதா டைரி எழுதுவதை குறித்து,"மற்றவர்கள் டைரியை படிப்பது அநாகரீகம், நாம் எழுதுவதை மற்றவர்கள் படிக்கக் கூடாது என்றால் ஏன் டைரி எழுத வேண்டும்? அதனால் எழுதுவதில்லை" என்று கூறியிருந்தார். 

என் சிறு வயதில் நிறைய டைரிகள் வீட்டிற்கு வரும். அதன் பிறகு பேப்பர் விலை, அச்சிடும் செலவு இவை அதிகமானதும் பலர் டைரிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். 

காலண்டர்கள் இன்னும் தங்கள் மவுசை இழக்கவில்லை. அப்போதெல்லாம் திருச்சியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்  காலண்டர் மிகவும் பிரசித்தி. அதில் தேதி பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும், மேலும் பக்கவாட்டில் தேதி குறிப்பிடப்பட்டு இடம் விடப்பட்டிருக்கும். அதில்  பால் கணக்கு, போன்றவை குறித்துக் கொள்ளலாம். அதை பெண்கள் மிகவும் விரும்பி சமையல் அறையில் மாட்டி வைத்துக் கொள்வார்கள். 

எனக்கு நினைவில் இருக்கும் வேறு சில பிரபலமான காலண்டர்கள் என்றால் மேட்டூர் கெமிக்கல்ஸ் வெளியிடும் காலண்டர். ஒவ்வொரு வருடமும் ஆயில் பெயிண்டிங்கில் மிக அழகான கடவுள் படங்களை வெளியிடுவார்கள். அவற்றில் மிக முக்கியமானவை ஸ்ரீகுருவாயூரப்பன், மீனாட்சி கல்யாணம் போன்றவை. அவைகளை பலர் சட்டமிட்டு தங்கள் பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர் மேட்டூர் கெமிக்கல்ஸ் காலண்டர் வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

ஏர் இண்டியாவின் காலண்டர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பாரம்பரிய சிறப்பை விளக்குவதாக இருக்கும். இப்போது அவையும் வருவதாக தெரியவில்லை. 

பாம்பே டையிங் காலண்டர்கள் பிரும்மச்சாரிகளுக்காக என்று நினைக்கிறேன். ஓவ்வொரு  வருடமும் அந்த வருடத்தின் பிரபல பாலிவுட் நடிகைகளின் பெரிய அளவு புகைப்படம் இடம் பெற்றிருக்கும் பெரிய சைஸ் காலண்டர்கள் அவை.

இப்போது நிறைய பேர் விரும்புவது GRT நிறுவனத்தின் காலண்டர் என்று நினைக்கிறேன்.  ஒரு மினி பஞ்சாங்கம் போல அதில் எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதைப் போலவே வேறு சில நகை கடைகளும் காலண்டர்கள் வெளியிடுவதே அதன் சிறப்பை உணர்த்துகிறதே.  இதைத்  தவிர தினமலர் காலண்டருக்கும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. பாலக்காட்டுக்காரர்கள் விரும்புவது மாத்ரு பூமி காலண்டர்களை. 


இது அட்லாண்டாவிற்கான காலண்டர் 
டேட் ஷீட் காலண்டர் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பு கொண்டவைதான்.  கிரிகோரியன் காலண்டர் தேதி (ஆங்கில வருட தேதி), முஸ்லீம்களுக்கான காலண்டர் தேதி, இந்துக்களுக்கான தேதி என்ற மூன்றோடு அந்த நாளின் நட்சத்திரம், யோகம், நல்ல நேரம், போன்ற விஷயங்கள் தவிர, அகத்திக்கீரை சாப்பிடுவது வாய்ப்புண்ணை ஆற்றும் போன்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கும். 

மஸ்கட்டில் எங்களுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட தினசரி காலண்டர்தான் வேண்டும் என்பார். அவருக்கு நட்சத்திரம், நல்ல  நேரம் போன்ற விவரங்கள் தேவை இல்லை. ஆனால் டெய்லி ஷீட் பெரிய சைசில் இருக்க வேண்டும்,  ஆங்கில,தமிழ்,இஸ்லாமிய தேதிகள் மூன்றும் பெரிதாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பார். நம் கையில் ஒரு சாம்பிள் ஷீட்டையும் கொடுத்து விடுவார்.  யாரெல்லாம் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்து விடுவார். எனவே எல்லோரும் ஒரு காலண்டர் வாங்கி  வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் ஹாலில் ஒன்று, டைனிங் ரூமில் ஒன்று, இரண்டு படுக்கை அறைகளிலும் தலா ஒன்று, சமையல் கட்டில் ஒன்று, நடைபாதையில் ஒன்று என்று எல்லா இடங்களிலும் நாள்காட்டிகள் நீக்கமற நிறைந்திருக்கும்.

இந்த வருடம் கனடாவில் இருக்கும் என் பெண்ணிற்காக ஒரு டெய்லி ஷீட் காலண்டர் வாங்கி அங்கிருந்து வந்திருக்கும் அவளுடைய தோழியிடம் கொடுத்தனுப்ப விரும்பினேன். என் மகனும், கணவரும் இப்போதெல்லாம் செல் போனில் நாள் காட்டிகள் வந்து விட்டன. எதற்கு காலண்டர் என்கிறார்கள்.   

Friday, January 5, 2018

அருவி (திரைப்பட விமர்சனம்)

அருவி 
(திரைப்பட விமர்சனம்)



மீண்டும் ஒரு ஆப் பீட் படம். தவறு எதுவும் செய்யாமல் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி மாறிப் போகிறது என்னும் ஒரு பெரிய விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காக பாராட்டலாம்.

ஆனால் அதையே காட்டிக் கொண்டிருந்தால் ரொம்பவும் அழுவாச்சியாக ஆகி விடுமோ?, அப்புறம் படம் ஓடுமா? என்னும் பயம் வந்து விட்டதோ என்னவோ,  துப்பாக்கி முனையில் ஏழாம் வாய்ப்பாடு சொல்ல சொல்வதும், டம்ப் ஷராட்ஸ் விளையாடுவதுமாக சிறுபிள்ளைத் தனமாக தடம்மாறி, நம்ப முடியாமல் முடிகிறது. நடுவில் தேவை இல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனை வேறு சீண்டுகிறார்கள். 

ஊதினால் பறந்து விடுவது போல இருக்கும் பெண், தாத்தா காலத்து கை துப்பாக்கியை அனாயசமாக கையாளுவதும், அவளும் அவளுடைய திரு நங்கை தோழியும் தனியார் டி.வி. நிலையத்தை  மிகச் சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், மிகப் பெரிய போலீஸ் பட்டாளத்தை திணரச் செய்வதும், நோய் முற்றி ஹெச்.ஐ.வி. நோயாளிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் இருக்கும் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று எங்கேயோ ஒரு மலையில் தனியாக குடிசை கட்டிக்கொண்டு வாழ்வதாக காட்டுவதும்,அங்கிருந்த படியே வாய்ஸ் மெசேஜ் அனுப்பபுகிறாள் என்பதும்., காதில் பூ அல்ல மாலையே சுற்றி இருக்கிறார்கள். 

கதா நாயகி அதிதி பாலன் நன்றாக நடித்திருக்கிறார். திரு நங்கையை நன்றாக காண்பித்திருப்பதற்காக பாராட்டலாம். இசை பிந்து மாலினி, பாடல்கள் குட்டி ரேவதி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திறமை வாய்ந்தவராகத் தெரிகிறார். தன்னுடைய அடுத்த படத்தில் தனி மனித தாக்குதல் என்னும் சின்னத்தனங்களை விட்டு விட்டு நல்ல படங்களை கொடுப்பர் என்று எதிர்பார்ப்போம்.  

Thursday, January 4, 2018

வைகுண்ட ஏகாதசி 2017


வைகுண்ட ஏகாதசி 2017


பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி வைபவம் காணச் சென்றிருந்தோம். வெள்ளி அன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய நாங்கள் மாலை 4:30க்கு ஸ்ரீரெங்கத்தை அடைந்தோம். அங்கு கொஞ்சம் சிரமபரிகாரம் செய்து கொண்டு இரவு உணவையும் முடித்து விட்டு எட்டு மணிக்கு கோவிலுக்கு கிளம்பினோம். வடக்கு வாசலில் எங்களை இறக்கி விட்ட ஆட்டோக்காரர், என் அண்ணாவிடம் "ராத்திரி பதினோரு மணிக்கு வந்து விடலாம் சார் " என்றார். அவர் ஏதோ எங்களை பயமுறுத்துவதாக நினைத்தோம். ஆனால் பரமபத வாசலை நோக்கிச் சென்ற வரிசை கிழக்கு உத்திரவீதியின் ஆரம்பத்தில் தொடங்குவதை பார்த்ததும் அவர் சொன்னது உண்மைதான் என்று புரிந்து கொண்டோம். வந்து விட்டோம், பரமபத வாசலை மிதித்து விடலாம் என்று வரிசையில் சேர்ந்து கொண்டோம். வரிசை ஆங்காங்கு நின்று நகர்ந்தது. ஒலி பெருக்கியில் வேறு ஒன்பது மணிக்கு மூலவர் சந்நிதி அடைக்கப் பட்டு விடும், 10 மணிக்கு பரமபத வாசல் அடைக்கப் பட்டு விடும் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். 

நாங்கள் கருடாழ்வார் சந்நிதியை அடைந்த பொழுது மணி 9:50. எங்களை அனுமதித்து விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் அதுவரை நகர்ந்து கொண்டிருந்த வரிசை நின்று விட்டது. விடுவார்களா? மாட்டார்களா? என்று தெரியவில்லை. வெளியே சென்று கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவரை கேட்ட பொழுது, "அங்கு ஒரே கும்பல்,அதனால்தான் இங்கு நிறுத்தி இருக்கிறார்கள் " என்றாரே தவிர வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அனுமதிப்பார்களா என்று சொல்லவில்லை. துப்புரவு பணியாளர் ஒருவர் பரமபத வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்றும், அது மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறினார். உள்ளேயோ மேலும் மேலும் மக்கள் அனுமதிக்கப்பட்டுக் புதுப் புது வரிசைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நல்ல வேளை அதிகம் காக்க வைக்காமல் மக்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்பு வர எல்லோரும் திமுதிமுவென்று ஓடி, தேவை இல்லாமல் பரமபத வாசல் அருகே வரிசை என்பதே இல்லாமல் நெரிசலை உண்டாக்கினார்கள்.  பரமபத வாசலுக்கு அருகில் விதானத்தில் இருக்கும் இரண்டு தங்க பல்லிகளை பார்க்க வேண்டும் என்றார்கள். ஏன் என்று என் மகன் கேட்டதற்கு, "கெட்ட  சொப்பனங்கள் பலிக்காமல் இருக்க"(இது காஞ்சீபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாளின் கோவிலில் இருக்கும் பல்லிகளை பார்ப்பதற்கு சொல்லப்படும் பலன்) என்றேன், உண்மையில் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எப்படியோ பரமபத வாசலை மிதித்து விட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது அந்த ஆட்டோக்காரர் கூறியபடி மணி பதினொன்று ஆகிவிட்டது.

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருவானைக்கோயில் 

ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் முகப்பு 


தூணின் மேற் பகுதியில் உள்ள அழகான யாளி
  




அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள மிக அழகான மகிஷாசுரமர்த்தினி ஓவியம் 
அடுத்த நாள் காலை திருவானைக்கோவில் சென்றோம். அங்கும் கும்பல்தான். இருந்தாலும் சௌகரியமாக தரிசனம் செய்ய முடிந்தது. ஸ்ரீரங்கம் கோவில் பெரிதாக இருக்கலாம், ஆனால் திருவானைக்கோவில்தான் அழகு! அங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் நல்ல தீர்க்கமாகவும் அழகாகவும் இருக்கும். 

மாலை மலைக்கோட்டை செல்ல விரும்பினான் என் மகன். மாணிக்க விநாயகரை தரிசித்துக் கொண்டு மலை ஏறத் தொடங்கினோம். நூற்றுக் கால் மண்டபம் வரை சென்றதும் அங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் மகன் அதுதான் இவ்வளவு படிகள் ஏறி விட்டாயே, மீதியையும் ஏறி விட முடியும் என்று உற்சாகப் படுத்தி மேலே கூட்டிக் கொண்டு சென்று விட்டான். அன்று சனி பிரதோஷமாக இருந்ததால் அங்கும் நல்ல கும்பல்.

தாயுமானவர் ஸ்வாமி சந்நிதியில் உள்ள இந்த சங்கிலியின் வளையங்கள் இரும்பு அல்ல, கருங்கல்!
மறுநாள் ஞாயிறு காலை திருப்பட்டூர் சென்றோம்.அதை தனி பதிவாக எழுத உத்தேசம். மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்றோம். இந்த முறை ஆயிரம் கால் மண்டபத்தில் சேவை சாதிக்கும் உற்சவரை தரிசித்து விட்டு, மூலவரின் முத்தங்கி சேவையையும் தரிசிக்க நினைத்தோம்.

ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் மலர் அலங்காரம்.
உற்சவரை கொட்டாரத்தில் தரிசித்தோம். அன்று பெருமாள் விமான பதக்கம் அணிந்திருந்தார். மூலவரை தரிசிக்க 250 ரூபாய் டிக்கெட் வாங்கலாம் என்றால் இங்கே அங்கே என்று அலைய விட்டார்கள். எப்படியோ தரிசித்துக் கொண்டு வந்தோம். பின்னர் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்த பொழுது மாலை ஆறு மணி ஆகி விட்டது. பெருமாள் தரிசனம் எப்போதும் ஆனந்தம்தான். ஆனால் கூடவே சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. நாங்கள் மூலவர் அருகே சென்ற போது அங்கிருந்த ஒருவர் "மூணு நாள் லீவு சேர்ந்தாற்போல் வந்தாலும் வந்தது" என்று அலுத்துக் கொண்டார். இத்தனை கும்பல் வரும் என்று ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கவில்லையா? போலீஸ்காரர்களை  மட்டும் வைத்துக் கொண்டு கும்பலை சமாளிக்க வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான செயல்தான். காவல் துறை திணறியது. திருச்சியில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன அவைகளிலிருந்து  ஸ்கவுட், NSS மாணவர்களை வரவழைத்து வாலன்டியர்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். 
உத்திர வீதியில் தண்ணீர் பாட்டில்கள் விற்றார்கள், கோவிலுக்கு உள்ளே எதுவும் இல்லை. குடி தண்ணீர் விநியோகத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம். இது ஒரு பக்கம் என்றால், வருத்தப் படத்தக்க இன்னொரு நிகழ்வு, முத்தங்கி சேவை தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, ஜி.ஆர்.டி. நிறுவனத்தினர் ஒரு பையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட், மிக்ஸர் பாக்கெட், ஒரு சிறு தண்ணீர் பாட்டில் வைத்து விநியோகம் செய்தனர். அது கிடைத்தவர்கள் எல்லாவற்றையும் வரிசையில் நிற்கும் பொழுதே காலி செய்து விட்டு அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டிலை அங்கேயே போட்டு விட்டு சென்றிருந்தனர். கோவிலுக்குள்ளே குப்பையை போடுகிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூடவா இருக்காது? அந்த GRT பையிலேயே போட்டுக் கொண்டு வழியில் இருக்கும் குப்பை கூடையில் போட்டிருக்கலாமே?!  இத்தனைக்கும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் நாகரீகமாக உடை அணிந்து கொண்டிருந்தனர். எல்லோரும் படித்தவர்களைப் போலத்தான் தென்பட்டனர் என்றாலும் சுற்றுப்புறத்தை குறிப்பாக ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

வெளியே வந்து டீ குடித்தோம். சுவையான இஞ்சி டீயை விற்பனை செய்து கொண்டிருந்தவர் தேநீரை எங்களுக்கு வழங்கி விட்டு," டீ குடித்து விட்டு கப்பை கீழே போட்டு விடாதீர்கள் நான் தனியாக பை வைத்திருக்கிறேன் அதில் போடுங்கள்" என்றார். இப்படியும் ஒருவர். 
பாராட்டலாம்.  





Sunday, December 31, 2017

புத்தாண்டு செய்தி

புத்தாண்டு செய்தி

ராமகிருஷ்ண பரமஹமசர் தன் சீடர்ளுக்கு உபதேசம் வழங்கும்
பொழுது வீட்டு வேலைகளை செய்தபடியே அவைகளை செவி மடுக்கும் அன்னை சாரதா தேவி தன் கருத்தை புன்னகையால் அங்கீகரிப்பாராம்.

ஒரு முறை சாரதா தேவி முறத்தால் புடைத்தும், ஜல்லடையால் சலித்தும் ஏதோ செய்து கொண்டிருந்தாராம். அதைக் கண்ட பரமஹம்சர் தன் சீடர்களிடம், "முறம், ஜல்லடை இந்த இரண்டில் முறம், தூசு, தும்பு போன்ற தேவையில்லாத விஷயங்களை வெளியே தள்ளி விட்டு நல்ல விஷயங்களை மட்டும் தன்னிடம் வைத்துக் கொள்ளும். ஆனால் ஜல்லடையோ நல்ல விஷயங்களை கீழே தள்ளி விட்டு விட்டு கல், மண் போன்ற குப்பைகளை தன்னிடத்தே வைத்துக் கொள்ளும். நாம் இந்த ஜல்லடையைப் போல இருக்கக் கூடாது. முறத்தைப் போல தீய மனிதர்களை புறம் தள்ளி விட்டு நல்ல மனிதர்களோடு மட்டும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்" எனறாராம். அதைக்கேட்ட அவருடைய சீடர்கள் ஆஹா! என்ன ஒரு அற்புதமான கருத்து என்று பெரிதும் ஆமோதித்தனராம். ஆனால் சாரதா தேவி வழக்கம் போல் அதை ஆமோதிக்காமல் இருக்க, பரமஹம்சர் சாரதா தேவியிடம்,"என்ன நான் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?" என்று கேட்டதும் சாரதா தேவி," எதை தள்ளுவது? எதை சேர்த்துக் கொள்வது? எல்லோரும் நம் மக்கள் தானே? மனிதர்கள் அப்படித்தான் நன்மையும், தீமையும் கலந்துதான் இருப்பார்கள், இதில் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்". என்றாராம்.

அன்னை சாரதா தேவியின் இந்த வாக்கையே புத்தாண்டு செய்தியாக்குகிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நட்போடும், உறவோடும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்!💐🎂😊👍

Sunday, December 24, 2017

Merry Christmas

Merry Christmas 

X mas wishes to all Christian friends. Have a joyful celebration!💐💐


Wednesday, December 20, 2017

நாங்கள் நடித்த விளம்பரப்படம்

நாங்கள் நடித்த விளம்பரப்படம் 




அப்பா இன்னிக்கு பிசா சாப்பிடலாமா? என்றான் ஏன் மகன். 

ஓ! சாப்பிடலாமே, கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது 241பிசாவுக்கு போகலாம் என்றார் என் கணவர்.

மஸ்கட்டில்  டார்செய்ட்(Darseit) கிருஷ்ணன் கோவிலுக்குச் செல்லும் வழியில் டார்செய்ட் ரவுண்ட் அபௌட் அருகில் அப்போது  241 பிசா ரெஸ்டாரெண்ட் புதிதாக தொடங்கப் பட்டிருந்தது.  அதென்ன 241பிசா? என்கிறீர்களா? அந்த கடையின் டெலிபோன் நம்பர் 241 என்று முடியும். அதையே பெயராக வைத்து விட்டார்கள். போனில் ஆர்டர் செய்ய வேண்டுமென்றால் நம்பரை நினைவில் வைத்துக் கொள்வது சுலபமாக இருக்கும் என்னும் எண்ணமாக இருக்கலாம்.

நாங்கள் கோவில் போய் விட்டு 241பிசா சென்று ஸ்டார்டர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது, சிலர் படப்பிடிப்பு உபகரணங்களோடு வந்து காமிரா, விளக்குகள் இவற்றை அங்கே செட் செய்ய ஆரம்பித்தார்கள். "என்ன நடக்கிறது? ஏதாவது ஷூட்டிங்கா?" என்று அங்கிருந்த பிலிப்பினோ பெண்ணை விசாரித்தோம், "அவள்," ஏதோ விளம்பர படம் என்று நினைக்கிறேன் என்றாள்.

அந்த படப்பிடிப்பு குழு கடையின் எல்லா பகுதிகளையும் படம் பிடித்து விட்டு, எங்களுக்கு பிசா வந்தவுடன் எங்கள் மேஜையை போகஸ் செய்ய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தானா என் மகள் என் கையில் இருந்த முள் கரண்டியை தட்டி விட வேண்டும்..? நான் சொதப்பினாலும் பிஸாவை  ருசிப்பது படமாக்கப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பப்பட்டது. என்ன..நாங்கள் பிராண்ட் அம்பாசிடராக இருந்து 241 பிஸாவை பிரபலப்படுத்தியதற்கு எங்களுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்படவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டோம். 

Sunday, December 17, 2017

பியூஷன் உலகம்

பியூஷன்  உலகம் 

அந்த திருமண பத்திரிகையில் முகூர்த்த நேரம் காலை 9:00 முதல் 10:30 வரை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் 10:30 தாண்டியும் திருமண சடங்குகள் நடந்து கொண்டே இருந்தன. காரணம் மணமக்கள் வேறு வேறு ஜாதி. 

முதலில் பெண் வீட்டு வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன, பிறகு பிள்ளை வீட்டு வழக்கப்படி தொடர்ந்தன. இப்போதெல்லாம் இம்மாதிரி திருமணங்கள் அதிகமாகி விட்டன. காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சில் கிருத்தவ முறைப்படியும் கூட சில கல்யாணங்கள் நடக்கின்றன.  இத்தகைய திருமணங்களை பியூஷன் வெட்டிங் என்கிறார்கள்.  

இந்த பியூஷன் விஷயங்கள் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு விஷயங்களில் பழக்கத்தில் வந்து விட்டது. கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் இணைத்து பாடும் ஜுகல்பந்தி என்னும் கச்சேரி ஒரு வகையில் பியூஷன் இசைதான். இதை இசை விமர்சகர் சுப்புடு," ஜாங்கிரியை மோர் குழம்பில் ஊறப்போட்டது போல" என்பார்.

இப்போது ஜுகல்பந்தியை விரும்பி கேட்காதவர்கள் கூட, கர்நாடக சங்கீதத்தை மேற்கத்திய இசையோடு இணைத்து பாடும் பியூஷன் ம்யூசிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். உதாரணம் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் 'ரெங்கபுரவிஹாரா..' பாடல். கேட்டுத்தான் பாருங்களேன். 



முன்பெல்லாம் பெண்களுக்கு புடவைக்கு மாட்சிங்காக பிளவுஸ் வாங்க படும் பாட்டை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளும், ஏன் கதைகளும் கூட வந்திருக்கின்றன. இப்போது யாரும் அப்படி மேட்சிங் ஆக பிளவுஸ் அணிவதில்லை. பச்சை புடவைக்கு ப்ரவுன் நிறத்திலும், பிரவுன் புடவைக்கு மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் புடவைக்கு கருப்பு நிறத்திலும் கான்ட்ராஸ்டாகவோ, அல்லது கலம்காரி பிலௌசுகளோ அணிவதுதான் பேஷன். ஏன் சூடிதார் கூட மிக்ஸ் அண்ட் மேட்ச் என்று ஒரே நிற பாட்டமிற்கு வேறு வேறு நிற குர்தாக்களை அணிகிறார்கள். இவையெல்லாம் பியூஷன்தானே?

திருமண விருந்துகளில் காலை முகூர்த்தத்தின் பொழுது சம்பிரதாய சாப்பாட்டை போட்டு விட்டாலும், வரவேற்பின் பொழுது சூப்,  மன்ச்சூரியன்,சப்பாத்தி,புலாவ், பன்னீர் மட்டர் மசாலா என்று வட இந்திய உணவு, சாம்பார் சாதம், உருளை கிழங்கு கறி, ரசம், தயிர் சாதம், ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கலந்து பியூஷன் விருந்து  பரிமாறுகிறார்கள். 

பெரும்பாலான நவீன யுவதிகள் ஜீன்ஸ், மூக்குத்தி, மெட்டி என்று அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. 



இதை பியூஷன் செருப்பு என்று கூறலாமா?

Wednesday, December 6, 2017

நவம்பரில் நான் பார்த்த படங்கள்

நவம்பரில் நான் பார்த்த படங்கள் 

நவம்பர் மாதம் நடிகர் கமலஹாசன் பிறந்த மாதமாக இருந்ததால் ராஜ் டி.வி.யில் தினமும் மதியம் 1:30க்கு கமலஹாசன் நடித்த படங்களாக போட்டார்கள். அதில் நான் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் மற்றும்  மன்மத லீலை பார்த்தேன். 


மூன்றுமே கே.பாலசந்தர் இயக்கியவை. அது வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கதாநாயகியாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் அறிமுகமான படம் மூன்று முடிச்சு. இருவருமே புதுமுகம் என்பது போல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருந்திருக்கிறார்கள். கமலஹாசன்(அப்போதெல்லாம் அவர் கமலஹாசனாகத்தான் இருந்திருக்கிறார். பின்னாளில்தான் கமல்ஹாசன்) இடைவேளைக்கு முன்பாகவே இறந்து விடுகிறார். படத்தில் கொஞ்ச நேரம்தான் வந்தாலும், நிறைவான நடிப்பு.
டைட்டிலில் படப்பிடிப்புக்கு இடம் தந்து உதவிய திருமதி.ராஜலக்ஷ்மி, திரு.ஸ்ரீனிவாசனுக்கு நன்றி என்று போடுகிறார்கள். கமலின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன்.



அபூர்வ ராகங்கள் படத்தை அந்தக் காலத்தில் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்தார்கள். அந்த கால கட்டத்தில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஸ்ரீ வித்யா,நாகேஷ், சுந்தர்ராஜன் கச்சிதம். கமல் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவருக்கு ஏன் அப்படி ஒரு கன்றாவி ஹேர் ஸ்டைல்? ஜெயசுதா தவறான தேர்வு. புதுமையாக செய்யலாம் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்திற்குப் பிறகு கதையை கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டு விட்டார் போலிருக்கிறது. 

குட் ஜோக்! என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு உடனே நல்ல ஹாஸ்யம் என்று மொழி பெயர்க்கும் சுந்தர்ராஜனின் ஸ்டைல் புன்னகைக்க வைக்கிறது. 


மன்மத லீலை... கதாநாயகன் என்பவன் கண்ணியவானாகத்தான்  இருக்க வேண்டும் என்னும் அந்தக் கால மரபை உடைத்து ஒரு சபலிஸ்டை கதாநாயகனாக காட்டியிருக்கும் துணிச்சல்...! ஆனால் நடிகர்கள் தேர்வு சரியில்லை. கமலஹாசன் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் பால் வடியும் முகம்,சின்னபையனைப் போன்ற தோற்றம் இரண்டும் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபை பண்ண முடியாமல் தடுக்கின்றன. உடன் நடித்த நடிகைகளும் சோ சோ தான். சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன.' மனைவி அமைவதெல்லாம்...' 
'நாதமென்னும் கோவிலிலே...' என்று இரண்டு நல்ல பாடல்கள். இந்தப் படம் வெளிவந்த கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நலங்கின் பொழுது மனைவி அமைவதெல்லாம் பாடல்தான் பாடுவார்கள்.

இந்தப் படத்தைப் பற்றி பாலச்சந்தர் கூறிய பொழுது, "கமலஹாசனின் நடவடிக்கைகளை கவனித்தேன், அப்பொழுது உருவான கதாபாத்திரம்தான் மன்மத லீலை மது" என்றார். கமலஹாசன் மீது இவ்வளவு மோசமான அபிப்ராயமா? 

Wednesday, November 29, 2017

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி 

தேவையான பொருள்கள்: 

சாபுதானா(ஜவ்வரிசி பெரியது)  - 200gm
உருளை கிழங்கு (மீடியம் சைஸ்) - 3
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3 அல்லது 4
தக்காளி(பெரியது) - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது இல்லையென்றால் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி போடலாம்.
நிலக்கடலை - ஒரு சிறிய கப் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க் 
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
எண்ணெய்  - சிறிதளவு 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
உ.பருப்பு - 2 டீ ஸ்பூன் 
க.பருப்பு -  2 டீ ஸ்பூன் 







செய்முறை:

ஜவ்வரிசியை கழுவி விட்டு, ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வடிய வைக்கவும். தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் நன்றாக வடிய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் கிச்சடி உதிர் உதிராக வராமல் கொழ கொழவென்று ஆகி விடும். 

ஊற வைத்து வடிய வைத்திருக்கும் ஜவ்வரிசி 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நாலு அல்லது எட்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.ஜவ்வரிசி தயாரானதும் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அது சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்(கீறி போடலாம்) கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது  இவைகளை சேர்த்து வதக்கவும்.






அவை நன்கு வதங்கியதும் ஜவ்வரிசியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். ஜவ்வரிசி வெந்ததும்(அதன் வெண்மை நிறம் மாறி கண்ணாடி போல மாறும்) துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, மற்றும் ஒன்றிரெண்டாக பொடி செய்யப்பட்ட நிலக்கடலை இவைகளையும் சேர்த்து கிளறி சற்று நேரம் சின்னத் தீயில் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும். 






பி.கு. : கடலையை மிக்சியில் பொடி செய்யும் பொழுது அதிகமாக நொறுங்கி விட்டது. உ.கி.? மறந்து விட்டேன்.ஹி,ஹி! நீங்கள் மறக்காமல் போட்டு விடுங்கள்.