கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, June 30, 2018
Sunday, June 24, 2018
காணாமல் போன தோடு
காணாமல்
போன தோடு
நேற்று காலை குளிக்கும்
பொழுதுதான் தெரிந்தது, இடது காதில் தோடு இல்லையென்பது. திருகு மட்டும் காதில் ஒட்டிக்
கொண்டிருந்தது. எங்கே விழுந்ததோ தெரியவில்லையே..? பாத் ரூம் முழுவதும் பார்த்து விட்டேன்,
ம்ஹூம், கண்ணில் படவேயில்லை.
வெளியில் வந்து
உடையணிந்து கொண்டு வீடு முழுவதும் தேடிப் பார்த்தேன். எங்குமே கண்ணில் படவில்லை.
கடவுளே! அரைக்காசு
அம்மா!(ஏற்கனவே அரைக்காசு அம்மனுக்கு ஓவர் டியூ), மதர்! என்றெல்லாம் புலம்பிக் கொண்டே
நோட்டம் விட்டேன். கண்ணில் பட்டால்தானே?
சென்ற வாரம் தலைக்கு
குளித்த சமயம், தோடு, மூக்குத்தியை அலம்பி விட்டு மீண்டும் அணிந்து கொண்ட பொழுது திருகு
மாறிவிட்டது போலும். இடது காது தோடு மிகவும் லூசாக இருந்தது. கழட்டி மாற்றி போட்டுக்
கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏனோ ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன்.
முன்பே மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எப்போதும் போல் பட்ட பின்பு வரும் ஞானம் இப்போதும்
வந்தது.
குட்டித் தூக்கம்
போட்டுக்கொண்டிருந்த கணவரை எழுப்பி, “என் காது தோட்டை காணவில்லை,உங்கள் கண்ணில் படுகிறதா
பாருங்கள், என்றேன்.
“அது வைரமா?”
“இல்லை ஜெர்கான்”
“எங்கே போட்ட?”
மிக்ஸி ரிப்பேர்
என்று சர்வீஸ் செய்ய எடுத்துக்கொண்டு போனால், “மிக்ஸியை உடைத்திருக்கிறீர்கள் மேடம்”
என்று நாம் ஏதோ வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்தது போல பேசும் சர்வீஸ் சென்டர் ஆளைப்
போல கேட்டார்.
"ம்ம் எனக்கு போரடித்தது, அதனால் என்னுடைய தோட்டை எங்கேயோ எறிந்து விட்டு தேடுகிறேன்.."
"தொலைப்பதையும் தொலைத்து விட்டு, இந்த மாதிரி பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை."
பதில் பேசி சண்டை வளர்ப்பதை விட, எனக்கு தோடு முக்கியம் என்பதால் வாயை மூடிக் கொண்டேன்.
“எங்க போய் விடும்?
இங்கதான் இருக்கும், வேலைக்காரி வந்து பெருக்கும் பொழுது கிடைத்து விடும். சாதாரணமாக
திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”
அதுதான் எனக்கும்
ஆச்சர்யமாக இருந்தது தோடு விழுந்தும் எப்படி திருகாணி விழாமல் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது
என்று. ஒரு வேளை முன்பு கட்டிக் கொண்டிருந்த புடவையில் ஓட்டிக் கொண்டிருக்குமோ? க்ளோசசெட்டில்
விழுந்து நான் ஃப்லஷ் செய்திருந்தால்…? ஒன்றும் செய்ய முடியாது.
படுக்கையில் விழுந்திருந்து
நான் கவனிக்காமல் விட்டிருப்பபேனோ? யோசித்துக் கொண்டே படுக்கையை பார்க்கிறேன்… அதில்
தலயணைக்கருகில் கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறது காணாமல் போன என் தோடு.
அப்படியென்றால்
காலையில் எழுந்திருந்த பொழுதே என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையிலிருந்து
என் கனவரோ, மருமகளோ என் ஒரு காதில் தோடு இல்லை என்பதை கவனிக்கவே இல்லை என்பது கவனிக்கப்பட
வேண்டிய விஷயம்.
Tuesday, June 19, 2018
படித்ததில் வருந்த வைத்தது
படித்ததில்
வருந்த வைத்தது
ஃபேஸ் புக், ட்விட்டர்,
வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத
உண்மை. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களை மீட்பது போல மேற்படி விஷயங்களுக்கு அடிமையானவர்களை
மீட்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலயங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கேட்ஜெட்ஸ்
போதை உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு செல்லுமா அதுவும் இரண்டு வயது குழந்தையை அனாதையாக
விட்டு விட்டுச் செல்லும் அளவிற்கா?
பெங்களூரில் வசித்து
வந்த இளம் கணவன் மனைவி, அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை. மனைவி, வீட்டையும்,
குழந்தையயும் கூட சரியாக கவனிக்காமல் எப்போதும் வாட்சாப், ட்விட்டர், ஃபேஸ் புக் என்று
மூழ்கி இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை, சண்டை என்று நடந்திருக்கிறது.
சம்பவம் நடந்ததற்கு முதல் நாள், கணவன், தன் மனைவியின் சகோதரனை தொலை பேசியில் அழைத்து,
”உங்கள் சகோதரியோடு என்னால் இனிமேல் வாழ முடியாது, அவளை உங்கள் வீட்டிற்கு அழைத்துச்
செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் மைத்துனன், தான் தன் சகோதரியோடு
பேசி சரி செய்வதாக சொல்லியிருக்கிறார். மறு நாள், அந்தப் பெண், தன் சகோதரனுக்கு ஃபோன்
செய்து, தன் கணவருக்கும், தனக்குமிடையே உள்ள கருத்து வேற்றுமையைப் பற்றி கூறியிருக்கிறார்.
அவளிடம், தான் ஞாயிறன்று பெங்களூர் வருவேன் என்றும், அப்போது நேரில் பேசிக் கொள்ளலாம்
என்றும் சமாதானம் செய்திருகிறார்.
ஞாயிரன்று காலை சகோதரியின் வீட்டை அடைந்து கதவை தட்டியிருகிறார்,
கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவருக்கு
அதிர்ச்சி. இரண்டு வயது குழந்தை ஹாலில் உட்கார்ந்திருக்க, கணவன், மனைவி இருவரும் இரண்டு
படுக்கை அறைகளில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருந்தனராம். முதல் நாள் இரவு அவர்கள்
இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட சத்தம் கேட்டதாக அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளார்கள்.
தன் குழந்தையை
அனாதையாக்கிவிட்டுச் செல்ல அந்த தாய்க்கு எப்படி மனம் வந்தது?
இது இப்படி என்றால்,
சிரிப்பதா? அழுவதா என்று தெரியாமல் திகைக்க வைத்த செய்தி ஒன்று இதுவும் இளம் கணவன் மனைவி
சம்பந்தப் பட்டதுதான். மனம் ஒன்று பட்டதால், மதத்தை பெரிதாக நினைக்காமல் இணைந்த காதல்
ஜோடி அது. இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது பெயர் வைப்பதில் பிரச்சனை வெடித்திருக்கிறது.
அந்தப் பெண்ணின்
மத வழக்கப்படி 28ம் நாள், ஜோஹன் மணி சச்சின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால்
அப்பாவுக்கோ அபினவ் சச்சின் என்று பெயர் வைக்க ஆசை. இருவரும் விட்டு கொடுக்க மறுத்து,
கோர்ட் வரை சென்று விட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் சொன்ன பெயரையும்
இணைத்து ஜோஹன் சச்சின் என்று பெயரிட்டு இருவர் சம்மதத்தையும் பெற்று(ரகசியமாக தலையில்
அடித்துக் கொண்டிருபாராயிருக்கும்) அந்தப் பெயரையே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தனராம்.
இதை முன்பே செய்திருக்கலாமே!
Saturday, June 16, 2018
பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க
பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச்சு ஒரு கலை. அந்தக் கலையை உபாசிப்பவர்கள் இந்தியர்களாகிய நாம்.
ஜப்பானியர்கள் ஆங்கில இலக்கணம் படிக்கும் பொழுது,
ஐ ஒர்க், யூ ஒர்க், ஹி ஒர்க்ஸ் என்றும்
ஃ பிரஞ்ச் காரர்கள் ஐ பிளே ,யூ பிளே, ஹி பிளேஸ் என்றும்
இந்தியர்கள் ஐ டாக், யூ டாக், ஹி டாக்ஸ் என்றும் படிப்பார்கள் என்பது முன்பு பிரபலமாக இருந்த ஒரு ஜோக். ஆனால் அந்த ஜோக் இப்போது உண்மையாகி விட்டது. நாம் பஸ்ஸில் பேசுகிறோம், புகை வண்டியில் பேசுகிறோம், நடக்கும் பொழுது பேசுகிறோம், தொலை கட்சியில் பேசுகிறோம், எஃப்.எம். ரேடியோவில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறோம்.
ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். அன்று கலைஞர் டி.வி.யில் முன்பு எப்போதோ கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா ஒன்றை ஒளி பரப்பினார்கள். அதில் காணொளி காட்சியாக, கலைஞர் எழுதிய நீ..ண் ..ட .. வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு சிவாஜி பேசிய காட்சி காட்டப்பட்டது(எந்த படம் என்பதை நான் கவனிக்கவில்லை).
சிவாஜி பேசுவதற்கென்ன? பிரமாதமாக பேசினார். அதைப் பார்த்த பிரபு, உணர்ச்சிவசப்பட்டு, ஓடிப்போய் கலைஞர் கையை பிடித்து குலுக்கி விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து கண்களை துடைத்துக் கொண்டார். எல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அந்த காட்சி அரசவையில் அரசனை நோக்கி வேற்று நாட்டு அரசனோ, வேறு யாரோ பேசுவதைப் போன்ற காட்சி. ஏனென்றால் டயலாக் பேசிய சிவாஜியும் அரச உடைகளைத்தான் அணிந்து கொண்டிருந்தார். ஒரு ராஜாவிடம் முறையிடுபவன் இத்தனை நீ...ள...மா...க... பேசினால் அது ராஜாவின் மண்டைக்குள் செல்லுமா? ராஜாங்க, நிர்வாக விஷயங்களைப் பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரிய வேண்டாமா?
கேட்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ தன் வாய் ஜாலத்தை காட்டி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அப்போதைய நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தனது முதல் சட்ட சபை உரையை மிகவும் விஸ்தாரமாக தயாரித்து, "அரிஸ்டாட்டில் அப்படி சொல்லியிருக்கிறார், காரல் மார்க்ஸ் இப்படி சொல்லியிருக்கிறார்" என்றெல்லாம் நீளமாக பேசிக் கொண்டே போக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காமராஜ்,"அவங்க சொன்னதெல்லாம் இருக்கட்டும், நீங்க என்ன செய்யப் போறீங்க, அதைச் சொல்லுங்க" என்றாரம். அதுதானே தேவை?
மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஐசன் ஹோவரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவர் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய கோப்பு(file) அவர் மேஜைக்கு வந்ததும், அது எத்தனை பக்கங்களை
கொண்டிருந்தாலும் அதன் சாராம்சத்தை கால் பக்கத்திற்கு
சுருக்கித் தருமாறு தன் உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டு விட்டு அவர் கால்ஃப் விளையாடச் சென்று விடுவாராம். அவருடைய உதவியாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு சுருக்கி தந்ததை படித்து விட்டு, விரைவாக முடிவெடுத்து விடுவாராம்.
நம்முடைய மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும் இரண்டு பக்க விஷயத்தை இரண்டே வரிகளில் சுருக்கி சொல்லும் திறன் உண்டு என்பார்கள்.
இவையெல்லாம் இருக்கட்டும் ஜோதிடத்தை தொழிலாக கொள்ளாவிட்டாலும், அதில் நிறைய ஆர்வமும், அறிவும், திறமையும் கொண்ட என் சகோதரர் எந்தெந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தன் அனுபவத்தில் கண்டு எங்கள் குடும்ப குழுவில் அனுப்பி இருந்தார். சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
மேஷ ராசிக்காரங்ககிட்ட எச்சரிக்கையா பேசணும். பாராட்டி பேசலாம், ஆனால் வாக்குவாதம் செய்யக் கூடாது.
ரிஷப ராசிக்காரங்ககிட்ட கனிவா, பக்குவமா பேசணும்.
மிதுனம் ராசிக்காரங்ககிட்ட அதிகமா வெச்சுக்காதீங்க. லைட்டா பேசுவாங்க, ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.
கடக ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம், எல்லா உதவியும் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரங்ககிட்ட பொறுமையா பேசணும். படபடன்னு பேசிட்டு போயிட்டே இருப்பாங்க. நேர்மையா பேசலைனா கட்டம் கட்டிடுவாங்க.
கன்னி ராசிகாரங்க நட்பை முறிச்சுக்கள் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. அதுவே உத்திரம் நட்சத்திரக் காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையை பார்த்து பேசுங்க.
துலாம் ராசின்னா, ஜாலியா பேசலாம். ஸ்வாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க, உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்டுருவாங்க.
விருச்சிகம்.. அன்பா, அனுசரணையா பேசலாம். கொஞ்சம் கவனக் குறைவா கிண்டலடிச்சா, நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல், கோபத்துல சுனாமி.
தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்.நாலு வார்த்தை பாராட்டுங்க, அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம். அர்ஜுனன் கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை. அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார். தேரோட்டியாக வந்தார். வில்லுக்கு விஜயனான அர்ஜுனன் தனுசு ராசி.
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க, அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள், பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம்... அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க, உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க.
மீனம்..அசந்தா ஆத்துல இல்ல, காத்துல கூட மீன் பிடிப்பாங்க. மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவங்ககிட்ட தெரிஞ்சுக்கலாம்.
சரிதானா என்று சொன்னால் சந்தோஷப் படுவோம்.
Wednesday, June 13, 2018
உரத்த சிந்தனை!
உரத்த சிந்தனை!
எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்?
எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம். பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.
அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.
போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச வேண்டும் என்று இன்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பொது இடம் என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம் எப்படிப்பட்ட டிராபிக் ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள்.
சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்?
நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்" என்னும் வசனத்தைக் கூட ஹை டெசிபெல்லில்தான் கூறுவார்கள்.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் சமீபத்தில் அவர் பெண் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டு வந்தார். அதை பற்றி அவரிடம் விசாரித்த பொழுது, "எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் மிகவும் நிசப்தமாக இருக்கிறது. அவ்வளவு சைலண்டாக இருந்தாலும் என்னவோ போல் இருக்கிறது" என்றார்.
ஏதோ நிர்பந்தத்தால் பூ விற்பவர் வீட்டில் தங்க நேரிடும் ஒரு மீனவன் மறு நாள் காலையில் சொன்னானாம், "முடை நாற்றம் இல்லாத இந்த பூ வாசனையில் தூக்கமே வரவில்லை" என்று.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது. இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக இருக்கும் நம் நாட்டில்தான் தியானம், யோகம் போன்ற விஷயங்களும் இருக்கின்றன. மௌன விரதம் அனுஷ்டிக்கும் பழக்கமும் நம் மதத்தில் ஒரு வழிபாட்டு முறை. ஒரு வேளை நம்மை சுற்றி இத்தனை சத்தம் இருப்பதால்தான் ஒரு சிலராவது அமைதியை தேடிச் செல்கிறார்கள் போலிருக்கிறது. பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் குறைவு. ஆனால் பெரும்பாலானோர் அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ?
படங்கள்: கூகிள். நன்றி
Thursday, June 7, 2018
Wednesday, June 6, 2018
புரியாத புதிர்
புரியாத
புதிர்
ஒரு சுபயோக சுப
தினத்தில் ராகவனும்,சித்ராவும் தங்கள் பெண் கீர்த்தனாவிற்கு வரன் தேடலாம் என்று முடிவு
செய்து, பெண்ணிடம் அதற்கு உத்தரவு கேட்க, அவளும் இயர் ஃபோன் மாட்டியிருந்த செவிகளோடு
கூடிய தலையை மேலும் கீழுமாக ஆட்ட, குடும்ப ஜாதக நோட்டிலிருந்து கீர்த்தனாவின் ஜாதகத்தை
காபி எடுத்து, நான்கு மூலைகளிலும் குங்குமம் தடவி, பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில்
வைத்து அர்ச்சனை செய்து, பிரபலமான மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்தர்கள்.
அவர்கள் வீட்டுக்கு
வந்தவுடனேயே இரண்டு ஃபோன் கால்கள் வந்து விட்டன. பெண்களுக்கு இத்தனை டிமாண்டா என்று
நினைத்துக் கொண்டார்கள். தினசரி நான்கு அழைப்புக்களாவது வரும். எல்லாவற்றையும் சித்ரா
தனியாக ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டு, தன் வேலைகளை முடித்தவுடன் கணிணியில்
தேடத் துவங்குவாள்.
“இந்த பையனை பார்க்கலாமா?”
“ஏழு வயசு வித்தியாசமா?
போம்மா..”
“அதுனால என்னடி?
வயசு வித்தியாசம் அதிகம் இருந்தால், பாவம் சின்ன பொண்ணுனு விட்டுவிடுவார்கள்..”
“உனக்கும், அப்பாவுக்கும்
ஏழு வயசு வித்தியாசம்… அப்பா அப்படி விடறாளா?
“எஸ், நோ”
“அப்புறம் ஏன்
பேசற? ஏழு வயதெல்லாம் ரொம்ப அதிகம். ஜெனரேஷனே மாறிப் போயிடும்.”
“அப்போ எவ்வளவு
வயசு வித்தியாசம் பார்க்கலாம்?”
“மூணு, இல்லாட்டி,
நாலு”
அதன்படி தேடத்
தொடங்கினாள்.
“இந்த பையன் எப்படி?”
“என்னமா? மேல்
மாடி மொட்டையா இருக்கு?”
“வெளியில்தான்
மொட்டை, உள்ள நிறைய விஷயம் இருக்கு, தவிர, இப்போ மொட்டை ஃபேஷன்தானே..?”
“வெய்டிங் லிஸ்டில்
போடு, தலையில் முடி இருக்கும் பையன் கிடைக்கவில்லலைனா பார்க்கலாம்..”
தலை நிரைய முடியோடு
இருந்தவனுக்கு சம்பளம் போதாது என்றாள்.
“நேற்று ஒரு மாமி
ஃபோன் பண்ணினார், அவா பையன் எம்.பி.ஏ. படிச்சுட்டு…”
“எம்.பி.ஏ. என்றால்,
எந்த பி.ஸ்கூல்னு கேளுமா.. ஐ.ஐ.எம்., ஒகே..! ஏதோ காமா சோமா காலேஜ் எல்லாம் வேண்டாம்.”
என்றான் மகன்.
“சொந்த வீடு வேண்டாமா?”
என்றார் மாமியார்.
ஒரு வரன் எல்லாம்
பொருந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றர்கள். அம்பத்தூர் தாண்டி, ஒரு சிறிய அபார்ட்மெண்ட்.
“ரோட் அப்ரோச்
சரியில்லை, மழை நாளில் ஒரே சேறும் சகதியுமாக இருக்கும். வீடு ரொம்ப சின்னது, இதில்
நம்ம கீது போய் எப்படி இருக்கும்? வேறு இடம் பார்க்கலாம் மன்னி” என்றாள் நாத்தனார்.
இப்படி ஏகப்பட்டதை
கழித்து கட்டினார்கள். சிலவற்றை ஜோதிடர் பொருந்தவில்லை என்று சேர்க்க மறுத்தார். இவர்களுக்கு
பிடித்த சில இடங்களிலிருந்து பதில் ஏதும் வராமல் சோதித்தது.
இப்படியே இரண்டு
வருடங்கள் ஓடியது. கீர்த்தனாவுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கேயே
இருக்கும் பையனாக பார்க்கலாம் என்று வெளிநாட்டு வரன்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
ஒரு நாள் ஸ்கைப்பில்
வந்த மகள், “அம்மா, ஒரு நிமிடம்” என்றாள் பின்னர், “ஹி இஸ் முரளி, என்னோட டீம் லீடர்”
என்று காமிராவை திருப்ப, “ஹலோ ஆண்டி, என்று புன்னகைத்த இளைஞன் நிறம் குறைவா? அல்லது
வெளிச்சம் அவன் மீது படவில்லையா? என்று தெரியவில்லை.
சிறிது நாட்கள்
கழித்து கீர்த்தனா அந்த முரளியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பது தெரிந்து,
முடிவானது. அவர்கள் வீடு மயிலாப்பூரில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு எதிரே ஒரு சந்தில், கம்பி
கேட் போட்ட பழங்கால வீடு.
“முரளி ஓ.எம்.ஆரில்
த்ரீ பெட் ரூம் அபார்ட்மெண்ட் புக் பண்ணியிருக்கிறான். செப்டம்பரில் பொசஷன் கிடைத்து
விடும். அப்புறம் அங்கே போய் விடுவோம்.”
தலை பின்னோக்கி
செல்ல துவங்கி விட்ட, வெறும் பி.டெக். மட்டுமே படித்த, தன்னை விட எட்டு வயது மூத்த
பையனை மணந்து கொள்ள தன் மகள் எப்படி முடிவு செய்தாள் என்பதை மட்டும் சித்ராவால் புரிந்து
கொள்ளவே முடியவில்லை.
Sunday, June 3, 2018
எண்ணச் சங்கிலி
எண்ணச் சங்கிலி
சதாப்தியில் எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த பெண்மணி என்னைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தார். அவர் படித்துக் கொண்டிருந்த சாரி பாராயணம் செய்து கொண்டிருந்த சுந்தர காண்டத்தை முடித்து விட்டு, என்னோடு எடியூரப்பா பதவி ஏற்க முடியாமல் போனது, நடிகையர் திலகத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, சாவித்திரி, ஜெமினி,
ந.தி. படம் பற்றி கமலா செல்வராஜ் தந்தி டி.வி.யில் பேசியது, ஐ.பி.எல். போட்டிகள், உஷ்ணமாகிக்கொண்டு வரும் பெங்களூர் என்று பேச்சு பல தளங்களில் பயணித்தது.
இடையே சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு
ஃபோன் செய்து, "நாளைக்கு அத்தையாத்து(அத்தை வீட்டு) விசேஷத்திற்கு வரும் பொழுது க்ஷேவ் செய்து கொண்டு வா, ப்ளீஸ், இந்த ஒரு நாள் அம்மா சொல்றத கேளு.." என்று கெஞ்சினார்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன்களே ஷேவ் செய்து கொள்வதில்லை. மணமகளுக்கு இணையாக ஃபேஷியல் செய்து கொண்டாலும் திருமணத்தன்று மூன்று நாள் தாடியோடும், கலைந்த தலையோடும்தான் காட்சி அளிக்கிறார்கள். என்ன நாகரீகமோ? எதிர் காலத்தில் இவர்கள் குழந்தைகள் இவர்களின் திருமண ஆல்பத்தை பார்த்து விட்டு,"என்னப்பா, கல்யாணத்தன்று இவ்வளவு கேவலமா இருந்திருக்க?" என்று கேட்காமல் இருக்க வேண்டும்.
திருமணம் என்றதும் தோன்றுகிறது. திருமணமாகி 25வருடங்கள் ஆவதை வெள்ளி விழா என்போம், ஐம்பதாவது வருடத்தை பொன் விழா என்போம். மர ஆண்டு, காகித ஆண்டு, தகர ஆண்டு, முத்து ஆண்டு இவையெல்லாம் எந்த வருடங்களை குறிக்கிறது தெரியுமா?
சேத்தன் பகத்தின் புத்தகத்தை சென்னையிலேயே மறந்து வைத்து விட்டேன். அதற்குப் பதிலாக டவுன்லோட் செய்து வைத்திருந்த சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' படித்து முடித்தேன். இது குமுதத்தில் தொடராக வந்த பொழுது படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. அப்போதெல்லாம் 24 ரூபாய் தீவு படிப்பதற்கு முன்னால் சுஜாதா ஒரு மேம்போக்கான எழுத்தாளர் என்ற அபிராயம்தான் எனக்கு இருந்தது.
சுஜாதாவுக்கே உரிய திறமையான எழுத்து. இதிலும் கணேஷ்,வசந்த் வருகிறார்கள், ஆனால் மிகவும் சொற்பமாக என்பது ஆச்சர்யம்தான். இந்த கதையை படித்தவுடன் சுஜாதாவின் எல்லா பாதிக்கப்பட்ட பெண்களும் டைரி எழுதுவார்களோ? என்று தோன்றியது. 'ப்ரியா' ஆன் லைனில் கிடைக்கவில்லை. கிடைத்தால் படிக்கலாம்.
Saturday, June 2, 2018
நன்னம்பிக்கை!
நன்னம்பிக்கை!
“இங்க பாரு, உன்
குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு இங்க வந்து சொல்லிகிட்டு இருக்காத..”
ஜனனியின் குரல்
ஓங்கி ஒலித்தது கிரீஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாதரணமாக ஜனனி வேலைக்கரர்களிடம் கடுமையாக
நடந்து கொள்ள மாட்டாள்.
பாத்திரம் சரியாக
தேய்க்கவில்லை என்றால் கூட,”என்ன மீனா இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கியா? பாத்திரத்தில்
டீ கறை போகவே இல்லை..” என்றும், “கொஞ்சம் அந்த மூலையையும் பெருக்கக் கூடாதா?” என்றும்
கனிவு பொங்கும்.
அப்படிப்பட்டவள்
இப்போது ஏன் கோபப்பட வேண்டும்? மீனா சென்ற பிறகு கிரீஷ் ஜனனியிடம் தன் சந்தேகத்தை கேட்டான்.
“அவள் எப்போதெல்லாம் தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறாளோ, அப்போதெல்லாம்
நம்ப அனன்யாவுக்கும் உடம்புக்கு வந்து விடுகிறது.”
“ஏதோடு எதை முடிச்சுப்
போடுகிறாய்?”
“ஏதோடும், எதையும்
முடிச்சுப் போடவில்லை, நான் அனுபவித்ததை சொல்கிறேன்”
கிரீஷ் ஒரு வாக்குவாதத்திற்கு
தயாராக இல்லாததால் வாயை மூடிக் கொண்டான். ஆனால் அன்று மாலை குழந்தைக்கு லேசாக மூக்கு
ஒழுக ஆரம்பித்து அச்சு, அச்சு என்று தும்மினாள், நடு இரவில் காய்ச்சல் வந்து விட்டது.
காலையில் கால்பால்
சிரப்பை குழந்தைக்கு கொடுத்துக் கொண்டே,”நான் சொன்னேனா இல்லையா?” என்றாள் ஜனனி.
அவளின் இப்படிப்பட்ட
நம்பிக்கைகளை எப்படி மாற்றுவது என்று கிரீஷுக்கு புரியவில்லை. அவன் மாலை வீடு திரும்பும்
பொழுது, எதிரே மீனாவைப் பார்த்தான். வண்டியை நிறுத்தி,”என்ன மீனா? குழந்தைக்கு உடம்பு
தேவலையா?” என்றான். “சரியாயிடுச்சு அண்ணா,வீட்டுல விளையாடிக்கிடிருக்கு”
Thursday, May 24, 2018
திருவையாறு அசோகா
திருவையாறு அசோகா
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு --- 1 கப்
சர்க்கரை --- 2½ கப்
இனிப்பில்லாத கோவா – 50கிராம்
நெய் - ¼ கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
முந்திரி - 5 பருப்பு
செய்முறை:
பயத்தம் பருப்பைலேசாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுத்து விட்டால் சரியாக வேகாது.
பின்னர் தண்ணீரில் கழுவி விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வெந்த பயத்தம் பருப்பை கீரை மசிக்கும் மத்தால் அல்லது கரண்டியால் நன்கு மசிக்கவும்.
அதோடு சர்க்கரை, கோவா கேசரி பவுடர் இவைகளையும் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து அவ்வப்பொழுது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். பின்னர் அதில் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, நெய்யில் வருக்கப்பட்ட முந்திரியை சேர்த்தால் சுவையான அசோகா ரெடி!
ஒரிஜினல் திருவையாரு அசோகாவில் முந்திரி பருப்பு போட மாட்டார்கள். அதே போல பால் கோவா சேர்ப்பதற்கு பதிலாக வறுத்த பயத்தம் பருப்பை பாலில் ஊற வைத்து, பால் ஊற்றி அரைப்பார்கள்.
நான் மசித்த பருப்போடு சர்க்கரையை அப்படியே சேர்த்து விட்டேன். சர்க்கரை வெளுப்பாக இல்லாமல், பழுப்பாக இருந்தால் அழுக்காக இருக்கிறது என்று பொருள். அப்பொழுது, சர்க்கரையில் அது மூழ்கும் அளவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கரண்டி பால் சேர்த்தால் அழுக்கு தனியாக நுரைத்துக் கொண்டு வரும். அதை எடுத்து விட்டு பின்னர் அதில் மசித்த பருப்பு மற்றும் கோவாவை சேர்த்து கிளரலாம்.
சுவையான, செய்ய சுலபமான இனிப்பு இது.
Friday, May 18, 2018
மஹா நடி(விமர்சனம்)
மஹா நடி(விமர்சனம்)
மஹா நடிகையாகிய
சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது.
ஒரு பத்திரிகையில்
நிருபராக பணியாற்றும் சமந்தாவிடம் கோமாவில் இருக்கும் சாவித்திரியைப் பற்றிய செய்தியை
கவர் செய்யச் சொல்லி பணிக்கிறார் அந்த பத்திரிகை ஆசிரியர். வேண்டா வெறுப்பாக அந்தப்
பணியை ஏற்றுக் கொள்ளும் சமந்தா சாவித்திரி
பற்றி திரட்டும் தகவல்கள் அழகான ஓவியமாக திரையில் விரிகிறது.
பயோ பிக் என்பது
சற்று சவாலான விஷயம். அதுவும் மிகச் சமீபத்தில் மறைந்த ஒருவரைப் பற்றி, இன்னும் மக்கள்
மனதிலும், நினைவிலும் இருக்கும் ஒருவரைப் பற்றி திரைப் படம் எடுக்க வேண்டும் என்பது
கயிற்றில் நடக்கும் வித்தை. ஜாம்பவான்களே இடறி விழும் இதில் அனாயசமாக நடந்திருக்கிறார்
இளம் இயக்குனர் நாக் அஸ்வின்.
செட்(சில இடங்களில்
செட் என்று தெரிந்தாலும்), உடைகள், அந்த காலத்திய வாகனங்கள், நட்சத்திர தேர்வு என்று
அத்தனையிலும் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறார்.
குறிப்பாக நட்சத்திர
தேர்வை சொல்ல வேண்டும். இதுவரை பெரிதாக நடிப்பில் எதுவும் சாதிக்காத சின்னப் பெண் கீர்த்தி
சுரேஷ் சாவித்திரியாகவா? குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் ஆகி விடாதா? என்ற எண்ணத்தை
உடைத்து, சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி. அந்த குழந்தை சிரிப்பு, கையை
ஆட்டி, கால்களை சற்றே அகட்டி வைத்து நடக்கும் கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமான நடை, முகத்தில்
படரும் மெல்லிய சோகம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது கீர்த்திதான் நடித்திருக்கிறாரா?
அல்லது சாவித்திரியின் ஆன்மா இந்தப் பெண்ணின் உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதா என்று
தோன்றுகிறது. இந்த வருடம் விருதுகளை அள்ளப் போகிறார்.அவருடைய திரையுலக வாழ்க்கையில்
ஒரு மைல் கல் இந்தப் படம்.
சாவித்திரியின்
பெரியப்பாவாக நடித்திருக்கும் நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜெமினி கணேசனாக
நடித்திருக்கும் துல்கர் சல்மானும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். ஜெமினி, சாவித்திரி
காதல் காட்சிகள் க்யூட்!. சாவித்திரியின் வெகுளித்தனம், அவரும் அவர் பெரியப்பா சம்பந்த்தப்பட்ட
சினிமாவில் வாய்ப்பு தேடும் ஆரம்ப காட்சிகள் ஸ்வாரஸ்யம்! ஜெமினியும், சாவித்திரியும்
பிரியும் காட்சிகள் சற்று வேகமாக நகர்ந்து விடுகின்றன. பெரும்பாலான தெலுங்கு நடிகர்களுக்கிடையே
பானு ப்ரியா, ப்ரகாஷ் ராஜ், மனோபாலா போன்ற நமக்கு தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
சிறு வேடமென்றாலும் மனதில் நிற்கிறார்கள். பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் பின்னணி
இசை சிறப்பாக இருக்கிறது.
நடிப்பைத் தவிர
சாவித்திரியின் கார் ஓட்டும் திறமை, பெரிதாக கொலு வைப்பது, ராணுவ வீரர்களுக்காக தன்
நகைகளை கழட்டி கொடுப்பது, தான் கஷ்டப்படும் பொழுதும் ஏழைகளுக்கு உதவுவது, பெரிய நடிகையாக
இருந்த போதும், ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை செய்யும் சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்ந்தது,
பின்னாளில் மதுவுக்கு அடிமையானது போன்ற பல விஷயங்களை காண்பித்தவர்கள் அவருக்கும் சந்திரபாபுவுக்கும்
இருந்த நட்பையும் கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.
அதே போல சாவித்திரி
என்றாலே நம் நினைவுக்கு வரும் நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் போன்ற படங்கள் இடம் பெறாதது
கொஞ்சம் குறை.
சமந்தாவை இன்னும்
கொஞ்சம் அழகாக காண்பித்திருக்கலாமோ? திக்கு வாய் பெண்ணாக சித்தரிக்கபடும் அவர் சில
சமயம் அப்படியும், சில சமயங்களில் சாதாரணமாகவும்
பேசுகிறார். அவருடைய காதலனாக நடித்திருக்கும் நடிகர் கச்சிதம்.
ஜெமினி கணேசனுக்கு
இன்னும் கொஞ்சம் கௌரவம் கொடுத்திருக்கலாம்.
சாவித்திரிக்கு
மரணம் கிடையாது, அவர் படங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று முடித்திருப்பது
நன்றாக இருக்கிறது.
Wednesday, May 16, 2018
பாலகுமாரன்
பாலகுமாரன்
எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் என்று தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது. சில வருடங்களாகவே நோயோடு போராடிக்கொண்டிருந்தார். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்ததை 'சொர்க்கம் நடுவிலே' என்னும் நாவலாக எழுதியிருக்கிறார்.
குமுதத்தில் அவர் எழுதிய 'கெட்டாலும் ஆண் மக்கள்' என்னும் சிறுகதை அட! யார் இந்த பாலகுமாரன்? பிரமாதமாக எழுதுகிறாரே? என்று எண்ண வைத்தது. அப்போது குமுதத்தில் அடிக்கடி சிறுகதைகள் எழுதுவார். அப்படி எழுதிய 'சுழல் பந்து' என்னும் கதையும் கவர்ந்தது. அந்தக் கதையை படித்த என் அப்பா கூட,"யாருமா இந்த பால குமாரன்? சுழல் பந்து என்னும் கதையை ரொம்ப லைவ்லியாக எழுதியிருக்கிறானே?" என்று சிலாகித்தார்.
அதன் பிறகு அவருடைய பெரும்பாலானவற்றை படித்திருக்கிறேன். அவருடைய புதினங்களை படித்தவுடன் அவரோடு தொலைபேசியில் பேசி அந்த நாவலைப் பற்றிய என் கருத்தை, எனக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காத, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இவற்றை கூறுவேன். கல்லூரிப் பூக்கள் என்னும் கதையைப் படித்து விட்டு, "பாலகுமாரன் கதை படித்த உணர்வு இல்லை" என்று நான் கூறியதும்," ஆமாம், அது குப்பைதான்" என்றார். அதனால்தானோ என்னவோ அவர் 'கங்கை கொண்ட சோழன்' எழுதியவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து,"நான் கங்கை கொண்ட சோழன் என்று ஒரு நாவல் எழுத்திருக்கிறேன், அதை படித்து விட்டு சொல்" என்றார். இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.
நாவலைத்தவிர எனக்கு ஏற்படும் சில சந்தேகங்களையும் அவரிடம் தெளிவு செய்து கொள்வேன். பாரதியாரின் குயில் பாட்டு பெண்ணடிமைத்தனத்தைத்தான் குறிக்கிறதோ என்று எனக்கு ஒரு எண்ணம். அவரிடம் இதைக் கூறி,"நம் ஊரில் குயில் போன்ற ஒருத்தியை குரங்கு போன்றோ, காளை போன்றோ இருக்கும் ஆணுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்போது அவள் என்ன செய்ய முடியும்? மானுடற்கு உம்மைப் போல் வாலுண்டோ?" என்றுதானே பேச முடியும்?" என்றேன். அவர் அதை மறுதலித்து விட்டார். "இல்லை குயில் பட்டு ஏதோ பெரிய விஷயத்தைப் பற்றி பேசுகிறது. எல்லாப் பெண்களும் நல்லவர்கள் கிடையாது, அடுத்தவர்களை வாழ விடாத ராக்ஷஸிகள் உண்டு" என்றார்.
"பொறாமை உணர்வை எப்படி வெல்வது?" என்று கேட்ட பொழுது, " பொறாமை வருகிறதா? எப்பொழுதெல்லாம் பொறாமை உணர்வு தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உன்னை நீயே கண்டபடி திட்டிக் கொள்" என்றார். அதை கடை பிடித்துதான் பொறாமையை ஒழித்தேன்.
ஸ்ரீ ஸ்ரீ யின் சுதர்ஷன் க்ரியா செய்கிறேன் என்று கேட்டதும், "அடடா! அற்புதமான விஷயமாயிற்றே அது என்றார். நம்முடைய புராணத்தில் பாற்கடல் கடைவதைப் பற்றி கதை உள்ளதே அதன் தத்துவம் என்ன என்று யோசித்து சொல்" என்றார். என் சிற்றறிவுக்கு அது எட்டாததால் அவரிடமே பொருள் கேட்டேன். பாற்கடல் என்பது என்ன? மத்தாக வைக்கப்பட்ட மந்திர மலை என்பது எது? அது அசையாமல் தாங்கிப் பிடித்த கூர்மம் எது? பாம்பு எது? கடைதல் எப்படி? தேவர் யார்? அசுரர் யார்? கடையும் பொழுது வெளிவரும் விஷயங்கள் என்னென்ன? என்று மிகத் தெளிவாக அவர் விளக்கிய பொழுது எனக்கு பாற்கடலை கடையும் கதையின் தத்துவத்தோடு சுதர்ஷன் க்ரியா வெரும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல என்பதும் புரிந்தது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ஐந்தாம் தேதி, யோகி ராம் சூரத்குமார் ஜெயந்தி விழாவுக்கு எனக்கு அழைப்பு அனுப்புவார். எனக்குத்தான் போக முடியாமல் ஏதோ இடைஞ்சல் வரும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் ஏதோ ஒரு சேனலில் பாலகுமாரனின் பேட்டி ஒளி பரப்பினார்கள். அதில் தன் இரு மனைவிகளைப் பற்றியும் மிகவும் பெருமையாக குறிப்பிட்டு," அவர்களின் உதவி இல்லையென்றால் என்னால் இவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாது.அவர்களின் கால்களை தொட்டு நான் வணங்குவேன்" என்று அவர் சொன்னதும், எனக்கு பளிச்சென்று திருப்புகழில் வரும்,"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா.." என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. உடனே, அவரை தொலைபேசியில் அழைத்து,"நீங்கள் குறிப்பிட்ட அந்த அன்பைத்தான் அருணகிரிநாதரும் குறிப்பிட்டிருக்கிறாரோ?" என்று தோன்றுகிறது என்றேன். " "சரியாகத்தான் இருக்கிறது" என்று ஆமோதித்தார். ஒரு முறை நேரில் சந்திக்க அனுமதி கேட்டேன், வரச்சொன்னார். ஆனால், நான் ஒரு சோம்பேறி, சட்டென்று வெளியே கிளம்ப மாட்டேன். ஏதோ காரணங்களால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இனிமேல் நினைத்தாலும் நேரில் பார்க்க முடியாது.
Friday, May 11, 2018
மாமி சொன்ன கதைகள் - 2
மாமி சொன்ன கதைகள் - 2
ஒரு ஊரில் இருந்த ஒரு பெற்றோர்களுக்கு ஒரே ஒரு மகன். கொஞ்சம் தாமதமாக பிறந்த அந்த பையன் மேல் அவன் பெற்றோர்களுக்கு மிகுந்த பாசம். அவனும் தன் பெற்றோர்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தான். வயதான தன் பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என்று நினைத்தான்.
அவனுடைய மனைவியோ கணவன் இருக்கும் பொழுது மாமனார், மாமியார் மீது பக்தி கொண்டவள் போல, அவர்களுக்கு பணிவிடைகள் செய்வது போல நடிப்பாள். கணவன் அலுவலகம் சென்றதும் தான் எந்த வேலையும் செய்யாமல், கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு எல்லா வேலைகளையும் அவர்களையே ஏவுவாள்.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ஏதோ காரணத்தினால் சீக்கிரம் வீடு திரும்பி விட்ட மகன் தன் பெற்றோர்கள் தன் மனைவியிடம் படும் பாட்டை பார்த்து விடுகிறான். தன் மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்த அவன் தன் மனைவியின் பெற்றோர்களுக்கு,"உங்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லை, உயிருக்கே ஆபத்து. ஜோதிடர்களிடம் கேட்டதில் அவளுடைய பெற்றோர்களாகிய நீங்கள், வேப்பிலையை மட்டும் ஆடையாக உடுத்திக் கொண்டு, தாரை, தப்பட்டை எல்லாம் முழங்க தெருவில் நடனமாடிக்கொண்டே வரவேண்டும்" என்று கடிதம் போடுகிறான்.
அடுத்த வாரத்தில் தெருவில் தாரை, தப்பட்டை ஒலி கேட்டு என்ன விசேஷம் என்று வாயிலுக்கு வந்து பார்த்த அந்த கொடுமைக்கார மருமகள் திடுக்கிடுகிறாள். ஏனென்றால் தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்க்க, வேப்பிலை ஆடையில் நடனமாடிக் கொண்டு வருவது அவளுடைய பெற்றோர்கள் அல்லவா? இது என்ன கூத்து? என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்க, உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்ட தங்கள் மகள் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து அவளுடைய பெற்றோர்களுக்கும் அதிர்ச்சிதான்.
"என்னடி? உனக்கு உடம்பு சரியில்லை என்றார்களே?" என்று கேட்கிறார்கள்.
"உடம்பா ? எனக்கா? நான் நன்றாகத்தானே இருக்கிறேன், நீங்கள் ஏன் இப்படி ஒரு கோலத்தில் நடனமாடிக் கொண்டு வருகிறீர்கள்?" என்று எதிர் கேள்வி கேட்க, அவள் கணவன், "நீ என் பெற்றோர்களை என்னவெல்லாம் இழிவு படுத்தினாய்? அதனால்தான் உன் பெற்றோர்களை அவமானப் படுத்தவே நான்தான் அவர்களுக்கு உனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, இப்படி வரச் சொன்னேன்" என்று கூறுவான். (கதை இங்கே முடிந்து விடும். இதைக் கேட்டு அவன் மனைவி தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினாள் என்றெல்லாம் கிடையாது)
இந்த கதையை வெகு சுவாரஸ்யமாக சொல்லுவார் என் மாமி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. கதையை பாவத்தோடு நேரில் பார்ப்பது போல சொல்லுவார். நான் நிறைய தடவை இந்தக் கதையை சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அதே போல மஹாபாரத கதைகளும் சொல்லுவார். பீஷ்ம சபதம், பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த விதம், திரௌபதி சுயம்வரம், திரௌபதியை சூதில் பாண்டவர்கள் தோற்பது, கண்ணன் கருணையால் அவளுக்கு புடவை வளர்வது போன்ற காட்சிகளை மோனோ ஆக்டிங் போல கூறுவார். அதனால்தானே இன்றுவரை எனக்கு அந்த கதைகள் நினைவில் இருக்கின்றன.
Thursday, May 10, 2018
மாமி சொன்ன கதைகள்
மாமி சொன்ன கதைகள்
இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் தீர வேண்டும். ஆனால் அந்த இறப்பு வருவதில் ஒரு ஆர்டர் இல்லை. அதாவது முதலில் பிறந்தவர்கள்தான் முதலில் இறப்பார்கள் என்று இல்லை. முதியவர்களும் இறக்கிறார்கள், நடு வயதினரும் இறக்கிறார்கள், இளம் வயதினர்களும் இறக்கிறார்கள், ஏன் குழந்தைகள் கூட இறக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
இந்த உலகம் படைக்கப்பட்டு அதில் ஜீவராசிகளும் உண்டாக்கப் பட்டதும், படைக்கப்பட்ட ஜீவன்கள் எதுவுமே இறக்கவில்லையாம். இதில் புதிது புதிதாக உயிர்கள் வந்துகொண்டே இருக்க, பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி திணறினாளாம். அவள் கடவுளிடம் சென்று முறையிட்டு தன் பாரத்தை குறைக்க வேண்டும் என்று வேண்ட, கடவுள் எம தர்ம ராஜனைப் படைத்து, உயிர்களை பறிக்க வேண்டிய வேலையை அவனிடம் ஒப்படைத்தாராம்.
அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட எமதர்மன், தன்னுடைய உதவியாளனை அழைத்து இன்று முதல் உலகில் வந்த உயிர்கள் நீடித்திருக்காது, பறிக்கப்படும். அது முதலில் முதியவர்கள், பின்னர் நடு வயதினர், பின்னர் இளம் வயதினர் இறுதியாக குழந்தைகள் என்ற வரிசையில் பறிக்கப் படும் என்று பொருள் படும்படி பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர,இலை உதிர என்று தண்டோரா போடச் சொன்னாராம்.
அந்த பணியாள் அப்படியே செய்ய, முதியவர்களுக்கு கோபம் வந்து விட்டதாம். "ஏன் நாங்கள்தான் முதலில் இறக்க வேண்டுமா? ஒத்துக்க முடியாது" என்று அடாவடி செய்தார்களாம்(எதைச் சொன்னாலும் ஒத்துக்க முடியாது என்று சொல்வது எப்போதுமே உண்டு போலிருக்கிறது)
சரி, முதியவர்கள் மனதை நோகடிக்க வேண்டாம், முதலில் குழந்தைகள், பின்னர் இளம் வயதினர் என்று படிப்படியாக உயிரை பறிக்கலாம் என்று முன்னால் போட்ட தண்டோராவை அப்படியே திருப்பி,"இலை உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர" என்று போடச் சொன்னாராம்.
இதை யாருமே ஒப்புக் கொள்ளவில்லையாம். "கிழம், கட்டைகள் இருக்கும் பொழுது, சிறு குழந்தைகள் சாவதாவது? இப்படி செய்தால், உலகில் முதியவர்கள்தான் இருப்பார்கள். மேலும் தங்களை விட இளையவர்கள் இறப்பதை பெரியவர்கள் பார்க்க நேருவதால் உலகமே சோகமாகி விடும்" என்றெல்லாம் கூறினார்களாம். எமன் பார்த்தானாம், தன் உதவியாளரிடம், "உன் வாயில் எப்படி வருகிறதோ அப்படி தண்டோரா போட்டு விடு, நான் அதன்படி நடக்கிறேன்" என்று கூறி விட்டாராம்.
உடனே எமனுடைய உதவியாளர்,"காய் உதிர, பூ உதிர, இலை உதிர, பழம் உதிர, பிஞ்சு உதிர "என்று கலந்து கட்டி தண்டோரா போட்டு விட்டாராம், அதன்படியே யமதர்மராஜனும் நடந்து கொள்ள ஆரம்பித்தாராம். அதனால்தான் உலகில் இறப்பு எந்த வயதிலும் நேருகிறதாம்.
எப்படி கதை? ரசித்தீர்களா? கொஞ்சம் வேடிக்கையான இன்னொரு கதை அடுத்த பதிவில்.
Subscribe to:
Posts (Atom)















