கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, August 10, 2018

பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம்

பிக் பாஸ் -  காலத்தின் கோலம் அலங்கோலம் 


எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்தனை நாட்கள் ரேடியோவில் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப்படாது. 'டொ..ய்...ங்..' என்று சித்தார் அல்லது 'பீ...ய்..ங்..' என்று ஷெனாய்தான் அழுது கொண்டிருக்கும். அதை கேட்டு எனக்கு ஷெனாய் இசை என்றாலே ஒரு அலர்ஜி. "வட இந்தியர்கள் திருமணத்தில் கூட இதைத்தான் வாசிப்பார்களாமே..?இதைப் போய் எப்படி..?" என்று நினைத்துக் கொள்வேன். 

அதன் பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. அரசு துக்கம் அனுஷ்டிக்கும் நாள்களில் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப ஆரம்பித்தார்கள். இப்போது கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் இறந்திருக்கும் பொழுது ஜெயா, விஜய், ஜீ போன்ற சேனல்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வழக்கம் போல் சமைத்துக் கொண்டு, விளையாடிக்கொண்டு, ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தது  பார்க்க ரசமாக இல்லை. ஏன் கலைஞர் டி.வி. குழுமத்தை சார்ந்த மியூசிக் சேனல் வழக்கம்போல் பாட்டு போட்டுக் கொண்டிருந்தது. கலைஞரை புதைத்த உடனேயே சன் டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும் சீரியல்களுக்கு திரும்பி விட்டார்கள். ஹும், இதுதான் உலகம்!

பார்ப்பதற்கு ரசமாக இல்லாத இன்னொரு விஷயம் பிக் பாஸ்! நான் கூட சென்ற வாரம், "கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று தெரியாத இந்த தலைமுறையினர் பிக் பாஸை பார்த்து கூட்டு குடித்தனத்தின் தன்மைகளை தெரிந்து கொள்ளலாம். சின்ன சின்ன பொறாமைகள், புறம் பேசுதல், சண்டைகள் எல்லாம் கொண்டதுதான் கூட்டு குடித்தனம். என்ன வேற்றுமை இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பம், ஒருவருக்கு ஒரு கஷ்டம் வரும்பொழுது மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள்" என்று பிக் பாஸை சிலாகித்து கூறினேன். திருஷ்டி பட்டு விட்டது போலிருக்கிறது.  அன்று 'உன்னைப் போல் ஒருவன்' என்று ஒரு டாஸ்க்!. அதில் ஒவ்வொருவருக்கும் யாருடைய படம் போட்ட டீ ஷர்ட் வருகிறதோ அந்த படத்தில் இருபவரைப் போல நடந்து கொள்ள வேண்டும். வைஷ்ணவி பாலாஜியாகவும், பாலாஜி டேனியலாகவும், டேனியல் யாஷிகாவாகவும், யாஷிகா வைஷ்னவியாகவும், ஜனனி சென்ராயனாகவும், மும்தாஜ் ஐஸ்வர்யாவாகவும், மஹத் மும்தாஜாகவும், நடித்தார்கள். தலை சுற்றுகிறதா? இதோடு விட்டு விட்டு விஷயத்திற்கு வருகிறேன். இதில் நீல அணிக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். சிவப்பு அணியினறில், ஒருவரை அழ வைக்க வேண்டும், ஒருவரை சிரிக்க வைக்க வேண்டும், ஒருவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்ல வைக்க வேண்டும், ஒருவரை எம்ப்ராஸ்(embarrass) அடையச் செய்ய வேண்டும். 



எம்ப்ராஸ் என்னும் வார்த்தையை எப்படி புரிந்து கொண்டார் வைஷ்ணவி என்று தெரியவில்லை. பிரபல எழுத்தாளரான சாவி அவர்களின் பேத்தியாகிய இவர் பாலாஜியை சங்கடப்பட வைக்கிறேன் பேர்வழி என்று அவருக்கு முன்னால் தான் அணிந்திருந்த டீ ஷர்ட் ஐ அவிழ்த்து வேறு மாற்றிக் கொண்டார்.    

அதை பாலாஜி மட்டுமா பார்த்தார்? அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்க மாட்டார்களா? இது வைஷ்ணவியின் மண்டையில் உதிக்கவே இல்லையா? அல்லது வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கத் தயார் என்று சொல்கிறாரா? இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?

Saturday, July 28, 2018

ஆனந்தமாய் சிரிக்கலாம்


☺ ஆனந்தமாய் சிரிக்கலாம்

இவையெல்லாம் எனக்கு வாட்ஸாப்பில் வந்த அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகள். யாம் பெற்ற இன்பம் பெறுக 'எங்கள் ப்ளாக்' என்று பகிர்கிறேன்.  நகைச்சுவை துணுக்குகள் ஒரு பங்கு என்றால், படங்கள் இரு மடங்காக நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக குறிப்பாக குழந்தை பலம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து கொடுக்க முயலும் பெற்றோர் படம் குபீர் சிரிப்பை வரவழைத்தது.  


           











Thursday, July 26, 2018

மேகங்கள் விலகும் - 2


           மேகங்கள் விலகும் - 2

வேலைகளை முடித்துக் கொண்டு படுக்க வந்த பொழுது, கணக்கு நோட்டை பிரித்து வைத்துக் கொண்டு அவள் கணவன் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு தினமும் கணக்கு எழுத வேண்டும்.

“கார்தால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு போனேன், என்ன செலவு? எவ்வளவு மீதி?”

கொஞ்சம் யோசித்த ஸ்வர்னா, “இருபது ரூபாய்க்கு பூ வாங்கினேன்..” என்றதும் மணிகண்டனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் ஐநூறு ரூபாய்க்கு கணக்கு கேட்டால், நீ இருபது ரூபாய்க்கு கணக்கு சொல்ற..” 

“ரோஹித்துக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன்”

“நூறு ரூபாயா? டேய் ரோஹித், எதுக்குடா நூறு ரூபாய்?”

“நூறு ரூபாய் இல்லப்பா, ஐம்பதுதான் கேட்டேன், அம்மாதான், நூறு ரூபாய் கொடுத்தா, ஸ்கூல் கார்டன் போட கேட்டாங்க..” அவன் மீதி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான்.

“ம்.. அவன் ஐம்பது ரூபா கேட்டா, நீ நூறு ரூபா கொடு, பாக்கியும் வாங்காத, உருபட்டுடுவான்.."

அவள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி சொல்லி விட்டாலும், ஒரு அருபதைந்து ரூபாய்க்கு கணக்கு வரவே இல்லை.

கணக்கு தவறாக போட்டுவிட்டு ஆசிரியரின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனை காப்பாற்றும் வகுப்பு முடிந்து விட்டதை அறிவிக்கும் மணியைப் போல அவனுடைய செல் அழைத்து அவளை காப்பாற்றியது.

அவன் பேசி முடித்து விட்டு வரும் பொழுது அவள் உறங்கியிருந்தாள். 

எரிச்சலோடு கணக்கு நோட்டை மூடி வைத்தவன், விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.

மறு நாள் காலை சிற்றுண்டி அருந்தும் பொழுது மீண்டும் அதே பேச்சை தொடங்கினான்.

“நீ இன்னும், அந்த அறுபதைந்து ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை”

“கேவலம் ஒரு அறுபத்தஞ்சு ரூபா.. நான் செலவழிக்கக் கூடாதா?”

“அறுபத்தஞ்ஜாயிரம் கூட செலவழிக்கலாம். ஆனா, எதுக்கு செலவழிக்கிறோம்னு தெரியணும். கேவலம் அறுபதஞ்சு ரூபாயா..? சம்பாதிச்சால்தான் அதன் அருமை தெரியும்.. வீட்டில் உக்கார்ந்து சாப்பிடுகிரவங்களுக்கு என்ன தெரியும்?” என்று தொடங்கியவன், “நீ ஒரு தண்ட சோறு” என்னும் ரேஞ்சுக்கு பேசி முடித்து, அலுவலகதிற்கு கிளம்பிச் சென்றுவிட, இவளுக்கு மனது விண்டு போனது.

“சே.. என்ன வாழ்க்கை இது? நானும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்., ஒரு அறுபத்தஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா? எனக்கு மரியாதை இவ்வளவுதானா?”

கோபத்தில் சாப்பிடும் நேரம் வந்த பொழுது, மாமியருக்கு மாத்திரம் தட்டு வைத்தாள்.

“அவன் ஏதோ கோவத்தில் கத்தி விட்டு போனால், நீ ஏன் சாப்பாட்டில் கோபித்து கொள்கிறாய்? ஆண் பிள்ளைகள் அப்படித்தான், சாப்பிட வா..”

“கோவம் வந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”

“விடேன், இதையெல்லாம், காதுல போட்டுக்கொள்ள கூடாது, உன் ஸ்னேகிதாள பார்க்கப் போணும்னு சொன்னியே, சாபிட்டு விட்டு கிளம்பினா சரியா இருக்கும்.”

சாப்பிட்டு விட்டு, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரேவதி வீட்டிற்கு கிளம்பினாள்.

அங்கு அவள்தான் முதல் வரவு.

“என்னப்பா..? எப்போதும் நீதான் கடைசியா வருவ.. இப்போ, முதலில் வந்துட்ட..? ஞாபகம் இருக்கா..? ஒரு தடவ ஏதோ ஒரு அஜித் படத்திற்கு அட்வான்ஸ் புக் பண்ணிய கூப்பனை நீ வைத்துக் கொண்டு, லேட்டாக வந்தாய்.. நாங்களெல்லாம் உனக்காக தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.. ப்ரபா பயங்கர டென்ஷனாயிட்டா..” 

ரேவதி பழைய கதையை அவிழ்த்து விட ஸ்வர்னா சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஏன் இப்பொ சொல்லி டாமேஜ் பண்ற?” என்றாள். பிறகு, “என் ஹஸ்பெண்ட் ரொம்ப பன்சுவல், ஆறு மணிக்கு ஒரு நிகழ்சின்னா ஐந்தே முக்காலுக்கு அங்க இருப்பார். ஸோ, நானும் மாறிட்டேன்.”

“வேற என்னவெல்லாம் மாறியிருக்கு? நல்லா வெய்ட் போட்டுட்ட..”
“நீ மட்டும் என்னவாம்?”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரும்பான்மையோர் குண்டாகி, லேசாக நரைக்கத் துவங்கி, கண்களின் கீழ் கருவளையம் விழுந்து, சிலர் பளிச்சென்றாகி.. அந்த இடமே மாறிப்போனது.

எல்லோரும் தங்கள் வயதை மறந்து பேசி சிரித்து, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, உற்சாகம் கொப்பளித்தது.

கூட்டத்தின் நம்ப முடியாத அதிசயம் காயத்ரி. படிக்கும் பொழுது மீடியாக்கர் ஸ்டூடண்ட். முதல் வருடம் அரியர்ஸ் கூட இருந்தது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு வேகம் எடுத்து, முதல் வகுப்பில் தேறி, வங்கித் தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்று வங்கியில் சேர்ந்ததுதான் இவர்களுக்குத் தெரியும். அவள் அதற்குப் பிறகு எம்.பி.ஏ. முடித்து, தனியார் நிறுவனத்திற்கு மாறி, இன்று அதில் முதன்மை அதிகாரியாம். விடாமல் கைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. நம்பத்தான் முடியவில்லை.

கல்லூரி காலத்தில் பல ரோமியோக்களை தன் பின்னால் சுற்ற விட்ட மாலா இப்போது அடையாளமே தெரியாமல் பருமனாகி, முடியெல்லாம் கொட்டி, நிறமிழந்து.. ஏதொ மெடிசன் அலர்ஜியால் இப்படி ஆகி விட்டதாம்.

ஆனால் கட்டுப்பெட்டியாக, இறுக பின்னிய தலை, பாவாடை, தாவணி என்று இருந்த பிரேமா பாண்ட், குர்தா, குட்டையாக வெட்டப் பட்ட தலை முடி, பொட்டில்லாத நெற்றி என்று ஆச்சர்யப்படுத்தினாள். பார்க்கும் எல்லோரையும் அணைத்துக் கொண்டாள்.

அடையாளமே தெரியவில்லை. நீயே இவ்ளோ மாடர்ன்னா? உன் குழந்தை..? என்று நான் ஆரம்பிக்க, ரேவதி கண் ஜாடை காட்டினாள். உடனே பேச்சை மாற்றினேன்.

எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க உள்ளே சென்றவள் என்னை அழைத்து,”ப்ரேமவுக்கு குழந்தைகள் இல்லை. அடாப்ட் பண்ணிக்கத்தான் இங்கு வந்திருக்கிறாள்" என்றாள்.

"அது சரி ஏன் லக்ஷ்மி வரவில்லை?"

"அது ஒரு பெரிய ட்ராஜிடி.."

"என்னாச்சு?" என்றாள் காயத்ரி செல் போனை துண்டித்தபடி.

"ரெண்டு வருஷம் முன்னால ஒரு ரோடு ஆக்ஸிடெண்டில் அவள் கணவருக்கு அடி பட்டு, படுத்த படுக்கையா இருக்கார், அதனால லக்ஷ்மியால எங்கேயும் நகர முடியல.."

ஹாலில் சட்டென்று ஒரு அமைதி கவிந்தது.

அதை மாற்ற “ஏய்! சுதா நீ நன்னா பாடுவியே.. ஒரு பாட்டு பாடு”
இப்பொல்லாம் பாட்டு கேட்பதோட சரி, என்று கொஞ்சம் அலட்டி விட்டு பாடத்தொடங்கிய சுதா வார்தைகள் மறந்து போய் பாதியில் நிறுத்த, அதைத் தொடர்ந்து வேறு பாடலைப் பாடிய வித்யா அதையே அந்தாக்ஷரியாக மாற்றினாள். எல்லோரும் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, “நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான் கிளம்பரேன்..” என்றபடி உமா எழுந்து கொண்டாள்.

“இன்னும் ஹாஃப் அன் அவர்தானே..? எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்.”

“இல்ல, என் பையன் ஸ்கூலிலிருந்து வந்துடுவான்”

அரை மணி நேரம் தனியா இருக்க மாட்டானா?

யாரோ கேட்க, அரை நொடி தாமதித்த வித்யா, “அவன் ஸ்பெஷல் சைல்ட், அதனால் தனியா விட முடியாது” என்று கூறி விட்டு எல்லாரையும் மீட் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம், அடிக்கடி பார்க்கலாம்” என்று கிளம்பியதும், ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர். 

கூட்டத்தில் அதிகம் பேசாமல் உட்கார்ந்திருந்த நித்யா, “ரொம்ப தாங்க்ஸ் ரேவதி, இந்த ரெண்டு மணி நேரம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அடுத்த கெட் டு கெதெர் நம்ம வீட்ல வெச்சுக்கலாம்”.

“ஷுயர்”

“ஆறு மாசம் முன்னாடி இருந்ததற்கு இப்போ, பெட்டரா இருக்கா இல்லையா?”

“ம்..ம்.., புத்ர சோகத்திலிருந்து மீள்வது அவ்வளவு ஈசியா?”

வீடு திரும்பும் பொழுது ஸ்வர்னாவின் மனசுக்குள் இந்த சந்திப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன என்ன துன்பங்களை ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள்? குழந்தை பிறக்காத சோகம், பிறந்த குழந்தை நார்மலாக இல்லாத சோகம், அழகான குழந்தை இறக்கும் சோகம்,  வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப் போடும் சோகம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?

வீட்டிர்க்குள் நுழையும் பொழுது, “நாலு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போன, இப்போ மணி என்ன? பால் கூட குடிக்காமல் ரோஹித் டென்னிஸுக்கு போய் விட்டான், நான் இன்னும் காபி குடிக்கல..”மாமியார் கடுகடுத்தார்.

“பால், டிகாஷன் எல்லாம் இருக்கே..?”

காபி கலந்து குடிங்கோனு சொல்லிட்டு போனாயா? நீ வந்து கலந்து தருவாய்னு இருக்கேன்..உனக்கு அங்க கிடைச்சிருக்கும்.” நிஷ்டூரமாக பேசிய மாமியார் காபி குடித்தவுடன், "ராத்திரி நீங்கள் வெளியே போய் விடுவீர்கள், எனக்கு என்ன?" என்றார்.

“தோசை மாவு இருக்கு”

“வேண்டாம், நேத்திக்கும், தோசை, இன்னிக்கும் தோசையா? சாதம் வைத்து விடு, மோருஞ்சாதம் சாப்பிட்டுக் கொள்கிறேன்”

கொஞ்சம் தேங்காய் தொகையலும் அரைத்து வைத்து விடலாம் என்று ஸ்வர்னா நினைத்துக் கொண்டாள். இந்த தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்.

Monday, July 23, 2018

மேகங்கள் விலகும்


மேகங்கள் விலகும்


பட படவென கரகோஷம் எழ கை கூப்பி, நன்றி கூறி ஸ்வர்னா மேடையிலிருந்து இறங்கினாள்.

“எக்ஸலெண்ட் ஸ்வர்னா! இவ்ளோ நன்னா பண்ணுவனு நான் எதிர் பார்க்கவேயில்லை”. என்று அவள் உறுபினராக இருக்கும் லேடீஸ் க்ளப் தலைவி அணைத்துக் கொண்டார்.

“ஸூப்பர் மேடம்,”

“ரொம்ப நன்னா இருந்தது,” 

என்று பலரும் பாராட்ட, ஸ்வர்னா மகிழ்சியில் திக்கு முக்காடினாள்.
இது நகரின் பெரிய மகளிர் அமைப்பின் ஆண்டு விழா. இவள் சார்ந்திருக்கும் லேடீஸ் க்ளபிற்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் அறிவித்திருந்த போட்டிகளில் எதில் பங்கேற்கிறார்கள் என்றும் கேட்டிருந்தார்கள்.

அழைப்பிதழை படித்த ப்ரசிடெண்ட் கலா சந்தர்,” நாம் எதில் கலந்து கொள்ளலாம்?” என்று கேட்க,

“க்ரூப் சாங்க், டான்ஸ், ட்ராமா, மிமிக்ரி” என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தார்கள்.

“க்ரூப் சாங்க் நிறைய பேர் வருவாங்க, ஸ்டில், கன்சிடர் பண்ணலாம். டான்ஸ் வேண்டாம், ட்ராமா.. சுமதி நீதானே சொன்ன? இன்சார்ஜ் எடுத்துகறயா?

“ஐயையோ, ட்ராமாவும் போடலாம்னு சொன்னேன்…” ஐடியா கொடுத்த சுமதி ஒரேயடியாக பல்டி அடித்தாள்.

மிமிக்ரி… குட் ஐடியா.. ஆனால் யாருக்கு மிமிக்ரி பண்ண வரும்?
ஸ்வர்னா தயங்கி கை தூக்கினாள்,

வாவ்! ஸ்வர்னா நீ மிமிக்ரி பண்ணுவியா? தெரியவே தெரியாதே… எங்களுக்கு ஏதாவது செஞ்சு காட்டினா, உன் பெயரையே கொடுத்துடுவேன். கலா சந்தர் கேட்க, ஸ்வர்னா தனக்கு தெரிந்த கிருபானந்த வாரியார், மேஜர் சுந்தர்ராஜன், ஹரிதாஸ் கிரி என்று செய்து காண்பித்தாள்.

இவ்வளவு டாலண்ட் வைத்துக் கொண்டு இத்தனை நாள் ஏன் வாயை திறக்கவே இல்லை? ரைட். உன்னோட பெயரையே கொடுத்து விடுகிறேன். அருணா சாயிராம் சேர்த்துக் கொள். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணு, சொதப்பிடக் கூடாது.

வீட்டிற்கு வந்து கணவனிடம் தான் மிமிக்ரி செய்யப் போவதாக கூறியதும்,”மிமிக்ரியா? நீயா? அப்படினா என்னனு தெரியுமா?” என்று அவன் கேட்டதும், அவளின் உற்சாக பலூன் பட்டென்று உடைந்தது.
கல்லூரியில் படிக்கும் பொழுது அவள் மேடையை கலக்கி இருக்கிறாள் என்பது அவள் கணவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே.

எப்படியோ போட்டியில் கலந்து கொண்டு,இதோ முதல் பரிசும் பெற்றாகி விட்டது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு பாராட்டு?

சமையல், வீட்டு வேலை, தூக்கம் என்ற ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதற்கு ஒரு மாற்று. அதிலும் பாராட்டு என்பதே மறந்து விடுமோ என்றுகூட தோன்றும்.

“என்ன இன்னிக்கு சமையல் உப்பு சப்பில்லாமல் இருக்கு?” என்று குறை சொல்லத் தெரியும் நாக்கிற்கு, நன்றாக சமைத்திருக்கும் நாட்களில் ஏன் பாராட்ட மனம் வருவதில்லை?

வாசலில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவழித்து கோலம் போட்டால், ஃபளாட்டில் சின்னதாக கோலம் போட்டால் போதாதா? தனி வீடா தட்டு கெட்டு போறது?” என்பார் மாமியார்.

கணவனோ, “கோலம் அழகா இருக்கே..? யார் போட்டது?” என்பான். வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு பெண்கள்தான். அதில் அம்மாவால் குனிந்து கோலமெல்லாம் போட முடியாது, மனைவிதானே போட்டிருக்க வேண்டும் என்பது கூட புரியாதா? அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா?

இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால், “உங்க அப்பா என்னை பாராட்டியிருக்காரா?” என்பாள். ஏக்கங்களை முழுங்கியபடி வாழக்கற்றாள். பன்னிரெண்டு வருட ஏக்கங்களை சிதறடித்து விட்டது இந்த பரிசு.

இவள் கொண்டு வந்த பரிசுக் கோப்பையை பார்த்த மாமியார், “ கீதாவும் இப்படித்தான் காலேஜ் படிக்கும் பொழுது போட்டினு போனா பரிசு வாங்காம வர மாட்டா” என்றார்.

தபாலில் பட்டப்படிப்பை முடித்த நாத்தனார் எப்படி கல்லூரியில் பரிசு வாங்கியிருக்க முடியும்? என்ற கேள்வி எழும்பினாலும், என் மகளை விட நீ உசத்தி கிடையாது என்னும் எண்ணமே உள்ளிருப்பது என்பது புரிய மௌனமானாள்.

சென்டர் டேபிலில் வைக்கப்பட்டிருந்த ட்ராஃபியை பார்த்த மகன், “ஹை! ட்ராஃப்பி! யாரோடது?” என்றான்.

கணவனோ, “அட! நெஜமாவே வின் பண்ணிட்டயா? க்ரேட்! மொத்தம் எவ்வளவு பார்டிசிபெண்ட்ஸ்? நீ மட்டும்தானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டதும், இவளுக்கு கோபம் வந்தது.

“பாராட்ட வேண்டாம், கேலி பண்ணாமல் இருக்கலாம்..”

“பாராட்டிடால் போச்சு, ரோஹித், கிவ் ஹெர் அ பிக் ஹாண்ட்”

தகப்பனும், மகனும் கை தட்டினார்கள். டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தவன், அவள் கொண்டு வந்து தந்த காஃபியை உறிஞ்சியபடி, “ராத்திரி சாப்பிட என்ன?” என்றான்.

"தோசை"

“வெறும் தோசை மட்டும்தானா? ஸ்வீட் எதுவும் கிடையாதா?”

“ஸ்வீட் எதுக்கு?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? ட்ராஃபி வின் பண்ணியிருக்க? செலிபிரேட் பண்ண வேண்டாமா?”

“நானே வின் பண்ணுவேன், அதுக்கு, நானே ஸ்வீட் பண்ணி கொண்டாடனுமா? தேவையில்லை.”

“சே! சே! கண்டிப்பா செலிபிரேட் பண்ரோம்.. ஆனா, இன்னிக்கு இல்லை, நாளைக்கு, வெளில போய் சாப்பிடலாம்..”

“அப்பா, பிசா ஹட்பா..”

“பிசா ஹட் வேண்டாம், லிட்டில் இட்டாலி போகலாம்..”

“வாவ்! சூப்பர்!” இவளுக்கான கொண்டாட்டத்தை இவளுடைய விருப்பத்தை பற்றி கவலைப் படாமல் அவர்களே முடிவெடுத்தார்கள்.

மாலையில் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அலைபேசி அழைத்தது. அவளுடைய கல்லூரித் தோழி ரேவதி. பின்னர் அழைப்பதாக குறுந் செய்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்ததும் அழைத்தாள். 

“நாளைக்கு என் வீட்டில் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்‌ ரீ யூனியன் இருக்கு. நீயும் ஜாயின் பண்ணிக்கொள், லெவென் டூ த்ரீ வந்துவிடு” என்றாள்.

“என்ன திடீர்னு?”

“ஸந்தியா யூ.எஸ்ஸிலிருந்து வந்திருக்கா, கிரிஜாவும் சிங்கபூரிலிருந்து வரா.. எல்லாரையும் மீட் பண்ண முடியுமானு கேட்டாங்க..அதுதான்..”

“ஓகே..” எல்லோரையும் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? கல்லூரி படிப்பை முடித்து திருமணம் ஆகும்வரை எல்லோருடனும் தொடர்பு இருந்தது. அவரவர் திருமணம் ஆகிச் சென்றதும் விட்டுப்போன தொடர்பு, இப்போது முகநூல் மூலம் புதுபிக்கப்பட்டிருக்கிறது.

ரேவதியின் வீட்டிற்கு டூ வீலரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு சென்றால் மாலை நாலு மணிக்குள் திரும்பி விடலாம்.

- தொடரும் 

Saturday, July 21, 2018

தலை வாழை இலை போட்டு...

தலை வாழை இலை போட்டு...



ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். 

எங்கள் தாய் வழி பாட்டி இலையைப் பார்த்து அதாவது ஒருவர் சாப்பிடுவதை கவனித்து பரிமாற வேண்டும் என்பார். சமைப்பதை பரிமாறும் பொழுதுதான் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பு, வெறுப்பு தெரிய வரும். எங்கள் தாத்தாவிற்கு ரசத்தில் தக்காளி போட்டால் பிடிக்காதாம். அதனால் தக்காளி ரசம் வைத்தாலும் அவருக்கு பரிமாறும் பொழுது தக்காளி இலையில் விழாமல் கவனமாக பரிமாறுவாராம். அதே போல தாத்தாவிற்கு மணல் மணலாக உறைந்திருக்கும் நெய்யை விழுதாக இலையின் ஓரத்தில்தான் போட வேண்டுமாம். ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஊறுகாய் பரிமாறிவிட வேண்டும் என்பார்.

ஊறுகாய்கள் கூட சிலருக்கு விழுதாக வேண்டும், சிலருக்கு காய் வேண்டும். குறிப்பாக, மாகாளி கிழங்கில் சிலர் அதன் தண்ணீர் மட்டும் வீட்டுக் கொள்வார்கள். சிலருக்கு கிழக்கு மட்டும் வேண்டும். இதெல்லாம் நாம் பரிமாறினால்தான் தெரியும். 

நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது என் அம்மா ஒரு முறை அங்கு வந்திருந்தார்  அப்பொழுது, என் அண்ணாவின் (அண்ணாவும் மஸ்கட்டில்தான் இருந்தார்) சிநேகிதர் ஒருவர் சாப்பிட வந்திருந்தார். அவருக்கு மாகாளி கிழங்கு பரிமாறும் பொழுது," எனக்கு தண்ணீர் வேண்டாம், கிழங்கு மட்டும் போடுங்கள்" என்று என் அம்மாவிடம் கூறினார். அதன்படி செய்த என் அம்மா, அவர் மீண்டும் ஒரு முறை சாப்பிட வந்த பொழுது, அவர் சொல்லாமலேயே அவருக்கு மாகாளி கிழங்கு மட்டும் பரிமாறியதை மிகவும் வியந்து பாராட்டினார். ஏனென்றால் அவருக்கு சாப்பாட்டு விஷயத்தில் விருப்பு,வெறுப்பு மிகவும் அதிகம். 

பரிமாறுவதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. சாதாரணமாக நுனி இலையில் வலது கை ஓரத்தில் பாயசம் பரிமாறிவிட்டு, அதற்கு நேர் எதிரே பச்சடி, பின்னர் கூட்டு, கறி, என்று வரிசையாக பரிமாறி, இடது ஓரத்தில் ஊறுகாய், பப்படம் போன்றவைகளை பரிமாற வேண்டும். புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற  கலந்த சாதங்களையும் இலையின் மேற்புறத்தில்தான் பரிமாறுவார்கள்.  பருப்பை மேல் புறத்தில் வைக்க வேண்டுமா, கீழ் புறத்தில் வைக்க வேண்டுமா என்பது பலர் குழப்பிக் கொள்ளும் விஷயம். 

விஜயவாடாவில் வசித்து வந்த என் மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷத்திற்காக சென்றிருந்த நான் சாதம் போட்டவுடன் சாம்பாரை ஊற்றப் போனேன், உடனே அங்கிருந்த ஒருவர்,"இது தமிழ் நாடு இல்லை, ஆந்திரா, இங்கு பப்பு சாதம் சாப்பிட பிறகுதான் சாம்பார் சாதம் சாப்பிடுவோம்" என்றார். ஆந்திர ஹோட்டல்களில் கூட பருப்பு பொடி, துவையல் இல்லாமல் இருக்காது. 

தமிழ் நாட்டில் இனிப்போடுதான் விருந்தினை பரிமாற ஆரம்பிக்கிறோம், ஆனால் கர்நாடகாவில் முதலில் உப்பு வைத்து விட்டுதான் மற்ற பண்டங்களை பரிமாறுவார்கள். காரணம், உப்பிட்டவரை மறக்கக்கூடாது என்னும் கோட்பாடு.

தமிழ் நாட்டு அந்தணர்களில் வைணவர்களில் வடகலை, தென்கலை என்று இரு பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவினர் எல்லோரையும் போல முதலில் வெஞ்சனங்களை பரிமாறி கடைசியில் சாதம் வைப்பார்கள், மற்றொரு பிரிவினர் முதலில் ஒரு வாழைப்பழ துண்டம், சர்க்கரை பரிமாறி விட்டு, சாதத்தை வைத்து விடுவார்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவை வரும். 

பாலக்காட்டில் பிராமணர்கள் திருமணங்களில் முன்பெல்லாம் பாயசம் பரிமாறத் தொடங்கும் பொழுது யாராவது பாட ஆரம்பிப்பார்களாம், பாட்டு முடியும்வரை பாயசம்தான் பரிமாறிக் கொண்டிருப்பார்களாம். அவர் பாடி முடித்ததும் இன்னொருவர் பாட ஆரம்பித்து விட்டால், மீண்டும் பாயசம்தான்...   

பரிமாறும் பொழுது, பாத்திரத்திலிருந்து வழித்து போடக்கூடாது, கொஞ்சமாக இருந்தால் கூட கரண்டி சப்தம் வரக்கூடாது என்பதை எங்கள் வீட்டில் வலியுறுத்தி சொல்வார்கள். ஏனென்றால், அப்படி சப்தம் வந்தால் சாப்பிடுகிறவர்கள் குறைவாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுவார்கள் என்பார்கள். குறிப்பாக திவசம் போன்ற நாட்களில் பித்துருக்களாக வரித்திருக்கும் பிராமணர்களுக்கு பரிமாறும் பொழுது, கொஞ்சம் கூட ஒலி எழும்பக் கூடாது என்பார்கள். ஏனென்றால், பித்ருக்கள் மிகவும் நுண்ணியமானவர்களாம், சிறு சப்தம் எழுப்பினால் கூட அதிர்ந்து, அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவார்களாம்.

இனிப்போடு துவங்குவது நம் நாட்டுப் பழக்கம் என்றால், டெஸெர்ட் என்று இனிப்போடு விருந்தை முடிப்பது மேலை நாட்டு பழக்கம். 

நம் நாட்டில் விருந்து பரிமாறுவதற்கு ஒரு முறை இருப்பது போல, மேல் நாட்டிலும் விருந்து பரிமாறுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அவர்கள் சூப்பில் துவங்கி, ஸ்டார்ட்டர், பிரதான உணவு, என்று தொடர்ந்து, டெஸெர்ட்(ஐஸ் க்ரீம், அல்லது புட்டிங் அல்லது கஸ்ட்டர்ட்) என்று முடிப்பார்கள். நாம் சாப்பாட்டிற்க்கு பிறகு தாம்பூலம் போட்டுக் கொள்வது போல் அவர்கள் ப்ளாக் டீ அல்லது ப்ளாக்காபி அருந்துவார்கள். 

இப்போது நம் ஊரில் திருமணம் போன்ற விருந்துகளில், நம் நாட்டு முறையில் இனிப்போடு ஆரம்பித்து, மேல் நாட்டுப்பாணியில் ஐஸ் க்ரீமோடு முடிக்கிறோம்.  


Thursday, July 19, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே!

நெஞ்சு பொறுக்குதில்லையே!



இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில்லை. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹாசினி என்னும் குழந்தை ஒரு  அரக்கனால் அநியாயமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இப்போது ஒரு பதினோரு  வயது குழந்தை அதுவும் காது கேளாத  வாய் பேச முடியாத குழந்தை, இருபத்திரெண்டு மிருகங்களால் இல்லை அப்படி கூறி மிருகங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை. இருபத்திரெண்டு பேர்களால் ஆறு 
மாதங்களாக போதை மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை கொடுத்தும், மிரட்டியும், வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். அதை காட்டியே மிரட்டியிருக்கிறார்கள். 

என்ன நடக்கிறது  இங்கே? ஒரு பெண்ணுக்கு பிறந்து, பெண்ணோடு வாழ்ந்து, பெண்ணைப்பெற்றும் பெண்களை போகப் பொருளாகத்தான்  நினைக்க முடிகிறது என்றால் எங்கே கோளாறு? 

பழங்காலம் மாதிரி இம்மாதிரி பாதகங்களை செய்தால் இறந்தபிறகு நரகத்தில் எம கிங்கரர்கள் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்கள் என்றால் ஒரு வேளை பயந்து இம்மாதிரி பாதகங்களை செய்யாமல் இருப்பார்களோ?

ஒரு இளம் பெண் நகைகளை அணிந்து கொண்டு  நடு இரவில் தனியாக  நடந்து செல்ல முடிகிற பொழுதுதான் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூற முடியும் என்று மஹாத்மா கூறினார். ஆனால் இன்று பெண்களுக்கு தெருவில், பள்ளியில், ரயில் நிலையங்களில், ஏன் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை. 

இந்த சம்பவத்தில் ஒரே ஒரு ஆறுதல் வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளுக்காக ஜாமீன் மனு போட மாட்டோம் என்று அறிவித்திருப்பதுதான். வழக்கு இழுத்துக் கொண்டே போகாமல் சீக்கிரம் விசாரணை முடிந்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மாறிய காலம், மாறாத கோலம்


மாறிய காலம், மாறாத கோலம்


சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. படிப்பில் சிறந்து விளங்கியதால் ஆசிரியர்களுக்கு பிடித்தமான மாணவன். முதல் நாள் தலை வலி, காய்ச்சல் வரும் போலிருகிறது என்றான். ஆனால் மதியதிற்கு மேல் விளையாட சென்று விட்டான். இன்றும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றதும் அவன் அம்மா கமலத்திற்கு கோபம் வந்தது.

“நீ நல்லா படிக்கிறியேனு சந்தோஷப் பட்டது தப்பு.. என்னாச்சு உனக்கு? ஏன் இஸ்கோலு போக மாட்டேங்கற?

“எனக்கு டவுசர், சட்டை, வாங்கி கொடு, நான் ஸ்கூல் போறேன்..”

“டவுசர், சட்டையா? இப்போ என்னடா டவுசரும்? சட்டையும்? நான் எங்க போக?”

“அப்போ நானும் ஸ்கூல் போக முடியாது.”

“தீவாளிக்கு வாங்கித் தரேன்.”

“நானும் தீவாளிக்கு பொறவு ஸ்கூல் போரேன்..”

மகன் பதிலுக்கு பதில் பேசியது கமலத்திற்கு எரிச்சல் ஊட்டியது. எல்லாத்துக்கும் பதில் சொல்றியா? என்று கீழே கிடந்த விசிறியை கையில் எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தாள். 
  
அம்மாவிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்த சுகுமார் வாசல்படியில் தடுக்கி விழுந்தான், கமலம் அவனை விசிறி காம்பால் விளாசத் தொடங்க, எழுந்து ஓடியவன் பக்கத்து குடிசை ஆயா மீது மோதிக் கொண்டான். சுகுமாரை தழுவிக் கொண்ட ஆயா,

“தா, கமலம், இன்னாத்துக்கு புள்ளைய அடிக்கிற?”

“ஆங்.. தெனம் சோறு துங்கரதே பெரும் பாடா இருக்கு, ஏதோ ஒரு வேளை மதிய உணவு பள்ளிகூடத்துல போடராங்களேனு அனுப்புனா தொரை புது டவுசர் இருந்தாதான் இஸ்கோலுக்கு போவாராம்..”

“ஏங்கண்ணு, அப்படியா சொல்ற…? பரிவுடன் ஆயா கேட்டவுடன், சுகுமார், ’’இல்ல ஆயா, என்னோட டவுசர், சட்டை எல்லாம் கிழிஞ்சு கெடக்கு, அதை போட்டுக்கிட்டு போனா பசங்க கேலி பண்றாங்க..” சொல்லும் போதே அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“அழுவாத கண்ணு, அம்மா வாங்கி கொடுக்கும். அதாரு? உன்னைய கேலி பண்றது? நான் உங்க பள்ளிகூடத்துக்கு வந்து வாத்தியாரண்ட சொல்றேன்..”

“ஐயோ ஆயா, அதெல்லாம் வாணாம்..”

சுகுமாரை சமாதானப் படுத்திய ஆயா, அவன் தாயாரிடம், “இந்தா கமலம், கொழந்தைக்கு டவுசர் வாங்கி கொடு, கிழிசலை போட்டுக்கிட்டு அது எப்புடி பள்ளிக்கூடம் போவும்?”

ஆயா சொன்ன பிறகு மகனுடைய ட்ரௌசரை எடுத்துப் பார்த்த கமலத்திற்கு அது அணிந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமாக கிழிந்திருப்பது தெரிந்தது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் மகனை அடித்து விட்டோமே என்று துக்கம் பொங்கியது.

மறுநாள் தான் வேலை செய்யும் வீட்டில் அட்வான்ஸ் வாங்கி அம்மா அவனுக்கு சீருடை துணி வாங்கி தைக்கக் கொடுத்தாள். அது கிடைப்-பதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகின. புது சீருடை அணிந்து கொண்டு பள்ளி சென்ற போது வகுப்பாசிரியர், “வாங்க சார்,  எங்க நாலு நாளா ஆள காணோம்..? மாப்பிள்ளை மாதிரி புதுசெல்லாம் பொட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..” என்று கிண்டலாக கேட்டதும், ஒரு பையன், “ஸார், அவனோட டவுசர் ஒரே கிழிசல் சார், அதான் அவன் வரல.. இப்பொ புதுசு தெச்சு போட்டுக்கிட்டு வந்திருக்கான்..” என்று கூற, சிலர் சிரித்தார்கள், சுகுமாருக்கு அவமானமாக இருந்தது.

“டேய்! உங்கிட்டயாடா கேட்டேன்?” என்று அந்த அதிகப்ரசங்கி மாணவனை அதட்டி விட்டு, வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

சுகுமார் மேல் வகுப்புக்குச் சென்ற போது அதுவரை ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருந்த அவன் தந்தை ஆட்டோ ஒட்ட ஆரம்பித்தார். 

வாடிக்கையாளராக இருந்த வங்கி மேலாளர் ஒருவர் கடன் உதவி செய்ய, சொந்தமாக ஆட்டோ வாங்கியதோடு, ஸ்கூல் சவாரிகளும் கிடைக்க, நிரந்தர வருமானம் கிடைத்தது. வறுமை முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை, என்றாலும் கிழிசலை கட்டிக் கொள்ளும் அவலம் இல்லை.
அவன் பி.யூ.சி. படித்த பொழுது அவன் அத்தை வீட்டில் புதுமனை புகு விழா என்று அழைத்தார்கள். அவனிடமிருந்த உடைகளில் சிறந்ததை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

“அடடா! சுகுமாரா? பெரிய பையனாயிட்ட?” வாஞ்சையொடு வரவேற்ற அத்தை, சாப்பிட பலகாரம் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற போது தன் மகனிடம், “ஒன்னோட நல்ல பேண்ட் ஏதாவது சுகுமாருக்கு கொடு” என்று சொல்வது கேட்டது.

“ஏம்மா?”

“அவன் ஏதொ வெளுத்துப்போன பேண்டை மாட்டிக்கிட்டு வந்திருக்கான். நமக்குதான் கௌரவ குரைச்சல்”

சுகுமார், இனிமேல் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

காலம் மாறியது. சுகுமாரின் படிப்பு அவனுக்கு நல்ல வேலையை பெற்றுத் தந்தது. முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, தனக்கும், தம்பிக்கும் டீ ஷர்ட் என்று வாங்கினான். பிறகு ஒவ்வொரு மாதமும் விதம் விதமாக உடைகள், தான் சிறு வயதில் ஆசைப்பட்டு வாங்கிக் கொள்ள முடியாததை எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வாங்கிக் கொண்டான்.

நல்ல இடத்தில் திருமணமும் நடந்தது. பானை பிடித்தவள் பாக்கியமோ என்னவோ வேலையை துறந்து விட்டு வியாபாரம் தொடங்கினான், அது சிகரத்தை தொட, சுகுமார் இன்று நகரில் ஒரு பெரும் புள்ளி. தோட்டம், நீச்சல் குளத்தோடு பங்களா, ஒரு இன்னொவா, ஒரு ஹோண்டா சிட்டி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று நிறைவான வாழ்க்கைதான். ஆனால் அவருடைய குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடைகள்தான் அவருக்கு வியப்பூட்டுகிறது.

மகள் அணிந்து கொள்ளும் சட்டையில் தோள்பட்டையில் கிழிந்தது போல ஒரு அமைப்பு. மகளும் சரி, மகன்களும் சரி எப்போதும் சாயம் போய் வெளுத்துப் போனது போல ஒரு ஜீன்ஸ்தான். அதிலும் அங்கங்கே கிழிசல்.

தான் எதிலிருந்து விடுபட நினைத்தோமோ அதை தன் குழந்தைகள் விரும்பி அணிவது அவருக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. 

Friday, July 13, 2018

Indi Special Campaign - TVS Jupiter factory visit

Indi Special Campaign - TVS Jupiter factory visit 


சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம். எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் சமீபத்தில் வாய்த்தது. 

'இண்டி ஸ்பெஷல் டிவிஎஸ் ஜூபிடர் காம்பைன்' இல் கலந்து கொள்ள விரும்பினால், பதிவு செய்து கொள்ளுங்கள் என்னும் அறிவிப்பை  பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாளன்றுதான் பார்த்தேன். எனவே கடைசி தேதியின் கடைசி ஐந்தாவது நிமிடம் பதிவு செய்தேன். 

அவர்கள் என்னை தொடர்பு கொள்ள ஒரு முறை அழைத்த பொழுது, வேலையாக இருந்த நான் வருவதற்குள் அழைப்பு நின்று விட்டது. புதிய எண்ணாக இருந்ததால், நான் மீண்டும் அழைக்கவில்லை.  அன்று மாலை மீண்டும் அழைத்து, இண்டி ஸ்பெஷல் டி.வி.எஸ். ஜூபிடர் காம்பியென்இல் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், ஓசூரில்  நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஏதுவாக செய்யப் பட்டிருக்கும் பயண ஏற்பாடுகள் குறித்தும் மெயில் அனுப்பியிருப்பதாக கூறினார்கள். 

ஜூலை பத்தாம் தேதி காலை 9:30க்கு ஓசூரில் இருக்கும் டி.வி.எஸ் தொழிற்சாலையில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்பது ஏற்பாடு.  ஆனால், விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த வெளியூர் ப்ளாகர்களை அழைத்துக் கொண்டு வந்த வண்டி ஹொரமாவு சிக்னல் வருவதற்கே 8:30 ஆகி விட்டது.  பெங்களூரின் மோசமான போக்குவரத்து நெரிசலால் நாங்கள் குறித்த நேரத்திற்கு ஓசூரை அடைய முடியவில்லை. 

தாமதமாக சென்றாலும் அதை பொருட்படுத்தாமல் எங்களை வரவேற்று, உபசரித்து டி.வி.எஸ். தொழிற்சாலையில் முதல் பிளாண்ட்டை சுற்றி காண்பித்தார்கள். அங்கு ஸ்கூட்டர், மொபெட், பைக் ஆகிய மூன்றும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஒரு நாளைக்கு 4500 வண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 6000 வண்டிகள் வரை தயாரிக்கும் வசதி உண்டு.

முதல் கட்ட அசெம்பிளி முழுக்க முழுக்க ரோபோக்களால் இயக்கப் படுகிறது. நான்கு வண்டிகளுக்கு ஒரு ரோபோ என்னும் விகிதாசாரத்தில் இயங்கும் இங்கு மேற்பார்வையாளர் யாரும் தேவை இல்லையாம். 

எஞ்சின் அசெம்பிளியில் இரண்டடுக்கு பாதுகாப்பு.  அங்கு இரண்டு கண்ணாடி கதவுகள் உள்ளன.   முதல் பகுதியில் அஸெம்பிள் செய்யப்பட்ட இன்ஜின் பரிசோதிக்கப்படுகிறது. அதைத் தாண்டி உள்ள பகுதியில் ஒரு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்கு இணையான சுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு பணிபுரிபவர்கள் காலணிக்கு மேல் ஒரு உறை அணிந்து கொண்டுதான் பணியாற்றுகிறார்கள். சிறிதளவு தூசி கூட எஞ்ஜினின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு.  இங்கு இன்னொரு சிறப்பு, இங்கு பணியாற்றுபவர்களில் 90% பெண்கள். தங்கள் தொழிலாளர்களில் 33% பெண்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் நிர்வாகம், இங்கிருந்து ஆரம்பித்து மெல்ல மெல்ல கடினமான வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த எண்ணியுள்ளது.  

அதற்கடுத்து நாங்கள் பார்த்தது வெஹிகிள் அசெம்பிளி. அதாவது ஒரு வண்டி முழுமையாக உருக் கொள்வது இங்குதான். ஒரு கன்வேயர் பெல்ட்டில் ML1, ML2 தனித்தனி பிரிவுகள். ஒவ்வொன்றிலும் இரண்டு தொழிலாளர்கள். தாங்கள் பொருத்த வேண்டிய வண்டியின் பாகங்களை எடுத்துக்  கொண்டு அதை 24  வினாடிகளுக்குள் பொருத்தி விட வேண்டும். அதை மற்றொருவர் சரி பார்த்து அடுத்த பகுதிக்கு அனுப்பி விட வேண்டும். மிக மிக விரைவாக செயல்பட வேண்டிய முக்கியமான பகுதியாக இது விளங்குவதால் இங்கு பணிபுரிபவர்களுக்கு இதன் எல்லா பகுதிகளிலும் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு நிமிடத்தில் இரண்டு வண்டிகள் பொருத்தப்பட்டு விடுகின்றன. 

வண்டிகளுக்கு வர்ணம் பூசும் பகுதியில் பெரும்பான்மை வர்ணப்பூச்சை ரோபோ செய்து விடுகிறது. விடுபட்டு போன பகுதிகளை மட்டும் தொழிலாளர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு பெயிண்ட் வாசனையால் உடல் நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாதம் ஒரு முறை உடல் நல பரிசோதனை செய்யப்படுகிறது. 

இப்போதெல்லாம் இரு சக்கர வாகனங்களில் மெட்டல், ஃ பாய்பர் ஆகிய இரண்டும் பயன்படுத்துகிறார்கள். வர்ணம் பூசப்பட்ட வண்டியின் பாகங்களை  பேக்(bake) பண்ண வேண்டுமாம். மற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மெட்டல் பகுதிகளை தனியாகவும், ஃ பாய்பர் பகுதிகளை தனியாகவும் பேக் செய்வார்களாம். ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு வெப்ப நிலையில் பேக் பண்ண வேண்டும். ஆனால் இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் பேக் பண்ணும் வசதி இருக்கிறதாம்.    

ஒவ்வொன்றையும் அவர்கள் விளக்கிய பொழுது பிரமிப்பாக இருந்தது. ஒரு அரசாங்கம் நடத்துவது போல ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து செயல்படுத்தும் நிர்வாகத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

கிட்டத்தட்ட 425 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அந்த வளாகம் பசுமையாகவும், அழகாகவும், மிக மிக சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது.  வளாகத்திற்குள்ளேயே தொழிலாளர்களுக்காக சலுகை விலையில் உணவு வழங்கும் காண்டீன் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. அங்கு வீட்டில் தயாரித்ததைப் போன்ற உணவு. அதைத் தவிர ஒரு சிறு மருத்துவமனையும் இருக்கிறது.  மற்றொரு அழகிய விஷயம் இதன் உள்ளே இருக்கும் பறவைகள் சரணாலயம்!

இதற்குப் பிறகு எங்களை டி.வி.எஸ். ஜூபிடரை அவர்களுடைய பயணப் பாதையில் ஓட்டிப்பார்க்க அனுமதித்தார்கள். வாவ்! அது ஒரு சூப்பர் அனுபவம். என் வீட்டில் இருப்பது டி.வி.எஸ். ஜூபிடர்தான் என்றாலும், மேடு பள்ளமான சாலைகளில் ஓட்டுவதற்கும் நன்கு பராமரிக்கப்படும் சாலையில் ஓட்டுவதற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களை கூறலாம்.

ஓட்டிப்பார்க்க தயார் 


ஓட்டப் பாதையில் 




































சரி, இனி டி.வி.எஸ். ஜூபிடரின் பயணத்தையும், சிறப்பையும் பார்க்கலாமா?




மொபெட், ஸ்கூட்டி போன்ற சிறிய வண்டிகளை தயாரித்துக் கொண்டிருந்த டி.வி.எஸ். நிறுவனம் மத்தியதர வர்க்கத்தினருக்காக, ஒரு குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்த பொழுது நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டு,  2013 ஆண்டு முதல் டி.வி.எஸ்.ஜூபிட்டரை தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். முதலாம் ஆண்டு அவர்கள் தயாரித்தது 340 ஸ்கூட்டர்கள் மட்டுமே. இன்றோ 2.5மில்லியன் பேர்கள் இதை உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்த ஆண்டு மிகச் சிறந்த விருதான ஜே.டி. பவர் விருது டி.வி.எஸ். ஜூபிடருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது நம் நாட்டில் இரு சக்கர வாகனங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஸ்கூட்டர், அதுவும் மத்தியதர வர்க்கத்தினரை மனதில் வைத்துக் கொண்டு,  அவர்களின் எல்லா தேவைகளுக்கும் ஈடு கொடுப்பதாய், அதாவது ஓர் சிறு நகரத்தில் வசிக்கும் ஒரு மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த குடும்பஸ்தன் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பான்? குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட வேண்டும், மனைவியை ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும், குடும்பத்தோடு சினிமாவுக்கும், கோவிலுக்கும் செல்ல வேண்டும். அதே நேரத்தில் இளைஞர்களை போல அடிக்கடி வாகனத்தை மாற்ற விரும்ப மாட்டான். தான் செலவழிக்கும் பணத்திற்கு தகுதியானதாக இருக்க வேண்டும்(Price worthy). இவை அத்தனையையும் விட, இந்த வண்டியை வைத்திருப்பது தனக்கு ஒரு அந்தஸ்தை அளிப்பதாக உணர வேண்டும். 

இந்த எதிர்பார்ப்புகளை STRONG, STURDY, STYLE, STATUS என்று வகை படுத்தி இந்த எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் டி.வி.எஸ். ஜூபிட்டர் வண்டி தயாரிக்கப் பட்டிருப்பதுதான் அதன் சிறப்பு. மேலும் ஆரம்பத்தில் ஆண்களை மட்டும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இப்போது பெண்களும் உபயோகிக்கலாம் என்னும் விதமாகவே இது தயாரிக்கப்படுகிறது. 

தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வண்டிகளில் கிடைக்காத நலம், சுகம், திருப்தி இதில் அதிகமாக கிடைக்க வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டு 'அதிகத்தின் பயன்(ZYDA KA FAYDA)' என்று விளம்பரம் மட்டும் செய்யவில்லை, செயல் படுத்தியும் காட்டுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சிறிய மாற்றமாவது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.
  
சந்தையில் இருக்கும் மற்ற எல்லா இரு சக்கர வாகனங்களை விட அதிக மைலேஜ்(ஒரு லிட்டருக்கு 62 கிலோ மீட்டர்), அகலமான கால் வைக்கும் இடம். முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக். தாராளமான சீட். பின்னால் உட்காருபவருக்கு வசதியாக பேக் ரெஸ்ட்.  சீட்டுக்கு அடியில் விஸ்தாரமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ். பெட்ரோல் போடுவதற்காக வண்டியை விட்டு இறங்கத் தேவையில்லாமல் பின்னால் வழியில் பெட்ரோல் டேங்க் மூடி. எல்லாவற்றையும் விட பெண்களை கவரும் விதம் எட்டு வசீகர நிறங்களில்.  வருகிறது.

இவை எல்லாம் இருந்தால் போதுமா?  போட்டிகள் மிகுந்த இந்த கால கட்டத்தில் சந்தை படுத்த ஒரு நல்ல பிராண்ட் அம்பாசிடரும் தேவை இல்லையா? 'பிக் பி' ஐ விட ஒரு சிறந்த பிராண்ட் அம்பாசிடர் இருக்க முடியுமா? ஆம் அமிதாப் பச்சந்தான் டி.வி.எஸ். ஜூபிடரின் பிராண்ட் அம்பாசிடர்.  பிறகு என்ன? ரும்மம்ம்!







Sunday, July 8, 2018

வாகன விசேஷங்கள்


வாகன விசேஷங்கள்


இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் உண்டு. கோவில்களில் அந்தந்த கடவுளுக்கான வாகனமும் ஒவ்வொரு சன்னிதியிலும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். அவை பெரும்பாலும் ஸ்வாமியை நோக்கியே நிறுவப் பட்டிருக்கும். மேலும் அந்த சன்னிதியில் இருக்கும் கடவுளர் எந்த திருக்கோலத்தில் இருக்கிறார்களோ, அதற்கேற்றார் போலத்தான் வாகனங்கள் இருக்கும். 


ஸ்ரீரெங்கத்தில் பெருமாள் அரிதுயில் கொண்டிருக்கிறார். அவர் எப்போது கூப்பிட்டாலும் புறப்பட தயாராக கருடன் காத்திருப்பதால் மற்ற கோவில்களைப் போல நின்ற கோலத்திலோ, வீராசனத்திலோ இல்லாமல் வித்தியாசமாக அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.   
சமீபத்தில் கீதா அக்கா அவர்கள் ‘கருடா சௌக்கியமா?’ என்னும் பதிவில் இதை குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி அந்தந்த கோவிலின் தல வரலாற்றுக்கேற்றபடி வாகனங்கள் இருக்கும் நிலை மாறுகிறது. அப்படி வித்தியாசமாக வாகனங்கள் அமைந்திருக்கும் சில கோவில்களை பார்க்கலாமா?

சாதாரணமாக முருகனுக்கு வாகனமாக மயில்தான் எல்லா கோவில்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் எங்கெல்லாம் தேவயானை தனி சன்னிதியில் இருக்கிறாளோ அங்கெல்லாம் யானைதான் வாகனமாக முருகன் சன்னிதியின் முன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காரணம், இந்திரன் தன் மகளான தேவயானையை முருகனுக்கு மணம் முடித்து கொடுத்த பொழுது, தன்னுடைய யானையான ஐராவதத்தையும் அனுப்பி வைத்தாராம்(காரோடு பெண்ணை அனுப்பி வைப்பதை போல). திருத்தணியில் அந்த யானை முருகனை நோக்கி இராமல், தன் எஜமான் தேவேந்திரன் எப்பொழுது வருவார்? என்று எதிர்பார்த்தபடி வாயிலை நோக்கி இருக்கும்.


எங்கள் சம்பந்தியின் குல தெய்வமான, மாயவரத்திற்கு அருகில் இருக்கும் பெரம்பூர் என்னும் ஊரில் இருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தேவயானைக்கு தனி சன்னிதி உண்டு. எனவே,அங்கு கோவில் உள்ளே யானை வாகனமும், பிரதான வாயிலில் மயில் வாகனமும் காணப்படும். 


சென்னையில் இருக்கும் திருமுல்லைவாயிலில் உறையும் மாசிலாமணீஸ்வரர் குறும்பர்களை போரில் வெல்ல தொண்டைமானுக்கு உதவுவதற்காக நந்தியம்பெருமானை அனுப்பி வைத்தாராம். அதனால் அங்கு சிவனுக்கு எதிரே இருக்கும் நந்தியும் வாயிலை நோக்கிதான் இருக்கும்.


திருப்புங்கூரில் நந்தனாருக்காக நந்தியை விலகியிருக்கச் சொன்ன சிவ பெருமான், பட்டீஸ்வரத்தில், ஞானசம்பந்தர், பக்தர்கள் புடை சூழ தாளமிட்டு பாடிக்கொண்டே வரும் அழகை கண்டு ரசிக்க விரும்பி, அந்த காட்சியை மறைக்காமல் நந்தியை கொஞ்சம் விலகச் சொன்னாராம். அதனால் அங்கும் நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும்.

சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் சிவ லிங்கம், நந்தி, பலி பீடம், கொடி மரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் வக்ர காளியம்மன் கோவில் என்று பிரபலமாக அறியப்படும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெயருக்கு ஏற்றார் போல் எல்லாமே வக்கிரமாக, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.

காசிக்கு இணையான தலமான ஸ்ரீவாஞ்சியதில் இரண்டு நந்திகள் உண்டு.
ஒரு முறை மஹாவிஷ்ணுவிற்கும், ஸ்ரீதேவிக்கும் சிறு ஊடல். கணவனிடம் கோபித்துக் கொண்ட மஹாலக்ஷ்மி தன் சகோதரனாகிய சிவபெருமானைத் தேடி வந்து விடுகிறாள். பிரிவாற்றாமையில் வாடிய மஹாவிஷ்ணு, தன் மனைவியோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டி *ஸ்ரீவாஞ்சியம் வந்து சிவனைக் குறித்து தவம் இயற்றுகிறார். அதுவும் சிவனுக்கு நேரே அமராமல், அவருக்கு பின்புறம் அமர்ந்து தவம் செய்கிறார்(attention seeking?). மஹவிஷ்ணுவிற்கு அருளும் பொருட்டு பின்புறம் சென்று விடுகிறார் சிவ பெருமான். அதனால், ப்ரகாரத்தின் பின்புறம் இன்னொரு நந்தி உண்டு. முன்புறம் இருக்கும் நந்தி, பின்புறம் சென்றிருக்கும் சிவபெருமான் வருகிறாரா என்று எதிர்பார்த்தபடி முகத்தை பின்னால் திருப்பிக்கொண்டிருக்கும். 

*ஸ்ரீ ஆகிய மஹாலக்ஷ்மி மீது வாஞ்சையோடு அதாவது பிரியத்தோடு மஹாவிஷ்ணு இங்கு வந்ததால்தான் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என அழைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுவது நல்லது.