இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி.
கணம்தோறும் பிறக்கிறேன்
Friday, November 26, 2021
தி.ஜானகிராமன் நூற்றாண்டு.
இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி.
Tuesday, November 16, 2021
சித்திரம் பேசுதடி
Saturday, November 13, 2021
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3
இதற்கு முன்னால் விவரித்த நிகழ்வுகள் ஆகஸ்ட் மத்தியில் முடிந்தன. செப்டம்பரில் கிளம்பலாமா? என்று நினைத்தேன். ஆனால் கனடாவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் செப்டம்பரில் தான் செல்வார்கள் என்பதால் டிக்கெட்டுகள் விலை வானத்தை தொட்டன. "அக்டோபரில் பார்" என்றாள் மகள். அவள் பார்க்கச் சொன்னது பயணம் செய்ய ஏற்ற நல்ல நாள்.
அஷ்டமி,நவமி, பரணி, கார்த்திகை, ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம், சூலம் இவை அத்தனையும் இல்லாத நாள் கிடைத்தால் அன்று யோகம் சரியாக இல்லை. நான் பஞ்சாங்கத்தை திருப்பி திருப்பி பார்க்க, என் மகன், “அம்மா ஃபிளைட்ஸ் கம்மி, என்னிக்கு டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்கு கிளம்ப வேண்டியதுதான், நீ நாளெல்லாம் பார்க்க முடியாது” என்றான். உண்மைதான்.
இதற்கிடையில் என் மகள் டெலிபோனில் இன்னொரு கண்ணாடி வாங்கி கொள், பல் டாக்டரை பார்க்கவேண்டுமென்றால் பார்த்து விடு என்று கூற, ஒரு டென்டிஸ்ட்டை சென்று பார்த்தேன். அவர் கடைசி பல்லை பிடுங்க வேண்டும் என்றார். அவ்வளவுதானே? பிடுங்கி விடலாம் என்று சரி என்று சொல்லி விட்டேன். அந்தப் பல்லானால் என்னை பிரிய முரண்டு பிடித்ததில் சிறிய அறுவை சிகிச்சை, ஊருக்குச் செல்வதற்கு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது, ஒரு பக்க கன்னம் வீக்கம் வடியவேயில்லை. டாக்டரானால், "கவலைப்படாதீர்கள்,தையல் பிரித்தால் சரியாகி விடும் வாயைத் திறங்கள்" என்று என் திறந்த வாயினுள் எட்டிப் பார்த்து விட்டு, "ஓ! டிசால்விங் ஸ்டிச்சஸா?" என்று என்னையே கேட்கிறார். எப்படியோ நல்லபடியாக வீக்கம் வடிந்தது. ஒரு தனி கதை.
விமானங்கள் குறைவு. சில விமானங்களில் பயணித்தால் இரண்டு மூன்று நாடுகள் வழியாக செல்ல வேண்டும். அதில் ஒரு நாட்டில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கனடாவை கண்ணால் காண நான்கு நாட்கள் ஆகி விடும். அபுதாபி வழியாக செல்லும் எதிஹாட்டில்(Etihad) பயணித்தால் அபுதாபியில் ஆறு மணி நேரங்கள் ட்ரான்சிட்டில் காத்திருக்க வேண்டும். அங்கு கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும், ரிசல்ட் இரண்டு மணி நேரத்தில் வந்து விடும். அங்கிருந்து டொரோண்டோவை அன்று மாலையே அடைந்து விடலாம். ஆனால் அந்த விமானம் பெங்களூரிலிருந்து வாரத்திற்கு இரண்டுதான். எப்படி நாள் பார்ப்பது? 29ம் தேதி அதிகாலை 2:30க்கு பெங்களூரிலிருந்து விமானம். நான் 28 இரவு எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் போதும் என்று நினைத்தேன். இதிஹாட் அலுவலகத்திலிருந்து காலையில் அழைத்து இரவு ஒன்பதரை மணிக்கு கவுண்டர் திறந்து விடுவோம், அப்போதே வந்து விடுங்கள் என்றதால் வீட்டிலிருந்து ஏழு மணிக்கு முன்பாகவே கிளம்பி விட்டேன்.
விமான நிலையத்தில் அபுதாபி செல்லும் பயணிகள் செக் இன் செய்த பிறகு டொரண்டோ பயணிகள் செக் இன் செய்யலாம் அமருங்கள் என்றார்கள். சற்று பொறுத்து டொரோண்டோ பணிகள் செக் இன் செய்யலாம் என்ற அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக செக் இந்த கவுண்டரை நோக்கி, “ஆஹா! நாம்தான் முதல் ஆளா. என்று சந்தோஷமாக சென்றேன். நான் அப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு விட முடியுமா? அங்கும் ஒரு சிறிய பிரச்சனை.
அங்கிருந்த பணியாளர், “ரிடர்ன் டிக்கெட் இல்லையா?” என்றார்.
“இல்லை நான் சூப்பர் மாம் விசாவில் செல்வதால் ரிடர்ன் டிக்கெட் தேவையில்லை” என்றதை ஒப்புக் கொள்ளாமல், “கனடாவில் யார் இருக்கிறார்கள்? மகளா? அவரோடு பேச முடியுமா?” என்று கேட்க, மகளை தொடர்பு கொண்டு ஃபோனை அவரிடம் கொடுத்தேன், மகளோடு நீண்ட நேரம் விவாதம் செய்த பிறகு என்னை செக் இன் செய்ய அனுமதித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடன் பயணித்த இரு இளம் பெண்களும் கூட முதல் முறையாக கனடாவிற்கு பயணித்தார்கள். 2019 இல் திருமணமான இருவருக்கும் இப்போதுதான் விசா கிடைத்து பயணிக்கிறார்கள், அவர்களிடமும் ரிடர்ன் டிக்கெட் கிடையாது, ஆனால் அவர்களிடம் எந்த பிரச்னையும் பண்ணாமல் செக் இன் செய்ய அனுமதித்து விட்டார்கள்!!!
![]() |
| அபுதாபி விமான நிலையத்தில் ஒட்டகத்தை கட்டிக்கொண்டு |
அபுதாபியில் விமான நிலையத்தில் உணவகங்கள் ஏதும் திறந்திருக்காது என்று கூறப்பட்டதற்கு மாறாக திறந்திருந்தன. படிப்பதற்காக கனடா வரும் என் பெரிய அக்காவின் பேத்தி அங்கு என்னோடு இணைந்து கொண்டாள். குழந்தையாக இருந்த பொழுது ‘ர’ சொல்ல வராமல் ‘லமணி பெலிப்பா", ‘கிலி’ மாமா" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தை படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டாளா? என்று வியப்பாக இருந்தது.
பயணத்தில் ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம், ஆங்கில பிரண்ட்ஸ் சீரியலின் சில பகுதிகள் பார்த்தேன். கொஞ்சம் தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே விமானம் தரை இறங்கியது. இமிக்ரேஷனை முடித்து வெளியே வர மூன்று மணி நேரங்களாகி விட்டது. கஸ்டம்ஸ் என்ற கஷ்டம் இல்லை. இரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம். வரும் வழி எனக்கு மஸ்கட்டை நினைவூட்டியது. மஸ்கட் ஏர்போர்ட்டிலிருந்து சிட்டிக்குள் நுழையும் வழியில் ஹாலிடே இன் ஹோட்டல் இருக்கும், இங்கும் அது போலவே இருக்கிறது. |
அடுத்த நாள் ஹாலோவீன் தினம், என் மகள் வசிக்கும் அப்பார்ட்மென்டில் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக கருப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் ஒரு பிளாஸ்டிக் பை அல்லது பக்கெட் எடுத்துக் கொண்டு விபரீத வேடம் புனைந்து வீடு வீடாக சென்று கொண்டிருந்த சிறுவர்கள்..எங்கள் சிறு வயதில் நவராத்திரியில் கொலுவிற்கு அழைக்கும் சாக்கில் சுண்டல் கலக்ஷனுக்குச் சென்றதை நினைவூட்டினார்கள். ஆக நானும் கனடா வந்து விட்டேன்.
†******†***********************************
Sunday, November 7, 2021
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2
பாஸ்போர்ட்டோடு ப்ளூடார்ட் ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய எல்லா டாகுமெண்டுகளையும் சனிக்கிழமை மாலையே தயார் செய்துவிட்டு திங்கள் கிழமை காலை பத்து மணி முதல் ப்ளூ டார்ட் ஊழியரை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். பதினொன்றாகியது, பன்னிரெண்டும் ஆனது.. அவர் வரும் வழியாயில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால்," நீங்கள் சனிக்கிழமை தரவில்லை, அதனால் உங்களுக்கான ஆர்டர் கான்சலாகி விட்டது. இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ அப்போதுதான் வருவோம்" என்று தலையில் குண்டை போட்டார்.
எனக்கு பக்கென்றாகி விட்டது. "இது மாதிரி விஷயங்களில் நாம் திருப்பி அனுப்பக் கூடாது, இப்போது பார்....இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ..? மேலும் அவர்கள் கேட்ட பொழுது நாம் சப்மிட் பண்ணவில்லை என்றால் நமக்கு விருப்பமில்லை என்று கூட அவர்கள் புரிந்து கொள்ளலாம்.."என்றெல்லாம் நான் புலம்ப என் மகன்,"பதட்டப்படாதே மா, இந்த ஆள் ப்ளூடார்டின் கூரியரை கலெக்ட் பண்ணுவதற்காக ஆள். அவனுக்கு சனிக்கிழமை இந்த வேல கொடுத்திருப்பார்கள். அடுத்தது வேறு யாரையாவது அனுப்புவார்கள். ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு ஆள் இல்லை என்று கூறிவிட மாட்டார்கள் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்" என்று எனக்கு தைரியம் கூறி விட்டு வி.எஃப்.எஸ். க்ளோபல், ப்ளூ டார்ட் இரண்டு கஸ்டமர் கேர் எண்களை தொடர்பு கொண்டதில் உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ப்ளூ டார்ட் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததில் முதலில் அங்கிருந்த பெண்ணிற்கு சரியாக புரியவில்லை. என்னிடமிருந்து ரெஃபரென்ஸ் நம்பரை வாங்கி அருகிலிருந்த தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள் என் பெயர், விலாசம் இவற்றை உறுதி செய்து கொண்டு டாகுமெண்ட்ஸ் அடங்கிய என்வெலப் ரெடியாக இருந்தால் அந்தப் பெண்ணிடம் சமர்ப்பிக்க சொன்னார்கள். அதுதான் ரெடியாக இருந்ததே.. ப்ளூ டார்டின் கிளை அலுவலகத்தில் சமர்பித்து விட்டு வந்தேன்.
அவர்கள் தந்த ரெஃபரென்ஸ் நம்பரைக் கொண்டு பாஸ்போர்ட் கனடியன் கான்சலேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டது, விசா ஸ்டாம்பிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறது, விசா ஸ்டாம்ப் செய்யப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டுவிடும் என்றெல்லாம் தகவல்கள் அறிய முடிந்தது. ஒரு வழியாக விசா ஸ்டாம்ப் ஆகி பாஸ்போர்ட் வந்ததும் நிம்மதி பெருமூச்சு வந்தது.
எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சூரைக்காயை போட்டு விட்டு அடுத்த நிகழ்ச்சியான பயணத்திற்கு நாள் பார்க்கும் படலம் துவங்கியது.
-தொடரும்
Saturday, November 6, 2021
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)
கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)
சென்ற வருடமே நடந்திருக்க வேண்டியது, இந்த வருடம்தான் சாத்தியமானது. என்னுடைய கனடா விஜயத்தைத்தான் சொல்கிறேன். கனடாவில் வசிக்கும் என் மகள் அவளுடைய இரண்டாவது பிரசவத்திற்கு துணையாக நான் வர வேண்டும் என விசாவிற்கு ஏற்பாடு செய்தாலும் கொரோனாவினால் என் பயணம் தடை பட்டது .
நானும் வி.எப்.எஸ் க்ளோபல் இப்போது திறந்து விடும், அப்போது திறந்து விடும் என்றெல்லாம் எதிர்பார்த்து அடிக்கடி அந்த வெப் சைட்டை திறந்து பார்த்து "யூ ஆர் நாட் எலிஜிபில் இன் திஸ் காடகிரி" என்னும் அறிவிப்பை பார்த்து நொந்து போய் அதை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். என் மகளும், மாப்பிள்ளையும் தனியாகவே சமாளித்து விட்டார்கள். என் மருமகளுக்கும் பிப்ரவரியில் பெண் குழந்தை பிறந்தது. பெண் வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்கப் போகிறேன் என்று நினைத்த நான் பிள்ளை வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்க நேர்ந்தது எதிர்பாராத இனிய ஆச்சர்யம்.
அதன் பிறகு கனடா விஜயம் என்பதை மறந்து விட்டேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்த என் மகள், மெஸேஜ் பார்த்தாயா? உனக்கு வி.எஃப்.எஸ். க்ளோபலிலிருந்து பயோ மெட்ரிக் கொடுக்கச் சொல்லி மெயில் வந்திருக்கிறது" என்று சந்தோஷமாக சொன்னபொழுது நம்ப முடியாமல் மெயிலை செக் பண்ணினேன். பயோ மெட்ரிக் கொடுப்பதற்கான ஸ்லாட் ஒரு மாதம் கழித்தே கிடைத்தது.
பயோமெட்ரிக் கில் பத்து விரல்கள் ரேகைகளையம் பதிய வேண்டும். எனக்கு டிடர்ஜென்ட் அலர்ஜி உண்டு. பாத்திரம் துலக்கும் சோப்பு போன்றவைகளை பயன்படுத்தினால் கைகள் வெடித்து விடும். அல்லது சொரசொரப்பாகி விடும். இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே ஜாக்கிரதையாக இருந்து கைகளை பாதுகாத்து கொள்ளலாம் என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். கை விரல்களில் வெடிப்பு அல்லது வெட்டுக்காயம் போன்றவை இருந்தால் அது சரியாகும் வரை பயோமெட்ரிக் கொடுக்க முடியாதாம். என்னதான் ஜாக்கிரதையாக இருந்த போதிலும் நடு விரலிலும், சுண்டு விரலிலும் லேசான சொரசொரப்பு இருந்தது. வி.எப். எஸ்.ஸில் என் படிவத்தை பெற்றுக் கொண்ட பெண் என் கையைப் பார்த்து விட்டு, “லெட் அஸ் சீ” என்று பயமுறுத்தினார். ஆனாலும் நல்ல விதமாகவே பயோ மெட்ரிக்ஸ் முடிந்தது. அன்று இரவே மெடிக்கல் டெஸ்ட் கொடுக்கச் சொல்லி மெயில் வந்தது.
அவர்கள் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் சென்டருக்கு போனில் முன்பதிவு செய்து கொண்ட பொழுது,"சாப்பிட்டு விட்டு வர வேண்டுமா?" என்று கேட்டதற்கு,"தயவு செய்து சாப்பிட்டு விட்டு வாருங்கள்" என்றார்கள். ஏன் அப்படி சொன்னார்கள் என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. அங்கு காபி/டீக்கு கூட வழியில்லை. காலை பத்து மணிக்கு அங்கு சென்ற நான் எல்லா டெஸ்டுகளையும் முடிக்க மாலை நான்கு மணியாகி விட்டது.
இரண்டு நாட்கள் கழிந்து விசா ஸ்டாம்ப் செய்வதற்காக உங்கள் பாஸ்போர்ட்டை கலெக்ட் பண்ணிக் கொள்ள ப்ளூ டார்ட்டிலிருந்து அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் ஆட்கள் வருவார்கள். என்று தகவல் வந்தது. ஆனால் அதே நாளில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே "மேடம் உங்கள் டாக்கு மெண்ட்ஸ் தயாரா? நான் ப்ளூ டார்ட்டிலிருந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் அழைத்தார். சில பிரிண்ட் அவுட்டுகள் எடுக்க வேண்டி இருந்ததால் அவரால் இரண்டு மணி நேரம் கழித்து வர முடிந்தால் நான் எல்லாவற்றையும் தயார் செய்து விடுவதாக கூற அவரும் ஒப்புக்கொண்டார். என் மகன், "இரண்டு மணி நேரத்தில் எப்படி தயார் செய்ய முடியும்? நாளைக்கு வரச்சொல்" என்றான். நானும் அவன் சொன்னபடி ப்ளூ டார்ட் ஊழியரிடம் வேண்டி கொண்டேன், அவரும் ஒப்புக் கொண்டார், ஆனால் அது எவ்வளவு பிழை என்பது திங்களன்று புரிந்தது.
- தொடரும்...
Tuesday, October 19, 2021
பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்...
பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்...
பலர் பாராட்டிய 'ஹோம்' என்னும் மலையாள படத்தை நானும் பார்த்தேன். எனக்கென்னவோ அப்படி பிரமாதமாக தோன்றவில்லை. படம் ரொ...ம்...ப... ஸ்லோ! தவிர கட்டுக்கோப்பாக இல்லாமல் அலைகிறது.
அடுத்து நான் பார்த்த இன்னொரு மலையாள படமான 'கோல்ட் கேஸ்' எனக்கு பிடித்தது. அமானுஷ்யம் கலந்த திரில்லர். அதிதி பாலன், லட்சுமி பிரியா, மற்றும் பிரித்விராஜ் நடித்திருக்கும் படம். நல்ல திரைக்கதை, மற்றும் சாதுர்யமான எடிட்டிங் படத்தின் பிளஸ்.
Wednesday, October 6, 2021
குதிரை
குதிரை
மனிதர்களால் மிகவும்
நேசிக்கப்படும், பராமரித்து வளர்க்கப்படும் விலங்கு வகைகளில் குதிரை நான்காவது விலங்காக
விளங்குகிறது. சென்ற நூற்றாண்டு வரை குதிரைகள் வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டன.
குதிரை மனிதர்களின்
போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியும், மேல் நாடுகளில் ஏர்
உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டனவாம்.
போர்க்காலங்களிலும்,அலங்கார
அணிவகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் குதிரைப்படை வீரர்கள்
மட்டுமே குதிரையேற்றம் கற்றனர், இப்போது குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும்
இருக்கிறது. குதிரைகள் பயன்படுத்தப் படும் ஒரு விளையாட்டு நேருவுக்கு மிகவும் பிடித்த போலோ. குதிரைப் பந்தயங்களும் விளையாட்டுதான்,ஆனால்
சூதாட்டம் என்பதில் வரும்.
குதிரைப் படைகளை
பண்டைய காலத்தில் இருந்தே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்க காலம் தொட்டு தமிழக
அரசர்கள் வைத்திருந்த நால்வகை படைகளில் குதிரைப்படையும் ஒன்று. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் வாழ்க்கையில்
குதிரைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நரியை பரியாக்கிய திருவிளையாடல் நாம் அறிந்ததுதானே.
பொதுமக்களுக்கான
குதிரை வண்டியிலிருந்து,அரசர்கள் பயணிக்கும் தேர்கள் வரை ஒருவரோ, பலரோ பயணிக்கும் வண்ணம்
வண்டிகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.
குதிரைகளார்ல்
மனித குலத்திற்கு கிடைக்கும் இன்னுமொரு நன்மை பாம்பு கடிக்கு மாற்றாக பயன்படுத்தும்
மருந்து குதிரையின் உடலிருந்து எடுக்கப் படுகிறது என்பது. குதிரையின் உடலில் பாம்பின் விஷம்
ஊசி மூலம் செலுத்தப்படும். உடனே குதிரையின் உடலில் நஞ்சு எதிர்ப்பு நீர்மங்கள் உருவாகும்,
அந்த நீர்மங்களை குதிரையின் ரத்ததிலிருந்து பிரித்து அதுவே பாம்பு நஞ்சுக்கு மருந்தாக
பயன்படுத்தப்படுகிறது. மன நலம் குன்றிய நோயாளிகள் குதிரையோடு பழகும் பொழுது விரைவில்
குணமடைகிறார்களாம்.
குதிரைகளின் சராசரி
உயரம் அறுபது அங்குலம் முதல் அருபத்திரெண்டு அங்குலம் வரை. அதன் ஆயுட்காலம் இருபதைந்து
ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் வரை. பிறந்த ஐந்து ஆண்டுகளிலேயே இனப் பெருக்கத்திற்கு
தயாராகி விடுகின்றன.
ஒரு நாளில் ஏறக்குறைய
பதினோரு கிலோ உணவையும், நாற்பத்தைந்து லிட்டர் நீரும் எடுத்துக் கொள்ளும். கொள்ளும்
என்றதும் குதிரையின் உணவு கொள்ளு என்பது நினைவுக்கு வருகிறது. கொள்ளு உட்லில் சேரும்
கொழுப்பை கரைக்க வல்லது என்பதால்தான் கொள்ளை தின்னும் குதிரை விண்ணென்று இருக்கிறது
என்று கூட சிலர் கூறுவார்கள்.
பாலூட்டிகள் யாவற்றிலும்
குதிரையின் கண்களே பெரியது. குதிரைகள் பகலிலும்,இரவிலும் தங்களின் ஒற்றைக் கண்ணால்
350 டிகிரிக்கு மேலும் பார்க்க இயலும். அதாவது முன்னால் உள்ளவை, பின்னால் உள்ளவை, பக்கவாட்டில்
உள்ளவை என் அனைத்தையும் பார்க்க இயலும்.
அதைப் போல குதிரைகள்
தங்கள் காதுகளை 180 டிகிரி வரை திருப்ப இயலும். எனவே தலையைத் திருப்பாமலேயே எந்தப்
பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும்.
குதிரைகளால் நின்று
கொண்டே தூங்க முடியும். குதிரையானது சரசரியாக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வரை தூங்குகிறது.
நான்கிலிருந்து பதினைந்து மணி நேரம் வரை நின்று கொண்டே ஓய்வெடுக்கிறது. சிங்கம், புலி,
சிறுத்தை போன்ற மாமிச பட்சிணிகளுக்கு இரையாக இருப்பதால், இயற்கையிலேயே இவற்றின் கால்கள்
உறுதியாக,மிக விரைவாக ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
தன் எஜமானரின்
மன ஓட்டத்தை கண நேரத்தில் உணர்ந்து செயல்படும் அறிவு குதிரைகளுக்கு உண்டு. அப்படி சில குதிரைகள்
ராணா பிரதாப் சிங்கின்
சேத்தக் என்னும் குதிரை முகலாயர்களுடன் ஏற்பட்ட போரில் படுகாயமடைந்தது, அந்த நிலையிலும்
எஜமானருக்காக விசுவாசமாக இறுதிவரை போராடியது. அது இறந்த பொழுது கதறியழுத ராணா பிரதாப்
சிங், அது உயிர் விட்ட இடத்தில் அதற்கு சமாதி கட்டினார்.
அலெக்ஸாண்டர் வெற்றி
பெற்ற பல போர்களில் அவரை சுமந்து சென்ற குதிரையின் பெயர் புசிபலஸ். அதன் கம்பீரமே காண்பவர்களை
மிரட்டும். அலெக்ஸாண்டர் புஸிபலஸை தன் குதிரையாக தேர்ந்தெடுத்தபொழுது அவருடைய வயது
பதிமூன்று. அப்போதிலிருந்து அந்த குதிரையை அவர் பிரிந்ததே இல்லை.
மராட்டிய வீரன் சிவாஜியை நம்மால் குதிரை மீதுதானே கற்பனை செய்ய
முடியும். கற்பனையோ, நிஜமோ நமக்கு நினைவுக்கு வரும் இன்னொரு குதிரை வீரன், அடங்காத டில்லி
சுல்தானின் நீலவேணி என்னும் குதிரையை அடக்கிய ராஜா தேசிங்கு.
புராணத்தில் பாற்கடலை கடைந்த பொழுது வெளிப்பட்ட உச்ரைவசஸ்
என்னும் குதிரையால் பறக்க முடியும். கிரேக்க புராணத்தில் வரும் பெகாசஸ் என்னும் குதிரைக்கும்
இறக்கைகள் உண்டு என்பதால் அதனால் பறக்க முடியும்.
புராண காலத்தில் வரும் ராஜாக்கள் அஸ்வமேத யாகம் செய்யும் பொழுது
அதில் முக்கிய அங்கம் வகிப்பது குதிரைகள்தான்.(அஸ்வதம் என்றாலே குதிரைகள்தானே). சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாக நம்புகிறோம்.
குதிரைகளின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது என்பது வருத்தம் அளிக்கும் செய்தி.
Moral of the story:
காலண்டர் ஷீட்டுகளை கிழித்து தூர எறிந்து விடாதீர்கள். அதிலும் உங்களுக்கு எழுத ஒரு விஷயம் கிடைக்கலாம். குப்பையில் மாணிக்கம்!
*நீல நிறத்தில் இருப்பவை என் கருத்துக்கள்:
Friday, September 24, 2021
ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்
ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்
சென்ற வாரம் நான் விளையாட்டாய் 'ஈசாவாஸ்ய உபநிஷத்' பற்றி எ.பி.யில் கேட்க முடியுமா? என்று கேட்க, அவர்கள் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி ஜடாயு அவர்களின் விளக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நன்றாக இருந்தது.
நேற்று சாய் சத் சரிதம் படித்த பொழுது ஷீர்டி சாய்பாபா அவருடைய சீடரான தாஸ்கணு என்பவருக்கு ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் பொருளை எங்கனம் உணர்த்தினார் என்னும் சம்பவத்தை படிக்க நேர்ந்தது.
தாஸ்கணு என்பவர் ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உபநிஷத்தின் உட்பொருளை அவர் உணராததால் அவருடைய மொழிபெயர்ப்பு அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. அதை குறித்து பல அறிஞர்களோடு விவாதித்தும் அவருக்கு முழு திருப்தியளிக்கும் விளக்கம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆத்மானுபூதி அடைந்த ஒருவரே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று கருதிய அவர் ஷீர்டி சாய் பாபாவை தேடி வருகிறார். பாபாவிடம் தனது வேண்டுகோளை வைக்க, அவர்,"இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் வில்லபார்லாவில் காகா சாஹேப் தீக்ஷித் வீட்டு வேலைக்காரி உன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்" என்று கூறினார். இதைக் கேட்டு சிலர், படித்த ஒரு அறிஞரின் சந்தேகத்தை படிப்பறிவில்லாத ஒரு வேலைக்காரி எப்படி தீர்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்டார்களாம், ஆனால் தாஸ்கணுவோ பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து பம்பாயின் புறநகரான வில்லபார்லாவில் இருந்த காக்கா சாஹேப் தீக்ஷித்தின் வீட்டில் தங்குகிறார்.
அங்கு சிறுதுயில் கொண்டிருந்த அவரை தீட்சித் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாடிய பாடல் எழுப்பி விடுகிறது. கிழிந்த உடையை அணிந்து கொண்டிருந்த அச்சிறு பெண், 'கருஞ்சிவப்பு நிற உடை, அது எவ்வளவு நன்றாக இருக்கிறது! அதன் எம்ப்ராய்டரி எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது! அதன் முந்தானையும், கரையும் எவ்வளவு அழகாய் இருக்கிறது!.." என்னும் பொருள்படும் பாடலை மிகவும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்த அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு பாவாடை, தாவணி வாகித் தர செய்கிறார்.
புது ஆடையை அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியோடு தன் தோழிகளோடு விளையாடுகிறாள், கோலாட்டம் ஆடுகிறாள். ஆனால் மறுநாள் அந்த புது ஆடையை வீட்டில் பெட்டியில் வைத்து விட்டு, தன்னுடைய பழைய கந்தல் ஆடையையே அணிந்து கொண்டு வந்தாள். ஆனால் அப்போதும் அவள் மகிழ்ச்சி சிறிதும் குறையவில்லை. பழைய கந்தலை உடுத்தியும் எள்ளளவும் துன்பமோ,மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள். இதிலிருந்து நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக யோசித்து இச்சந்தர்ப்பத்தில் ஏழைச்சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புது ஆடை, அதை அன்பளிப்பாக கொடுத்தவர், அதை பெற்றுக் கொண்டவள், அதனை ஏற்றுக் கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே, அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி பரந்து இருக்கிறார், எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், இறுதியில் அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியவைகளிடம் திருப்தி கொள்ளுதல் நலம் என்னும் உபநிஷத பாடத்தின் நடைமுறைச் சான்று விளக்கத்தினை தாஸ்கணு பெற்றார்.
அன்று ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய கேள்வி, அதற்கு சாய் சத் சரிதாவில் பதில் என்று நடந்ததால் இதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி தாஸ்கணு அவர்கள் உணர்ந்ததை நம்மால் உணர முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அதை பகவான் பாபா தீர்த்து வைப்பார். ஓம் சாய்ராம்!
Monday, September 20, 2021
அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும்
அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும்
வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புதிய அவனில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசித்த பொழுது, திரட்டுப்பால் செய்யலாம் என்றேன். ஒரு டப்பா கண்டென்ஸ்டு மில்க் வாங்கி வரச்சொன்னேன். அதை ஒரு கண்ணடி பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அவனில் வைத்து அவனை ஸ்டார்ட் பண்ண, ஐந்தே நிமிடங்களில் வெள்ளை வெளேர் என்று சுவையான திரட்டுப்பால் கிடைத்து விட்டது. என் மருமகளுக்கு ஒரே சந்தோஷம்.
அந்த அவனில் தயிர் என்னும் ஆப்ஷன் இருப்பதை பார்த்து விட்டு,"இதில் அரைமணி நேரத்தில் தயிர் செய்து விடலாம்" என்றாள் என் மருமகள். "தட்ஸ் கிரேட்! நமக்கு எப்படியும் இன்று தயிர் தோய்க்க வேண்டும். இதில் செய்து விடலாம்" என்ற நான், பாலக் காய்ச்சி, ஆறியதும் வழக்கம் போல் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் அதில் சேர்த்து, அந்த பாத்திரத்தை அவனில் வைத்து, அரை மணி நேரத்திற்கு செட் செய்து விட்டு, அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், பால் அப்படியே இருந்தது.
ஒரு வேளை அரை மணி நேரம் என்பது அரை லிட்டர் பாலுக்காக இருக்கலாம், நாம் ஒரு லிட்டர் பாலை உரைக்குத்தியிருக்கிறோம் எனவே இன்னும் ஒரு அரை மணி நேரம் வைக்கலாம் என்று மீண்டும் ஒரு அரை மணி நேரம் செட் பண்ணினேன். அப்போதும் பால் தயிராக மாறவில்லை. வெளியே எடுத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தாலும் அதே நிலை. "என்னடா இது மதுரைக்கு வந்து சோதனை?" என்று தோன்றியது.
யூ ட்யூபில் சென்று மன்றோ வேவ் அவனில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்தால், நான் செய்த விஷயங்கள் சரி, ஒன்றே ஒன்றைத் தவிர, உறைகுற்றிய பால் பாத்திரத்தை அவனில் வைத்து விட்டு தயிர் என்னும் பட்டனை அழுத்தி 2:2 என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும், அது 9 மணி நேரம் என்று அவனுக்குள் வைக்க வேண்டிய கால அளவைக்காட்டுகிறது. ஆறு மணி நேரத்தில் தயராகி விடும், பிறகு மூன்று மணி நேரம் பிரீசரில் வைக்க வேண்டும். கட்டித் தயிர் ரெடியாகி விடும் என்று ஒரு ஆன்டி ஹிந்தியில் போலினார். உரை குற்றி ஒன்பது மணி நேரம் வெளியே வைத்தாலே தயிர் ரெடியாகி விடுமே?
அன்று மாலை மைக்ரோ வேவ் அவனை எப்படி இயக்குவது என்று செய்முறை விளக்கம் அளிக்க கம்பெனியிலிருந்து வந்தவரிடம் தயிர் மகாத்மியத்தை கூறிய பொழுது, "இதெல்லாம் மேல் நாட்டவருக்காக, நாம் எப்போதும் செய்வது போல் தயிர் பண்ணிக் கொள்வதுதான் சரி" என்கிறார். சரிதான்! 4x2 என்ற கணக்கிற்கு கால்குலேட்டரை பயன்படுத்துவது போலத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
Wednesday, September 15, 2021
மசாலா சாட்
மசாலா சாட்
சென்ற வருடம் எங்கள் குடியிருப்பில் விநாயக சதுர்த்தி கொண்டாடவில்லை. கோவிட் பயம். இந்த வருடம் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினோம். இதிலிருந்து மற்ற கொண்டாட்டங்களும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.
![]() |
| எங்கள் வீட்டு கணேசர். |
Thursday, September 9, 2021
விநாயகரின் பதினாறு பெயர்கள்
விநாயகரின் பதினாறு பெயர்கள்
சுமுகஸ்ச்ச ஏக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக
தூமகேதூர் கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானந
வக்ரதுண்ட: சூர்ப்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
ஷோடசைச்ச நாமானி ய: படேத் ஸ்ருணுயாதபி
வித்யாராம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே
- மங்கள முகம் வாய்ந்த சுமுகர்,
- ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தர்,
- கபில நிறம் வாய்ந்த கபிலர்,
- யானைக் காதுகள் உள்ள கஜ கர்ணகர்,
- பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரர்,
- குள்ளத் தோற்றமுள்ள விகடர்,
- சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்கினராஜர்,
- எல்லா விக்கினங்களையும் அழிக்கக்கூடிய விநாயகர்
- நெருப்பை போல் ஒளி வீசக்கூடிய தூமகேது,
- பூத கணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷர்,
- நெற்றியில் பிறைச் சந்திரனை சூடிய பால சந்திரன்,
- யானைத் தோற்றமுள்ள கஜானனர்,
- வளைந்த தும்பிக்கையை கொண்ட வக்கிரதுண்டர்
- முறம் போன்ற அகலமான காதுகள் கொண்ட சூர்ப்பகர்ணர்,
- தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு அருள் புரியும் ஹேரம்பர்
- கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜர்
- என்னும் பதினாறு பெயர்களையும் வித்தைகளை கற்க தொடங்கும் பொழுதும்,
- வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் போர் காலத்திலும்
- யாராவது வாசித்தாலும் அல்லது செவி குளிர கேட்டாலும் அவர்களுக்கு எந்தவித விக்கினங்களும் சம்பவிக்காது.
https://studio.youtube.com/video/pIMta8SrHBk/edit
https://studio.youtube.com/video/fopb_iPlv-g/edit
https://studio.youtube.com/video/UjV0BIBJLPs/edit
https://studio.youtube.com/video/TS1Hl1RWtYs/edit
https://studio.youtube.com/video/dp9XogvkB7Y/edit
Monday, September 6, 2021
பார்த்தேன், ரசித்தேன்..
பார்த்தேன், ரசித்தேன்..
Wednesday, September 1, 2021
மசாலா சாட்
கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*
இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..*
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது
எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*
கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.
மேற்படி செய்தி வாட்ஸாப்பில் வந்தது.
ஜென்மாஷ்டமிக்காக என் மாப்பிள்ளையும், பேத்தியும் பாடியிருக்கும் கிருஷ்ணாஷ்டகம்
ஞாயிறன்று மதிய உணவருந்திய பின் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, என் மருமகளுக்கும் தோன்ற ஸ்விக்கியில் ஐஸ் க்ரீம் ஆர்டர் கொடுத்தாள். ஐஸ்க்ரீமோடு ஒரு சிறிய பாட்டில் கோக்க கோலா, ஒரு பார் சாக்லேட், நாலு பலூன்கள் எல்லாம் வந்தன. அன்று ஸ்விக்கிக்கு பிறந்த நாளாம், அதனால் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்.
நூறாவது நாள் படம் வெளியான பொழுது நான் திருச்சியில் இருந்தேன். அந்தப் படத்திற்கு சென்றபொழுது(சிவாலயா காம்ப்ளெக்ஸ்) இயக்குனர் மணிவண்ணன் ரசிகர்கள்,"நூறாவது நாள் படத்திற்கு இன்று நூறாவது நாள் என்று இனிப்பு வழங்கியது நினைவிற்கு வந்தது.
'யவனிகா என்னும் சுஜாதாவின் கதை தொடராக விகடனில் வந்ததை சேகரித்து பைண்ட் பண்ணிய புத்தகம் கிடைத்தது. அப்பொழுது விகடன் குட்டியாக இருந்திருக்கிறது. எந்த வருடத்திலிருந்து இந்த பெரிய சைஸுக்கு மாறியது என்று நினைவில் இல்லை. அதில் ஒரு குட்டி கதை.
ஒரு காக்கை மரத்தின் உச்சிக்கிளையில் எந்த வேலையும் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் அமர்ந்திருந்தது. அதை பார்த்த ஒரு குட்டி முயல்,"நானும் உன்னைப் போல எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கட்டுமா?" என்று கேட்டது. அதற்கு காகமும் "சரி" என்றது. அந்த முயல் குட்டி மரத்தின் அடியில் பேசாமல் உட்கார்ந்திருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு நரி அந்த முயலை கவ்விக் கொண்டு போய் விட்டது. மாரல் ஆஃப் தி ஸ்டோரி: எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் நாம் ரொம்ப ரொம்ப உயரத்தில் இருக்க வேண்டும்.
வெட்டியாக ஒரு கேள்வி:
உணவின் பெயரைக் கொண்ட உணவகங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம் உதாரணம் 'தலப்பாகட்டி பிரியாணி'
சந்திக்கலாம்.
👇
Monday, August 23, 2021
உலகம் சுற்றிய யுவதியோடு ஓர் நேர்காணல்
![]() |
| நடுவில் நிற்பவர்தான் திரு.ஜெயராமன்(ஜெயா அவர்களின் கணவர்) |
93 வயதாகும் திருமதி ஜெயா ஜெயராமன் அவர்களின் கணவர் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றியதால் பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட்டிருக்கிறார். எனவே திருமதி ஜெயா அவர்களுக்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவருடைய அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
வணக்கம்! உங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுங்களேன்
ஜெ.ஜெ.: இளமைப் பருவத்தைப் பற்றி சிறப்பித்து கூற பெரிதாக ஒன்றும் இல்லை.
எ.பி.: நீங்கள் பிறந்தது எந்த ஊர்? என்ன படித்திருக்கிறீர்கள்?
ஜெ.ஜெ.: பிறந்தது திருவையாறு அருகில் இருக்கும் ஈச்சங்குடி. *பள்ளிக்குச் சென்று படித்ததில்லை(சிரிப்பு)
நான்: அப்படியா? ஏன்?
ஜெ.ஜெ.: என்னுடைய தாத்தா கோயம்புத்தூரில் டீச்சர் டிரைனிங் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார். அவர் ரிட்டையர்ட் ஆகி வந்தவுடன் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.
எ.பி.: உங்களுக்கு எத்தனை வயதில் திருமணம் ஆனது?
ஜெ.ஜெ.: 18 வயதில் நான் என் அம்மாவின் தம்பியை, அதாவது என் மாமாவையே திருமணம் செய்து கொண்டேன்.
நான்: திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தார்களா?
ஜெ.ஜெ. எங்கள் தாத்தா பார்த்தார்.
எ.பி.: அப்போது உங்கள் கணவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
ஜெ.ஜெ.: மினிஸ்டரி ஆஃப் எக்ஸ்டெர்னல் அஃபர்ஸில் டில்லியில் பணியாற்றினார்.
எ.பி.: நீங்கள் முதலில் டில்லிக்குத்தான் சென்றீர்களா?
ஜெ.ஜெ.: இல்லை, டில்லிக்கு போகவேயில்லை. மாமாவுக்கு சைகோனுக்கு மாற்றல் ஆகி விட்டது. என்னை என் பெற்றோர்கள் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர். மாமா, டில்லியிலிருந்து கல்கத்தா வந்தார். அங்கிருந்து கப்பலில் சைகோனுக்கு கிளம்பினோம். கல்கத்தாவிலிருந்து முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு ஒரு வாரம் தங்கி, பின்னர் அங்கிருந்து சீன கப்பலில் சைகோன் சென்றோம்.
எ.பி.: கப்பல் பயணம் இருந்தது? சீ சிக்னெஸ் வந்ததா?
ஜெ.ஜெ.: கப்பல் பயணம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. சீ சிக்னெஸ் எதுவும் எனக்கு வரவில்லை. சிங்கப்பூரிலிருந்து சைகோன் சென்ற கப்பல்தான் மிகவும் மோசம். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த அவலில் ஊறுகாயை பிசைந்து சாப்பிட்டு காலத்தை ஓட்டினோம். நல்ல வேளை, இரண்டு நாட்கள்தான்.
எ.பி.: மொத்தம் எத்தனை நாட்கள் பயணம்?
ஜெ.ஜெ.: கல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் பத்து நாட்கள். அங்கிருந்து சைகோன் மூன்றரை நாட்கள். சைகோன் போய் இறங்கிய அடுத்த நாளே எனக்கு ஆபரேஷன்.
எ.பி.: ஐயையோ! என்னாச்சு?
ஜெ.ஜெ.: வயிற்று வலி வந்தது. டாக்டர் வந்து பார்த்து விட்டு ஹெர்னியா ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று ஆபரேஷன் செய்தார். அவர்தான் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.
எ.பி.: அப்படியா? பிரசவத்திற்கு ஊருக்கு வந்தீர்களா?
ஜெ.ஜெ.: இல்லை, அங்குதான் பிரசவம் ஆச்சு.
எ.பி.: மருந்து,பத்திய சாப்பாட்டிற்கு என்ன செய்தீர்கள்?
ஜெ.ஜெ.: பத்தியம் எல்லாம் கிடையாது. அந்த ஊர் குருக்கள் மனைவி பருப்பு துவையல், ரசம் செய்து கொடுத்தனுப்புவார். எனக்கு உதவி செய்வதற்காக ஒரு வியட்நாம் பெண் இருந்தது, அதற்கும் பதினெட்டு வயதுதான். விளையாட்டுத்தனமாக இருக்கும்.
எ.பி.: சைகோனில் நம்முடைய காய்கறிகள், மளிகை சாமான்கள் கிடைக்குமா?
ஜெ.ஜெ.: காய்கறிகள் கிடைக்கும். மளிகை சாமான்களில் உளுத்தம் பருப்பு, வெண்ணை போன்றவை கிடைக்காது.
எ.பி.: புளி?
ஜெ.ஜெ.: புளி கிடைக்கும், மீன் உலர்த்தும் பாயில் போட்டு வைத்திருப்பான்.
எ.பி.: சைகோனில் இந்தியர்கள் இருந்தார்களா?
ஜெ.ஜெ.: வட இந்தியர்களில் சிந்திக்காரர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள். தென் இந்தியர்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இருந்தார்கள். பிராமணர்கள் கிடையாது. கோவிலில் அர்ச்சகர் ஒருவர் இருந்தார்.
எ.பி.: ஓ! அங்கு கோவில்கள் உண்டா?
ஜெ.ஜெ.: உண்டே! இந்தியர்களுக்கு பொதுவாக ஒரு கோவிலும், தமிழர்களுக்கு நகரத்தார் கட்டிய முத்து மாரியம்மன் கோவிலும் இருந்தது. அங்கு நவராத்திரியில் ஒன்பது நாட்களும் தினசரி கோவில் வளாகத்திலேயே அம்மன் புறப்பாடு நடக்கும். அந்த கோவிலுக்கு சைனாக்காரர்கள் நிறைய பேர் வருவார்கள்.
எ.பி.: சைகோனிலிருந்து எங்கு சென்றீர்கள்?
ஜெ.ஜெ.: சைகோனிலிருந்து பாண்டிச்சேரி
எ.பி.: பாண்டிசேரியில் எத்தனை வருடம் இருந்தீர்கள்?
ஜெ.ஜெ.: ஒன்றரை வருடம் இருந்தோம். அங்கிருந்து பாரீஸுக்கு மாற்றல் ஆனது. பாண்டிச்சேரியிலிருந்து பம்பாய் சென்று அங்கிருந்து கப்பலில் பாரீஸுக்கு புறப்பட்டோம்.
எ.பி. கப்பலிலா? ஏன் அப்போதெல்லாம் விமானம் கிடையாதா?
ஜெ.ஜெ.: விமானம் உண்டு. ஆனால் மாமாவுக்கு கப்பல் பயணம்தான் பிடிக்கும். அந்தக் கப்பலும் அத்தனை நன்றாக இருக்கும். அதில் இல்லாத வசதிகள் கிடையாது. நாங்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றோம். நாங்கள் சென்ற கப்பல் சூயஸ் கால்வாயை கடந்த பிறகு அந்தக் கால்வாயை மூடி விட்டார்கள். மூன்று வருடங்கள் கழித்துதான் திறந்தார்கள். என் தம்பி கேப் டவுனை சுற்றிக் கொண்டு சென்றான்.
எ.பி.: பாரீஸ் உங்களுக்கு பிடித்ததா?
ஜெ.ஜெ.: ஓ! இப்போது கொண்டு விட்டாலும் நான் அங்கு இருப்பேன். மிகவும் அழகான ஊர்.
எ.பி.: பிரெஞ்சுக்காரர்கள் கர்வம் பிடித்தவர்கள் என்பார்களே?
ஜெ.ஜெ.: அப்படியெல்லாம் இல்லை. மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும் பழகுவார்கள்.
எ.பி.: அங்கு நம்ம ஊர் கறிகாய்கள் கிடைக்குமா?
ஜெ.ஜெ.: கிடைக்காது. லண்டனிலிருந்து வரவழைக்க வேண்டும். வெண்டைக்காயெல்லாம் காய்ந்து மாலையாக கட்டி வரும். அதை வெந்நீரில் ஊற வைத்து சமைப்போம்.
பிரான்சிலிருந்து துருக்கிக்கு மாற்றல் ஆகியது. அங்கு சென்றதும் மாமாவுக்கு ப்ளூரசி வந்து விட்டதால் திரும்பி வந்து விட்டார். பின்னர் 1969ல் ஜப்பானுக்குச் சென்றோம். எக்ஸ்போ 70 நடந்த பொழுது ஜப்பானில்தான் இருந்தோம்.
![]() |
| எக்ஸ்போ 70க்கு தயாராகிக் கொண்டிருக்கும் பெவிலியன்கள் |
எ.பி.: எக்ஸ்போ 70 சமயத்தில் ஜப்பானில் இருந்தீர்களா? அந்த சமயத்தில்தான் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கப் பட்டது.
ஜெ.ஜெ.: தெரியும். உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் சமயத்தில் எம்.ஜி.ஆர்., "வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும் போலிருக்கிறது, தயிர் சாதம் எங்கேயாவது கிடைக்குமா?" என்று மணியனிடம் கேட்டிருக்கிறார். மணியன் உடனே என் கணவரிடம் சொல்லி, எம்.ஜி.ஆரை எங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வந்தார்.
எ.பி.: இந்த நிகழ்ச்சியை மணியன் இதயம் பேசுகிறது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். புகைப்படம் கூட போட்டிருந்தார். அந்த புகைப்படம் இருக்கிறதா?
ஜெ.ஜெ.: இல்லை, அந்த புகைப்படங்களை மணியன் எடுத்துச் சென்றார், திருப்பித் தரவே இல்லை. பல புகைப்படங்கள்,பலர் எடுத்துச் சென்று விட்டார்கள் எதுவும் திரும்பி வரவில்லை.
அதற்குப் பிறகு டாக்கா சென்றோம்.
எ.பி.: பங்களாதேஷ்..?
ஜெ.ஜெ.: அப்போது அது ஈஸ்ட் பாகிஸ்தான். நாங்கள் அங்கு இருந்த பொழுதுதான் வார் தொடங்கியது. அதெல்லாம் மிகவும் கடினமான காலங்கள். ஹவுஸ் அரெஸ்ட் போல கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் இருக்க வேண்டும். தேவையான சாமான்களை செக்யூரிட்டி வாசலில் வைத்து விடுவார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அங்கிருந்து கொழும்பு, அதுதான் கடைசி போஸ்டிங், கொழும்பிலிருந்து இந்தியா திரும்பி விட்டோம். என் கணவர் இருபத்தெட்டு வயதில்தான் இந்த வேலையில் சேர்ந்தார். அதனால் நாங்கள் அதிகம் நாடுகளுக்குச் செல்லவில்லை. என் தம்பி பதினெட்டு வயதிலேயே இந்த வேலையில் சேர்ந்ததால் இன்னும் அதிகமான நாடுகளில் பணி புரிந்தான்.
எ.பி.: எம்.ஜி.ஆர். தவிர வேறு வி.ஐ.பி.க்கள் யாரையாவது மீட் பண்ணியிருக்கிறீர்களா?
ஜெ.ஜெ.: நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன். வெளி நாடுகளுக்கு வரும் செலிபிரிட்டிஸ் பலர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். கொழும்புவில் இருந்த பொழுது நடிகை சாவித்திரி எங்கள் வீட்டிற்கு வந்து காபி குடித்திருக்கிறார்.
எ.பி.: இத்தனை நாடுகள் பார்த்திருக்கிறீர்கள், எந்த நாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது?
நான் முதலில் சென்றது சைகோன், அதனால் அது மிகவும் பிடித்தது. பிறகு பிரான்ஸ். அங்கிருந்தபொழுது ஐரோப்பா முழுவதும் சுற்றி பார்த்தோம். குழந்தைகளும் ஆரம்ப கல்வியை அங்குதான் படித்தார்கள். அவர்களுக்கும் அந்த ஊர் மிகவும் பிடித்தது.
எ.பி.: வெளி நாட்டில் வசித்து விட்டு இந்தியா வந்த பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?
ஜெ.ஜெ.: இரண்டையும் ஒப்பிட முடியாது. வேறு வேறு நிலை. இப்படி கூறினாலும் அவருக்கு நம் நாட்டின் சுகாதாரமற்ற சூழலை ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருந்தது.
எ.பி.: உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிமா.
* பள்ளிக்கூடமே சென்றதில்லை என்று கூறும் திருமதி ஜெயா அவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இந்த மூன்று பாஷைகளும் பேச,எழுத,படிக்க தெரிந்தவர். அதை தவிர இருந்த நாடுகளின் பாஷைகளை வீட்டில் வேலை செய்தவர்கள் மூலம் கற்றுக் கொண்டாராம். இப்போதும் தினமும் செய்தித்தாள் மற்றும் வாராந்தரிகளை படிக்கிறார். அவருக்கு இன்று (ஆகஸ்ட் 23) பிறந்த நாள். எங்கள் பிளாகின் சார்பாக அவருக்கு பிறந்து நாள் வாழ்த்துக்களை கூறி வணங்கி விடை பெற்றேன்.
Sunday, August 15, 2021
சேமிப்பு
சேமிப்பு
சேமிப்பு என்பது நம் ரத்தத்திலேயே உள்ள ஒரு விஷயம். 90களில் உலகமே மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்த பொழுது, இந்தியா மட்டும் காப்பாற்ற்ப் பட்டதற்கு நம்முடைய சேமிக்கும் பழக்கம்தான் காரணமாக இருந்து வந்தது.
Sunday, August 8, 2021
மாறும் சரித்திரங்கள்!
மாறும் சரித்திரங்கள்!
ஒரு முறை குமுதத்தில் பிரபலமானவர்களின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு, வாசகர்கள் அவர்களை அழைத்து அந்த பிரபலங்களோடு உரையாடலாம் என்று அறிவித்தார்களாம். அப்போது நடிகை லட்சுமி திரை வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரமாம். அவரை தொலை பேசியில் அழைத்தால் அவர் வீட்டிலிருந்து உங்களோடு அவர் உரையாடுவார் என்று அறிவித்திருந்தார்களாம். ஆனால் லட்சுமி வீட்டின் எண்ணிற்குப் பதிலாக வேறு ஒரு எண் தவறாக அச்சாகி விட்டதாம். என்ன செய்வது என்று யோசித்த பொழுது, எஸ்.ஏ.பி. அவர்கள் ஒரு ஐடியா சொன்னாராம், அதன்படி அந்த தவறான எண்ணை தொடர்பு கொண்டார்களாம், நல்ல வேலையாக அது ஒரு அலுவலக எண்ணாக இல்லாமல் ஒரு மத்தியதர குடும்பத்தின் எண்ணாம். அவர்களிடம், "நடிகை லட்சுமி உங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரங்கள் இருந்து நேயர்களோடு உரையாடுவார், உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்டதும் அவர்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்களாம். லட்சுமியும் அதற்கு சம்மதித்தாராம், திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாம். அதற்கு பிறகு அந்த வீட்டிற்கு நடிகை லட்சுமி இருக்காங்களா? அவங்களோடு பேசணும்" என்று எத்தனை கால்கள் வந்ததோ?
எஸ்.ஏ.பி. இப்படி என்றால் வேறொரு பத்திரிகையாசிரியர் இக்கட்டை சமாளித்த விதத்தையும் சொல்லியிருக்கிறார். அதை பின்னொரு சமயம் பார்க்கலாம். இந்த கட்டுரையில் இணைப்பதற்காக இளம் வயது லட்சுமி டெலிபோனில் பேசுவது போல் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா? என்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. actress Lakshmi என்றுடைப்பினால் அதுவாகவே actress Laksmi daughter என்று அடித்து அவர் மகளின் புகைப்படங்களை காட்டுகிறது. திருத்தினால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், லட்சுமி ராய் இவர்கள்... காலம் இரக்கமற்றது, எப்பேர்ப்பட்ட சாதனையாளர்களையும் மறந்து விடுகிறது.
Monday, August 2, 2021
வாழ்க்கையும் கிரிக்கெட்டும்
வாழ்க்கையும் கிரிக்கெட்டும்
Tuesday, July 20, 2021
அபார்ட்மெண்ட் அலப்பறைகள்!
பத்துநிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம்
வித்தகன் சொன்னது பொய்யில்லை
சொல்லாமல் விட்டது
இசையென்ற பெயரில் இரைச்சலாய் ஓசை
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித்தாள்
இன்னும் ஜாதிச்சண்டை, இனச்சண்டை,மொழிச்சண்டை
இத்தனையும் உண்டு எங்கள் குடியிருப்பில்
பெரிய குடியிருப்பு வளாகங்களில் வசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. குழந்தைகள் வெளி நாட்டிலோ, வெளி ஊர்களிலோ இருக்க, இங்கே தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு,பொழுதுபோக்கு எல்லாம் கிடைத்துவிடும். சிறு குழந்தைகளுக்கு தோழர்களும் கிடைத்து, விளையாட இடமும் கிடைக்கும். அவ்வப்பொழுது வாயை மெல்ல அவலும் கிடைக்கும்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைக்காவிட்டால் சமயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நாய் வளர்த்தால் அதனால் வரும் சண்டைகள்... எங்கள் குடியிருப்பில் இந்த செல்லங்களால் அடிக்கடி சண்டை வரும். அதனால் சில சமயங்களில் போலீசும் வரும்.
அன்று நடைப் பயிற்சிக்குச் சென்ற பொழுது ஒரு பிளாக் முன்பு கொஞ்சம் கும்பல், சில போலீசும் நின்று கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் யாரோ ஒருவன் பொண்டாட்டியை அடித்திருக்கிறான், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசை வரவழைத்து விட்டனர் என்று தெரிந்தது. அப்போது இரண்டு பேர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது:
"என்ன சார்? வழக்கம் போல நாய் தகறாரா?"
"இல்லையில்லை, எவனோ ஒருத்தன் பொண்டாட்டிய போட்டு அடிச்சிருக்கான்."
"ஓ! அந்த நாயா?"
இதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் இந்த உரையாடல் எங்கேயாவது நிஜமான நாயின் காதில் விழுந்து, அது கோவித்துக் கொண்டு விடப்போகிறது என்றும் கவலையும் வந்தது.
தமிழ் சினிமாக்களில் இன்னும் கதாநாயகியை, கதாநாயகன் பொது இடத்தில் பளீரென்று அறைவது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள். நல்ல வேளை, அறை வாங்கிய நாயகி கன்னங்களைத் தடவியபடி,'சுகம்,சுகம்,அது இன்பமான துன்பமானது..' என்று பாடுவதில்லை.
**************************************
மற்றொரு சுவாரஸ்யம் டெலிகிராம் க்ரூபில் நடந்தது. எங்கள் வளாகத்தில் டெலிக்ராமில் நிறைய குழுக்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு க்ரூப், ஆண்கள் க்ரூப்,பெண்கள் க்ரூப், இதைத்தவிர அந்தந்த மாநில குழுக்கள். இதில் பொதுவான பெண்கள் குழுவில் எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு. அப்படியிருக்க அதில் தகவல்கள் பரிமாறிக்கொண்டிருக்கும் பொழுது ஹிந்தி பேசும் பெண் ஒருத்தி ஹிந்தியில் ஏதோ ஒரு ஜோக்கை டைப் செய்து அனுப்பியிருக்கிறாள். அது புரியாததால், ஹிந்தி தெரியாத, கோபமும்,குறும்பும் கொண்ட தமிழ்ப் பெண் ஒருத்தி தமிழில் ஒரு செய்தியை டைப் செய்து அனுப்பி விட அவளுக்கு அங்குஒரே கை தட்டல், தமிழ் க்ரூப்பில் "வெரி குட்! இப்படித்தான் இந்த ஹிந்திகாரர்களுக்கு புகட்ட வேண்டும்" என்று ஏக பாராட்டுகள்.
"எல்லோருக்கும் ஹிந்தி புரியும், என்பதால்தான் அவள் ஹிந்தியில் ஜோக் அனுப்பினாள்" என்று ஹிந்திக்காரர்கள் கூற, "எங்களுக்கு ஹிந்தி தெரியும் நீங்களாக எப்படி அனுமானம் செய்து கொள்ளலாம்? பலரும் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் செய்திகளை பரிமாறிக் கொள்வதுதானே அடிப்படை சபை நாகரீகம்?" என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது.
****************************************








































